மனஊக்கமும் செயலூக்கமும்

இமையம்‘பறை’ என்ற ஆய்விதழின் மூலம் ‘வல்லினம்’ என்ற அமைப்பை 2014ல் அறிந்தேன். இதழின் உள்ளடக்கம் முக்கியமானதாக தோன்றியது. அவ்விதழுடன் மாணவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட ‘யாழ்’ என்ற ஓர் இதழும் இலவசமாக இணைக்கப்பட்டிருந்தது. ஏன் தமிழ்நாட்டில் இதுபோன்ற முயற்சிகள் வரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலுள்ளவர்கள் கல்வி குறித்து வைத்திருக்கும் கற்பிதம் ஆபத்தானது. மலேசியாவிலுள்ள இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், கல்வி குறித்து வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள இலக்கியவாதிகள், அறிவு ஜீவிகள், ஆசிரியர்கள் கல்வி குறித்து வைத்திருக்கும் மதிப்பிடுகளுக்குமிடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை ‘யாழ்’ – எனக்கு உணர்த்தியது. இதழை வெளியிடுவது மட்டுமல்ல, அதை மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் விதமும் முக்கியம்.

‘பறை’ இதழிற்கு அடுத்தாக நான் படித்தது வல்லினம் பதிப்பகம் 2010ல் வெளியிட்டிருந்த ‘மலேசிய சிங்கப்பூர்’ சிறப்பிதழ். சிங்கப்பூரிலுள்ள இலக்கியவாதிகளையும், இலக்கிய படைப்புகளையும், அதே போன்று மலேசியாவிலுள்ள இலக்கியவாதிகளையும், இலக்கிய படைப்புகளையும் ஓரளவு புரிந்துகொள்ள இந்த சிறப்பிதழ் எனக்கு உதவியது. சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்கள் குறித்து, எழுத்துக்கள் குறித்து நான் வைத்திருந்த மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ள வைத்தது இந்த சிறப்பிதழ். நல்ல ஆவணம் ‘மலேசிய சிங்கப்பூர்’ சிறப்பிதழ்.

ம.நவீன் எழுதிய ‘வெறிநாய்களுடன் விளையாடுதல்’, ‘மண்டைஓடி’, சர்வம் பிரம்மாஸ்மி, பூங்குழலியின் ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’, அ.ரங்கசாமியின் ‘சிவகங்கை முதல் சீசாங்காங்’வரை, ‘மஹாத்மன் சிறுகதைகள்’ என்று வல்லினம் பதிப்பகத்தின் வெளியீடுகள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். வல்லினம் பதிப்பகத்தின் வெளியீடுகளின் வழியாகத்தான் மலேசிய படைப்புலகம் குறித்த தெளிவு எனக்கு ஏற்பட்டது. நான் படித்தவரையில் தரமற்றது, ஒதுக்கித்தள்ள வேண்டியது என்று வல்லினம் பதிப்பகத்தின் எந்த நூலையும் கூறமுடியாது.

வல்லினம் பதிப்பகத்தின் சார்பாக நடத்தப்படும் vallinam.com.my என்ற இணைய இதழை தொடர்ந்து படிக்கிறேன். தொடர்ந்து படிப்பதற்கான விஷயங்கள் அதில் வருகின்றன. கட்டுரைகள், சிறுகதைகள், நூல்விமர்சனங்கள் படிக்கும்படியாகவும், பொருட்படுத்தும் படியாகவும் இருக்கின்றன. அக்கப்போர், ஊர்வம்புகள் இல்லை. தற்காலத்தில் மலேசியாவில் யார்யார் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய எழுத்தின் வலிமை என்ன, அவர்களுடைய இலக்கிய பங்களிப்பு என்ன என்பதையும் அறிய முடிகிறது. அதோடு மலேசிய இலக்கியப் போக்குகளையும் அறிய முடிகிறது.

அச்சில் வந்த ‘வல்லினம்’ இதழ்களையும், வல்லினம் பதிப்பகத்தின் வெளியீடுகளையும், வல்லினம் பதிப்பகத்தால் நடத்தப்படும் vallinam.com.my இணைய இதழின் வழியாகவும்தான் நான் மலேசிய எழுத்தாளர்களையும், அவர்களுடைய எழுத்துக்களையும் அறிந்தேன். மலேசிய தமிழர்களின் வாழ்க்கையையும், அவர்களுடைய தோட்ட அனுபவங்களையும் அறிந்தேன். வல்லினம் செய்துகொண்டிருப்பது – மலேசிய சமூக வாழ்வை அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் வாழ்வை ஆவணப்படுத்துவது, இலக்கியமாக உருவாக்குவது, ஆவணப்படுத்தியதை, இலக்கியப்படைப்பாக மாற்றியதை உலகறியச் செய்வது என்ற வேலையை செய்துகொண்டிருக்கிறது. முந்தைய தலைமுறையின் வாழ்க்கைதான் அடுத்த தலைமுறைக்கான கல்வி. வல்லினம் பதிப்பகம் அடுத்தத் தலைமுறைக்கான கல்வியை உருவாக்குகிற வேலையில் இருக்கிறது. தன்னுடைய தொடர் செயல்பாடுகளால் மலேசிய தமிழர்கள் இதுவரை நம்பியிருந்த இலக்கியங்கள் குறித்த நம்பிக்கைகளில் பெரிய உடைப்பை செய்திருக்கிறது. நவீன இலக்கியம் குறித்த பார்வையை ஏற்படுத்தியிருக்கிறது. உலக இலக்கியங்களை அறிந்துகொள்வதற்கான வாசலை திறந்துவிட்டிருக்கிறது.

ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட அமைப்புகள், நிறுவனங்கள் செயல்படும். அமைப்புகளின், நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்படுவதும், சமூக வளர்ச்சிக்காக, கலாச்சார, மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுகிற அமைப்புகளும், நிறுவனங்களும் ஒன்றல்ல. பணத்திற்காக, புகழிற்காக, விளம்பரத்திற்காக லாபநோக்கோடு செல்வாக்கோடும், புகழோடும் செயல்படும் நிறுவனங்களைக்காட்டிலும் புகழற்ற, லாபமற்ற புத்தகவெளியீட்டு நிறுவனத்தை நடத்துவது முக்கியமானது. புத்தகம் அறிவுத்துறையோடு, கலாச்சார பண்பாட்டுத்துறையோடு நேரடியான உறவுகொண்டது. ‘ஆவிகள் உலகம்’, ‘டைம் பாஸ்’, ‘பாக்கெட் நாவல்கள்’, ‘ஜோதிடம்’, பொதுத் தேர்வில் வெற்றி பெறுவதற்காக தயாரிக்கப்படும் ‘வினா வங்கி’ போன்றவற்றை வெளியிடும் நிறுவனங்களை அறிவுத்துறையோடு கலாச்சார பண்பாட்டுதுறையோடு தொடர்புடையது என்று சொல்ல முடியாது. தனிநபர்களைவிட அமைப்புகள், நிறுவனங்கள் முக்கியம். வல்லினம் பதிப்பகத்தின் தரம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அதனுடைய வெளியீடுகளே சொல்லும்.

வல்லினம் பதிப்பகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் மலேசிய இலக்கியங்களை பிறநாட்டினர் அறியவும், பிறநாட்டு இலக்கியங்களை மலேசிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிற நிகழ்வாகவும் இருக்கிறது. இலக்கிய கூட்டங்கள் நடத்தப்படுவதின் நோக்கம் வாசகர்களுக்கிடையிலான உரையாடலை ஏற்படுத்துவதுதான். முக்கியமாக எழுத்தாளர்களுக்கு, அந்த வகையில் வல்லினம் பதிப்பகம் சலிப்பின்றி இலக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்தி அதன் மூலமாக இலக்கியம்சார்ந்த, கலை சார்ந்த, அறிவுத்துறை சார்ந்த உரையாடலை மலேசியாவில் நிகழ்த்திவருகிறது. இதுபோன்ற உரையாடல்களின் மூலமாகத்தான் அறிவுப்பரவலை ஏற்படுத்த முடியும். அறிவுப்பரவலை ஏற்படுத்துவதுதான் இலக்கிய படைப்பின் அடிப்படை.

வல்லினம் பதிப்பகம் தன்னுடைய வெளியீடுகளின் வழியாகவும், தன்னுடைய செயல்பாடுகளின் வழியாகவும் மலேசிய இலக்கிய, அறிவுச் சூழலில் மன ஊக்கத்தாலும், செயலூக்கத்தாலும் கைவிளக்கு ஒன்றை ஏற்றியிருக்கிறது. விளக்கை ஏற்றியது முக்கியம். அதை விடமுக்கியம் ஏற்றிய விளக்கை அணையாமல் காப்பது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...