கோலாலம்பூரில் ‘உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு’ 24-25.06.2017 ஆகிய இரு தினங்கள் நடைப்பெற்றது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் உரையாற்றவும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவும் தமிழக திராவிட கழக பேச்சாளர்களும், திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களும் திரளாக வந்திருந்தனர். மாநாடு முடிந்த பிறகு மாநாட்டிற்கு வருகை தந்திருந்த பேச்சாளர்களைக் கொண்டு நாடு முழுவதும் சந்திப்பு கூட்டங்கள் நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். அதன்படி கிள்ளானில் நடந்த கூட்டத்தில் எழுத்தாளரும் பேச்சாளருமான அ.மார்க்ஸ், வே. மதிமாறன், விடுதலை ராசேந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டங்களில் சலசலப்புகளும் கருத்து மோதல்களும் நடந்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிகழ்ச்சியில் மலேசிய தமிழ்த்தேசியவாதிகளும் திராவிட கருத்துகளோடு முரண்பட்ட தனி நபர்களும் இவ்வெதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதை அறிய முடிந்தது. இதன் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டிருந்த மற்ற சில கூட்டங்களும் நிறுத்தப்பட்டன.
மலேசியாவில் இன்றைய நிலையில் திராவிட கருத்துகளையும் பெரியாரையும் விமர்சித்து கடுமையான கருத்துகளை முன்வைக்கும் தரப்பாக மலேசிய தமிழ்த்தேசியவாதிகள் இருக்கின்றனர். சமயவாதிகளை விட இன்று இவர்களே திராவிட கருத்துகளை கடுமையாக எதிர்க்கும் தரப்பாக செயல்படுகின்றனர். ஆகவே வல்லினம், தமிழ்த் தேசியவாதிகள் திராவிட கருத்துகளுக்கு எதிராக வழக்கமாக முன்வைக்கும் விமர்சனங்களையும் கேள்விகளையும் தொகுத்து அ.மார்க்ஸ் அவர்களுக்கு அனுப்பி அவரின் விளக்கங்களைக் கேட்டிருந்தது. அந்த கேள்விகளுக்கு அ.மார்க்ஸ் அவர்கள் கொடுத்த விளக்கங்களை மாற்றமின்றி இங்கே வெளியிடுகிறோம். நன்றி
வல்லினம்
பலமுறை மலேசியா வந்துள்ளீர்கள். பார்த்தவரை மலேசியத் தமிழர்களின் வாழ்வியல் பற்றிய உங்கள் சிந்தனை என்ன?
மலேசியத் தமிழர்கள் யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் உரையாடினாலும் தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்படுகிறோம் என்பது பற்றிய பிரக்ஞையும், வேதனையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு இப்படி எல்லாவற்றிலும் தாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என்கிற வருத்தம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் அரசியல் தலைமைகள் ஊழல் மிக்கவர்களாகவும், தமிழ் மக்களின் நலன் குறித்து உண்மையான அக்கறையற்றவர்களாகவும் உள்ளனர். தமிழ் மக்கள் தாம் வந்த காலத்திலிருந்தே சாதி உணர்வை விட்டு விடவில்லையாயினும் எண்பதுகளுக்குப் பின் அது அதிகரித்திருப்பதையும் அதன் விளைவாக அவர்கள் மத்தியில் பிளவுகள் உருவாகியிருப்பதையும் உணர முடிகிறது.
கிள்ளானின் நடந்த கூட்டத்தில் தமிழ் தேசியவாதிகள் சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்து பல்வேறு கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. உங்கள் விளக்கம் என்ன?
அந்தக் கூட்டத்தில் பேசச் சென்றது நானும் விடுதலை இராசேந்திரனும். மலேசியா முழுவதும் எங்களோடு வந்தவர்கள் இந்தக் கூட்டங்களில் பேசுவதற்கு பிரித்து அனுப்பப்பட்டனர். அப்படி சிலாங்கூர் மாநில நகரங்களில் பேச அனுப்பப்பட்டோர் நானும் இராசேந்திரனும். இதில் இரண்டு கூட்டங்களில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டன. ஒரு கூட்டம் இவர்களின் புகார்களின் அடிப்படையில் நிறுத்தப்பட்டது. மற்றபடி கொலாலம்பூரில் நடந்த இரண்டு நாள் மாநாடு மற்றும் இறுதி நாளில் நடந்த ஒரு காலை நேர நிறைவு அமர்வு, சிலாங்கூர் தவிர இதர மாநிலங்கள் நடந்த சுமார் 15 கூட்டங்களுக்கும் மேற்பட்டவை எல்லாம் எந்தத் தடங்கலும் இன்றி அமைதியாகவும் ஓரளவு நல்ல கூட்டங்களுடனும் நடந்தன. எங்கள் கூட்டங்களில் கலாட்டா செய்தவர்களும் கூட ஒரே குழுவினர்தான். சுமார் பத்து பேர்கள்தான் மூன்று கூட்டங்களும் குழப்பப்படுவதற்குக் காரணமானார்கள். பேசிக் கொண்டிருந்த போது பேச விடாமல் கூச்சல், குழப்பம் இட்டனர். எந்த ஐயத்தையும், கேள்விகளையும், மாற்றுக் கருத்துக்களையும் நீங்கள் பேச்சு முடிந்தவுடன் முன்வைக்கலாம், எங்கள் தரப்புக் கருத்துக்களை நாங்கள் சொல்கிறோம் என நாங்களும் கூட்ட ஏற்பாட்டாளர்களும் பலமுறை வற்புறுத்தியும் குழப்பியவர்கள் அதை ஏற்கவில்லை. அது முழுவதும் எந்த ஜனநாயக அடிப்படையும் அற்ற முரட்டு நடவடிக்கையாகவே இருந்தது. 1930 களில் இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் பாசிஸ்டுகள் இப்படித்தான் கூட்டங்கள் நடுவில் குழப்பம் விளைவித்தார்கள். இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். எனது மற்றும் ராசேந்திரனின் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கப்பதென்றால் அது குறிப்பாக எங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதல்ல. நான் யாரென்றோ, நான் எந்த திராவிட அமைப்பிலும் உறுப்பினன் இல்லை என்றோ அவர்களுக்குத் தெரியாது. நாங்கள் இருவரும் சென்ற இடங்களில்தான் இவர்கள் இருந்தனர். அதனால் எங்கள் கூட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அவ்வளவுதான். மலேசியா முழுவதும் நடந்த மற்ற கூட்டங்கள் சுமுகமாக நடந்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திராவிட இனம் என்ற ஒன்று இருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் என்ன?
நான் எந்த இனக் கோட்பாட்டையும் ஏற்பதில்லை. இன்று தூய மரபினம் என்றெல்லாம் ஏதும் இல்லை. எனது ஆரியக் கூத்து நூலில் அறிஞர் ரொமிலா தப்பாரின் கருத்துக்களின் அடிப்படையில் இதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். மொழி அடிப்படையில் இனங்களைப் பிரிக்க இயலாது. இது திராவிட இனம் என்பதற்கு மட்டுமல்ல தமிழ் இனம் என்பதற்கும் பொருந்தும்.
தாய்மொழியாக தமிழ்ப்பேசுபவர்கள் தங்களைத் தமிழ்இனம் என்று கூறிக்கொள்வதால் சிக்கல் ஏதும் உள்ளதா?
‘தமிழ் இனம்’ எனும் கருத்தாக்கத்தை முன்வைத்து மற்றவர்களை எல்லாம் தமிழர்கள் அல்ல எனச் சொல்கிறவர்கள், அரசியல் பண்ணுகிறவர்கள் எல்லாம் எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறார்கள் என நீங்கள் பார்க்க வேண்டும். அவர்கள் பேசுகிற மொழியை வைத்து அவர்களை அப்படி அடையாளம் காண்பதில்லை. சுமார் 300 அல்லது 400 ஆண்டுகளாக தமிழகத்திலேயே வாழ்ந்து, தமிழை மட்டுமே பேசுகிறவர்கள் எல்லோரையும் அவர்கள் தமிழர்கள் என மொழி அடிப்படையில் ஏற்பதில்லை. மாறாக அவர்கள் தமிழ்ச் சாதிகள் எனவும், தமிழ் அல்லாத சாதிகள் எனவும் பிரிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக நாயுடு, நாயக்கர், அருந்ததியர் என்னும் தலித் பிரிவினர் முதலானோர் இவர்களின் கணக்குப்படி தமிழர்கள் அல்ல. அது மட்டுமல்ல அவர்கள் ‘வந்தேறிகள்’. இந்த நாட்டுக்கு உரிமை இல்லாதவர்கள் என்கிறார்கள். ஒருவன் தமிழ் பேசுகிறான், அல்லது தமிழ் நாட்டில் நீண்ட நாட்களாக இங்கு வசிக்கிறான் என்பதை வைத்து அவர்களைத் தமிழர்கள் எனச் சொல்லாதே என்கிறார்கள். சாதியை வைத்து தமிழனை அடையாளம் காண் என்கின்றனர். இங்கு நான் பெரியாரை எதிர்த்துப் பரப்பப்பட்ட சில வாட்ஸ் அப் செய்திகளையும் பார்த்தேன். அதில் பெயருக்கு அடுத்தபடியாக ‘குலம்’ என அவர்களின் சாதியை ‘அகம்படியர்’ என்பது போல அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். அது அந்த அடிப்படையில் பிறரது உரிமைகளைப் பறிக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது. முன்னூறு ஆண்டுகளாக நீ இங்கே வாழ்ந்தாலும், நீ எங்கிருந்து வந்த போதும் நீ திரும்பிப் போவதற்கு உனக்கு ஒரு நாடு இல்லை என்பதுதான் எதார்த்தமாக இருந்தாலும் நீ வடுகன்; உனக்கு படிக்கும்போது உதவித் தொகை கூடாது; உனக்கு இட ஒதுக்கீடு கூடாது என்றுதான் தமிழ்நாட்டில் சீமான், மணிஅரசன் போன்றோர் சொல்கின்றனர். இங்கே பெரியாரை ஏசி கூட்டங்களில் கலாட்டா செய்தவர்கள் அன்று கைகளில் வைத்திருந்தது பெங்களூரு குணா எழுதிய ஒரு அபத்த நூலின் செராக்ஸ் பிரதி. அதில் அவர் தமிழ்நாட்டில் மலம் அள்ளும் அருந்ததியர் என்னும் தலித் சாதிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்கிறார். அம்பேத்கராம் எனும் மராட்டியருக்கு தமிழ்நாட்டில் ஏன் சிலை வைக்கிறீர்கள் என்கிறார். இது நியாயம் என்றால் சுமார் 200, 300 ஆண்டுகளாக மலேசியா வந்து, தமிழ்நாட்டில் வேர்களை இழந்து, இந்த மண்ணின் உயர்வுக்குப் பாடுபட்ட உங்களை இங்குள்ள மலாய்க்காரர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆகநிறுத்துவதும் சரிதான் என்றல்லவா ஆகிவிடும்? மனிதர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது இப்படியான குறுகிய இனவாதம் எப்படிச் சரியாகும்?
திராவிடம் என்னும் கருத்தாக்கம் கால்டுவெல் ஆய்வின்படி மொழிக்குடும்பத்தைச் சுட்டும் கலைச்சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது பிறகு இனத்தை குறிக்கும் சொல்லாக எப்படி மாறியது?
முதலில் இந்தப் பிரச்சினையை மிகவும் ஆழமாகவும் வரலாற்று ரீதியாகவும் பார்க்க வேண்டும். ‘வல்லினம்’ போன்ற இதழ்கள் நவீன இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதோடு மிகவும் நுணுக்கமாக சென்ற நூற்றாண்டின் சில வரலாற்று நிகழ்வுகளையும் கவனிக்க வேண்டும். இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே பண்பாடுதான் எனக்கூறி, ஆரியம், இந்துமதம், வடமொழி ஆகியவற்றால் அது அடையாளப்படுத்தப்பட்டது. சமஸ்கிருதத்திலிருந்தே அனைத்து மொழிகளும் பிறந்தன, வைதீகம், வேத மதம் என்பவையே இந்தியத் துணைக் கண்டத்தின் அடையாளங்கள். இவற்றிலிருந்தே அனைத்தும் உருவாயின. தமிழ் உட்பட தென்மொழிகள் அனைத்தும் வட மொழியிலிருந்தே பிறந்தன. சமஸ்கிருதம் தேவ பாஷை, தென்மொழிகள் நீசபாஷைகள் என்கிற கருத்துக்கள்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே கோலோச்சின. இது இந்த மொழிகளைப் பேசும் மக்கள் சமூகத்தின் உளவியலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
இந்தப் பின்னணியில்தான் சென்ற இரு நூற்றாண்டுகளில் வெளிப்பட்ட ஒரு மூன்று முக்கிய அறிவியற் கண்டுபிடிப்புகள் இவை அனைத்தும் அறிவுக்குப் புறம்பானவை என்பதை நிறுவின. முதலாவது 1786 ல் நிகழ்ந்தது. வில்லியம் ஜோன்ஸ் என்பார் சமஸ்கிருத மொழிக் குடும்பத்திற்கும் (சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி…) தென்னிந்திய மொழிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாறாக சமஸ்கிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும்தான் நெருக்கமான தொடர்புகள் உண்டு என்பதை நிறுவினார். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கொஞ்சம் கொஞ்சமாக மத்திய ஆசியாவிலிருந்து இந்தியத் துணைக கண்டத்துக்குப் பல நூற்றாண்டுகளாகப் பரவிய மக்கள் திரள் கொணர்ந்த ‘இந்தோ ஐரோப்பிய’ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் சமஸ்கிருதம். அதற்கும் தமிழ் உட்படத் தென்னிந்திய மொழிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் அவர். ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர் ஆகியோர் இதை விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் கூறினர். மிகச் சமீபத்திய மரபணு (genetic) ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன. இப்படி 4000 ஆண்டுகளுக்கு முன் வந்த மக்கட் சமூகத்தின் ஆண்வழி மரபணுக்கள் இங்கு இப்போது வாழ்கிற உயர்சாதி மக்களிடையே உள்ளது நிரூபணமாகியுள்ளது.
1856ல் அறிஞர் கால்டுவெல்லும், அதற்குச் சற்று முன்னதாக சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆங்கில அதிகாரிகளுக்குத் தென்னிந்திய மொழிகளைக் கற்பிப்பதற்கான கல்லூரியில் தலைமைப் பொறுப்பில் இருந்த எல்லிஸ் அவர்களும் இன்னொரு முக்கிய கண்டுபிடிப்பை முன்வைத்தனர். தென்னிந்திய மொழிக் குடும்பம் என்பது முற்றிலும் வட மொழிக் குடும்பத்திலிருந்து வேறுபட்டது. இந்த மொழிகளின் உச்சரிப்புகளின் போது நாக்கு வளைவது உட்படஇரண்டு மொழிக் குடும்பங்களுக்கும் இடையில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. தமிழ், மலையாளாம், தெலுங்கு, கன்னடம், துளு முதலான தென்னிந்திய மொழிகள், ஆப்கானிஸ்தானத்திற்கு அருகில் வழக்கில் உள்ள ப்ராஹூய் முதலானவை எல்லாம் சமஸ்கிருத மொழிக் குடும்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதை இவர்கள் நிறுவினர். இதை ஒட்டி மொழியியல் (linguistics), வரலாற்று மொழியியல் (historical linguistics) முதலான புதிய ஆய்வுத் துறைகள் எல்லாம் உருவாயின. இன்றுவரை இந்த ஆய்வுகள் எதுவும் தவறு என நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மூன்றாவது முக்கியமான கண்டுபிடிப்பு 1930 களில் வெளிவந்த சிந்துவெளிப் பண்பாடு குறித்தது. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தோர் (அதாவது ஆரியர்) வருகைக்கு முன்பே இங்கொரு தனித்துவமான, எல்லாவற்றிலும் ஆரியப் பண்பாட்டுடன் முற்றிலும் வேறுபட்ட ஒரு பண்பாடு நிலவியது என்பது உறுதியானது. சிந்துவெளிச் சில்லுகளில் (seals) உள்ள பொறிப்புகள் இதுவரை யாராலும் வாசிக்கப்படவில்லையாயினும் சிந்துவெளிப் பண்பாடு என்பது இந்தோ ஆரியப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதற்கும், அது தென்னக, தமிழகப் பண்பாடு, மொழிகள் ஆகியவற்றுடனேயே நெருக்கமாக உள்ளது என்பதற்கும் மேலும் மேலும் ஆதாரங்களும், விஞ்ஞானபூர்வமான நிரூபணங்களும் அதிகரித்துக் கொண்டே உள்ளன.
உலக வரலாற்றில் வேறெந்த அறிவியற் கண்டுபிடிப்புகளும் ஏற்படுத்தாத உடனடி அரசியல் விளைவுகளை இவை ஏற்படுத்தின. இதுநாள் வரை தமக்கு ஒரு தனித்துவமான அடையாளம் கிடையாது என உணர வைக்கப்பட்டிருந்த தென்னிந்திய மக்கள் மத்தியில் இது ஒரு புத்தெழுச்சியை உருவாக்கியது. இந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தென்மாநிலங்கள் நான்கும் ஒரே மாகாண நிர்வாகத்தின் கீழ் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. இதுகாறும் கோலோச்சிய ஆரிய மொழி மேலாண்மை என்பது வெறும் மொழி மேலாண்மையாக மட்டும் இல்லாமல் ஆரியம் = பிராமண இந்துமதம் = வருணாசிரமம் என்பதான ஒரு சமன்பாட்டுடன் அது இணைந்திருந்தது. இந்நிலையில் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் தம் அடையாளத்தை இழந்திருந்த தென்னக மக்கள் மத்தியில் ஒரு அரசியல் எழுச்சியை உருவாக்கியது.
உங்களின் இந்தக் கேள்விக்கான பதிலை இந்தப் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும். மொழியையும் இனத்தையும் சமனாக்க முடியாது என்பதை மொழியியல் சார்பான இந்த முதற் கண்டுபிடிப்புகள் தோன்றிய சில காலத்திலேயே இதை முன்வைத்தவர்கள் உணர்ந்தனர். ஆரிய இன மேன்மை பேசிய மாக்ஸ்முல்லர், “நீண்ட தலையும், கூரிய நாசியும் உடைய மொழி என்றெல்லாம் கிடையாது” என்றார். இதன் பொருள் மொழி அடிப்படையில் இனங்களை அடையாளப்படுத்த முடியாது என்பதுதான். இப்போது நான் சொல்லிவந்தவற்றை, இந்த மேற்கோள் உட்பட ,அவற்றின் சரியான வடிவங்களில், உரிய அடிக்குறிப்புகளுடன், என் ‘ஆரியக் கூத்து’ நூலில் காணலாம். அந்நூலின் இப்பகுதி எனது amarx.in தளத்திலும் உள்ளது.
இங்கொன்றைச் சொல்ல விரும்புகிறேன். மொழியையும் இனத்தையும் சமன்படுத்துவது திராவிடத்திற்கு மட்டுமல்ல தமிழ் உட்பட எந்த மொழிக்கும் பொருந்தாது.
திராவிடம் என்பது தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், துளு போன்ற பிறமொழி பேசும் மக்களையும் உள்ளடக்கியிருக்கும் நிலையில், அவர்கள் (தெலுங்கு, மலையாளி, துளு) தங்களை இது நாள்வரை திராவிடர் என்று கூறிக்கொள்வதில்லையே ஏன்?
“இதுநாள்வரை” என நீங்கள் சொல்வது வரலாற்றைப் புரிந்துகொள்ளாமையின் விளைவு. இந்தக் கண்டுபிடிப்புகளை ஒட்டி இன்றைய திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்புகள் இங்கே டி.எம்.நாயர், தியாகராஜ செட்டி, போன்ற “தமிழர் அல்லாதோரால்” உருவாக்கப்பட்ட போதெல்லாம் இன்று திராவிட இயக்கத்துடன் அடையாளம் காணப்படும் தந்தை பெரியார் திராவிட அரசியலில் இல்லை. அவர் காங்கிரஸ்சோடுதான் தன்னை முதலில் அடையாளப்படுத்திக் கொண்டார். நாயர் ஒரு மலையாளி, செட்டியார் ஒரு தெலுங்கர். 1891ல் திராவிட மகாஜன சபையை உருவாக்கிய அயோத்திதாசர் ஒரு தலித். சுமார் முப்பதாண்டுகளுக்குப் பின்புதான் பெரியார் திராவிட இயக்கத்திற்கு வருகிறார். திராவிட இயக்கத்தின் தொடக்க காலத்தில் (1912) அதன் பெயர் “தென்னிந்திய உரிமைக் கழகம்” என்பதுதான். ‘தென்னிந்திய” என்கிற அடையாளத்தை நாம் கவனிக்க வேண்டும். அரசியல் கட்சியாகப் பின் அது ‘நீதிக்கட்சி’ என உருவெடுத்தது. காங்கிரசை விட்டுப் பிரிந்த பெரியார் 1925ல் தனி அமைப்பு தொடங்கிய போது அதற்கு அவர் வைத்த பெயர் ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதுதான். பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான் அவர் குறிக்கோள். சூத்திரர் எனும் அடையாளத்தின் கீழ் பார்ப்பனர் அல்லாத அனைவரும் சுயமரியாதை இழந்து கிடக்கும் நிலையில் அவர்கள் உரிமை பெறுவதற்கு முதற்படியாக அவர்கள் சுய மரியாதை (self respect) கொள்ள வேண்டும் என அவர் கருதினார். நீதிக்கட்சிகுத் தலைமை ஏற்றபின் 1944 ல்தான் ‘திராவிடர் கழகம்’ எனும் பெயரைச் சூட்டினார். ‘தென்னிந்திய’ எனும் அடையாளத்துக்குத் திரும்புவதாகவும், பார்ப்பன எதிர்ப்பை வலியுறுத்துவதாகவும் அவர் அதைச் சூடிக் கொண்டார்.
ஆக ‘திராவிட’ என்கிற அடையாளத்தை முதலில் உயர்த்திப் பிடித்தது பெரியார் அல்ல. அன்றைய அரசியல் சூழல், அதாவது தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்த நிலையில் ‘ஆரிய’ என்பதற்கு எதிராக அப்படியான ஒரு அடையாளம் சூடிக் கொள்ளப்பட்டது அவ்வளவுதான். அடுத்த பத்தாண்டுகளில் இங்கே மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு,கேரளம், ஆந்திரம், கன்னடம் என மொழி வாரி மாநிலங்கள் அமைந்தன. அப்போதும் ஏன் ‘திராவிட’ என்னும் அடையாளத்தைச் சூடிக் கொள்கிறீர்கள் எனக் கேட்டபோது ஒரு குழந்தையைப் போலப் பெரியார் சொன்னது இதுதான்: “எல்லோரும் ஒன்றாக இருந்தபோது அந்த அடையாளம் தேவைப்பட்டது. இப்போது அந்தச் சனியன்கள் ஒழிந்துவிட்டன. ஆனால் ‘தமிழன்’ எனப் பெயரை மாற்றினால் பார்ப்பானும் வந்து ஒட்டிக் கொள்வானே என்பதால்தான் இன்னும் ‘திராவிட’ என்னும் பெயரைச் சூட வேண்டி இருக்கிறது” எனப் பொருள்பட அவர் பதில் அமைந்தது. எனது “பெரியார்” என்னும் நூலில் அவரது அந்தப் பதில் அவரது சொற்களிலேயே உள்ளது. ‘அந்தச் சனியன்கள்’ என மற்ற மொழி மாநிலங்களை அவர் சொன்னதையும், தமிழ் என்னும் அடையாளத்தில் பார்ப்பானும் வந்து ஒட்டிக் கொள்வானே என அவர் கவலைப் பட்டதையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு முன்னும் பின்னும் பெரியாரின் அரசியல் முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு அரசியலாகத்தான் இருந்தது. பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்தபோதும், கலைஞரிடமிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த போதும் ஏன் இந்த ‘திராவிடம்’ எனும் பெயர் ஒட்டிக் கொண்டது என நீங்கள் கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை. இந்திய வரலாற்றில் கட்சிகளின் உடைவு வாரலாற்றைப் பார்த்தவர்களுக்கு இது புரியும். தாங்கள்தான் அந்தப் பாரம்பரியத்திற்கு உரியவர்கள் என்பதை நிறுவும் பொருட்டு முந்தைய கட்சியின் அதே பெயரைப் பிரிந்த கட்சியும் சூடிக் கொள்வது இங்கு வழக்கமாகி விட்டது. அந்தப் பின்னணியில்தான் இங்கு இன்னும் ‘திராவிடம்’ என்பது பெயரில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
மற்ற மாநிலங்கள் திராவிடம் என்கிற கருத்தாக்கத்தைச் சுமக்கவில்லையே என்பது அவரவர்கள் அரசியல் சூழல்களைப் பொருத்தது. ஒன்றை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் இந்தியத் துணைக் கண்டத்தில் வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. வட மாநிலங்களில் சத்திரியர், வைசியர் உண்டு. இங்கு கிடையாது. அங்கே பார்ப்பனர் 10 சதம் வரை உள்ளனர் இங்கே 2சதம்தான். ஆனால் இங்கே சத்திரியர், வைசியர் இல்லாத சூழலில் இரண்டு சத பார்ப்பனர்கள் செலுத்தும் அதிகாரமும் ஆக்ரமிப்பும் பல மடங்கு அதிகம். இரண்டு மாதங்களுக்கு முன் இங்கே பெரியளவில் கவனப்படுத்தப்பட்ட ஒன்று குறிப்பிடத் தக்கது. மாட்டுக் கறி உண்ணுவது குற்றம் என்பதாக ஒரு கருத்து, பாஜக ஆட்சியின் பின்னணியில் மேலுக்கு வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்து நின்றது தென் மாநிலங்கள்தான், ஆதாவது திராவிட மொழிகள் பேசிய மாநிலங்கள்தான். இன்றுவரை பா.ஜ.க காலூன்ற முடியாத பகுதிகளாகவும் தென் மாநிலங்களே ஒப்பீட்டளவில் உள்ளன. இந்த வகையில் சில மாதங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் “மீண்டும் திராவிட அடையாளம்” என்பது குறித்து பெரிய அளவில் விவாதங்கள் ஏற்பட்டன.
இந்த அரசியல் விளக்கங்கள் எல்லாம் உங்களுக்கு எந்த அளவு பொருந்தும் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழக அரசியலின் பின்னணியில் பெரியாரை எதிர்க்கும் உங்களுக்கு இப்படியெல்லாமும், இதையெல்லாமும் சொல்ல வேண்டி இருக்கிறது.
தமிழ்நாட்டு அரசியலுக்கு அதிக உரம் சேர்த்த அமைப்பாக ‘திராவிடஇயக்கம்’ இருந்திருக்கிறது. ஆனால் அந்த இயக்கம் தமிழ்மக்களை மூலதனமாக்கி தமிழகத்தில் வாழும் தெலுங்கு, மலையாளிகளுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது ஏற்புடையதா? இந்த முக்கியத்துவம் கேராளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தமிழர்களுக்குக் கிடைக்குமா?
இது முற்றிலும் தவறு. ஒரு ஜெயலலிதா, எம்ஜிஆரை வைத்து இங்கே கன்னடமும், மலையாளமும் ஆதிக்கம் செலுத்துவதாக நம்புவதைப் போல அபத்தமும் மூடத்தனமும் ஏதுமில்லை. இவர்கள் இருவரும் எந்நாளும் தம்மை மலையாளியாகவோ கன்னடத்தவர்களாகவோ அடையாளப்படுத்திக் கொண்டதுமில்லை. அவர்களிடம் எதிர்க்க வேண்டிய ஆயிரம் விடயங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் தம் மொழி நலன்களுக்காகச் செயல்பட்டார்கள் என நம்புவதோ, அவர்களின் ஊடாக கன்னட மலையாளிகள் இங்கு ஆதிக்கம் செலுத்தியதாக நம்புவதோ அபத்தம். இங்கு இன்னும் கூட பார்ப்பனர், கவுண்டர், செட்டியார், வட இந்திய முதலாளிகளே தொழில் மற்றும் நிதித் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். புள்ளிவிவரங்கள் தர இயலும். திராவிட ஆட்சி மூலம் இங்கே தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆதிக்கம் நிலவுகிறது என்பதற்கு சீமான், மணியரசன் போன்ற இனவாதிகள் இதுவரை ஏதாவது ஆவணங்களை முன்வைத்துள்ளனரா? இவர்கள் தம் பார்ப்பன அடிவருடித் தனத்தை மூடி மறைக்க ஆடும் நாடகமே திராவிட எதிர்ப்பு. இங்கிருக்கும் தெலுங்கு அல்லது கன்னட சாதியினர் எனச் சொல்லப்படுவோரில் 90 சதம் பேருக்கு அந்த மொழிகள் தெரியாது. அவர்கள் வீடுகளில் உரையாடும் மொழியும் தமிழ்தான், அவர்கள் பிள்ளைகள் பள்ளிகளில் பயிலும் மொழியும் தமிழ்தான். ஒவ்வொரு நாடும் இப்படி இனத்தூய்மை எனப் பேசத் தொடங்கினால் கடந்த இருநூறு ஆண்டு காலமாக தமிழகத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு வந்து அந்த நாடுகளின் மேம்பாட்டிற்கு ரத்தம் சிந்தி வாழும் நம் தமிழர்களை இந்த அரசுகள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தத் தொடங்கினால் அது நியாயம் என்றல்லவா ஆகிவிடும்?
திராவிடம் என்பது வைதீகமதத்துக்கு எதிரானது என்று கூறப்படுவதோடு திராவிட கருத்தாக்கம் உயர்த்திப்பிடிக்கும் இறைமறுப்பு கொள்கை எந்த அளவு தமிழர் பண்டைய வாழ்வியலோடு தொடர்புடையது? தமிழர்கள் மரபாகவே மிகுந்த இறைநம்பிக்கை கொண்டமக்கள் அல்லவா?
என்ன கேள்வி இது? நமது பண்டைய கருத்துக்கள், கொள்கைகள், இலக்கியக் கோட்பாடுகள் என்பவற்றையெல்லாம் ஆய்வு செய்வது, போற்றுவது என்பது வேறு, அவற்றைத் தாண்டி இன்று சிந்திக்கக் கூடாது, செயல்படக் கூடாது, அவற்றில் விமர்சிக்க வேண்டியவற்றை விமர்சிக்கக் கூடாது என்றெல்லாம் சொல்ல எங்கே கற்றுக் கொண்டீர்கள்? தமிழர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா ஆதிச் சமூகங்களும் இறையச்சம் உடையவைதான். ஒரு காலத்தில் சில ஆதிச் சமூகங்கள் மனித மாமிசம் கூடச் சாப்பிட்டு வாழ்ந்தவைதான். அதற்காக இன்றைக்கு அது தவறு என விமர்சிக்கக் கூடாதா? புதிய சிந்தனைகள், கருத்துக்களுக்கு இடமே இல்லாமல் போய்விடுமா? பழந்தமிழ்க் கொள்கைகள் என எல்லாவற்ரையும் தூக்கிப் பிடிப்பீர்களா? சங்கப் புலவன் கபிலன் தன்னை எவ்வாறு அறிமுகம் செய்து கொள்கிறான்? “அந்தணன், புலவன்” என்றல்லவா? இதன் மூலம் மூன்று அடையாளங்களை அவன் சூட்டிக் கொள்கிறான். நான்கு வருணங்களில் நான் அந்தணன், பால் அடையாளத்தில் நான் ஒரு ஆண்; இவை மட்டுமல்ல நான் கற்றறிந்த புலவன். அவ்வை போன்றவர்களைப்போல நாடோடிப் பாணர் குலத்தில் பிறந்தவனல்ல என்றல்லவா சொல்லிவிடுகிறான். இதெல்லாம் நம் பண்டை இலக்கியம் இல்லையா? நம் வேள்விக்குடிச் செப்பேடு என்ன சொல்கிறது. நம் பழங்குடி மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து வேள்வி செய்யும் பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததை அது நியாயப்படுத்தவில்லையா? “பாணன், பறையன், துடியன், கடம்பன்,… இந்நான்கல்லது குடியுமல்ல” என்பது புறநானூறு இல்லையா? “இழிசினன் கைசிவக்கும்” என்று வருகிறதே யார் அந்த இழிமக்கள்? சங்க காலத்திலேயே இருந்தவைதான் என இன்று இவற்றையெல்லாம் நியாயப்படுத்துவீர்களா? ஒருவேளை செய்தாலும் செய்வீர்கள். இன்று பெரியாரை எதிர்க்கும் நம் நண்பர்கள் கொண்டாடும் சீமான், மணியரசன் போன்றோர் அங்கு தமிழ் நாட்டில் ராஜராஜன் அறிமுகப்படுத்திய தேவதாசி முறையையும், நிலவுடைமைக் கொடுமைகளையும் தமிழ்ப் பண்டைப் பெருமைகள் எனவும் தமிழர்தம் காணியாட்சி முறை எனவும் வழிபடுபவர்கள்தானே. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஆகப் பழைய சங்க இலக்கியங்களிலேயே ஆரிய வழிபாட்டுமுறை முதலானவை நுழையத் தொடங்கிவிட்டாலும், உலகாயுதக் கோட்பாடுகளும் ஆங்காங்கு தென்படத்தான்செய்கின்றன. தமிழ் இலக்கண நூல்கள், காப்பியங்கள், நிகண்டுகள் எல்லாமும் சமண, புத்த மரபில் வந்தவை. உலகெங்கும் மத்தியகாலம் வரை பகுத்தறிவுச் சிந்தனைகள் பெரிதாக மேலுக்கு வந்தது இல்லை. ஆனால் மறுமலர்ச்சிக் காலம் என நாம் சொல்லும் மத்தியகாலம் தொடங்கி பகுத்தறிவுச் சிந்தனைகள் மேலுக்கு வரத் தொடங்கின. உலகெங்கிலும் உள்ள பொதுப்போக்குத்தான் இது. பகுத்தறிவு மட்டுமல்ல, கம்யூனிசம், சோஷலிசம், முதலாளித்துவம், மாடர்னிசம், போஸ்ட்மார்டனிசம் எல்லாம் புதுசுதான்.அவை பண்டைய வரலாற்ரில் இல்லை என்பதற்காக அவற்றை வேண்டாம் எனச் சொல்லிவிட இயலுமா?
திராவிட கருத்தாக்கத்திற்கும் இறைமறுப்பு வாதத்துக்கும் இடையே ஒரு செயற்கையான தொடர்பை ஏற்படுத்தி இரண்டையும் ஒன்றாக ஆக்கியவர் பெரியார்தான் என்று கூறப்படுகிறதே?
முதலில் திராவிடம் என்று ஒன்று இல்லை என்பார்கள். அப்புறம் இதுதான் திராவிடம்; இதைப் பெரியார் கெடுத்துவிட்டார் என்பார்கள். இதெல்லாம் என்ன? நான் முன்பே சொல்லி விட்டேன். எல்லாப் பழைமையும் இறை நம்பிக்கை உடையவைதான். பண்டைய தத்துவங்கள் தலை எடுத்தபோது உலகாயுதம் உட்படப் பல போக்குகளும் தலைகாட்டின. இந்திய வரலாற்றைப் பொறுத்தமட்டில் வைதீகத்திற்கும் சமணம், பவுத்தம், ஆஜீவகம் போன்ற அவைதீகச் சிந்தனை மரபுகளுக்கும் இடையில் ஒரு மோதல் வரலாற்றுத் தொடக்கம் தொடங்கி தென்படுகிறது. வைதீகத்திற்கு எதிரான அவைதீகச் சிந்தனைகள் ஆதி முதலே இங்கு உள்ளன.
தமிழ்தேசியத்தை ஏன் தமிழ்திராவிடம் மறுக்கிறது? கடந்த காலங்களில் மொழிப்போர் உட்பட தமிழ்மொழி தொடர்பான திராவிட கட்சிகளின் முன்னெடுப்புகளுக்கு அக்கால தமிழ்தேசியர்கள் ஆதரவாக இருந்துள்ளார்களே.
முன்பே சொல்லிவிட்டேன். பெரியார் தெளிவாகச் சொல்லியுள்ளார். நான் தமிழர் நலன்களைத்தான் பேசுகிறேன். தமிழன் எனச் சொன்னால் இங்கே பாப்பானும் வந்து புகுந்து கொள்கிறான். எல்லாப் பலன்களையும் அவன் சுருட்டிக் கொள்கிறான். அதனால் திராவிடன் என்கிறேன் எனப் பொருள்படச் சொல்லியுள்ளார். தமிழ்நாட்டில் தேசிய உணர்வு உருவாக்கத்தில் இரு போக்குகள் இருந்தன. ஒன்று ம.பொ.சி முன்னெடுத்தது. இது பார்ப்பனர்களை உள்ளடக்கி தமிழகத்தில் சுமார் மூன்று நான்கு நூற்றாண்டுகளாக வாழ்கிற அருந்ததியர் உட்பட்ட மொழிச் சிறுபான்மையினரை வெளியே நிறுத்திய போக்கு இது. தமிழருக்கு ஒரு இந்து அடையாளத்தையும் இந்தப் போக்கு கொடுத்தது. சாதி ஒழிப்பு என்பதில் இதற்கு அக்கறை இல்லை. தமிழ்ப் பாரம்பரியம் என்கிற வகையில் தமிழ் மன்னர்கள் தமிழ்ச் சமூகத்தை ஆரியமயப் படுத்தியதைக் கொண்டாடிய போக்கு இது. நான் இந்து என்பதில் பெருமை அடைகிறேன் என்றார் ம.பொ.சி. இதற்கு முற்றிலும் மாறான எதிர்ப்போக்குத்தான் பெரியாருடையது. இது பார்ப்பனீயத்தை வெளியே நிறுத்தி தமிழக எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும் உள்ளடக்கியது. இது ஒருவகையில் ஒரு inclusive nationalism. தந்தை பெரியார் பார்ப்பனர்களைக் கூட வெளியேற்ற வேண்டும் என எந்நாளும் சொன்னதில்லை. இட ஒதுக்கீட்டில் கூட அவர்களுக்கும் அவர்களின் பங்கான 2 சதத்தைக் கொடுத்துவிடலாம் என்றார். பார்ப்பன ஆதிக்கத்தையும், அதன் மூலம் இங்கு நிலை நாட்டப்படும் சாதீயத்தியும் அவர் கடுமையாக எதிர்த்தார். காலம் காலமாக பார்ப்பனீயத்துக்குச் சேவை செய்த தமிழ்ப் பண்பாட்டையும், தமிழில் கலந்து போயுள்ள பார்ப்பனீய, சாதீயச் சிந்தனைகளையும் மூட நம்பிக்கைகளையும் நீக்கி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றார். எனவே அவரது போராட்டங்கள் பலவும் இந்தி எதிர்ப்பு உட்பட தமிழர் நலன்களுக்காக இருந்தது. அவர் தலைமையில் தமிழ்த் தேசியர் மட்டுமல்ல பலரும் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்ய வைக்கம், சுசீந்திரம் முதலான இடங்களில் போராட்டம் நடத்தினாரே அதில் ம.பொ.சி உட்படத் தமிழ்த் தேசியர்கள் யாராவது கலந்து கொண்டனரா? அட இவர்களேனும் ஏதேனும் சாதி, தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளார்களா?
பெரியார் பேசிய திராவிட கோட்பாடு தமிழ்நாட்டில் சாமானிய மக்களிடம் மிக வேகமாக பரவ, அது முன் வைத்த சாதிய எதிர்ப்பும் சுயமரியாதை இயக்கமும் முக்கியக் காரணமாகின்றன. ஆனால் பெரியாரின் சாதிய எதிர்ப்பு என்பது பிராமண எதிர்ப்பாக நிலைநிறுத்தப்பட்டதால் இடைநிலைச்சாதிகளின் சாதிய வெறி இன்றும் பாதுகாப்பாகவே செயல்படுகிறது என்னும் கருத்து உள்ளது. பெரியார் முன் வைத்த சாதிய எதிர்ப்பு ஏன் பிராமண எதிர்ப்பாக மாறியது?
பார்ப்பனீயமே சாதீயம், தீண்டாமை ஆகியவற்றின் அடிப்படை. பார்ப்பனீயம் கோலோச்சும் இந்தியத் துணைக்கண்டத்தில்தான் சாதியும் தீண்டாமையும் உள்ளன என்கிற அடிப்படையில் அவர் பார்ப்பனீயத்தை எதிர்த்தார். பெரியார் பலரும் நினைப்பதுபோல எளிமையான சிந்தனையாளர் அல்ல. மிகவும் ஆழமாக ஒவ்வொரு பிரச்சினைகளையும் குறித்துச் சிந்தித்தவர். “தேசாபிமானம், பாஷாபிமானம்,மதாபிமானம், குலாபிமானம்” என்கிற இந்த நான்கு பற்றுக்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை முதலான சமூகக் கேடுகள் ஒழியும் என அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். இந்துத்துவக் கட்சிகள் ‘தேசாபிமானம்’ எனும் பெயரில் தீண்டாமை உட்பட சமூகக் கேடுகளை நியாயப்படுத்துகின்றன. மதம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையிலும் இது நிகழ்கிறது. இவை அனைத்தையும் ஒரு சேர எதிர்த்தாக வேண்டும் என்கிற சரியான புள்ளியைத் தொட்டவர் அவர். இந்தியாவில் தமிழ்நாடு எனும் தென் கோடி எல்லையில் செயல்பட்டவர் அவர். சாதி, மதம், வருணம் முதலானவை இந்தியா முழுவதும் உள்ள ஒரு சமூகக் கேடு. இதை பெரியார் மட்டுமல்ல அம்பேத்கர், காந்தி எல்லோரும்தான் எதிர்த்தனர். அவ்வளவு எளிதாக இவை ஒழியாமற்போனமைக்கான பழியைப் பெரியார் மீது மட்டும் போடுவது அபத்தம்.
பெரியாரின் இறைமறுப்பு கொள்கை இன்று இந்துமத எதிர்ப்பு கொள்கையாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரியார் பேசிய சாதிமறுப்பு கொள்கை இன்று பிராமண வெறுப்பு அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது. இந்நிலையில் பெரியாரின் கொள்கைகள் அவரை முன்னிறுத்தும் இயக்கத்தாராலேயே சுயநலத்திற்காக மழுங்கடிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்கிறீர்களா?
திராவிட இயக்கம் பலவீனப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் இதற்கான காரணங்களை திராவிட இயக்கத்திற்குள் மட்டும் தேடிக் கொண்டிருக்க இயலாது. திராவிட இயக்கம் மட்டுமா இங்கு பலவீனப்பட்டுள்ளது? உலக அளவில் மார்க்சீய இயக்கங்கள் பலவீனப்பட்டுள்ளன. தொழிலாளர் இயக்கங்கள் பலவீனப்பட்டுள்ளன. இந்தியாவில் அம்பேத்கர் இயக்கங்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்நிலையில் ஏன் பெரியார் இயக்கங்களை மட்டும் குறைகாண்கிறீர்கள். பொதுவாக இது சமூக இயக்கங்கள் பின்னடைவுபட்ட ஒரு காலம் இது உலகளாவிய போக்காக இருக்கிறது. எங்கும் இனவாதம் முதலியன தலை எடுத்துள்ள காலம் இது.
தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்பதை திராவிடக்கொள்கையாளர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?
யார் அப்படிச் சொன்னது? எந்த திராவிடக் கொள்கையாளர்கள் அப்படி மறுத்தார்கள்? காமராசர் என்கிற ‘பச்சைத் தமிழனின்’ ஆட்சியைப் பெரியார்தானே ஆதரித்தார். சும்மா ஏதாவது கொளுத்திப் போடக் கூடாது. தமிழ்நாட்டைத் தமிழன் ஆண்டால் மட்டும் போதுமா? தமிழன் என்கிற ஒரு அடையாளம் மட்டுமே போதும் என்கிறீர்களா? இவர்களின் கணக்குப்படி ராஜாஜி கூடத்தான் தமிழன். அவர் காலத்தில்தான் குலக்கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது.
மலேசியாவில் திராவிடமோ தமிழ்த்தேசியமோ தேவையான கருத்தாக்கங்களாக கருதுகிறீர்களா?
இது ஒரு முக்கியமான கேள்வி. நான் இம்முறை இங்கு (மலேசியாவில்) பேசிய சுமார் ஆரேழு கூட்டங்களிலும் ஒன்றை வலியுறுத்திச் சொன்னேன். எங்கள் (அதாவது தமிழ்நாட்டு) அரசியல் அப்படியே இங்கு பொருந்தாது என்பதுதான் அது. பெரியார் இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரிய வேண்டும் எனக் கேட்டவர். ஆனால் அவரே இங்கு (மலேசியா) வந்தபோது “இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார். இங்குள்ள சூழலில் இந்தியர்களுக்குள் ஒற்றுமை வேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது. இன்றளவுக்கும் அதுதான் உண்மை.
இந்திய அரசியலும் மலேசிய அரசியலும் பல வகைகளில் வேறுபட்டவை. இந்தியாவில் பெரும்பான்மையாக இருந்து, அந்த அடையாளத்தை முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ள ஒரு மதம் (இந்து மதம்) மலேசியாவில் ஒரு சிறுபான்மை மதம்; பல்வேறுவகைகளில் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்படுவதாக உணரும் ஒரு மதம். இந்தியாவில் சிறுபான்மையாக இருந்து ஒடுக்கப்படும் முஸ்லிம் மதம் இங்கு ஆளும் மதம். தன்னுடைய இருப்பையும் மேலாண்மையையும் வலியுறுத்தும் ஒரு மதம். எனவே எங்கள் நாட்டில் நாங்கள் எடுக்கும் நிலைபாடுகள் அனைத்தும் அப்படியே இங்கு பொருந்திவராது. இந்தப் புரிதலுடன்தான் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வருபவர்களும், இங்கு உள்ள எல்லோரும் அணுகுகிறார்கள் எனச் சொல்ல இயலவில்லை.
நான் 2011 இல் பகுத்தறிவாளர் மாநாட்டிற்கு வந்தபோது என்னுடன் வந்த பேச்சாளர்களில் ஒருவர்,”மலேசியாவில் நாற்பதாயிரம் இந்துக் கோவில்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். நீங்கள் இங்கே இந்து மூட நம்பிக்கைகளைப் பரப்பத்தான் வந்தீர்களா?” எனக் கேட்டார். வந்திருந்த மற்றவர்களும் அதைத் திருப்பிச் சொன்னார்கள். நான் சற்று மாறுபட்டுப் பேசியபோது எங்களுக்குள்ளேயே விவாதம் வந்தது. அந்தக் கூற்றில் ஒருபாதி உண்மை உண்டு. இங்கு வந்தும் சாதி உணர்வையும், ஏற்றத் தாழ்வுகளையும் பேணுவது கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் இங்கே இந்துக் கோவில் என்பது ஒருகாலத்தில் தமிழர்கள் இங்கே சஞ்சிக் கூலிகளாகக் கொண்டுவரப்பட்டு ரப்பர் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டபோது அவர்கள் கூடிப் பேசவும், பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கவும், தங்களின் பண்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் உள்ள ஒரு இடமாக உருவாகியதுதான். ஆக அது தமிழர்களுக்கு ஒருவகை அடையாளமாகவும், ஒருவகையில் பாதுகாப்பாகவும் கூட உருப்பெற்றது. இதையெல்லாம் கொஞ்சம் நெகிழ்ச்சியோடு புரிந்து கொள்ள வேண்டும். 1980 களுக்குப் பின் இங்கு மலேசிய அரசு தன் முஸ்லிம் அடையாளத்தை வற்புறுத்த நேர்ந்தபோது தமிழர்கள் மத்தியில் இந்திய ஆர்.எஸ்.எஸ் முதலான இயக்கங்கள் பல்வேறு மட்டங்களில் வேலை செய்யத் தொடங்கின. விவேகானந்தர் முதலான அடையாளங்களில் இங்கே ஆகம வழிப்பட்ட வழிபாடு முதலியவற்றையெல்லாம் வற்புறுத்தத் தொடங்கின. ஆகமப் பயிற்சி, இந்துமத வகுப்புகள் எல்லாம் நடத்தப்பட்டன. இதெல்லாம் நடப்பதற்கு முன்பு வரை இங்கிருந்த மாரியம்மன் கோவில்கள், முருகன் கோவில்கள் முதலான வழிபடுதலங்கள் எல்லாம் தமிழர் என்கிற அடையாளத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவையாகவே இருந்தன. இங்கே ஹிண்ட்ராப் இயக்கம் தொடங்கப்பட்டபோது அதை எங்கள் நாட்டு ஆர்.எஸ்.எஸ் முதலான இந்துத்துவ இயக்கங்களோடு ஒப்பிட்டுவிட முடியாது என நான் இந்தப் பின்னணியிலிருந்துதான் எழுதினேன். அப்போது இங்கு வந்த நான் உதயகுமாரைச் சந்திக்கவும் கூட முயற்சிசெய்தேன். அவர் ஊரில் இல்லை. இம்முறை வந்தபோது உதயகுமார், வேதமூர்த்தி ஆகியோரின் சகோதரர் சந்திரசேகர் என்னைச் சந்திக்க விரும்பியபோது ஏற்றுக்கொண்டேன். ஜோகூரில் திரு.சாமிநாதன் அவர்கள் என் தந்தை குறித்துப் பேச ஏற்பாடு செய்த கூட்டத்தில் அவர்களும் பங்குபெறவும் இசைந்தேன். ஆனால் இங்குள்ள சில தமிழ்த் தேசிய இயக்கங்கள் கொடுத்த அழுத்ததின் விளைவாக அவர்கள் அந்தக் கூட்ட ஏற்பாட்டிலிருந்து விலகியதாக அறிவித்ததோடு, அந்தக் கூட்டத்தை நடத்தவும் இடையூறு செய்தனர். வேதமூர்த்தியுடன் எனக்கிருந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. பிறகு நான் ஊருக்குப் புறப்படும் நாளன்று ஷா ஆலத்தில் நான் தங்கியிருந்த தோழர் பரமசிவத்தின் இல்லத்திற்கு இரண்டு ஹிண்ட்ராப் அமைப்பினர் வந்து பேசியபோது நான் அவர்களிடம் ஒன்றை உறுதியாகச் சொன்னேன். நீங்கள் ஹிண்ட்ராப் என இந்து அடையாளத்தைத் தரித்துக் கொள்வதைக் காட்டிலும் இந்தியர் என்கிற அடையாளத்தைத் தரித்துக் கொள்வதே சரியாக இருக்கும். இந்தியாவில் ஒரு வன்முறையான மதவாதப் பிளவு அரசியலை மேற்கொண்டு வரும் ஒரு அடையாளத்தை நீங்கள் தவிர்ப்பதுதான் நல்லது. எங்களைப் போன்றவர்கள் உங்களோடு இணைந்து வேலை செய்வதற்கு அப்போதுதான் முடியும். நீங்கள் உண்மையிலேயே ஒரு மனித உரிமை அமைப்பாக இருந்தால் இந்தச் சிக்கலை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியர் எனும் அடையாளம்தான் இங்கே உங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்கிற என் கருத்தை அவர்கள் மறுத்தனர். அவர்களின் நோக்கமெல்லாம் இந்தியாவில் ஆட்சிக்கு வந்துள்ள இந்து அடிப்படையிலான பாசிச சக்திகளுடன் அடையாளம் காணுவதாகவே இருந்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இங்குப் பெரியாரை அவதூறு செய்யும் தமிழ்த் தேசியர்கள் ஹிண்ட்ராப் இயக்கத்துடன் காட்டும் நெருக்கத்தையும் அவதானிக்க முடிந்தது.
ஆக சுருக்கமாகச் சொல்வதானால் இப்படிச்சொல்லலாம். உங்கள் அரசியல் சூழல் என்பது முற்றிலும் எங்களுடையதிலிருந்து வேறுபட்டது. இதை நம் இரு தரப்பாரும் உணர்ந்து கொள்ளல் அவசியம். இங்குள்ள இந்தியர்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்கிற அடிப்படையில் இந்தியர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும். இந்தியர்கள் எனும்போது கொஞ்சம் சீக்கியர்கள் முதலானோர் தவிர பெரும்பாலோர் மலையாளம், ஆந்திரம் முதலான தென்னிந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களிலும் தமிழர்களே சுமார் 88 சதத்திற்கும் மேற்பட்டோர். எனவே இத்தகைய இணைப்பால் தமிழர் நலன் எந்த வகையிலும் சுருங்கிப் போகாது.
தமிழ்நாட்டு அரசியலைப் பின்பற்றுவதன் இன்னொரு கொடிய விளைவுதான் தமிழ்நாட்டிலுள்ள சாதி அமைப்புகளுடன் இங்குள்ளவர்களும் அதே அடிப்படையில் அடையாளம் காணுவது. அதற்கு இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் ஒத்துழைக்கின்றனர். இந்தியர்களுக்குள் மட்டுமல்ல சாதி அடிப்படையில் தமிழர்களுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்துகின்றனர்.
மலேசியாவில் பெரும்பான்மை முஸ்லீம்களால் அவ்வப்போது நெருக்குதலுக்குள்ளாகும் சிறுபான்மை இந்துக்களுக்கு திராவிட அமைப்புகள் பேசும் நாத்திகவாதத்தால் பயன் உண்டா? அதிலும் பிற மத நம்பிக்கைகளைப்பற்றி விமர்சிக்காமல் இந்து சமய நடவடிக்கைகளை மட்டும் விமர்சிப்பது ஏற்புடையதா?
நாத்திகவாதம் எப்படி பெரும்பான்மை முஸ்லிம் மதவாதத்திற்குத் துணை போகும்? இந்தியச் சூழலில் சிறுபான்மை மதமாக உள்ள முஸ்லிம் மதத்தை அணுகுவதைப்போலவே இங்கு அணுகிவிட முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இங்கு இந்து மதத்தை மட்டுமே விமர்சித்தல் போதாது என்பதும் உண்மைதான். இங்குள்ள திராவிட இயக்கங்கள் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும்போது அதற்கு எதிராக வலுவான அரசு எதிர்ப்பில் இறங்கி இருந்தால் நிச்சயம் இந்து என்கிற அடிப்படையில் ஹிண்ட்ராப் உருவாகியிருக்காது. அந்த வாய்ப்பை திராவிட இயக்கங்கள் தவற விட்டது தவறுதான்.
மலேசிய அரசியல் சட்டப்படி தமிழர், தெலுங்கர், மலையாளி என்ற இன அடிப்படை அடையாளங்கள் அதிகாரத்துவ அடையாளம் அல்ல. இங்கு இந்தியர் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அனைத்து இனமக்களும் வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே இங்குத் தமிழ்தேசியம் என்ற அடையாள அரசியல் முரணாக உள்ளது. ஆனால் அதே நேரம் இங்குள்ள தெலுங்கு சங்கம் போன்ற அமைப்புகள் தங்களுக்குத் தெலுங்கர் என்ற தனி அடையாளம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றன. ஓர் அரசியல் விமர்சகராக இந்த முரண்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அப்படியான ஒரு நிலை ஏற்பட்டது வருந்தத் தக்கதுதான். தூக்கில் ஏற்றப்பட்ட தோழர் கணபதியின் சகோதரர் சற்குணம் அவர்களுடன் பத்தாண்டுகளுக்கு முன் அவரது வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்றைக் குறிப்பிட்டார். கணபதி தலைமறைவாக இருந்தபோது அவரைப் பாதுகாத்ததெல்லாம் தெலுங்கர்கள்தானாம். சந்திரபோஸ் தலைமையில் இங்கே ஐ.என்.ஏ இராணுவம் திரட்டப்பட்ட போதும், கணபதி போன்றோர் தலைமையில் இங்கே தொழிற்சங்கங்கள் தீவிரமாக இயங்கியபோதும் இந்தியர்கள் எனும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை இருந்தது. பெரியாரும் இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் சொன்னார். ஆனால் இன்று இந்த ஒற்றுமை சிதைந்து இப்படியான நிலை ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது. இப்படி இந்தியர்களின் ஒற்றுமைச் சிதைவு அதிகாரத்துக்குத்தான் பயன்படுகிறது. தெலுங்கர் போன்றோர் தமிழர்களுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறுபான்மையோர். இப்படியான ஒற்றுமைச் சிதைவு ஏற்படாமல் தடுப்பதில் மிகப் பெரும்பான்மையாக உள்ள நமக்குத்தான் அதிகப் பொறுப்பு உண்டு. நாம் அவர்களை அணுகி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். என்னைப் பொருத்தமட்டில் இந்தியர்களுக்குள் மட்டுமல்ல,கல்வி, மொழி ஆகிய பிரச்சினைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு இங்குள்ள இன்னொரு சிறுபான்மையான சீனர்களுடனும் குறிப்பிட்ட அளவு நாம் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் இதில் உள்ள சிக்கல்கள் பற்றி நான் அதிகம் அறியேன்.
மலேசிய அரசியல் சட்டம் நாத்திகத்தை முற்றாக எதிர்க்கிறது. இங்குக் கம்யூனிஸ்டுகள் தோல்வி கண்டதற்கு அவர்களை நாத்திகவாதிகளாகச் சித்தரித்ததும் ஒரு முக்கியக் காரணம். ஆகவே மலேசியாவில் இறைமறுப்புக் கொள்கையுடைய இயக்கங்களைச் சட்டப்படி பதிவு செய்ய முடியாது. ஆயினும் மலேசியாவில் திராவிட இயக்கங்கள் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அது முன்வைத்த தமிழ்மொழி சார்ந்தபற்றுதான் காரணமேயன்றி சாதியமறுப்போ, இறைமறுப்போ அல்ல என்பதை தமிழக திராவிட அரசியலாளர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா?
இதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் எந்தக் குறிப்பிட்ட திராவிட இயக்கத்தையும் சேர்ந்தவன் அல்ல. திராவிட அரசியலின் முக்கியத்துவத்தை ஏற்பவன். பெரியார் என்கிற ஒரு மிக நவீனமான சிந்தனையாளரை வியப்பவன். மதம் மற்றும் இறை மறுப்பு இங்கு ஒரு popular ஆன முழக்கமாக இருக்க இயலாது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயல்கிறது. தமிழ் மொழி சார்ந்தபற்று என்பதும் போதாது. தமிழ் மக்கள் நலன் சார்ந்த அமைப்புச் செயல்பாடுகள், போராட்டங்கள் ஆகியனதான் இங்கு முக்கியம். ஆனால் நான் கண்ட வரைக்கும் இங்குள்ள எல்லா வகையான தமிழர் அமைப்புகளும் வெளிப்படையாக அரசை எதிர்க்க அச்சம் கொண்டுள்ளன. இன்னொரு வகையில் ஏதோ ஒரு வகையில் அரசு நிதி உதவிகளையும் நம்பியுள்ளன. ஒரு போராடும் இயக்கம் முதலில் இதைத் தவிர்க்க வேண்டும்.
சாதிய ஒழிப்பு தமிழர் இன அடையாளத்தை அழிக்கும் முயற்சி என்று தமிழ்தேசியவாதிகள் கூறுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
அப்படியானால் சாதிதான் தமிழர் அடையாளமா? கொடுமைடா சாமி. இது மிகத் தவறான கருத்து மட்டுமல்ல மிகக் கொடூரமான கருத்தும் கூட. தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட அடையாளங்கள் மேலுக்கு வந்துகொண்டுள்ள சூழலில் எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேச முடிகிறது. உங்களைப் போன்ற இலக்கியவாதிகள் எல்லாம் எப்படி இதைச் சகித்துக் கொண்டுள்ளீர்கள்?
இந்தியர்கள் சிறுபான்மையாகவும் இந்துக்கள் சிறுபான்மையாகவும் வாழும் மலேசியா போன்ற ஒருபன்முகக் கலாச்சாரம் கொண்ட நாட்டில், திராவிட சிந்தனைகளோ தமிழ்தேசிய சிந்தனைகளோ எவ்வாறான விளைவைக் கொடுக்கும் என்று நினைக்கிறீர்கள்?
நான் ஏற்கனவே சொல்லியவற்றிலேயே இது குறித்து நான் உணர்பவற்றைப் பதிவு செய்துள்ளேன். அது போதுமானது. எல்லா சிந்தனைகளையும் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் உங்களுக்கான அரசியலை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
மலேசிய இந்தியர்களை ஒன்றுதிரட்ட இந்து மதச்சிந்தனையே பிற எல்லா வகைச்சிந்தனைகளையும் விட வெற்றிபெற்றிருக்கிறது என்பதை 2007 ஹின்ட்ராப் போராட்டம் மெய்ப்பித்திருக்கிறது. அரசாங்கம் ஒரு இந்து கோயிலை உடைத்ததால் பொதுத்தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்ட வரலாறும் உண்டு. விரும்பியோ விரும்பாமலோ இந்து என்கிற மதஅடையாளம் சிறுபான்மையினரின் உரிமை சார்ந்த ஒன்றாக இங்கு ஆகிவிட்டிருக்கிறது. இச்சூழலில் தமிழகத்திராவிட கருத்தாளர்கள் முன்வைக்கும் இறைமறுப்பு, சிலைவழிபாடு, மூடநம்பிக்கை போன்ற பரப்புரைகளால் மலேசிய தமிழர்க்கு நன்மை உண்டா?
2007இல் கோலாலம்பூரில் ஹிண்ட்ராப் நடத்திய அந்தக் கண்டன ஊர்வலம்தான் இங்குக் கடைசியாக இந்தியர்கள் பெரிய அளவில் திரண்ட ஒன்று என அறிகிறேன். இது இந்து மத அடையாளத்திற்காகத் திரண்டது என்பதைக் காட்டிலும் சிறுபான்மை மக்களுக்கெதிரான மலேசிய அரசுக்கு எதிராகத் திரண்ட கூட்டம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ம.இ.கா உட்பட தமிழர்களின் / இந்தியர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எல்லாம் அரசை எதிர்க்கத் திராணியற்றிருந்த நிலைக்கு எதிராகத் திரண்ட கூட்டம் இது. இதை ஹிண்ட்ராப்பும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன் தலைவர்களுக்கு அரசியல் அனுபவம் போதவில்லை. அவர்களே பின்னர் எந்த அரசை எதிர்த்தார்களோ அதில் இணைந்தபோது அவர்கள் மக்கள் நம்பிக்கையை இழந்தார்கள். அவர்களை செல்லாக் காசாக்கி இப்போது வேடிக்கை பார்க்கிறோம்.
தமிழ்தேசியத்தால் உலகத் தமிழர்களை எல்லாம் ஒருகுடையின் கீழ் கொண்டு வர முடியும் என்று கூறுகிறார்களே. இதுவரை உலக வரலாற்றில் அப்படி எந்த இனமாவது ஒன்று கூடியுள்ளதா?
யூதர்களை வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். சீமான் போன்ற அரைகுறைகள் இந்த அடிப்படையில் தம்மை சியோனிஸ்டுகள் என அழைத்துக் கொண்டாலும் வியப்பில்லை.
இலங்கை அரசியல் பூசல்களும் ஈழப்படுகொலைகளும் ஏற்படுத்திய பெரும் கொந்தளிப்பை மூலதனமாக்கி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் உருவாக்கிய நவீன தமிழ்தேசிய கோட்பாடுகள் உலகதமிழர் அனைவருக்கும் பொருந்தும் ஒன்றா?
எந்தப் பெரிய கோட்பாடுகளையும் இவர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை. காற்றுள்ளபோது தூற்றிக் கொள்ள முயற்சித்தார்கள். பல வகைகளில் சொந்த லாபங்களைத் தேடிக் கொண்டார்கள். அவ்வளவுதான்.
மலேசியாவில் இந்தியர்களை ‘வந்தேறிகள்’ என்ற வசையுடன் அரசியலில் ஓரங்கட்ட சில அரசியல்வாதிகள் முயலும்போது இங்குள்ள இந்தியர்கள் கொதித்தெழுகிறார்கள். ஆனால் தமிழர்நலம் என்ற பெயரில் தமிழ்தேசியம் கூறும் ‘வடுகவந்தேறிகள்’ என்ற அரசியலையும் அவர்கள் ஏற்கிறார்கள். இந்த முரண்பற்றிய உங்கள் கூற்று என்ன?
இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். சென்றமுறை வல்லினம் சந்திப்பிற்காக நான் வந்தபோது என்னிடம் வடுக வந்தேறிகள் என்றெல்லாம் பேசியவர்களிடம் இதே கேள்வியைக் கேட்டேன். தமிழ் நாட்டில் உள்ள நாயக்கர், அருந்ததியர் முதலானவர்கள் எல்லாம் வந்தேறிகள் என்றால் நீங்களும் வந்தேறிகள்தானே என்று. அவர்கள் பதில் சொல்லவில்லை. உங்களைப் போன்ற இலக்கியவாதிகள் இந்தப் பிரச்சினையை இங்கு பேச வேண்டும்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு ஆரியனும் பிராமணனும் தமிழினத்தை அழிக்கும் சக்திகள் என்ற இனவாத வெறுப்பரசியலோடு திராவிட கருத்துகள் பரப்பப்பட்டன. இன்று (ஐம்பது ஆண்டுகள் கடந்து) வடுகரும் திராவிடமும் தமிழினது விரோகிகள் என்ற இன்னொருவகை இனவாத வெறுப்பரசியல் தமிழ்தேசியத்தால் பரப்பப்படுகிறது. இனவாதமும் வெறுப்பரசியலும் இல்லாமல் தமிழர்களுக்கு வாழ்க்கை இல்லையா?
ஆரிய, பார்ப்பன எதிர்ப்பையும் இன்றைய தமிழ்த் தேசியத்தையும் இப்படி ஒன்றாக்குவது அபத்தம். இது குறித்து, அதாவது திராவிட அரசியல் உருவானதன் பின்னணி குறித்து நான் இந்த நேர்காணலில் முன்னதாகக் கூறியுள்ளதைக் கவனியுங்கள்.
உலகமயமாக்கல், கல்வி பொருளாதார போராட்டங்கள், அந்நிய தொழிலாளிகள் இறக்குமதி, அரசியல் நெருக்குதல்கள், மொழி, பன்பாட்டு மோதல்கள் போன்ற பல போராட்டங்களை எதிர்கொள்ளும் நவீன மலேசிய இந்தியர்களுக்கு, அவர்கள் முன்வைக்க வேண்டிய அடிப்படை நோக்கங்களாக எவற்றை முன்மொழிவீர்கள்?
இத்தகைய நிலைகளுக்கு எதிராகவும், தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் உரிமைகளைக் காக்க போராடுவதொன்றே வழி என்பதை மலேசிய இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மலேசிய இந்தியர்களுக்குள் உள்ள ஒற்றுமையைக் கெடுக்கும் அரசியல்களை அவர்கள் ஒதுக்க வேண்டும். நீங்கள் இப்போது குறிப்பிட்ட இந்தப் பிரச்சினைகளில் ஒன்றுபட்ட கூட்டியக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். இனவாத நடவடிக்கைகளை எதிர்க்கும்போது சாத்தியமான அளவிற்கு இன்னொரு சிறுபான்மையான சீனர்களுடன் இணைந்து போராடும் வாய்ப்புகளையும் ஆராய வேண்டும்.
மிக மிக தெளிவை எனக்கு ஏற்படுத்திய நேர்காணல். என் மனதின் பல கேள்விகளுக்கு விடையாக அமைந்தது.நமக்கு எத்தகைய அடையாளம் தேவை என்பதையும் உணர்ந்தேன். இப்படி சுதந்திரமாக பேசும் ஒரு இனைய இதழாக வல்லினம் இருப்பது மகிழ்ச்சி.
மிக்க நன்றிகள்…
மிகவும் சிறப்பான கருத்துக்கள்
நன்றிகள். என் மனதிற்கும் என் அனுபவத்திற்கும் பட்டவற்றைச்ட் சொல்லியுள்ளேன்.
அருமையான பதிவு.
மிக்க நன்றி. உங்கள் நாட்டு அரசியலில் பெரிய ஆர்வம், உள்நோக்கம் எல்லாம் எனக்குக் கிடையாது. என் அனுபவத்தில், என் கல்வியில் எனக்குப் பட்டதைச் சொல்லியுள்ளேன். என் தந்தை தனது இளைமைக் காலத்தை எந்த எதிர்காலப் பயன்பாடு குறித்த நோக்கமும் இன்றி இங்கே கழித்தவர். இங்கிருந்து நாடுகடத்தப்பட்டவர் அந்த வகையில் மலேசியா மீதும் உங்கள் மீதும் எந்த சுயநல நோக்கமும் இன்றி கவலையும் அன்பும் எனக்கு உண்டு. நன்றிகள் மீண்டும்.
Sorry for posting in English, I don’t know how to post here in Tamil. I learnt much from this interview. I agree with almost all the views. Only on two I beg to differ. Hinduism, that is, Sanatana Dharma, supported Varnas, not jatis. There are only four Varnas. Thousands of Jathis must be peculiar to the indigenous, Dravidian, population. These jatis could affiliate themselves to any of the four Varnas. Actually, most non-Dalits classify themselves under either Kshatriyas or vaishyas. Secondly, Brahmans are not in the forefront in suppressing Dalits. They have very little to deal with them about. It is also not true that Brahmans or Hinduism discarded them to the periphery. It was probably Jainism because of its strict Ahimsa.
மிகத் தெளிவு. அருமை.
தோழர் மார்கஸ்-ன் கருத்துகள் மலேசிய வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள அறிவு ஜீவிகளுக்கும் தேவையான விளக்கம்.