மன்னிப்பு

மன்னிப்பு2“இந்த மூணு பிள்ளைங்களுக்கும் கொஞ்சம் விபரம்  தெரிஞ்சதும், கண்காணாம தொலைச்சிட்டு போயிருனும். அப்பத்தான் நிம்மதி. நமக்குன்னு ஒரு வாழ்க்கை, நம்ம வழியில்…” அடுப்பறையில் பாலோடு சேர்ந்து பொங்கிக் கொண்டிருந்தாள் பாக்கியம்.

கடைக்குட்டி இந்திராணி மூன்றாவது முறையாக ஓடிவந்தாள். “அப்பா எப்ப வருவாரு?”  என்ற அதே கேள்வியுடன். “வருவாரு. போய் அக்காகூட   விளையாடு” எனச் சொல்லி, நேற்று பூஜைக்கு வைத்த வாழைப்பழ சீப்பிலிருந்து ஒன்றை பிய்த்து இந்திராணிக்கு கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரை அது புனிதமடைந்த பழம். எனவே பிரசாதம் போல பக்குவமாகவே கொடுத்தாள். “அக்காக்கும்  அண்ணாக்கும்”? என இன்னும் இரண்டு பழங்களை சேர்த்து வாங்கி கொண்டு ஓடினாள் இந்திராணி. ஐந்து வயசுதான் ஆகிறது. நல்ல மனசுக்காரி.

இந்திராணி  வயிற்றில் இருந்தபோதுதான் அவன் அந்தப்பெண்ணுடன் பழக ஆரம்பித்திருந்தான். அவளுக்கு நான்கு வயது ஆகும்போதுதான் பாக்கியத்தால் கண்டுப்பிடிக்கவே முடிந்தது. நான்கு ஆண்டுகள் ஏமாந்து வாழ்ந்ததை நினைத்தால் இப்போதும் கோபம் வந்தது. கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் நடந்துகொண்டான். கொஞ்சலுக்கெல்லாம் குறைவில்லை. நான்காவது பிள்ளைக்கு வேறு கடுமையாக முயற்சி செய்துக்கொண்டிருந்தான்.  அந்த நினைப்பு வரும்போதெல்லாம், உடனே அவனைக் கொல்லவேண்டும் போல இருக்கும்.

அதற்காக அவள் சில முயற்சிகளையும் செய்துள்ளால்.

குரூன் மலைப்பகுதியில் இருக்கும் போமோ ஒருவரைத் தேடிச்சென்று அவனுக்குச் செய்வினை வைத்தாள். பதினெட்டு படி கறுப்பனுக்கு வேண்டி சேவல் அறுத்தாள். எதுவும் பலிக்கவில்லை. அவன் தற்காப்புக்கு ஏதோ தகடு செய்துவைத்திருக்கிறான் என போமோ சொன்னான். தகட்டை சக்தி இழக்க வைக்க மேலும் ஐநூறு ரிங்கிட் கேட்டபோது அவள் கொலை முயற்சியைக் கைவிட்டிருந்தாள்.

வாசலில் குழந்தைகளின் பூரிப்பின் குரல் கேட்டது. “வந்துட்டான். குளிச்சிட்டு உடுப்பை  மாத்திரலாம்னு நெனச்சேன், அதுக்குள்ள வந்துட்டான்” என அவசரமானவள் “அம்மா தாத்தா வந்துருக்காங்க” என மூத்தவன்  போட்ட சத்தத்தில் “ஓ… தாத்தாவா?” என்று முகப்பறை வரை வந்தாள். கடமைக்கு வரவேற்று குளிக்க போக நினைத்தாள். “தேத்தண்ணி போடும்மா” என பாக்கியத்திடம் உரிமையோடும் “டீவியை தட்டுங்கம்மான்னு” பேத்திகளிடம் அதட்டலாகவும் சொல்லிட்டு மெது நாற்காலியில் ஜம்மென அமர்ந்துகொண்டார். அவ்வளவு வேகமாக வாசல்வரை ஓடி வந்தது அவளுக்கே அவமானமாக இருந்தது. ‘எல்லாவற்றையும் மன்னித்திருப்பேன்’ என நினைத்திருப்பாரோ என குழம்பிக்கொண்டாள். குறைந்த பட்சம் மௌனமாக இருந்திருக்கலாமோ எனத்தோன்றியது.

அவன் வரான்னு இவரு சொல்லித்தான் பாக்கியத்திற்கு தெரியும். தொலைபேசியில் இருவருக்கும் தொடர்புள்ளது போல. ‘இத்தனைக்காலம் இந்தப் பக்கம் ஆளையே பாக்க முடியல. வந்தவரு பிள்ளைங்களுக்கு எதாவது வாங்கி வந்தாரா? வெறும் கைய வீசிட்டு தான் வந்திருக்காரு. என்ன மனுசனோ?’ தேத்தண்ணி தயாரிப்பில் பாக்கியத்தின் கடுப்பும் கொஞ்சம்  கலந்தது.

‘அழாதே ஆனந்தி’ சீரியலில் ஆனந்தி வழக்கம்போல அழுது கொண்டிருந்தாள். மாமனார் மிக உருக்கமாக சோகம் வடித்துக்கொண்டிருந்தார். ஆவிபறக்கும் தேத்தண்ணியை அப்படியே அவர் மூஞ்சிலே ஊற்றிவிடலாம் என தோன்றியது அவளுக்கு. இன்னொரு பெண்ணிடம் அவன் பழகுறாரென சொன்னபோது, “நீங்க காதல் பண்ணி கட்டிக்கிட்டிங்க. நீங்களே சமாளிச்சிக்கிங்க”ன்னு  சொன்னது நினைவுக்கு வந்தது. விசயம் தெரிந்து எதிர்த்துக்கேட்டபோதும் அதற்காக அடிவாங்கி அலறி அழுதப்போது ஒன்றுமே செய்யாமல் நின்றவரின்  சீரியல் அழுகை எரிச்சலை மூட்டியது. தேனீரை அவர் அருகாமையில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு குளிக்கச் சென்றாள். அவரிடம் எந்தச் சலனமும் இல்லை. எல்லாமே சரியாக நடப்பது போல நிம்மதியாக இருந்தார்.

குளித்துவிட்டு வரும்போது நாற்காலியில் குறட்டை விட்டு மிதந்துகொண்டிருந்தார். இப்போதும் ஆனந்தியின் அழுகை முடிந்திருக்கவில்லை.  வெறுப்புடன் டீவியை அடைத்துவிட்டு, பிள்ளைகளை தங்கள் புத்தகங்களை எடுத்து படிக்க சொன்னாள் பாக்கியம். அப்படிச் சொன்னாள் அவர்களுக்கு மைலோ கலக்கிக் கொடுக்க வேண்டும். அந்தப் பழக்கம் எப்படி உருவானது என தெரியவில்லை. முன்னர் அவனுக்கும் அப்படி ஒரு பழக்கம் இருந்தது. அவன் மைலோ பைத்தியம். ஒருநாளைக்கு ஆறேழு முறையாவது குடித்துவிடுவான். அவனால்தான் அவள் வகை வகையாக மைலோ கலக்கப் பழகியிருந்தாள். மைலோவுடன் நெஸ்கப்பி தூளைச் சேர்ப்பதும் மைலோவும் ஆர்லிக்ஸ் தூளை சேர்ப்பதும் என அவள் அவனுக்காகக் கற்றதெல்லாம் பிள்ளைகளுக்குப் பயனாக இருந்தது.

ஹார்ன் கூச்சலுடன் ஆடம்பர கார் வாசலை அடைந்து நின்றது. “வந்துட்டான்”. மைலோ தூள் சுடுநீரில் மிதக்க, சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் ஒரு முறை தன் முகத்தை பார்த்துக்கொண்டு, ஸ்டிக்கர் பொட்டை சரிசெய்து விட்டு, ‘மன்னிப்பு கின்னிப்புன்னு கிட்ட வந்தானா, அவன் கண்ண மட்டும் பாக்காத’ என தன்னையே மிரட்டிக்கொண்டு, சமையலறைக்கும் பூஜையறைக்கும் நடுப்புறம் இருக்கும் மஞ்சள் திரைச்சீலைக்கு பின்னாடி பதுங்கி நின்றாள். திரையில் குங்கும புள்ளிகளும், ஊதுபத்தி துவாரங்களும் இன்றுதான் அவள் கண்களுக்கு பளிச்சென்று பட்டது.

இங்கிருந்து எல்லாம் தெரியும், அங்கிருந்து பார்த்தால் அவள் இருப்பது தெரியாது. இந்தத் திரைசீலை ரகசியம் பாக்கியத்திற்கு மட்டும்தான் தெரியும். திரைச்சீலைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள ஏன் அவசர அவசரமாகக் குளித்து, செண்டெல்லாம் பூசினோமோ என நொந்துகொண்டாள்.

பாக்கியத்திற்கு சற்று கைகால்கள் நடுங்கியது. குற்றம் செய்தவன் ஜம்மென்று வர பாதிக்கப்பட்டவளுக்கு ஏற்பட்ட நடுக்கத்திற்கான காரணம் புரியாமல் குழம்பினாள்.

ஒரு வருஷம் கழித்து பார்ப்பதனால் பிள்ளைகள் உண்மையான ஏக்கத்தில் துள்ளி குதித்தனர். மாமனார் முகத்திலும் முழு சிரிப்பு. ஆனந்தியை மறந்துவிட்டார் போல. மூணு பிள்ளைகளையும் சேர்த்து அணைத்து தூக்கி கொஞ்சினான். கண்ணீரெல்லாம் விட்டான். பாக்கியத்திற்கு ரத்தம் கொந்தளித்தது. முகம் சிவந்திருந்தது. ஓடிச்சென்று மூன்று பிள்ளைகளையும் அடிக்கலாம் என பதறியது. வேண்டாம் என கால்விரல்களை மடக்கிக்கொண்டாள். அவன் மன்னிப்புக்கேட்டால் சட்டையைப் பிடித்து உலுக்கி எடுக்க மொத்த சக்தியும் தேவைப்படலாமென காத்திருந்தாள்.

பெரிய பொட்டலம் ஒன்றை கொண்டுவந்திருந்தான். பொட்டலத்தை சுற்றி நால்வரும் அமர்ந்துகொண்டனர். பிள்ளைகள் பொறுமையின்றி பிரிக்கப்படும் பொட்டலத்தையே பார்வையிட்டனர். பரிசுகளை கொடுத்துக்கொண்டே இடையிடையே பாச வார்த்தைகளையும் முத்தங்களையும் பரிமாறிக்கொண்டிருந்தான். பாக்கியத்திற்கு ஐம்புலன்களும் சேர்ந்து கூசியது. ஒருவருடத்தில் ஆளே மாறியிருந்தான். முன்பிலும் இளமையாகக் காட்சியளித்தான். காதில் கடுக்கண். இருபக்கமும் முடி கரைக்கப்பட்டு முன்புறம் செம்பட்டை நிறத்தில் டய். முத்தம் கொடுக்கும்போதுமட்டும் எப்போதும்போல உதடுகள் அதிகமாகக் குவிந்தன.

மாதம் தவறாமல் பணத்தை மட்டும் யார் மூலமாவது கொடுத்தனுப்பினால் போதும் என நினைத்துவிட்டவனுக்கு எப்படி புத்தி புகட்டுவது என யோசித்தாள். பாக்கியம் ஒருவருடத்தில் அதிகம்தான் உருகுழைந்திருந்தாள். ஏற்கனவே மாநிறம்தான், வேலைக்கு போனதிலிருந்து நிறம் மேலும் மங்கியிருந்தது. இவன் தேடிச்சென்றவள் தன்னைப்போல் இருக்கப்போவதில்லை என பாக்கியத்திற்குத் தெரியும். காசுக்காரி. காசுக்கு இளமையைத் தக்கவைக்க முடியும் என்பதை அறிவாள். கல்லூரி படிக்கும்போது. பாக்கியமும் நல்ல மெல்லிய மேனியுடன், சிகப்பு தேவதைப்போலிருப்பாள். அவளது சிரிப்பும், குழி விழும் கன்னமும், பெரிய கண்களும்தான் அவனை கவர்ந்ததென்று சொல்லி சொல்லியே கவிழ்த்தான். இரண்டு குழந்தைகளை சிசேரியன் முறையில் பெற்றதால் அவள் பெருத்துப்போயிருந்தாள். உடலை இளைக்க பல முயற்சியில் ஈடுபட்டு மூன்றாவதாக கற்பம் உண்டாகி மீண்டும் குண்டானாது நினைவுக்கு வந்தபோது வயிற்றைத் தடவிப்பார்த்தாள்.

“அப்பா” என்றான். மாமனார் பற்களை காட்சிக்கு வைத்தார். ஒரு ரொக்கத்தை  எடுத்து நீட்டினான். குனிந்து பெற்று கொண்டார். அவனை பார்த்து கூசாமல் கையெடுத்து வணங்கினார். “விட்டா காலிலும் விழுவார் போல. ” இருவரையும் சேர்த்துக்கொல்ல வேண்டும் போல இருந்தது. பாக்கியம் பல்லை கடித்தாள். அவிழ்ந்து விழுந்த அவளின் சுருட்டை கூந்தலை, மீண்டும் இழுத்து கட்டிக்கொண்டாள். ஒருவருடத்தில் அவன் எப்படி தொப்பையைக் காணடித்தான் என்பது ஆச்சரியமாக இருந்தது. கைகளும் கழுத்தும் மினுமினுத்தன. அவன் மன்னிப்புக்கேட்கும்போது அந்தச் சங்கிலியை பிடித்து இழுத்து அறுத்து காயம் செய்ய வேண்டுமென திட்டமிடும்போது கைகள் முறுக்கேறின.

இன்னொரு சிறு பொட்டலத்தை மூத்தவனிடம் கொடுத்து காதில் ஏதோ சொன்னான். மூத்தவன் அடுப்பறை நோக்கி வருவதை பாக்கியம் திரைவழியாகப் பார்த்தாள்.  விடுக்கென்று நகர்ந்து மைலோவை விட்ட இடத்தில பிடித்தாள். “அம்மா இது உங்களுக்கு. அப்பா கொடுத்தாங்க”. என்றவனை முறைத்தாள். அசையாமல் இருந்தவனை நோக்கி சத்தம் வெளிவராமல் பற்களைக் கடித்தவாறு கத்தினாள். அவன் பொட்டலத்தை அங்கேயே வைத்துவிட்டு நகர்ந்தான். பாக்கியத்திற்கு படும் கோபம் பீறிட்டது. ஏதோ ஒரு பாத்திரத்தை உடைத்து மீண்டும் ஓடிவந்து திரைசீலை வழியாகப் பார்த்தாள்..  மாமனார் இப்போது டிவியைத் திறந்திருந்தார்.

பாக்கியத்துக்குப் படபடப்பு ஓயவில்லை. அவன் மன்னிப்புக்கேட்கும்போது பொட்டலத்தை முகத்தில் அடிக்கவேண்டுமென பொறுமினாள். வீட்டின் முன் அறையில் சிரிப்பும் கூச்சலுமாக இருந்தது. பாக்கியத்துக்கு தனியாக இருப்பது என்னவோ போல் இருந்தது. இந்திராணியை உள்ளிருந்தபடியே அழைத்தாள். அவள் பதிலேதும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டிருப்பது கேட்டது. பாக்கியத்துக்குக் கோபம் தலைக்கேறியது. பின் வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தாள். வாழைமரங்கள் பெரும் காடுபோல தோற்றம் கொடுத்தது. ரொம்ப நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவை மத்தியில் புகுந்து ஓடிவிடலாம் போல தோன்றியது. நிதானம் ஆனதும் மீண்டும் இந்திராணியை அழைத்தாள். இந்திராணி ஓடி வந்தாள். அவளிடம் என்ன சொல்வதென தெரியாமல் கொஞ்ச நேரம் முகத்தையே பார்த்தாள். பின்னர் சட்டென உள்ளே சென்றவள் பரிசுப்பொட்டலத்தைக் கையில் எடுத்தாள். தக்கென இருந்தது.

‘அவனென்ன மன்னிப்புக்கேப்பது. நானே விட்டடிக்கிறேன்’ என வேகமாக வரவேற்பறையை நோக்கி நடந்தாள். இந்திராணியும் பின் நோக்கி ஓடினாள். காரும் அவனும் அங்கில்லை. மாமனாரும் தெருமுனையில் மறைந்துக்கொண்டிருந்தார். பிள்ளைகள் அப்பா வாங்கிகொடுத்த பொருள்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். இந்திராணி பரிசுப்பொட்டலத்தைப் பிடுங்கிப்பார்க்க முயன்றபோது கைகளை இறுக்கி பரிசைப் பின்புறம் வைத்து மறைத்துக்கொண்டாள்.

எப்பொழுதேனும் அதைப் பிரித்துப்பார்த்துவிடுவோமோ என அவளுக்குத் தோன்றிய நிமிடம் பொட்டலம் கனக்கத் தொடங்கியது.

கலைசேகர்

மகிழம்பூ, ஈப்போ

11 comments for “மன்னிப்பு

  1. Dr.M.CHANDRASEKARAN
    May 5, 2017 at 9:43 pm

    கதையும்,காட்சியும் ஒன்றாக இணைந்து வாசிப்பவரை கட்டி நிறுத்துகிறது. அடுத்த நகர்வு எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மேலோங்குகிறது… பாவம்!பாக்கியத்தின் நிலை எந்த பெண்ணிற்கும் நேர்ந்துவிடக்கூடாது (ஆணாதிக்க சமூகத்தில்). இறுதி காட்சி இதயத்தை கணக்க வைக்கிறது. மொத்தத்தில் யாராலும் தவிர்க் முடியாத கதைஆளுமை கொண்ட ஒரு பிரமாதமான சிறுகதை!!!

    • mano
      May 6, 2017 at 9:37 pm

      nalla kathai, mudivu innum sirappaaga irukka vendum enbathu enathu karutthu…

  2. வசந்தகுமார்
    May 6, 2017 at 6:47 pm

    தாங்கள் திரைக்கதை அமைப்பதில் வல்லமை பெற்றவர் என்பதற்கு இச்சிறுகதை மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இச்சிறு கதையை படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படும். மொத்தத்தில் ” மன்னிப்பு ” உங்கள் படைப்புகளில் உணர்வுப்பூர்வமனது…!உயர்வானது…! உன்னதமானது…!

  3. sabrina
    May 6, 2017 at 7:22 pm

    Aduthu aduthu yenne nadakkumo yendra yethirparpu melonggugirathu.arukaiyane padaipu.

  4. Dr Rahim Munna
    May 7, 2017 at 10:37 pm

    Arumayana padaipu. Valthukkal.

  5. தமிழரசன்
    May 7, 2017 at 11:18 pm

    அர்புதமான கதை வடிவம்…
    வேண்டும் எனும் வார்த்தை வேண்டாமையில் ஒளிந்திருக்கிறது. இக்கதையில் பாக்கியம் என் சிந்தனை ஆற்றல் வழி என் மனதிரையில் வந்து சென்றாள்.

    மெம்மேழும் சிறப்பான கதைகள் எழுதி, உயர்ந்ததொரு இடைத்தை அடைய வாழ்த்துகிறேன்.

  6. Thangam
    May 8, 2017 at 2:11 pm

    Arputhamaana padaippu.aduthu ennavendra ethirpaarppudan amaithullathu.thodaraddum unggal kaivannam.

  7. Balu
    May 8, 2017 at 3:19 pm

    Miga poruthamana thalaipu iyya migavum arumai

  8. ஸ்ரீவிஜி
    May 23, 2017 at 12:51 pm

    கதை முடிந்துவிட்டதா.? அய்யோ, எனக்கு தலையே வெடித்துவிடும் போலிருக்கே. கலை, `கால்’ பண்ணி கேட்பேன். என்ன நடந்தததுன்னு சொல்லணும். சரியா.?. என்னால முடியல.!
    அருமை, வாசகனைப் புலம்பவைத்து வாசகனோடு பயணித்த எழுத்துப்பாணி மிகவும் அருமை.
    வாழ்த்துகள் கலை. உங்களின் எழுத்தாற்றல் கவர்கிறது.

    ஸ்ரீவிஜி.

  9. sharvina
    July 6, 2017 at 3:02 pm

    mudivu teriyamal manam tavikkirathu..

  10. Natarajan attemulam
    June 26, 2019 at 12:09 pm

    வணக்கம் சார் ! முடிவை வாசகரின் மனதை தொட்டு விட்டிர்கள் .மகழ்ச்சி !!!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...