க்ளிங் க்ளிங் பெண்

kling kling2அந்த மாலை, வாசற்படியில் அமர்ந்தபடி வெளிநோக்கி செம்மண் சாலையையும் திரும்பி அம்மாவின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் சுமதி அந்த முடிவுக்கு வந்திருந்தாள். அவள் அம்மாவைப்போல் இருக்கப் போவதில்லை. ஒருபோதும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள போவதில்லை. அம்மாவைப்போல் கணவனின் வருகையை எதிர்பார்த்து முட்டாள்தனமாகக் காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை; அவன் தன்னிடம் திரும்பி வந்துவிடுவான், குடும்பத்துடன் சேர்ந்துவிடுவான் என்று நம்பி வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கப் போவதில்லை; பிரார்த்தனை செய்துகொண்டிருக்கப் போவதுமில்லை. சடங்கு சம்பிரதாயங்களின் கட்டளைக்குப் அடிபணிந்து அறிமுகமில்லா ஒருவனை கணவாக ஏற்று; அவன் இருள் கம்மிய இரவுகளில் குடித்துவிட்டு வரும்போதெல்லாம் எழந்து உபசரணைகள் செய்யப் போவதில்லை. சமுதாயத்தின் கண்களுக்கு அவனை அப்பழுக்கற்றவனாகக் காட்டும் பொருட்டு வீட்டில் பசி, பட்டினி இல்லாததைப் போன்று பாசாங்கு செய்யப்போவதில்லை. வீட்டு செலவீனங்களுக்காக அவனிடமிருந்து கிடைக்கக்கூடிய எந்தவொரு அனுகூலங்களுக்கும் ஏங்கி அடிமைபோல காத்திருக்கப் போவதில்லை. மாறாக, வாழ்நாள் முழுவதும் அம்மாவுடன் இருந்து, அவளை மட்டும் பின்தொடர்ந்து, அவளுடன் வேலை செய்தோ பொழுதை கழித்தோ அடிமைத்தனம் எனும் அவலத்திலிருந்து முற்றிலும் தன்னை விலக்கிக்கொள்ளப் போகிறாள்.

மனதின் ஆழத்தில் நங்கூரமாய் நினைவுகளைச் சேமிக்கும் தோரணையில் அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ தெரியவில்லை, சட்டென அம்முகம் முன்பு எப்போதோ அவள் காட்டிய வண்ணம் மங்கிய பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் பார்த்த கொள்ளுப்பாட்டியின் முகத்தை நினைவுபடுத்தத் தொடங்கியது. உலகின் ஒளியிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டிருந்த கொள்ளுப்பாட்டியின் கண்கள் இன்னும் இருண்டு, புலப்படாதப் பெரும்புதிருக்குள் சுமதியைத் தள்ளியது. சாமி மேடையில் மென்பட்டுத்துணி போர்த்தி வைத்திருந்த பெட்டியை எடுத்து தெய்வீகத்தன்மை பொருந்திய பொருளைக் காட்டுவதுபோல மிகுந்த பயபத்தியோடு அம்மா அதை காட்டியிருந்தாள். இரண்டு மணிகள் கொண்ட வெள்ளி கொலுசுகளை பார்த்ததாய் ஞாபகம். அவற்றோடு, நினைவின் ஆழத்தில் கொள்ளுப்பாட்டி பற்றி பதிந்து வைத்திருந்த சில கதைகளையும் அம்மா பல ஆயிரம் முறை சொல்ல கேட்டிருக்கிறாள்.

கொள்ளுப்பாட்டியைப் பற்றி அம்மாவும் மற்றவர்களும் சொன்ன கதைகளை நினைவுக்கூர்ந்தவள், தன் இயல்புநிலை சட்டென புதியதொரு ஆழ்ந்த விழிப்புநிலை நோக்கி நகர்த்தப்படுவதை உணர்ந்தாள். சொல்லப்பட்ட கதைகளிலேயே மிகப் பிரபலமானது க்ளிங்-க்ளிங் பெண் என்ற கதை. அவர்கள் அந்தக் கதையை நாடகமாய் நடித்துக் காட்டும் விதமாகவும் மாற்றி வைத்திருந்தார்கள். கோலாலம்பூரிலிருந்து முப்பது கிலோமீட்டர் தள்ளி புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் பாட்டி வீட்டுக்கு வரும் நெருக்கமான, தூரத்துச் சொந்தங்கள் சில சந்திப்புகளின்போது இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். கொஞ்சம் வயது மூத்த பெண்கள் இரு கால்களிலும் கொள்ளுப்பாட்டியின் கொலுசை அணிந்துகொண்டு மணி சத்தம் கேட்கும்படி அங்குமிங்கும் ஓடுவதும், திருமண வயதை அடைந்துவிட்ட, நெருங்கிக் கொண்டிருக்கும் ஆண்கள் கொலுசின் மென்சத்தத்தால் கவரப்படுவதும் குடும்ப சந்திப்பில் ஒரு அங்கமாகி நடந்துக் கொண்டிருந்தது.  பாட்டியின் வாழ்வில் மிக முக்கியமானதாகி விட்டிருந்த இந்தப்பகுதி உறவுக்கார ஆணுக்கும் பெண்ணுக்கும் சோடி சேர்க்கும் சடங்காகவே அனுசரிக்கப்பட்டு வந்தது.

சுமதியின் கொள்ளுப்பாட்டி சற்றே விசித்திரமானவள். தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்தவள் என்றாலும்கூட எதிர்பாராவிதமாய் சிந்தனையில் மடைமாற்றம் கண்டவள். திருமணம் செய்வதும், ஆண்டான் அடிமையாகி அவனுக்கு சேவகம் செய்வதும், குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி வியாதிக்கும் மரணத்திற்கும் அஞ்சி பின் வழியேதுமின்றி நிதர்சனமாய் அவற்றை ஏற்பதும், பூமியில் வாழும் கடைசி நாட்களையும்கூட நிறைவாய் கழித்திட பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் மனம் முடித்து வைக்கும் தொன்றுதொட்ட மரபை தாண்டியும் வாழ்வுள்ளதென அவள் உணர்ந்திருந்தாள்.

விரும்பியே அத்தனை மரபுகளையும் உடைத்தெறிந்தாள். (கொள்ளுப்பாட்டி இந்த நாட்டுக்கு எப்படி வந்தாள் என்பதை கதைச்சொல்லி சுமதியிடம் சொல்லியிருக்கவில்லை. ஆனால் கொள்ளுப்பாட்டி வாழ்வின் அதற்கடுத்தக் கட்டமாக நடந்த ‘அவள் ஒரு ரயில் சடக்கு தொழிலாளி’ என்ற சங்கதியை மட்டும் சுமதி நன்கு அறிந்து வைத்திருந்தாள்.)  ஒட்டுறவற்று ஒரு சம்பவத்திலிருந்து இன்னொரு சம்பவத்துக்கு பாயும் இந்த மாயாஜால கதையை அவளது சந்ததிகள் மொத்தமும்  கேட்டுக்கேட்டு பிரமிப்புக்குள்ளாகியிருந்தனர்.

“ஒரு சாதாரண வீட்டுப் பெண் ரயில் சடக்கு தொழிலாளியாக வேலை செய்வதா? உங்களில் எத்தனை பேரால் இதைச் செய்திருக்க முடியும்?” கதைச்சொல்லிகள் கேட்டு வைத்தனர்.

கொள்ளுப்பாட்டிமீது குவிந்திருக்கும் இந்த கவனமும் பாராட்டுகளும் அவள் இந்த நாட்டிற்கு வந்து, வாழ்ந்து, சாகும் காலம்வரை பெற்றதில்லை. வனப்பான அங்க வளைவுகளில் ஒய்யாரமாய் நடமாடும் அவள் எப்போதுமே புடவை அல்லாத வேறு எதையும், பாதுகாப்பானதாகவும் நடைமுறை பொருத்தமானதாகவும் சொல்லப்படும் எதையும் அணிவதை நிராகரித்து விட்டாள்.

“புடவை எல்லாவற்றுக்கும் பொருந்தும்!” அவள் சுயஅறிவிப்பு செய்துக் கொண்டாள். “நான் வயலுக்கே புடவை கட்டிக்கொண்டுதான் போவேன். உழவு வேலை செய்ய புடவை தடையாகவே இருந்ததில்ல! அப்பறம் அங்க இங்க மாட்டி எங்கேயும் கொஞ்சமும் கிழியவுமில்ல!”

“அம்மாடி, உன் புடவையில் எல்லா விதமான கிழிசல்களும் இருக்கு,” உடை எனும் பேரில் துணி குவியலுக்குள் புகுந்து கொண்டிருந்த தோழிகள் இளித்துக் கொண்டும் நகைத்துக் கொண்டும் சொன்னார்கள்.

அப்போது தொடங்கியே அவளது பிடிவாதம் மைல் நீளத்திற்கு கீற்றுவிட்டு கிடந்தது.kling kling3 சரளைக்கற்களைத் தூக்கிக் கொண்டு சுண்டியிழுக்கும் வசீகரத்தை நடையில் தளும்பவிட்டு சடக்கு சட்டங்களை அடுக்கிக் கொண்டிருக்கும் ஆண்கள் கூட்டத்திற்குள் நுழைவாள். கண்ணெறிக்கும் சூடு, வெண்தூசு-மேகங்கள், உலோகங்களின் வெட்டொளிகளுக்கு மத்தியில் அவளது மெல்லிடை ஆவலை உந்தும் கனவுக்குள் அவர்களைத் தள்ளியிருக்கும். பெரும்பாலான ஆண்கள் வேலைகளை அப்படியே இடைநிறுத்திவிட்டு கண்கொட்டாமல் அவளை வெறித்து பார்த்திருப்பார்கள்.

“இது ஓய்வுவெடுக்கும் நேரமில்ல!” கங்காணி அவர்களை நோக்கி கர்ஜித்தான்.  மாட்டிக்கொள்ளாமலிருக்க வேலையில் செய்யும் தோரணையில் எதையாவது கையிலேந்திக்கொண்டு சிற்றின்ப கனவுகளில் சிறகடித்தார்கள்.

“நீ கவனமாக இருக்கனும்,” பெண்கள் அவளை எச்சரித்தனர்.

“நான் புடவையுடன் பிறந்தேன்!” அவள் எக்களத்தில் பாடினாள்.

“ஆண்கள் கிழித்துவிடுவார்கள்!” அவர்கள் எரிச்சலை உதிர்த்தார்கள்.

கற்குடுவையில் நீர் நிரப்பி குளிர்ந்த இடங்களில் வைத்துக் குடிக்கும் ஆண்கள் அவற்றை தனக்கும் குடிக்கக் கொடுக்க முன்வருவதால் இந்தப் பெண்களுக்கெல்லாம் பொறாமை, அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். கொடுக்கும் நீரை ஏற்றுக்கொள்ளாதபோதெல்லாம் அந்த ஆண்கள் அவளிடம் எரிச்சல் காட்டியதில்லை; ஒரு தினுசாய் சிரித்துக் கொள்கிறார்கள். காக்கிச் சட்டையும் தலையில் கவிழ்த்த பானை போன்ற பழுப்பு நிற தொப்பியையும் போட்டுக்கொண்டு திரியும் அந்த வெள்ளைக்கார கங்காணிகூட அவளிடம் மட்டுதான் தனது நீர் குடுவையை நீட்டுவான். அப்போதெல்லாம் தூரமிருந்தே அவன்மீது வீசும் புளித்த வாடையை நுகர்ந்தபடி வந்து, கூடையை அவன் கால்மாட்டில் எறிந்துவிட்டு, எட்டி நின்று தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவளது அகன்ற பிட்டத்தையும் மெல்லிய இடையையும் உற்றுப்பார்த்தபடி ஆழ்ந்த யோசனையில் கிறங்கியவனாய் நீரை விழுங்க, அது பெருக்கெடுத்த தாகத்துடன் தொண்டைக்குள் இறங்கிக் கொண்டிருக்கும்.

அந்தப்பகுதி தொழிலாளர்கள் சிறுசிறு செங்கல் விடுகளில் வாழ்ந்து வந்தனர். வரிசைகட்டி நின்ற அந்த தரை வீடுகளிலிருந்துதான் லாரிகள் அவர்களைக் காலையில் வேலைக்கு ஏற்றிச் செல்லும். மாலை வந்திறங்கும் இடமும் அதுவே. நகரங்களின் விழிம்பில் இருக்கும் அந்த ரயிலடி வீடுகளில்தான் அவர்களது வாழ்க்கை விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். கல்லுக்கடை இருந்தால் ஆண்கள் ஒட்டுமொத்தமாய் அங்குக் கடை விரிப்பார்கள்; அதுவுமில்லையென்றால் சீனர்களின் மளிகைக்கடை பின்னால் சம்சு அல்லது வேறுவகை சாராயங்களைக் குடித்துக் கொண்டு வேலை முடிந்த களிப்பைக் கொண்டாடி கொண்டிருப்பார்கள்.  இளவட்டங்கள் மற்ற கடைகளிலோ தெரு முனைகளிலோ சுற்றிக் கொண்டிருப்பார்கள், பின் ஏதும் சாப்பிட கொஞ்சம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய்விடுவார்கள். திருமணம் ஆகிய, ஆகாத பெண்களுக்கு மாலை உணவை சமைப்பதும் கூடவே பேட்டரியில் இயங்கும் வால்வ் ரேடியோவில் பாட்டு கேட்பதும் வழக்கமாயிருக்கும்.

சுமதியின் கொள்ளுப்பாட்டி இதர ஏழு பெண்களுடன் வீட்டைப் பகிர்ந்து கொண்டாலும்கூட, எப்போதும் தன் இருப்புக்குள் பிடிவாதமாக இருந்ததோடு தவறியும்கூட யாரும் தன் உயிர் சுரக்கும் வெளிக்குள் வந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டாள். வேலை முடிந்துவரும் மறுகணம் புடவையைத் துவைத்து, பரப்பி காயவைப்பதை மற்ற அனைத்தைக் காட்டிலும் தலையாயப் பணியாகச் செய்தாள். அதற்கு பிறகுதான் சமையல் வேலைகளில் மற்றப் பெண்களுடன் இணைந்து கொள்வதும், பின் சாப்பிட்டு முடித்து மூலையில் சென்று உறங்குவதும். மற்றபடி இரவுக்குரிய விசித்திர சடங்குகள் அனைத்திலிருந்து தள்ளியே இருந்தாள்.

ஒன்றன் பின் ஒன்றாக வந்த அனைத்து கதைச்சொல்லிகளும் கூறியதுபோல உண்மையிலேயே அவள் அந்த மூலையில் படுத்துக் கொண்டு சதா தன் கனவு வாழ்வுக்குள் வியாபித்திருக்கக்கூடும். அப்படியில்லாமலா அவளால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்கூட பார்க்கவோ கேட்கவோ முடியாமல் போயிருக்கும்? ஆமாம், அந்தக் கனவு உலகத்தில்தான் தன் எதிர்கால பிரதிபிம்பத்தை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் அவள் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கவில்லை; கைப்பையில் பணம் நிரம்பி, முழுவதுமாய் அலங்காரத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தாள். அப்போது அவளைச் சுற்றி அன்பான ஒரு குடும்பமும் இருந்தது. அவளது சகோதரர்களின் நயவஞ்சக, கொடூர முகங்கள் மின்னலென கனவுலகில் தோன்றி மறைந்தன.

பெண்களுக்கு அங்கு வேலையில்லை என்றாலும்கூட அவள் வயல்வெளிக்குள் இறங்கினாள். மற்றவர்களுக்கு நான் சளைத்தவள் அல்ல என்று காட்டவாவது அவள் வயலுக்குள் இறங்கினாள்.  ஆனால் அவர்கள் எப்போதும் அவளுக்குத் தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். சில நேரங்களில் அவளது ஏர் காணாமல் போயிருக்கும்; சமயங்களில் முந்தைய நாள் பகலில் தாம்புக் கயிற்றால் மரத்தில் கட்டிவைத்த உழவு மாடுகள் கயிற்றின் இறுக்கும் விலகி உலாத்திக் கொண்டிருக்கும். ஒருமுறை சகோதர்கள் அவளை வழிமறித்து நின்று, “எந்தப் பெண்ணும் இந்த மாதிரி வேலைகளைச் செய்வதில்லை!” எனக்கூறி சச்சரவு செய்தார்கள். இப்போது, இந்தப் புதிய நிலத்தில் அப்படியேதும் தொல்லைகள் இல்லாமல் அவள் நன்றாக வாழலாம். அவள் மதிக்கும்படியான கணவன் அவளுக்கு வாய்க்கலாம். அவளது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் ஒரு வீடு அவளுக்கு அமையலாம். அவள் எப்படி வாழவேண்டும் என்று ஏங்கினாலோ அப்படி வாழலாம்.

சுமதியின் கொள்ளுப்பாட்டி இந்த ரயில் சடக்குக் கூட்டத்துடன் சேர்ந்துகொண்ட காலத்திலிருந்தே சேமிக்கத் தொடங்கியிருந்தாள். கிடைக்கும் சல்லி காசுகளைக்கூட யாரும் எளிதில் அணுக முடியாதபடி புடவைகளின் பல்வேறு மடிப்புகளுக்குள் பதுக்கி வைத்திருந்தாள். போதாகுறைக்கு எல்லாரிடமும் குறிப்பிட்ட இடைவெளியைத் தக்கவைத்துக் கொண்டே இருந்தாள்.

இளவட்டங்கள் அவளை நெருங்கவுமில்லை; தனித்த பறவையாகிய அவளுக்கு குருவிக்கூட்டின் உஷ்ணம் குறித்தெல்லாம் சந்தமெடுத்து பாடிக்காட்டவுமில்லை. திருமணமானவர்கள் ஆகாதவர்களென எல்லோரது வீடுகளும் அந்தக் குடியிருப்புக்குள் ஒன்றாய் இருந்த சூழல் இளவட்டங்களை அப்படியானதொரு கட்டுக்குள் வைத்திருந்தது. தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவிடும் தருணங்களில் வீட்டில் இருக்கும் பெண்கள் சிலபல ஒழுங்கங்களையும் சம்பிரதாயங்களையும் கொண்டு அனைத்தையும் கூட்டிப்பெருக்கி துடைத்து மொழுகி வைத்திருந்தனர். திருமணமான ஆண்களில் மூத்தவர் நெறிசார்ந்த வழிகாட்டியாக இருந்து இளவட்டங்களின் செல்தளங்களின்மீது கறாரான பார்வையை வைத்துக் கொண்டே இருந்தார்.

kling kling5ஆனால் ரயில்தட வேலைகள் அவர்கள் வாழும் குடியிருப்புக்களைத் தாண்டி நீண்டு போகப் போக ஆண்களுடைய நடவடிக்கைகள் கணிக்க முடியாதபடி மாறிக்கொண்டே இருந்தது. வேலை செய்யும் பகுதியின் அருகிலேயே ரயில் சடக்கு தொழிலாளர்கள் தற்காலிக குடிசைகளைப் போட்டுக் கொண்டனர். ரயில்தடம் அந்த நாட்டை குறுக்குவெட்டாக்கி கடந்து செல்ல, இவர்களும் தங்களது வாழ்விடங்களிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு வேலை தொடரும் புதிய பகுதியில் குடியமர்த்தப் பட்டார்கள். அதிலிருந்துதான் திருமணமானவர்கள் ஆகாதவர்கள் என பாராபட்சமின்றி ஆண்கள் அவளது வழியில் குறுக்கிடத் தொடங்கினார்கள். புதர்களிலிருந்து கவனிக்கவும் கண்களைக் கடந்து அவளால் கூடையை நிரப்ப முடிந்ததில்லை. எவனது உரசலுமின்று சடக்கு சட்டங்கள் இருக்கும் இடத்திற்கும் செல்ல முடிந்ததில்லை. கங்காணியின் நோட்டத்திலிருந்து எந்த ஒரு ஆணும் தப்பிக்கவே முடியாது என்றாலும்கூட, தொடக்கத்தில் கங்காணி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஏதும் செய்யாமலேதான் இருந்தான். சுமதியின் கொள்ளுப்பாட்டி மட்டுமல்லாது மற்ற பெண்களும் ஆண்களின் குறுகுறு பார்வையையும் உரசல்களையும் எதிர்கொண்டபடியே இருந்தனர்.

“நீ வந்ததை நான் பார்க்கவில்லை,” தன்னிடம் முறைகெட்டு நடந்துகொண்டதாகச் சாடிய பெண்ணிடம் ஒருவன் கூறினான்.

“உனக்கு காது கேட்காதா?”

“இவ்வளவு சத்தத்தில் கேட்குமா?”

நகரங்கள், இதர மற்ற குடியிருப்புகளை வெகுதூரம் கடந்து ரயில் தடங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. இன்னது நடக்குமென கணிக்க முடியாத அடர்ந்த காட்டின் நடுவில் ரயில் சடக்குத் தொழிலாளர்கள். அந்த காடு தன்னகத்தே பதுக்கிவைத்திருக்கும் பல அபாயங்கள் குறித்து பெண்கள் கதை கதையாகக் கேட்டு வைத்திருந்தனர். ஒரே கடியில் கடும் விஷத்தைப் பாய்ச்சக் கூடியது, கொஞ்சம் கொஞ்சமாய் கொள்ளும் கோர குரோத பாம்புகள், உடம்பை சுக்குநூறாய் நொறுக்கித் தள்ளும் ராச்சஸ பாம்பு என பாம்புகளில் பல ரகங்களைப் பற்றிய கதைகள் அவற்றில் சில. வேலை நேரங்களில் கிஞ்சிற்றும் கவனத்தை சிதறவிடாமல் இருப்பவர்கள், அவ்வப்போது புதர்களுக்குச் சென்று நோவு கலைக்க மட்டும் எப்போதும் ஜோடியாகவே அல்லது கூட்டமாகவோதான் சென்றார்கள். புலிகள் வரக்கூடும் என்ற அச்சத்தில் இமைகிழிய சுற்றும் முற்றும் நோட்டமிட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை புலிகள்தான் காட்டில் திக்குதிசையற்று சுற்றித் திரியும் கொடூர மிருகம்.

“உங்க கையோ காலோ அக்குவேறாக பீய்த்து கிழித்தெறியப்படுவதை பார்க்க முடியுமா?”, “ஒரு ராட்சசன் உங்களைத் துண்டு துண்டா பீய்த்தெடுப்பதை போல?” அவர்கள் கேள்விகளை அச்சம் கலந்து அடுக்கினார்கள்.

தங்கள் அறிவுக்கெட்டிய எல்லா சக்திகளையும் புலிக்குப் பொருத்தியிருந்தார்கள். அரவமாயிருந்து கண்காணிக்கக்கூடியது, இரக்கமுள்ள பாதுகாவலன், நடுநிலையான நீதிபதி என பலவிதமான சக்திகள்.

“நீ அதை சீண்டவில்லையென்றால் அது உன்னைத் தாக்காது,” இதை அவள் ஒரு மந்திரம் ஜபிப்பதைப் போல் சொன்னாள்.

சில பெண்கள் கூட்டாய் சேர்ந்து தேடி குழவிக்கல் போன்ற ஒன்றை மரத்தின் அடிவாரத்தில் நட்டு வைத்தார்கள். அதைச் சுற்றி சிவப்புத் துணியைச் கட்டி, தலைப்பகுதியில் மூன்று வெள்ளைக் கோடுகளை வளைத்துப்போட்டு, நடுகோட்டில் மஞ்சளும் சிவப்புமாய் புள்ளியிட்டார்கள். வேலைக்குப் போகும் போதும் திரும்ப வரும்போது அந்த எளிய சன்னதியில் வழிப்பட்டார்கள்.  அவர்களில் மிகுந்த பயபக்தியானவர்கள் மட்டும் அதன்முன் தலையை அழுத்தி, “சிவசிவா! எந்த தீங்கும் வராமல் எங்களைக் காப்பாத்துப்பா!” என்றார்கள்.

சுமதியின் கொள்ளுப்பாட்டி, புடவையை உடம்பில் இறுக்கிக் கட்டி, சிவனின் வடிவமாகியிருக்கும் கல் முன் மண்டியிட்டு தனக்குள் மட்டும் மந்திரத்தை முணுமுணுத்துக் கொள்வாள். கடவுளிடம் அப்படியென்ன வரம் கேட்டிருப்பாள் என ஒருவருக்கும் தெரியாது. ஆனால், அதன்பின் அவள் புத்துயிர் பெற்று வேலைக்குப் போவாள். அவளிடம் எப்போது ம் வெளிபட்டுக் கொண்டிருந்த உறுதியே மேலும் மேலும் தொல்லைகளையும் மிக நுட்பமான தாக்குதல்களையும் அவள்மீது கட்டவிழுத்து விட்டது. அவள் செல்லும் பாதிகளில் ஆண்கள் வழிமறித்து நின்றார்கள்; கூடையைக் காலியாக்க முடியாதபடி கற்குவியலுக்கு மேல் உட்கார்ந்து கொண்டார்கள். யார் தடுத்தாலும் ஒருபோதும் அவர்களிடம் பேச்சு கொடுக்க மறுத்தாள்; பொறுமை காத்தாள்; காம வசனங்களை உதிர்த்துவிடாமல் அவர்களாகவே விலகிச் செல்லும்வரை காத்திருந்தாள். அவளைப்போல மற்ற பெண்களும் அவமதிக்கப்பட்டார்கள்; முறைகேடாய் நடத்தப்பட்டார்கள்; ஆனால் அவளுக்கு நடப்பதைப் போல அத்தனை தொடர்ச்சியாக இல்லை.

 “இதெல்லாம் இந்த புடவையால்தான். நீ வேறு எதையாவது உடுத்திக்கொள்ளேன்,” அவளுடன் வேலை செய்யும் மற்ற பெண்கள் அறிவுருத்த முயலும்போதெல்லாம்,

“எனக்கெது பிடித்திருக்கோ அதைதான் அணிய முடியும்,” சுமதியின் கொள்ளுப்பாட்டி விருட்டென பதிலளித்தாள்.

ஆண்கள் மேலும் கெடுபிடி செய்தார்கள்; இரக்கமற்றவர்களாக மாறினார்கள். சூரிய கனலில் சூடாகிய காப்பியையோ அல்லது புட்டிகளில் தண்ணீர்ரையோ கேட்டுக் கேட்டு பெண்களிடம் சதா முரண்டு பிடித்தார்கள்.

“கொஞ்சம் அந்த ரயில் சடக்குக்கு மேல வா. நான் இந்த இரும்பை பூட்டிக்கிட்டு இருக்கேன்ல.”

சில பெண்கள் மட்டும் அவர்களிட்ட கட்டளைகளுக்கு அடிபணிந்தார்கள்; விருப்பமின்றி.

பிறகு சாயங்கால வேளையில் அருகிலிருக்கும் நகரோர தெருக்களில் ஆண்கள் சம்சு குடிக்க சென்றுவிட பெண்கள் குடிசைகளுக்கு வெளியில் உட்கார்ந்துக் கொண்டு தங்களுக்குள்ளேயே ஆளாளுக்குக் கிசுகிசுப்பார்கள்.

“அடிமைகளோட அடிமைகள்!”

“போய் நல்லா குடிச்சிட்டு வருவாங்க,” அவர்களுள் ஒருத்தி சொன்னாள், “அதோட நம்முடைய நிம்மதி போயிடும்.”

“ஏதாவது செய்தாகனும்.”

“இதைப்பற்றி நாம் கங்காணியிடம் முறையிடுவோம்,” சுமதியின் கொள்ளுப்பாட்டி சொல்ல சுற்றியிருந்த மற்றப் பெண்கள் வெடித்துச் சிரித்தனர்.

 “அவனே காலுக்கு இடையில் உள்ள வீக்கத்துக்கு ஈர ஒத்தடம் கிடைக்குமானு எதிர்பார்த்துக் கொண்டிருக்கான்!”

இந்த முறையும் எல்லா பெண்களும் சிரித்தனர்; கொஞ்சம் கசப்பாய்.

“அப்படினா அவனுக்கும் மேல இருக்கும் ஒருத்தனிடம்தான் முறையிடணும்,” சுமதியின் கொள்ளுப்பாட்டி சொன்னாள்.

பெண்களெல்லாம் மீண்டும் கிசுகிசுக்கத் தொடங்கினார்கள்.

“என்னால் புதர் பக்கமே போக முடியல. எப்போதும் என் பின்னால் யாராவது வந்துகிட்டே இருக்காங்க,” ஓர் இளம் பெண்ணின் குரல் வெளிபட்டது.

“புதர்கள் ஒரு தினுசாய் குலுங்குவதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். காற்று வீசினால் புதர் அப்படியொன்றும் அசையாது!”

“நாம் கண்டிப்பாக ஏதாவது செய்தாகனும்,” சுமதியின் கொள்ளுப்பாட்டி தீர்க்கமாய்ப் பேசினாள். “மூத்திரத்த எப்போதும் அடிமடியில சுமந்துகொண்டு இருக்க முடியாது.”

“என்ன செய்யலாமென நீயே சொல்.”

“நாமெல்லாம் ஒரே குழுவாக, ஒன்றாக இருக்கணும்; ஒரே ஆத்மாவாக,” அவள் விளக்கினாள்.

“நான் சொன்னேன்ல. அவ நல்லா யோசிக்கிறவனு. அதுசரி… ஆத்மாவ நாம எங்க போய் பிடிக்கிறது?”

“ஏன் இப்படி உன்னை நீயே கேலி செய்துக்கிற? அப்பதான் மற்றவங்களும் உன்னை கேலி சுலபமா இருக்குமென்றா? அவர்களுக்கு வேண்டிய கேலி கொண்டாட்டத்த உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ள நீயே வழிகாட்டுறயா?”

பெண்கள் எல்லாம் அமைதிக்குள் மூழ்கினார்கள்; தங்களைச் சுற்றி, சூழ்ந்து அச்சுறுத்தும் கும்மிருட்டை ஒவ்வொருவரும் தனித்தனியாய் அவதானித்தார்கள். அவள் இப்படி அழுத்தமாகப் பேசி இதுவரை யாரும் கேட்டதில்லை. மண்ணெண்ணை விளக்கின் ஒளி முதல் முறையாக அவள்மீது படர்ந்தது. அந்த பிரகாசத்தில் அவள் முகம் சிந்தனைகளின் பெருக்கெடுப்பாய் மின்னியது.

“மணிகள்,” அவள் தொடர்ந்தாள். “நாம எல்லாருக்கும் மணிகள் தேவை. சிறுசிறு மணிகள்.  உங்கள் கணுக்கால்களின்மீது அணிந்துகொள்ள.  கோயிலில் இருக்கும் மணிகள் மனிதர்களைக் கோயிலுக்கு அழைப்பதுபோலதான் இதுவும். நாம எல்லாரும் கால்களில் மணி கட்டிக்க வேண்டும்!”

“கணுக்கால் மணிகள்! கால் மணிகள்!”

“அப்போதுதான் நம்மை நாமே கண்டுகொள்ள முடியும்,” தொடர்ந்தாள். “அப்போதுதான் நாம் வருவதும் அவர்களுக்குக் கேட்கும். இடைமறிக்காமல் வழிவிடுவார்கள்.”

“நமக்குள் யாராவது எங்கு போனாலும் நமக்கு கேட்கும்.”

“புதருக்குள்ள போனாலும்.”

“கல் குவித்து வைக்கப்படிருக்கும் இடத்துக்கு போனாலும்.”

“இப்போதே கங்காணிகிட்ட போவோம்!”

“வெள்ளைக்கார துறையிடம் போவோம்! கங்காணி கேட்க மறுக்கலாம் ஆனால் வெள்ளைக்கார துறை கேட்பான்.”

குடிக்கப் போன ஆண்கள் தெரு நெடுக கூச்சலிட்டு கொண்டு வருவதை கேட்டவர்கள் விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டனர்.

“மணிகள்? கொலுசுகள்?” கங்காணி திரும்ப திரும்ப அதையே கூறினான்.

“ஆண்கள் எல்லாரும் முன்ன மாதிரி நடந்துக்கொள்வதில்ல. அவர்கள் நடவடிக்கையை நீ கவனிக்கவில்லையா?” சுமதியின் கொள்ளுப்பாட்டி தொடர்ந்து பேசினாள்.

“நீண்ட நாட்களாக இங்கேயே இருப்பதால் அவர்களது புத்தி மிருகத்தனமா மாறிவிட்டது.”

“அவர்களால் எங்களுடைய புத்தியும் பேதலிச்சி போகனுமா? நாங்கள் கண்டிப்பாக கொலுசு போட்டாகனும். உன்னால் அனுமதிக்க முடியாதென்றால் எங்களை வெள்ளைதுறையிடம் அழைத்து போ.” சுமதியின் கொள்ளுப்பாட்டி கூறினாள்.

“மணிகள்? கொலுசுகள்?” சூரிய கதிர்வீச்சும் குடித்துக் கொண்டிருந்த தேநீரும் வெள்ளைதுறையின் முகத்தைச் சிவப்பாக்கியிருந்தது. “நல்ல ஐடியா! அவர்களைக் கண்காணிக்க வசதியா போச்சி. உச்சிவெயிலில் மெல்லியதாய் கொஞ்சம் சத்தமிருக்கும்!” வெள்ளைதுறை கூறினான்.

 “சரி, வாங்க போகலாம். துவான் ஒத்துக்கொண்டார்.”

“பூனைக்கு மணி கட்டுகிறார்கள்!” புணர்ச்சியைச் தூண்டும் மெல்லிடைகள் பின்வாங்கி நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து சிரித்தபடி கூறினான் வெள்ளைதுறை.

கால்களில் கொலுசு ஏறியதிலிருந்து வேலைகள் அனைத்தும் சீராக நடக்கத் தொடங்கியது. கொலுசின் சத்தம் உடைபடும் கற்களின் சத்தத்துடனும் சம்மட்டி பதம் பார்க்கும் இரும்பு சத்தத்துடனும் ஒன்றுகலந்து கேட்டுக் கொண்டிருந்தது.

 “க்ளிங்-க்ளிங்!”

ஆண்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

“க்ளிங் – க்ளிங் – க்ளிங்!”

புதருக்குள் சென்றிருந்த சகோதரிகளுக்குக் காவலாக பெண்கள் கூடினார்கள்.

“க்ளிங் – க்ளிங் – க்ளிங் – க்ளிங்!”

ஆண் ஒருவனின் காம லீலைகளால் தாக்கப்படவிருந்த பெண்ணை எல்லாரும் சேர்ந்து காப்பாற்றினார்கள்.

“ஓரின புணர்ச்சிக்காரர்கள்!” வெள்ளைதுறை தூரத்திலிருந்தபடி திட்டவட்டமாய் கூறினான்.

நகரம் ஒன்றுக்குள் ரயில்தடம்  க்ளிங் – க்ளிங் சத்தத்துடன் ஊர்ந்து கொண்டிருந்தது. சிறுநகரங்கள், கம்பங்கள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், தரிசு நிலங்கள், மலைச் சரிவுகள் என வழிநெடுக பார்த்த ஒவ்வொன்றையும் தொழிலாளர்கள் காலப்போக்கில் மறந்திருந்தனர். மலைகளைக் கூறுபோட்டு நுழையும்போதும் நிலப்பரப்பு அப்பட்டமாய் தன்னை வெளிகாட்டிக் கொண்டிருக்கும்போதும் பேரானந்த பரவசத்திலும் வியப்பிலும் இறந்தகாலமாய் பின்னகர்ந்துவிட்ட அனைத்தையும் அவர்கள் மறந்திருந்தனர். நிலத்தின் மடியைத் தோண்டியெடுத்து ரயில் தடங்களுக்கு அடித்தளமிடும் வேளைகளில் கருப்பு, பளுப்பு, சிவப்பு என புழுதி அவர்களது கால்கள், கைகள் சமயங்களையும் முகங்களையும் அப்பியிருந்தது. ரயில் தடங்கள் நாட்டைத் திறந்துக் காட்டி பல்வேறு நகரங்களையும் துறைமுகங்களையும் இணைத்துச் செல்வதைக் காணும்போதெல்லாம் தனக்கும் இந்த அற்புதமான வடிவமைப்பில் பங்குள்ளதாக சுமதியின் கொள்ளுப்பாட்டி நினைத்துக் கொண்டாள்.

கடந்துசெல்லும் மரத்தடிகள்தோறும் சிவலிங்க கற்களை அதிகதிகமாய் நட்டுவைப்பதால் குடிநிலப்பரப்பை நோக்கி தாங்களும் மிக விரைவாய் முன்னேறிக் கொண்டிருப்பதைப் பெண்கள் கவனித்தபடி இருந்தார்கள். ஆனால், ஆண்களின் தரப்பில் எண்ணம் வேறாய் முளைவிட்டிருந்தது. தவிர்க்கவே முடியாத கொலுசு சத்தங்கள் அவர்களைச் சிற்றின்ப கற்பனைக்குள்ளும் வெறித்தனங்களுக்குள்ளும் கொண்டு சென்றது. மணி சத்தம் கேட்கும் இடங்களில் சிலையாகினர்.

“க்ளிங் – க்ளிங்!” கொலுசு சத்தத்தை ஆண்கள் பிரதியெடுக்க ஆரம்பித்தார்கள். வார்த்தைகள் பிரதியாக்கிய சத்தங்கள் நாக்கின் வருடலில் வெளிபட்டன.

“க்ளிங் – க்ளிங்!” மற்றவன் சொல்லிக் கொண்டே பெண்களின் அந்தரங்கத்தைத்  தீண்டுவதுபோல் கொலுசு மணிகளைச் சுண்டிவிட்டான்.

“க்ளிங் – க்ளிங்- க்ளிங்!” மணிகளில் ஆரவார ஓசையை வாயில் ஒலியூட்டினான். அவனிடம் வசமாய் சிக்கிக்கொண்ட சகோதரியைக் காப்பாற்ற பெண்கள் அவளருகில் நெறுங்கி வளையமிட்டார்கள்.

கங்காணி பிரம்புக் குச்சியை நெடுகநீட்டி அணிவகுப்பில் நடப்பதுபோல் வந்தான்.  வெள்ளைதுறையிடம் அதிகாரம் பெற்றுவிட்ட பாவனையில் பிரம்பை உக்கிரத்துடன் அசைத்துக் காட்டினான்.

 “என்ன எல்லாரும் குழந்தையாகிவிட்டதா நினைப்பா? போய் வேலை செய்யுங்க!”

“அடுத்து நாம வேலை நிறுத்தம் செய்யனும்,” பகலில் குடிசைக்கு வெளியே பெண்கள் கூடியிருந்த தருணம் சுமதியின் கொள்ளுப்பாட்டி இப்படி கூறினாள்.

“சிறுபிள்ளைத்தனம்! சிறுபிள்ளைத்தனம்! ஒழுங்கா போய் வேலை செய்யுங்க!” பெண்கள் கூடைகளைக் கையில் ஏந்தாமல் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியபோது கங்காணி ஏளனமாய் கத்தினான்.

பாதுகாப்புக்காக அணியப்பட்ட கொலுசுகள் ஆண்களின் காம லீலைகளுக்கு உடந்தையாகின. அன்றும் அதற்கு பின்னரும் தொடர்ந்தாற்போல் அலறல்களும் அதைத் தொடர்ந்து புதர்களிலிருந்து எவனாவது ஒருவன் கால்சட்டை பொத்தான்களைப் போட்டபடி வெளிபடத் தொடங்கினான்.

“நான்தான் முதலில் போனேன். அவதான் எனக்குப் பின்னால் வந்தாள்.” அவன் கூறினான்.

“அவ இன்னும் கொஞ்சம் உள்பக்கமா போக வேண்டியதுதானே! முன்னுக்கே உட்கார்ந்து பின்னழகை உலகத்துக்கே காட்டனும்னு அவளுக்கு ஆசை போல!”

கங்காணியின் அடக்க முயன்ற சிரிப்பு அடர்ந்த மெளனமாய் தேங்கி நின்றது; ஆண்களை நோக்கி கண்ணடித்துக் கொண்டான்.

பெண்கள் கொலுசுகளைத் தொடர்ந்து அணிந்தே வந்தார்கள். ஒரு சகோதரி தாக்கப்படும்போது, ஒட்டுமொத்தப் பெண்களும் ஒன்றாய் சேர்ந்து அவளைச் சுற்றி வட்டமிட்டு கோயில் மணியோசை போல பேரிரைச்சலை உண்டாக்கினார்காள். அதை பரிகாசமாய் உள்வாங்கிக் கொண்ட  ஆண்கள், தங்கள் மனதின் ஆழத்தில் துழையிடும் வேறொரு சத்தத்தைக் கேட்டு ஸ்தம்பித்தார்கள். மாடுகள் அடர்ந்த புற்களை மேய்வது; கரும்பு அறுவடையும் அதன் பலியாடலும், கற்பூரத்தின் தீபப்பிழம்பும் அதன் தூப புகையும், ஒரு குழந்தையின் கபடமற்ற கண்ணீர் என நினைவகத்திலிருந்து பல காட்சிகள் மீண்டு வந்து உளுக்கின. ஆனால் சுயநினைவுக்கு வந்த மறுகணம் அவர்கள் பெண்கள்மீது மீண்டும் மீண்டும் குரூரங்களைச் செலுத்தினர்.

உண்மையில் இந்த ஆண்கள் பெண்களுக்குத் துரோகங்களை மட்டுமே இழைத்து வந்தனர். காரணம், நகருக்குள் நுழையும்போதெல்லாம் பெண்கள் இருக்கும் பக்கம் அவர்கள் தலைகள் தவறியும்கூட திரும்புவதில்லை. பெண்கள் அணிந்திருக்கும் கொலுசுகளை அவமானச் சின்னமாக வெறுத்தொதுக்கினார்கள்.

“க்ளிங் எல்லாரும் வறாங்க! க்ளிங்ஸ் சும்மா பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர எதையும் வாங்க மாட்டாங்க!” கடைக்காரன் உஷார்படுத்தும் தொனியில் கூறினான்.

நகரங்களில் ஒருவன் பொருட்படுத்தப்படுவது அல்லது தூர விரட்டப்படுவது என இரண்டுமேkling kling4 உடை, தோற்றம், பண இருப்பின் அடிப்படியிலேயே நடந்தது. குறிப்பாக பெண்களிடம். ஆனால், இந்த ரயில் சடக்கு தொழிலாளி பெண்கள் எந்த அச்சமும் இன்றி எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்தார்கள். அவர்கள் அணிந்திருக்கும் மூக்கு வளையங்களும் சுருட்டி முடிச்சிடப்பட்ட கொண்டைகளும் அவர்களுக்கு மத்தியில் விந்தையான சகோதரத்துவ தன்மையை உருவாக்கி வைத்திருந்தது. நகரங்களில் எவ்வித நாணமும் இல்லாமல் தேடல் வேட்கையில் சுற்றிக் திரியும் பெண்களை நகர்வாசிகள் இதற்குமுன் பார்த்ததில்லை. கூட்டம் கூட்டமாகக் கடைகளுக்குள் நுழைந்து சட்டிப்பானைகளை நோட்டமிடுவது, அட்டிகைகளையும் வளையல்களையும் பார்த்து மிரட்சியடைவது, துணிக்கடையுள் நுழைந்து மார்பு, இடுப்பைச் சுற்றி துணைகளை படரவிட்டு அவற்றிலிருந்து புடைவைகளும் மேலாடைகளும்  உருபெறக்கூடிய சாத்தியங்களைக் கற்பனை செய்வதென அவர்களது நடவடிக்கைகள் நகர்வாசிகளை என்னவோ செய்தன.

ஒரு சமயம் அவர்கள் சீனக் கடையொன்றினுள் நுழைந்தார்கள். அக்கடையிலிருந்த பழங்காலப் பொருட்களையும் சிற்பங்களையும் பார்த்து வியந்தார்கள். சுமதியின் கொள்ளுப்பாட்டி அங்கு இருத்தி வைக்கப்பட்ட அரசவை சிம்மாசனம் போன்ற நாற்காளி ஒன்றில் உட்கார்ந்தாள்; சகோதரிகளிடம் தன்னை ஒரு ராணிபோல் பாவனை செய்து காட்டினாள். கடைக்காரன் அவளை நோக்கி விரைந்தான்.

“க்ளிங்ஸ் இங்கு உட்காரக் கூடாது!” அவன் கூறினான்.

அவளது தோல்பட்டையைப் பற்றி இழுத்து வெளியில் தள்ள முயன்றான். ஆனால் அவள் அவனை உதறிவிட்டு மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள்.

“எனக்கு எங்க உட்கார பிடிக்குமோ அங்கு உட்காருவேன்!”

சகோதரிகள் கேலியாய் சிரித்தார்கள். அச்சுறுத்தும் வேகத்தில் சீனன் அவளை நோக்கி முன்னேறினான்.

 “க்ளிங்-களுக்கு எங்க உட்காரனும்னு தெரியாது! எங்க பேலணும்னும் தெரியாது!”

அவன் கைகள் வெடுக்கென அவளிடம் நீள, லாவகமாக அதை அறைந்து தள்ளினாள். அவளுடைய சகோதரிகள் எச்சரிக்கையானார்கள்; அருகருகே நெருங்கி நின்று இறுக்கமானார்கள்; செய்வதறியாது நடப்பதை சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது முகம் வெளிர்ந்து சேற்று நிறமானது. அவளை நோக்கி தன்னை தூங்கி எறிந்து தாக்கத் தொடங்கினான்.

“பேசாமல் வந்துவிடு! அவனை பார்க்க பணச் சிலந்திபோல இருக்கிறது!”

 “சிலந்தியோ பாம்போ.. எனக்குக் கவலை இல்லை. அவனது கை ஒரு பெண்மீது படக்கூடாது!”

அவனது கைகள் வீரிட்டு பாய்ந்து அவளது புடவை முந்தானையைப் பிடித்தன.

“க்ளிங்! க்ளிங்! வெங்கங்கெட்டவள். அடுத்தவனின் நாற்காலியிலா உட்காருகிறாய்! வா இப்போது உன் வெட்கத்தைப் பார்க்கலாம்!”

அவன் கொடூரமாகப் புடவையை இழுத்தவிழ்த்து அதன் மடிப்புகளை தளர்த்திக்கொண்டிருந்தான்.

“ஓடு! ஓடு! சீக்கிரம் போய் ஆண்களை அழைத்து வா!” முன்பு பேசிய அதே பெண் இன்னொரு சகோதரியை அவசரப்படுத்தினாள்.

ஒரு பெண் அவசர கதியில் கடையிலிருந்து விருட்டோடினாள்.

“க்ளிங்! க்ளிங்!” என்று முணுமுணுத்தவாறே சீனன் அவளது  புடவையை இன்னும் பலமாக இழுக்க ஆரம்பித்தான். அவளும் விடாமல் எதிர்த்துக் கொண்டே இருந்தாள்; அவமானத்தாலும் அடங்கா கோபத்தாலும் அவளது முகம் இருண்டது.

உதவிக்கு சில ஆண்களை அழைத்துவர சென்றவள் சிலருடன் திரும்பியபோது, சுமதியின் கொள்ளுப்பாட்டி ஒருவழியாக செருப்பை கையில் எடுத்து சீனனை நோக்கி அடிக்கும் நோக்கில் விசிறிக் கொண்டிருந்தாள்; மறு கை புடவையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. மார்பக வளைவுகள் வரை விடாது இழுத்தவிழ்த்தான் சீனன்.

அவளுடன் அதுவரை தொடர்ந்து வந்த ஆண்கள், அதற்கடுத்த அடிகளை பின்வாங்கத் தொடங்கினர். “க்ளிங்! க்ளிங்!” சட்டென அவர்களுள் ஒருவன் கூறினான். “அங்கு மட்டும்தான் உங்களுடைய க்ளிங் க்ளிங், இங்க ஒன்னுமில்ல!”

“எங்களிடம் காட்ட மறுத்ததை இப்போ இந்த அந்நியக்காரனிடன் காட்டு!” மற்றொருவன் கத்தினான்.

“உனக்கு எல்லாம் தெரியுமென்று நினைப்பா!” புடவையை கடைசியாய் ஒருமுறை இழுத்து, அதன் நுனியை அவள் முகத்தில் விட்டெறிந்தான்.

“இனி அடுத்தவங்க பொருள்மீது வந்து உட்காராதே!” கூறியபடி பக்கத்தில் அமர்ந்திருந்த ஆண்களைப் பார்த்து, “உங்க மேலெல்லாம் தண்ணிவாட வீசுது. இங்கிருந்து எழுந்து போங்க!” என்று உறுமினான்.

சுமதியின் கொள்ளுப்பாட்டி புடவையை இழுத்துப் போர்த்திக்கு கொண்டு, சற்று அவகாசம் எடுத்து நாற்காலியிலிருந்து எழுந்து அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

இடுப்புக்கு கீழ் நழுவி விட்டிருந்த புடவை முந்தானையில், அப்போது கொள்ளுப்பாட்டி கொண்டிருந்த காட்சி, இதுவரை ஆண்கள் தேக்கி வைத்திருந்த எல்லாத் தேவைகளையும் துகிலுறித்திருக்கும் என சுமதி நினைத்துக் கொண்டாள். அன்று நடந்த சங்கதி வரிசைபிடித்து இதர தொழிலாளர்களிடத்திலும் சென்று சேர்ந்தது; கங்காணி, வெள்ளைதுறை உட்பட அனைவரிடமும். அதற்குபின், பெண்கள் கால்களில் அணிந்திருந்த மணிகொலுசுகள் ஆண்களை முறைகேடுக்கும் மேலான செயல்களைச் செய்யத் தூண்டின. பெண்கள் மர்மமான முறைகளில் கொடூரங்களை எதிர்கொள்ள நேர்ந்தது; பார்வையாலும், சொற்களாலும், அடாவடி செயல்களாலும் தாக்கப்பட்டார்கள். கேலி, கிண்டலையும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உரசிப் பார்ப்பதையும் கடந்து அவர்களால் வெளியிலெங்குமே நடமாட முடியாமல் போனது. கங்காணி நீண்ட பிரம்பை கையில் வைத்துக் கொண்டு அதிகாரம் காட்டிக் கொண்டிருந்தாலும், அதற்கு இந்த ஆண்கள் அடிபணிகிறார்களா இல்லையா என்பதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.

சுமதியின் கொள்ளுப்பாட்டி எங்கு சென்றாலும் கால் கொழுசு சத்தம் அதிர்ந்து வெளிபடும்படி நடக்க ஆரம்பித்தாள்; ஆனால் புடவையை சுற்றி மேயும் கண்களை அவளால் ஒன்றுமே செய்துவிட முடியவில்லை. பயன்படுத்தி தூர வைத்துவிட்ட பொருள்களில் பிடிவாதமாய் ஒட்டிக்கொண்டிருக்கும் துருவைப் போல ஆண்களின் இழிபேச்சுகள் அவளது புடவை முனைகளிலும் மடிப்புகளிலும் நீங்காமல் தொற்றிக்கொண்டன. சில பெண்களும் அவள்மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள். மேலும் சில பெண்கள் கொலுசுகளைப் பயன்படுத்தி ஆண்களை புதர்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்தார்கள்.

சுமதியின் கொள்ளுப்பாட்டி அவர்களது நடவடிக்கைகளையெல்லாம் பார்த்து சோர்வடைந்து போனாள். தன்னை உள்ளிழுத்துக் கொண்டவள் அதன்பிறகு எந்த பெண்களுடனும் பேசுவதில்லை. வேலை முடிந்து வந்தபிறகும்கூட. சீக்கிரமே தூங்கி, காலையில் எழுந்ததும் நீண்ட நேரம் கற்சிவனிடம் பிரார்த்தனை செய்தாள். வேலையிடத்தில் ஒவ்வொரு அடியையும் அளந்து வைத்தாள்; அதன்மூலம் தேவையற்ற கவன ஈர்ப்பு தன்மீது விழாது என நம்பினாள்; ஆனால் எந்த ஆணும் அவளை அவள் போக்கில் விட்டுவிட தயாராக இல்லை.

மிக விரைவிலேயே அவளது மெளனம் கீழ்படிவதற்கான அச்சானியாக்கப்பட்டது. ஆண்கள் இன்னுமின்னும் இரக்கமின்றி அவள்மீது வன்முறையைக் கையாளத் தொடங்கினார்கள். அவள்மீது இன்னமும் மரியாதை வைத்திருந்த ஒரு சில பெண்கள் சுய சரிவிலிருந்து அவளை மீட்டெடுக்க முயற்சி செய்தார்கள்.

“எங்களுக்கு உன்னைப் போன்ற பெண்தான் வேண்டும், இல்லையென்றால் ஆண்கள் எங்கள்மீது ஏறி மிதித்து போய்விடுவார்கள்,” என்றார்கள்.

அவளது மனதில் ஆழ்துளையில் வேறெதுவோ ஓடிக்கொண்டிருந்தது. வெறித்த சிரிப்பை அவர்களிடம் வீசிவிட்டு மீண்டும் தனக்குள் அடைகாத்துக் கொண்டாள்.

ஒரு நண்பகல் பொழுது, மன அமைதி தேடி சோர்வாய் நிலத்தில் பாதங்களை  ஊன்றி நடந்து கொண்டிருந்தாள். அதற்கு முன் கங்காணி அவளை வழுக்காட்டாயமாக இழுத்து சரிக்க போராடியிருந்தான். சட்டென தன்னை யாரோ பின் தொடர்வதாய் உணர்ந்தாள். நின்று நிதானித்து உற்று கேட்டாள்; மரங்களுக்கு மத்தியில் இலேசான காற்றை உணர்ந்தாள். கொலுசு சத்தத்தை பெரிதாக்கி நடையைத் தொடர்ந்தபோது, தன்னை யாரோ அழைப்பதைக் கேட்டாள்.

“வா! உன் புடவையை உருவுகிறேன்!”

நிலைதடுமாறி ஓடத் தொடங்கினாள். எல்லா திசைகளிலிருந்தும் அந்த சத்தம் அவளை விரட்டியது. பல ஆண்டுகள் கடந்து அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பார்த்த சுமதியின் கொள்ளுப்பாட்டி, உண்மையில் அந்தச் சத்தம் தனக்குள் இருந்து வெளிபட்டதா இல்லை உந்தித்தள்ளும் வேட்கையோடிருந்த ஆணிடமிருந்து வந்ததா என சரியாக தெரிய வில்லை என்று சொன்னாளாம். அந்த நொடியில் அவளுக்குப் புரிந்ததெல்லாம் தானொரு ஆழ்ந்த நிசப்த வெளிக்குள் சிக்கிக்கொண்டது மட்டுமே.

நிலத்திலிருந்து பிதுங்கியிருந்த ராட்சக வேர்களுக்குமேல் அமர்ந்து முச்சு வாங்கிக் கொண்டிருந்தபோது கைக்கெட்டும் தூரத்தில் மிருகங்களின் நடமாட்டம் தென்படத் தொடங்கியது. அந்த மிருகம் பெண்கள் இதற்குமுன் கதைகளில் சொல்லிவந்த வந்த புலியாக அல்லாமல் காலை வெயிலில் வெள்ளைதுறையின் நிழலால அவள்முன் நிலைகுத்தியது; கிட்டத்தட்ட அவனது வேலைநேர உடைக்குள் உருமறைப்பு செய்துகொண்டபடி. சற்றே விசித்திரமான முறையில் உறுமியபடி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அவள் எழுந்து மீண்டும் ஓட முயன்றபோது புடவை தன் இறுப்பை மெய்ப்பித்து அவளை ஊனமாக்கியது; முதல் முறையாக புடவையைச் சபித்தாள்.

 “நில்! நில்! இப்போது உன்னை யாரும் சாப்பிட்டுவிட போவதில்லை!” அவன் மூச்சிறைக்கக் கத்தினான்.

அவள் சட்டென இடுக்கி சரிந்தாள், அவனும் அவள்மீது விழுந்தான்.

அதற்குப் பின் நடத்ததுதான் அவளது சந்ததிகள்தோறும் சடங்காக மாறியது. அவள் ஓடினாள், கொலுசொலி கேட்டது; ஓட்டத்தை நிறுத்தினாள், கொலுசொலி மெளனம் கொண்டது. வசைபாடிக் கொண்டே செடிகளையும் புதர்களையும் வெட்டி சரித்துக் கொண்டு அவன் வரும் சத்தம் அவளுக்குக் கேட்டது. அங்கணம் சட்டென அவளது பயம் முழுவதும் இடம்தெறியாமல் மறைந்தது. ஒவ்வொரு அடியையும் ஆழ ஊன்றினாள். கொலுசொலி மூர்க்கத்தனமாகக் கேட்டது. அவனும் மூர்க்கமாய் செடிகளையும் புதர்களையும் சரிக்கத் தொடங்கினான். அவன் முன்பு சொல்லியிருந்தது சுமதியின் கொள்ளுப்பாட்டி நினைவு கூர்ந்தாள். “பூனைக்கு மணி கட்டுகிறார்கள்,” ஆனால் இந்த முறை அவன்தான் பூனை. அவள் நாளாபக்கமும் ஓட்டமெடுத்தாள். அவனை பேதழிக்கவைக்கும் மணியின் ஓசைதடத்தை குறுக்கும் நெடுக்குமாய் ஆக்கினாள். மூச்சிறைக்க அவனும் அவளைப் பின்தொடர்ந்தான்  உறுமியபடி, சபித்தபடி. விளையாட்டில் சளிப்படைந்தவளாக  கடைசியில் பெருத்த மரவேருக்குப் பின்னாள் தன்னை இருத்திக் கொண்டு கால் கொலுசிலிருந்து மணிகளைக் கழற்றினாள். சில சாக்கு பைகளை முன்னமே திருடியிருந்தாள்; சேமித்து வைத்திருந்த பண டின்னையும் அங்கிருந்து தோண்டியெடுத்தாள். அழகிய வேலைபாடுகள் பொறுந்திய பணப்பையைத் துணிகளுக்குள் திணித்தாள், மின்னிக் கொண்டிருந்த புதிய தார் சாலையைக் கடந்து ஓடினாள்.

மறுநாள் காலை அவள் புதியதொரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தாள். அங்கேயே அவனது கணவனையும் அடையாளம் கண்டு கொண்டாள். சிறிய மளிகைக் கடையைத் திறக்க அவனுக்கு பக்கபலமாய் துணையிருந்தாள். கால்கொலுசைக் கலட்டி பட்டுத் துணியில் சுத்தப்பட்ட பெட்டிக்குள் வைத்தாள். கணவன் இறந்த பிறகு, சிறுநகர் ஒன்றுக்கு இடம்பெயரும்படி வர்புறுத்தப்பட்டதால் மாறிப்போனாள். அப்போதும் அந்த பெட்டியை தன் பார்வை படும் இடத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். கடைசி காலங்களில் அதை அருகில் மேசைமீது கிடத்தி, தன்னுடையைக் கதையை விரும்பிக் கேட்பவர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள். “க்ளிங்ஸ் வருகிறார்கள்! கிலிங்ஸ் வருகிறார்கள்!” என்று சதா சர்வகாலமும் முணுமுணுத்தாள்.

அம்மாவை அவளது அடிமைத் தனத்திலிருந்து  வெளியேறும்படி சொல்லி சொல்லி  களைத்துப் போனாள் சுமதி; எதிர்பார்த்ததுபோல் இல்லை அவள் அம்மா. அன்றிரவு படுத்த மறுகணம் உறங்கிப் போனாள். கொலுசும் அதன் மணிகளும் மென்பட்டு நூலிட்ட பெட்டிக்குள் பத்திரமாய் சேகரித்து வைத்திருந்த தன் நினைவுகளை இரவு முழுவதும் சுமதியை உசுப்பின; மறுநாள் காலை, அவளெதிரில் வெளிபட்டு நிழலாடின.  ஆண்டாண்டுகளாய் அடக்குமுறைக்கு ஆளான மெளனம் ஆரவாரமாய் பேரிரைச்சலுடன் அப்போது வெடித்து வெளிபட்டது.

ஆங்கில மூலம் : கே.எஸ்.மணியம் (kling-kling woman)

3 comments for “க்ளிங் க்ளிங் பெண்

  1. July 2, 2017 at 11:14 pm

    கொள்ளுப்பாட்டியாகவே மாறிபோனேன்…படிக்க படிக்க அத்தனையும் கண்ணெதிரே தோன்றி…ஏதோ ஒர் அடிமனதில் பதுக்கி வைத்திருந்த அதே உமிழக்கூடிய வெறுப்பு மீண்டும் மீண்டும் தோன்றி மறைகிறது…படிக்கும் போதே என் காலில் நானே விரும்பி அணிந்து கொண்ட வெள்ளி கொலுசை பார்த்துக்கொள்கிறேன்…என் உடல் குறித்த பெருமிதம் என் சேலைக்குள் மறைந்திருப்பதை இத்தருணம் உணர்கிறேன்…

  2. July 3, 2017 at 11:17 pm

    மொழி பெயர்ப்பு கதையின் உயிப்பு சிதறாமல் செய்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...