அம்மா மட்டுமல்ல, அம்மாவுடன் சென்ற நானும் அண்ணியும் பரிசோதனை முடிவு என்னவாக இருக்கும் என்பதில் நெஞ்சம் படபடக்க அந்தத் தனி அறையில் மருத்துவரின் முகத்தையே பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் அண்ணன் மகள் ரூபா முடிவு எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணித்திருந்தாலும், அப்படி ஒரு துரதிஷ்டமான நிலைமை தன் அப்பம்மாவுக்கு, வரக் கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.
மருத்துவர் இளம் மாலாய்ப் பெண். அம்மாவின் எக்ஸ்ரே உட்பட அவர்கள் மேற்கொண்ட அத்தனைப் பரிசோதனையின் முடிவுகளையும் கணினித் திரையில் நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு இறுப்புக் கொள்ளவில்லை. அந்தக் குளிர்ந்த அறையிலும் வியர்த்துக் கொட்டி அளவுக்கதிகமாக மூச்சிறைக்கத் தொடங்கியது. அறையில் உட்கார மேலும் இரண்டு நாற்காலிகள் காலியாக இருந்தும் அம்மாவையும் மருத்துவரையும் தவிர நாங்கள் மூவரும் நின்று கொண்டுதான் இருந்தோம்.
கைப்பேசியின் அழைப்பு ஒலியை மௌனப்படுத்தி வைத்திருந்ததால் அது அவ்வப்போது உர் உர்ரென்று தொந்தரவு செய்து கொண்டிருந்தது. அந்த அழைப்புகளெல்லாம் யார் யாரிடம் இருந்து வந்திருக்கும் என்பது நன்றாகவே தெரியும், இருந்தும் அதை எடுத்துப் பார்க்கவும் மனம் வரவில்லை. மருத்துவர் அண்ணியிடம் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அம்மாவோ நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு என்ன பதில் சொல்வாரோ என்று மருத்துவரின் முகத்தையே தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்படியெல்லாம் இருக்காது என்று அம்மா நம்பினாலும் நுட்பமான சில பரிசோதனைகளை மேற்கொண்டபோது, கொஞ்சம் மனத்தளர்வு அடையவே செய்தாள். அதுவும், கொஞ்சம் சதைப்பகுதியை மருத்துவப் பரிசோதனைக்காகக் கிள்ளி எடுத்து அனுப்பியபோது மனம் தடுமாறிப் போனாள்.
மருத்துவருக்கு அம்மாவின் மேல் அனுதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும். அம்மாவை பார்ப்பதும் கணினித் திரையில் பார்வையை ஓடவிடுவதுமாக இருந்தாள். இளம் மருத்துவராக இருப்பதால் முடிவைச் சொல்ல தயக்கம் காட்டுகிறாரோ என்னவோ! அம்மா பொறுமை இழந்து விட்டாள்.
மருத்துவப் பரிசோதனையின் முடிவைக் கேட்க அம்மாவின் வாய் அசைகிறது ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. உதடுகள் உலர்ந்திருந்தன.
“மாச்சிக் , உங்களுக்கு மார்பகப் புற்று நோய்தான்னு சோதனையில தெரிய வந்திருக்கு“
கண்ணீர் பொலபொலவென கொட்டியது எனக்கு. அறையில் கொஞ்ச நேர நிசப்தம் நிலவியது. அம்மாவை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்தாலும், என்னால் முடியவில்லை. அண்ணி அம்மாவின் தோள் மேல் கையைப்போட்டு தட்டிக் கொடுத்தாள்.
“இதுக்கு ஒன்னும் செய்ய முடியாதா?“
ஈனசுரத்தில் மலாய் மொழியில் அம்மா கேட்டபோது, அவள் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. பரிதாபமாக இருந்தது. இயல்பாகப் பேசும்போதே கூட அதிகாரத் தோரணையில் இருக்கும் அம்மாவின் பேச்சுத் தொனி அப்படியே ஒடுங்கிப்போயிருந்தது. எனக்குத் தொண்டையை இறுக்கியது.
“முடியும். கண்டிப்பாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும். அந்த மார்பகத்தை அகற்றியாக வேண்டும்.” இந்த வார்த்தையைக் கேட்டதுமே பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்ட அந்த மார்பகத்தில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தி, கீழே குனிந்து அதனையே வெறித்துப் பார்த்தாள்.
ஃ ஃ ஃ
அம்மா ஆறு பிள்ளைகளைப் பெற்றவள் என்றாலும் இந்த எழுபது வயதிலும் அவளின் மார்பகங்கள் ரொம்பவும் தளர்வுற்றுப் போகாமல் இருந்தன. இசிஜி பரிசோதனை செய்யும் சமயத்தில் தாதியர் அம்மாவின் மார்புகளைப் பார்த்தட “மாச்சிக், மாசி சந்தேக் லகிலா, எப்படி? என்ன சாப்பிடுறீங்க?” அது இதுவென்று கேள்விமேல் கேள்வி கேட்கும் போதெல்லாம் அம்மா சிலிர்த்துப் போவாள். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்களின் அழகு குலைந்து போய்விடும் என்ற நம்பிக்கையைப் பொய்யாக்கியவள் அம்மா. ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தது ஒன்றரை வயது வரைக்குமாவது தாய்ப்பால் ஊட்டியவள். அதன் அவசியத்தை அறிந்தவள். ஆரம்பப் பள்ளிவரை தமிழ் படித்திருந்ததால், நாளிதழ், சஞ்சிகைகளைப் படித்து தனது அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொண்டாள். ஆசிரியராக இருந்த அப்பாவை மணந்து கொண்டபின் அவள் அறிவு மேலும் சுடர்விட்டது. அதனாலேயே எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடிய தைரியம் அவளுக்கிருந்தது.
அம்மா எதிலும் முன்னெச்சரிக்கையானவள். நாங்கள் பூப்படைந்து விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன்னமே விவரித்து, அதற்கான ஏற்பாடாக சுத்தமான வெள்ளைத் துணிகளைத் துண்டு துண்டாக வெட்டி துவைத்து வைத்திருப்பாள். அப்போதெல்லாம் தோட்டப் புறத்தில் ‘மாதவிடாய் டவல்’ பாவிப்பதில்லை. அதை வாங்கி உபயோகிக்கும் அளவுக்கு வசதியும் இல்லை. ஒவ்வொருவரும் பயன்படுத்த துணிகளை தனியாகப் பிரித்து வைத்திருப்பாள். நான்கு பக்கமும் ஓரத்தில் தைத்தும் வைத்திருப்பாள். ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழித்த பிறகு மறைவிடத்தைச் சுத்தமாகக் கழுவ வேண்டும், அதுவும் மாதவிடாய் காலத்தில் நீரில் சில சொட்டு டெத்தோல் கலந்து சுத்தம் செய்து கொள்ளவேண்டும் என்றெல்லாம் சொல்லி வைத்து தூய்மைக்கு முக்கியத்துவம் தந்தவள்.
தோட்டப்புறத்தில் இருந்த சமயத்திலேயே டெத்தோல், சிறிய கத்தரிக்கோல், ‘சேவிங் பிளேட்’ எல்லாம் ஆண்களுக்கு பெண்களுக்கென்று தனித்தனியாக ஒவ்வொரு டப்பாவில் போட்டுக் குளியல் அறையில் வைத்திருப்பாள். இன்றும் தான் பயன் படுத்தும் சவர்க்கார்த்தை தனியாகவே வைத்துக் கொள்வாள்.. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குளியல் துண்டு இருக்கும். ஒருவரின் துண்டை மற்றவர் பயன் படுத்தக் கூடாது என்பதில் இன்னமும் கறாராக இருப்பவர். தேமல், வியர்வை, கற்றாழை வாடை, மரு இவையெல்லாம் ஒட்டிக்கொள்ளும் என்று பயப்படுபவள். தமிழ்வாணனின் கல்கண்டை தொடர்ந்து படித்து வந்ததால் இதுபோன்ற ஹெல்த் டிப்ஸ் எல்லாம் அவளுக்கு அத்துப்படி.
வாரம் ஒரு முறை பெரிய அண்டாவில் தண்ணீரை கொதிக்க வைத்து, போர்வை, தலையணை உறைகளை இரண்டு மூன்று அலுமினிய வாளிகளில் சவர்க்காரத்தூள், குலோரொக்ஸ் போட்டு ஊற வைத்துத் துவைத்த பிறகு டெத்தோல் கலந்த நீரில் அலசி நேர்த்தியாகக் காயப் போடுவதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாய்பிளந்து பார்ப்பர்.
“வாத்தியார் வீட்டு அம்மாவ சுத்தத்திலும் சமையலிலும் அடிச்சிக்கவே முடியாது…” என்று அக்கம் பக்கத்தார் வாய்விட்டுப் பாராட்டுவார்கள்.
தூய்மையிலும் ஒழுக்கத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாமல் நேர்மையாக, உண்மையாக இருந்த அம்மா, அந்தப் பண்பையே எங்களுக்கும் பாடமாகப் போதித்து, கண்ணுக்குள் வைத்துக் காத்தாள் .
அப்பா இறந்த பிறகு ஆறு பிள்ளைகளையும் நாகரீகமாக வளர்த்துப் படிப்பையும் கொடுத்து தனி ஓர் ஆளாக நின்று ஜெயித்துக் காட்டியவள் அம்மா. அம்மாவை ‘இரும்புப் பெண்மணி’, ‘வீரமங்கை ஜோன்’ என்றெல்லாம் நாங்களே கிண்டல் செய்வோம். என்ன பிரச்சினையாக இருந்தாலும், மனதில் கவலையும் சஞ்சலமும் இல்லாததுபோல் காட்டிக்கொண்டு எங்களுக்குத் தைரியம் சொல்லி , இதுவும் கடந்து போகும் என்பார்.
பிள்ளைகள் மட்டுமல்ல தானும் நேர்த்தியாகவும் அழகாகவும் மிடுக்காகவும் உடுத்திக் கொள்வதில் அம்மாவுக்கு ஒரு பிரியம்.
வீட்டுக்கு வரும் சின்னம்மா, பெரியம்மா கூட இன்னமும் பெருமூச்சுடன், “சுசி நீ மட்டும் எப்படி இன்னும் கட்டு உடையாம அப்படியே இருக்கிற? உன்னோட மார்கூட ரொம்பவும் தொங்கிப் போகாம இன்னமும் நல்லா இருக்கு. எங்களோடதான் மெழுகுத்திரி மாதிரி எப்படி இளகிப்போய் வயிறு வரை தொங்கிக் கிடக்குப் பாரு “ என்பர்.
“அதுக்கென்ன செய்யிறது அது ஒவ்வொருத்தரோட உடல்வாகு” என்று நாணப் புன்னகையோடு சொன்னாலும் சகோதரிகளின் பாராட்டில் பெருமிதம் கொள்ளவே செய்கிறாள் என்பதை அவளின் மலர்ந்த முகம் காட்டும்..
இளமையில் அம்மாவின் சகோதரிகள் அம்மாவின் எடுப்பான மார்பகத்தைப் பார்த்து பொறாமைப் பட்டு எங்கள் அம்மாயியோடு சண்டை போடுவார்களாம்.
“ஏம்மா சுசிக்கு மட்டும் நங்குன்னு பெரிய கொய்யாக்கா மாதிரி கெட்டியா இருக்கு, எங்களுக்கு கெட்டியா இல்லாம கொழகொழன்னு இருக்கு?”
“அவ வயசுக்கு வந்தபோது மட்டும் உளுந்து, நல்லெண்ண, நாட்டுக்கோழி முட்டன்னு நிறைய கொடுத்திருக்கீங்க!. அதான் கண்ணாடி மாதிரி பளபளன்னு மின்னுது!. எங்களுக்கு நீ சரியான சாப்பாடு கொடுக்கல போல இருக்கு!” இப்படி அம்மாவின் நான்கு சகோதரிகளும் அம்மாயியிடம் மாறி மாறி மல்லுக்கு நிற்பார்களாம். வயசுப் பெண்கள் ஆட்டுக் கல்லில் மாவாட்டினா மார்பகம் பெருத்து உருண்டு திரண்டு இருக்கும்னு யாரோ ஒரு கிழவி சொல்லப்போக, பெரியம்மா சின்னம்மா எல்லாரும் போட்டிப்போட்டுக் கொண்டு மார்பகம் குலுங்கக் குலுங்க மாவாட்டுவார்களாம். இதையெல்லாம் கடைசி சின்னம்மா சொல்லி சிரித்ததுண்டு.
அம்மாவுக்கு அவளின் மார்பகத்தைப் பற்றி ஒரு தனி கர்வம்தான். மற்ற பெண்கள் பார்த்துப் பொறாமைப் பட்டதையும் புகழ்ந்ததையும் அம்மா ரசித்திருக்கிறாள் என்றே எனக்குப் பட்டது. அம்மா இயல்பாகவே அவளின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பராமரிப்பதில் அக்கறைகாட்டுபவள். உயிரோடு இருக்கும் வரை நல்ல தோற்றத்தோடு, அழகாக, சுத்தமாக, ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவள்.
தலைமுடி முழுமையாக நரைக்க வில்லை என்றாலும், லேசாக வெள்ளை முடி தென்பட்டாலும் கறுப்பு மை பூசிக் கொள்வாள். அம்மாவை நடிகை சௌகார் ஜானகி மாதிரி தும்பைப்பூ வெள்ளை முடியில் பார்க்க எனக்கு ஆசைதான். ஆனால் அந்த சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. கைகால் நகங்களை சுத்தமாக வைத்திருப்பது, அப்போதிருந்து இன்று வரை முகத்துக்கு ஸ்னோ பூசிக்கொள்வது, பற்களை இரண்டு வேளை துலக்குவது இதெல்லாம் அம்மா தொடர்ந்து கடைப் பிடுத்துக் கொண்டு வருபவை.
ரத்தக் கொதிப்பு, கைகால் மூட்டுவலி என்றிருந்தாலும் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு எதையாவது செய்து கொண்டேதான் இருப்பாள். எனக்குத் தெரிந்த நாளாக அம்மா சமையல் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவள். சொந்தமாக கற்பனை செய்து வித விதமாகவும் புதுமையாகவும் சமையல் செய்வதில் அலாதி பிரியம் கொண்டவள். தோட்டப் புறத்தில் இருந்தவரை இடையிடையே மொச்சைக்கொட்டை, தட்டைப்பயறு, கருவாட்டுக்குழம்பு என பின்வீட்டு பட்டம்மா பாட்டிக்கு பிடித்தமானவற்றை சுவையாக சமைத்துக் கொடுத்து பாராட்டுப் பெறுவாள். தோட்டத்திலிருக்கும் கர்ப்பமான பெண்களுக்கு புளிச்சைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை கடைசல், புளிசோறு, என மனிதாபிமான மிகுந்த அக்கரையோடு சமைத்துக் கொடுத்தாலும் தன் சமையலின் பெருமையை அவர்கள் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். அம்மா ஊறுகாய் போடுவதில் கில்லாடி. அவளின் ஊறுகாய்க்குத் தனி மவுசுதான். இன்னமும் ஊறுகாய் போடுவதை விட்டவளில்லை. வேண்டாமென்று பிள்ளைகள் சொல்லியும் கேட்டபாடில்லை. தெரிந்தவர்கள், உறவினர்கள் அவள் அடிக்கடி செல்லும் தனியார் கிளினிக் மருத்துவர்களும்கூட அவளின் ஊறுகாய் விரும்பிகள்.
நிரந்தரமாக தம்பிவீட்டில் இருக்கும் அம்மா, மருமகளுக்கு முன்பே எழுந்துவிடுவாள். மறுநாளுக்கான சமையல் என்னவென்று முதல் நாளே முடிவுபண்ணி தேவையான பொருட்களை தயார் படுத்திவிடுவாள். அன்றைய சமையலை எங்கே மருமகள் தொடங்கிவிடப் போகிறாள் என்ற பதைபதைப்புடன் சமையலை சிக்கிரமாகவே தொடங்கிவிடுவாள். மறந்துபோன பாரம்பரிய சமையலான புளிச்சை, முருங்கை, அவரை, புதினா, வாழைத்தண்டு, வாழைப்பூ, சுண்டைக்காய் என ஒவ்வொருநாளும் இதில் ஒன்று கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.
நீண்ட நாட்களாக உயிரை வாங்கிக் கொண்டிருந்த கால் மூட்டுவலியிருந்து நிவாரணம் பெற கடந்த ஆண்டுதான் ஆப்ரேஷன் செய்து கொண்டாள் அம்மா. அந்த அறுவை சிகிச்சையையே பிள்ளைகள் விரும்பவில்லை இவளால் அந்தப் புது வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியுமா என்ற பயத்தில். இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் முன்புபோல் சகஜமாக நடக்கமுடியும் என்று மருத்துவர் சொன்ன நம்பிக்கையில் அம்மா விடாப்பிடியாக அறுவை சிகிச்சையை செய்து பல்லாண்டுகால அந்த வேதனையிலிருந்து பெற்ற விடுதலையை அனுபவிப்பதற்குள்ளாக அவளுக்கு இப்படி ஓர் உயிர்வதை.
என் உடன் பிறப்புகள் அவர்களுக்குள்ளாகவே தொலைபேசி வழி ஆதங்கப்பட்டு வேதனையும் அச்சமும் கொண்டார்களே ஒழிய யாரும் நேரில் வந்து அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதிருந்தனர். எங்களில் யாருக்கு எந்தப் பிரச்சினையானாலும் நேரில் வந்து ஒரு வாரமாவது கூடவே இருந்து ஆறுதல் சொல்லி ஊக்கம் அளிப்பாள், ஒதுங்கிப்போகமாட்டாள் அம்மா.
மனம் கனத்துப் போயிருந்தது. இரவு 8 மணிவாக்கில் அம்மாவை பார்க்கப் போயிருந்தேன். அவரைக்காயை ஆய்ந்துகொண்டே மலாக்காவில் இருக்கும் சின்னாம்மாவிடம் கைப்பேசியில் பேசிகொண்டிருந்தாள் . புற்றுநோய் சோதனைப் பற்றிய முடிவு இன்று தெரியும் என்ற விவரம் சின்னம்மாவுக்கும் தெரியும். அவள் அழைத்தாளோ இல்லை அம்மா தான் அவளை அழைத்துப் பேசுகிறாளோ தெரியவில்லை. முகத்தில் படர்ந்து விட்டிருந்த உணர்வற்ற இறுக்கத்தை மறைக்க அம்மா முயன்றுகொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.
“விடு கமலா நடக்கிறது நடக்கட்டும். நானே பேசாம இருக்கிறேன் நீ ஏன் அழற? போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழந்தவர் யாரடா” என்று தன் மன நிலைக்கேற்ப ஈரடிகளைப் பாடினாள்.
வாய்விட்டு அழுவதைக் கட்டுப்படுத்த முடிந்த என்னால் வழிந்தோடும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. அம்மாவினால் இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது? இவள் பேச்சு என்ன ஏமாற்றத்தின் வெளிப்பாடா?, எதிர்படும் எதனையும் ஏற்றுச் சமாளிப்போம் என்ற தைரியமா? இல்லை எல்லாம் முடிந்து விட்டது இனி ஆகப்போவது என்ன என்ற தோல்வி மனப்பான்மையில் வெளிப்படும் வேதாந்தமா? இல்லை இது நாள்வரை இரும்புப் பெண்மணி என்று கிடைத்த பாராட்டை மெய்ப்பிப்பதற்காக வெளிப்படுத்தும் நடிப்பா?
“அம்மா வாய் விட்டு அழுதுவிடு, உன் துக்கதையெல்லாம் வெளிப்படுத்திடு அப்ப தான் உன் வேதனை ஓரளவாவது குறையும். “ எனக்குள்ளே திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்கிறேன்.
“ஹே ஏது வந்திட்ட?. நீயும் கலாவும் இதே தாமான்ல தான் இருக்கிறீங்க! கூப்பிட்டா கூட வர மாட்டீங்க!. ஏன் நான் செத்துடுவேன்னு பயந்துகிட்டு வந்தயா? “ இம் முறை அம்மாவின் நக்கலை என்னால் ரசிக்க முடியவில்லை. அம்மாவுக்கு ஆறுதலாக சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு பத்து மணி வாக்கில் வேதனையோடு வீட்டிக்குத் திரும்பினேன்.
ஃ ஃ ஃ
அறுவை சிகிச்சையின் போது அம்மாவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்போகும் மருத்துவருடன் இன்று சந்திப்பிருந்தது. எனக்குப் போக வசதியில்லை. அண்ணி மட்டுமே அம்மாவுடன் சென்றிருந்தாள். சற்று முன்பு அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. கண்டிப்பாக வீட்டுக்கு வரச்சொன்னாள். அம்மா இப்படி வற்புறுத்தி அழைத்ததில்லை.
“ஏம்புள்ள வீட்டில வேல முடிஞ்சிடுச்சிதானே? சும்மா தானே இருப்ப, இங்க வந்து எங்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டுப் போயேன்” என்று சொன்னதுண்டு.
ஆனால் சற்று முன் வந்த அழைப்பு வேறுமாதிரியாக இருந்தது. அம்மாவை பார்க்கச் சென்றேன். புதினா ஆய்ந்து கொண்டிருந்தாள். அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருந்தது. இரவில் பெரும்பாலும் இட்லி, தோசை, உப்புமா என்று இப்படித்தான் சமைத்துச் சாப்பிடுவாள். இதையெல்லாம் செய்யும் போது ஒவ்வொருமுறையும், எனக்கு வேண்டுமா என்று கேட்கத்தவற மாட்டாள். நான் வேண்டாம் என்றால் கோபித்தும் கொள்வாள். எங்களுக்கிடையில் இதனாலேயே மனஸ்தாபமும் ஏற்பட்டதுண்டு. மேசை மீதிருந்த ஒரு கார்டை எடுத்து நீட்டினாள். வாங்கிப் பார்த்தேன்.
“உனக்குத் தெரியுமா, மார எடுத்துட்டா கூட போட்டுக்க அதுக்குன்னு உள்பாடிங்க இருக்காம். மார எடுத்திட்டாங்கன்னே யாருக்கும் தெரியாதாம். ஆஸ்பத்திரியில ஒரு சினச்சி இத பத்தி சொல்லிக்கிட்டிருந்தா.”
“எனக்குத் தெரியும் மா. இப்ப அதுக்கென்ன.”
தன் பையிலிருந்த சில கையேடுகளை எடுத்துக் காட்டினாள். ஒரு பக்க, இருபக்க மார்பகங்கள் அகற்றப் பட்ட படங்களும், அதனை சரிபடுத்த தயாரிக்கப்பட்டுள்ள பிரத்தியே மார்கச்சைகளின் படங்களும் அதில் அச்சிடப்பட்டிருந்தன. விலை 400 வெள்ளி 500 வெள்ளி என்றிருந்தது. அம்மாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அந்த போன் நமபர்ல அந்த சீனச்சிய கூப்பிட்டு எனக்கொரு பாடிய சொல்லி வைக்கிறியா? “
கலங்கிப்போனேன்.
ஆறு பிள்ளைகளில் அம்மாவின் மனதை நன்றாகவே புரிந்து வைத்திருந்தவள் நான் தான். அவளும் என்னிடம்தான் எதையும் ஒளிவு மறைவில்லாமல் பேசுவாள். இம்மாதிரியான நேரங்களில் பலமுறை அவளுக்கும் எனக்கும் வாக்குவாதங்களும் கருத்து மோதல்களும் ஏற்பட்டுவிடும். ஓரிரு நாள் மௌனம் நிலவும் அவளே எதுவும் நடவாததுபோல் அழைத்துப் பேசுவாள். அம்மா என் சிந்தனையை கலைத்து, அந்த சீனத்தியிடம் பேசச் சொல்லி வற்புறுத்தினாள். இன்றைகுத் தாமதமாகி விட்டது இன்னும் இரண்டொரு நாளில் அழைத்துப் பேசுவாதாகச் சொல்லி சமாளித்தேன்.
அம்மா அவள் அறைக்குச் சென்றாள். நானும் கூடவே சென்றேன். அம்மா அலமாரியைத் திறந்தாள். தனது துணிமணிகளை மிக நேர்த்தியாக மடித்து அடுக்கி வைத்திருந்தாள். அதிலிருந்து சில மார்கச்சைகளை எடுத்துப் போட்டாள். அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். அவளின் முகக்குறியை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அண்மையில் ‘எவோனில்’ வாங்கிய சில மார்கச்சைகளை என்னிடம் தந்து உனக்குப் பத்துமா ? என்றாள். அந்த உள்ளடைகளை வாங்க நான் தான் கூட்டிச் சென்றேன். அவற்றை அவள் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வாங்கியது எனக்குத் தெரியும். நான் இது எனக்குப் பொருந்தாது என்றேன். இருந்தும் இவற்றோடு அம்மா ஏற்கெனவே பாவித்த சில உள்ளாடைகளையும் சேர்த்து இதையும் வைத்துக் கொள் என்றாள். அம்மாவை பரிதாபமாகப் பார்த்தேன்.
அம்மா பெருமூச்சு விட்டாள்.
“இந்த வயசுக்கும் இதுவரை ஒரு பல்லக்கூட பிடுங்கினது கிடையாது. சொத்தப் பல், சொத்த நகம்னு ஒன்னும் இருந்ததில்ல. அடுத்த வாரம் இத அறுத்தெறியப் போறாங்க.” அம்மா மார்பை இறுகப் பற்றிக் கொண்டாள்.
சொல்லும் போதே அம்மாவின் குரல் கொஞ்சம் தழுதழுத்தது. மேலும் தொடர விரும்பாமல் அவள் பேச்சை அடக்கிக் கொண்டது எனக்குத் தெரிந்தது. ‘அம்மா அழுது சோகத்தைக் கொட்டி விடு’ எனக்குள் நான் சொல்லிக் கொண்டேன்.
“இந்த வயசில எனக்கு இது வரனுமா? இன்னும் கொஞ்ச நாள் நல்லபடியா இருந்திட்டுப் போயிருப்பேன்!”
இப்போதாவது அம்மா வாய்விட்டு அழுவாள் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் குளிக்கச் சென்றாள். அது அவளுக்கு அப்போது தேவையாக இருந்திருக்கலாம். குளிக்கும் போது அவள் அழுவதை அவளே பார்க்க முடியாமல் போகலாம்.
குளித்த பின்பு கைலியில் மாராப்புக் கட்டிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த அப்பாவின் படத்துக்கு முன்னால் நின்றாள். என்னைத் திரும்பிப்பார்த்தாள். நான் அவளின் பார்வையின் அர்த்ததைப் புரிந்தவளாக அறைக் கதவை இழுத்துச் சாத்தி விட்டு வெளியே வந்து விட்டேன்.
அம்மா, அப்பாவிடம் என்ன பேசி இருப்பாள்? என்ன சொல்லியிருப்பாள்? மனம்விட்டு அழுதிருப்பாளா? அம்மா மனச்சங்கடப் படும்போது மட்டும் அப்பாவின் படத்துக்கு முன்னால் நின்று தனக்குள்ளேயே பேசிக்கொள்வாள். இன்று தன் மார்பகத்தை கடைசியாகப் பார்த்துக் கொள்ளும்படி அப்பாவிடம் காட்டி இருப்பாளா?.
அம்மா அப்பாவைப் பற்றி எப்போதுமே உயர்வாகச் சொல்வாள். கால் வலியால் அவதிப்பட்டபோது காலையில் வேலைக்கு போகும் அவசரத்திலும் கால்களைப் பிடித்து விட்டுத்தான் செல்வார்.
எங்களின் வீட்டுக்குப் பின் வீட்டில் இருக்கும் செல்லம்மாவும் சுப்புவும் ஒரு நாள் அம்மாவிடம் தங்களின் தாம்பத்திய வாழ்க்கைப் பற்றி குறைபட்டுக் கொண்டபோது, “எங்க வீட்டுக்காரர் நான் தலை முழுகி இருந்தாலும் சும்மா இருக்க மாட்டார். நச்சரிப்பார்” என்று உற்சாகமாக அம்மா கூறியதை, கதவுக்குப் பின்னால் வேலையில் இருந்த நான் கேட்டு அறுவறுப்படைந்தேன். அப்பா அப்படி ஆர்வம் காட்ட தனது வடிவான மார்பகமே காரணமாக இருக்குமென்பது அம்மா வெளியில் சொல்லித் தெரிய வேண்டியதிலை.
நாளை மறுநாள் அம்மாவுக்கு ஆப்ரேஷன். நாளைக்கு வார்டில் தங்கிட வேண்டும். தனக்குத் தேவைப்படும் பொருட்களையெல்லாம் யோசித்து யோசித்து எடுத்து சேர்த்துக் கொண்டிருந்தாள். ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மாதாமாதம் அண்ணன் வாங்கிக் கொடுத்துவரும் மாவு டின்களில் திறக்கப்படாமல் இருந்த இரு டின்களை என்னிடம் கொடுத்தாள். அவை ஒரு மாத பயனீட்டுக்கு உரியவை என்பதும் ஒரு டின்னின் விலை நூறு வெள்ளிக்கு மேல் என்பதும் எனக்குத் தெரியும். பிறகு ஒரு செட் இமிடேஷன் நகைகளை எடுத்து நீட்டினாள். இது மாதிரி பொருட்களையும், வீட்டு உபயோகப் பாத்திரங்கள், ஆடைகளை அவ்வப்போது வாங்கிக் கொடுப்பது அம்மாவின் இயல்புதான். ஆனாலும் அம்மா தனக்கென்று வாங்கிய பொருட்களை என்னிடம் கொடுத்தபோது எனக்கு என்னென்னவோவெல்லாம் எண்ணத்தில் வந்து போனது.
அலமாரியிலிருந்த தனது புடவைகளில் நான் விரும்பியதை எடுத்துக் கொள்ளச் சொன்னாள். அம்மாவின் புடவைகளை நானே கேட்டு வாங்கியதுண்டு ஆனால் இப்போது எடுக்க மனம்வரவில்லை. தம்பி மகள்களுக்குச் செய்து வைத்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் காட்டி எது யாருக்கு என்று விளக்கிச் சொல்லிவிட்டு தம்பியிடம் அவற்றை ஒப்படைத்தாள். பிள்ளைகள் மாதாமாதம் அவரவர் தகுதிக்கேற்ப முந்நூறிலிருந்து ஐநூறு வரை அம்மாவுக்குக் கொடுப்பார்கள். அம்மாவின் கையில் எந்நேரமும் காசு இருக்கும். அவசரத் தேவைக்கு அவள் கொடுத்து உதவியதுண்டு. என்னிடம் முந்நூறூ வெள்ளியைத் தந்தாள். வேண்டாம் என்று மறுத்தும் கையில் திணித்துவிட்டாள். பிரித்துப் பார்த்தேன். மூன்று நூறு வெள்ளி நோட்டுகள். அம்மாவின் வாசம் அடிக்கிறதா என்று முகர்ந்து பார்த்தேன். அம்மாவின் கையால் பெறும் கடைசி பணமா இது என்று ஓர் எண்ணம் ஓடியது. இந்தப் பணத்தை பயன் படுத்தாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பையில் வைத்துக் கொண்டேன்.
அம்மா அவளுக்கு வேண்டியதை பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள். உதவிக்குப் பேத்திகள் வந்துவிட்டனர். என்னை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள் அம்மா.
“அழுது விடு அம்மா. துக்கத்தை அடக்காதே” என்று மனம் ஓலமிட்டது. அவள் அழவில்லை. வழக்கமான களையை இழந்துவிட்டிருந்த அம்மாவின் முகத்தில் இன்னதென்று விவரிக்க முடியாத வெறுமை படர்ந்திருந்தது. அதற்குமேல் அவளுடன் இருக்கும் தெம்பு எனக்கில்லாததால் ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.
வீட்டிற்கு வந்த நான் அம்மா கொடுத்த மார்க்கச்சைகளை எடுத்துப் பார்த்தேன். அழுகை அழுகையாக வந்தது. முகத்தில் ஒற்றிக் கொண்டேன். முகர்ந்து பார்த்தேன். அதில் அம்மாவின் வாசம் இருந்தது. அது எனக்குப் பொருந்தாது என அம்மாவுக்குத் தெரியும். இருந்தும் கொடுத்தாள். அவளின் ஞாபகமாக என்னிடம் இருக்கட்டும் என்று கொடுத்தாளோ?
அம்மா ஸ்பாஞ்ச் ‘பிரா’ பாவித்ததில்லை அதற்கான தேவை இல்லாததால். துணியிலான மென்மையான ‘பிரா’வை அணிவதே அவளுக்கு சௌகரியமாகவும் பொருத்தமாகவும் இருப்பதாகச் சொல்வாள்.
பாவம் அம்மா. அக்குளில் ஒரு சிறிய கட்டி அங்கும் இங்கும் ஓடுவதாக விளையாட்டாகச் சொன்னாள். சில நாட்களிலேயே கையைத் தூக்க சிரமப் படுவதைப் பார்த்து பரிசோதித்தபோதுதான் இந்தப் பேரிடியான செய்தி தெரிந்தது.
கீமோதெராபி, கொடுக்க வேண்டுமா என்று ஆப்ரேஷனுக்கு பிறகு தான் தெரியுமாம்.
ஃ ஃ ஃ
அம்மாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்ல வந்தார்கள். என்னோடு அக்காவும் தங்கையும் மட்டுமே இருந்தார்கள். சந்திரா அண்ணி அரை நாள் விடுப்பு எடுத்து வருவதாகச் சொல்லியிருந்தாள். ஆப்ரேஷன் எப்படி இருக்குமோ என்ற பயத்திலேயே மற்ற மூன்று உடன் பிறப்புகளும் இன்று வரவில்லை.
அம்மாவின் மன நிலை எப்படியோ ஆனால் அளவுக்கதிகமான பதற்றத்தில் இருந்தேன். இருதயத் துடிப்பு அதிகரித்தது. உச்சந்தலையிலிருந்து உடம்பே வியர்த்துக் கொட்டியதில் பிசுபிசுத்து சட்டை உடம்போடு ஒட்டிக்கொண்டது. கைகால்கள் தெம்பிழந்தன. தேகம் காற்றடைத்த பந்தெனவாகி மிதப்பது போலானது.
அம்மாவுக்குப் புற்று நோய் என்று தெரிந்த நாள் முதலாக அவள் அந்த துக்கத்தைப் போக்க வாய் விட்டு அழுதிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த நான், இன்று அழுதுவிடப்போகிறாள் என்று பதைபதைத்தேன். “அம்மா அழுதிடாதம்மா அழுதிடாதம்மா” என்று மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருந்தேன்.
அம்மாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. மற்ற பொருட்கள் அங்கேயே இருக்க, அவளின் கைப்பேசியையும், கைப்பையையும் என்னிடம் கொடுத்தாள். அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன்.
அம்மாவின் முகத்தைப் பார்க்கிறேன். வார்டிலிருந்து ஆப்ரேஷன் தியேட்டருக்கு தள்ளிச் சென்றார்கள். நாங்களும் கூடவே நடந்தோம். அம்மாவின் உள்ளங்கை அந்த மார்பின்மேலேயே இருந்தது. எனக்கும்கூட அதை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும், தொட வேண்டும் என்றிருந்தது. ஆனால் அது அப்போது சாத்தியப்படாது.
அம்மா என்னையே உற்றுப் பார்க்கிறாள். முகம் வெளிறிப்போய்விட்டிருந்தது. உதடு காய்ந்து போயிருந்தது. ஆப்ரேஷன் தியேட்டர் வந்துவிட்டது.
இதற்குமேல் நீங்கள் தொடர முடியாது. அம்மாவை அறைக்குள் கொண்டுபோகப் போகிறோம் என்றாள் தாதி. அம்மா என் பக்கமாக கையை அசைத்தாள். குனிந்து என்னவென்றேன் “பேக்ல காசு இருக்கு. அந்த சீனச்சிய கூப்பிட்டு என் சைசுக்கு முதல்ல ரெண்டு உள்பாடிக்கு ஆர்டர் பண்ணிடு.”
எஸ்.பி.பாமா
பேச, எழுத கூச்சப்படும் சில அந்தரங்க
விடயங்களை, ஒளிவு மறைவில்லாமல்
இயல்பாக அதுவும் மிக சிறப்பாக
எழுதிய எஸ்.பி.பாமாவுக்கு எனது
மனமாா்ந்த பாராட்டுகளை தொிவித்துக்
கொள்கிறேன்.
ஜி.குணசேகரன்
அற்புதமான கதை. எ.பி. பாமா அக்காவை வணங்கத் தோன்றுகின்றது. உலக தமிழ் இலக்கியத்தில் இதுபோன்ற கதையினை யாரும் எழுதியிருக்க மாட்டார்கள். இதுதான் உண்மையான பெண்ணியம் சார்ந்த கதை. அவருக்கு ஒரு சல்யூட்❤
எஸ் பி பாமா அம்மாவின் சிறுகதைகள் தொகுப்பு மற்றும் அவர் எழுதிய இரண்டு தொடர்கதைகளை வாசித்த வாசகன் என்பதால் அவரின் எழுத்து பாணியை ஓரளவுக்கு புரிந்தவன் நான்.எதார்த்தமாக எதையும் எழுத கூடியவர். அந்த வகையில் இந்த கதை அமைந்துள்ளது.அவரின் கதையில் பெண்களை பிரதான கதாபாத்திரமாக காட்டி இருந்தாலும் சில நுட்பமான அந்தரங்க விடயங்களை நாசுக்காக சொல்லி விடுவார்.இன்று பெண்களை துரட்டும் எமனாக இருக்கும் மார்பக புற்றுநோய் பற்றி அதை எதிர்நோக்கும் ஒரு முதுமை தாயை பற்றி அழகாக சொல்லி உள்ளார். என்னதான் பார்த்து பார்த்து நாம் ஆரோக்கியத்தை பேனினாலும் அதையும் மீறி இயற்கை தன் வேலையை காட்டி விடுகிறது.தன் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்ற நிலையிலும் தன் மன உறுதியை இழக்க கூடாது என்ற தன்மான உணர்ச்சி ஒரு பக்கம் வேதனை ஒரு பக்கம்.பெண்ணுக்கு கவர்ச்சி சின்னமாக இருக்கும் மார்பகம் காலமெல்லாம் தன்னை கர்வமாக பெருமையாக கருத செய்த பொக்கிஷத்தை இழப்பது எந்த வயதிலும் பெண்ணுக்கு வேதனை தான். அறுவை சிகிச்சை அறைக்கு போகும் முன்பு கூட தண் மகளிடம் மார்கச்சையை வாங்கி வைக்கும் படி கூறுவது உணர்ச்சிகரமான பகுதி.வாழ்க தாய்மை.வாழ்த்துகள் பாமா அம்மா.
பண்பட்ட எழுத்தாளர் எஸ்.பி பாமா அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை எழுத்தின் ஊடே விகடத்தை புகுத்துவது. எவ்வளவு உணச்சிகளை கொப்பளித்தாலும் அங்கு நகச்சுவையோடு அறுசுவை கதைகளை படைப்பது அவரின் பாணி ஒரு புள்ளியை சுற்றி தொடர்ந்து வரும் கதை அருமை, உணர்வுகளையும் உள்ளகிடங்கையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்..வார்த்தைகளின் ஜாலத்தை இன்னும் அழகாக மெருகேற்றி இருக்கலாம். படிக்கும் போதே இது எஸ்.பி பாமாவின் கதை என்று புரிந்துவிடுகிறது.
*என் பார்வையில்*
? புதிதாக ஒன்று ?
சிறுகதை
☘ எழுத்து : எஸ்.பி.பாமா ☘
நாடறிந்த செய்தி வாசிப்பாளரின் இலக்கிய உலகில், மேலும் அவரின் திறமைக்கு மகுடம் சூட்டும் சிறுகதை இது..
*கரு* பெண்களுக்கு அழகு எந்த வயதிலும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் பெண்ணியம் சார்ந்த கதைக்கரு.
*தலைப்பு* கதையின் முடிவை எடுத்துக் காட்டும் தலைப்பு.
*நடை* சொல்லாடல்கள் மூலம் எழுத்தைத் தூக்கி நிறுத்துகிறார். எளிய நடை சாதாரண வாசகனையும் எளிதில் சென்றடையும்.
*கதாபாத்திரங்கள்* கதையில் வரும் முதன்மை பாத்திரமாக கதைசொல்லியின் தாய், கதைசொல்லி, மற்றும் அவரின் அண்ணி என அனைவரும் பெண் கதாபாத்திரங்களே.. ஓரிரு இடங்களில் மட்டுமே கதைசொல்லியின் நினைவில் அப்பா வந்து போகிறார்..
*யுத்தி* முக்கால்வாசி நேரடி வர்ணனையாகவே கதை நகர்கிறது. கதைசொல்லியின் பார்வையில் அவரின் அம்மா வித்தியாசமான அம்மாவாகவே வலம் வருகிறார். அம்மாவின் குணநலன்களை காட்சி விவரிப்பின் மூலம் சொல்கிறார்.
*தொடக்கம்* கதையின் முதல் பத்தியிலேயே கதைக்குள் நம்மை இழுத்துக்கொள்கிறார் கதாசிரியர். நல்ல சிறுகதை என்பது, கதையின் முடிவுக்கு மிக அருகில் தொடங்கப்பட வேண்டும். கதையின் கருவை ஆரம்பத்திலேயே சுட்ட வேண்டும். இவ்விரண்டும் இக்கதையில் இருப்பதாக உணர்கிறேன்.
*திருப்பம்* அம்மாவுக்கு அறுவை சிகிச்சை நெருங்கும் போது, கதையின் அடுத்த நகர்தல் எப்படி இருக்கும் என சற்று யோசிக்க வைக்கிறது.
*முடிவு* நான் எதிர்பார்த்த முடிவு என்றாலும், நச்சென்று முடித்துள்ளார்.
*இக்கதை வெளிப்படையாக பேசப்படாத கருவாக உள்ளதால் தனித்து நிற்கிறது. அதோடு, எவ்விடத்திலும் ஆபாச தொனி தென்படவில்லை. உடலில் உள்ள எந்த உறுப்பும் நாம் எவ்வாறு சுட்டுகிறோமோ, அவ்வாறே பார்க்கப்படும். மேலும், பெண்களின் வாழ்வியலை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் எடுத்தியம்பியுள்ளார், எஸ்.பி.பாமா*
எழுத்தாளருக்கு என் நல்வாழ்த்து.
என்றும் அன்புடன்,
சுதாகர் சுப்ரமணியம்
அன்பு அக் கா, உங்களின் இந்த கதை என் கண்களில் நீரை வர வைத்தது. மார்பக புற்று நோ யி னா ல் அவ தி யு ரு ம் அம் மா தன் வேத னை யை உள் அடக்கி தன் பிள்ளைகள் வேத னை அடை ய கூ டா து என் பதி ல் மி கவு ம் கவன மாக இருந்திருக்கிறா ள்.அந்த இக்க ட் டான நிலையிலும் தன் மார் பக அழகை எண்ணி கவலை கொள்கிறாள் அம்மா. இது தானே பெண்களின் இயற்கை குணம். அதை வெளிச்சம் போட்டு காட்டிய அக்காவுக்கு பாராட்டுக்கள்.
அரு மையான கதை.
அக்கா பாமா எழுதிய இந்த கதையில் பெண்கள் எப்படி வளர்கிறார்கள். அம்மா எப்படியெல்லாம் வளர்கிறார்கள் என தெள்ள தெளிவாக சொல்லியிருக்கிறார்.
இதுபோன்ற கதைகளை எழுதுவதற்கு துணிச்சல் வேண்டும்.
அக்கா பாமா ஒரு சிறந்த பெண் எழுத்தாளர் என மனபூர்வமாக ஏற்று வணங்குகிறேன்.
தொடர்ந்து வெற்றி நடையில் பயணிக்க வாழ்த்துகள். அக்கா..
சரஸ்வதி வீரப்புத்திரன்.
முதலில் எஸ்.பி.பாமா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்க வேண்டும்.நடப்புச் சூழலை மையமாக வைத்து அதே வேளையில் மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் தனது பேனாவை படர விட்டிருக்கின்றார்.நிறைய தகவல்களை கூச்சம் மற்றும் அச்சத்தின் காரணமாக படைப்பாளர்கள் தொட மறந்த்தால் , நிறைய படைப்புகள் மனமகிழ்வு ஊடகமாகவே இருந்துள்ளன.படைப்பானது நிகழ்ச்சி மற்றும் மனநெகிழ்ச்சியைத் தருவதோடு, ஏதோ ஒரு வகையில் படிப்பினையும் , (முடிந்தால்) தன்முனைப்பையும் தர வேண்டும் எனும் கருத்தை மெய்ப்பிப்பதில் படைப்பாளர் வெற்றி கண்டுள்ளார்.அவருக்கு மீண்டும் நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
அன்பு அம்மாவுக்கு ஆயிரம் முத்தங்கள்.எவ்வளவு கனமான கதை அது?ஆண்கள் பெண்களின் உடலை காமம் சார்ந்து வர்ணிக்கும்போது எனக்கு நெருடல் உண்டாகும்.அதுவும் ஒரே கதையில் இரண்டு,மூன்று பெண்களின் உடல் குறித்து காமம் எழ பேசும்போது தேவையற்றது என உணர்வேன்( என் பார்வையில் மட்டும்)
ஆனால் உங்கள் கதையில் மிக அவசியமாக இருந்ததாலும்,அதன் கதையோட்டத்திலும் துளி கூட ஆபாசம் தென்படவில்லை.
முதல் முறை மேலோட்டமாக வாசிக்கும்போது சில காட்சிகள் கதைக்குப் பொருத்தம் இல்லையோ என எண்ணவைத்தது.
ஆனால் இரண்டாம் முறை நிதானமாக வாசிக்கையில் எல்லாமே கதைக்குள் பொருந்தி வந்ததை உணர்ந்தேன்.
பெண் உடலில் மார்பகத்தை அவள் எவ்வளவு முக்கியமான ஒன்றாக கருதுகிறாள்.அதை இழப்பதென்பது தன் பலத்தை,பெண்மையை இழப்பதுபோன்று உணர்கிறாள் என்பது இக்கதையில் புலப்பட்டது.
கதையில் அந்த அம்மா சுத்தத்தை
யும்,ஆரோக்கியத்தையும்,சுகாதாரத்தையும்
பேணுபவளாக இருக்கிறாள்.
அடுத்தவர்களின் மீது கரிசனம் கொண்டவளாக இருக்கிறாள்.
கர்ப்பிணி பெண்ணுக்கும் சமைத்துத்தருவது அடுத்தவள் சுகவீனமாக இருந்தால் இவள் அக்கறைப்படுவதைக் காட்டுகிறது.
பல் போனால் கூட பரவாயில்லை,ஆனால் மார்பகம் போகிறதே என அவள் சொல்லும் இடத்தில் தன் மார்பகம் குறித்து அவளுக்கு எத்தனை பெருமை இருந்திருக்கும் என்பதை உணர முடிந்தது.
எளிய நடையில் இருந்தாலும்,சொன்ன விதத்தில் வென்று நிற்கிறீர்கள்.
மார்பகப்புற்றுக்கு ஆளான பெண்ணோ,அல்லது அவளது சுற்றமோ இக்கதையைப் படித்தால் நிச்சயம் உணர்ச்சிவசப்படுவார்கள்.
உங்களின் பாணியில் எனக்கு மிகவும் கவர்ந்த அம்சம் ஆழமான கதையைக் கூட நகைச்சுவையாக சொல்வதுதான்.
நல்வாழ்த்து மா.
அன்புடன்,
உதயகுமாரி கிருஷ்ணன்
சகோதரி பாமாவின் கதைகள் பொதுவாகவே வாழ்வியல் சார்ந்து துணிச்சல் நிறைந்ததாகவே இருக்கும்.. எதார்த்த நடை கதையின் உயிர் எனலாம்.
கண்கலங்க வைத்த அருமையான படைப்பு, கதாசிரியருக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
எஸ்.பி பாமாவின் கதை ஒரு பெண் தன் அழகை இழக்கும் போது அவளுக்கு நேரும் மனச்சரிவு பற்றிப் பேசுகிறது. பெண்களுக்கு உடலழகு மிகப்பெரிய மூலதனம் . பெண்கள் தங்களை அழக்காக்கிக் கொள்வது ஆண்களுக்காகத்தான் என்பது குறுகிய பார்வை. ஏனெனில் திருமணம் வெறுத்த பெண்களும் தன் அழகைப் பேணிப் பாதுக்காக்கிறாள். தன் மேனி வனப்பு அவளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுறது. வாழ்க்கையின் எல்லாவித சவால்களையும் எதிர்கொண்டு நிற்க அவளுக்கு அது தேவையாகிறது. எனவே, ஒரு பெண் உடலழகு ரசிக்கும்படி இல்லையென்றால் முதலில் அவள்தான் மனமுடைகிறாள். தன்னை வெளிக்காட்டிக்கொள்ள சுணங்குகிறாள். ஒன்றை கவனிக்க வேண்டும், பெண்கள் என்னதான் அழகாக இருந்தாலும் அவர்கள் திருப்தி அடைவதில்லை. அவளைப் போல அல்லது அந்த நடிகையைப் போல இருந்தால் இன்னும் அழகாக இருப்பேன் என்று ஒப்பீடு செய்து கொள்வார்கள். ஆனால் அழகிழந்த பெண்களின் கதை பரிதாபமானது. பாமாவின் கதை தன் அழகில் நேரும் எதிர்பாரா அசம்பாவிதத்தை சொல்லும் தருணத்தில் அவளின் மனம சரிந்து வேதனையில் துயறுருவதைச் சித்தரித்துக் கொண்டு போகிறது. ஆண்களை முதலில் (first impression) கவர்வது பெண்ணின் ஸ்தனங்கள். அங்கிருந்துதான் அவன் அவள் அழகில் உவகை கொள்கிறான். கணவன்மார்களுக்கு ஸ்தனங்களும் இடையும் இச்சையைக் கிளரக் கூடியவை. அவனை உறவுக்கு ஈர்ப்பதுவும் அது தொடங்கியே. பெண்களின் கூச்ச சுபாவம் காரணமாக ஆண்களே first move செய்ய வேண்டியிருக்கிறது. இது நம் மரபு. அவள் ஸ்தனங்களை இழக்க நேரிடும் போது பெரும்பாலான கணவன் மார்கள் நெருங்கவே மாட்டார்கள். இக்கதையில் இவற்றைக் கூச்சலில்லாமல் சொல்லியிருக்கிறார். ஆனால் இது பெண்ணின் கதையா என்று கேட்டால் நான் இல்லையென்றே சொல்வேன். இது ஆண்களுக்குச் சொல்லப்பட்ட கதை. இருந்தால் மட்டுமே ரசித்துச் சுகிக்கும் ஆண்கள், அது இல்லாது போன துயரத்தை ஒரு ஆணால் அடைய முடியாது. அவனுக்கு அது ஒரு உறுப்பிழப்பு மட்டுமே. அதன் உளவியல் அரசியலை அவனால் நுகர முடியாது. அதை கச்சிதமாகச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பாமா.
கதையின் சொல்மொழியில் இன்னும் அழகியலைச் சேர்த்திருக்கலாம். மேலும் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கும்.