மடங்கின வாக்கில் இருக்கும் பாட்டியின் கைகள் என்னை எட்டிப்பிடிக்கும் வேகத்தில் நீண்டன. நல்லவேளை. அம்மா எப்படி மெனக்கெட்டும் என் தலைமுடி நீண்ட சடை போடும் அளவுக்கு வளராமலேயே இருந்தது. இல்லையென்றால் மரக்கிளையில் மாட்டிக்கொண்ட கொம்புமான் போன்று என் சடை பாட்டியின் கையில் சிக்கியிருக்கும். பாட்டியைக் கொம்புமானைத் துரத்திவந்த சிறுத்தைப் புலியாக நினைத்துப் பார்த்தேன். அந்த வேளையிலும் குபுக்கென்று சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“நில்லு பிள்ள,” என்று கத்தியபடி என்னைத் துரத்தி வந்தாள் பாட்டி. ஆலமரத்தின்கீழ் ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டைப் போன்று அவ்வளவு சுவாரஸ்யமானதாக இருக்கவில்லை அந்தத் துரத்தல்.
பக்கத்துவீட்டின் பின்வாசலில் வெளியேறி மீண்டும் என் வீட்டுக்குள் நுழைந்தேன். என் அறைக்குள் நுழைந்து தாழ்ப்பாள் இட்டேன். கதவைத் தள்ளிப் பார்த்த பாட்டி ஏதோ சொல்லி ஏசினாள். கொஞ்ச நேரத்தில் வெற்றிலை இடிக்கும் சத்தம் வழக்கத்தைவிட வேகமாக கேட்டது. அவளது கோபம் என்னை எட்டாதபடி காதுகளை இறுக்கமாக பொத்திக்கொண்டேன்.
காதுகளைப் பொத்தியிருந்த கைகளை விடுவித்தபோது மீண்டும் பாட்டியின் குரல் கேட்டது. ம்ம்ம்ம்.. என முனகியபடி சில வினாடிகள் தூக்கத்தோடு போராடி கண்களைத் திறந்தேன். ஏதோ ஒரு பய உணர்வில் உடல் தூக்கிப்போட்டது. அடிவயிற்றில் ஏதோ அவஸ்தை.
பக்கத்தில் ஒருக்களித்துப் படுத்திருந்த அம்மாவைப் பார்த்தேன். அவள் உடலில் அசைவு இருந்தது. அவளுக்கும் அந்தக் குரல் கேட்டிருக்கும் போல. மெல்ல எழுந்து அமர்ந்தவள் அவிழ்ந்திருந்த தன் எலிவால் கூந்தலைச் சுருட்டிக்கொண்டே நடந்து போய் விளக்கைப் போட்டாள்.
அறைக்குள் பரவிய திடீர் வெளிச்சம் கண்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. கண்களைச் சுருக்கி அம்மாவைப் பார்த்தேன். நெற்றிக் குங்குமம் வட்டமும், முக்கோணமும் சேர்ந்த புதுவடிவில் இருந்தது.அவள் முகத்திலும் பீதி தெரிந்தது. மஞ்சள் வாசத்தோடு வியர்வை கலந்து புதுவித மணம் வீசியது அவள்மீது. நான் போர்வையை நீக்கிவிட்டு எழுந்தேன்.
மாடிப்படிகளில் இறங்கி நடந்து போகும்போது இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வரவேற்பறையைத் தாண்டியதும் பாட்டியின் அறை வந்தது. ஒரு தயக்கத்துடனேயே உள்ளே நுழைந்தாள் அம்மா. கட்டிலில் உட்கார்ந்து பாட்டியைப் பார்த்தாள்.
மெல்லிய வெளிச்சத்தில் பாட்டியின் வற்றிப்போன நெஞ்சு ஏறி இறங்கிகொண்டிருப்பது தெரிந்தது. அம்மா நிம்மதியானாள்.
“பாட்டி ஏதாச்சும் கனவு கண்டிருக்கும்,” என்றாள் சன்னமாக. அந்தக் குரலில் தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்ளும் பொய் தெரிந்தது.
கட்டிலில் இருந்து எழுந்து கொண்ட அம்மா கொஞ்சம் தள்ளி நின்றவாறு பாட்டியையே பார்த்தாள். அதுவரையில் கைகளைக் கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்றிருந்த நான் அறைக்குள் நுழைந்தேன்.
அந்த அறைக்குள்தான் பாட்டியின் மாபெரும் சாம்ராஜ்யம் அமைந்திருந்தது. தன்னிடமிருந்த ஓரிரு சொற்ப நகைகளையும், வெள்ளிக்கொலுசையும் அம்மா அந்த அறையில் ,பாட்டியின் பொறுப்பில்தான் வைத்திருந்தாள். அந்த அறையின் இளம்பச்சை நிற சுவரை ஒட்டியபடி வாங்கு எனப்படும் கட்டில் வடிவிலான நீண்ட பலகை இருந்தது. அப்பலகையின் மேல் பஞ்சுமெத்தை போடப்பட்டிருந்தது. பச்சை நிறத்தில் கட்டங்களைக் கொண்டிருந்த துணியால் மூடப்பட்டிருந்த அந்த மெத்தைதான் பாட்டியின் சிம்மாசனம். ஒரு மகாராணியின் மிடுக்கோடு இரண்டு கால்களையும் நீட்டியபடி அதில் அமர்ந்திருப்பாள் பாட்டி.
அந்த அறைக்குள் யாரும் நுழைவது அவளுக்குப் பிடிக்காது. அம்மாகூட அந்த அறைக்குள் பயபக்தியோடுதான் நுழைவாள். முப்பத்தெட்டு வயதாகியும் அம்மா பாட்டிக்குக் கட்டுப்பட்டே நடந்தாள். சம்பளத்தைக்கூட முழுமையாக பாட்டியிடம் கொடுத்துவிடுவாள். பாட்டியின் விருப்பப்படியே எல்லாவற்றையும் செய்வாள். ஒரு தடவை பட்டணத்திற்குப் போனபோது ஆசைப்பட்டு கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் வாங்கிவந்தாள். வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த பாட்டியிடம் காட்டினாள். இனி என் தலையும் வாசமாக இருக்கும் என ஆனந்தம் பொங்கியது.
“இந்த எண்ணெய்யைப் பூசினா அந்த வாசனைக்குப் பேனு புடிக்கும், முடியும் கொட்டிப்போவும்….. வேணாம்… வீசிடு. இந்தப் பிள்ளைக்கு வேற முடி சரியா வளரமாட்டுது. உன் அளவுல கால்வாசி கூட இல்ல,” என்று சொல்லிவிட்டு கொட்டைப்பாக்கோடு சேர்ந்து என் ஆனந்தத்தையும் நசுக்கி வாயில் போட்டுக்கொண்டாள் பாட்டி. உடனே வீசிவிடுவதாகச் சொல்லி எடுத்துக்கொண்டு போனாள் அம்மா. முறைத்துக்கொண்டே அம்மாவின் பின்னால் போனேன்.
அம்மாவின் பின்னால் நின்றிருந்த நான் எழுந்து பாட்டியின் அருகே சென்றேன். முன்தினம் இரவில் நடந்த எதையும் உணராது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் பாட்டி. பரவாயில்லை உறங்கட்டும். விழித்திருந்தால் உடல் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் குழந்தை போன்று அழுவாள்.
அந்த ஒற்றைக் கட்டிலில் கால்வாசியே போதுமாயிருந்தது அவளது நறுங்கிப்போன உடலுக்கு. நாலரையடியில் சுருங்கிவிட்ட உடலும், ஒடுங்கியிருந்த முகமும், வாயுமாய் காலம் அவளை வெகுவாய் சிதைத்துப்போட்டிருந்தது. மின்விசிறி காற்றில் அவளது முடி நிலைகொள்ளாமல் படபடத்துக்கொண்டிருந்தது.
இரு வாரங்களுக்கு முன்பு கை நடுக்கத்தோடு குடைச்சலும் ஆரம்பமாகியிருந்தது அவளுக்கு. வியர்த்துப் பிசுபிசுத்துப் போகும் முடியைச் சுயமாக அள்ளியெடுத்து கொண்டையிட முடியாமல் போனது அவளால். இரண்டு நாள் அம்மா கொண்டையிட்டாள். மூன்றாவது நாள் அம்மா எழுந்து வருவதற்குள் பாட்டி தன் தலையணைக்கடியில் மறைத்துவைத்திருந்த இரும்பு கத்திரிக்கோலை எடுத்து சொந்தமாக முடியைக் குட்டையாக கத்தரித்துக்கொண்டாள். சீராக இல்லாமல் மேலும் கீழுமாய் இருந்தது. அந்தக் கோலத்தில் பாட்டி கொஞ்சமாய் எஞ்சியிருந்த தன் ஆளுமையையும் தொலைத்துவிட்டிருந்தாள். அதைப் பார்த்த அம்மாவுக்கு எழுந்த ஆத்திரம், அழுகையாய் மாறியது.
இரண்டு வருடங்களுக்கு முன்புவரையிலும் கூட பாட்டி நன்றாகதான் இருந்தாள். கண்பார்வை வெகுவாய் குறைந்துபோனாலும் இரவில் நாடகம் ஒலியேறும்போது தொலைக்காட்சியின் அருகில் உட்கார்ந்துகொள்வாள். சத்தத்தைக் கூட்டிவைக்கச் சொல்லி நாடகத்தை முழுமையாக கேட்பாள். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு ஒவ்வொருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருப்பாள். மீஹூன் சூப், மீ கோரேங், நாசி கோரேங், பெருமாள் கோயில் பஜ்ஜி என விதவிதமாய் கடை சாப்பாடு சாப்பிட அலைந்தாள்.
ஆனால் ஐந்தாறு மாதங்களாக அவள் தன் அறையைவிட்டு வெளியே வருவதேயில்லை. உடல் நடுக்கம் அதிகரித்திருந்தது. ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாமல் தடுமாறினாள். தலை ஓரிடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டேயிருந்தது. மெத்தையில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்தவாறு வாயில் எதையோ அசை போட்டுக்கொண்டிருப்பாள். சரிவர சாப்பிடுவதும் இல்லை. அறைக்குள் யார் நுழைந்தாலும் அவளுக்குச் சிரிப்பு வரும். ”வந்துட்டியா?” என கேட்டுவிட்டு தன் அருகில் உட்காரும்படி மெத்தையைத் தட்டி காண்பிப்பாள். அந்த அறையில் தன்னோடு எப்போதும் யாராவது இருந்துகொண்டே இருக்கவேண்டும் என எதிர்பார்த்தாள். கடந்த சில தினங்களாக அவளுக்கு மரணபயம் வந்துவிட்டிருந்தது.
“மோய்,” பாட்டியை பாத்ரூமுக்கு கூட்டிட்டு வந்து உக்காரவெய்யி, பாட்டிக்கு இன்னிக்கு தலைக்கு ஊத்தனும்”.
“தலைக்கு ஊத்தனும்….. பெரிய பானையில சுடுதண்ணி போடு,” அம்மாவிடம் கட்டளை இட்டுவிட்டு வானம்பாடியைக் கையில் எடுத்துக்கொண்டு புரட்டினாள் பாட்டி. ஒளிந்து கேட்ட என் மனம் களிப்பில் ஆழ்ந்தது.
வழக்கத்தைவிட சற்று நீண்டநேரம்தான் குளிக்கப்போகிறாள். அந்த அறைக்குள் நுழைந்து மாவு திருடலாம். நினைக்கும்போதே எச்சில் ஊறியது.
அம்மா ஒரு பெரிய எவரிடே மாவு டின்னை வாங்கிவந்து பாட்டியின் அறையில் வைத்திருக்கிறாள். அவ்வளவு பெரிய டின்னை அம்மா வாங்கி வந்தது அதுதான் முதல் தடவை. வழக்கமாக சிறிய பாக்கெட்தான் வாங்கி வருவாள். இரண்டே வாரத்தில் அது முடிந்துவிடும். சம்பளம் போடும்வரை அடுத்த இரு வாரத்திற்கு பால் போடாத கருப்பு காப்பியும், தேநீரும் கலக்கி வைப்பாள். வறுமையின் நிறம் சிவப்பல்ல, கருப்பு என்பதை அந்தப் பால்போடாத காப்பி உணர்த்தும்.
முன்பெல்லாம் மாவு வாங்கிவந்தால் அம்மா சமையலறையில்தான் வைப்பாள். இரண்டு கால் எலி ஒன்று தினம் இரவில் மாவை அள்ளிச் சாப்பிடுவது அவளுக்குத் தெரிந்துவிட்டிருக்கும் போல. அதனால்தான் இந்தப் பெரிய டின்னை பாட்டியின் அறையில் இருந்த பலகை அலமாரியில் வைத்துவிட்டாள். எங்கு வைத்தாலும் என் கண்களிலிருந்து தப்பிவிடுமா என்ன?
பாட்டியின் அறையின் வெளிப்புற சன்னலுக்கு அருகே நின்று கவனித்தேன். ரோஜாப்பூ படம்போட்ட மெல்லிய திரைச்சீலையின் வழியே பாட்டி பொம்மலாட்ட நிழல் உருவமாய் தெரிந்தாள். பாவாடை நாடாவை வாயில் கௌவியபடி உடுத்தியிருந்த கைலியை அவிழ்த்துப் போட்டாள். பிறகு மார்புவரையில் பாவாடையை ஏற்றிக் கட்டிக்கொண்டு கிளம்பினாள்.
பாட்டி குளியலறைக் கதவின் மேல் பாவாடையைக் கழற்றி போடும்வரையில் காத்திருந்து அந்த அறைக்குள் நுழைந்தேன். பாட்டியின் வாங்கில் நின்றபடி, அலமாரியில் கால் வைத்து ஏறி, மாவு டின்னைத் திறந்தேன். இரண்டு கரண்டி மாவை அள்ளி வாயில் போட்டேன். நாக்கில் சுவையாய் கரைந்தது. மேலும் சில கரண்டி அள்ளி போட்டுக்கொண்டு பார்த்தேன். குறைந்திருப்பது தெரிந்துவிடுமோ? டின்னை லேசாகக் குலுக்கிவிட்டு பார்த்தேன். அள்ளிய சுவடே தெரியாமல் மாவு அதே அளவில் இருப்பதாய் தெரிந்தது. டின்னை மூடிவிட்டு இறங்கினேன்.
மீண்டும் குளியலறை பக்கம் சென்றேன். பாட்டி இன்னமும் குளித்துக்கொண்டுதான் இருந்தாள். வாய் நிறைய சிரிப்போடு மீண்டும் அறைக்குள் நுழைந்தேன்.
இடதுபுற சுவரில் அந்தரத்தில் ஒரு நீண்ட கழியை மாட்டி அதில் கூண்டில் கரிச்சான் குருவியையும், மைனாவையும் வளர்த்துவந்தாள் அம்மா. அங்கு அம்மாவின் கைப்பை ஒன்றும் தொங்கி கொண்டிருக்கும். அறையின் மூலையில் கூடு கட்டியிருக்கும் சிட்டுக்குருவிகள் தம் எச்சத்தால் கைப்பையில் கோலம் போட்டிருந்தன. எனக்கு விபரம் தெரிந்து என் அம்மா எங்கும் அந்தக் கைப்பையை எடுத்துக்கொண்டு போனதாய் நினைவில்லை. அப்படி என்னதான் வைத்திருக்கிறாள் என பார்த்துவிடும் ஆவல் நெடுநாளாகவே இருந்தது. ஆனால் இன்றுதான் தீவிரமாகியிருக்கிறது. நாற்காலி போட்டு ஏறி, கைப்பையை இறக்கினேன். பறவைகளின் எச்சம் கையில் பட்டுவிடாமல் கவனமாக ஜிப்பைத் திறந்தேன்.
முதலில் தென்பட்டது ஒரு நோட்டுப்புத்தகம்.
‘உருளைக்கிழங்கு வடை’ என்ற சமையல் குறிப்பை முதல் பக்கத்திலேயே எழுதிவைத்திருந்தாள் அம்மா. எழுதிவைத்து நெடுநாள் ஆகியிருக்கும் போல.
ஒருநாள் கூட உருளைக்கிழங்கு வடையை அம்மா செய்து கொடுத்ததேயில்லையே என தோன்றியது. அடுத்தடுத்த பக்கங்களிலும் விதவிதமான சமையல் குறிப்புகள் இருந்தன.
கைப்பையின் அடுத்த அறையைத் திறந்தேன். பின்னல் செய்வதற்கு வேண்டிய ஊசியும், நூலும், மல்லிகைப்பூ மணம் கொண்ட வாசனைத் திரவிய போத்தல், சுண்டுவிரல் அளவுக்குக் குட்டையாகிப் போயிருந்த மை பென்சிலுக்கு மத்தியில் கரிசலாங்கண்ணி கூந்தல் தைல போத்தலும் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. பாட்டி நாற்காலியில் ஏறி எடுத்துவிட மாட்டாள் என்ற தைரியமோ?
கைப்பைக்குள் வேறெந்த பொருளும் இல்லை. எனக்குச் சலிப்பு தட்டியது. பாட்டியின் அளவுக்கு அம்மாவிடம் ரசனையான, வினோதமான பொருள்கள் எதுவும் இல்லை.பாட்டியிடம் நிறைய விசித்திரமான பொருள்கள் இருக்கும். பார்த்திருக்கிறேன்.
அவள் தலைமாட்டில் ரப்பர் பால் சேகரிக்க பயன்படும் பீங்கான் குவளையும், பழைய உளியும் இருக்கும். அவள் வெற்றிலையையும், பாக்கையும், கொஞ்சம் சுண்ணாம்பையும் அந்தக் குவளையில் போட்டு, உளியின் கைப்பிடியால் இடித்து வாயில் போட்டுக்கொள்வாள். அதைப் பார்த்துவிட்ட பிறகு வேறு ஏதேனும் ஒரு கடினமான பொருளை அந்தக் குவளையில் போட்டு உளியால் இடித்துப்பார்க்கும் ஆசை தோன்றியது.
பலகையோடு ஒட்டிக்கிடந்த அவளின் மெத்தைக்கடியில் சில நெகிழிப்பைகள் நான்காய் மடிக்கப்பட்டு கிடக்கும்.எதற்காக அந்தப் பைகளை மடித்துவைத்திருக்கிறாள் என யோசித்து யோசித்து மண்டைதான் உடையும் எனக்கு.
பாட்டியின் சுருக்குப்பையை ஆராய்ந்தால் சுவாரஸ்யமான ஏதாவது கிடைக்கக்கூடுமோ? நோட்டுப்புத்தகத்தை மூடினேன். உருளைக்கிழங்கு வடையைக் காட்டிலும் எவரிடே மாவு இன்னும் ருசியாக இருக்கக்கூடும். கடைசியாக அறையைவிட்டு வெளியேறும் முன் வாயில் போட்டுக்கொள்ளலாம்.
சுருக்குப் பையைத் திறந்தேன். உள்ளே நகவெட்டி, கோடரி சின்னம் கொண்ட தைலம், ஊக்குகள், சிறிய பேனா கத்தி, சாவிக்கொத்தோடு குரங்கு சுருட்டு இரண்டும் காணக்கிடைத்தன.
“பாட்டிக்கு எதற்கு சுருட்டு?”
திடீரென குளியலறையில் தண்ணீர் சத்தம் நின்றுவிட்டிருந்தது. பாட்டி வந்துவிடுவாள். அவசர அவசரமாய் மாவை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு டின்னை மூடினேன்.
“ஏ பிள்ள,” முதுகுக்குப் பின்னால் பாட்டியின் கர்ஜனை கேட்டதும் நடுங்கிப்போனேன்.
“போச்சு, எல்லாவற்றையும் பார்த்துவிட்டாளோ?” அவளைத் தாண்டி அந்த அறையைவிட்டு எப்படி போவது? அழுகை வந்தது.
பயந்துகொண்டே திரும்பினேன். பாட்டி என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அந்தப் பார்வை பயத்தைத் தந்தது. ஒட்டுமொத்த வில்லத்தனத்தையும் மொத்தமாய் வெளிப்படுத்திய அனல் கக்கும் பார்வை அது.
ஏற்கனவே என்னை அவளுக்குப் பிடிக்காது. அவளுடைய சாம்ராஜ்யத்தைக் கலைத்துப்போட வந்த வாலுப்பெண் என்றே என்னை அவள் கணித்திருக்கக்கூடும். இப்போது மாவும் களவுமாய் வேறு பிடித்துவிட்டாளே, என்ன செய்யப்போகிறாளோ? எச்சிலோடு சேர்ந்து மாவு தொண்டைக்குள் அவஸ்தையாய் இறங்கியது.
“பொம்பளைப் பிள்ளை மாதிரி அடக்கமா இருன்னு சொன்னா கேக்கறியா?” பாட்டி கோபத்தில் கத்திக்கொண்டே பூப்போட்ட பாவாடையை எடுத்தாள். முதுகுப்புறத்தைக் காட்டிக்கொண்டு திரும்பி நின்று உடைமாற்றினாள்.
நான் அலமாரியிலிருந்து குதித்தேன். ஆத்திரமாய் திரும்பிய பாட்டியின் பார்வை சுருக்குப் பையிலிருந்து வெளியே எடுத்துவைத்திருந்த சுருட்டின்மேல் பட்டதும் அவள் முகம் ஆக்ரோஷமானது.
அதற்குமேல் அங்கிருந்தால் ஆபத்து. இரண்டே எட்டில் கதவை நெருங்கிவிட்ட நான் ஓடினேன். அன்றுதான் அவள் என்னைத் துரத்திக்கொண்டு வந்த முதல் நாள்.
எனக்குப் பாட்டியின்மீது வஞ்சம் தோன்றிய நாளும் அதுவே. அம்மாவைப்போன்றே சிறுமியாய் இருக்கும்போதே சமையல், வீட்டுவேலை எல்லாம் கற்றுக்கொண்டு, அடக்கமான பெண்ணாய் நான் இருக்கவேண்டும் என்பது பாட்டியின் எதிர்பார்ப்பு. பாவம் அம்மா. ஒற்றைப்பிள்ளையாய் அவளிடம் மாட்டிக்கொண்டாள். நான் அம்மா மாதிரி அடிமையாகிடக்கூடாது. பாட்டிக்கு எதெல்லாம் பிடிக்காதோ அதையெல்லாம் வீம்புக்காகவேனும் செய்து பார்க்க தோன்றியது. என் சாம்ராஜ்யத்தில் ராணியாக இருக்கும் உரிமை எனக்கும் உண்டு. குறைந்தபட்சம் ஓர் இளவரசியாகவாவது.
நன்கு யோசித்துதான் பெயர் வைத்திருக்கிறார்கள் பாட்டிக்கு. அல்லிராணியாம். மகாராணி மாதிரி எவ்வளவு மிடுக்காக இருக்கிறாள். எல்லாரும் அவள் கட்டளைக்கு கீழ்படிந்தே நடக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளது அதிர்ஷ்ட மருவாகதான் இருக்கும்.
உச்சந்தலையில் முடிகளுக்கிடையில் கொஞ்சம் பெரிய கடலைப் பருப்பு அளவில் இருக்கும் அந்த மரு. ரோகிணி சீயக்காயோடு தேங்காய் எண்ணெய்யின் வாசம் வீசும் முடியை நன்கு அகற்றிப் பார்த்தால்தான் கண்ணுக்குத் தெரியும்.ஒரே ஒரு தடவை அவளது கூந்தல் சிக்குப் பிடித்திருப்பதாய் அம்மாவிடம் காட்டியபோது பார்த்தேன். அந்த மருவைக் கிள்ளினால் அவளுக்கு வலிக்குமா என தெரிந்துகொள்ளும் ஆவல் தோன்றியது. ஆனால் சந்தர்ப்பம்தான் வாய்க்கவில்லை.
அவளுக்கு யாரும் தன்னைத் தொட்டால்கூட பிடிக்காது. காய்ச்சல் கண்ட வேளையில்கூட சுயமாகவே குளித்து, சுயமாகவே உடைமாற்றிக்கொள்வாள். அம்மாவின் மேல் எப்போதும் மஞ்சள் வாசம் வீசும். ஆனால் பாட்டியின் வாசம் இன்னதென்று நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் அறிந்ததில்லை. தன் படுக்கையில் யாரும் உட்கார்ந்தால் கூட அவளுக்குப் பிடிக்காது.
மறுநாள் மீண்டும் பாட்டியின் அறைக்குள் நுழைந்தேன். மெத்தைக்கடியில் பாதி தைத்த நிலையில் இருந்த உள்சட்டை ஒன்றை மறைத்து வைத்திருந்தாள். தன் உள்ளாடைகளை யாரும் பார்ப்பது அவளுக்குப் பிடிக்காது. கொடியில் காயப்போடும்போது கூட அதன்மேல் கைலியைப் போட்டு மறைத்துவிடுவாள்.
தையல்கார அக்காளிடம்கூட கொடுக்காமல் சொந்தமாகத் தைத்துக்கொள்வாள் பாட்டி. நான் உள்ளே அணியும் பனியன் அமைப்பிலான வடிவைக் கொஞ்சம் மாற்றியமைத்தாற்போன்று இருக்கும் உள்சட்டையை ஏன் இந்த வயதில் போய் பாட்டி விரும்பி தைத்து அணிகிறாளோ என சிரிப்பாக இருக்கும். உள்பாவாடைக்கு நாடாவெல்லாம் வைத்து தைத்திருப்பாள் பாட்டி. அந்தச் சுருக்குப் பை கூட அவளே தைத்துக்கொண்டதுதான். ஒருவேளை பக்கத்து வீட்டு தேவி அக்காளின் வீட்டில் இருப்பதுபோல் எங்கள் வீட்டிலும் தையல் இயந்திரம் இருந்திருந்தால் இந்த வெடுக்குக்கிழவி நிச்சயம் சிறந்த தையல்காரியாய் இருந்திருப்பாள். நல்லவேளை அப்படியேதும் நடக்கவில்லை. இல்லையென்றால் அந்தரத்தில் படுக்கை போட்டல்லவா படுத்திருப்பாள்.
பாட்டியின் மெத்தையில் கால்நீட்டி அமர்ந்தேன். வெற்றிலையின் காம்பை மட்டும் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டேன். எனக்குள் செருக்கு கூடியது. பாட்டியின் வயது வந்தால் நானும் இன்னோர் அல்லிராணியாக வேண்டும். இதைவிட பலமடங்கு பெரிய அறையில், வாயில் சுருட்டு பிடித்தபடி பஞ்சுமெத்தையில் கால்நீட்டி அமர்ந்தபடி, எல்லாரையும் ஆட்சி செய்யவேண்டும். பாட்டி அப்போதும் உயிரோடு இருந்தால் அவளையும் அதிகாரம் செய்யவேண்டும்.
பாட்டி தென்னைமரத்து ஓலைகளை கொண்டுவந்து ஐந்தடியில் போடும் சத்தம் கேட்டது .பழையபடி மெத்தைக்கடியில் ஒளித்து வைத்துவிடவேண்டும். உள்சட்டையைக் கையில் எடுத்தேன்.
உள்சட்டையை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தேன். பாட்டியின்மேல் மூத்திரவாசனை வீசியது. அணிந்திருந்த பேம்பர்ஸ் அப்பட்டமாய் தெரிய, எவ்வித பிரக்ஞையும் இன்றி படுத்திருந்தாள். ஆரம்ப காலத்தில் பேம்பர்ஸ் போடும்போதெல்லாம் கூனிக்குறுகிப்போய் கால்களை ஒன்றன்மீது ஒன்றாக போட்டபடி மறைத்துக்கொள்ள முயல்வாள். ஆனாலும் தோற்றுதான் போவாள். இப்போதெல்லாம் அவளாகவே வளைந்து கொடுத்துவிடுகிறாள். மேம்பர்ஸைக் கழற்றிவிட்டு, ஈரத்துணி போட்டு பாட்டியின் உடலைத் துடைத்தாள் அம்மா. பின்னர் ஈரத்தைத் துடைத்துவிட்டு, என் கையிலிருந்த உள்சட்டையை வாங்கி அணிவித்து, வேறு பேம்பர்ஸ் கட்டிவிட்டாள்.
கொஞ்சநேரத்தில் உறங்கிப்போனாள் பாட்டி. அவள் உறக்கமெல்லாம் ஓரிரு மணி நேரம்தான். பின்னர் சத்தம் போட ஆரம்பித்துவிடுவாள். சில நேரங்களில் குழந்தை போன்று சிரிப்பாள். கேட்டால் ”அம்மா வந்தாங்க,” என்பாள். இரவு வேளைகளில் அவளது நினைவுகள் தறிகெட்டு ஓடுவதாய்ச் சொன்னாள் அம்மா. பாட்டி ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் நினைவுகளின் ஊடே பயணித்துக்கொண்டிருக்கிறாளாம். பாட்டியின் காலம் நெருங்கி கொண்டிருப்பதாய் சொன்ன அம்மா சில தினங்களுக்கு வரவேற்பறையிலேயே படுத்துக்கொள்ளப்போகிறேன் என்றாள்.
“நீ போயி படு, நாளைக்கு உனக்கு நலங்கு வெக்கனும்.”
“என் கல்யாணம் வரைக்குமாவது பாட்டி தாங்குவாளா?” படிகளில் ஏறும்போது மனதில் கனம் கூடியிருந்தது. அரைமணி நேரம்கூட ஆகியிருக்காது. பாட்டியின் கதறல் சத்தம் கேட்டது. ஓடினேன்.
அம்மா பாட்டியின் கைகளை எடுத்து தனக்குள் வைத்திருந்தாள்.
“அடிக்கிறாங்கம்மா.. அடிக்கிறாங்கம்மா.. வலிக்குது.. ஐயோ,” என கத்திக்கொண்டிருந்தாள் பாட்டி. பாட்டியின் கைகளை இதமாய் பற்றியிருந்த அம்மாவின் முகத்தில் சிறு கோபத்தைக் கண்டேன்.
“பாட்டியோட கைக்கு என்ன ஆச்சும்மா?” என்றேன்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டு போன மறுநாளே வீட்டுவேலை எதுவும் செய்ய தெரியல, சமையலும் வரலேன்னு கையை அடிச்சி உடைச்சுட்டாங்க, அப்போ வளைஞ்சதுதான்,” என சொன்ன அம்மாவின் முகத்தில் இறுக்கம்.
அன்றொருநாள் “என்னை மாதிரி ஆயிடாதே,” என உச்சக்குரலில் அறைக்கதவுக்கு வெளியே பாட்டி கத்திவிட்டுப் போனது நினைவுக்கு வந்தது.
எதுவும் பேசாது நடந்தேன். பாட்டி தன் மெத்தையைத் தட்டினாள். அவளின் வளைந்த கை என்னை நோக்கி நீள்வதை முதுகுக்குப் பின்னால் உணரமுடிந்தது என்னால்.
உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்
ஓவியம் : தீர்த்த பாதா
எதார்த்த எளிமையான வரிகள். ஓர் ஏழ்மையான குடும்பச்சூழல் பின்னப்பட்டுள்ளது. சில சம்பவங்கள் எனது இளமைக் காலங்களை நினைவுக்கு கொண்டு வந்தன. ஒரு நேரடி வர்ணனையைக் கேட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. இயல்பாக, போகிற போக்கில் கையாட்டிப் போகும் பாதசாரி போல் சொற்கள் அவ்வளவு இயல்பாக அமைந்துள்ளன. பாராட்டுகள் உதயா.
கி. உதயகுமாரி சற்று அமானுடமாய் கதையை நகர்த்துவார். இந்தக் கதையிலும் அது நூலிழை அளவுக்கு எட்டிப்பார்க்கிறது. தொடக்கத்தில் ஏழெட்டு வயதிருக்கும் குழந்தை கதை சொல்லியாக வருகிறாள். அந்தச் சிறுமியின் தொனி வயதுக்கேற்ப பிசிறில்லாமல் ஒலிக்கிறது. சிறுமியின் பாத்திரச் சித்திரம் அழுத்தாமாய்ப் பதிவாகி இருக்கிறது. அதே போல பாட்டியின் பாத்திர வார்ப்பு குழந்தையின் சுட்டித்தனத்துக்கு ஈடாக உருவாக்கம் கண்டிருக்கிறது. பாட்டியும் சிறுமிக்குமான முரண் பாத்திர மோதல்கள் கதையைச் சுவாரஸ்யாமாக்குகிறது. பாட்டியிடமிருந்து அதிகாரத் தோரணையைக் விரும்பித் தனக்குள் செலுத்திக் கொள்ள ஆசைப்படும் குழந்தையின் உளவியலை வாசகன் விரும்பும் படியாக அமைத்துச் செல்கிறார். முதிர்ந்து வயதாகி ஒடுக்கிப்போன பாட்டிக்கு அல்சைமர் (மறதி) நோய்க்கண்டிருப்பதைக் குழந்தை போகிற போக்கில் சொல்வதை வாசகன் உணர்ந்துகொண்டு உவப்படைய வாய்ப்புண்டு. இகதைக்கான மொழிநடை சரியாக் கூடி வந்திருக்கிறது கதையின் இறுதியில் பாட்டி மீதான கதைசொல்லியின் சிறுவயது அச்சம் நீட்சி கண்டிருப்பது பாட்டியின் சித்திரத்தை வலிமையாக்கியிருக்கிறது.
கி. உதயகுமாரியின் எதிர்காலம் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
கி.உதயகுமாரியின் சாம்ராஜ்யம் சிறுகதை நினைவுப் பெட்டகத்தில் படிந்திருந்த பழைய நினைவுகளை பசுமை குன்றாமல் மீள்காட்சியாக வாசகர் முன் கொண்டு வந்து வைத்துள்ளது. வெறும் சம்பவ, நினைவுக் கோவையாக இல்லாமல் அதனூடே வாசகன் துய்த்து மகிழும் வகையில் கதையின் நாயகியான பாட்டியின் செயல்கள் பற்றிய உணர்ச்சிப் பூர்வ பதிவு.
பாட்டி அந்நாளைய சராசரி ‘கொடுக்கி’ பாட்டியின் தன்மையிலாள் போலவே தெரிக்கிறாள் மேலோட்டப் பார்வைக்கு. ஆனால் அந்தப் பாட்டி அவளின் மாமியாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மருமகளாக அமையாததால் பட்ட கொடுமையை தன் மகளும் பேத்தியும் படக்கூடாதே என்ற பாசஉணர்வில் அவர்களை கெட்டிக்காரப் பெண்களாக வளர்த்தெடுப்பதே பாட்டியின் கெடுபிடி அணுகுமுறையின் நோக்கமாக இருந்துள்ளது. இதனை இந்த அளவுக்கு கதை சொல்லி பேத்தி புரிந்து கொண்டாளா? தெரியவில்லை. ஆனாலும் பாட்டியின் ஆளுமையில் லயிக்கிறாள். சிறுமி, முதலில் வெறுப்பைக் காட்டினாலும் பிறகு தானும் ஒரு நாள் அந்த வாங்கில் அமர்ந்து அதிகாரம் செய்ய வேண்டும் என நினைக்கிறாள்.
வாழ்க்கையின் வெவ்வேறு காலக்கட்டத்தில் பெண்களின் உணர்வுகள், செயல்பாடுகள், அவர்கள் நடத்தப்படும் விதம் என்று பல கட்டுரைகளை இந்தச் சிறுகதைக்குள் சிரமமின்றி நிறைவாக, சுவையாக திணித்துக் காட்டியிருப்பது இந்தச் சின்ன வயதில் உதயாவுக்கு இருக்கும் சொல்லாட்சியின் ஆழத்தையும் கற்பனை ஆற்றலின் விசாலத்தையும் மட்டுமே காட்டுகிறது.
கதை சொல்லும் உத்தி பின்னோட்டக் காட்சியாகவும் நிகழ்காலப் பதிவுகளாகவும் உள்ள இக் கதையில் நீண்ட நாட்களாக தீண்டப்படாமல் இருக்கும், அம்மாவின் ‘பாழடைந்த’ கைப்பையைத் திறந்து தன் நெடுநாள் ஆசையைத் தீர்த்துக் கொள்வது, பாட்டிக்கு ஓட்டங்காட்டுவது, பால்மாவைத் திருடுவது போன்ற நம்மில் பலரும் செய்துள்ள செயல்களைச் சொல்லி, கதைச் சொல்லியாக இருக்கும் பேத்தியின் சுட்டித்தனத்தைக் காட்டியிருப்பது சிலவாசகிகள் அந்தப் பேத்தியைத் தானென்றே கற்பனை செய்து கதையினுள் நடமாடச் செய்திருந்தாலும் ஆச்சரியப் படு வதற்கில்லை. அருமையான பாத்திரப்படைப்பு பெயரில்லாத பேத்தி ‘குட்டி அல்லிராணி’. இது பாத்திரப் படைப்பைத் திட்டமிடும் உதயாவின் நேர்த்தியைக் காட்டுகிறது.
தனது அரண்மனைக்குள் யாரும் வருவதை விரும்பாத, தன்சுயத் தேவைகளை தானே கவனித்துக் கொள்வதில் விடாப்பிடியாக இருந்த பாட்டியின் செயல்பாடுகளில் ஏற்படுகின்ற மாற்றம், பிறகு மரணபயம் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் அவளின் செயலில் ஏற்படும் மாற்றம் மிகையில்லாத எதார்த்தம். சிறப்பான சித்தரிப்பு. கதையின் முடிவில் தான் படுத்திருக்கும் மெத்தையைத் தட்டி பேத்தியை அழைக்கும்போது பேத்தி அங்கிருந்து நழுவுவது, பாட்டியின் ஆற்றாமையை எண்ணி வாசகன் மனக்கலக்கமுறச்செய்கிறது, பரிதாபப்படச் செய்கிறது. பேத்தியைப் பார்த்து “ ஏய் பாட்டி என்னவோ சொல்ல வர்றாங்க நின்னு என்னன்னுதான் கேளேன். எதுக்கு ஓடுற! உன்ன பிடிச்சா தின்னுடுவாங்க?” ன்னு ஒரு அதட்டல் போடவே தோன்றுகிறது.
எடுத்த எடுப்பில் நமக்குப் பிடிக்காத சிலரும் நாம் விரும்பாத சில செயல்களும் கூட பார்த்துப் பார்த்து பழகிப்போனதும், நமக்கும் ஏற்புடையதாக, பிடித்ததாக மாறிவிடும் விந்தைகளும் உண்டு. பாட்டிக்கு தன்னைப் பிடிக்காது, தன் செயல்களும் பாட்டிக்குப் பிடிக்காது என்ற நிலையிலும் பாட்டியின் ஆளுமையின் தாக்கம் பேத்தியின் உள்ளத்தில் ஏதோ ஓர் இடத்தில் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து கொண்டு தானும் அந்த சாம்ராஜியத்தில் கோலோச்ச எண்ணம் கொள்வது மனித மன இயல்பு அதையும் அழகாகப் பதிவு செய்துள்ள உதயாவுக்குப் பாராட்டுகள். சபாஷ் உதயா.!
எஸ்.பி.பாமா.