நிகழ்காலத்தில் வாழ்வோம்!

நிகழ்காலத்தில் வாழ்வோம்4காலத்தை மூன்று வகையாகப் பிரித்தனர் நம் முன்னோர். நாம் வாழ்ந்து முடித்ததைக் கடந்தகாலமென்றும், வாழ்ந்துகொண்டிருப்பதை நிகழ்காலமாகவும் இனி  வாழப்போவதை எதிர்காலமென்றும் வகைபடுத்தினர். இதிலென்ன எனக்கு சந்தேகம் வந்ததென்று நீங்களும் கேட்கலாம். இன்றைய உலகில் நிகழ்காலத்தில்  ‘வாழ்பவர்களின்’ எண்ணிக்கை குறைந்து வருவதே என் ஆதங்கத்திற்குக்  காரணமாகிறது. கடந்த காலமென்பது காலத்தின் கட்டாயமானது. அது மனிதனின் கைமீறியச் செயல், எனவே அதைப்பற்றிய கருத்துக்கு இங்கே இடமில்லை. நிகழ்காலத்தில் வாழும் நாம், எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பிலேயே, நிகழ்காலத்தின் நிம்மதியை இழக்கிறோமே! இது கொடுமையல்லவா? நிகழ்காலச் சந்தோஷங்களை அனுபவிப்பதற்குகூட எதிர்காலம் பற்றிய பயம் தடையாக இருக்கிறதே! இது வேதனையளிக்கும் விஷயமன்றோ! மனிதன் தனக்கு முன்னும் பின்னும் இருக்கும் காலங்களின் மீது கவனம் செலுத்துமளவில் பாதியைக்கூட நிகழ்காலத்திற்காகச் செலவிடுவதில்லை என்பது தற்கால வாழ்வின் நிதர்சனமாகிறது. நடக்கையில் ஒருமுறை தடுக்கி விழுந்துவிட்டோம் என்பதற்காக, நடப்பதையே நிறுத்திவிடுவதில்லை நாம். அதுபோல வாழ்வில் நடந்த தவறுகளையோ, சோகங்களையோ கடந்துபோனால்தான் நம் வாழ்க்கை நம் வசமிருக்கும். எச்சரிக்கை உணர்வு வாழ்க்கைக்குத் தேவைதான். அது எதிர்கால வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதும்கூட. ஆனால் எச்சரிக்கையுணர்வு மட்டுமே வாழ்க்கைக்குத் தேவையென்று எண்ணிச் செயல்படுவது முறையா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நிகழ்காலத்திலான நம் வாழ்வு, பின்னாளில் நினைத்துப் பார்க்கக்கூட ஏதுமற்றதாக ஆகிவிடக்கூடாது என்ற தவிப்பே என்னை இந்தக் கட்டுரையை வடிக்கச் செய்தது.

காபி குடிப்பதுபோலதான் வாழ்க்கையும்! நம் கைகளில் இருக்கும் ஆவிபறக்கும் காபியை துளித்துளியாய்ச் சுவைத்து குடிக்கையில், அந்த காபியின் சுவைச் சற்று குறைவானதாகவே இருந்தாலும், நமக்கு அது தெரியாது. அதே காபியை அப்படியே வைத்துவிட்டு, ஆறிபோனபின் அதைப் பருகினால், அது அற்புதமான சுவையுடனிருந்தாலும் குடிப்பவர்களால் அந்தச் சுவையைச் சற்றும் உணரவே முடியாது. சூடான காபியென்பதுதான் நிகழ்காலம், அந்தச் சுவையை ரசிக்கத் தவறலாமா?ஆறியபிறகு ‘அப்பவே அந்த காபியை குடிச்சிருக்கலாமோ!’ என்று நினைத்து வருந்துவதால் என்ன பயன்? முடிந்துபோன வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் மனத்தில் வலிமட்டும் எஞ்சியிருக்கிறதே! அப்போது இருந்தநிலை நன்றாகத்தானே இருந்தது? அதை ஏன் அனுபவிக்காமற் போனோமென்று நெஞ்சில் வினா எழுகிறதே! நிலையற்ற வாழ்வில், ஒவ்வொருநாளும் ஒழுங்காய்ப் போகுமென்பதற்கே உத்தரவாதம் இல்லாதபோது, என்றோ வரப்போகும் எதிர்காலத்திற்காக இன்றைய காலத்தை மறந்துவிடுவது நியாயமான செயலாகுமா? நம் மனத்திலிருக்கும் ஆசைகள் நிராசையாகும்போது, அந்த வலியே கவலையாக உருமாறுகிறது. அப்போது மனத்திலுள்ள நிம்மதியானது கொஞ்சங்கொஞ்சமாக நம் மனத்தைவிட்டு விலகிச் செல்கிறது. இதற்காக யாரையும் குறைசொல்லிப் பயனில்லை. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதுபோல நம் வாழ்வின் நல்லது கெட்டதுகளை நம் செயலே தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்து நடக்கவேண்டும். நாம் விதைப்பதைத்தானே நாம் அறுவடை பண்ண முடியும்!இதைப்புரிந்து நமக்கான தேவைகளை நமக்குநாமே செதுக்கிக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து தோல்விகளுக்குத் துணையாக கடந்தகாலத்தை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தால் நிகழ்காலம் நிர்மூலமாகும் என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.‘மாவு இருக்கிற மணத்தைப் போலக் கூழில் இருக்கும் குணம்’ என்பர். அடிப்படையில் என்ன பிரச்சினையென்று ஆராயாமல், பலனைப்பற்றி ஆராய்ந்தே வாழ்க்கையை அழித்துக்கொள்பவர்களும் நம்மிடம் உண்டு.

கடந்தகால தோல்வியைப்பற்றிய பயமே பெரும்பாலானோருக்கு நிகழ்கால வாழ்வின் நிம்மதியைக் கெடுக்கும் சாத்தானாகிறது. ஒன்றில் கையைச் சுட்டுக்கொண்டோமானால், அடுத்ததில் அடியெடுத்துவைக்க, பயமென்ற பேய் முதல் ஆளாய் நம் கண்முன் நின்று, நம் முயற்சிக்கு முட்டுக்கட்டையைப் போட்டுவிடுகிறது. விபத்து பற்றிய பயத்தில் இருக்கைவார் அணிந்துகொள்வது எச்சரிக்கையுணர்வு; ஒருமுறை விபத்து நேர்ந்தது என்பதற்காக, விபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தே வண்டியை ஓட்டாமல் கார்பார்க்கிலேயே நிறுத்தி வைத்திருப்பது நியாயமான செயலாகுமா? இதுபோன்று நம்மைச் செயல்படவிடாமல் முடக்கிப்போடும் கடந்தகால விலங்கைத் தகர்த்தெறிய வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களே மனிதனின் வீழ்ச்சிக்கு வித்திடும் காரணியாகிறது என்பதை நாம் நினைவில் நிறுத்தவேண்டும். கடந்தகால சம்பவமென்பதை அனுபவமாக மட்டுமே கருதவேண்டும். அனுபவங்கள் எப்போதும் நல்லதொரு வழிகாட்டியாய் மட்டுமே அமையுமென்பதை மனதில்கொள்ளவேண்டும். நன்றே செய்; அதுவும் இன்றே செய் என்றுரைக்கிறது புறநானூற்றுப் பாடல். அடுத்த வரியில் ‘இன்னே செய்க’ என்று குறிப்பிடுகிறது. இந்தக் கணமே செய் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது இவ்வரிகள். நினைத்த காரியத்தைச் செய்யாமல் அதையும் இதையும் நினைத்து தள்ளிப்போடுவதை நாம் நம் மனத்திலிருந்து கிள்ளிப்போட்டுவிட்டால் நாம்வாழும் நிகழ்காலமே என்றும் நம் மனத்தில் நிறைந்திருக்கும்.

பள்ளிச் செல்லும் காலத்தில் நமக்கு கிடைத்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களெல்லாம்நிகழ்காலத்தில் வாழ்வோம்3 பசுமையாய் நெஞ்சில் படர்ந்திருக்க, அதன்பின் வந்த காலங்களின் நினைவுகளுடைய சுவடுகள்கூட உள்ளத்தின் ஓரத்தில் இடம்பிடிக்கவில்லையே அது ஏன் என்று எண்ணிப்பார்த்திருக்கிறோமா? ஓட்டம், தறிகெட்டு ஓடும் ஓட்டத்தில் அத்தனையும் தவறவிடுகிறோமே நாம்!ஓட்டத்தின் முடிவில் பெற்ற வெற்றியை ரசித்து அனுபவிக்கும் தன்மையற்று, அதையும் இயந்திரத்தனத்துடன் பார்க்கும் மனோபாவம் என்று மரித்துப்போகிறதோ அன்றுதான் வாழ்வு சுகமாகும். ஒருநாளில் நமக்கு கிடைக்கும் சின்னச் சின்ன  இன்பங்களை ரசிக்கக் கற்றுக்கொண்டால் போதும் வாழ்வு வளமாகும். நாம் வாழும் வாழ்வில் உயிர் இருப்பதை உறுதி செய்வது நிகழ்கால வாழ்வால் மட்டுமே சாத்தியமாகும். நிகழ்கால கஷ்டங்களில் நிம்மதியை பறிகொடுத்துவிடாமல், நம்மை நிலைநிறுத்திக்கொள்வதற்கான அடித்தளங்கள் அவை என்று நினைத்துச் செயல்பட வேண்டும். எந்த சோகமும் நம்மைச் சூழ்ந்துகொள்வதில்லை நாம் அனுமதிக்காதவரை. எப்பேர்பட்ட துன்பம் வந்தபோதிலும், இதுவும் கடந்துபோகும் என்று முன் சென்றால்தான் நமக்கு வாழ்க்கை வசமாகும். நிகழ்கால வாழ்விற்கு நிச்சயமாக தேவைப்படுவதும் அதுதான்.

ஒப்பிட்டுப்பார்த்தல் என்பது மனித வாழ்வை உருக்குலைய வைக்கும் மாபெரும் சக்தியாகும். நம் வாழ்வைத்தான் நாம் வாழவேண்டுமே தவிர அடுத்தவர்கள்போல நாம் வாழவேண்டுமென்று ஒருபோதும் நினைக்கக்கூடாது. அப்படி நாம் செய்வோமானால் நிகழ்காலச் சொர்க்கமானது, ஒருபோதும் நம் கண்களுக்குப் புலனாகாது. உதாரணத்திற்கு, வழக்கமாக தேர்வில் ஐம்பது மதிப்பெண்  பெறும் பிள்ளை, அறுபது மதிப்பெண் பெற்றால் பாராட்டித் தட்டி கொடுக்கவேண்டுமே தவிர, “இதெல்லாம் பெரிய விஷயமில்லை, பக்கத்துவீட்டுப் பையன் தொண்ணூறு எடுக்கிறான், அவனைப்போல நீ எடுக்க வேண்டும்” என்று சொல்வோமானால், அது அவனது வளர்ச்சிக்கு ஒருபோதும் துணையாகாது. போட்டி மனப்பான்மை கொண்டவர்களால் மனநிறைவுடன் வாழ்வது இயலாத காரியம்.

‘மாடு கறக்கவும் பூனை குடிக்கவும் சரியா இருக்கு!’ என்பதுபோல புலம்புகிறவர்களை யாரும் விரும்புவதுமில்லை. பொருளாதார விஷயத்திலும் போட்டி உணர்வே பொறாமையை வளர்க்கிறது. வரவு எதுவாகினும் அதற்குள் நிம்மதியானச் சூழலை உருவாக்கிக்கொள்பவர்களால்தான் மனநிறைவுடன் வாழ முடியும். மாறாக, தன்னைவிட அவன் இவ்வளவு சம்பாதிக்கிறானே, இவன் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறானே என்று வயிறெரிபவன் பொறாமை தீயிலே வாழ்ந்தும் சாகிறான். நிகழ்காலத்தில் கிடைக்கும் சின்னச் சின்னச் சந்தோஷங்களும் அற்புதமானவை, அதை ஒப்பீடு என்ற பெயரில் நிராகரிப்பது நல்லதன்று. எடுத்த எடுப்பிலேயே கிடைத்துவிட்டால் அது மிகப்பெரிய வெற்றியாகத் தெரியாது. தோல்விகளை நம் வாழ்வின் வெற்றிக்கான அடித்தளங்களாக நினைத்து முன்செல்லும்போதுதான் நிகழ்கால வாழ்வு வசந்தமாகும். ‘ஆடு தொலைச்சவன் ஆடித் திரிவான்! கோழி தொலைச்சவன் கூவித் திரிவான்!’ என்பதுபோல அடைந்த நஷ்டத்தை மேலும் அதிகமாக்குவது அதைப்பற்றியே சிந்திப்பதாகும்.

நம்மிடம் தீர்க்கமுடியாத பிரச்சினை என்று இருந்தால் அதை மனதார ஏற்று, மறந்தும்விட வேண்டும். தீர்க்கமுடியா பிரச்சினையை எண்ணி வருத்தத்துடனேயே வாழ்ந்தால் உடலும் மனமும்கெட்டு, நிரந்தர நோயாளியாகவும் வாய்ப்புள்ளது. நம் மனத்தை இறுக்கமாக்கினால் அதில் துன்பமெனும் கட்டிடம்தான் மேன்மேலும் கிளம்பும்.நடந்தவைப்பற்றிய விசனமே மேலோங்கியிருந்தால், அது கரையானைப்போல அரித்து எதற்கும் பயனற்றதாகச் நம்மைச் செய்துவிடும். கவலைகளை உள்வாங்கியபடி மேற்செல்லும் மனிதரால்தான் முன்னேற்றத்தின் வாசலைத் தொடமுடியும். நம் வாழ்வில் நம் விருப்பப்படிதான் அத்தனையும் நடக்குமென்று எதிர்பார்ப்பது அறியாமைதான். நீரோட்டம்போல வாழ்க்கைப் போகும் ஓட்டத்தில் நாமும் போய் அதில்தான் நம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். அதில்தான் நம் வெற்றி அடங்கியுள்ளது.

எனக்குள்ளும் கடந்தகாலத்தின் தாக்கம் ஆறாத வடுவாய் அங்கம் பதித்திருந்தது. பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்த நான், மேற்கொண்டு படிக்கவில்லையே என்ற ஏக்கம் நெருஞ்சிமுள்ளாய் உறுத்திக்கொண்டிருந்தது உண்மை. மகள்மூலமாக என் படைப்பை கண்ட அவரது ஆசிரியர், யாருடைய கைவண்ணமென்று வினவியதன் பலனாக, என் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. என் எழுத்தைப்பற்றி மனந்திறந்து பாராட்டியவரிடம், நான் அதிகம் படிக்கவில்லையென்ற என் ஆதங்கத்தை வெளிப்படுத்த, எழுதுவதற்கு அதெல்லாம் ஒருபோதும் தடையாகாது, என்று அவர் கூறியதே என்னுள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியது. என்னிடமுள்ள ஆற்றலை வெளிவராமல் முடக்கிப்போடச் செய்தது கடந்தகாலத்தில் படிக்கவில்லையே என்ற சிந்தனைதான். அது தவறென்று ஒருவர் உணர்த்தியதின் பலன் இன்று எனக்கான பாதையை நான் அமைத்துக்கொள்ள உதவியிருக்கிறது.கடந்தகால நினைவுகளை தேவையற்ற சுமையாகவும் சிலநேரம் கருத வேண்டும். எந்நேரமும் அதைச் சுமந்துகொண்டே இருந்தால், நிகழ்காலம் அங்கே பாழாவதுடன் எதிர்காலமும் நிச்சயமற்றுப் போகிறது. நிகழ்காலம் நன்றாக வாழப்ப்படும்போது, கடந்தகால தவறுகள் திருத்திக்கொள்ளப்படுவதால், எதிர்கால வெற்றியும் உறுதியாகிறது.வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் ரகசியமும் இதுதான்.

‘தானே தனக்கு உற்ற நண்பனும், பகைவனும்’ என்றுரைக்கிறது பகவத்கீதை. நமது செயல்களே நமக்கு நன்மை தீமைகளை தேடித்தருகின்றன, என்பதை உணரவேண்டும். ஒவ்வொரு நிலையிலும், அடுத்தநிலையைப் பற்றியே யோசித்துச் செயலாற்றினால் வாழும்நிலை வரண்டுதானே போகும். தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது நல்ல உயர்நிலைப்பள்ளியில் சென்று சேரவேண்டுமென்பதே சிந்தனையில் ஊறியிருக்கும். உயர்நிலைப்பள்ளிக்கு வந்தபோதோ நல்ல தொடக்கக்கல்லூரியில் அடியெடுத்து வைக்கவேண்டுமே என்ற ஏக்கம் மனத்தை பீடித்திருக்கும். தொடக்கக்கல்லூரியில் சேர்ந்தபிறகோ விருப்பப்பட்ட பல்கலைக்கழகத்தில் தடம் பதிக்கமுடியுமா என்ற எண்ணம் பாடாய்ப்படுத்தும். ஒருவழியாக படித்து முடித்துவிட்டாலோ குடும்பவாழ்க்கை சிறப்பாக அமையவேண்டுமே என்று மனம் அடுத்தநிலையைத் தேடிப்போயிருக்கும். இதுதான் இன்றைய பெரும்பாலானோரின் நடைமுறை வாழ்க்கையின் ஓட்டமாகிறது. இலட்சியம் வாழ்க்கைக்கு வேண்டும்தான், ஆனால் இலட்சியத்தை நோக்கிய ஓட்டத்தில் நிகழ்காலத்தை தவறவிடக்கூடாது என்பதே முக்கியமாகும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்றார் சுவாமி விவேகானந்தர். நம் வாழ்க்கையை நலமுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால் நிகழ்காலத்தில் நாம் நாமாக வாழவேண்டும்.

நிகழ்காலத்தில் வாழ்வோம்2உடலைவிட்டு உயிர் பிரியும்வரை செல்வத்தை தேடியலைபவர்கள் இறுதியில் சின்னாபின்னப்பட்டுத்தான் போகிறார்கள். பணம் பணமென்று, எதிர்காலத்திற்காக அதைத் தேடி ஓடுவதிலேயே, நிகழ்காலத்தில் அருகிலிருக்கும் உறவுகளையும் நட்புகளையும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஒரு மனிதனின் இயலாமையில் அவனுக்கு கைகொடுப்பது, அவனைச் சார்ந்துள்ளவர்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய ஒன்றாகும். ஒருகாலத்தில் தம்மை கண்டுகொள்ளாமல் சென்ற மனிதர்களை எவரும் நினைவில்கொள்ளுவதில்லை. எதிர்கால வாழ்க்கைக்கு பொருளாதாரம் தேவைதான், நிகழ்கால வாழ்க்கையில் மனிதர்களை நாம் நேசிக்கையில், அதுவும் எதிர்காலத்தேவையை பூர்த்தி செய்யுமென்ற  மனப்பக்குவம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.வருங்காலச் சிந்தனையே நிகழ்கால வாழ்க்கை போராட்டமாக்கி, நிகழ்காலத்தை நிர்மூலமாக்க, நாம் ஒருபோதும் இடந்தரக்கூடாது. ஒரு மனிதன் இறந்தபின்னும் அவனது வாழ்க்கையை நினைவுகூறச் செய்வது, அவன் வாழ்ந்த நல்ல வாழ்க்கைதான். அதைவிடுத்து தனக்கு முன்னும் பின்னும் இருக்கும் காலங்களில் கவனத்தைச் செலுத்தி, நிகழ்காலத்தை கோட்டைவிட்டுவிட்டால் இறுதியில் அவனுக்கு எஞ்சி நிற்பது ஏமாற்றம் மட்டுமே.

பொருளாசை யாரை விட்டது. பொருளுக்காகவே தேடியலைந்து திரிந்து தங்களது பொன்னான வாழ்வை மண்ணாக்கி நிற்பவர்கள் ஏராளமானோர். ஓயாமல் உழைப்பதை வழக்காமாகக் கொண்டிருக்கும்சிலர், நிகழ்கால வாழ்க்கைக்கு அதைச் செலவிட பெரிதும் தயங்குவர். இளவயதில் பட்ட கஷ்டங்களின் பாதிப்போ அல்லது அளவுக்கதிகமான பொறுப்புணர்வோ, தங்களுக்காகச் சிறிதும் அனுபவித்துக்கொள்வதை அணைபோட்டு தடுக்கிறது. எதிர்காலத்திற்காகச் சேமித்து வைப்பதே அவர்களின் தயக்கத்திற்கு காரணமாகிறது. அந்த தாக்கம் மிகுந்திருப்பதால்தான் தங்களுடைய உழைப்புகளைச் சொத்துக்களாக்கி, தான் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதாக மனநிறைவு கொள்கின்றனர்.எதிர்காலத்திற்கான சேமிப்பு அத்தியாவசியம்தான், ஆனால் எதிர்காலத்திற்கு மட்டுமே சேமிப்பென்பது அறிவுடமையல்லவே. சேமித்தவரின் முடிவிற்குப்பிறகு, அந்தச் சேமிப்புகளை யார் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதே நிலையில்லாதபோது, தானும் அனுபவிக்காமல், வாழும் காலங்களில் தம்மைச் சுற்றி வாழ்பவர்களையும் அனுபவிக்க விடாமல், ஒருவர் செய்யும் காரியம் விழலுக்கிறைத்த நீராகவே போகிறது. அளவுக்கதிகமாக ஒரு நபர் சேர்த்துவைத்த சொத்தே அடுத்த தலைமுறையின் சோம்பலுக்குச் சோறிட்டு வளர்க்கிறது. தேவைக்கு அதிகமாக பொருளாதார வசதியைப் பெற்றிருப்பதால், தங்களுடைய திறமையை பயன்படுத்தாமலே மந்தகதியிலேயே பயணம் செய்கின்றனர் அடுத்த தலைமுறையினர். அதனால் அவரவர் வாழ்வை அவர்களுக்காக வாழ்கிறோமா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

வாழ்வின் ஒவ்வொரு கணமும் முக்கியமானது என்று நினைத்து வாழ வேண்டும். மனிதனின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! ஒவ்வொரு நிமிடமும் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவம் மட்டுமே நமக்குச் சொந்தமாகிறது. நேற்று நடந்ததையும், நாளை நடக்கப்போவதையும் எண்ணுவதிலேயே நிகழ்காலம் நினைப்பாரற்று நிர்க்கதியாகிவிடக்கூடாது. இறந்த காலத்தினை இனிமேல் நாம் தொடரும் பணிகளுக்கான படிப்பினையாக மட்டுமே கொள்ளவேண்டும். இறந்தகாலத்தை மாற்றியமைக்க எப்படி நம்மால் இயலாதோ அதுபோல வருங்காலத்தை நிர்ணயிக்கவும் நம்மால் இயலாது. எதிர்காலமென்பது நமக்கு வராமற்கூட போகலாம், ஆனால் நிகழ்காலம் மட்டுமே நிச்சயமான ஒன்றாகயிருக்கிறது. நம் கையிலுள்ள நிகழ்காலம் மட்டுமே வாழ்க்கையில் நிதர்சனமாகிறது. அதனால் வாழ்க்கைப் பயணத்தை கடக்கையில் அதை ரசித்துக்கொண்டே செல்வோம். நாம் இயந்திரங்கள் அல்ல மனிதர்கள், வாழவேண்டும்! சூரிய உதயத்தையும், மறைவையும் ரசிக்கவேண்டும்! வானவில்லை, இயற்கையை, அன்பை, கருணையை மனத்தை பறிகொடுத்து ரசிக்கவேண்டும். அப்போதுதான் நமைச் சுற்றியிருக்கும் போலித்தனங்கள் கழன்று வாழ்வில் உயிர் இருப்பது உறுதியாகும். நமக்கும் வானம் வசமாகும்.

மணிமாலா மதியழகன், சிங்கப்பூர்

1 comment for “நிகழ்காலத்தில் வாழ்வோம்!

  1. Uma
    March 23, 2018 at 10:12 pm

    என் சொந்த வாழ்கையை வெளிப்டுத்தும் கண்ணாடியாகவே அமைந்துள்ளது அருமையான பதிவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...