என் வாசிப்பனுபவத்தில் படைப்பிலக்கியத்தை இரு கூறுகளாகப் பகுத்துப் பார்க்கிறேன். ஒன்று, படிப்பவர்கள் விரும்புவதைப் படைப்பது. மற்றது, படைப்பு படிப்பவர்களை விரும்ப வைப்பது. இவ்விரண்டில் முதலாவது எளிது; இரண்டாவது சற்றே கடினம். இனி ‘நட்பாய் தொடரட்டும்’ எனும் முதல் சிறுகதை நூலின்வழி தனது சிறுகதைகள் அனைத்தும் மிகவும் எளிய முறையில் வாசிப்பவர்களுக்கு எந்தவொரு சிக்கலுமின்றி புரிந்து கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும் என்பதை முதன்மை நோக்காகக் கொண்டிருப்பது நூலாசிரியர் சிவா லெனின் முகவுரையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது படிப்பவர்கள் விரும்புவதுபோல படைப்பது. பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி 101 பக்கங்களில் அமைந்திருக்கும் இச்சிறுகதை நூலினை கையில் பெற்ற முதல்கணம் அதன் முகவுரையை வாசிக்க முற்பட்டேன். அதில் மூன்று விடயங்கள் என் கவனத்தை ஈர்த்தது.
(1) எழுத ஆர்வம் ஏற்பட்டபோது நூலாசிரியர் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கியிருப்பது; (2) நூலாசிரியரின் மனதை ஆழமாய் பாதித்த விடயங்களைச் சிறுகதைகளில் பதிவிட்டிருப்பது; (3) பெரியாரிய சிந்தனை நோக்கோடு சாதி, மறுமணம், காதல் போன்ற அம்சங்களைக் கதையாக்கிருப்பது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் தொடர்பாக எனது பார்வையை முன்வைக்கும் முன், நூலின் இதர சில அம்சங்கள் குறித்தும் என் கவனத்தைக் குவிக்கிறேன். முதலில், இந்நூலுக்கு அர்த்தமற்ற முன்னுரைகளும், ஆசியுரை, வாழ்த்துரை எதுவும் இல்லாதிருப்பது கொஞ்சம் நிம்மதியைத் தந்துள்ளது. மலேசிய நூல் பதிப்புச் சூழலில் பெருமளவு அழுத்தமற்றுப் போய்விட்ட முன்னுரைகள் அதன் அத்தியாவசியத் தேவையையும் பொதுப்புரிதலிலிருந்து மழுங்கடித்து விட்டதாக உணர்கிறேன். நூலுக்கு முன்னுரை பெறுவதென்பது நூலாசிரியர், வாசகர்கள் என இரு தரப்புக்கும் நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. தேர்ந்த வாசகர் அல்லது எழுத்தாளரிடம் நேர்மையாக விமர்சனம் செய்யக் கொடுத்து, வாசிக்கச் சொல்லி, தன் படைப்பின் தரத்தைப் பற்றி வாசகப் பார்வையிலிருந்து அணுகிப்பார்ப்பது, படைப்பை செறிவாக்கவும் திருத்தியமைக்கவும் எழுத்தாளனுக்கு உதவும். நேர்மையான, கறாரான முதல் வாசகப் பார்வை/ எழுத்தாளரின் மதிப்பீட்டுக்குப் பிறகு நூலுருவம் பெறாத படைப்புகளும் உண்டு; செறிவாக்கம் பெற்று மிக நல்ல படைப்புகளாக வெளிவந்த நூல்களும் உண்டு. அடுத்து, பலதரப்பட்ட நூல்களுக்கு மத்தியில் குறிப்பாக ஏன் ஒரு நூலை வாங்க வேண்டும் என்ற தெளிவினை/ உந்துதலை வாகசனின் மனதில் ஏற்படுத்தவும் முன்னுரை உதவும்.
இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, நூலுக்கு முன்னுரை வைப்பது அவரவர் தேர்வு என்றாலும் சிவா லெனின் இதுவரை பத்திரிகைகளில் மட்டும் சிறுகதை எழுதியவர் எனும் அடிப்படையில் நூலாக்கம் செய்யும் முன் தன் சிறுகதைகள் குறித்து தெளிவான விமர்சனப் பார்வைக்கு வழிவிட்டிருக்கலாம். அவ்வாறு செய்திருப்பாரெனில் கதைக்கருவில், கூறும் முறையில், வடிவத்தில் காணப்படும் சிக்கல்களை அடையாளம் கண்டிருக்க வாய்ப்புண்டு.
தொடர்ந்து, நூலின் அட்டைப்படம். ஆண், பெண் உருவங்கள் கடற்கரையோரம் நடப்பதுபோல் கருப்பு, தங்க நிறத்திலான வடிவமைப்பு 1980-களின் அல்லது அதற்கும் முன்பான பாணியில் அமைந்திருப்பதைக் கவனித்து பதிப்பகத்தாரின் விபரங்களைத் தேடினேன். சுயபதிப்பு என்பதால் அட்டைவடிவமைப்பு குறித்தெல்லாம் சிவா லெனின் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும் எனத் தோன்றியது. 70-80களில் மலேசியாவில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் சார்ந்த நூல்களின் அட்டைப்படங்கள் தொண்ணூறு விழுக்காடு பூக்கள், பறவைகள், வரையப்பட்ட பெண்களின் உருவங்கள், தெறித்துவிடப்பட்ட சாயங்கள், கொட்டை எழுத்தில் நூலின் தலைப்பு, நூலாசிரியர் பெயர் என கலைரசனை குன்றியதாகவே காணப்படும். இவை முன்பக்க வடிவமைப்பாலும், நிறத் தேர்வாலும் பெரும்பாலும் ஒருவித மந்தகரமான தன்மையைக் கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. சிவா லெனினுடைய இந்நூலில் அட்டைப் படமான நிழல் உருவங்கள்கூட இவ்வகையைச் சார்ந்ததே.
2016-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்நூலிலுள்ள சிறுகதைகள் பதினைந்தும் அதன் அட்டைப்படத்தைப் போலவே பழைமையானதாக இருப்பது ஆச்சரியம். சிறுகதைகளுக்கான தலைப்புகள் அனைத்துமே கதையின் சாரத்தை மொத்தமாய் விளக்கிவிட மேற்கொண்டு வாசிக்க என்ன இருக்கிறது என்ற கேள்வி உருவாவதைக் கடந்துதான் ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் நுழைய வேண்டியிருந்தது. தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்கருக்கள் இலக்கிய வெளியில் இதுகாறும் எழுதி எழுதி குவித்துவிடப்பட்டவை. அதை மீண்டும் எழுதுவதுகூட சிக்கல் இல்லை. ஆனால் அக்கதைக் கருக்கள் எவ்வித புதுப்புரிதலையோ, வேறு கோணத்திலிருந்து ஒரு சிக்கலை அணுகுவதாகவோ அல்லது குறைந்தபட்சம் ஒரு உணர்வினை அதன் நுண்ணிய தன்மையுடன் சொல்வதாகவோ இல்லை.
உதாரணமாக ‘தாய்மையே வெல்லும்’ என்ற கதை. மாமியாரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பத் துடிக்கும் மருமகள், புத்திக்கூர்மையால் சாதுர்யமாக மனைவியின் சதியை முறியடித்து, தாயை தன்னுடன் வைத்துக்கொள்ளும் கணவன் என வட்டமிடும் கதை. இது நெடுந்தொடர்களில்கூட அலுத்துப்போய்விட்ட கரு. புதிதாய் என்ன சொல்ல முடியும் என்று சிந்திப்பதே சற்று கடினமான விடயம். கதைக்கரு இவ்வளவு பழையதாக இருக்கிறது என்றால் நூலாசிரியர் இக்கதையில் வைத்திருக்கும் திருப்பம் அதைவிட பழையது.
கதையின் திருப்பம் :
‘ஓ…. அப்படியா? அப்ப நான் பெரியவன் ஆனதும் நீங்களும் அப்பாவும் வயதானவர்களாகி விடுவீர்கள், உங்கள் இரண்டு பேரையும் நான் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடணுமா அம்மா’
நேற்று இரவு நம்ம பிள்ளை கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஓங்கி அறைந்ததைப் போல இருந்ததுங்க. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்……….’
அருண் தன் மகனைக் கட்டி தழுவி முத்தமிட்டான். அப்பா சொன்ன மாதிரியே பேசி அசத்திட்டடா மகனே எனக் கொஞ்சினான்.
இக்கதையில் மாமியார்-மருமகள் ஒவ்வாமை, தாய்ப்பாசம் ஆகியவற்றை கதைகூறும் முறையிலும் கதாபாத்திரங்களின் உரையாடல்வழியும் மிக நாடகத்தன்மையோடு நூலாசிரியர் படைத்திருப்பது தெளிவு. தொடர்ந்து, இலக்கிய விமர்சகர்கள் படைப்பிலக்கியத்தில் தவிர்க்க வேண்டிய அம்சமாகத் தொடர்ந்து சொல்லிவரும் தேய்வழக்குகளில் (cliché) மிகப் பழைய, மிகத் தட்டையானவற்றை தங்குதடையின்றி அனைத்துக் கதைகளிலும் நூலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். உதாரணமாக கதாபாத்திரங்கள் முந்தைய சம்பவங்களை மீட்டுணர்வதாகச் சொல்லுமிடங்கள், துயரப்படும் கணங்கள்.
‘அல்லும் பகலும் உழைத்து, ஓடாய் தேய்ந்த அவனது அம்மா கருப்பாயியின் தியாகங்களும் அர்ப்பணிப்பும் கண்முன் நிழலாடியது. அவனை அறியாமலேயே அவனது கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது’ – தாய்மையே வெல்லும் (பக்கம் 1)
அந்த பொக்கிசமான பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்கையில் பெரியவரின் கண்களின் ஓரம் கண்ணீர் வடிந்தது. -முதியோர் இல்லம் (பக்கம் 26)
படுக்கையில் கண்மூடிப் படுத்திருந்தாலும் சேகரன் இன்னமும் தூங்கவில்லை. தன் திருமண வாழ்வினை நினைத்துத் தனது நினைவுகளைக் கொஞ்சம் பின்னோக்கி ஓட விட்டார். – தனிக்குடித்தனம் (பக்கம் 39)
அடுத்து, கதையின் முடிவுகளில் கூடுமானவரை அறிவுரைகளைச் சொல்லிவிட முயற்சிக்கும் நூலாசிரியர் அதையும்கூட வணிகத்திரைப்பட பாணியில் நாடகத்தன்மையிலான வரிகளில் அமைத்திருக்கிறார்.
சொந்தத் தொழில் தன் வாழ்வில் பெரியதொரு மாற்றத்தை உருவாக்கியதைப் போல ஒவ்வொரு இளைஞர்களும் சொந்தத் தொழில் செய்திட முன்வர வேண்டும் எனத் தன்னிடம் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது மதன் நினைவுறுத்தி வந்தான். – தடம் மாறிய பயணம் (பக்கம் 58)
சாதியால் வாழ்க்கையைத் தொலைத்த அவ்விருவரின் நினைவுகள் மட்டும் அந்த ஊரின் மரக்கிளைகளிலும், செம்மண் வாசத்திலும் ….. . சாதியால் அவர்களின் அழகிய வாழ்க்கை சிதைந்தது. ஆனால், அவர்களின் உண்மைக் காதலும் அன்பும் அந்த ஊரின் ஒவ்வொரு நினைவுகளிலும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சாதி – (பக்கம் 73)
இச்சிறுகதை நூலில் உள்ள இதர கதைகளான முதியோர் இல்லம், தனிக்குடித்தனம், தடம் மாறிய பயணம், அண்ணன் ஆகிய கதைகளும் இத்தகையதே. சிறுகதைத் துறையில் புதுப்புது உத்திகளையும் சிந்தனைப் பரப்பை விரிய வைக்கும் தேர்ந்த படைப்புகள் அணிவகுத்து வந்து கொண்டிருக்க, வாசகன் எதற்கு சிவா லெனினின் இச்சிறுகதைகளை வாசிக்க வேண்டும் என்ற கேள்வியே எழுகிறது. ‘நல்லறங்களையும் பெரியாரிய சிந்தனைகளையும் கற்க’ என்றால் அவை சார்ந்தும் மிகத் தட்டையான புரிதலையே இச்சிறுகதைகள் முன்வைக்கின்றன.
சாதி, மறுமணம், காதல் போன்ற கதைகள் பெரியாரிய சிந்தனையின் உள்வாங்கலுடன் படைக்கப்பட்டிருப்பதாக நூலாசிரியர் கருதுவாரேயானால் கதைகள் எதுவும் பெரியாரிய சிந்தனையைச் சரியாக வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை. சரி, ஒருவர் சொன்ன கோட்பாட்டை அப்படியே வழிமொழிவதோ மீள்பதிவு செய்வதோதான் ஓர் எழுத்தாளனின் வேலையா? அவைதான் இலக்கியமா? எழுத்தாளன் என்பவன் அனைத்தையும் மறுபரிசீலனை செய்பவனாக, விவாதிப்பவனாக, வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுகுபவனாக, மறுதலிப்பவனாக, மீளுருவாக்கம் செய்பவனாக இருக்கிறான். இவ்விரு கோணங்களிலிருந்து பார்த்தால் இச்சிறுகதைகள் பெரியாரிய சிந்தனையை எவ்வித கேள்விகளும் அற்று ஏற்பதோடு ஆழமான பெரியாரிய பார்வையையும் முன்வைக்க முடியாமல் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் சாதிய ஆதிக்கத்தால் காதல் திருமணங்கள் கொல்லப்படுவதற்கும் மலேசியாவில் திருமணங்களின்போது திரைமறைவில் நிகழும் சாதியப் பிடிப்புகளுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. மேலும், இங்கு அரசியல் கட்சிகள், பத்திரிகைகள், சங்கங்கள் சாதிய ரீதியில் போடும் கபட வேடங்கள் குறித்து பத்திரிகைத் துறையில் இயங்கிவரும் சிவா லெனின் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. இத்தனை வலுவான விடயங்களையெல்லாம் பேசாமல் வணிகத்திரைப்பட பாணியில் கதைவடித்திருப்பது வருந்தத்தக்கது. தமிழ்ப்பள்ளி என்ற சிறுகதையில் அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாராபட்சம் பார்ப்பதாக விரிய வேண்டிய பகுதியில் மிக நாசூக்காக தவறை மக்கள் பக்கம் திருப்பிவிடும் நூலாசிரியரின் சாதுரியம் அவர் நல்லபிள்ளை இலக்கியம் படைக்கவும் நல்லபிள்ளை இலக்கியவாதியாகவும் முயற்சித்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அடுத்து, சிறுகதைகளில் பாத்திரவார்ப்பு குறித்து பார்க்கும்போது பெரியாரிய சிந்தனை கொண்ட நூலாசிரியருக்கு பெண்கள் குறித்த அபிப்ராயம் தாழ்வானதாகவே இருப்பதைப் பார்க்கிறேன். பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்புவதாக விரியும் கதைகள் அனைத்திலும் மனைவியர் சுகபோக, சுதந்திர வாழ்வுக்கு ஆசைப்படுபவர்களாக, ஒத்தூதும் அம்மாக்களும் வஞ்சக மனம் படைத்தவர்களாகவுமே இருக்கின்றனர். நான்கில் மூன்று பகுதி கதைகள் இத்தகையதே. மறுபுறம் ஆண்கள் உழைப்பாளிகளாகவும் வீரதீர நாயகர்களாகவும் மிளிர்கிறார்கள். பொதுப்புத்தியில் மலிந்துவிட்ட இவ்விதச் சிந்தனையைப் பற்றியெல்லாம் கேள்விகளற்று, படைப்பிலும் பதிவு செய்கிறார் நூலாசிரியர். மேலும், முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் அனைவரும் மருமகள்களால் துரத்தியடிக்கப்பட்டவர்கள் என்பதை எல்லாக் கதைகளிலும் கட்டமைக்க முயற்சிப்பது அவரது முதிரா சிந்தனைப் போக்கைக் காட்டுகிறது. இன்று முதியோர் இல்லங்கள் முதியவர்களிடையே பரஸ்பர நட்பு பாராட்டும், தேவைகளைப் பூர்த்தி செய்யும், தங்கும் விடுதிகள் போன்று இயங்குவதையும் முதியவர்கள் விரும்பியே அவற்றைத் தேர்வு செய்வதையும் நூலாசிரியர் கவனிக்கத் தவறியுள்ளார்.
இச்சிறுகதை நூலில் இடம்பெற்றிருக்கும் ஒரு கதையில்கூட மலேசியத் தன்மையைக் காணமுடியவில்லை. யூனியன் கதையை மலேசியத் தன்மையிலானது என நூலாசிரியர் முன்வைப்பாரெனில் தீம்பார், பிரட்டு என்ற இரு குறியீடுகள் ஒரு ரப்பர் காட்டு வாழ்வை சித்தரிக்கப் போதுமானதா? இவை சிறுகதைகளாவும் இல்லாமல், பெரியாரிய சிந்தனை தொட்டு படைக்கப்பட்ட பிரச்சார இலக்கியமாகவும் இல்லாமல் சொற்களையெல்லாம் ஒன்றாய் கூட்டி உருவாக்கிய பனுவல் வடிவில் மட்டுமே இருக்கின்றன. பனுவலில்கூட நிறுத்தற்குறிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இச்சிறுகதைகளை எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் வாசித்தால் கதாமாந்தர் பேசுவதைச் செய்தி வாக்கியம்போல கடந்துவிடுவது உறுதி. இது ஒருபுறம் என்றால் கதைகள் யார் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது என்ற குழப்பம் மறுபுறம். வாசக இடைவெளிக்கெல்லாம் இடம்தர விரும்பாத ஆசிரியர் எல்லாக் கதைகளுக்குள்ளும் நுழைந்து கருத்துகள்வேறு சொல்கிறார். பிரச்சாரமாக பேச விழைந்தவை பிரச்சார தொனியில் இல்லாமல் இருப்பதுதான் பரிதாபம்.
இரண்டாம் பக்கத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக், விரும்பிய இடத்தில் திருப்பம், முடிவில் மொத்தக் குடும்பமும் கைக்கோர்த்து மகிழ்வதாய் ஒரு முடிவு என பழைய வணிகத்திரைபட உத்தியை நூலாசிரியர் பயன்படுத்தினாலும் வாசிக்கும்படியாக எதுவுமில்லை. இதைதான் படிப்பவர்கள் விரும்புவார்கள் என நூலாசிரியர் நினைத்தால் இதைவிட மிக நல்ல வெகுசனக் கதைகளையும் அறிவுரைக் கதைகளையும் எழுபது எண்பதுகளிலேயே நம் மலேசிய எழுத்தாளர்கள் நூலாக்கிவிட்டனர் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன். இன்று, வெகுசன வாசிப்புக்கான இலக்கியங்கள்கூட வெகுவாக வளர்ந்துவிட்ட நிலையில் பழைய கதைக்கருவை தேய்ந்த மொழிநடையில், அலுப்பூட்டும் கூறுமுறையில் சொல்லிவிட்டு வாசகர்கள் விரும்ப வேண்டும் என எதிர்பார்ப்பதற்கெல்லாம் அதீத தன்னம்பிக்கை வேண்டும்.
நூலாசிரியர் : சிவா லெனின்
நான் முன்பெல்லாம் அதிக சிறுகதைகளை ஞாயிறு பதிப்புகளின் வழி வாசித்து இதே போல் கொதித்ததுண்டு விஜி. இங்கே நீங்கள் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் ஓயாமல் வருகிற சிறுகதைகளின் கருவாக மலர்ந்திருப்பதை பல கதைகளின் வழி வாசித்து சலித்ததுண்டு. இவ்வற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத சூழலில், விமர்சனக் கடிதம் எழுதினால், நீ என்ன பெரிய பருப்பா.? நீ எழுதிக்காட்டு பார்க்கலாம்.! உனக்கு பொறாம.! நீ ஒரு விஷப்பூச்சி.! எழுத்தாள வாசகனை வளரவிடாமல் தடுக்கின்ற விஷக்கிருமி நீ. யார் எப்படி எழுதினால் உனக்கென்ன மூடிக்கிட்டு போ.? இலக்கியம் எப்படி இருக்கு என்கிற பாடம் நடத்து, நாங்கள் வறோம்..! இது இலக்கியம் இல்லை என்று சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு.? மு.வ, அகிலன் கதைகளைப் படிக்கவில்லையா.? அவிழ்த்துப்போட்டு ஆடுகிற கதைகளை நல்ல கதை என்று சொல்லுகிற ஆசாமியாச்சே நீ, முகநூலில் நீ அடிக்கின்ற லூட்டி தெரியாதா.? ..ஓ…மா… கா ..பு என பலமாதியான குறுந்தககவல்கள் என்னைக் காயப்படுத்தியது. `எழுதியதை ஊக்கப்படுத்துங்கள், எழுத்தில் ஆர்வம் உள்ள வாசக எழுத்தாளர்களை இப்படியெல்லாம் எழுதி சாய்க்காதீர்கள்,’ என, பத்திரிகை ஆசிரியர்களே என்னை எச்சரித்தார்கள்.
ச்சீ தேவையா இது.. என்று, நம்மூர் பத்திரிகைகளில் பிரசுரமாகிற சிறுகதைகளின் வாசிப்பை நிறுத்தினேன்.
இப்படிதான் ஒரு முறை, மலேசியப் பத்திரிகைகளில் வரும் சிறுகதைகள் மொன்னையானவை, என்று பொத்தம்பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, நம்ம நவீனிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டேன். இதுவும் தவறுதான். ஓரிரு எழுத்துகளை வைத்து எல்லோரையும் சொல்வதும் மூடத்தனம்தான். இருப்பினும் பெரும்பாலும் கதைகள் சரியானதாக வருவது கிடையாது. மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள பாணியில்தான் அதிகமான படைப்புகள் வரும். எப்போதாவது நல்ல கதைகளும் வரும், அதைப்பற்றி புகழ்ந்தால் எழுத்தாளன் எனக்கு நண்பன் என்பதால் எழுதுகிறேன், பாராட்டுகிறேன் என்று திட்டுவார்கள்.
இன்னொன்றையும் சொல்லவேண்டும், ஓரிரு அழகிய சங்க இலக்கிய சொல்லாடல்களை கைவசம் வைத்துக்கொண்டு, கருவே இல்லாத எழுத்துகளில் இந்த சொல்லாடல்களை மிக லாவகமாகப் புகுத்தி, தலைசிறந்த எழுத்துப்பாணியினைக் கொண்ட `எழுத்தாளன்’ என்கிற பட்டத்தோடு சில எழுத்தாளர்கள் உலாவருவதையும் கண்கூடாகக் காணலாம்.., பெரும்பாலும் புகழ்விரும்பிகள்தான் இவ்வாறு நடந்துகொள்வார்கள். இவர்களுக்குத்தான் கோபம் அதிகமாக வரும். நாம் ஒரு எழுத்தை விமர்சித்து எழுதினால், அவர்கள் `எண்டரி’ ஆகி, ஆச்சா போச்சா… எப்படி நீ அப்படிச்சொல்லலாம், அது .. இது.. என்று உளறிக்கொண்டிருப்பார்கள் ? காரணம் அம்பு, பின்பு அவர்களின் எழுத்துப்பக்கமும் பாயலாம் என்கிற முன்னெச்சரிக்கை பய உணர்வுதான் அது.
பத்திரிகை ஆசிரியர்களுக்கு பக்கங்களை நிரப்ப எழுத்துகள் இருந்தால் போதும். அது பயனுள்ளதா அல்லது பயனற்றதா என்பதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. வாசிக்கின்ற வாசகனுக்கு அது தட்டையான புரிதலைக்கொடுத்தாலே போதும். மேலும் உழைக்கச்சொல்லி கண்டனக்கடிதம் வந்தால், விமர்சகன் தோற்றுப்போவான் என்பது உறுதி, காரணம், இங்கே எல்லோரும் அப்படித்தான். இலக்கியத்தில் comfort zone யில் உட்கார்ந்துகொண்டிருக்கின்றார்கள்