பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து சன்னஞ் சன்னமாய் கங்காணி திட்டத்தின் மூலம் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்களின் துயரங்கள் இன்னல்களை நம் எழுத்தாளர்கள் பல சிறுகதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். மலாயாவின் முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து சேது மகதூம் சாய்பு எழுதியதாக ஒரு பதிவு சொல்கிறது. அதனையே முதல் புள்ளியாக நாம் எடுத்துக் கொண்டாலும், 1930 வெ. சின்னையா தொகுத்த நவரச மஞ்சரியே சிறுகதை இலக்கிய வடிவம் கொண்டமையால் அக்காலக் கட்டத்திலிருந்தே மலாயாவில் சிறுகதை இலக்கியப் படைப்பு வரலாறு தொடங்கியதாகக் கொள்ளவேண்டும்.
1924 தமிழ் நேசன் எனும் நாளிதழ் தொடங்கப்படுகிறது. 1930ல் தமிழ் முரசு நாளேடு கோ.சாரங்கபாணியை ஆசிரியராகக் கொண்டு வெளியாகிறது. அவ்விரு பத்திரிகைகளில் தமிழ் முரசே பிள்ளையார் சுழியிட்டு சிறுகதைகளைப் பிரசுரிக்கிறது.
சிறுகதை இலக்கியம் மலாயாவில் தோன்றி முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரே மலாயா மண்மனம் கொண்ட சிறுகதைகள் பிரசுரமாகின்றன. சிறுகதை எழுதப் பயிற்றுவிக்கப்பட்ட பின்னர் அதாவது, 1950களுக்குப் பின்னர்தான் எழுத்தாளர்கள் வாழும் நிலம்சார்ந்த கதைகள் வருகின்றன. அதற்கு பிற்பட்ட காலத்தில் எழுதியவர்கள் தமிழகத்திலிருந்து சஞ்சிக்கூலியாக வந்தவர்கள் என்பதால் தமிழ் நாட்டு சூழலிலையே கதைக்களமாகக் கொண்டனர். வாழ்வாதாரம் தேடும் மண்ணில் உண்டாகும் பிரச்னை எழுதப்படவேண்டும் என்ற உந்துததல் கதை வகுப்புகள் கொடுத்த உந்துதலாக இருக்கலாம்.
காலனித்துவ ஆட்சியில் ரப்பர்த் தோட்டங்களே பெரும்பாலும் நிறுவப்பட்டன. எனவே அங்கு வாழ்ந்தவர்களே அதன் மண்மனம் மாறாத கதைகளை வடித்தனர். மலாயாவில் இந்தியர்கள் ரப்பர்த் தோட்டத் தொழில் அல்லாமல் வேறு சில தொழில்களிலும் பரவி இருந்தாலும் நான் தேர்வு செய்த முக்கியக் கதைக்களன்கள் வெறும் தோட்டப்புற மண்ணையும் அங்கு அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் பின்புலமாகக் கொண்டவையாகும்.
1.சஞ்சிக் கூலி – சி.கமலநாதன்(வேரும் வாழ்வும் தொகுப்பு நூல்)
பெரியசாமி கங்காணியின் சூழ்ச்சியால், அவரின் கேங்கில், ரோஸ் துரையின் கப்பல் ஆர்டரில் அவர் குடும்பத்துக்குத் தெரியாமல் கடத்தி வரப்பட்ட அனாதை. கதையில் ‘கிழவன்’ குறிப்பிடப்படுபவரும் அவரே.. பால்மனம் மாறா சிறு வயது அப்போது அவனுக்கு. தண்ணீர் எஸ்டேட்டில் சொக்ரா வேலை செய்து. பின்னர் ஜப்பானியர் ஆட்சி காலத்தில் சயாம் பர்மா மரணரயில் அடிமையாக கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் இரண்டாம் ம் உலக யுத்த காலத்துக்குப் பிறகு தோட்டத் துண்டாலில் வேலையையும் வீட்டையுமிழந்து தெருவில் விடப்பட்டு, தினக்கூலியாக சாலை போடும் வேலையின் போது கொதிக்கும் தார் தோம்பு கவிழ்ந்து உயிருக்குப் போராடும் ஓர் அனாதைப் பிணமாகச் செத்ததாகக் கதை முடிகிறது. காலனித்துவ ஆட்சியில் தொடக்க காலத்தில் கடத்தி வரப்பட்ட கிழவன் சொக்ரா வேலை செய்ததாகக் குறிப்பிடுவதான முதல் துயரத்தைத் தொடர்ந்து சஞ்சிக்கூலியாக வந்த பல்வேறு இன்னல்களையும் அவர் ஊடாகக் காட்டிச் செல்வது ஒட்டுமொத்த சஞ்சிக்கூலியின் துயர சரித்திரத்தைக் காட்டுவதாக அமைந்த கதை சி. கமலநாதனின் ‘சஞ்சிக் கூலி’.
2. அ.ரெங்கசாமியின் –துணிந்தபின் மனமே(வேரும் வாழ்வும்)
பழனி அழகி தம்பதிகள் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். உறுதியளித்தபடி தோட்ட நிர்வாகிக்குக் கட்டுப்பட்டு அதவது கொத்தடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். கொத்தடிமையின் கொடுமை காரணமாக தப்பித்து போகிறவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கான தண்டனை ரப்பர் சீட்டிகள் காயப்போடும் புகை கூண்டுக்குள் அடைத்து வைத்து புகை மூட்டி விட்டு அவர்களை மூச்சுத் திணற வைத்துச் சித்ரவதை செய்யப்படும். பழனி அழகி தம்பதியினருக்குத் துரை திபாவளிக்குக் கொடுக்கப்போகும் அன்பளிப்பைப் பெறும் பொருட்டு போகும் சாக்கில் அங்கிருந்து தப்பித்து அண்ணன் குடியிருக்கும் இடத்துக்குப் போய்விடுகின்றனர்.
சஞ்சிக் கூலிகளாக வந்த மக்கள் எப்படியெல்லாம் அடக்கு முறைக்கு வன்முறைக்கும் ஆளாகிறார்கள் என்பதை இதில் பதிவு செய்கிறார் அ. ரெங்கசாமி. –மலேசிய இலக்கியம் 1988
3.முத்துச்சாமிக் கிழவன் – சி. வடிவேல் (வேரும் வாழ்வும்)
இரண்டாம் உலக யுத்த காலத்தின் இன்னலைச் சொல்கிறது இக்கதை முதல் தலைமுறையினர் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட சில வருடங்களில் பிரிட்டிசார் ஆதிக்கத்தில் இருந்த மலாயா இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானியரின் கொடுங்கோல் ஆட்சிக்கு உட்படுகிறது. கொத்தடிமைகளாக வாழ்ந்தவர்கள் இப்போது அடிமைகளாக்கப் பட்டனர். இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பானிய ராணுவம் சயாம் பரமாவுக்கு ரயில பாதை அமைக்க இந்தியர்களைக் கேள்வி முறையின்றிக் சயாம் பர்மா காட்டுக்குக் கடத்துகிறார்கள். முத்துசாமி என்ற கிழவனும் அவரின் இளமை மாறா மகனும் ஜபானிய ராணுவத்தினரிடம் இந்தக் கொடுந்திட்டத்தில் பிடிபடுகிறார்கள். அவரின் குடும்பம் சிதைவது மட்டுமல்லாமல் மகனும் பர்மா காட்டின் வேறு பகுதிக்கு இழுத்துச் செல்லப்படுகிறான். மீசை முளைக்காத வயது மகனைப் பிரிந்தது மட்டுமின்றை மனைவி என்ன ஆனால் என்ற தீராத துக்கத்தில் முத்துசாமி அல்லலுருவதையே கதை விவரிக்கிறது. இரண்டாம் உலக யுத்தம் 1942 முதல் 1945 வரையிலான யுத்தத்தில் இந்தியர்களின் சிதைந்து சின்னாபின்னமான வரலாற்றை இக்கதையின் வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
4. இருண்ட உலகம்- சி வடிவேல் (சி.வடிவேல் சிறுகதைகள்)
சி. வடிவேலுவின் இன்னொரு கதை இருண்ட உலகம். கிட்டதட்ட முத்துசாமிக் கிழவன் கதைச் சூழலையே இக்கதையும் கொண்டிருக்கிறது. ஆனால் ஜப்பனியர் கொடுங்கோல் ஆட்சியில் சயாம் பர்மா மரண ரயில் தண்டவாளம் அமைக்கும் சித்ரவதைப் பணியின் போது மரணமுற்றும் காணாமலும் போன 2 லட்சம் இந்தியர்களின் இன்னலைச் சொல்ல முருகையான் என்ற கதாப்பாத்தரத்தைக் கையாள்கிறார். முருகையா ரப்பர்த் தோட்டம் ஒன்றிலிருந்து ஜப்பானியரிடம் சிக்கி சயாம் பர்மா காட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பசிக்கொடுமையாலும் மலேரியா காலரா நோய்மையில் அவதியுற்று ஜப்பானிய ராணுவத்திடம் தன் பெண்டு பிள்ளைகளை தான் இறப்பதற்கு முன் கண்ணாறப் பார்த்துவிடவேண்டுக் என்று கெஞ்சுகிறான். ஆனால் காலரா வயிற்றுப் போக்குக்கு மருந்தாக சவர்க்கார நுரை நீர் வாயில் ஊற்றப்பட்டு அக்காட்டிலேயே மாண்டு போகிறான். மலாயாவிலிருந்து கொத்தடிமைகளாய்க் கொண்டு செல்லப்பட்ட இந்தியர்களில் இரண்டு லட்சம் பேர் வீடு திரும்பாமையின் காரணத்தை இந்த ஒரு எடுத்துக்காட்டுக் கதையின் வழி அறிய முடிகிறது.
5.இரைகள்- சீ.முத்துசாமி (வேரும் வாழ்வும்)
1960 களில் வேலை பெர்மிட் திட்டம் அமுலுக்கு வருகிறது. மலாயாக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே நிரந்தரமாக வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். குடியுரிமை அற்றவர்கள் வேலை காலி இருந்தால் மட்டுமே 3 மாத காலம் அல்லது ஆறு மாத காலம் வேலை செய்ய முடியும். இந்தத் தற்காலிக வேலை கிடைக்கக் கிராணிகள் தயவு வேண்டும். அவர்களின் சிபாரிசு கடிதத்தைப் பெற்று அரசு பதிவிலாகாவில் இந்தத் தற்காலிக வேலைக்கான அனுமதி கடிதத்தை வாங்கி வந்தால் வேலை கிடைக்கும். ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் கிராணியின் தயவுக்காக கைகால்களைப் பிடித்தால்தான் தற்காலிக வேலையாவது கிடைக்கும். இல்லையென்றால் குடும்பத்தில பசி பட்டினி நிலவும். இரை என்ற கதை எப்படி ஒரு பெண் வேலை பெர்மிட் பெறுவதற்குக் கிராணியின் வற்புறுத்தலால் அவனுக்கே இரையாகிறாள் என்பதைப் பேசுகிறது. தோட்ட மக்கள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக கற்பையும் பறிகொடுக்கும் துயரமும் தோட்ட வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
6.தற்காலிகங்கள்` – எம் ஏ இளஞ்செல்வன் (இளஞ்செல்வன் சிறுகதைகள்)
சஞ்சிக்கூலிகளாக மலாயாவில் குடியேறிவர்களில் நாடற்றவர்கள் படும் துயரத்தை முன்னிறுத்துக் சிறுகதை. நாடு 1957ல் சுத்தந்திரம் அடைந்த பின்னர் குடியுரிமை சார்ந்த புதிய சட்ட அமுலுக்கு வருகிறது. குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே அரசு வேலைகளும் தனியார் நிறுவன வேலைகளில் நிரந்தரமாக்கப் படுவர் , அல்லாதோர் அதாவது சிவப்பு அடையாளக் கார்டு வைத்திருப்பவர்களுக்கான( நாடற்றவர்கள்) வேலை வாய்ப்பு குயுரிமை உள்ளவர்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய வாய்ப்பையே தற்காலிகமாகப் பூர்த்தி செய்யப்படும் நிலைக்குள்ளாக்கப் படுகிறார்கள். ‘தற்காலிகங்கள்’ கதை இந்த கதைப்பொருளை மையமிடுகிறது. பார்வதி சிவப்பு அடையாளக் கார்டு வைத்திருப்பவள். கைம்பெண். குழந்தை குட்டிக்காரி. அவள் வேலை செய்யும் தோட்டத்தில் அவளுக்கு வேலையில்லா நிலைமை உருவாகிறது. அவள் தொடர்ந்து வேலை செய்யவேண்டுமென்றால் அவள் குடியுரிமை பெற்றவளாக இருக்கவேண்டும். அதற்கான கடைசி, வழி குடியுரிமை உள்ள ஒருவரை அவள் திருமணம் செய்துகொண்டு மீள்மனு செய்தால் பார்வதிக்குக் குடியுரிமை பெறும் வாய்ப்புண்டு. அவள் கண்ணியமாக வாழ்பவள். அவள் ஆண் துணையற்றவள் என்பதால் ரெங்கையா கங்காணி அவளுக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்ததை வெறுத்து ஒதுங்கியவள். ஆனாலும் குடியுரிமை பெறும் கடைசி வாய்ப்பாக, குடியுரிமை உள்ளவர்களைத் திருமணம் செய்துகொள்ளும் சலுகைக்காக வேறு வழியற்று பார்வதி ஊர் ஓய்ந்த ஒர் இரவில் கெங்கையா வீட்டை நோக்கி போய்த் தன்னை அவனிடம் இழக்கிறாள். இழந்த பின்னர் தன் இக்கட்டைச் சொல்லி தன்னை மணந்துகொள்ளும்படி மன்றாடுகிறாள். வெறும் பெண்ணுடல் சுகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவனுக்கு அவளின் கோரிக்கை சுமையாகப் பட, அவன் நிராகரிக்கிறான் என்று கதை முடிகிறது. இவ்வாறான சுய சௌகர்யத்துக்கான அல்லது வசதிக்கான திருமணங்கள்( marriage of conveniance) எழுபது எண்பதுகளில் சகஜமாக நடக்கும் ஒன்று.
7.பால்மரப் பூக்கள்-ஆர்.ஷண்முகம் (பேரவைக் கதைகள் 2)
கூலா தோட்டத்தில் , பொதுவாக ரப்பர்த் தோட்டங்களில் சீனர் மளிகைக் கடை வைத்திருப்பர். அங்கேயே சம்சுவும் விற்பர். அது பெரும்பாலான தோட்டப் பாட்டாளிகளின் சாயங்கால சந்தோஷம் கிடைக்கும் இடம். இது தோட்ட மக்களை சிந்திக்கவிடாமல் கொத்தடிமை நிலையிலேயே வைத்திருக்க அதிகாரத்துவம் செய்யும் ஒரு நெடுநாள் சதி. இக்கதையில் மக்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் ஒரு தோட்டப் பாட்டாளியின் மகன் துணை நிர்வாகியாக வேலைக்கு வந்து பல நலத்திடங்களைச் செயல் படுத்துகிறான். ஆனால் தங்களின் சாயங்கல சந்தோஷத்தின் மேல் கைவைக்கும்போது அவர்கள் அவனை முற்றாக வெறுத்து வெளியேற்றுகிறார்கள்.
“குடித்தால்தான் தென்னாட்டுத் இந்தியன் ஒழுங்காக வேலை செய்வான். குடித்தால்தான் தென்னாப்பிரிக்க அடிமைப் போல அடங்கி ஒடுங்கி நாய்போலக் கிடப்பான், குடித்தால்தான் இந்தியன் அறிவு மழுங்கி எதிர்த்துக் கேட்க மாட்டான். குடித்தால் இந்தியன் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு ஒற்றுமையில்லாமல் இருப்பான அதற்காகவே சஞ்சிக் கூலிகளாக இங்கே கொண்டு வந்தோம்” என்று வெள்ளைக்காரத் துரை ஓரிடத்தில் பேசுவார் கதையில். குடி தோட்ட மக்களின் சீரழிவுக்குக் முக்கியக் காரணமானது என்ற துயரத்தையும் எழுத்து வரலாறு பதிவு செய்கிறது.
8.வேரும் விழுதுகளும்- டாக்டர் சண்முகசிவா (வேரும் விழுதுகளும்)
நாடு பொருளாதரம் வலுவடைய ரப்பர் தோட்டங்கள் பெருமளவில் துணை நின்றன. நாட்டின் தொழில்துறை வளர்ச்சியும் பொருளாதார வலிமையால் மேம்பாடடைந்தது. ஆனால் ரப்பர்த் தோட்டங்களையே தங்களின் வாழ்விடமாக வேரூன்றிய தோட்ட மக்கள் பிழைப்பில் இம்முன்னேற்றம் பெரும் இடியாக வந்து விழுந்தது. தொழிற்துறை முன்னேற்றம் தொழிற்பேட்டைகளை மழைக் காலான்கள் போல முளைக்கச் செய்தது. பெரும்பாலும் பட்டணப்புறங்களை ஒட்டியுள்ள தோட்டங்களே தொழிற்பேட்டைக்கு வழிகொடுக்க வேண்டியதாயிற்று. தோட்ட ரப்பர் செம்பனை மர வேலைகளையே முழுமுற்றான வாழ்வாதாரமாக நம்பி இருந்த மக்களின் பாடு கேள்விக்குறியானது. இவர்களுக்கு வேறு வேலை தெரியாது என்ற இக்காட்டான நிலைக்கு நாட்டு முன்னேற்றம் இவர்களைக் கைவிட்டது. இதில் சிக்கிய ஒரு கணவனை இழந்த பார்வதி என்ற பெண் தன் தோழியை நம்பி பட்டணம் செல்கிறாள். பட்டணத்தில் வாழும் அப்பெண் ஒரு விலைமாது என்று தெரிய வருகிறது. பார்வதியையும் அதற்குள் இழுக்கப் பார்க்கிறாள் ஆனால் அந்தத் தொல்லையிலிருந்து மீள ஒரு புறம்போக்கு குடியிருப்பில் தானும் ஒரு குடிசை அமைத்து குடியிருக்கிறாள் தன் பள்ளிச்செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளோடு. ஆனால் ஒருநாள் நகராண்மை அதனை இடித்து தரைமட்டமாக்கிவிட வேறு விதியற்ற பார்வதி தன் தோழி காட்டிய பாதைக்குச் செல்ல ஆயத்தமாகிறாள் என்று கதை முடியும். வாழ்வைத் தொலைத்த ஒரு பெண்ணின் அவலமும் அவள் சந்ததிகள் எதிர்கொள்ளப்போகும் வாழ்வின் குரூரமும் நம் கண்முன் விரிகிறது.
9.இழப்பு- ம.நவீன் (நவீன் அகப்பக்கம்)
பொருளாதார முன்னேற்றத்தால் விவசாய நிலம் வளர்ச்சித்திட்டங்களுக்குப் பலியாகிறது. ஆனால் காலங்காலமாய் அநத வாழ்வைப் பழகிப்போன மனிதர்கள் நிலை கேள்விக்குறியாகிறதை இழப்பு என்ற கதை சொல்லிச் செல்கிறது. வெவ்வேறு தொழிலைக் கற்றுக்கொள்ளும் சிரமம், காற்றோட்டம் குறைவான அடுக்குமாடி வீடு, புதிய வாழ்க்கை முறையை எதிர்கொண்டு தவிக்கின்ற வாழ்வாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். இக்கதை புத்ராஜெயா என்ற நவீன அமைச்சு அலுவலகங்கள், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகள் , உல்லாச விடுதிகள் கட்டப்படுவதற்காக பெராங் பெசார் என்னும் ரப்பர்த் தோட்டம் வலிந்து வழிவிட வேண்டியதாயிற்று. ரப்பர் மரங்களால் சூழ்ந்திருந்த வாழ்க்கயை வாழ்ந்த மக்கள் அடுக்குமாடி வீட்டுக்கு புலம் பெயர வேண்டிய கட்டாயம். அது அவர்களுக்கு முற்றிலும் புதிய வாழ்விடம். பழைய விசாலமான வாழ்க்கை பிடுங்கப்பட்டு இந்த நெரிசலான புதிய வாழ்க்கையை, முற்றிலும் சிக்கலான வாழ்க்கை முறையை எதிர்கொள்கிறார்கள். இக்கதையில் அப்பா வாங்கித் தந்த பந்தை உதைத்து விளையாடத் திடல் தேடி அலையும் ஒரு சிறுவனைக் குறியீடாக வைத்து அந்த புலம் பெயர் மனிதர்கள் எதிர்கொள்ளும் திண்டாட்ட நிலையைக் குறியீடாக முன்வக்கிறார்.
முன்பிருந்த தோட்டத்தில் அகன்ற திடல் இருந்தது. அந்த வசதி வளர்ச்சியடைந்த புது வாழ்விடத்தில் இல்லை. பந்தை உயரப் பறக்க உதைத்து விளையாடும் ஆசை நெரிசல் மிகுந்த நகரத்தில் வாய்க்கவே இல்லை சிறுவனுக்கு. எங்கெங்கோ இடம் தேடி அலைந்து கடைசியாக புத்ரா ஜெயாவின் செயற்கையாக நிறுவிய ஏரிக்கறையிலிருந்து பந்தை உதைத்த அது உயர பறப்பதைப் பார்க்க ஆசைப்படுகிறான். அந்தப் பந்து இனி கைக்குக் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்தும் அதனை ஒரே ஒரு முறை உதைத்து மேலேற்றி ஏரியின் நீர்ப் பரப்பில் விழச் செய்து தன் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்வதாக கதை முடிகிறது. அவன் பந்தை மட்டும் இழக்கவில்லை. தோட்டப்புற மக்கள் தங்களின் கொஞ்ச நஞ்ச வாழ்க்கையையும் இழந்து கையறு நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டு நிர்கதிக்கு உள்ளாக்கப்பட்ட அவலத்தையும் கதை முன்னெடுக்கிறது. நாட்டின் வளர்ச்சியால் சிறுபான்மையினரின் வாழ்வை அபகரிக்கும் அதிகாரத்தை சிறுவனின் நிறைவேறாத ஏக்கத்தின் மூலம் சாடுகிறது இக்கதை. இக்கதையின் ஊடாக தோட்டப்புறத்திலிருந்த வெளியேற்றபட்ட மக்களின் துயரமான இன்னொரு அத்தியாயத்தை வலிமையாக நிறுவுகிறது இழப்பு என்ற கதை.
10. சத்து ரிங்கிட்- பாரி (வேரும் வாழ்வும்)
தோட்டப்புறங்களில் குழந்தை பராமரிப்பு இல்ல வசதி செய்து தரப்படுவது இயல்பு. அதிகாலையிலேயே வேலைக்கு செல்லும் கணவன் மனைவி தங்கள் குழந்தைகளை அவ்வில்லத்தில் விட்டுவிட்டுப் போவார்கள். அதனைப் பராமரிக்கும் பணியாளை ஆயா என்று விளிப்பர். குறைந்த வருமானமே அவர்களுக்கு வழங்கப்படும். அந்தச் சொற்ப ஊதியத்தை வைத்துக்கொண்டு தன் மகனை இடைநிலைப்பள்ளியில் படிக்க வைக்கிறாள். தோட்டப்புற மக்களில் பெரும்பாலோர் பிள்ளகளின் கல்வியில் அக்கறை செலுத்தாதவர்களாக இருக்க, இவள் அவன் கல்வியில் கண்ணுங் கருத்துமாய் இருக்கிறார். தனித்து வாழும் தாய் காட்டும் அக்கறையை பாமர மக்களுக்கு படிப்பினையாக வைக்கவே இக்கதை எழுதப்படுகிறது என்று கொள்ளலாம்.
அதிகாலை வேளையில் ஆயா அரக்கப் பரக்க ஆயாக்கொட்டகைக்குச் செல்லும் வேளையில் மகன் பேருந்துக்குக் கட்டணமின்றி பள்ளிக்குப் போகாமல் படுத்துக் கிடக்கிறான். அவனை விசாரிக்கும் போது அவள் பதறுகிறாள். பள்ளிக்கு மட்டம் போடக்கூடாது என்பதற்காகவே அந்த கருக்கலில் மகனுக்குத் தேவையான ஒரு வெள்ளியை கடனாகக் கேட்டுப்பெற தெரிந்தவர் வீட்டுக் கதவையெல்லாம் தட்டுகிறார். குழந்தைகளை ஆயாக்கொட்டகையில் விட தோட்டப் பாட்டளிகள் வந்துவிடுவார்கள் என்ற பதற்றம் வேறு அவளுக்கு. வந்த பதற்றத்தில் கால் பெரு விரலில் கல்மோதி ரத்தம் வழிகிறது.அந்த இக்கட்டிலும் அவள் ஒரு சீனக் குத்தகையாளரிடம் பணம் பெற்று மகனைப் பேருந்தில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பித் தன் கடமையை நிறைவேற்றுகிறாள். தங்கள் பிள்ளைகள் கல்வியில் அக்கறையற்று கிடக்கும் ஒரு சமூகத்தில் ஒரு சிலரின் தெளிவு அச்சமூகத்துக்கான விடிவெள்ளியாகக் காட்டுவதே கதையின் நோக்கம். இந்தச் சமூகம் எப்படி மெல்ல மெல்ல இருளை விளக்கி எழுந்து வந்தது என்பதற்கு இக்கதையை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
11. பாதுகை- சை பீர்முகம்மது (வேரும் வாழ்வும்)
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத சமுதாயத்தில் அவர்களின் அடுத்த தலைமுறையும் வறுமையில் வாடும் என்பதை சொல்லவரும் கதை சை. பீர்முகம்மதுவின் ‘பாதுகை’. சினிமா மோகம் எந்த அளவுக்குக் கல்வி அறிவைப் பெரிதாகக் கருத விடாமல் செய்து தோட்ட மக்களின் வறுமை நிலை பெயரவிடாமல் நீடிக்க வைக்கிறது என்பதைப்’ பாதுகை’ விளக்கமாக முன்வைக்கிறது. தனலெட்சுமி என்ற இடைநிலைப் பள்ளி மாணவி கிழிந்த காலணி அணிந்தே பள்ளிக்குச் செல்கிறாள். அதனால் அவளுக்கு நேரும் அவமானமும் கல்வியை தொடர முடியாத தோட்டத்து பெண்ணின் அவலமும் தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்றாகக் கருதலாம்.
தனலெட்சுமிக்கானப் புதுக் காலணி வாங்கித்தர அம்மாவை அணுக முடியவில்லை. அம்மா பெண் பிள்ளைக்கு படிப்புத் தேவையில்லை என்று பாமரத்தனமான கருத்துடையவள். அப்பா ஒரு சினிமாப் பைத்தியம். வேலை செய்யும் அண்ணன் ஒரு ரஜினிப் பித்தன். இவர்கள் மூவருமே தனலெட்சுமிக்குப் புதுப் பள்ளிக் காலணி வாங்கித் தருவதற்கு அக்கறை காட்டவில்லை. கடைசிவரை தனலெட்சுமியின் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலைக்குள்ளாகிறாள்.
கல்வி மேம்பாட்டில் அக்கறை காட்டாத பெரும்பாலான ரப்பர்த் தோட்ட மக்களின் அறியாமை நிலையை இந்தக் கதைவழி சுட்டிக் காட்டுகிறார் சை. பீர் முகம்மது.
முடிவுரை
தோட்டப்புற மண்மணம் சார்ந்த் கதைகள் நிறையவே காணக்கிடக்கின்றன. அவற்றில் சில்வற்றையே இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.பெரும்பான்மை கதைகள் உணர்ச்சிபூர்வமான பிரச்சாரங்களை முன்வைக்கின்றன. அதேப் போல் அவை இருத்தலியல் சார்ந்த பின்புலம் ஊடுருவி நிறைவதையே காட்டுகின்றன. நவீனச் சிந்தனையை முன்னெடுக்கும் கதைகளாக சீ. முத்துசாமியின் ‘இரை’ கதையையும், ம,நவீனின் இழப்பு கதையையும் சொல்லலாம்.
தோட்டங்களில் தமிழர்கள் இல்லாத நிலை உருவாகிக்கொண்டிருப்பதால் தற்காலத்தில் தோட்டப்புற மண் சார்ந்த கதைகள் வருவதில்லை.
நாட்டின் தொழிற்துறை முன்னேற்றம் தோட்ட நிலப்பகுதிகளை இல்லாமால் ஆக்கி வருகிறது. அதே இடத்தில் தொழிற் பட்டறைகளும், கோல்ப் விளையாட்டுத் திடலும், உல்லாச விடுதிகளும் நிரம்பி வருகின்றன. தோட்டப்புறத்தில் வாழ்ந்த மக்கள் தங்களின் எதிர்காலம் குறித்த சிந்தனை முதிரவே அவர்கள் பட்டணப் புறங்களுக்குக் குடியேறி தொழிற்பட்டறைகளிலும், பட்டணத்தில் உள்ள தனியார் நிறுவனங்களிலும் மீண்டும் கூலி வேலைக்கே ஆகிறார்கள். மலேசிய வளர்ச்சியின் காரணமாக கட்டடத் தொழிலுக்கு நிறைய மனித வளம் தேவைப்பட்டதால் இந்தோனேசியா, வங்காளதேசம், மியான்மார் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர்.
எஞ்சியிருக்கிற ரப்பர் செம்பணைத் தோட்டங்களுக்கு முன்னர் பிரிட்டிசார் வழங்கிய சம்பளத்தைவிட, புதிய முதலாளிகள் குறைந்த ஊதியம் வழங்கியபடியால் முன்பிருந்த இந்தியர்கள் அங்கிருந்து புலம்பெயர, அந்நிய நாட்டுக் கூலித் தொழிலாளர்கள் அந்தக் காலி இடங்களை நிரப்புகின்றனர்.
தோட்டப் புறங்களில்தான் மக்கள் பல்வேறு சிக்கல்களில் அவதிப்பட்டாலும், பட்டணப்புறத்துக்குக் குடியேறிய பின்னரும் அவர்களின் பிள்ளைகள் பல புதிய பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். பட்டணப்புற வாழ்க்கையில் திறந்து கிடக்கும் தீய பழக்கங்கள் அவர்களை ஈர்க்கின்றன.
இடைநிலைக் கல்வியை முடிக்காமல் அல்லது தேர்ச்சி பெறாமல் குண்டர் கும்பலும் திருட்டுக் கும்பலிலும் பெரும் பணம் திரட்டும் சதிக் கும்பலிலும் ஈடுபட்டு தங்களை சீரழித்த வண்ணம் இருக்கின்றனர். இவர்கள் படும் துயரம் ஒரு முடிவுக்கு வர இன்னும் சில காலம் ஆகலாம்.
பேராக் மாநிலத்தில் உள்ள செங்கட் சாலாக் தோட்டத்தில் எப்போது தமிழ்ப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைமையாசிரியராக இருந்தவர் யார். மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? இத்தகைய கேள்விகளுக்கு விடை காணவிரும்புகின்றேன். காரணம் பலரிடத்தில் கேட்டும் இதற்கான விடை கிடைக்கவில்லை. 1960 ஆம் ஆண்டுகளில் அத்தோட்டத்தில் 360 பிள்ளைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை தமிழ் படித்தார்கள் என்பது கேள்வி. நானும் அத்தோட்டப் பள்ளியில்தான் படித்தேன். உங்களின் பதிலுக்கா காத்திருக்கும் பங்சார் எ.அண்ணாமலை.