வல்லினம்: காத்திரமும் வெகுஜனத்தன்மையும்

அ.மார்க்ஸ்வல்லினம் நூறாவது இதழ் 472 பக்கங்களில் வெளிவருகிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிறு பத்திரிகைக்கு இது ஒரு மிகப் பெரிய சாதனைதான். தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் முக்கிய தடம் பத்தித்த முதல் சிறு பத்திரிகை என இலக்கிய வரலாறு எழுதுபவர்களால் கணிக்கப்படும் எங்களின் ‘நிறப்பிரிகை’ சுமார் நான்காண்டுகளில் மொத்தம் 12 இதழ்கள்தான் வெளிவந்தன. 2007-ல் தொடங்கப்பட்ட ‘வல்லினம்’ 2017-ல் அதாவது பத்தாண்டுகளில் நூறு இதழ்கள், ஆண்டுக்குச் சராசரியாக பத்து இதழ்கள், அதாவது கிட்டத்தட்ட மாதந்தோறும் தவறாமல் இதழ்கள் வெளிவந்துள்ளன. பெரிய மூலதனப் பின்புலம் இல்லாமல் இயங்கும் ஒரு சிற்றிதழைப் பொருத்த மட்டில் இது ஒரு மிகப் பெரிய சாதனைதான்.

தமிழ்ச் சிற்றிதழ் வரலாறு என்றால் அதை மணிக்கொடியிலிருந்து (1933) தொடங்குவது வழக்கம்.  வணிக அடிப்படையில் பெரு மூலதனத்துடன் ஆனந்தவிகடன் முதலான இதழ்கள் வெளிவந்த காலத்தில் உற்பத்தி, விநியோகம், உள்ளடக்கம் என எல்லா அம்சங்களிலும் வேறுபட்டதாகக் கண்டு மணிக்கொடியைச் சிற்றிதழ் என்பர். ஆனால் இப்படியான ஒரு ‘பத்திரிகைத் தொழில்’ உருவாகாத காலகட்டத்தில் வெளிவந்த ‘சித்தாந்த தீபிகை’. ‘ஒருபைசாத் தமிழன்’, ‘தாருல் இஸ்லாம்’, ‘ஆரிய தர்மம்’. ஏன் பாரதியின் ‘இந்தியா’ மற்றும் புற்றீசல் போல் 19-ம் நூற்றாண்டில் உருவான சாதிப் பத்திரிகைகள் எல்லாமே ஒருவகையில் சிறு பத்திரிகைகள்தான். ஒரு சிறு குழுமம் சார்ந்து உற்பத்தி செய்யப்பட்டு, வினியோகிக்கப்பட்டு, நுகரப்பட்டவைதான். இப்படியாக ஒரு சிறு குழுமம் சார்ந்து இலக்கிய இதழ்கள் உருவாகும்போது அத்துடன் இணைந்து கொள்ளும் ‘elitism’ ஒரு வகையில் சிறு பத்திரிகைகளின் சாபக்கேடு எனலாம். அதுவே சிறுபத்திரிகைகளின் சிறப்பு எனக் கொண்டாடுவோரும் உண்டு. எனினும் இத்தகைய elitist அணுகல் முறையின் விளைவாக ஏற்படும் சுய ஒதுக்கம் பெரிய அளவில் தமிழகச் சிறு பத்திரிகைகளைப் பாதித்தது என்பதே என் கருத்து. அரசியலை எழுதுவதே பாவம் என்கிற அளவு ஒரு கருத்தாக்கம் தமிழகச் சிறு பத்திரிகையாளர்களிடம் மலிந்திருந்தது இப்படித்தான். நவீன தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு அரசியல் இடையீடாக உதித்த பெரியார் குறித்து நிறப்பிரிகை தோன்றும் வரை தமிழகச் சிற்றிதழ்கள் தீண்டாமையைக் கடைபிடிக்க நேர்ந்தது இப்படித்தான்.

தமிழகச் சிறு பத்திரிகைகளின் இன்னொரு குறை அவற்றிற்கு தமிழ் ஒரு ‘உலகளாவிய மொழி’ என்கிற பிரக்ஞையும் இருந்ததில்லை என்பதுதான். இந்த விடயத்தில் நிறப்பிரிகையும் எல்லாச் சிற்றிதழ்களையும் போலத்தான் நடந்து கொண்டது. தமிழ் ஒரு சிறு புவியியற் பகுதிக்குள் முடங்கிய மொழி அல்ல. இந்தப் பிரக்ஞை தமிழகத்தவர்களுக்கு இருந்ததில்லை. கு.அழகிரிசாமி போன்று சற்றே தமிழகச் சூழலிலிருந்து கழன்று கொண்டு ஒரு ஐந்தாண்டு காலம் மலாயாவில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர்களுக்குத்தான் அந்தப் பிரக்ஞை முதலில் வந்தது எனலாம். அவர் தமிழகத்திற்குத் திரும்பி வந்து அன்றைய ‘சரஸ்வதி’ இதழில் மலாயா இலக்கியச் சூழல், எழுத்தாளர்கள் ஆகியோர் குறித்து எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று. 1940 களின் பிற்பகுதியில்தான் மலாயாவில் சிறுகதை வடிவம் உருவானது என அவர் அந்தக் கட்டுரையில் சொல்வார். ஒரு நாற்பது சிறுகதை எழுத்தாளர்கள் ஓரளவு தேறுவார்கள் என்பார். கிட்டத்தட்ட பாதிப்பேர் தேறுவார்கள் என அவர் சொன்னது ஒரு மிக முக்கியமான விடயம். அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அங்குச் சென்ற  சுந்தரராமசாமி அவர்கள் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஒரு சிறுகதைப்போட்டியில் ஒரு கதையும் தேறவில்லை என நிராகரித்த செயலை அழகிரிசாமியின் கூற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அக்காலத் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை,  அழகிரிசாமி ஒரு வெகுஜனப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர். சுந்தர ராமசாமி முழுக்க முழுக்கத் தன்னை ஒரு சிற்றிதழ்ச் சூழலுக்குள் முடக்கிக் கொண்டவர். இது தவிர இந்த இரண்டு நிலைகளையும் வேறெப்படி விளங்கிக் கொள்ள இயலும்.

வல்லினத்தின் தனிச் சிறப்பாக நான் காண்பது அது மலேசிய – சிங்கைச் சூழலில் உருவான ஒரு இதழ் என்ற போதிலும் தமிழ் ஒரு உலகளாவிய மொழி என்கிற பிரக்ஞையுடன் அது செயல்பட்டு வருகிறது என்பதுதான். அது உருவான காலகட்டமும் அதற்குத் தோதாக அமைந்தது. புதிதாக உருவாகியுள்ள இணையம் முதலான தகவல் தொழில்நுட்பப் புரட்சி, உலகெங்கிலும் பரவியுள்ள ஈழத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள், உலக மயப் பின்னணியில் பயணச் செலவுகள் குறைந்தமை முதலானவை இதன் முக்கிய பின்னணிகளாக அமைகின்றன. அதன் விளைவாக வல்லினத்தில் நான் காணும் மிக முக்கியமான சிறப்பு அது தமிழ்ச் சிற்றிதழ்ப் பாரம்பரியத்தின் ‘காத்திரத்தை’த் தொடர்ந்த அதே நேரத்தில் அது தன் வெகுஜனத் தன்மையையும் இழக்கவில்லை. அது தோன்றிய காலம் முதல் ரெங்கசாமி, கோ.முனியாண்டி, சீ.முத்துசாமி முதலான மூத்த எழுத்தாளர்கள் முதல் சண்முகசிவா, மஹாத்மன் போன்ற உலகத் தரமான சிறுகதை எழுத்தளர்கள், சிங்கை இளங்கோவன் போன்ற தமிழின் மிக முக்கியமான அரங்கக் கலைஞர்கள், உமா கதிர் போன்ற அற்புதமான புதிய எழுத்தாளர்கள், பல அருமையான இளம் எழுத்தாளர்கள் என்பதாக அது ஒரு எல்லோருக்குமான பத்திரிகையாக அமைந்தது.

புதிய இலக்கியக் கோட்பாடுகள், புதிய எழுத்து முறைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்வது, அவ்வடிவங்களை முயற்சிப்பது என்பது தமிழகச் சிற்றிதழ்களின் ஒரு முக்கியமான பங்களிப்பு. இந்தப் போக்கிற்கு சிறுபத்திரிகை உலகில் விதிவிலக்கும் உண்டு. புதிய இலக்கியக் கோட்பாடுகளை நிராகரித்தவர்களும் சிற்றிதழ்ப் பாரம்பரியத்தில் உண்டு. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு சுந்தரராமசாமி. மீண்டும் அவரைச் சொல்வதாக நினைக்க வேண்டாம். அவர் தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இந்தப் புதிய இலக்கியக் கோட்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தவர் அவர். தமிழகச் சிற்றிதழ்ப் பாரம்பரியத்தின் ஒரு வகைமாதிரியான பிரதிநிதி என்கிற வகையில் அவரை மீண்டும் சுட்ட வேண்டியதாயிற்று. எனினும் இது தமிழகச் சிற்றிதழ்களின் பொதுப் போக்கு அல்ல. அவை தொடர்ந்து புதிய கோட்பாடுகளின் அறிமுகத்திற்கு முக்கியத்துவம் அளித்து வந்தன. கோட்பாடுகளுக்கு மட்டுமின்றி அவை சார்ந்த எழுத்து முறைகளையும் தீவிரமாக முன்னெடுத்தன. அதன் மூலம் தமிழ் அடைந்த பயன்கள் பல. எனினும் சில நேரங்களில் ‘அ புனைவுகள்’ அது இது என முழுக்க முழுக்க அப்படியான வடிவங்களை அரைகுறைப் புரிதல்களுடன் எழுதி நிறப்பிப் பொது வாசகர்களிடமிருந்து அவை அந்நியமும் ஆயின. வல்லினம் இந்தத் தவறையும் செய்யவில்லை. தமிழகத்திலிருந்தும், ஈழத்திலிருந்தும் இப்படியான இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகம் செய்தவர்களை அழைத்து பயிற்சி அரங்குகளைத் தொடர்ந்து நடத்தி வரும் வல்லினம் அதே நேரத்தில் பழைய முறைகளில் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கும் தொடர்ந்து இடமளித்து வருவது குறிப்பிடத் தக்கது.

‘மதகுகளின் முதுகில் உறங்கிய மீன்கள்’ என நினைவு. முனியாண்டி அவர்களின் சிறுகதை. இரண்டாம் உலகப்போர் மலேசியாவிற்குள் அடி எடுத்து வைக்கும் காலம். அங்கு எவ்வாறு பெரியாரின் வருகையும், அவரது கொள்கைகளைப் பின்பற்றுவோரின் செயல்பாடுகளும் தமிழ்த் தோட்டத் தொழிலாளிகள் மத்தியில் அரசியல் பிரக்ஞையையும், உரிமை வேட்கையையும் ஊட்டுவதாக அமைந்தன என்பதற்கான ஒரு அருமையான வரலாற்றுப் பதிவு அது.

வெறும் சிற்றிதழ் எழுத்தாளர்களைக் கொண்டு நிரப்புவது என்பதாக அமையாமல் சமகால சமூகப் போராளிகளான வழக்குரைஞர் பசுபதி, மனித உரிமைப் போராளி ஆறுமுகம், ஹிண்ட்ராஃப் போராட்டத்தை முன்னெடுத்த பி.உதயகுமார், மலேசியா கினி தமிழ் இதழ்ப் பொறுப்பாளர் காத்தையா ஆகியோரும் வல்லினத்தில் இடம் பெறுவதும் இணங்கிச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

வல்லினம் ஒரு கூட்டு உழைப்பு என்பதை அறிவேன். இருந்த போதிலும் மையமாக இருந்து எல்லோரையும் இணைத்துச் செயல்படும் நவீனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...