ஞாயித்துக்கெழம முடிஞ்சி திங்கக்கெழம ஆச்சுன்னா எதாச்சும் ஒரு ஏழறையோடதான் ஆரம்பிக்குது என் பொழப்பு. ஊர்லருந்து வந்தமா ஒழுக்கமா வேல செஞ்சி பொழப்பமான்னு இல்லாம ஒனக்கு என்னா குடி வேண்டி கெடக்குது? வாரம் முழுக்க வேல செய்றேல்ல, ஒழுங்கா மூடிகிட்டு தூங்க வேண்டியதுதான, ஊர்ல ஆத்தா, அப்பன் கஸ்டபடறாங்க, தங்கச்சி, தம்பிகள கரையேத்தனும்னு சொல்லிதான வந்த? அதுக்குதான ஒன்ன வேலைக்கி எறக்கி விட்டேன். நீ குடிச்சிபுட்டு எவங்கிட்டயாவது வம்பிழுத்துகிட்டு வந்து நின்னா அதுக்கு நானா பொறுப்பு?
அது இல்லண்ணே, அவன் எங்கம்மாவ தப்பா பேசிட்டாண்னே சும்மா கைய நோங்குன வாக்குல பலமா பட்டுடுச்சி, சும்மா மெரட்டுலாம்னுதான் ஓங்குனேன். அவனா போய் படிக்கட்டுல முட்டிகிட்டு ஒடச்சிகிட்டான்ணே.
இதெல்லாம் இங்க எடுபடாது தம்பி. இது ஒண்ணும் ஊரு கெடயாது. அடிச்சிக்கறதுக்கும் சேந்துக்கறதுக்கும். ரத்தகாயம் ஆச்சு. அவன் கம்ப்ளெயிண்ட் பண்ணான்னா உள்ள போறதத் தவிர வேற வழி கெடயாது. இதுல நான் ஒண்ணும் செய்ய முடியாது. அதுமில்லாம ஒன்ன வேலைக்கி எறக்கி ஆறுமாசத்துக்கு மேல ஆகுது, சம்பளம் கூட கொறச்சி வந்தா ஏஜண்ட கூப்ட்டு கேக்கறதுல ஞாயம் இருக்கு. நீ வம்பிழுத்துட்டு வர்றதுக்கெல்லாம் என்னால பஞ்சாயத்து பண்ண முடியாது.
அண்ணே, எங்க வந்து மன்னிப்பு கேக்கணும்னாலும் கேக்கறேன். அவங்கால்ல விழச்சொன்னாக் கூட விழறேன். எப்டியாச்சும் இதுலருந்து என்ன காப்பாத்தி விட்டுடுண்ணே, சத்தியமா இனி குடிக்கவே மாட்டேன். ஊருல ஏகப்பட்ட கடன் இருக்கு. இங்க வர்றதுக்கு வாங்கிட்டு வந்த கடனே இன்னும் அடைக்கல. கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்கண்ணே.
இப்ப அழுது என்ன பிரயோஜனம். இத கை ஓங்கறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்.
கொஞ்சம் மனசு வைங்கண்ணே.
லே தம்பி. ஒன்ன வேலைக்கி போட்டது மேடம் தோ ஏஜன்சி ஆபிஸ்ல. அது ஒரு பொம்பள ரவுடி. அதுக்கு இந்நேரம் வெவரம் தெரிஞ்சிதுன்னா, டிக்கெட்ட போட்டு பத்தி விட்ரும். ஒன்ன எறக்கின பாவத்துக்கு அந்த பொம்பள முன்னாடி நின்னு நான் பேச்சி வாங்கணும். சும்மா போனாவே டவுசர அவுத்து உட்ரும் அந்த கெழவி. இரு நான் பேசி பாக்கறேன். எதுக்கும் அந்த பையன் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டானான்னு செக் பண்ணி பாரு.
எப்டி எப்டியோ கெஞ்சி பாத்துட்டண்ணே, குடுத்தே தீருவேன்னு நிக்கிறான். காலைலயே கெளம்பி போயிட்டான்.
அவன ஆஃப் பண்ற வழியப்பாரு. மேடம் தோ ஆபிஸ்ல தமிழ்ப்பொண்ணு இருக்கு போன் அடிச்சி என்னா நெலவரம்னு கேக்கறேன். இப்பவே சொல்லிட்டேன் போலீஸ் கேஸ்னா என் பேர இழுத்து விடக்கூடாது. நான் ஏஜண்ட் தொழில் பாக்கறவன்னு எங்கயும் சொல்லிப்புடாத சரியா?
சரிண்ணே. அம்மாணை சொல்லமாட்டேன்.
போனை வைத்துவிட்டு நெற்றியை சுற்றி அரும்பியிருந்த வியர்வைத் துளிகளை வழித்து கடாசியபடி போனை துடைத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் ரெங்கசாமி. காலையிலேயே இவ்வளவு வெக்கையா இருக்கு இன்னிக்கு அடிச்சி ஊத்தப்போவுது. வெளில போகணும்னா குடைய கொண்டு போகனும் என்று நினைத்துக் கொண்டார். ஊரிலிருந்து வந்து பத்து வருடத்திற்கும் மேலாக கட்டிட வேலை, பெயிண்டிங் வேலை, எலக்ட்ரிகல் கம்பெனி என மாறி மாறி வேலை செய்து ஓய்ந்து இப்போது ஏஜண்ட் வேலை பார்க்கிறார். வேலைக்கு ஆள் வேண்டிய நிறுவனங்கள் எம்ப்ளாய்மெண்ட் ஏஜன்சி நிறுவனங்களை அணுகும். ஏஜன்சிகள் இதுபோன்ற இடைத்தரகர் ஆட்களை வைத்து ஊரிலிருந்து ஆட்களை இங்கு பணிபுரிய அழைக்கும். வேலையிலோ, சம்பளத்திலோ, மற்ற இடத்திலோ பிரச்சினை என்றால் ஏஜன்சியும், இடைத்தரகர்களும் சேர்ந்துதான் அதைத் தீர்க்க வேண்டும். அப்படியான ஒரு பிரச்சினைதான் ரெங்கசாமிக்கு வந்திருந்தது. ஒரு ஆளை வேலைக்கு இறக்கினால் இரண்டு பக்கமும் கமிஷன் வைத்து சம்பாதிக்கலாம். நாசூக்காக காசு வந்துபோகும் தொழில்தான். ஊரில் நான்கைந்து இடங்களில் இடம் வாங்கிப் போட்டிருக்கிறார். ஊரில் புதிதாக தொடங்கப்பட்ட பள்ளியில் இரண்டு பங்குகள். வட்டிக்கு பணம் கொடுப்பது, வசூல் செய்ய ஒரு மகன். அவனுக்குத் தனியே ஒரு இரும்புக்கடை மற்றும் இங்கேயே உண்டியல் தொழிலும் உண்டு. ஏகபோக சம்பாத்தியம் அனைத்தும் இந்த ஆள் பிடிக்கும் தொழில் ஆரம்பித்த பிறகுதான். அதற்கு முந்தைய பத்து வருடங்களும் நாய்ப்படாத பாடு. கடந்த ஆறேழு வருடங்களில் வரலாறு காணாத வளர்ச்சி. ஒரு ஆளை இறக்கினால் இந்திய மதிப்புக்கு இருபதாயிரத்துக்கு குறையாத கமிஷன். மாதத்திற்கு எப்படியும் முப்பது பேராவது இழுத்துவிடுவார்.
வருமானம் அதிகம் உள்ள வேலையாய் இருந்தாலும் அதிலும் ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்தது. இறக்கி விட்ட ஆட்களின் சம்பளப்பிரச்சினையிலிருந்து, தங்குமிட பிரச்சினை, வேலை சரிவர செய்யாதது, அடிதடி, குடி, மட்டம் போடுவது என எல்லாவற்றிலும் புகுந்து பேசி சரிபண்ணியாக வேண்டியதிருக்கும். நாள் முழுக்க போனில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். எதாவது ஒரு பிரச்சினை வருவதும் அதைத் தீர்க்க பேசுவதும் தினப்படி நடப்பதுதான். ஒன்றிரண்டு பெரிய பிரச்சினை இப்படி வருவதுண்டு. சமயங்களில் இந்த நாய்ப்பொழப்பு தேவையா என்று நினைத்துக் கொள்வார்.
அப்படிப்பட்ட ஒரு பஞ்சாயத்துடன் இந்த திங்கள் விடிந்திருக்கிறது. ஏதோ ஒரு கம்பெனிக்கு, ஏதோ ஒரு வேலைக்கு தஞ்சாவூர் பக்கமிருந்து இவர் இறக்கி விட்ட ஆள்தான் செந்தில். வேற எதாவது ஏஜன்சில போட்ருந்தாக்கூட பேசிப்பாக்கலாம். மேடம் தோ வை நினைத்தபோதே இஞ்சி சாறு குடித்ததுபோல முகம் மாறியது ரெங்கசாமிக்கு. எழுந்து நேரம் பார்த்தார் எட்டு மணி கூட ஆகவில்லை. முந்தின தினம் உண்டியல் பணத்தை வசூல் செய்து மெயின் பார்ட்டியிடம் சேர்த்துவிட்டு வரவே அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. வந்து குளித்து பற்று எழுதி கணக்கு சரிபார்த்துவிட்டு சாயும்போது அதிகாலை நான்கு மணி. ஒவ்வொரு ஞாயிறும் இது வாடிக்கை.
ஒருக்களித்தபடி தலைக்கு வாகாக கையை மடக்கி வைத்து தூங்கியதில் தோளுக்குக் கீழே கை மரத்துப் போயிருந்தது. இன்னொடு கையால் லேசாக அழுத்தி உணர்வை மீளச்செய்துகொண்டிருந்தார். மேடம் தோ அலுவலகத்தை இன்னும் திறந்திருக்க மாட்டார்கள். அரை மணிநேரத்தில் குளித்து முடித்து வந்தால் ஜான்சியிடம் பேசி நிலவரம் கேட்கலாம் என்று நினைத்தபடி குளிக்கச் சென்றார்.
ஒருகணம் தன் நாடு திரும்பிப் போனால் என்னென்ன நிகழ்வுகள் நடக்கக் கூடும் என்பதை நினைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். காயம் ஆனது மட்டுமே நம் பிழை. அடித்ததில் பிழையிருப்பதாக அவன் கருதவில்லை. இதைக் காரணமாக வைத்து கம்பெனியில் ஊருக்கு ஏற்றிவிடப் பார்ப்பார்கள். போனால் திரும்ப வருவது மிகக் கடினம் என்பதை சொல்லியிருந்தார்கள். ஏன் வரமுடியாமல் போகக்கூட சாத்தியம் உண்டு. வம்படியாக மறுத்துவிட வேண்டும் வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான்.
தலைதுவட்டிக்கொண்டிருந்த போதே அழைத்துவிட்டார்கள்.
“சொல்லுத்தா ஜான்சி, ஏதோ பெரச்சினன்னு” சொன்னாங்க
என்று இழுத்தார் ரெங்கசாமி.
“ஆமா, எங்கத்தான் புடிக்கறிங்களோ இந்தமாதிரி ஆளுங்கள” என்று அலுத்தபடி சொன்னாள். அவளுக்கு எல்லா விவரமும் சொல்லிவிட்டார்கள்.
என்னமா பண்ணலாம்?
ஒண்ணும் பண்ண முடியாது. அந்த பையன் கம்ப்ளெயிண்ட் குடுத்தான்னா, இவன் கண்டிப்பா உள்ள போகவேண்டி வரும். பர்மிட்ட கேன்சல் பண்ணி டிக்கெட்ட போட்டு வைக்கிறேன். அந்தப்பையன ஒடனே ஆபிஸ் வந்து வாங்கிட்டு நேரா ஏர்போர்ட் போயிட சொல்லுங்க. ரெண்டு மூணு மாசம் கழிச்சு பெரச்சன லெவல் பாத்துட்டு வரலாம். என்றாள்.
வேற வழி இல்லயாம்மா?
வேற வழி இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது சார், மேடம் கூப்பிட்டு கண்டிசனா சொல்ல சொல்லிட்டாங்க.
சரிம்மா, அந்தப்பயகிட்ட பேசிட்டு லைனுக்கு வரேன். வச்சிரட்டுமா…. வச்சிடறேன் என்று சொல்லியபடி அணைத்துப் போட்டுக்கொண்டார்.
காலையில் அழைத்த அதே நம்பரை தேடி எடுத்து அழுத்தினார். தொட்டால் நகரும் திரை கொண்ட போனிலிருந்து அழைப்பதில் நிறைய சிக்கல் இருந்தது ரெங்கசாமிக்கு. அதை இயக்கும் சமயத்தில் எல்லாம் அவரின் வாய் ஆங்கில எழுத்தான ஒ வடிவத்திற்கு மாறி பின்பு சரியான வடிவத்துக்கு திரும்பி விடும். அழைப்பு வரும்போது பச்சை பட்டனை இடவலமாக இழுக்கும்போது அதிக விசை கொடுத்து இழுப்பார். புழுவை மீன் கடித்ததும் தூண்டிலை சொடுக்கி இழுப்பது போன்ற வேகத்தில் விசை கொடுப்பார்.
முழுதாக ரிங் போய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எடுக்க மாட்டேங்கறானே என்று சலித்தபடி மறுபடி அதே நம்பரை அழுத்தினார். மறுபடி முழுதாக அடித்து ஓய்ந்து முடித்த அடுத்த நொடி ஜான்சியிடமிருந்து அழைப்பு வந்ததும் “அதுக்குள்ள எதுக்கு இவ அடிக்கறா?” என்று நினைத்தபடி பச்சை நிற கோடை இழுத்து பேசினார்.
“அந்தப்பய போனே எடுக்கலமா” பேசிட்டு லைனுக்கு வரேன் என்ற அவரின் குரலை கேட்காமலே ஜான்சி பேச ஆரம்பித்தாள். “பயல போலீஸ் வந்து கூப்பிட்டு போயிடுச்சாம்” நாம ஒண்ணும் பண்ண முடியாது. “அவனாச்சு, அவன் கேசாச்சு” கம்பெனி பாத்துக்கட்டும் நீங்க தலயிடதீங்க என்றாள்.
என்னம்மா சொல்ற? இப்பதான கொஞ்ச நேரத்துக்கு மின்னாடி பேசினான் என்றார் அதிர்ச்சியுடன்.
“அடி வாங்கினவன் காலைலயே போய் சொல்லிட்டானாம், இப்போ ஆசுபத்திரில இருக்கான், ரெண்டு பேருமே ஒரு கம்பெனி ஆளுங்கதான், சைட்லயே ஏகப்பட்ட முறை சண்ட வந்திருக்குதாம். சூபர்வைசர் போன் பண்ணி சொன்னார். இனிமே நீங்க அதுல போகவேண்டாம். வந்தா இங்க கைகாட்டி விட்டுடுங்க என்றாள்.
சரிம்மா… கொஞ்ச நேரம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா எதாச்சும் செஞ்சிருக்கலாம். ஞாயித்துகெழமயா போச்சு. வெச்சுரட்டுமாம்மா என்று சொல்லி வைத்தார்.பிரச்சினை நம் கையை மீறி சென்று விட்டது குறித்து சற்று ஆசுவாசம் அடைந்தாலும் வேறேதும் புதிதாக கிளம்பி வந்துவிடுமோ என்று யோசித்தபடி அன்றைய வேலைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் ரெங்கசாமி.
டன்லப் தெருவும் ஜாலான் பசார் தெரும் சந்திக்கும் முனையொன்றின் கோப்பிக்கடையில் தே ஓ ஒன்றை பாக்கெட்டில் வாங்கி வழக்கம்போல இரண்டு ஐஸ் துண்டங்களை அதற்குள் போட்டு ஸ்ட்ராவை உள் நுழைத்து எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியேறினான் சரவணன். இளஞ்சூட்டில் தாரே போடச்சொன்னால் மாஸ்டர் சுணங்குவது வாடிக்கையானபோது இவனே இரண்டு ஐஸ் துண்டங்களை எடுத்துப்போட்டுக்கொள்வது வழக்கமானது. கடை மொதலாளியும் கண்டுகொள்வதில்லை. ஐஸ் போடவில்லை என்றால் வாயில் வைக்க முடியாத சூடு. வந்த புதிதில் வாயில் சூடுபட்டபோது பழக்கமான உத்தி இது.
இரண்டு கரங்களில் ஒன்றில் தேள் படமும் இன்னொன்றில் வேல் படமும் பச்சை குத்தியிருந்தான் சரவணன். இடது கையில் தேள் ஒன்று தோள் வழியாக கழுத்தில் ஏறுவது போலவும் வலது கையில் வேல்கம்பு படமும் பச்சை குத்தியிருந்தான். சவரம் செய்யாத அவனது தாடி வாரம் ஒரு திசைக்கு செல்லும்படி அடிக்கடி டிசைனை மாற்றுவான். தலைமுடியின் முன்புறம் மட்டும் மாதம் ஒரு நிறத்தைக் கொடுப்பான் பின்புறம் அணில் வால் போல முடியை நீளமாக விட்டிருந்தான். வலது காதில் ஒரு கடுக்கன். விலை உயர்ந்த இறுக்கமான டீசர்ட், கீழே முக்கால் பாகத்திற்கு டவுசர். பார்க்கும் எவரும் இவன் நல்லவனாக இருக்க முடியாது என்ற எண்ணத்திற்கு வரும்படி தோற்றத்தை மாற்றியிருந்தான். இந்தத் தொழிலில் தோற்றம் மிக முக்கியம் என அவனுக்கு சொல்லப்பட்டிருந்தது.
அலட்சியமாக தெருவில் இறங்கி வாயில் தேநீரை உறிஞ்சியபடி புகிட் திமா ரோடு பக்கம் சென்று கொண்டிருந்தான். டவுசரிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட் மட்டும் மேலெழும் வண்ணம் கீழே அழுத்தி உதட்டில் பொருத்திக்கொண்டான். பாக்கெட்டை மறுபடி உள்ளே வைத்து ஒரு கணம் நின்று சிகரெட்டை பத்திக்கொண்டான். நுரையீரலின் கடைசி அறைவரை புகை செல்லுமாறு நீண்ட இழுப்பு இழுத்து புகையை விட்டபடி ரோச்சார் சிக்னலை அடைந்தபோது சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
எதிர்முனையில் சிக்னலுக்காக நிற்பவன் ஒரே ஊர்க்காரன். பூபாண்டிதான் அது என கூர்ந்து பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டதும் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான். பொதுவாக ஊர்க்காரர்களோடு அதிகம் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை சரவணன். தொழிலில் இறங்கியபிறகு அடியோடு நின்று போனது. பார்க்காமல் சென்றுவிடவேண்டும் என்று நினைத்தவனாய் கடந்துசெல்ல முற்பட்டவனைத் தடுத்துவிட்டு சரவணன் பின்னாலேயே வந்தான் பூபாண்டி.
பாண்டிக்கு சரவணன் மாப்ள முறைவேண்டும். ஆனால் அப்படி அழைப்பது தனக்கு கவுரவக் குறைச்சல் என்று கருதியதால் பெயரிட்டே அழைத்தான் பாண்டி.
எப்டி இருக்க சரவணா?
இருக்கறதுக்கு என்ன கொறச்சல்? வேலை இருக்கு, சட்னு சொல்லு என்றான். சாலையைக் கடப்பவர்கள் இவர்களைக் கடந்து போனார்கள்.
ஓம் மாப்ள செந்தில உள்ள புடிச்சி போட்ருக்காய்ங்க, சேதி தெரியுமா? என்றான்.
அதிர்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் என்னவாம்? என்றான்.
சரக்கப்போட்டு ஒருத்தன்கிட்ட வம்பிழுத்துட்டான். லேசா அடி. ஆறு மாசம்னாய்ங்க, உள்ள போய் ரெண்டு வாரம் ஆச்சே! ஒனக்கு தெரியும்னு நெனச்சேன் என்றான்.
சரி. என்னன்னு விசாரிக்கிறேன். அவசரமா ஒரு வேலை இருக்கு என்றபடி கிளம்பினான்.
”கூட்டி குடுக்கற வேல பாக்கறதுக்கு என்னா அவசரமா பறக்குறான் பாரு” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே சிக்னலைக் கடந்து சென்றான் பாண்டி.
எந்த வம்புக்கும் போகமாட்டானே! அவன் எப்படி சிக்கல் பண்ணிகிட்டான் என்று குழம்பியவாறு மறுபடி வந்த பாதையிலேயே நடக்கத் தொடங்கினான்.
பள்ளிக்காலத்தின் எல்லா கோடை விடுமுறையும் செந்தில் இல்லாமல் கழித்ததில்லை. சொந்த தாய்மானின் மகன். செந்திலுக்கு ஒரு தம்பியும், தங்கையுமுண்டு. எல்லா எளியக்குடும்பங்களைப் போலவே சிறுவயதிலேயே சரவணனுக்குதான் செல்வி என்று பேசி வைத்திருந்தார்கள். இப்போது படியேறினாலே காலை வெட்டும் அளவுக்கு பகை. இருந்தாலும் செந்திலோடு எந்தப்பகையும் இல்லை. சும்மா சுற்றிக்கொண்டிருந்த சரவணனை டெஸ்ட் அடிக்கச்சொல்லி வேலை ஏற்பாடு செய்து இங்கு அழைத்து வந்ததே செந்தில்தான்.
இரவு கலெக்ஷனுக்கு மீசுங் வருவான். அவனிடம் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
கேம்பல் லேனைத் தாண்டும்போது இரண்டு ஆந்திராக்கார பெண்கள் இவனைப் பார்த்ததும் உற்சாகமாக கையசைத்து அழைத்தனர்.
”என்ன என்றான்?”
இவளுக்கு காபி வேணுமாம், என்று அவளை லேசாக தள்ளிவிட்டபடி சிரித்துக்கொண்டே தெலுங்கில் சொன்னாள்.
”மூதேவிங்களா கூட்டம் கூடி கூத்தடிங்கறிங்களா? வேற வேற இடத்துல போய் நில்லுங்க என்று அடிக்க கை ஓங்கியபடி சொன்னான்.
இரண்டு பேரும் சேலைத் தலைப்பை இழுத்தபடி பொய்யாய் பயந்து சிரித்துக்கொண்டே நகர்ந்தனர்.
எத்தன கஸ்டமர் என்றான் சைகையால்
லேதண்டி என்று திரும்பிப்பார்க்காமல் சொல்லியபடி ஆளுக்கொரு திசையில் சென்றனர்.
மீசுங் உடன் பேசுவதை விட பெரிய பாஸ் உடன் பேசினால் எதாவது செய்வார். ஆனால் அந்தாளை இதுவரை பார்த்ததே இல்லை. எல்லாம் போன் வழி ஏவல்கள்தான்.
மீசுங் மொத்தமாக முப்பது கிலோ கூட தேற மாட்டான் ஆனால் முப்பது பேர் வந்தாலும் பேசி சமாளிப்பதற்கான திறமை அவனிடம் இருந்தது. அதனால்தான் ஒரு ஏரியாவை கையில் கொடுத்திருக்கிறார்கள். கிச்சனர் ரோட்டிலிருந்து புக்கிட் திமா ரோடு வரை மீசுங் கட்டுப்பாட்டில் வரும். எவ்வளவு பெரிய தகராறாக இருந்தாலும் பேசியே தீர்த்து வைத்து விடுவான். அவனால் முடியாத காரியம் என்று எதுவும் இல்லை. மீறினால் மேலே தகவல் அனுப்பிவிடுவான் அவர்கள் தீர்த்து விடுவார்கள். அவனுக்குக் கீழே வேலை பார்க்கும் எத்தனையோ ஆட்களில் சரவணன் ஒருத்தன். என்றுமே அந்த பதவியை அவனைப்போன்ற ஏவல்காரனுக்கு கொடுக்க மாட்டார்கள். அதற்கு வெள்ளைத்தோல் வேண்டும். மிகச்சரியாக பத்து மணிக்கு சைக்கிளில் காற்று போல பறந்து கலெக்ஷனை வாங்கிக் கொண்டு போவான். மீசுங்கிடம் பிடித்த விஷயம் நாம் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்ட்க்கொள்ளும் பொறுமைதான். கஸ்டமர் இல்லாத நாட்களில் கலெக்ஷன் தொகை சிறிதாக இருந்தாலும் பரவால்ல நான் பேசிக்கறேன் என்று ஆறுதல் சொல்வான்.
கலெக்ஷன் காசை வாங்கிக்கொண்டு கிளம்பும்போது மீசுங்கிடம் இதைப்பற்றி பேசினான்.
அவன் என் சொந்தக்காரன். எனக்காக நிறைய செய்திருக்கிறான். அவனுக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவ வேண்டியது என் பொறுப்பு. எனக்காக உதவி செய்ய முடியுமா என்று கேட்டான்.
உள்ள இருக்கறான்னா ஜாமிந்தான் எடுக்கணும். ஜாமின் எடுக்கறதுக்கு ரொம்ப செலவாகும் பரவால்லயா? என்று கண் சிமிட்டினான்.
எவ்வளவு ஆகும்?
நான் என்ன அரசாங்கமா? என்ன கேட்டா எனக்கென்ன தெரியும்? என்று சொல்லியபடி பின்புறம் கையை விட்டு கனத்த பர்சிலிருந்து ஒரு அட்டையை எடுத்துக் கொடுத்தான்.
நம்ம லாயர். நாளைக்கு போய் பாத்து கேஸ் என்னன்னு சொல்லு. மூவ் பண்ணி பாத்துட்டு ஜாமீன் தொகை சொல்வாரு. லாயர் பீஸ் அது இதுன்னு கொஞ்சம் செலவாகும். என்ன சொல்றாருன்னு பாரு. அப்புறம் முடிவு பண்ணிக்கலாம் என்றான். சரவணனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சீன மொழியில் நன்றி சொல்லி கைகொடுத்தான்.
நீ ஒழுங்கா லைன பாரு, கலெக்ஷன் சரியில்லன்னு மேலருந்து கம்ப்ளைண்ட் வருது. ஒவ்வொருத்திக்கும் எவ்வளவு செலவு பண்றோம்னு தெரியும்ல? ஹோட்டல்ல தங்க வைக்கிறது, சாப்பாடு, துணிமணி, மேக்கப், அது இதுன்னு ஏகப்பட்ட செலவு. எல்லாம் வாங்கிக்குடுக்கற உனக்கு தெரியும். பாத்து எல்லாத்தையும் கண்ட்ரோல்ல வச்சிக்க. கேஸ் விஷயத்த நாளைக்கு என்னன்னு கேட்டுட்டு வந்து என்கிட்ட சொல்லு என்றபடி சைக்கிளை மிதித்து சென்றுவிட்டான்.
எட்டாவது மாடியில் இருந்தது அந்த அலுவலகம். எலக்ட்ரானிக் கதவுகள். மணியடித்துக் காத்திருந்தான். உள்ளேயிருந்து யாரோ கதவு திறக்கும் பொத்தானை அழுத்தி விட்டிருந்தார்கள். தள்ளி உள்ளே நுழைந்தான்.
அந்த அலுவலகத்தின் எல்லா டேபிள்களிலும் அரை அடி உயரத்திற்கு பேப்பர்கள்
நிறைத்திருந்தன. மிகப்பெரிய மானிட்டரைப் பார்த்தபடி எல்லோரும் எதையோ டைப் அடிப்பதும், தேடிக்கொண்டிருக்கவும் செய்தார்கள். மானிட்டர் ஒவ்வொன்றிலும் குறைந்தது பத்து லேபிள்கள் ஒட்டி அதில் எதோ குறிப்பெழுதி வைத்திருந்தார்கள்.
என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று ஒருத்தி கேட்டாள்.
லாயர் சுந்தரத்தைப் பார்க்கணும் என்றான்.
சோபாவில் அமரச்சொல்லி காத்திருக்கச் சொன்னாள்.
மிக மிக அந்நியமாக இருந்தது. சீக்கிரம் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
மீசுங் கீழ வேலை பாக்கறியா? என்றார் லாயர்.
ஆமா சார்.
எத்தன வருஷமா?
இப்பதான் சார், ஒன்னற வருஷம் இருக்கும்.
சரி டீட்டெயில்ஸ் எழுதிக் குடுத்துட்டு போ. விசாரிச்சிட்டு சொல்றேன். மீதி விவரம் மீசுங் சொல்வான். போகலாம்.
அன்று மீசுங் வர தாமதமானது. அன்றைய கல்கெஷன் காசு வேறு பாக்கெட்டில் முட்டிக்கொண்டு தெரிந்தது. கையை உள்ளே நுழைத்து மறைத்துக்கொண்டான். வழக்கமாக சந்திக்கும் கோப்பிக்கடைக்கு எதிரில் நின்றுகொண்டான். எதற்காகவாவது காத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கும் விஷயமாக மாறிவிட்டது போல உணர்ந்தான். நினைத்தது உடனே நடந்து விட நம்மிடம் அதிகாரம் குவிந்திருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை நமக்கு எப்போதும் வாய்க்கப்போவதில்லை. அண்டிப்பிழைப்பில் காத்திருப்பதுதான் முதல் தகுதி. கேள்வி கேட்பது அறவே கூடாத செயல். இப்படி எண்ணவோட்டம் சென்றுகொண்டிருக்கும்போதே காற்றுபோல வந்தான் மீசுங்.
ஜாமீனில் கொண்டு வரலாம். பிரச்சினையில்லை. தொகை பெரிது. அதனால் உனக்கென்ன லாபம் என்றான் மீசுங்.
சரவணனிடம் பதில் ஒன்றும் இல்லை. ஆனால் சீக்கிரம் வெளியே கூட்டி வந்தால் நல்லது எனத் தோன்றியது. ஜாமீன் தொகை ஐந்து மாத மொத்தச்சம்பளம். காசு போனால் பிரச்சினையில்லை.
ரெண்டு பேர் மேலயும் குற்றம் இருக்கு. சர்வைலன்ஸ் கேமராவில் பதிவாகியிருப்பதாக சொன்னான். பிணைத்தொகை செலுத்தி வெளியே வந்து வழக்கை ஒரு வருடம் இழுத்தடிக்கலாம். அந்த ஒரு வருட காலத்திற்கும் நீதான் அவனுக்கு செலவு செய்ய வேண்டும் என்பதையும் யோசித்து முடிவெடுக்கச் சொல்லி கிளம்பினான் மீசுங்.
திடிரென திரும்பி. வேணும்னா ஒரு லைன அவனுக்கு கொடுத்து ஹான்ஸ் ஓட்டச்சொல். அதிலே இப்போ நிறைய காசு. பெரிய கெடுபிடி ஒண்ணுமில்ல என்றான்.
செந்தில் இதற்கு உடன் படுவானா தெரியாது. அதைப்பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் வெளியே கொண்டு வரவேண்டும் என்பதால். மேற்கொண்டு ஆகவேண்டியதை செய்யலாம் என்றான். உள்ளுக்குள் குழப்பமாக இருந்தது என்றாலும் வேறு வழியில்லை.
குயின்ஸ் டவுன் சிறைக்கு முன்னால் சரவணன் நின்றிருந்தான். அது சிறை போலவே இல்லை. ஆடம்பர ஓட்டல் ஒன்றின் நுழைவாயில் போல இருந்தது. நெடுநேர காத்திருப்புக்குப்பின் லாயருடன் செந்தில் வந்துகொண்டிருந்தான். மொட்டைத்தலையுடன் சிரிப்பை இழந்த முகம். வழக்கமாக எதிர்கொள்ளும் அவனின் சினேகம் நிறைந்த புன்னகையை சிறைக்குள்ளேயே விட்டிருந்தது போல இருந்தது. அருகில் நேருக்கு நேராக பார்க்கும் தருணத்தில் இருவர் கண்களிலும் கண்ணீர் துளிர்த்திருந்தது, எதுவுமே பேசவில்லை. ஆதரவாக தோளைத்தொட்டு புன்னகைக்க முயன்ற சரவணனின் தொடுகையை செந்தில் ஏற்றுகொண்டதாகவே தெரியவில்லை. லாயருடனான பேச்சுக்கு பிறகு டாக்சி பிடித்து அறைக்குத் திரும்பினார்கள். வழியில் ஒன்றுமே பேசவில்லை. ஆளுக்கொரு திசையில் முகத்தைத் திருப்பி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர்.
காலைல ஆறுமணிக்கு ப்ளைட் இருக்கு. ரெண்டு மூணு பேர் வராளுங்க கூட்டிட்டு வரணும். வேலை இருக்கு நான் கெளம்பறேன் என்றபடி சரவணன் ஐம்பது வெள்ளியை செந்தில் மேல்சட்டைப் பாக்கெட்டில் வைத்தான். மறுப்பேதும் சொல்லாமல் நின்றபடி இருந்தவனைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி கிளம்பினான் சரவணன்.
ஏர்போர்ட்டில் இருவரும் காத்திருந்தார்கள். செந்தில் கொஞ்சம்போல இயல்பு நிலைக்குத் திரும்பி ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்திருந்தான். முழுதாக மாற ஒருவாரம் ஆகும். பிறகு வேலையைப் பற்றி பேசிக்கொள்ளலாம். ஒரு தமிழ், ரெண்டு ஆந்திராக்காரிகள் என்று மீசுங் சொல்லியிருந்தான். மூன்று பெண்களாக யாராவது இணைந்து வந்தால் அது நம்ம பார்ட்டிகள் என்று மனதுக்குள் நினைத்தபடி குடிநுழைவு வாயிலிலிருந்து வருபவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
மூன்று பேரில் ஒருத்தி கூட பார்க்கச் சகிக்கவில்லை. ஒருத்தி அதீத குண்டு. ஒருத்தி ஒல்லியான தேகம். ஒருத்தி மட்டும் திரட்சியுடன் அளவெடுத்தது போல இருந்தாள். முகலட்சணம் பொருந்தி வரவில்லை. எவன் இதையெல்லாம் அனுப்பித் தொலைக்கிறானோ என்று நினைத்தபடி டாக்சி ஒன்றில் ஏறி தங்க வேண்டிய ஓட்டலில் இறக்கிவிட்டு சாப்பாடு சொல்லிக் கிளம்பும்போது செந்தில் கேட்டான்.
யார் கூட்டிட்டு வராங்க இவங்கள எல்லாம்?
அதெல்லாம் சொல்ல மாட்டாங்க. ஆள் வந்த ரிசீவ் பண்ணனும், ஹோட்டல்ல விடனும். அப்புறம் எங்க நிக்கணும், என்ன செய்யணும்னு அவளுங்களுக்கே தெரியும்.
”இதுக்கெல்லாம் இங்க கஸ்டமர் இருக்காங்களா?, இந்த மாதிரி பொம்பளைங்க ஊர்லயே கிடைப்பாங்கல்ல, கடல் கடந்து வெளிநாட்டுக்கு வந்தும் கூட ஏன் வெள்ளத்தோலுக்கு இல்லாத மதிப்பு இவங்களுக்கு இருக்கு, என்ன இது கன்றாவியான டேஸ்ட் என்றான்.”
இதில ஒரு சூட்சுமம் உண்டு. எனக்கும் ஆரம்பத்துல இந்த சந்தேகம் இருந்தது. ஆனா நம்ம ஆளுங்களுக்கு படக்குன்னு எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு பார்க்கிற சோலி பிடிக்கறதில்ல. பாவாடைய மெல்ல தூக்கி, பிரா பட்டைய பாக்கும்போதுதான் அவனுக்கு மூடு வருது. வெள்ளத்தோலுக்கு காசு கூட ஆகற சமாச்சாரம். இப்பதான் வந்திருக்க போகப் போகத் தெரியும்.
செந்தில் இதற்கு சிரிக்கவில்லை. வெறுமனே கேட்டுக்கொண்டான். இப்படியெல்லாம் சம்பாதிக்கணுமா?
நியாய தர்மம் பாத்த காலம்லாம் போச்சு செந்திலு. தோ இதே வீராசாமி ரோட்டுல ஒரு கேட்டரிங்ல வேலை செய்வேன். பார்ட் டைம் வேல. காலைல ஏழு டு ஏழு கம்பெனி வேல முடிச்சி எம் ஆர் டி எடுத்து பத்து மணிக்கு ஆரம்பிச்சேன்னா ரெண்டு மணி வரைக்கும் வெங்காயம், தக்காளி வெட்டுவேன். எவ்ளோ குடுப்பானுங்கன்னு நெனைக்கிற? மணிக்கு மூணு வெள்ளி, மாசக்கடைசில சம்பளம் குடுக்க இழுத்தடிச்சி குடுப்பான். மணிக்கணக்கு போட்டுப்பாத்தா கொறையும். ஏன்னு கேக்க முடியாது. என்ன பண்றது காசு தேவை. ஒருவேளை சாப்பாடுதான் சகாயம். அதுவும் மீந்து போனது. ரெண்டு மணி நேரந்தான் தூங்குவேன். பஸ்ல, ட்ரெயின்ல போகும்போது தூங்கறதுதான். நிம்மதியான தூக்கம் கூட இல்லாம உழைச்சேன். என்ன மிஞ்சிச்சி? ஒண்ணுமில்ல. ஒருநாள் புடிச்சிட்டாங்க. ஸ்பெசல் பாஸ் போட்டு குடுத்தாங்க. இப்ப நீ போறியே அதே மாதிரி வாரம் ஒருநாள் போய் கையெழுத்து போட்டு பாஸ் வாங்கிட்டு வரணும். போலீஸ் புடிச்சப்போ உள்ள வச்சிருந்து வெளிய வந்தன்னிக்கு நெறைய குடிச்சிட்டு ரோட்டுல கெடந்தேன். நம்மாளுங்க பாத்துட்டேதான் போனாங்க எவனும் ஏன் என்னன்னு பாக்கல. மீசுங் வந்தான். பழக்கமாச்சி. அவங்கூடவே பொழப்பு ஓடுது. இதுவும் நிரந்தரமில்லன்னு தெரியும். எப்பவேணா என்ன வேணாலும் ஆகலாம்.
தோ அங்க வீல்சேர்ல உக்காந்திருக்கான் பாரு ஒரு சீனன். அவனுக்கு சுத்திலும் எப்பயுமே நாலு பேர் உக்காந்து குடிச்சிட்டு கும்மாளம் அடிப்பாங்க. ஒருநாள் விடாம தினமும் இது நடக்கும். சொந்தமா ரெண்டு கரோக்கி பப்பு வச்சிருக்கான். தினமும் ஓசி குடி குடிக்க எல்லாரும் வந்துருவாங்க. அவன் வண்டிய தள்ளிட்டுப் போறதுக்கு ஆள் வரும். எந்திரிச்சி கூட நிக்க முடியாது. ஆனா பாரு சந்தோஷமா குடிச்சி கூத்தடிச்சிட்டு இருக்கான். இதுவே அவங்கிட்ட காசு இல்லன்னு வையி, எவனாச்சும் அவன் கூட இருப்பானா? பிச்சதான் எடுக்கணும். எல்லாமே காசுதான் செந்திலு, காசு இல்லன்னா இந்த உலகத்துல நீ வேஸ்ட் லக்கேஜ் மாதிரி.
இரண்டாவது வாரம் கையெழுத்துப் போட்டு பாஸ் வாங்கி வந்த அடுத்த நாள் செந்தில் சொன்னான்.
ரூம்லயே அடைஞ்சி கெடக்க போர் அடிக்குது. கேட்டரிங் போலாம்னு இருக்கேன் என்றான்.
கேட்டரிங் சரிப்படாது. எல்லா மொதலாளிங்களும் ஒண்ணுதான். எவனும் லேசுல காசு அவுத்துறமாட்டான். அப்டியே குடுத்தாலும் முழுக்காசு தந்த மொதலாளி இந்த உலகத்துலயே இல்ல.
வேற வேலை ஒண்ணு இருக்கு. நல்ல காசு வரும். தொழில் நேக்கு புரிஞ்சிடுச்சின்னா பூந்து வெளையாடலாம்.
அப்டி பாக்காத. என் வேலை மாதிரி இல்ல அது. நம்மாளுங்களுக்கு எப்பவுமெ ஒரு போதை இருந்துட்டே இருக்கணும். ஹான்ஸ் புகையிலைக்குதான் இப்ப டிமாண்டு. இங்க வந்துட்டு இருந்ததையும் தடை பண்ணிட்டாங்க. நாலுல மூணு பேர் இது இல்லாம எந்த வேலையும் செய்ய மாட்டானுங்க. மீசுங் இருக்கான்ல, அவனுக்குத் தெரிஞ்ச சிங்கு ஒருத்தன் இறக்கறான். ஏரியா பிரிச்சி டெலிவரி குடுக்கணும். பொட்டிக்கு இவ்ளோன்னு கமிஷன் உண்டு. பெரிய இடம், பெரிய காசு. இப்ப இறங்கினா ஆறு மாசத்துல கொஞ்சம் காசு பாக்கலாம். புடிச்சாலும் சிங்கு பாத்துக்கறேன்னு சொல்லிருக்கான்.
ஏன் அத சிங்கே செய்யலாம்ல? நம்மகிட்ட ஏன் குடுக்கறான்?
அவன் மொதலாளி, தெருவில இறங்கி அவன் ஏன் வேலை செய்யணும்/?
அதற்கடுத்த வாரத்திலேயே செந்தில் ஏரியா பிரித்து டெலிவரி செய்வதில் தேர்ந்திருந்தான். எல்லாமே ரகசியமாகத்தான் நடந்தது. அத்தனை வேகத்தை சரவணன் எதிர்பார்த்திருக்கவில்லை. நினைத்ததை விட அதிகமாக மார்க்கெட்டில் இறங்கி செய்திருந்ததை மீசுங்கே பாராட்டியிருந்தான். காசு புழங்கத்தொடங்கியிருந்தது. ஜாமீன் தொகையை ஆறே மாசத்தில் இருவரும் சேர்ந்து அடைத்திருந்தார்கள். தலையிலிருந்து பாம்பு முதுகு வழியாக இறங்குவது போல டாட்டு குத்தியிருந்தான் செந்தில். பணப்புழக்கம் ஆளை அடியோடு மாற்றியிருந்தது. பப்புகளில் இறைத்தது போகவும் கொஞ்சம் மிஞ்சியிருந்தது.
வீட்டில் அரசல் புரசலாக தெரிந்திருந்தது. ஊர்க்காரர்கள் சொல்லியிருப்பார்கள். திடீரென பணம் அதிகம் அனுப்பும்போது அவர்களுக்கே தெரிந்திருக்கும். அம்மா மூக்கை சிந்தினாள். இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லை. தங்கை பிஎஸ்சி கடைசி வருடம். அடுத்த வருடம் தம்பியை இஞ்சினியரிங் சேர்க்க வேண்டும். வேகமாக ஓடிக்கொண்டே இருக்கத் தோன்றியது. எப்போது வேண்டுமானாலும் விபரீதம் நடக்க வாய்ப்பிருக்கிறது அதற்குள் எதாவது செய்து கொஞ்சம் பணம் தேத்திவிடவேண்டும்.
எல்லாம் கொஞ்சநாள்தான். ஹோட்டலில் கஸ்டமர் சோலி பார்த்த காசு தராமல் போதையில் பிரச்சினை பண்ணியிருக்கிறான். ஆந்திராக்காரி சரவணனுக்கு போன் அடித்திருக்கிறாள். போனதும் பிரச்சினை ஆகியிருக்கிறது. காசு இல்லன்னா என்ன மசுருக்குடா சோலி பாக்க கெளம்பரிங்க என்று இவனும், இதுக்கெல்லாம் அம்பது வெள்ளி ஓவர் என்று அவனும்சலம்பினான். பிரச்சினை பெரிதானது. எரிச்சலில் சரவணன் அவனைத் தள்ள போதையில் இருந்தவன் நேராக போய் கண்ணடியில் தலைமுட்டி விழுந்திருக்கிறான்.
மீசுங் வருவதற்கு முன்பாகவே போலீஸ் வந்து சரவணனை கூட்டிச் சென்றுவிட்டார்கள்.
விஷயம் கேள்விப்பட்டதும் செந்தில் நேராகப் போய் மீசுங் முன்பாக நின்றான்.
நளினமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தபடி மீசுங் சொன்னான்.
பிரச்சினையில்லை. வெளில கொண்டு வந்துடலாம். உனக்கு ஆனதை விட பெரிய தொகை ஆகும்னு சொல்றாங்க. பாஸ்கிட்ட பேசி பாதிக்காசு வாங்கிடலாம். மீதிய நீ ஏத்துக்க.
நீ என்ன சொல்ற?
திகைப்பதற்கு ஒன்றுமில்லை. இது ஒரு சுழற்சி. அண்டிப்பிழைப்பதின் இரண்டாவது தகுதி தன்னையே முதலாளியிடத்தில் ஒப்புக்கொடுப்பதுதான் என்று நினைத்தவனாய் நின்றிருந்தான் செந்தில்.