ஒரு சிறுகதையை எழுதி முடித்தவுடன் ஈராயிரம் ஆண்டுகளாய் தொலைந்து வரும் கதை இழையைக் கண்டுபிடித்துவிடுகிறது.
புராதனக் கதை இழைகள் மறதியில் காணாமல் போய்த்தான் இருக்கும். ஒரு நகரம் பாழடைந்து ஜனங்கள் வெளியேறிச் செல்கிற கதைகள் உண்டு. எல்லா ஊரிலும் பஞ்சம் ஏற்பட்டு மாடுகளும் மனிதர்களைப்போல் எலும்பு துருத்திய காலத்தில் இந்தியாவைவிட்டு தமிழக கிராமங்களைவிட்டு வெளியேறிய ஜனங்களின் தெருப்பேச்சும் கதைகளும் நவீனத் தொன்மங்களாக உருமாறி மலேயாத்தமிழர்களின் மூதந்தையரின் மூதந்தைகள் புதைந்த கபாலங்களில் உறங்கும் மீள்கதைகளாக எழுத்தாளர்கள் பலரும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மலைகளின் இயற்கைக்குள்ளாக தன்னை வரைந்து கொண்டிருக்கிறாள் கதைசொல்லி. அவள் தான் கொத்தா திங்கியை ஆண்ட சுல்தான் மக்மூட் என்பவனின் படைத்தளபதியான லெட்சுமனா பெந்தான் என்பவனின் மனைவி நிறைமாத சூலியாக இருந்தாள். அவள் சுல்தானின் அரண்மனை தோட்டத்தில் பழுத்திருந்த அதிசிய கனியான டுரியான் ஒன்றை மரமேறி உச்சிக்கிளையில் பறித்துத் தின்று விட்டாள் என்பதற்காக அவள் வயிற்றை கீறிப்பார்த்த கதை எல்லா மலாய்காரர்களுக்கும் தெரியும். அவள் கணவனான பொந்தான் கடற்கொள்ளையர்களை விரட்டியடிக்கப் போயிருந்த சமயத்தில் நடந்த சம்பவம் இது. லட்சுமணா பொந்தான் திரும்பி வந்து தன் மனைவி அடைந்த கதியைக் கண்டு சுண்ணாம்பு மலையின் மீது தன் பட்டயத்தை உடைத்து அழுகிறான். வெகுண்டு எழுந்தவன் கல்லில் விழுந்து மலையில் தடுக்கி ஓடி சுல்தானோடு போரிட்டு கொன்றுவிடுகிறான் ‘மக்மூட்’டை. லட்சுமணா பெந்தானின் மனைவி துரியான் பழத்தின் வாசனையாக எல்லா மலைப்பாதையிலும் அலைந்து கொண்டிருப்பது மலேயாவின் தொல்கதையாக மாறிவிட்டிருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் அவள் டுரியான் பழத்தை பறித்துகொடுக்கக் கூடியவள். அந்தக்கனியின் பாதையில் டுரியான் மரத்தோட்டங்களும் வனமர ரப்பர் தோட்டங்களில் கசிந்துகொண்டிருக்கும் நம் மூதந்தையரின் கதைகளை இந்த டுரியான் கனிப்பெண் ஒவ்வொரு இன மக்களுக்கும் கதை போட்டு மறைகிறாள். கதை மரபுக்கு இன எல்லைகள் கிடையாது. எந்த இனத்தோடும் கதை கூடிவிடும். போர்ஹேயும் கால்வினோவும் ஆயிரத்தோரு இரவுகளும் டெகாமெரான் கதைகளும் விக்கிரமாதித்தன் கதைகளும் புத்த ஜாதக கதைகளும் நமக்குள் சென்று வேறொரு ஆதிவாசியின் குரலில் கதைபோடத் தொடங்கிவிடும்.
எனவே தான் மலேயா பெண்ணின் சோக வினோதக் கதை டுரியான் கதையின் வாசனையாக வந்து தொடர்கிறது. சுண்ணாம்பு மலைப்பாறைகளில் அவள் ஒளிந்து திரிவதை நானும் பார்த்திருக்கிறேன் . ‘ஈபோ’ வின் ஈயச்சுரங்கத்தை நான் பார்க்கச் சென்றபோது அவள் அங்கே மறைந்து திரிவதை டுரியானின் வாசனை என்னை தொடர்ந்து வருவதாகப் பார்த்தேன். இந்தக் கனிப்பெண் நான் இந்தியாவுக்குத் திரும்பும்போது என்னோடு பயணிப்பவளாக, விமானத்தில் தூங்கும் தேவதையாகப் பார்த்தேன். நான் அந்த கனிப்பெண்ணைத்தான், முடிவற்ற காதலைப் பரவவிடும் சங்கீதக்காரியாக, என் புதியகதை சொல்லியாக எதிரே அமரவைத்திருக்கிறேன். அவள் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்.
கனிப்பெண் சிதறுண்ட தன் வனங்களின் குரல்வளையாக ஒட்டிக்கொண்டிருக்கிறாள். ஏற்கெனவே நாகரீகங்கள் உடைந்து சிதறிய தொன்மங்களில் திரும்ப வந்து டுரியான் தாவரங்களுக்குள் அவற்றின் இலை நரம்புகளாகப் பதிந்து, பழுத்து உதிர்ந்துகொண்டிருக்கிற இலைக்கூட்டத்துக்குள் தன் கசந்த வாழ்வை டுரியான் துண்டுகளாகக் கீறி சொல் கதைகளாக சந்ததிகளுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறாள். வல்லினம் நவீனப் புனைகதையாளர்களுக்கு அரூபத்தில் திரியும் கனிப்பெண் உலகைச்சுற்றிப் பறந்து கோடுபோட்டு எல்லாப் படைப்பாளர்களையும் இணைக்கிறாள். இவ்வேளையில் நானும் அவள் இங்கு இருக்கிறாளா என்பதை கதையின் வாசனையில் அறிந்துகொள்கிறேன். இந்தப் பசிபிக் விடுதியின் மரக்கூடத்திற்கு கதைசொல்லியாக, 17.9.2017-ல் அவளும் சிறு நம்பிக்கையாக இருக்கிறாள். இனி நீங்கள் எழுதப்போகும் எதிர்காலக் கதைகளுக்குள் மரபாக வந்துகொண்டிருப்பாள்.
மலேசியாவில் நம் மூதாதையரின் இலையுதிர்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 23/9/2017-ல் மதியத் தூக்கத்தின்போது மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமி அவர்களை எழுப்பியதுகூடத் தவறுதான். தமிழர் வெளியேறிய பன்னெடுங்காலப் பாதையில் மனிதன் வெகுதொலைவில் இருந்து மலைகளில் எல்லாம் சென்று மைவரையில் வாழும் மலேசியப்பழங்குடி மந்திரங்களோடு பழகி பாசிதங்களை மென்று உறங்கிய அகதிப் புராணங்களில் பலியான தலைகள் மிதந்து கொண்டிருக்கும் இறந்தவர்களின் கனவுகளை மீளாக்கம் செய்வதற்கு ரங்கசாமி அவர்களின் நண்பகல் துயிலில் தோன்றி மறையும் கனவுத் திசுக்களும் கூட நமக்கு உந்துதலாக இருக்குமில்லையா? மலைகளில் இருந்து ஒரு நூற்றாண்டு காலத் தனிமை வாசத்தை உங்களில் யார் காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் ‘மக்காந்தோ’வைப் போலவும் எழுதப் போகிறீர்கள்?
இன்று மாறிவரும் காலமே பெருநகரின் கோர வேர்கள் மலைகளின் தேநீரை உறிஞ்சி சீன, மலாய், தமிழரின் உறங்காத ரெஸ்டாரன்ட் உரையாடல்கள் நாற்புறச் சாலைகளில் மனோ வேகத்தில் இனோவா கார்களில் நாமும் கூடவே ஓடிக்கொண்டிருக்கும் போது… சக்கரங்களில் ஊளையிடும் நிழல்களின் வேகம்… அமெரிக்காவில் எண், ஏழ்கரச்சாலை விபத்துகளைத் தடுக்க வனந்திரியும் அரிய வகைக் காட்டெருதுகளைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லவும் அரசாங்கம் பட்டங்களையும் விருதுகளையும் அறிவித்தது. அந்தக் காட்டெருதுகளின் அலாதியையும் கொன்று அவற்றின் நாக்கை மட்டும் அறுத்து ஒவ்வொரு சுடப்பட்ட எருதின் நாக்குகளையும் நாணல் வாரில் கோர்த்துக் கொண்டு வருபவர்களுக்கு ‘காட்டெருது பெல்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அங்கே அரிய வகை எருதுகளும் வாழ்வும் அழிக்கப்பட்டது போல் இங்கும் பழங்குடிகள் மியூசியம் ஆக்கப்பட்டு ஒவ்வொரு வாழ்பொருளும் மூங்கில் பதுமைகளும் இசைக்கருவிகளும் இருபது வெள்ளிகளுக்கு வாங்கும் டிக்கட்டுகளாகிவிடும். பழங்குடிகளும் அருங்காட்சி குடிசைகளாக்கப்பட்டு செம்பனைகளால் சுற்றி வளைக்கப்பட்ட வாழ்வு, கார்ப்பரேட் ரோடுகளும் தீவுகளும் படைப்பாளிகளை தொலைதூர மலைகளில் உலவும் மலாயா விலங்கினங்களின் குறியீடுகளாக மாற்றியுள்ளதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
மனித குலம் அல்லாத முதல் கதை மனிதனுக்கு முன் சொல்லப்பட்ட அண்டகோளக் கூழாங்கற்கள் நமக்கு மரபாக உள்ளதை சுமேரிய மூதாய் ‘தியாமத்’ விலங்குகளின் கதைகளையும் கடல், மலைகள், வெளிகள், உடுகணங்களைத்தான் கதைகளாகச் சொல்லி வந்தாள் முதல் கதை சொல்லி. நீர்ச்சேவல், தீச்சேவல், வனமரச்சேவல், தாவரச்சேவல், உலோகச்சேவல் அனைத்துமே டைனசரஸின் புரதச்சங்கிலித் தொடர்ச்சியின் எச்சங்களாக இன்று நாம் மனித மையத்தையும் புராணங்களையும் மெரடோக்கின் வாளில் குருதி கசியும் முதல் பெண் கடவுளான ‘கதைசொல்லி தியாமத்’தின் வதையில் இருந்து பெற்றிருக்கிறோம். எல்லாப் புராணங்களிலும் அரக்கிகளாகவும் பூத கணங்களாகவும் அவுணர்களாகவும் புனிதக்கடவுளின் (ஆண்) அதிகாரத்தின் கீழ் யுத்தகாண்டம், சூர்ப்பனகை வதை படலம், திரௌபதி வஸ்திராபானமென கூத்து மரபாலும் கதைகள் கூறப்படுவதில் இருந்து மனித மையம் தனக்குள் உள்ளுரையாக உள்ள நிராகரிக்கப்பட்ட பெண்களின் குரல் வளையானது சாமியாரின் கொடுவாளின் முன் ஷெஹரசாத் ஒவ்வொரு இரவாகக் கதை போடுவது 1001 -இரவுகள் என்று கதைக்குள் கதையாக ஒவ்வொரு ராத்திரிகளும் சொல்லப்பட்டவை முதல் கதைசொல்லி துன்யஷாத் சொல்ல அதை சகோதரி ஷெஹரசாத் கேட்டு ஷாரியாருக்குச் சொல்லப்பட்டதால் பெண் என்பவள் ஆயிரம் குரல் வளைகள் கொண்ட கதை மரபாகிறாள்.
வல்லினம் எனக்கு அனுப்பி வைத்த ஆறு சிறுகதைகளில் வேட வாசகனாக நுழைந்து பார்க்கிறேன். செட்டி மேகங்களோடு பர்மாவுக்குக் கப்பலேறிய எனது தாத்தாவின் இசைநாடகக் கலைஞர்கள் மலேசியா வரை நாடகம் போட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அந்த ஒப்பற்ற விதூஷகன் பாஸ்கரதாஸின் கோட்டுப்பைகளில் இருக்கிற மலேசிய இசை நாடக மேதைகளின் கடிதங்களும் நொறுங்கி இருந்தன.
பர்மாவில் தினகரன் பத்திரிகையைத் தொடங்கிய என் அம்மாச்சி அமிர்தம் பாட்டியின் அண்ணன் தினகரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ.ஹானர்ஸ் படித்துவிட்டு கலெக்டர் ஆனதும் அந்த அதிகார உத்தியோகத்தை உதறிவிட்டு பர்மாக் கப்பலின் துணைக்கேப்டனாக தென்சீனக் கடல் தீவுகளுக்கெல்லாம் போய் கண்டடைந்தவற்றைப் புனைவாக்கி எட்டு ஆண்டுகளாக எழுதி முடிந்திருந்த ‘த’ நாவல். அதில் ரெனாவ் மரண அணிவகுப்பை எழுதுவதற்கான சாத்தியங்கள் புனைவில் இருக்கிறதென்று போர்ஹேயின் சிறுகதைப்புதிரில் இருந்து கண்டுபிடித்தேன் .இடாலோ கால்வினோவின் ‘புலப்படாத நகரங்கள்’ நாவல்தான் அதன் அரூபமான உத்தி விஷேசங்கள், அவை தினகரனைப் பல ’நான்’களாக உருமாற்றி இருந்தது. தமிழ் உரைநடை இலக்கியத்தில் இருநூறு வருட சரித்திரத்தை விழுங்கிய புதுமைப்பித்தன் என்ற ஹடயோகியின் நாக்கு கபாடபுரத்தையும் விழுங்கியது.
கலைஞனின் கருத்துக்கான பொருளாக மனித வாழ்க்கையின் ஒழுக்க நெறி இருக்கிறது. ஆனால் கலையின் ஒழுக்க நெறியானது இரு அக உலகங்களுக்கிடையிலான ஊடல், பிரிதல், பிரிவு நிமித்தம் ஏற்படும் பாலைகளில் நிலவெளியாக விரியும் துயரக்காற்றின் ஆழத்தைப் பொருத்ததும் நேர்த்தியாகப் பயன்படுத்தப்படும் சாய்வற்ற பிறதன்னிலைகளின் விதியாக உள்ளது. எந்தக் கலைஞனும் எதையும் நிரூபிக்க விரும்பவில்லை. எதிர் உலகின் சாயைகளை அழகியலிலும் அ-அழகியலிலும் கொண்டு தருவதாகும் நவீனச் சிறுகதைகளின் புனைவு விரைவு கொள்ளும் விலங்காகும்.
எந்தக்கலைஞனும் அற நூல்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை. கலைஞனுக்குள் இருக்கும் அறநூலின் மீதான ஆதரவு அவனது படைப்பு விதத்தில் போதிக்க விரும்புகிறது. நா.பா, மு.வ, தாள்கோட்டையாக இருந்த ஜெயகாந்தன் வரை கருத்துருவ லட்சிய முலாம் (ஈப்போவின் ஈயம் தான்) பூசப்பட்டு உலவி வந்த எதார்த்தவாதத்தின் காலம் முடிந்து தட்டையாகக் கிடந்த கதைப்பரப்பை புனைவு உலகமாக உருட்டி பிரபஞ்ச வெளிக்குள் தூக்கி எறிந்த ரசவாதிகளின் வருகையென எண்பதுகளுக்குப் பின் கதையும் கதாநவீனமும் படிக எழுத்தும் பிரபஞ்ச விசைக்குள் முன்வரிகளை அழித்தவாறே பலர் தோன்றியுள்ள வேளை இது.
பூமி தன் நிறங்களைப் பகிர்ந்து கொள்ளும் காமத்தின் பரிமாணம் ஆண் வேடமிட்ட ஆண், பெண் வேடமிட்ட பெண் (ஸில்வியாவின் சிறுகதை) என நுண் அரசியலை அக உலக உரையாடல்களை, மறைக்கப்பட்ட உணர் மொழிகளை, பிரக்ஞைபூர்வமான குறியீடுகளாக, விவாதப்புள்ளிகள் பக்கம் பக்கமாக வைத்து கதைகள் ஆண்/பெண் பிரதிகளாக வாசிக்கப்படுகிறது. ஈழத்தில் ஷோபா சக்தியின் பனுவல் மீது பலதரப்பட்ட கருத்துகள் நிலவும். வாசகப் பன்மை, படைப்பாளி மீதான புதிய தொன்மத்தை சித்திரப்படுத்தியிருக்கும், புனைவு வேகம் ‘box நாவலில்’ தாவரங்களைப் பட்டியல் இடும் தன்மையும் நிலவெளிகளில் நீரின் உரையாடல்கள், பிரஞ்சு வாட்டர்கலர் ஓவியங்களாக தாள்களில் மெலிவித்த கலையாக, உத்தி விசேஷமாகச் சேர்வதும் நடந்திருக்கிறது. ஏற்கனவே உரைநடை இலக்கியத்தின் சரித்திரத்தில் ‘வீ’,’தீ’- போன்றவற்றில் சோதனை புரிந்த எஸ்.பொ நவீன கதையாளர்களின் ஈர்ப்பு மையமாக இருந்தார் முன்பு. கே.டேனியலின் பஞ்சமர், போராளிகள் காத்திருக்கிறார்கள், ஆழிசூழ் உலகைவிட அவை வேறானது. ‘கடல்புரத்தில்’ போன்ற கச்சிதமான நாவல் அது. ரஞ்சகுமாரின் சிறுகதை கோசலையில் வரும் குலம், சீலன் எனும் சகோதரர்களின் இயல்பு வெளியில் மௌனம் கொண்டவனின் ஸ்திதியும் குலம் அம்மாவின் பிம்ப உருவுக்குள் மீண்டும் குழந்தையின் நிகழ்வாகி கருவறை இருளில் ஈர்க்கப்படுபவன் அம்மா வயலில் இருந்து புல் கொண்டு வரும் தூரத்தை நோக்கி ஓடி மாற்றிச்சுமந்து வருவான். குஞ்சுத்தாக் கோழியின் கதகதப்பான இறக்கைக்குள் பதுங்கி அம்மாவின் கால்களில் நடந்து வருபவன். சீலனோ மௌனத்தின் தனிமொழி கொண்டிருந்தான். எதிலும் ஒட்டாமல் துயரம் சுமந்து கருக்கிருட்டில் தெருவை குறுக்கிட்டுப் பறக்கும் தனிமை குடித்த நீர்ப்பறவை இவன். இருவேறுபட்ட குழந்தைமையை வெகு இயல்பாக, நீரோட்டமாகச் சொல்கிறது ரஞ்சகுமாரின் கதை. அம்மா பிள்ளையாக இருப்பவன் பிளட்ஸ் என்றால், மௌனி அகவயமாக பயணிக்கும் கிரிப்ஸ் அடுத்திருக்கும் சீலன் .
‘பசித்த மானுடம்’ கரிச்சான் குஞ்சு நண்பர்கள் இருவரின் சம உலகில் கடைசியாக நடக்கும் சந்திப்பும் இருவருக்குமான தொடர் இழைகள் கால ஓட்டத்தில் அறுபடாமல் எப்போதுமே இணைந்திருப்பவைதான். ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லையென்று சொல்லிவிட முடிகிறதா? ரஞ்சகுமாரின் ‘சுருங்கும் ஊஞ்சல்’ குறிப்பிட வேண்டும். நண்பனுக்காகக் காத்திருக்கும் பகல் நேரத்து சோம்பேறியின் இயற்கையில் நுழைந்த காக்கை தெருவில் மூக்கைத் தேய்த்துக் கரைவது வீதிகடந்த சோம்பலாகிவிடுகிறது. சோம்பி இருப்பவனின் மனதில் மௌனியின் ‘எங்கிருந்தோ வந்தான்’, ‘பிரபஞ்சகானம்’, ‘நினைவுச்சுழலில்’, நம்மை சிக்கவைப்பதும், ‘பிரக்ஞை வெளியில்’ சிறுகதையில் தோன்றும் காய்ந்து உலர்ந்த மரத்தின் இலைகளற்று வாடும் கிளைகளில் பிரியும் கவைகளின் மோனம் தமிழின் செழித்த மரங்கள் கூடிநிற்கும் இருப்பைவிட அமானுஷ்யமான தருணங்களுக்கு ‘பிரக்ஞை வெளி’யில் நம்மை ஆட்படுத்திவிடும். சோம்பிய சாம்பலின் பகல் வேளையில் ‘செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம்’ ஆகச்சிறந்த சிறுகதை, மார்க்வெஸின் விரல்களிலிருந்து வண்ணநிலவனால் ‘தேடல்’ சிற்றிதழில் 1982-ல் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு வீரியம் தமிழ் உரைநடையைத் தொற்றிக்கொண்டது. நாம் ஜெயகாந்தனை எவ்வளவுதான் எதார்த்தவாதத்தின் நகர்த்த முடியாத தஞ்சைப் பெரிய கோவில் நந்தி என்று விமர்சித்தாலும் அவர் எழுதிய ‘பகல்நேரத்து பாசஞ்சர் வண்டி’ என்ற குறுநாவல் மார்க்வெஸின் ‘செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம்’ கதையின் ஓரிரு இழைகளைக் கொண்டதுதான் என திரும்பவும் அக்கதையை தேடிப்பார்க்கிறேன். கவிஞர் அப்பாஸின் ‘ஆறாவது பகல்’ கதைகள் இக்கதைக்குள் வசீகரம் கொள்கின்றன. கந்தர்வனின் சிறந்த சிறுகதையாக இருக்கும் ‘மைதானத்து மரங்கள்’, வண்ணநிலவனின் ‘மிருகம்’ கதையில் வரும் நடைவியாபாரியின் காலிவீடும் நாயும் போல் ஒரு விநோத அலைச்சல். பரிதியில் கசியும் இப்படியான பகலை ரஞ்சகுமார் போன்ற சிறுகதைக்காரர்களே தரமுடியும் போலும். ஒரு கதைசொல்லியின் அகவுலகிலுள்ள ஒழுங்கற்ற சூரியக்கல் அது, புரிந்து கொள்ளப்பட்ட பின்னும் புரிந்து கொள்ளப்படாத படைப்பாக மாறிவிடும்.
‘தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திர’த்தில் வெளிவந்த உமாவரதராஜனின் ‘உள்மன யாத்திரை’யில் ஜெனி, ‘அரசனின் வருகை’, அற்புத எதார்த்தத்திற்கு திறந்து கொண்ட பாதையாக நடுஇதழ் ஒன்றில் புராணவகைப்படுத்திய தொன்மத்தின் முரண், இயக்கம் கொள்வது. ‘அன்று’ நூலில் இடம்பெற்ற நுஃமானின் ‘சதுப்புநிலம்’ ரஞ்சகுமாரின் தலைமுறையைச் சேர்ந்த ஆர்.ரவியின் ‘ஒருமழை நேரத்து சோகம்போல…’ கிழக்கில் முன்னோடிக் கதையாளரையடுத்து சூழலாக இருந்த அப்துல் சமது. இக்பாலின் மார்க்ஸீய அழகியல் திறந்த பக்கங்களும் சமகாலவெளியில் வண்ணார்களின் மண்விரல்கள் விடுதலை இயக்கத்துக்கு வந்து சேர்ந்ததில் ‘வெள்ளாவி’ நாவலில் தொடரும் நாவல்மூட். உவர்மண் கீறல்களில் வெளிப்படும் எழுத்து கரைந்து சித்திரமாய் வெளிப்படுத்திய விமல் குழந்தைவேலின் வாழ்வியல் வெம்மையை அந்த வண்ணார் இனக்கூத்துக்கலைஞர்களின் மண்கால்கள் ஆடிமுடிந்து சூடு உருளும் கற்சலங்கை ஒலி மெல்ல சுவாசத்தில் பரவி இப்படைப்பை இரவில் ஆடிமுடித்த கால்களின் தடங்களில் பாய்ந்த ரேகைகளின் சூடு இன்னும் ஆறாமல் தீக்கால்களில் கொழுவிய ஈழத்துக்கே உரிய கூத்துமரபான தீப்பிழம்பின் நடுக்கம் அடிவானில் மலர்ந்து ரௌத்திரம் கொண்டிருப்பது. சில வருஷங்கள் கடந்திருக்கும் போது அக்கரைப்பட்டிலிருந்து வந்த பெரியதும் சிறியதுமாக எட்டுக்கதைகளில் ‘ரஞ்சகுமாரின் முன்னுரையுடன் அவற்றில் ‘புட்டம்மை’யும், ‘பூனை அனைத்தும் உண்ணும்’, ‘சங்குவெள்ளை’ நிலப்பரப்பை விவசாய வாழ்க்கை நீர்வெளி இருள்நிழல்களில்காட்சிப்படிமம் கவித்துவ உரைநடை இனியான புனைக்கதை உருவை எடுத்துச்செல்ல அஸீன் என்ற சிறுகதையாளனிடம் கைவந்த மொழி ஒளிச்சித்திரக்காரனை வழங்கியிருந்தது. ரவுப்பின் ‘கனவும் மனிதன்’ முள்முருக்கையை சொல்லாமல் சிறுகதைபற்றிய சிறு வரைபடம் பூர்த்தியடையாதுதான். எனவே…
வெளிவந்திருக்கும் கல்குதிரை 28-ல் யதார்த்தனின் எதார்த்தம் தாண்டும் ‘வோண்டர்கோன்’ சிறுகதையும், தன் முதல் சிறுகதைக்கு ‘இசை’ எனச்சொல்லி பல்வேறு நிலவெளிகளையும் பாலைவனத்தையும் புதிய சொல்முறையால் புனைகதையாக்கியுள்ள மதியழகன், ‘கனவுமிருகம்’, ‘துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ ஆகிய இரு சிறுகதை தொகுதிகளை ஈராயிரத்திற்குப்பின் வெளிப்படுத்தி அவற்றில் ‘வலை’ என்ற கதை பலரின் இருட்டில் மறைந்து சிலந்தியென வலை பின்னும் புனைவு வெளி இப்போது வந்திருக்கும் கல்குதிரையில் விஞ்ஞானக் குறுங்காவியமாக ‘பிரமீடுகளை அளந்த தவளை’ சிறுகதை, சமணத்தீர்த்தங்கரரை விஞ்ஞானப்புனைவுக்கு இடமாற்றி வைத்து நுண் அரசியலும் புனைவும் இந்தியாவின் அரசியல் இருண்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளது. ‘ஈட்டி’ சிறுகதைத் தொகுதியை வெளியிட்ட குமார் அம்பாயிரத்தின் இடைவெளி சிற்றிதழில் வந்திருக்கும் ‘நாய் டாக்டர்’ குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய சிறுகதை. தூயதிலிருந்து அழுக்கைத்தேடி மனித மனம் விலங்குகளின் உலகுக்குள் தன்னை புனைந்துகொண்டிருப்பதில் இதுவரையான கதைப்போக்கிலிருந்து இக்கதை விலகி விலங்குருவாக்கமாகி உருமாற்றமடைந்திருக்கிறது.
Errand தட்டச்சு பொறியின் மீது ரேமண்ட் கார்வரின் விரல்கள் பதியும் போது அங்கு எழுத்துகள் கோர்க்கப்படும் வேளை அலெக்சாண்டர் சூ ஒரினுக்கு ஆண்டன் செக்காவ் எழுதிய கடிதங்களை தொலைத்தந்தியில் ‘கட் கட் கட’ உங்களில் பலருக்கு அனுப்பியதாக ‘ஆண்டன் செக்காவை சென்று சேர்வது எப்படி?’ லட்சுமி மணிவண்ணன் அனுப்பிய சிறுகதையில் கிடைத்தது, தன்னுடைய கதைகளை முடிவு அற்ற வெளியில் சுழலவிடும் செக்காவைப் பற்றி கார்க்கிக்கு ஒரு பெண்ணைப் போன்ற மெல்லிதயம் எல்லா கதைகளிலும் நீடித்திருப்பதாக உணர்கிறார். செக்காவின் கதைகளுக்கு மாரலிஸ்ட் விஷன் கிடையாது. டால்ஸ்டாயும் செக்காவும் எதிரெதிரானவர்கள். சயரோகம் பிடித்த செக்காவின் நுரையீரல் வரைபடத்தை ஒரு வாசகனாக தீவிர டாக்டர் தீட்டிய நீல நிறமான வரைபடம் அதனுடைய மேல்பகுதி சிவப்பு நிறத்தில் எரிகிறதே? என்கிறார் மணிவண்ணன். செக்காவ் கார்க்கிக்கு எழுதிய கடிதம் கூட கருவாக நின்றுவிட்ட பெண்களின் அகவயமாக இருக்கும் போக்கை வெளிப்படுத்துவதில் மெலிந்திருந்தார், அரசியல் சமூகக் கலாச்சாரப் பின்னணியைத் தவிர்த்தவையாக கதாபாத்திரங்கள் ஏன் தீராத காதலுடன் சுழல்கின்றன, எஸ் நகரத்தில் தான் அந்த காதலிகளும் நாய்க்கார சீமாட்டியும் இன்னும் இருந்தார்கள். ராதுகா பதிப்பகத்தில் ருஷ்யக்காடுகளை அழித்து சோசலிசம் நமக்கு வழங்கிய பனிப்புயலை வேகமாகக் கதைக்குள் அனுப்பிய புஷ்கினை தாஸ்தாய்வெஸ்கி ருஷ்ய ஆன்மாவைப் படைத்த தாதியானா உருகும் பனியாக செக்காவுக்குள் நோயாளிப்பெண் ஒருத்தி சைபீரிய விடுதி ஒன்றில் கை நடுங்கக் கொண்டு வந்த காப்பியும் நோய் வாடையும் அவள் ஏன் பனிப்பொழிவில் அவஸ்தைப்படுகிறாள் என்பதாக இருக்கும். பணிப்பெண் சமையலறையின் அடுப்பில் பதுங்கியிருந்தாள். அவள் நடுக்கத்தையும் ரோகத்தையும் பார்த்த செக்காவ் ஆறாவது வார்டு கதையில் டாக்டரின் சமையல்காரியாகவும் அவளை படைத்தார். ‘ஆண்டன் செக்காவை சென்று சேருவது எப்படி’ என்று ஒரு கதை மூலம் லட்சுமி மணிவண்ணன் ‘வெள்ளைப்பல்லிவிவகாரத்தில்(சிறுகதை)’ முன் கூட்டியே அனுமானங்களின் சக்தி இயற்கையின் முன்னும் இயல்பின் முன்னும் அதிகப்படியான விரயத்தை ஏற்படுத்தக்கூடியது என்று பெலிக்ஸை ஆஸ்பத்திரி சிகிச்சைக்குப் பின் கூட்டிவந்த காபி பார் சற்று விஸ்தாரமானது, பழமையானது முதிய மரங்களின் பாதி வயதேனும் காபி பாருக்கு உண்டு அதன் நிழல் சரிந்த ஆழங்களில் செக்காவ் தன் ‘சூ ஒரினும்’ மரணம் அடைந்த பலரும் காபி அருந்திக்கொண்டிருந்தார்கள். 1904 ஜூலை 2 நள்ளிரவில் மூணு சாம்பைன் பாட்டிலை எர்ரேண்ட் பாய் கொண்டுவருகிறான். கடைசியாக சாம்பைன் கொண்டுவந்த பையனைப் பற்றி செக்காவ் டைரி குறிப்பில் ஏற்கனவே குறித்திருந்தார்; சில்வர் ஐஸ் பக்கெட், சில்வர் ட்ரேயில் சாம்பைன் பாட்டில். பாதி சாம்பைன் குடித்ததும் செக்காவ் அரை மயக்கத்தில் இருக்கிறார், துணைவி வோல்கா உடன் இருக்கிறாள். எதற்காக சாம்பைன்? செக்காவ் இன்றி இனி எதற்காக? விடியும் வரை செக்காவ் கூடவே இருக்கிறாள் வோல்கா. எர்ரேண்ட் பாய் மூன்று மஞ்சள் நிற ரோஜாக்களை போசலின் பிளவர் வாஷில் வைத்து எடுத்து வருகிறான். இப்போதும் காபி ஜாருடன் நிற்கிறான் எர்ரேண்ட் பாய்.
ரேமண்ட் கார்வரின் இச்சிறுகதையினை உரைகல்லாக வைத்து ஐஸ்வர்யாவின் ‘நுரை’, உதயகுமாரியின் ‘சாம்ராஜ்ஜியம்’, பாமாவின் வீழ்ச்சியுற்ற அத்தனை சிறுகதைகளிலிருந்து ஒன்றே ஒன்றென ‘புதிதாக ஒன்று’ அதிர்ஷ்டவசமாகவே பரிமாண பூரணத்துவம் அடைந்த ஒரு சிறுகதையை அத்திப்பூவாக நினைத்து தேர்வு செய்திருக்கிறேன். இனிமேல்தான் பாமா பேனா முனையை முனைப்பாகத் தொடரவேண்டியுள்ளது. செல்வம் காசிலிங்கத்தின் ‘பிரதி’ பரிமாண பூர்ணத்துவம் அடைந்திருக்கவில்லையாயினும் மலையகத்தின் தொலைவான மலைகளுக்குள் சிறுத்தைப்புலிகள் உரையாடிக்கொண்டிருப்பதை அந்தத் தூங்குமூஞ்சிமரம் உயர எழுந்து கேட்பதாகவே இந்தப் படைப்பாளிக்கு சிறுத்தையின் உடல்புள்ளிகள் நவீனத்தின் புதிய தொன்மமாக விளங்குமென்று நம்புகிறேன்.
மதியழகனின் நகர்வு
‘நகர்வு’ கதை என்னவாக உருக்கொண்டிருக்கிறது. கத்தரிக்கப்பட்ட தினசரி இதழ் துண்டினால் ஒட்டப்பட்டு எளிமைப்படுத்தப்பட்ட காதல் கொலாஜ் காகிதக்கிழிசல்களை வெட்டி ஒட்டும் உத்திவிசேஷங்கள் நவீனச் சிறுகதைக்கு உண்டுதான். எனினும் மதியழகன் கதையானது மொத்தப்பரப்பையும் செய்தி நறுக்குகளாக உத்தி செய்யாமல் கதை முடிவடையும் இடத்தில் செய்தித்தாள் கிழிசல் ஒன்றை கெமிக்கல் பசைகொண்டு ஒட்டி முடித்திருக்கிறார்.
அப்பார்ட்மெண்ட் வீடுகள் எப்போதும் அடைபட்ட கதவுகளாக இருப்பினும் ஒன்றுடன் ஒன்று ரகஸியமாக உரையாடிக்கொள்ளும் நவீன கால உறவுகள், உறங்கும் போன்ஸாய் மரங்கள், வளர்ப்பு நாய்கள், பூனைகள் இவற்றின் குடித்தனங்களில் நேரத்தைக் கண்டு களிக்கும் ரிட்டயர்டு முதியவர்கள் ஒருவேளை அப்பார்ட்மெண்ட் காவல்விலங்குகளாகக் கண்ணுக்குப் புலப்படாத சங்கலியால் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் அமெரிக்க நவீனச்சிறுகதை , ஓவியங்களில் கண்டிருக்கின்றோம்.
மலேசியச் சிறுகதைச் சூழலில் மதியழகன் இக்கதையில் பிளவு பட்டும் பாழ்பட்டும் காதல் இழைகள் குடும்பங்களில் வெடிக்கும் வாய்ச்சண்டை ஒருவருக்கொருவர் வன்மத்துடன் ஏசிக்கொள்வதும் ஒரு சிறுகதை உத்தியாக இருப்பது எதையும் கதைக்குத் தரப்போவதில்லை. அப்பார்ட்மெண்ட் வீடுகளின் அக உலகையும் வெளிப்படுத்தி காட்சிகளை உருமாற்றி கதை ஓட்டத்தின் சுவாரஸ்யத்தை எவ்வளவுதான் காண்பரப்பாகக் கொண்டுவந்தாலும் தொலைக்காட்சித் தொடருக்குத் தேவையான மாயப்பொடி மதியழகனிடம் சிறப்பாக உள்ளது.
இவர் நவீனச்சிறுகதைக்கு வர வேண்டுமெனில் ஹீலியோ கொர்த்தசாரின் ‘கத்தரிக்கப்பட்ட செய்திகள்’ சிறுகதை தமிழில் மொழிப்பெயர்ப்பாகி வந்துள்ளது. அக்கதை முழுவதும் பல்வேறு செய்தித்தாள் நகர்ந்துகொண்டு ஓடிப்போகும், காணாமல் போகும், கடத்தப்படும், விரட்டப்படும் காதல் ஜோடிகளின் பெண்களின் பல்முனைப் பனுவலாக வளர்ந்து உலகின் மிக முக்கியமான சிறுகதையாகி விடுகிறது, ஆனால் நகர்வு சிறுகதையின் கதை செய்தித்தாளாக நகர்ந்து விடுகிறது. கீழே கதையின் கடைசிச் செய்தி, தமிழ்நாட்டு வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை. நான்கு உள்ளூர் இளைஞர்கள் கைது… என பத்துவரிகளில் மேலும்செய்தியாக நகர்வதால் அதை நானும் எழுதாமல் இத்துடன் விட்டுவிடுகிறேன்.
கலைசேகரின் ‘மன்னிப்பு’
இக்கதை அப்பாவின் மைலோ பைத்தியம் மற்றும் மாற்றுக் கதையாடலின் குற்றங்களில் வளர்கிற அகப்பரப்பையும், மனைவி, பிள்ளைகளின் தவிக்கும் தனிமை இருப்பையும் கொண்டிருக்கிறது. ஆனால், கணவனை திருத்தவோ வேறு பெண் தொடர்பால் மறைந்து திரியும் அவர் வருவாரென்று ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் பழங்கதையொன்றின் இழையையும் சுருட்டி செய்வினை தகட்டைத் தயாரிப்பதற்கு குரூன் மலையைத் திறக்கிறது. எனக்கு இங்கே உப சொல்லாடலில் வரும் குரூன் மலையில் இருக்கும் போமோவைத் தேடும் ஒற்றை வரியே புதிய மாந்திரீக மொழிக்கு கலைசேகரின் படைப்புலகம் உருமாற்றம் அடையவேண்டும் என்பதில் ஆதங்கம் ஏற்படுகிறது. குரூன் மலைப் பிசாசுகளிடம் போமோ உரையாடுவதை கேட்கத் தொடங்கினேன். நக்கீரனின் ‘காடோடி’ நாவல் போர்னியோ காடுகளைப்பற்றி எழுதப்பட்ட நாவல்தான். அதற்கு கல்குதிரையின் விமர்சனம் எழுதியிருக்கிறேன்.ஆனால் போமோவின் செய்வினைத்தகடு பலிக்கவில்லை. அவன் தற்காப்புக்கு ஏதோ தகடு செய்து வைத்திருக்கிறான் என அவள் கணவனைப் பற்றி புகார்களை மையோட்டத்தில் கண்டு சொல்கிறான் அந்த போமோ. கணவனின் தற்காப்புத்தகட்டை சக்தி இழக்கச் செய்வதற்கு மேலும் 500 ரிங்கிட் கேட்டபோது அவள் கொலை முயற்சியைக் கைவிட்டிருந்தாள்.
கணவன் கொண்டு வந்த பரிசுகள்,
மாமனாரின் தந்திர சூழ்ச்சியான வருகை,
குழந்தைகள் தந்தையிடம் ஏமாறும் கதை.
அவளுக்குள் கொந்தளிக்கும் கடல்.
நேயமும் பாசாங்கும் மிகுந்த பரிசுப் பெட்டியைத் திறக்காமல் நெஞ்சில் கல்லை விழுங்குகிறமாதிரி சஞ்சலம். இவற்றோடு கணவன் என்ற ஸ்தானத்துக்கு பெண் மன்னிப்பை அருள்வதாகவும் மெல்லிய சரடு ஓடுகிறது, ‘அவனென்ன மன்னிப்பு கேட்பது நான் விட்டடிக்கிறேன்’ எனவும் அனல்வாக்கு இக்கதையை விட்டு குடும்பக்கதையாக மறைக்கப்பட்ட இருளின் படிமத்தை திறந்து வாசிக்கத் தொடங்குகிறது.
ஐஸ்வர்யாவின் ‘நுரை’
பயம். நுரை தங்கநிறமாகப் பொங்க அவளுக்கு அப்பாவின் ஞாபகம் வந்தது. ஜான்ஸியின்அப்பா ஜான்ஸிக்கு மட்டுமல்ல கதாபாத்திரமானதில் துணை வானவில்கள் வாசகப்பரப்பில் தோன்றி ஜான்ஸியாகிறேன் நான். நான் நானாக நானூறு விதங்கள் என்ற நகுலனாகிறோம் நாம். எல்லோருக்கும் அப்பா மகள் மொழி புரிந்துவிடுமா? ஒரு சீனப்பெண் அவன் உதடுகளையும் கன்னத்தையும் எச்சில் செய்துக்கொண்டிருந்த நுரை.
அந்த நுரைக்குள் உழலும் உபசாரகப் பணிப்பெண்களும் பீர்போத்தல்களை ஏந்திவருபவர்களில் பலரும் உள்நாட்டு அகதிகளாகவும் அந்த நுரை உடைந்துவிடாமல் ஏதிலிகளின் பாலத்தில் பெருந்தனிமையில் கோப்பைகளைவிட்டு வெளியேறி நாடற்றவர்களாகி அந்தரத்தில் மேல்நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அந்த நுரைக்கும் அப்பா சலூன் கண்ணாடியில் சவரம் செய்துகொண்டிருப்பதைப்பார்க்க கில்லட் சவரக்கத்திகளின் மீது கண்ணாடி நுரை பேசுகிறது ‘உலகம் வெளியில் காத்திருக்கிறது சாவும் கூட’ என்று சொல்லிவிட்டு அந்த நுரை ஒவ்வொருவர் மீதும் பறந்து செல்கிறது. ஐஸ்வர்யாவின் நுரைக்குள் அப்பாவின் கோட்டுப் பித்தான்கள் சிறுமியின் பிரபஞ்சத்தில் சிதறுகின்றன. சிறுமி ஜான்ஸிக்கு நுரை பிடிக்கும்.அப்பா பிடிக்கும். குரங்குபிடிக்கும். மலைச்சிகரங்கள்பிடிக்கும். மலேயாவின் மலைகளெல்லாம் பிடிக்கும். தொலைக்காட்சிப்பெட்டிக்குள் நடமாடும் கதைக்குள் கதையைப்போல பிம்பக் கழிவாக ஒட்டிக்கொள்ளும் அபத்த நிழல்கூட்டங்களிடையே தன்னை தொலைத்துக்கொண்ட பெற்றோர்கள் குடும்ப அச்சில் சுழலும் எதார்த்த சித்தரிப்புக்கதைகளை சற்றே உடைத்துப்பார்க்கும் நேர்-நிகர், நிகர்-நேர், நிகர்-நிகர் நுரைக்கூட்டம் மாயப்பரப்பில் டின் பீர்களின் ஒலி அசேதன குசுவிட்டு நம் ஆடர்களின் பேரில் உடைபடும் அலங்கரிக்கப்பட்ட சவவிருந்துகளின் ஆடம்பரமும் நுரையாக உடைந்து சிதறுவதை நான் துணைப்பனுவலாக எழுதிப்பார்த்தபோது ஐஸ்வர்யாவின் ‘நுரை’ பறந்து வந்து என் தலைக்குமேல் அந்தரத்தில் சரிந்தவாறு பல கேள்விகளாக மாறுகின்றன. பொய்யான டாட்டுவும் ஒப்பனையும் அந்த ஷார்ட் ஸ்கெட்டும் தான் அவள் டிக்கெட் ஆனது என்ற வரியில் ஜனரஞ்சக நுரைகளும் ஓடுகின்றன.
ஆனால் அவன் கையிலிருந்து வழுக்கிய கிளாஸ் துண்டுகள் அவள் முன் சிதறிக்கிடந்தன. ஒவ்வொரு கண்ணாடியும் ஒரு நுரைதான். கண்ணாடிப்பதுமைகள் பப்பட்ரி ஷோவில் வெளிப்பட்டு நுரைகள் சுடரிலிருந்து லட்சமாய் பறந்து உரையாடல் தொடர்கின்றன.
அம்மா அவளை என்றைக்கும் திருவாத மேல் அலமாரியில் உள்ள அப்பாவின் கதவுகளைத் திறந்தால் நுரைக்கூட்டம் உங்களைத் தொடுவதற்காய் பறந்து கொண்டு இருக்கின்றன. அப்பாவின் பீர் டின்கள் வசீகரமானவை.குடும்பஅறத்துக்கு எதிராக ஒவ்வொருவரும் திருட்டுத்தனமாய் நுரைகளுக்குள் சென்று குற்றத்தின் நறுமணத்தில் முத்தமிடும் நுரை ஒன்றுக்காக ஏங்குகிறார்கள். நுரை கவிதார்த்த உலகை ஆலீஸின் அற்புத உலகை திறக்கும் சாவியாகவும் ஐஸ்வரியாவுக்கு கிடைப்பதாகவே உணர்ந்து பீர்ச்சாவி ஒன்று நுரைகளைத் திறப்பதற்கும் ஃபேண்டசி மாயக்கதைக்கும் சாவி தருவதாக இக்கதையின் தொனி அதியச உலகில் உள்ளது.
உதயகுமாரியின் சாம்ராஜ்யம்
ஆண் தேடுதலும், போராட்டமும் பெண் சதி ஆலோசனைகளும் கனவுகளும். அவள் கனவுகளின் தாய் கடவுள்களின் தாய் அவளுக்கு இருவடிவங்களாக காட்சிதர முடியும். எல்லையற்ற பேராசைகளுடன் கனவுலகில் பறக்க அவள் சிறகுகளுக்கு வலிமை உண்டு.
கடவுளும் மனிதனைப்போலத்தான்; அவர்கள் பிறப்பதும் இறப்பதும் பெண்ணின் மார்பில்தான் — கார்லோஸ் ஃபுயன்டஸின் ‘ஔரா’ குறுநாவலில் வரும் பாட்டியும் ஔராவும் ஈருடல் கொண்ட மாயத்தருவாக இருக்கும் அந்த தனிமையடைந்த பழைய இருள்மாளிகை போன்றதே உதயகுமாரியின் சாம்ராஜ்யம்.
அந்த அறைக்குள்தான் பாட்டியின் மாபெரும் சாம்ராஜ்யம் அமைந்திருந்தது. அந்த அறையின் இளம்பச்சை நிற சுவரை ஒட்டியபடி வாங்கு எனப்படும் கட்டில் வடிவிலான நீண்ட பலகை இருந்தது. அப்பலகையின் மேல் பஞ்சுமெத்தை போடப்பட்டிருந்தது. பச்சை நிறத்தில் கட்டங்களைக் கொண்டிருந்த துணியால் மூடப்பட்டிருந்த துணிதான் பாட்டியின் சிம்மாசனம். ஒரு மகாராணியின் மிடுக்கோடு இரு கால்களையும் நீட்டியபடி அதில் அமர்ந்திருப்பாள் பாட்டி. அந்த அறைக்குள் நுழைவது அவளுக்கு பிடிக்காது. அம்மாகூட அந்த அறைக்குள் பயபக்தியோடுதான் நுழைவாள். 38 வயதாகியும் அம்மா பாட்டிக்குக் கட்டுபட்டே நடந்தாள். சம்பளத்தைக்கூட முழுமையாகப் பாட்டியிடம் கொடுத்துவிடுவாள். பாட்டியின் விருப்பப்படியே எல்லாவற்றையும் செய்வாள்.
அம்மாவின் பின்னால் நின்றிருந்த நான் எழுந்து பாட்டியின் அருகே சென்றேன். முந்தினம் இரவில் நடந்த எதையும் உணராது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் பாட்டி. ஒரு நாள் கத்திரிக்கோலை எடுத்து சொந்தமாக முடியை குட்டையாக கத்தரித்துக்கொண்டாள். அதிலிருந்து கதை வேறொன்றாய் திரும்புகிறது. பாட்டியின் சாம்ராஜ்யம் மிதக்க தொடங்குகிறது. தொல்கதையாய் அல்லி அரசாணி மாலையும் உள்ளே நுழையப்பார்க்கிறது.
தையல்கார அக்காவும் வருகிறாள். இந்த வெடுக்கு கிழவி நிச்சயம் சிறந்த தையல்காரியாக இருந்திருப்பாள். இல்லையென்றால் அந்தரத்தில் படுக்கை போட்டல்லவா படுத்திருப்பாள். பேத்திக்கு தோன்றுகிறது பாட்டியின் மெத்தையில் கால்நீட்டி அமர்ந்து வெற்றிலையின் காம்பை மட்டும் கிள்ளி வாயில் போட்டுக்கொள்கிறாள். பாட்டியின் வயது வந்தால் நான் இன்னொரு அல்லிராணி. இதைவிட பல மடங்கு பெரிய அறையில் வாயில் சுருட்டு பிடித்தபடி பஞ்சுமெத்தையில் கால்நீட்டி எட்டுதிக்கும் ஆட்சி செய்ய வேண்டும். பாட்டி அப்போதும் உயிரோடு இருந்தால் அவளையும் அதிகாரம் செய்ய வேண்டும். இரவு நேரங்களில் தறி கெட்டு ஓடும் பாட்டியின் நினைவுகள். அவளது வளைந்த கை என்னை நோக்கி நீள்வதை முதுகுக்குப்பின்னால் உணர முடிந்தது. என்னால் பாட்டியையும் இவளையும் ஓர்மை கொண்டிருக்கும் இக்கதைக்கு ஔரா போன்ற கதை இருக்கிறது.
செல்வம் காசிலிங்கத்தின் ‘பிரதி’
ஈத்தாம் மானிஸ் மரங்களின் மீது மிதந்தவாறு பாடிக்கொண்டிருக்கிறாள். மலேசியா தீபகற்பத்தில் உள்ளதைப்போன்று மலைகளும் பள்ளத்தாக்குகளும் ஆசியாவின் பிறப்பகுதிகளில் காணப்படுவதில்லை.அகில், சந்தனம், கிராம்பு, ஏளக்காய் போன்ற நறுமண அகராதியில் பதிந்துள்ள ‘பிரதி’ என்னும் சிறுகதை.
வெளியில் கொட்டிக்கொண்டிருந்த இருள் வீடு முழுதும் நிறைந்துவிட்டது. அப்பாவைக் கூட்டிவர தம்பியை அனுப்பி விட்டு முழந்தாளிட்டு உட்கார்ந்து கால்களுக்கு இடையில் முகம் புதைத்தவள் வெகு நேரம் தலையைத் தூக்காமல் கூட இருந்தாள். அவளின் மெல்லியதான விசும்பலும் கேவலும் வீட்டை இருட்டு போலவே தின்ன ஆரம்பித்து இருந்தன. பூஜையறையில் விளக்கை கூட ஏற்ற யாருக்கும் தோன்றவில்லை. அக்கா ஓடிப்போன கதை மலையகத்தின் கடவுளில் தாட்சாயினியை கூப்பிடும் எதிரொலி. குடிகாரத் தந்தையின் மோனம் ரத்த வேட்கை மிக்க இந்த உறவுகள் எல்லாம் அக்காவை வெறுத்தாலும் அடுத்த கட்டத்தில் கால் வைத்துக் கொண்டதில் அகமணத்தளைகளை அறுத்துக் கொண்டவளில் புதிய சொல்லாடல்கள் கதையிலும் ஏகமாய் பின்னப்பட்டுள்ளன.
தேவையின்றி தன் அறைக்கு யாரையும் அவள் அனுமதித்தது இல்லை. பேனா நட்பென்று தொலைதூரத்திலிருந்தெல்லாம் அவளுக்கு நிறைய கடிதங்கள் வரும். அந்தக் கடிதங்களை திறக்கவோ படிக்கவோ அக்கா யாரையும் விட்டதில்லை. தபால் தலையை சேகரிக்கும் பழக்கம் அந்த வகையில் எனக்கு ஆரம்பித்தது.
தோட்டத்துக்கு வரும் கடிதங்களை எல்லாம் மொத்தமாக எஸ்டேட் அலுவலகத்திலேயே சேர்த்துவிடுவார்கள். அப்பாதான் இரண்டு மூன்று நாளுக்கு ஒருமுறை அலுவலகம் சென்று அக்காவிற்கான கடிதங்களை வீட்டுக்கு எடுத்து வருவார். ஆனால் அப்பாவின் ராத்திரி குடிபோதை தள்ளாட்டத்தில் சொற்றொடர்கள் அகமனப்போராட்டத்தைச் சொல்லிவிடும். சுற்றி இருப்பவர்களின் கேலி தொனிகளைத்தாண்டி அக்காவின் உலகில் திறந்துகொண்ட கடிதங்களில் திறக்கப்படாத பல சாளரங்கள் வாசகரின் புனைவுக்கு விடப்பட்டுள்ளன. இதில் பல சொல்லப்படாத செய்திகளும் உள்ளன. என்றாலும் அங்கே பஸ் நிறுத்ததில் ரமேசையும் அக்காவையும் கண்ட தூங்கு மூஞ்சி மரத்து இலைகள் பறந்துக்கொண்டே இருக்கின்றன. ‘அம்மாவின் சோகம் கேட்டுக்கேட்டு வேம்பு கசந்ததோ’ என்ற பழமலையின் கவிதையைப் போல இந்த தூங்கு மூஞ்சி மரத்தின் ஆன்மா புலம்புவதை சொல்லாமல் விடப்பட்டிருக்கிறது.
இச்சிறுகதையில் வனத்தில் இருந்து வீசும் துயர்க்காற்று இருளாய் வீசுகிறது. மனதை அப்பிக்கொள்கிறது. அது தூங்குமூஞ்சி மரத்தின் உணர்வு ரேகைகளால் மடிக்கப்பட்ட இலை கூட்டத்தின் சொற்கள் சதா வீழ்ந்துகொண்டு இருப்பதை வாசக வேடனின் புனைவுருவாக நான் வாசித்துப் பார்க்கிறேன்.
செல்வம் காசிலிங்கம் அவர்களின் வேறு சில கதைகளையும் நான் வாசித்திருக்கவில்லையாயினும் வனமந்திர தேவதை சுருளில் அக்காவுக்கு வந்த கடிதங்களுக்கான பதில் தபால்கள்தாங்கள் மரத்தில் இருந்து உதிர்ந்துக் கொண்டிருப்பதை ஊகித்து வாசித்ததில் அவள் பேனா செல்வம் காசிலிங்கத்தின் கைவழி கசிந்த ‘பிரதி’ என்ற சிறுகதை எஸ்டேட் பஸ் நிறுத்ததில் ஓங்கி வளர்ந்திருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தில் உதிர்ந்து பறக்கும் இலைக்கூட்டத்தில் அக்காவும் ரமேஷ் அண்ணனும் கனவில் மிதக்கும் தலைகளில் புனைவின் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறார்களா என்ற கேள்விகளோடு சொல்லப்படாத கடிதங்களின் மீதுமுத்திரையிட்ட போஸ்ட் மேனின் சைக்கிள் ஒன்று வந்துக்கொண்டிருக்கிறது. கார்ஸியா மார்வெஸின் ‘யாரும் எழுதுவதில்லை கர்னலுக்கு’ என்ற மாய எதார்த்த பனுவலின் ரேகை படர்ந்திருக்குமானால் அக்கடிதங்களுக்காகக் காத்திருந்தவன் விநோதம் இங்கே நவீன புனைகதைக்கான பலவிதஉளவியல்பண்புகளை ஈட்டித்தந்திருக்கும். ஏனெனில் இக்கடிதங்கள் உரையிட்டு மூடப்பட்டுள்ளன. பன்மை பிரதியாக்கப்பிரதி சிறுகதைக்குள் ‘பிரதி’ செய்யப்பட்டிருக்குமானால் இங்கே அம்மாவின் உலகமும் பிரதியின் மலைப்பாதைகளும் காகித வேதாளமொன்று தூங்குமூஞ்சி மரத்தைவிட்டு கீழிறங்கி கதை போட்டு திரும்பச்சென்றிருக்கும் மரத்தில் ஏறி. எனவேதான் இது இரண்டாவது போஸ்டர் முத்திரைக்கதை என்பேன்.
பாமாவின் புதிதாக ஒன்று
பாமாவின் புதிதாக ஒன்று சிறுகதையைத் தேர்வு செய்வதற்கு சிலம்பில் செந்நாள் தோன்றிய ஒரு முலை திருகிய மதுரையும் தொன்மமாக மறைந்திருக்கிறது இல்லையா.
மருத்துவர் இளம் மலாய் பெண் அம்மாவின் எக்ஸ்ரேவுக்குள் நுழைந்து கதையைத் தொடர்வதற்கு பீடிகையாக அமைந்துவிட்டது. ‘அந்த மார்பகத்தை கண்டிப்பாக அகற்றிவிடவேண்டும்’ ஈன சுரத்தில் மலாய் மொழியில் அம்மா கேட்ட போது அவள் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. இந்த வார்த்தையைக் கேட்டதுமே பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்த மார்பகத்தில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தி ஆறு பொன் முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து இந்த மலை தேசத்தின் மீது பறக்க விடுகிறாள்.
‘நீரினுள் குளிப்பினும் காமம் சுடுமே’ என்ற கம்பனின் சூர்ப்பணகை வதை படலத்தில் இலக்குவன் அறிந்த முலையில் வாதை தனியே எழுதப்படவேண்டிய மறைக்கப்பட்ட காதை ஒன்றை மூக்கையூர் கடலில் வைத்து நான் எழுதி வாசித்த புதிய நாவலின் இயல்கள் காற்றில் நழுவிப் பறக்கின்றன.
‘அந்த சீனச்சியைக் கூப்பிட்டு என் சைஸுக்கு முதல்ல ரெண்டு உள்பாடிக்கு ஆடர் பண்ணிடு’ கதையின் கடைசி வரியாக நவீனத் தொன்மம் கொண்டுவிடுகிறது.
’வீட்டுக்கு வந்துதான் அம்மா கொடுத்த மார்க்கச்சைகளை எடுத்துப் பார்த்தேன். அழுகை அழுகையாக வந்தது. முகத்தில் ஒற்றிக்கொண்டேன். முகர்ந்து பார்த்தேன். அதில் அம்மாவின் வாசம் இருந்தது. அது எனக்கு பொறுந்தாது என அம்மாவுக்குத் தெரியும். இருந்தும் கொடுத்தாள். அவளின் ஞாபகம் என்னிடம் இருக்கட்டும் என்று கொடுத்தாளோ.’
’அம்மா ஸ்பாஞ் பிரா பாவித்தது இல்லை. அதற்கான தேவை இல்லாததால். துணியிலான மென்மையான பிராவை அணிவதே அவளுக்கு சௌகரியமாகவும் பொருத்தமாகவும் இருப்பதாக சொல்லுவாள்.’
’அம்மாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச்செல்ல வந்தாள். தேகம் காற்றடைத்த பந்தெனவாகி மிதப்பது போலானது.’ சித்தர்கள் வந்திருந்தால் அம்மாவின் மார்பு புற்றுநோய் சொஸ்தமாகி இருக்குமோ என சித்தர் பாடல் ஓடுகிறது உள்ளே. சித்த மருத்துவத்தை இழந்ததால் மார்பு புற்றுக்கு ஆளானாளா அம்மா. பதினெண் சித்தர்கள் கைவிட்டுச் சென்றதால் கொடி வழியை இழப்பதற்கு நவீன சிகிச்சைக்கு அலோபதி மருத்துமனை எனும் கார்ப்ரேட் பூதத்திடம் அம்மாவை கூண்டில் அடைத்து ஒப்படைக்க போகிறோமா.
கவிஞர் தேவதேவன் அறுத்து எரியப்படாத மார்கச்சைகள் பாமாவின் சிறுகதையோடு சம இடைவெளியில் வந்து நின்று விவரிக்க முடியாத விந்தை உணர்ச்சிகளை சொல்கிறது. ஆனாலும் அம்மா தனக்கென வாங்கிய பொருட்களை என்னிடம் கொடுத்த போது எனக்கு என்னென்னெவெல்லாமோ எண்ணத்தில் வந்து போனது.
ந.ஜெயபாஸ்கரனின் அவள் என்ற கவிதை தொகுப்பைத் நான் இக்கதை வாசிப்பின் தருணத்தில் சில கவிதைகளின் உள்ளில் பளிச்சிடும் தோற்றத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
‘முலையிலாள் காம மாய்
அவன் மீதான
கானல் வேட்கை
உயிரைச்
சுடும்
மீட்சி
யே
அற்று’.
கல்லாதான் சொல் காமுறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று’ (திருக்குறள் 402)
பன்றிகுட்டிக்கு முலைகொடுத்தபடலம்- திருவிளையாடல் புராணம்
‘பன்னிரு
பன்றிக்குட்டிகளுக்குச்
சுரந்த முலைப்பால்
வழிசலை
நக்கி கொள்ளும் மனம் அவ்வப்பொழுது’
மும்முலைப்பெண்
மும்முலைப் பெண்கள் மூவர் கால-இடம் மாறி இந்த பாமாவின் ‘புதிதாக ஒன்று’ என்ற தலைப்பை உற்றுப்பாருங்கள். கதை சொல்லி சொல்லாமல் விட்ட புதிதாக ஒன்று ‘சீன தையல்காரியிடம் அளவெடுத்து தைக்கப்போகும் மார்புக்கச்சையல்ல. இந்தப் தலைப்பில் படைப்பாளி பதித்து ஒளித்து வைத்திருப்பது ‘புதிதாக ஒன்று’ நவீன குறியீடு. சரித்திர ரேகை படாமல் கால் அடுக்கி வைத்த நிலத்தோற்றத்தில் புராணத்தை பாமா கலைத்தவாறு பெண்களின் பேனா முனையின் வரைந்துள்ள கோட்டுச் சித்திரங்களில் புகுந்துள்ள கதாபாத்திரங்களான பெண்மக்கள் அம்மாவின் bra breast cancer ஜனகபிரியாவின் புற்றுநோய் கதையையும் தொட்டு அம்மாவின் கதைகள் ஆண்டன் செக்காவின் நடிகை கதைக்குள் நாடகியமாக உரையாடல் தோன்றிவிடுவதும் சமையல் என்றொரு இருட்டரங்கின் நாடகம் மருமகளோடு போட்டியிட்டு நீண்ட நாள் மூட்டுவலியாகி ஆப்ரேஷன் நடப்பதும் அதன் வாதைகள் கதையின் உள்ளுரைவாகவும் உள்ளன. ஆனாலும் அம்மா பையில் உள்ள சில கையேடுகளில் ஒருபக்க இருபக்க மார்பகங்கள் அகற்றப்பட்ட படங்களும் அதை சரிபடுத்த நவீன உலகம் படைத்துத் தரும் பிரத்யேக மார்புக் கச்சைகளும் விலை 400 வெள்ளி 500 வெள்ளி. ஆனாலும் அந்த சீனத்தையல்காரி கதைக்குள் வருகிறாள். அந்த போன் நம்பர் அவளுடையது . ‘அவளை கூப்பிட்டு எனக்கொரு பாடிய சொல்லி வைக்கிறாயா.’
இந்த ஆறுபிள்ளைகள் இங்கே இயக்கம் கொண்டதில் அம்மாவின் அலமாரி திறக்கிறது. உள்ளே பல மார்க்கச்சைகள் . அண்மையில் ‘ஏவோனில்’ வாங்கிய மார்க்கச்சைகளை என்னிடமிருந்து ‘உனக்கு பத்துமா?’ என்கிறாள். அந்த உள்ளாடைகளை வாங்க நான் தான் கூட்டிச் சென்றேன் பார்த்துப்பார்த்து அம்மா மார்க்கச்சைகளை தேர்வு செய்கிறாள் அனிச்சையாக ப்ராக்களை வைத்து அம்மா ஆடும் சிறுகதையின் சூதாட்டத்தில் சொருகிய நயனம் அசைத்துவித்த இந்த ஏவோனில் வாங்கிய மார்க்கச்சைகள் உமிழும் எரிந்து கக்கும் பால்பாதையில் ஆறுபெண்மக்கள் வெவ்வேறு உலகத்திலிருந்து வருகிறார்கள்.
ஆதிப்பெண்ணின் திறவுபடா முலைகள் அழற்பாலில் எழுந்ததோ லாவாவிருட்சம் அதன் விழுதுகளில் போய்மறைந்த அடிமைக்கப்பலில் வந்த தாய் ஒருத்தியின் பால் ஊற, கல் இலைகளில் எழுதப்பட்டிருந்த வெப்ப அயன மண்டபத்தை சேர்ந்த சனங்களின் வாழ்வு. தொல்பழங்காலம் முதல் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வரும் மலேயா தீபகர்ப்பத்தில் இவ்வேளை எழுதப்பட்ட இச்சிறுகதை சிதறிச்செல்லும் புராதனக்குறியீடுகள் உயிர்பெற்று மும்முலைப்பால் பொங்கிய அரசி தடாதகை நூறுவயதாகியும் பருவம் மாறாத வாலைக்கன்னி உயிர்குடிக்கும் வெறியும் குழந்தையின் சிரிப்பும் எரிந்த நீரின் தெளிவாய் எரியாத ஏடுகளை மூன்றாவது முலைப்பாலில் மூடி பால்வரைத் தெய்வமாய் சமண யட்சி என்ற நியதி புரண்டு அவள் ஆங்காரம் குடித்த முலை அறுத்தார் சொக்கனோடு சேர்த்து. கிதமால் நதிபொங்கி அறுந்த முலைப்பால் பாய்ந்தது இசையில்.
மும்முலை எனும் மறு வளர்ந்த இடும்பிக்கு மூன்று முலையாய் இடும்பன் தங்கை இடும்பியின் முலைக்காம்பில் ஈரம் கசியும் பச்சைச்சாறு ஆளுமை உள்ளுரையும் ஆண் மூச்சுக்காரியானாள். இச்சிறுகதையில் அம்மாவின் தாட்டியமான முடிவுகளைச் சுற்றித்தான் எல்லோரும், எல்லா பொருட்களும் கதைவெளியில் சுழன்றுக்கொண்டு இருக்கிறார்கள். அம்மாவின் கம்பீரத்தில் இடும்பியின் ரேகைகள் மறைந்திருக்கின்றன. வாசனையை குமாரத்தி மோப்பமிடுகிறாள்.வீமசேனனை சந்திக்கும் வேலையில் இடும்பியின் மூன்றாவது முலை மறைகிறது. ஆதித்தாய்க்கான குறியீட்டு இக்கதாயுக்தியில் நவீனக்கதையாக தோற்றம் கொள்கிறது.
தடாதகைப் பிராட்டியார் பரமனைச் சந்திக்கும் வேளையில் மூன்றாவது கண் காமநேத்திரமாய், கால விந்து சுழல அதைக்கையால் பொத்தி திறக்கவேண்டாம் என வெட்கி தலை கவிழ்ந்தாள் உமை. இக்கதையில் கடைசி வரை அம்மாவின் வீரியம் அடக்கப்படவில்லை. பெண்மொழிக்கான வீர்யம் கொள்வதில் சற்றே இடைவெளி காண்கிறது ‘புதிதாக ஒன்று’ சிறுகதை. ஆனாலும் வாசகன் சர்ப்பாத்திரமேற்று கதைக்குள் நுழைந்து ஆதித்தாயின் திறவுபடா யோனி திறந்து பிறக்கிறான்.
பாமாவின் சிறுகதை பற்றி வல்லினம் 100இல் பாண்டியனின் கட்டுரையை வாசித்தேன். பாமா தன் முன் கதைகளின் கதாபாத்திரங்களுள் புகுந்து ஈப்போவில் உள்ள ஈயச்சுரங்கங்களில் எடுத்த உலோகத்தைக் கொண்டு லட்சிய முலாம் பூசி தன் குரலிட்டு உரையாடும் தொனிகளைவிட்டு விலகியுள்ளார் ‘புதிதாக ஒன்று’ சிறுகதையில். ஈப்போவின் ஈயச்சுரங்கங்கள் மூடப்பட்டிருப்பதால் இனிமேல் ஈயமுலாம் பூசமாட்டார் என நம்பியே இச்சிறுகதையை தேர்வு செய்கிறேன். ஈப்போ ஈயச்சுரங்கம் எதார்த்தவாத லட்சிய முலாம் பூசுபவர்களுக்கு குறியீடாய் அமைந்து இனியான சிறுகதைகளை காப்பாற்றட்டும்.
Beautiful magical description of the landscapes of fiction by Konangi
எனக்கு தலையே சுற்றுகிறது. பாராட்டு போல் தெரிந்தாலும்…..இல்லை என்று சொல்வதற்கில்லை.