வடக்கு நோக்கி பறந்ததொரு மாயப்பறவை

வல்லினம் கலை இலக்கிய விழா முடிந்ததும் வழக்கம் போலவே நான் பரபரப்பானேன். எல்லாம் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க IMG-20171006-WA0022(1)வேண்டுமே என்கிற பரபரப்புதான். இந்த முறை எழுத்தாளர் கோணங்கியையும் உடன் அழைத்துச் செல்வதால் படபடப்பு அதிகம் இருந்தது.

இரண்டு நாட்கள் வடக்கு மாநிலங்களை அவருக்குச் சுற்றிக் காட்ட திட்டமிட்டிருந்தோம். ஆகவே நிகழ்ச்சி முடிந்ததும் கோணங்கியிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள சென்றேன். ஆனால், அவர் என்னைப் பார்த்ததுமே ‘புறப்படலாமா பாண்டியன்’ என்றார். ஶ்ரீதர் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். “பாண்டியனோடு போங்க பிரச்சனை இருக்காது” என்று ஶ்ரீதர் சொன்னதாக அவர் பின்னர் பல முறை கூறினர் . அப்படியும் சில பிரச்சனைகள் வந்து போனது வேறு கதை.

நவீன் எங்கள் இருவரையும் ரயில் நிலையத்தில் விட வந்திருந்தார். அதற்கு முன்பாக தயாஜி, விஜயா, மற்றும் பலருடன்  செந்தூல் தேங்காய் பால் அப்பம் கடையில்  ஓரளவு பசியை ஆற்றி கொண்டோம். ரயில் நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கவில்லை. ரயிலில் அமர்ந்ததுமே கோணங்கி சகஜ நிலைக்கு வந்திருந்தார்.  என்னோடு எந்த இடைவெளியும் இல்லாது பேசத்தொடங்கியிருந்தார். நான் கல் குதிரை பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். பேச்சு மலேசிய இலக்கிய சூழல் குறித்தும் வடக்கில் சுவாமியின் ஒத்துழைப்பு குறித்தும் போனது. ஆயினும் அவர் பேச்சு சில நேரங்களில் எனக்கு புரியாமல் தடுமாறவே செய்தேன். காரணம் அவர் சொல் பிரயோகமும், படிமங்களையும் நான் அறிந்திராத இலக்கிய படைப்புகளின் காட்சிகளையும் கலந்து பேசுவது எனக்கு பிடிபட வில்லை.

சட்டென நினைவு வந்தவராக தன் பையில் இருக்கும் நெகிழிப்பை பொட்டலத்தை எடுத்துவரச் சொன்னார். அதில் குழந்தைகள் விரும்பி உண்ணும் பாக்கெட் உணவுகளும் ஒரு பெரிய கொக்கோ சாக்லேட் பாரும் இருந்தன. சிங்கப்பூர் வாசகர்கள் வாங்கி வந்ததாக சொல்லி நொறுக்குத்தீனி பாக்கெட்டை பிரித்து சாப்பிடத் தொடங்கினார். அதை சுவைத்து சாப்பிட்டதோடு, பயண மூடுக்கு ஏற்றது என்று கூறி எனக்கும் கொடுத்து சாப்பிடச் சொன்னார். நான் பெரும்பாலும் அது போன்ற நொறுக்குகளை தின்பது குறைவு என்றாலும் வாயில் மென்று கொண்டிருந்த சுவிங்கம்மை துப்பி விட்டு கோணங்கியுடன் சேர்ந்து நொறுக்குத் தீனி சாப்பிடத் தொடங்கினேன்.

அதே பொட்டலத்தில் இருந்த சாக்லெட்டை சின்னதாக உடைத்து தானும் சாப்பிட்டு எனக்கும் சில துண்டுகளைக்  கொடுத்தார்.”பரவால்ல  சாப்பிடலாம்’’ என்று கூறியபடி  எனக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார். நானே போதும் என்று நிறுத்தி கொண்டேன். நான் ஒரு தாடி நரைத்த குழந்தையுடன் பயணம் செய்யும் பிரம்மைக்கு ஆளானேன்.  அந்தச் சாக்லேட் துண்டை பிறகு அவர் மறுநாள் பயணங்களில் கூட சின்ன சின்னதாக கிள்ளி அவ்வப்போது வாயில் போட்டுக் கொண்டு பரவசப்பட்டுக் கொண்டார்.  ஒரு குழந்தையின் பரவச நிலை அது.   பிறகு  “ஊருக்கு கிளம்பும் போது ஏதாவது வாங்கிட்டு போகனும், வாண்டுக பேக்கை ஆராயுங்க” என்று கூறியது அவரது தம்பி பிள்ளைகளை மனதில் வைத்து என்பதை புரிந்து கொண்டேன்.

நான் அவரிடம் ப.சிங்காரம் பற்றி கேட்டேன். எஸ்.ரா அவரை ரங்கூனில் இருந்து வந்ததாகவும் ரங்கூன் பெட்டி அவரிடம் இருந்ததாகவும் எழுதியுள்ளது பற்றியும் கேட்டேன். அது தவறு! அவர் மேடானில் இருந்துதான் வந்ததாக கோணங்கி தெளிவு படுத்தினார். இரவு பத்து வாக்கில்  ரயில் கேஃபேயில் எனக்கு சென்வீட்சும் அவருக்கு மீ கோரேங்கும் வாங்கிக் கொண்டேன்.  சுடச் சுட இருந்த மீகோரேங் அவருக்கு பிடித்திருந்தது. “பிரயாண மூடுக்கு நல்லா இருக்குல்ல” என்று கூறிக் கொண்டே சுவைத்து உண்டார்.

இடை இடையே ரயில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஓர் ஆங்கிலப் படத்தில் இருவரும் கவனம் செலுத்துவதும் பிறகு பேச்சை தொடருவதுமாக இருந்தோம். அது ஒரு புராண தொன்மை கதையாக இருந்ததால் கோணங்கி சட்டென கதைக்குள் சென்று வந்து கொண்டிருந்தார்

அவரது சினிமா ரசனை குறித்து கேட்டேன். ஒவ்வொரு ஆண்டும்,  ஆண்டு இறுதியில்   திரைப்பட விழாக்களில் மொத்தமாக அந்த ஆண்டின் முக்கிய திரைப்படங்களைப் பார்த்துவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக  கூறினார். சம காலத்தில் எல்லா கலைத்துறையிலும் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களையும் புதுமைகளையும் ஒரு சிறுபத்திரிகைக்காரன்  கண்டிப்பாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார். அவர் தான், சிறுபத்திரிகை சார்ந்தவன் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் உணர்வதை அவரின் ஒவ்வொரு பேச்சிலும் தெரிந்து கொள்ள முடிந்தது.  இறுதி நாள் இரவு என் வீட்டில் தங்க வேண்டிய திடீர் சூழல் வந்த போது, அறையின் வசதி குறித்து நான் கொஞ்சம் தயங்கிய போது, ஒரு சிறு பத்திரிகைகாரன் எல்லா சூழலிலும் வாழத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்றார்.  நவீன் அவருக்காக வானொலி நேர்காணல் ஒன்றை ஏற்பாடு செய்து அவரிடம் கூறியபோது, அதை உடனடியாக மறுத்து, “சிறுபத்திரிகைக்காரனுக்கு ரேடியோ எல்லாம் சரியா வராது” என்று கூறிவிட்டார்.

கல்குதிரையைக் கொண்டுவருவதில் இருக்கும் சிரமங்களை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறார்.  இன்னமும் அவர் கையெழுத்தில் எழுதியே கணினிக்கு நண்பர்களின் உதவியில் மாற்றுகிறார். முகநூல், வலைப்பூ போன்ற நவீன எழுத்து தளங்கள் அவரது படைபூக்கத்துக்குத் தடை என்பதால் அதில் ஈடுபடுவது இல்லை என்றார்.  அவரது முழு கவனமும் கல்குதிரையில் மட்டும்தான் உள்ளது.  ஒவ்வொரு இதழ் வெளியீட்டிலும் ஏற்படும் பண நஷ்டங்களையும் நன்றாக உணர்ந்தே செய்கிறார். கல்குதிரையை அவர் ஓர் இயக்கமாகவே பாவிக்கிறார் என்பதை அவரின் பேச்சில் உணரமுடிந்தது.  கல்குதிரை வெளிவந்தததும் அதை உடனடியாக வாங்கவும் வாசிக்கவும் காத்திருக்கும் ஐநூறு உலகலாவிய வாசகர்களுக்காகவே அதை அவர் செய்து கொண்டிருக்கிறார், எல்லா புதிய இலக்கிய முயற்சிகளுக்கும் கல்குதிரையின் வழி இடம் கொடுப்பதோடு பல புதிய இளைஞர்களையும் கொண்டு வந்துகொண்டிருக்கிறார். அப்படியாக அவர் சமகால இளைய படைப்பாளர் பட்டியல் ஒன்றை வைத்துள்ளார்.  எனக்கு அந்த படைப்பாளர்கள் மிகவும் புதியவர்களாக இருந்தனர். அது நான் எவ்வளவு பின் தங்கியுள்ளேன் என்பதை உணர்த்தியது,

“இலக்கியத்துல வேகம் எல்லாம் கூடாது…நிதானமா செய்தாலே போதும்…எவ்வளவோ வேகமா போனவன் எல்லாம் காணம போயிட்டான்” என்று அவர் கூறியதை நான் பல கோணங்களில் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்,

ரயில் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சற்று நேரம் நிற்கும் போது அந்த ஊர் பற்றி அவரிடம் பேசினேன். அவர் நகரங்களின் வரலாற்றை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார். ரவாங்,  ஈப்போ. கோலா கங்சார், தைப்பிங்  போன்ற நகரங்களின் வரலாறுடன் மலேசிய குடியேறிகள் வரலாற்றையும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், இருட்டில் மின்மினி பூச்சியாக ஆங்காங்கே தெரியும் விளக்கொளிகளைத் தவிர வேறு ஒன்றையும் பார்க்க முடியாதது வருத்தமாகவே இருந்தது. ஆயினும் கோணங்கி சன்னல் கண்ணாடியில் கூர்ந்து பார்த்துக் கொண்டு வந்தது இருட்டை ஊடுருவி தொன்மையான நகரங்களை அவர் பார்த்துக் கொண்டு வருவதாகவே எனக்கு நினைக்கத் தோன்றியது.

நள்ளிரவு பன்னிரெண்டுக்கு ரயில் பட்டர்வொர்ட் வந்து சேர்ந்தது. பாலமுருகன் எங்களுக்காக காத்திருந்தார். அன்று இரவு கோணங்கியை பாலமுருகனுடன் அனுப்பிவிட்டு வீடு வந்தேன். அவர் பாலமுருகன் வீட்டிலேயே தங்கினார்.

மறுநாள் நான் சுங்கைபட்டாணி சென்று கோணங்கியையும் புண்ணியவானையும் ஏற்றிக் கொண்டு லெம்பா பூஜாங் சென்றோம். புண்ணியவான் வீட்டின் வாசலில் இருந்த ரோத்தான் நாற்காலிகளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார் கோணங்கி. “எழுத்தாளனுக்கு ஏத்தமாறி வீட்ட செட் பன்னியிருக்கார்” என்று கூறினார்.

ஒரு பிரம்பு நாற்காலியையே ஆச்சரியங்கள் மிளிர பார்ப்பவர் பூஜாங் பள்ளத்தாக்கில் நிறைந்துகிடக்கும் அதிசயங்களை எப்படிப்பார்த்திருப்பார் என்று நான் சொல்லத் தேவையில்லை.  பூஜாங் பள்ளத்தாக்கு கல்வெட்டுகளிலும் புராதன சிற்பங்களிலும் தன்னை மறந்து சிறகடித்துக் கொண்டிருந்தார். அருங்காட்சியகத்தில் இருந்த பொருட்களின் விளக்கங்களை அறிந்து கொண்டார். அங்கே இருந்த பாதரச குடுவை ஒன்றை பார்த்து அது பற்றியே பேசிக் கொண்டிருந்தார்,  தனது ‘பாதரச ஓநாய்கள்’ சிறுகதையை நினைவு கூர்ந்தார். பாதரசம் வரலாற்று காலத்தில் ஒரு வணிகப் பொருளாக இருந்துள்ளதையும் தங்கத்தை உருக்க அது தேவைப்பட்டிருப்பதையும் அறிய முடிந்தது. கூனூங் ஜெராய் செல்ல நினைத்து நேரமின்மை காரணமாக கைவிட்டோம்.

பிறகு பணி முடிந்து பாலமுருகனும் இணைந்து கொள்ள நாங்கள் மதிய உணவுக்கு அலைந்து இறுதியில் ஒரு சீன கடல் உணவுக் கடைக்குப் போனோம். கடல் உணவோடு காட்டுப்பன்றியும்  சுவையாக இருந்தது. பிறகு எங்கள் பயணம் தைப்பிங் நகருக்குச் சென்றது. அவரிடம் இருந்த ஒரு சில கல்குதிரை இதழ்களை எங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.  குதூகலமான உரையாடலுடன் பயணம் தொடர்ந்தது.  அங்கு மழைச்சாரல் இலக்கிய குழு பொறுப்பாளர் வாணி ஜெயம்  ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

தைப்பிங் சந்திப்பு முடிந்து கூலிம் தியான ஆசிரமத்தில் கோணங்கி தங்கினார். பினாங்கின் சில பகுதிகளுக்கு கோணங்கி சுவாமியுடன் மறுநாளும் அதற்கு மறுநாளும் சென்று வந்தார். பினாங்கு பெருநிலத்தையும் தீவையும் இணைக்கும் கடலை ஃபேரி சேவையின் வழி கடக்க ஆசைப்பட்ட கோணங்கியின் ஆவலை சுவாமி தீர்த்து வைத்தார். அந்தப் பயணங்களில்  பணி காரணமாக என்னால் இணைந்து கொள்ள முடியாதது பெரும் குறையாக இருந்தது.

புதன்  இரவு கூலிம் நவீன சிந்தனை குழு நண்பர்கள் சந்திப்பில் கோணங்கி கலந்து கொண்டு உட்சாகமாக பேசினார். சுவாமி, எழுத்தாளர் புண்ணியவான், குமாரசாமி, மணி ஜெகதீசன், பாலமுருகன், தினகரன் ஆகிய எல்லாருமே கோணங்கியின் பேச்சில் லயித்து போயிருந்தனர்.  இலக்கிய பிரதிகளின் மிக நுட்பமான பகுதிகளையும்  குறியீடுகள்  பற்றியும்  விளக்கிக் கூறினார். ஒரு வரலாறோ நிகழ்வோ இலக்கியத்துக்குள் அடையாளம் தெரியாமல் முற்றாக கரைந்து போய்விட வேண்டும் என்று அவர் சொன்னது என்னளவில் மிகப்பெரிய சவால் என்றுதான் தோன்றுகின்றது.

சினிமா பக்கம் தான் செல்லாததன் காரணங்களை விளக்கினார். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து உதவி இயக்குனர்களாகவும் கலைஞர்களாகவும் இருந்து மறைந்து போன பல ஆயிரம் பேரின் குரல் தன் காதில் கேட்டுக் கொண்டிருப்பதாக சொன்னார்.   சந்திப்புக்குப் பிறகும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினோம். கோணங்கி மனதளவில் இன்னொரு பயணத்துக்கு  தயாராகிவிட்டது அவர் பேச்சில் தெரிந்தது. கூண்டுக்குள் அடைப்பட்ட பறவை போல அவர்  சட்டென்று பறக்க இறக்கைகள் படபடக்க நிற்பது புரிந்தது.

மறுநாள் அதிகாலை 4.50 மணி ரயிலில் அவரை கோலாலம்பூருக்கு அனுப்பி வைத்தேன்.  மாயங்களும் குழந்தைமையும் ஒன்றாக கூடிய கோணங்கி ‘கருப்பு ரயில்’ குழந்தைகளின்  உட்சாகத்தோடு தன் பயணத்தை தொடர்ந்தார்.

1 comment for “வடக்கு நோக்கி பறந்ததொரு மாயப்பறவை

  1. Mani Jegathisan
    October 7, 2017 at 10:28 am

    சுவாரஸ்யமான மனிதர், பாண்டியன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...