மனித வாழ்வின் அரிய பொக்கிஷம் அவனது இதழ் சிந்தும் சிரிப்பு என்பது பெரும்பாலானோருக்குப் புரியாமலே போகிறது.நித்தமும் வேகம் வேகமென்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று வாழ்க்கையெனும் பயணத்தை கடக்கையில், வழியில் சிதறிக்கிடக்கும் சிரிப்பை ரசிக்க மறந்துபோவது இன்றைய நிலையின் பரிதாபத்தின் உச்சம். இவர்கள் ஒருகட்டத்தில் சோர்ந்துபோய் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில், நிறைய இடங்கள் வெற்றிடங்களாகவே காட்சியளிக்கின்றன. வாழவேண்டும்! வாழ்க்கையை முழுமையாக வாழவேண்டும். வாழத்தெரிந்தவன் வாழ்க்கையை ரசிக்கத் தவறுவதில்லை. வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவன் சிரிக்கத் தயங்குவதில்லை. யாருக்குத்தான் வாழ்வில் பிரச்சினையில்லை? வாழ்க்கையிலிருக்கும் பிரச்சினையின் அளவுதான் ஒவ்வொருவருக்கும் மாறுபடுமே தவிர பிரச்சினையில்லாதவரென்று எவருமில்லை. நம் பிரச்சினைகளெல்லாம் முடிந்தபின் வாழ்வை ரசித்து சிரித்து மகிழலாமென்று நினைத்தால் முடிகிற காரியமா அது? அலை ஓய்ந்தபின் கடலில் குளிக்கலாமென்று காத்திருந்தது போலல்லவா ஆகிவிடும்!
இறுக்கமான இதயத்தை இலகுவாக்குவது இதழில் மலரும் புன்னகையால் மட்டுமே முடியும். மருத்துவ நிபுணர்கள் இதை ஆராய்ச்சிமூலம் கண்டறிந்துள்ளனர். நாம் சிரிக்கும்போது நம் உடலிலுள்ள எண்ணற்ற தசைகள் அசைவதால் மனமும் உடலும் புத்துணர்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளனர். பலநாடுகளில், மக்கள் ஒன்றுகூடி சிரிப்பதற்காகவே சில அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களது பிரச்சினைகளையெல்லாம் அவ்விடத்திற்கு வெளியே விட்டுவிட்டு இஷ்டம்போல சிரித்து மகிழ்கின்றனர். சிரிப்புபோல ஒரு தொற்றுநோய் உலகில் இல்லை எனலாம். மற்றவர்கள் சிரிப்பதைப் பார்க்கும்போது, அதற்கான காரணம் தெரியாவிடினும், நம்மிலும் அது பரவுவதைக் காணமுடியும். உலக சிரிப்புதினம் ஆண்டுதோறும் மே மாதத்தில் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது.
சிரிக்க முடியாதவனுக்கு பகலும் இருளாகவே இருக்கும். உள்ளத்திலுள்ள கவலைகளை நம் உதட்டுக்கு கொண்டுவராமல் இருப்பதே சிறப்பாகும். நம் துன்பத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்கிறேன் என்று சொன்னோமானால், நாளடைவில் அவ்வுறவுகளுக்குள் விலகல் ஏற்படவும் வாய்ப்புண்டு. “எப்போ பார்த்தாலும் அவன் புலம்பிக்கிட்டுதானே இருக்கான்” என்று மற்றவர்கள் வெறுத்துப்போவதும் உண்டு. இதனால் பிரச்சினையை பிறரிடம் சொல்வதைவிட, அப்பிரச்சினையை மறந்து நம் கவனத்தை சிரிப்பின் பக்கம் திருப்பினால், மனம் இலேசாகும். அதன் பலனாய் பிரச்சினைகளுக்கும் நல்லதொரு தீர்வை தேர்ந்தெடுக்கும் மனநிலை நமக்கு உருவாகும்.
நம் மனத்தை நாம்தான் ஆளவேண்டுமே தவிர, பிறரை ஆள ஒருபோதும் அனுமதிக்க கூடாது. உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான வாரன் பபெட் (Warren Buffet) என்ன சொல்கிறார் எனில், “பிறர் சொல்வதைக் கேளுங்கள், முடிவெடுப்பதை மட்டும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார். ஒரு செயலில் ஈடுபடும்போது முடிவெடுக்கும் நிலை என்று வருகையில் மிகவும் குழப்பமான மனநிலைக்கு ஆட்படுவது பெரும்பாலானருக்கு உள்ள பிரச்சினையாகும். அத்தகைய சூழலில் சரியான முடிவையெடுக்காதவர்கள் பின்னாளில் அவதியுற நேரிடுகிறது. இதைத் தவிர்க்க நமது சிக்கலான காலகட்டங்களில் சிரிப்பை நாம் துணைக்கு அழைத்துக்கொள்ள வேண்டும். மனத்தில் இறுக்கம் இருக்கும்போது எப்படிச் சிரிக்க முடியுமென்பது பலரது கேள்வியாக இருக்கலாம்! கஷ்டம் இருக்கிறதென்று சாப்பிடாமலோ தூங்காமலோ காலங்கழித்து உடலை கெடுத்துக்கொள்வதைவிட அதற்கு மாற்று மருந்தாக சிரிப்பை எடுத்துக்கொள்வது சாலச்சிறந்ததாகும். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை, இதுவும் கடந்து போகுமென்ற மனநிலையில் நாமிருந்தால்தான் வாழ்க்கை நம் வசமிருக்கும்.
மனிதர்களின் மொழி வெவ்வேறாக இருந்தாலும் புன்னகையென்பது மட்டும் பொது மொழியாகும். சிரிப்பதற்கு வயதோ, பொருளாதாரமோ தடையாக இருக்காது. மனது ஒன்றுமட்டுமே வேண்டும். புன்னகைக்கு மகத்தான சக்தியுண்டு. மனத்தால் நாம் புன்னகைக்கும்போது அடுத்தவர் மனத்தில் இமயமாய் உயருகிறோம். வாழ்க்கையில் எப்போதோ நடந்த துயரமான சம்பவங்களை எண்ணுகையில் உடனே நமக்கு கண்ணீர் வந்துவிடுவதில்லை. அதுவே இனிய தருணங்களை நினைவுகூறுகையில் இதழ்கள் மலருவதை மறுக்க முடியுமா? மனிதனை வாழ வைக்கும் ஜீவநாடியே சிரிப்பாகும்.
நாம் படிக்கும் காலங்களில் பல்வேறு ஆசிரியர்கள் நமக்கு பாடம் நடத்தியிருப்பர். அவர்களில் நம் மனம் ஒரு சிலரையே நினைவில் கொண்டிருக்கும். சற்றே சிந்தித்து பார்த்தோமானால், அவர்கள் பாடம் நடத்தும் பாணி மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக இருந்திருக்கும். அந்த வேறுபாடு நகைச்சுவையாகதான் இருக்கும். நகைச்சுவையாக பாடம் நடத்தும்போது மாணவர்கள் மனத்தில் எளிய முறையில் அது பதிவாகி விடுகிறது. கண்டிப்புடன் பாடம் நடத்துவதையே பெரும்பாலானோர் கடைப்பிடிக்க, வகுப்பை கலகலப்பாக்கும் ஆசிரியரை மாணவனுக்கு பிடித்துப்போவது மட்டுமின்றி, ஆசிரியரின் எண்ணமும் அங்கே ஈடேருகிறது.
காலையில் கண்விழித்தவுடன் பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ ஓட்டத்தை தொடங்குபவர்கள், வீடு திரும்புகையில் தங்களுடைய சாரத்தையெல்லாம் இழந்து சக்கையாகத்தான் வருகிறார்கள். அதே மனநிலையில் அவர்களது நாள் முடிவடையுமென்றால், மனத்தில் இறுக்கமானது இரும்பாகித்தான் போகும்.நாம் செய்யும் காரியம் எதுவாகினும் அதைச் சிறப்பாகச் செய்ய, மனத்தை இலேசாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனத்திலுள்ள இறுக்கமெனும் குப்பையை முற்றிலும் துடைத்தொழிக்க சிரிப்பால் மட்டுமே முடியும்.
நம்மைச் சுற்றியிருக்கும் சின்னச் சின்ன விஷயங்களில்கூட சிரிப்பு அடங்கியிருக்கும்.அதை அதன் போக்கிலே விட்டுவிட்டால் போதும் வேறெதுவும் நாம் செய்யவேண்டாம். வடிவேல் நகைச்சுவையைக்கூட, சிலப்பதிகாரத்திலுள்ள சீரியசான கிளைமாக்சை பார்ப்பதுபோலவே முகத்தை வைத்துக்கொண்டு சிலர் பார்ப்பர். ஏன் அப்படியென யோசித்திருக்கோமா? வேறொன்றுமில்லை அது. அவர்கள் இறுக்கமெனும் முகமூடியை மாட்டிக்கொண்டிருப்பதே அதன் காரணமாகும். ‘எனக்கு ஏகப்பட்ட கவலைகள் கிடக்க, இந்த காட்சிகள் என்னை என்ன செய்துவிடும்?’ என்ற அவர்களது மனநிலையே அதற்குக் காரணமாகிறது. இதுபோன்றவர்கள் பின்னாளில் மனவுளைச்சலெனும் மாயச்சூறாவளியில் மாட்டி, சிதைந்து போகவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க மனத்தை அதன் போக்கிலே விட்டுவிடுவது நலம் தரும். துக்கத்தை அடக்குவது நல்லதல்ல என்று நாம் நினைப்பதுபோலவே சிரிப்பை அடக்குவதும் நல்லதில்லை என்று உணர்ந்துகொண்டோமானால் இதற்கெல்லாம் தீர்வு கிட்டும்.
சிரிப்பு என்பது சிநேகிதத்தின் தூதராகவும் அமைகிறது. முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட, நம் முகத்தில் புன்னகையை தவழவிட்டு அறிமுகம் செய்துகொள்ளும் பழக்கம் முன்னொரு காலத்தில் இருந்தது. எதற்குமுன் என்பதுதான் உங்களுக்கே தெரியுமே! கைத்தொலைபேசியெனும்காந்தசக்தி வரும் முன் ரயில் சிநேகமென்று ஒன்று இருந்து வந்தது. அருகில் பயணிப்பவர்களிடம் புன்னகையெனும் அப்ளிகேஷன் போட்டு, அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், அளவளாவியபடி வருவர். அதனால் பயணமும் இனிதாகும், நல்ல பல விஷயங்களும் பரிமாறிக்கொள்ளப்படும். அதற்கெல்லாம் இப்போது வாய்ப்பேயில்லை என்று ஆகிவிட்ட நிலையில், நம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் மட்டுமாவது சிரிப்பைச் சிந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை நோக்குகையில், அவர்களுக்கும் நம்மீது பற்றுதல் ஏற்படும்.
வீடுகளில்கூட சிரிப்புச் சத்தம் சிறுத்துதான் போய்விட்டது. அவரவர் வேலைகளே பெரிதென்று நினைப்பதால், ஒருவரோடு ஒருவருக்குள்ள அன்னியோன்யம் அருகிப் போகிறது. இந்தநிலை களையப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது. வீடுகளில், முடிவேயில்லா சீரியலைப் பார்த்து வெறுத்துப்போவதைவிட, மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் நகைச்சுவை காட்சிகளைக் கண்டு ரசிப்பது நல்லது. தகவல் தொழில்நுட்பம் கொட்டிக்கிடக்கும் இக்காலத்தில், நகைச்சுவையான பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அதை ரசனையுடன் பார்க்கும்போது நம் இதழ் மலருவது இயற்கையாகிறது. இதுபோன்ற புன்னகைக்க வைக்கும் காட்சிகளைப்பற்றி ஒருவரோடு ஒருவர் பேசி மகிழலாம். அப்போது அன்றையநாளின் சுமை குறைந்து மனம் பஞ்சுபோலாவதை உணரமுடியும்.
சமீபத்தில் உற்ற தோழியர் ஐவருடன் ஒரு பூப்புனித நன்னீராட்டு விழாவிற்கு போயிருந்தேன். ஏதோ சில காரணங்களால் விழா தொடங்கத் தாமதமானது. நாங்கள் ஐவரும் வழக்கமான அரட்டை கச்சேரியில் இறங்கினோம். பக்கத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக போனை மூடிவிட்டனர். அவர்களது கவனம் எங்கள் மீது திரும்ப, வந்திருந்தவர்களில் ஒருவர் “நீங்கள் மேரி(சடங்கு நடக்கும் பெண்ணின் அம்மா)க்கு உறவா?” என்று கேட்டார். “இல்லை” என்றேன். “அப்ப சர்ச் பிரண்டா?” என்றார். அவருக்குள்ள ஆவலை உணர்ந்த நான் “எங்கள் பிரண்டு விஜியோட பிரண்டுதான் மேரி, ஒரு வார்த்தை விழாவுக்கு வாங்கன்னு சொன்னாங்க, அதான் அப்படியே ஒட்டிக்கிட்டு கிளம்பி வந்துட்டோம்” என்று சொன்னதுதான்தாமதம் வெடிச்சிரிப்பு அடங்க வெகுநேரமானது. நாங்கள் இருந்த இடமே சிரிப்பால் அதிர, அன்றைக்கு சிரித்த சிரிப்பில் கடைவாய் தசையே வலிக்க ஆரம்பித்துவிட்டது. யாருக்குமே விழா தாமதமாகுதே என்ற வெறுப்போ சலிப்போயின்றி போனது அந்தநாள். விழா முடிந்த பின்னும் உடனே யாரும் கிளம்பலைங்கிறதை இங்கே நான் பதிவுபண்ணியே ஆகவேண்டும். கூப்பிட்டார்களேயென்று கடமைக்காக வந்து வாழ்த்தி, கவரை கையில் கொடுத்துவிட்டு, உணவை ருசித்துவிட்டுச் செல்லாமல், விழாவை கலகலப்பாக அனுபவித்தது எல்லோருக்குமே பிடித்திருந்தது. அவரவர் வீட்டுக்கு கிளம்புகையில், அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து என்னிடம், “போயிட்டு வர்றேன்மா” என்று சொன்னதுடன் நில்லாமல், “இப்படி வாய்விட்டுச் சிரித்து எத்தனை காலம் ஆகுது தெரியுமா?” என்று சொல்லிச் சென்றது, என்னால் மறக்க முடியா தருணம்.
கணவர் ஜோக்கென்று நினைத்துச் சொல்லும் அறுவைக்குக்கூட, சிரித்து வைக்கும் மனைவியால் அங்கே இல்லறம் நல்லறமாகிறது. இதன் பெயர் நடிப்பல்ல. ஒருவரது முயற்சிக்கு நாம் வழங்கும் பாராட்டே அது. ஒருத்தர் ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சி, அவரே சொல்லமுடியாம சிரிச்சி சிரிச்சே சொல்லி முடித்திருப்பார். அவ்ளோநேரம் கேட்டுக்கொண்டிருந்தவர் “ஏதோ ஜோக் சொல்றேன்னு சொன்னியே?” என்று சொன்னால் எப்படியிருக்கும்? ஆனால் இதுகூட ஜோக்தானேன்னு நாம் சிரித்து வைத்தோமானால், அதைச் சொன்னவருக்குப் பாடம் புகட்டியதாகவும் இருக்கும். இதுதாங்க வாழ்க்கை.
நாம் இறுக்கமாய் இருப்பதனால் ஏதோ ஒரு நன்மை விளையப்போகிறது என்றால் அதில் தவறொன்றுமில்லை. எதுவுமே ஆகாமல் தனிமையென்னும் நோய் பீடித்திட, மனயிறுக்கம் என்ற நோயால் மனித இனம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதே இப்படைப்பின் நோக்கமாகும். நம் உடலுக்கு நல்ல உணவைத் தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுபோல, நம் உள்ளத்துக்கு நல்ல சிரிப்பைத் தந்தால் சிறப்பான வாழ்வை நாம் பெறலாம். அதனால்தானே நம் முன்னோர் ‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்றுரைத்தனர். சிரிப்பென்றால் அது கடனேயென்று, போனால் போகட்டுமென சிரிக்கும் சிரிப்பல்ல. மனம்விட்டு சிரிக்கும் சிரிப்பால் மட்டுமே நமை பிடித்து ஆட்டும் நோயென்னும் அசுரன் நமைவிட்டு வெகுதூரம் ஓடுவான். இன்றே நம் ஆரோக்கியத்திற்கு முதலீடாக சிரிப்பை விதைப்போம். சிறந்த பலனை பெறுவோம்.
சிரித்து வாழ்வோம்! சீரிய வகையில் வாழ்வை இரசித்து வாழ்வோம்!
மணிமாலா மதியழகன், சிங்கப்பூர்
Very humorous article. Thanks ma.