பத்து வருடங்களுக்கு முந்தைய ஓர் இரவில் இலண்டனிலிருந்து தொலைபேசியில் அழைத்துத் தன்னை அறிமுகப்படுத்திக்ககொண்ட நவீன், மறுநாள் காலை விமானத்தில் என்னைச் சந்திப்பதற்காக பிரான்ஸ் வருவதாகச் சொன்னார். மலேசியாவில் ‘வல்லினம்’ என ஓர் இதழைத் நடத்துவதாகவும் சொன்னார். அதுவரை வல்லினம் எனக்கு அறிமுகமில்லை. அதுவரை மலேசியா இலக்கிய உலகோடு எனக்கு எந்தத் தொடர்பும் இருந்ததுமில்லை.
வாலிபக் கரும்புலி போல நவீன் தீவிரமாகத்தானிருந்தார். அவரோடு இரண்டு நாட்கள் உரையாடியபடியே பாரிஸைச் சுற்றினேன். நவீன் அப்போது இலக்கியத்தின் உள்மடிப்புகளையும் தரிசனத்தையும் குறித்துப் பேசுவதிலேயே குறியாயிருந்தார். நான் இலக்கியம் பேசியதைவிட இடதுசாரி அரசியல் மற்றும் பெரியாரியம் குறித்தே அதிகமும் நவீனுடன் பேசினேன். அந்த வெளிச்சத்தில் தமிழ் இலக்கியத்தைப் பரிசீலிக்க வேண்டும் என்றேன். பின்நவீனத்துவம் குறித்து ஒரு குத்துமதிப்பான உரையாடலையும் செய்து முடித்தோம். இப்படித்தான் எனக்கு வல்லினமும் மலேசிய இலக்கிய நண்பர்களும் அறிமுகமாகத் தொடங்கினர்.
இரண்டு வருடங்கள் கழித்து நான் மலேசியா போயிருந்தபோது வல்லினம் நண்பர்கள் என்னை வைத்து ஒரு கருத்தரங்கை நடத்தினார்கள். ‘தமிழில் நவீன இலக்கியம்’ என்ற தலைப்பில் என்னைப் பேசச் சொன்னார்கள். நானோ ‘தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறதா?’ எனத் தலைப்பைத் தலைகீழாக்கிப் பேசினேன். தமிழில் நவீன இலக்கியத்திற்கும் மதவாத்திற்கும் சாதியத்திற்கும் உள்ள தொடர்புகளைக் கட்டவிழ்த்துப் பேசியதே எனது உரையின் மையச் சரடானது.
அந்த அவையில் நான், “தமிழ் இலக்கியம் என்பது ஒன்று இல்லை. இங்கு பல்வேறு இலக்கியங்கள் இருக்கின்றன. பார்ப்பன இலக்கியம், வெள்ளாள இலக்கியம், தலித் இலக்கியம், பெண்கள் இலக்கியம், திருநங்கைகள் இலக்கியம் என ஒன்றுக்கொன்று பகையும் முரணும்கொண்ட பல்வேறு போக்குகள் இங்கு நிலவும்போது ஒடுக்குபவரின் இலக்கியத்தையும் ஒடுக்கப்படுபவர்களின் இலக்கியத்தையும் தமிழ் இலக்கியம் என்ற ஒரே வரையறைக்குள் மதிப்பிடுவது சரியற்றது. குறிப்பான அரசியல் – சூழல் அமைவுகளைப் பொறுத்துத்தான் நாம் இலக்கியப் பிரதிகளை அணுகவேண்டியிருக்கிறது. இந்தப் பிரதிகளுக்குப் பொதுவான விமர்சன அளவுகோல்களை நாம் உபயோகிப்பதில் நியாயமில்லை” என்றதுடன் ஜே.ஜே: சில குறிப்புகளும் புலிநகக்கொன்றையும் பிற்போக்குவாதக் குப்பைகள் என்றேன். சுஜாதாவை மூர்க்கத்துடன் வசைத்து நிராகரித்தேன். இப்படிச் சில பல கெரில்லாத் தாக்குதல்கள்.
எனது உரை கவனத்துடன் செவிமடுக்கப்பட்டு நான் கேள்விகளால் சூழப்பட்ட போது மிகுந்த உற்சாகத்துடன் பதிலளித்தேன். இந்த உரையாடல்கள் நான் அவர்களோடிருந்த மூன்று நாட்களும் தொடர்ந்தன. நவீன், சீ.முத்துசாமி, கோ. முனியாண்டி, மகாத்மன், சிவா பெரியண்ணன் எல்லோரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். அந்தப் பயணத்தில்தான் அவர்களோடு சேர்ந்து சிங்கை இளங்கோவனையும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.
அது மலேசியாவின் தமிழ் இலக்கிய பீடப் பம்மாத்துக்காரர்களோடு வல்லினம் தீவிரமான போரைத் தொடக்கியிருந்த காலம். அப்போதெல்லாம் பாடலாசிரியர் வைரமுத்துவை விமர்சிப்பதையே மலேசியாவின் இலக்கிய பீடங்கள் சாவான பாவமாகக் கருதிக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு பொருத்தி, பத்து வருடங்களிற்குள்ளாகவே மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முகத்தையே மாற்றிவைத்த சாதனை வல்லினத்தினுடையது. இன்றைய மலேசியத் தமிழ் இலக்கியத்தின் நவீன முகங்கள் வல்லினத்தோடு உருவானவையே.
நான் மலேசியாவிலிருந்து திரும்பியதிலிருந்து தொடர்ச்சியாக வல்லினத் தோழர்களுடன் உரையாடலை வைத்திருந்தேன். நவீனை நேர்காணல் செய்து வெளியிட்டேன். ”இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை” என்ற தலைப்பில் அது ”நான் எப்போது அடிமையாயிருந்தேன்” என்ற தொகுப்பிலுள்ளது. வல்லினம் இணையத்தில் ஆறுமாதங்கள் தொடர்ச்சியாக வாசகர்களின் கேள்விகளிற்குப் பதில் சொன்னேன். இலக்கியம் – ஈழம் – அரசியல் – சாதியொழிப்பு என விரிந்த தளத்தில் அந்தக் கேள்வி – பதில் பகுதி அமைந்தது நல்வாய்ப்பே.
2013-ல் யாழ்ப்பாணத்தில் 41-வது இலக்கியச் சந்திப்பு நடந்ததையொட்டி 808 பக்கங்களில் ‘குவர்னிகா’ என்ற இலக்கியத் தொகுப்பு நூலை வெளியிட்டோம். நான் பதிப்பாசிரியாகப் பொறுப்பேற்றிருந்தேன். இந்தத் தொகுப்பில் மலேசிய எழுத்துகளிற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய இனிய நிர்ப்பத்தத்தை அதற்குள் தமிழ் இலக்கியப் பரப்பில் தனது தீவிர செயற்பாட்டால் வல்லினம் உருவாக்கிக் காட்டியிருந்தது. குவர்னிகாவின் தொகுப்பு ஆசிரியர்களுள் ஒருவராக நவீனை பொறுப்பெடுக்கக் கேட்டோம். அந்தப் பொறுப்பை உற்சாகத்துடன் எற்று நவீன் உழைத்தார்.
வல்லினம் முகாமிலிருந்து அ. பாண்டியன், கே. பாலமுருகன், மகாத்மன், லதா, நவீன், யோகி, பூங்குழலி வீரன் ஆகியோரின் படைப்புகளோடு, நவீன் “மனித விடுதலைபோல கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று” என்ற மகுடத்தில் மா. சண்முக சிவாவைச் செய்திருந்த நீண்ட நேர்காணலும் குவர்னிகாவில் வெளியாகின. கோலாலம்பூரில் குவர்னிகாவை வெளியிட என்னை வல்லினம் தோழர்கள் அழைத்தார்கள்.
அந்த வெளியீட்டு நிகழ்வும் உற்சாகமானதாயிருந்தது. என்னுடைய இரண்டு மலேசியப் பயணங்களிற்கிடையே வல்லினம் குழு மேலும் விரிவடைந்து வலுப்பெற்றிருந்தது. புதிய தோழர்கள் அறிமுகமானார்கள். மலேசியாவிற்குத் தேவையான குவர்னிகா நூல்களை மொத்தமாகப் பெற்றுக்கொண்டு ஆயிரக்கணக்கான வெள்ளிகளைக் கையில் திணித்து தயாஜி என்னைத் திடுக்கிட வைத்தார். அப்படியொரு சம்பவம் என் வாழ்வில் முன்பும் நடந்ததில்லை, பின்பும் நிகழ்ந்ததில்லை. தாங்கள் வெளியிடும் புத்தகங்களை வெளியிட முன்பே எழுத்தாளர்களிற்கு ‘ரோயல்டி’ தொகையைக் கொடுத்துவிடும் வழக்கமும் வல்லினத்திற்கு உண்டு.
தமிழக – ஈழத்து நிலங்களில் உருவாகும் நவீன இலக்கியத்திற்கு நீண்ட வலுவான மரபுத் தொடர்ச்சியுள்ளது. பாரதியென்றும் புதுமைப்பித்தனென்றும் கு. அழகரிசாமியென்றும் எஸ், பொன்னுத்துரையென்றும் கைலாசபதியென்றும் டானியலென்றும் அது உண்டு. இந்த இரு நிலங்களிலும் இலக்கியச் செயற்பாடுகளிற்கு தோன்றாத் துணையாக தேசிய விடுதலைக் கருத்தியலும் இடதுசாரி இயக்கங்களும் நின்றிருந்தன. ஆனால் மலேசியாவில் தமிழ் இலக்கியத்தின் நிலை அதுவல்ல. குறிப்பாக வல்லினம் உருவாக அவ்வாறொரு பலமான மரபு இருந்திருக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிந்தைய மலேசியாவின் வரலாறே மதவாத வரலாறாகவும் பூமிபுத்ராக்களிற்கு முன்னுரிமை கொடுக்கும் வரலாறாயுமிருக்கிறது. இடதுசாரி அரசியல், சாதியொழிப்பு அரசியல் இவையெல்லாம் பல பத்தாண்டுகளாக மலேசியத் தமிழர்களிடம் இல்லை. இந்தப் பாலை நிலத்திலிருந்து வல்லினம் தான்தோன்றியாக முகிழ்த்ததே தமிழ் இலக்கியத்தின் அண்மைக்கால முக்கிய சாதனை என்று கருதுகிறேன்.
இந்தச் சாதனை எளிமையாக நிகழ்ந்த ஒன்றல்ல. வல்லினம் தோழர்கள் தொடர்ச்சியான இலக்கிய முகாம்களை நடத்தினார்கள். இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் இலக்கியவாதிகளையும் அரசியற் செயற்பாட்டாளர்களையும் அழைத்துக் கலந்துரையாடல்களை நிகழ்த்தினார்கள். நூல்களை வெளியிட்டார்கள். இலக்கியப் போலிகளோடு இடையறாமல் கருத்துப்போர் நிகழ்த்தினார்கள். வல்லினத்தின் இந்த வளர்ச்சிக்குப் பின்பு வல்லினம் தோழர்களது அயராத உழைப்பும் சொந்தப் பொருளிழப்புகளுமிருந்தன. தயாஜி வல்லினத்தில் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்று எழுதிய சிறுகதையில் உருவான சர்ச்சையைத் தொடர்ந்து அவர் பணிசெய்த அரசாங்க வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. எல்லாவற்றிலும் முக்கியமாக, எந்த முன்முடிவுகளுமின்றி புதிய சிந்தனைகளை வல்லினம் அணுகிப் பரீசீலித்ததும் புதிய கருத்துருவாக்கங்களை ஏற்று வரித்துக்கொண்டதும் அது நூறாவது இதழ்வரை நகரக் காரணமாயிருக்கின்றன.
வல்லினம் செயற்பாட்டாளர்கள் நடத்திய ஒரு நிர்வாகக் கூட்டத்தில் ஒருமுறை பார்வையாளனானாக அமர்ந்திருக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர்கள் முப்பது பேர்கள்வரை இருந்தார்கள். அனைவரும் முப்பதை ஒட்டிய வயதினர். அவர்களில் பாதிப்பேர் தமிழாசிரியர்கள், பாதிப்பேர் ஊடகத்துறை சார்ந்தவர்கள். என்னவொரு அணி!
நடுநடுவே வல்லினம் குழுவிலிருந்து சில தோழர்கள் விலகிச் செல்வதையும் நான் கவனிக்கிறேன். நமது சிறு பத்திரிகை மரபுக்குள் இந்த உடைதலும் சேருதலும் வழமைதானே. எனினும் விலகிச் சென்றவர்களும் ஓய்ந்துவிடாது தொடர்ச்சியான படைப்புச் செயற்பாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியானது. வல்லினத்திலிருந்து மேலும் கிளைகள் தழைக்கலாம்.
இலக்கியத்தோடு மட்டும் நின்றுவிடாது அதே தீவிரத்தோடு அரசியற் பிரச்சினைப்பாடுகளையும் வல்லினம் பேசுகிறது. அரசியல் பேசுவதே படைப்புச் செயற்பாட்டுக்குப் பங்கமானது என்றொரு போக்கிரித்தனமான வாதத்தை வல்லினம் ஏற்றுக்கொள்ளவில்லை. அண்மைய வல்லினம் இதழில் வெளியாகிய அ.மார்க்ஸின் நீண்ட நேர்காணல் அதற்கொரு சோற்றுப்பதம். தமிழ்த் தேசியத்திற்கும் திராவிடக் கருத்தியலுக்கும் இடையேயுள்ள முரண்களை விளக்கியதோடு திராவிடம் என்ற கருத்தாக்கத்தின் தோற்றம், அது இயங்கிய சூழல் போன்றவற்றை வரலாற்றுபூர்வமாக விளக்கியிருக்கும் நேர்காணலது.
கற்றுக்கொள்ளல் என்பது வெளியிலிருப்பவற்றை மூளைக்குள் திணிப்பதல்ல, மாறாக மூளைக்குள் ஏற்கனவே அடைத்துக்கொண்டு இருப்பவற்றை வெளியேற்றுவதே என்றார் தந்தை பெரியார். அந்த வெளியேற்றத்தைத்தான் கொஞ்சம் கரடுமுரடாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறது வல்லினம்.
“தான்தோன்றியாக முகிழ்ந்த வல்லினம்.”வல்லினத்தின் மீதன தங்களின் இலக்கிய பார்வை அற்புதம்ம்