நீண்டு பிளந்த மீன்னல் கதவுகளின் ஊடாக வாரிப்பொழிந்து கொண்டிருந்தது வானம். வெளிச்ச நரைகள் படிந்த இருளின் அமைதி அந்த விமான நிலையத்தை முழுமையாக ஆக்கிரமித்துக்கிடந்தது. மாறி மாறி வந்திறங்கிய விமானங்களுக்குள் பெருமூச்செறியும் பலநூற்றுக்கணக்கான உயிர்களின் நிம்மதியினாலோ என்னவோ அந்த பெருவிதானம் தொடர்ந்து காற்றோட்டம் நிறைந்ததாகவே காணப்பட்டது.
வாழ்வின் சகல அழுக்குகளையும் அகத்தில் சுமந்த ஒருவனையும் மீதி நூற்றுச்சொச்சம் பேரையும் காவி வந்த மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் தரைதட்டியது.
நேரம். நள்ளிரவு தாண்டி ஒரு மணி.
செயற்கை ஒளிக்கதகதப்பில் கங்காரு நகர் நிம்மதியாக நீராடிக்கொண்டிருந்தது.
ஆளுக்காள் ஒன்றுமே பேசாமல் மணிக்கணக்காக அருகருகே இருந்துவந்த நரேனும் வித்தியாவும் விமானம் வந்திறங்கிய பின்னரும்கூட எதுவும் பேசுவதற்கு முயற்சி செய்யவில்லை. நரேனின் முகத்தை திரும்பிக்கூட பார்க்க விரும்பாத வித்தியா, சரசரவென்று எழும்பி ஹான்ட் லகேஜை எடுத்துக்கொண்டு பயணிகளோடு பயணிகளாக பெரிய லகேஜ்களை எடுக்கும் இடத்துக்கு விரைந்தாள்.
முதுகில் குனிய – நிமிர முடியாத அளவுக்கு பெரிய பண்டேஜ். இடது முழங்கையின் கீழ் முறிந்து பத்துப்போட்டிருந்தது. கிட்டத்தட்ட அரைவாசி ஊனமடைந்த ஜீவன் என்றே சொல்லலாம். தோழர் வேறு யாருமல்ல. வித்தியாவிற்கு அருகில் இருந்து வந்தவனாக மேலே சொல்லப்பட்ட நரேன்தான். வலதுகையில் தனது ஹான்ட் லகேஜை போட்டுக்கொண்டு வித்தியாவுக்கு பின்னால் இழுபட்டுக்கொண்டு போனான்.
பெரிய லகேஜ் இரண்டும் பட்டியில் மிதந்து வந்தவுடன் அவற்றை தானே இழுத்தெடுத்து தள்ளுவண்டிலில் போட்டுக்கொண்ட வித்தியா வாசலுக்கு விரைந்தாள். டக்ஸியை மறித்து ஏறினாள். முதுகில் காயம் என்பதால் பின் பக்கம் நோகாமல் இருப்பதற்கு விமானத்தில் வரும்போது நோகாமலிருப்பதற்கு வைத்துக்கொண்டு வந்த தலையணையை டக்ஸி சீற்றிலும் அட்ஜஸ்ட் செய்து வைத்துவிட்டு சூரன்போர் பொம்மைபோல உள்ளே ஏறினான் நரேன்.
“அம்ம்ம்ம்ம்ம்மா….” என்ற முனகலுடன் ட்ரைவருக்கு அருகில் உள்ள சீற்றில் தொப் என்று அமர்ந்து ஆறுதலானான்.
அடர்த்தியான மௌனம். ஊசியால் குத்திக்கொண்டிருப்பது போன்ற வெறுமை. அடுத்த கணத்தை சிந்திக்க விடாமல் இறந்த காலத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் வலி என்று மனதைப்பிசைந்துகொண்டிருக்கும் இந்த பிரளயத்துக்கு யார் காரணம்?
சந்தேகமே வேண்டாம். முனகிக்கொண்டிருக்கிறானே இவனேதான். முறிந்த கையாலும் இழைப்போட்ட காயங்களாலும் இவன் இப்போது ஊனமாகியிருக்கலாம். ஆனால், இவனது நாற்றம் பிடித்த மனம் எப்பவோ அழுகிவிட்டது.
“ஒஸ்ரேலியா மாப்பிள்ளை. இரண்டு வருசத்துக்கு முதலே வீடு வாங்கீற்றாராம். முழுநேர பக்ட்ரி வேலையோட போட்டோ எடுக்கிறதையும் பார்ட் டைமா செய்யிறாராம். இயக்கத்துக்கு நல்ல சப்போர்ட்டாம். மாவீரர் தினம் அது இது எண்டு நிகழ்ச்சிகளுக்கு போறவராம்” – என்று வெளிநாட்டு மாப்பிள்ளை பிடிகாரன் ஒருத்தன் வாசித்த சாதகத்தை அப்படியே மனப்பாடம் செய்து உள்ளுக்குள் பயங்கரமாக புளுகப்பட்ட சங்கரலிங்கத்தார் இரண்டு மாதத்தில் அவசர அவசரமாக செய்து வைத்த திருவிழாதான் நரேன் – வித்தியா திருமணம்.
சங்கரலிங்கத்தார் ஒரு அலங்காரப்பிரியர். ஊருக்குள் தனது மேதா வீலாசங்களை மூக்கு முட்ட பேசி மகிழ்வதிலேயே நாட்களை ஓட்டுபவர். மூத்த மகளுக்கு கலியாணம். குடும்பத்தில் முதலாவது நல்ல காரியம். அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் நுனிக்காலில் ஓடி ஓடி ஸ்பெசல் கரிசனையுடன் கலவரப்பட்டவர். ஊருக்குள் தன்னுடைய தடிப்பை காட்டுவது என்ற முடிவோடு இணுவில் பரராச சேகரப்பிள்ளையார் கோவிலில் இப்படியொரு கலியாணத்தை ஊர்ச்சனம் இனிமேல் நினைச்சும் பார்க்கக்கூடாது என்று பந்தயத்துக்கு செய்த மாதிரி கலியாணத்தை நடத்தி சாதிச்சவர்.
வித்தியாவுக்கு இவையெல்லாம் துப்பரவுக்கு விருப்பமில்லை. ஆனால், தகப்பனின் மார்தட்டுத்திருவிழாவுக்கு தனது மண்டையை ஆட்டுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை. கலியாணம் முடிந்து, வெள்ளவத்தை விஸா பிள்ளையார் கோவில் படிக்கட்டினை மாதக்கணக்காக ஏறி இறங்கி, விஸா எடுத்து, ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தின் படிக்கட்டை ஏறும் வரைக்கும் தகப்பன் சொன்ன எல்லாவற்றுக்கும் பூம் பூம் மாடு போல தலையை ஆட்டிக்கொண்ட சராசரி வெளிநாட்டு விரும்பி என்றும் சாதுவாக சொல்வதில் பிழையில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு வந்த பிறகுதான் அவளது அப்பாவித்தனத்துக்கு சவால் விடுக்கும் எத்தனையோ நூதனமான பிரச்சினைகள் எல்லாம் அவளது வாழ்க்கையில் குத்தாட்டம் போட ஆரம்பித்தன. அவளை அவளாக இருக்கவிடாமல் அவளது மனதை எல்லா திசைகளிலும் விகாரமுறச்செய்யும் தொந்தரவுகள் வாழ்வில் புதிது புதிதாக முளைக்கத்தொடங்கின.
உண்மையை சொல்லப்போனால், ஆரம்பத்தில் தன்னுடைய தங்கை சாருவுடன் நரேன் பழகிய விதங்கள் அனைத்தும் இயல்பானவை என்ற மித மிஞ்சிய நம்பிக்கையோடுதான் வித்தியா எல்லாவற்iயும் ஏற்றுக்கொண்டாள். சாருவுடன் நரேன் காண்பித்த நெருக்கத்தை தனது குடும்பத்துடன் காண்பிக்கும் நெருக்கமாக கண்டு ரசித்தாள். பேச்சுக்கல்யாணத்தில் இப்படியாக உறவுகள் நெருக்கமடைவதை பெரும்பாக்கியமாக கண்டு வித்தியாவின் குடும்பத்தினர்கூட பூரித்துப்போயிருந்தார்கள்.
கலியாணம் முடிந்த பின்னர் குடும்பமாக கசோரினா பீச் போகும்போது சாருவுடன் நரேன் காண்பித்த எக்ஸ்ட்ரா நெருக்கங்களோ, கடலுக்குள் சாரு இறங்க பயப்பட்டபோது நரேன் அவளின் கையைப்பிடித்து அலைகளுக்கு நடுவில் அழைத்து சென்று விழுந்தெழும்பிய சம்பவங்களோ எதுவுமே அவளுக்கு மட்டுமல்ல குடும்பத்தில் எவருக்கும் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. “ஆஸ்திரேலியா மாப்பிள்ளை எண்டாலும் எங்கட கடலுக்குள்ள விழுந்து எழும்பத்தான் வேணும்” – என்று சங்கரலிங்கத்தார் அடித்த மரண மொக்கை பகிடிக்கு அப்போது குடும்பமே லூசுக்கூட்டம் போல சிரித்து அகமும் புறமும் மகிழ்ந்தது.
ஆனால், நரேனுக்கு அந்த குடும்பத்தில் முருகப்பெருமானாக அந்த குடும்பத்தில் முக்குளித்து எழும்பவேணும் என்ற வெறி சாருவை பார்த்த மாத்திரத்திலேயே பற்றிக்கொண்டுவிட்டது. அங்குலம் அங்குலமாக பார்வையால் அங்குசம் வீசி அவளை ரசிப்பதிலேயே அவனது யாழ்ப்பாண நாட்களை கொண்டாடினான்.
வித்தியாவுக்கு ஸ்பொன்ஸர் கிடைத்து ஆஸ்திரேலியா வரும்வரைக்கும் சாருவுடனும் தொலைபேசியில் குடும்பம் நடத்துவதற்கு நரேனுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. அத்தானின் குசும்புகளை ஆஸ்திரேலிய மாப்பிளை என்ற பிரமிப்போடு கிளுகிளுத்துக்கொண்டு தொலைபேசி வழியாக நெளிந்த சாருவுக்கு அக்காவுக்கு துரோகம் செய்வதாக துளியும் எண்ணவில்லை. அந்தளவுக்கு அப்பாவியாக கிடந்தாள் என்பதுதான் இங்கு வேதனையான உண்மை.
வித்தியா ஆஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு, சாருவை ஸ்டுடண்ட் விஸாவில் எடுத்து படிப்பிக்கவேணும் என்று வித்தியாவிடம் அடிக்கடி நரேன் செல்லிக்கொண்டான். அந்த அன்பையும் அக்கறையையும் பார்த்து வித்தியா ஆனந்தக்கண்ணீர் வடிக்காததுதான் குறை. தான் கும்பிட்ட பரராசசேகரப்பிள்ளையார் எப்பிடிப்பட்ட ஒரு அனாத ரட்சகனை தனக்கு வாழ்க்கைதுணையாக அனுப்பியிருக்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்தாள்.
புதிய ஊரை, புதிய மொழியை, புதிய மனிதர்களை பழகுவதிலேயே வித்தியாவுக்கு அதிக ஆர்வமிருந்ததால் நரேனின் மண்டைக்குள் ரகசியாக ஓடிக்கொண்டிருந்த வியூகங்களையெல்லாம் துப்பறிவதற்கு நேரமிருக்கவில்லை.
இரண்டாவது அபோசன் ரிசல்ட்டுக்காக ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கரிய மிருகம் எந்த கூச்சமும் இன்றி தனது சுயரூபத்தை காண்பிக்க தொடங்கிய நேரடியான கணத்தை வித்தியா முதன் முதலாக அனுபவித்தாள்.
கேட்ட மாத்திரத்திலேயே ஒரு பெரிய வாகனத்துடன் மோதிய அவர்களது கார் அந்தரத்தில் குறைந்தது பத்து பன்னிரண்டு தடவையாவது சுழன்று பல கிலோ மீட்டர்கள் தள்ளி போய் விழுந்தது போல உணர்ந்தாள் வித்தியா. தலையை ஒரு கையாலும் சீற் பெல்ட்டுக்குள் பிதுங்கிக்கிடந்த தனது வயிற்றை மறு கையாலும் பொத்திக்கொண்டு ஓங்காளித்தாள். பொறி தட்டியதுபோல நினைவு மீளும்போது எதுவுமே நடக்காததுபோல நரேன் காரை நிதானமாக ஓட்டிக்கொண்டிருந்தான்.
“இனியும் எங்களுக்குள்ள ஒண்டும் நடக்கும் எண்டு தெரியேல்ல வித்தியா. ஏதிர்காலத்தில பிள்ளை குட்டியெண்டு வாறதெண்டால், எனக்கு சாருதான் பொருத்தம்போல கிடக்கு” – என்று அவன் கூறியதில் சாரு என்ற பெயர்தான் வித்தியாவின் தலைக்குள் வளையம் வளையமாக ஓடிக்கொண்டிருந்தது.
“அம்மாவுக்குள்ளால நிதானமாக பேசி அவளை இஞ்ச கூப்பிடுற வழிய பார். இந்த நாட்டில இதல்லாம் நோர்மல். ஆப்கான், ஈரான் காரங்களுக்கு மத்தியில இது வழக்கமாக நடக்கிற ஒண்டுதான். இத பெரிசா சீன் போட்டு விசயத்தை பெருப்பிக்காத. ஆனா ஒண்டு, அவளுக்காக உன்னை விட்டுப்போடுவன் எண்டு மட்டும் நீ யோசியாத” – என்று விடாமல் சொல்லி முடித்தான்.
அந்த அற்ப பிறவியை வித்தியாவால் நம்பவே முடியவில்லை. அவனது மனச்சுவர்களின் வழியாக பல காலமாக ஏறி ஏறி உள்ளே விழுந்துகொண்டிருந்த அந்த நச்சுப்பாம்புகள் இன்று எந்த தங்கு தடையுமின்றி வெளியில் வந்து விழுந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது பயங்கரமாக இருந்தது.
“பரராச சேகரப்பிள்ளையரே” – என்று பல்லை நெரும்பினாள். வெளியில எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
கசோறினா பீச், சாருவுடன் நரேன் அலைகளுக்குள் விழுந்தது, வீட்டுக்குள் அவளை அங்காங்கே அடித்து விளையாடியது, அதற்கு அவள் சிணுங்கியது என்று எல்லாமே இப்போது வித்தியாவின் நினைவில் வேறு காட்சிகளாக உரு மாறத்தொடங்கின. நொடிப்பொழுதில் மனதுக்குள் மின்னலாக வந்துபோன எல்லா சம்பவங்களிலும் நரேன் ஒரு மிருகமாக ஓடித்திரிந்தான்.
மிச்ச தூரமெங்கும் அந்த காருக்குள் மௌனம்தான் நிரம்பிக்கிடந்தது. வித்தியாவுக்கு தலை விட்டுவிட்டு குத்திக்கொண்டிருந்தது. வீட்டுக்கு போன கையோடு இரண்டு பனடோலை எடுத்துப்போட்டுவிட்டு படுத்துவிட்டாள்.
எதுவுமே நடக்காததுபோல இரவு வேலைக்கு கிளம்பினான் நரேன்.
அவன் வேலைக்கு போனதோடு தாயிடம் போன் பண்ணி குழுறியழுதாள் வித்தியா. அபோசன் தகவலையும் கூடவே கேள்வியுற்ற தாய் பரமேஸ் மறுமுனையில் தானும் பதிலுக்கு அழத்தொடங்கிவிட்டாள். வீட்டுக்கு வருபவர்கள் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் இயன்றளவு அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டாள்.
அப்போது எதேட்சையாக ஹோலுக்குள் நுழைந்த சங்கரலிங்கத்தார் போனை கழுத்துக்குள் செருகி வைத்துக்கொண்டு பரமேஸ் அழுது கொண்டிருப்பதை கண்டு ஒரு கணம் நின்று பார்த்தார். பரமேஸின் சுருங்கிய முகத் தசைகளின் இடைவெளிகளில் கண்ணீர் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது.
நெற்றியை சுருக்கிக்கொண்டு அவர் பார்த்த ஒற்றை பார்வையில் வித்தியா சொன்ன எல்லாவற்றையும் அப்படியே ஒப்புவித்தாள் பரமேஸ்.
நிலத்தை குத்தெனப்பார்த்துக்கொண்டு கதை முழுவதையும் கேட்டு முடித்த சங்கரலிங்கத்தார் “அப்பா எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளுவாராம்” – என்று மகளிடம் சொல்லுமாறு கூறினார். பிறகு, வெளிவிறாந்தை கட்டிலில் போய் சாய்ந்தார்.
சங்கரலிங்கத்தார் எப்பவும் பதற்றப்படமால் காரியங்களை செய்துமுடிப்பவர். உடனடியாக எந்த முடிவுகளை அறிவிப்பவர் கிடையாது. எதையும் யோசித்து நிதானமாக செய்பவர். நெத்திப்பொட்டில் அடித்தாற்போல தனது தரப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பவர். இது பரமேசுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் இந்த விடயத்தில் அவரது மௌனம் மிகுந்த சஞ்சலமாக இருந்தது.
ஒரு கிழமை ஓடியது. சங்கரலிங்கத்தாரின் காரியத்தில் எந்த அசுமாத்தமும் இல்லை.பரமேஸ் ஊடாக வித்தியாவுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறினார். “சாருவுடன் இது பற்றி எதுவும் பேசவேண்டாம்” – என்று இருவருக்கும் இறுக்கமாக கூறியிருந்தார்.
நல்லூர் திருவிழா வருவதால் ஊருக்கு வந்து போகுமாறு கூறி தானே டிக்கெட் போட்டு நரேனையும் வித்தியாவையும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்தார்.
பயங்கர குழப்பத்தோடு வித்தியா வந்து இறங்கினாள்.
‘பூம் பூம் மாடு வித்தியா தான் கேட்ட விசயத்தினால் பயங்கரமாக குழம்பியிருப்பாள். இப்போதைக்கு உடனடியாக எதையும் தாயிடம் சொல்லியிருக்கமாட்டாள்’ – என்று நரேன் திடமாக நம்பியிருந்தான். சாருவுடன் அவ்வப்போது தனியாக நூல் விட்டு பார்த்த வரைக்கும் வீட்டில் எந்த மாற்றங்களும் இல்லை என்பதை கூடவே தனக்குள் உறுதிப்படுத்தியுமிருந்தான். அதேவேளை, தான் ஊரில் நிற்கும்போது வித்தியா நிச்சயம் இந்த விசயத்தை தாயிடம் கேட்கமாட்டாள் என்றும் முரட்டுத்தனமாக நம்பியிருந்தான்.
மொத்தத்தில் தனது சாருவை பார்ப்பதற்கு மாமன் செலவில் ஒரு இலவச ட்ரிப் என்ற வகையில்தான் பயங்கர சந்தோசத்துடன் ஊருக்கு பறந்து வந்தான்.
இதுதான் நரேனின் குணாதிசயங்களிலேயே விசித்திரமான ஒன்று. பாரதூரமான பிழைகளை செய்பவர்கள் எல்லாம் அநேகமாக எல்லாவித விளைவுகளையும் கணக்குப்போட்டு அதற்கேற்றவாறு திட்டமிட்டுக்கொள்வார்கள். திட்டம் பிழைத்தால் எவ்வாறு மாட்டாமல் தப்புவது அல்லது மாட்டியவனை எவ்வாறு பழிவாங்குவது என்பவற்றைக்கூட கணக்குப்போட்டிருப்பார்கள். ஆனால், நரேனை பொறுத்தவரை தான் செய்யும் பிழைகள் ஒருபோதும் பிடிபடாது என்றும் பிடிபட்டாலும் தன்னை ஒருவரும் தண்டிக்கமாட்டார்கள், அப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிட்டால் தடாலென்று காலில் விழுந்து விசயத்தை அமுக்கி விடாலாம் என்றும் படுமுட்டாள்தனமான எதிர்பார்ப்புகளோடுதான் அவன் செய்யும் முக்கால்வாசி காரியங்கள் அமைவது வழக்கம்.
யாழ்ப்பாணம் வந்து இறங்கிய நாள் முதல் அநியாயத்துக்கு நல்ல பிள்ளையாக நடித்தான். அவன் மாத்திரமல்ல, மாமனார், மாமி, வித்தியா என்று ஆளையாள் விட்டுக்குடுக்காமல் போட்டிக்கு நடித்தார்கள். நல்லூர் திருவிழா முழுவதும் குடும்பமாக சென்று வந்தனர். நரேனையும் சாருவையும் தவிர மீதி எல்லோருக்கும் ஒவ்வொரு நாளும் பெரும் யுகமாக விடிந்து கழிந்தது.
சாரு எதுவுமே தெரியாதவளாக எல்லோரையும் சுற்றி சுற்றி வந்தாள். அவளை நரேன் எப்படி பார்க்கிறான் என்றுகூட சங்கரலிங்கத்தார் கவனிக்கவில்லை. வித்தியாவுக்கும் தாய்க்கும் தலையே வெடித்துவிடும் போல இருந்தது. மொத்த குடும்பமும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி லூஸ_கள் போல நடிப்பது என்றெண்ணி வித்தியாவுக்கு விசரே பிடித்துவிடும்போல இருந்தது. தகப்பனின் திட்டத்தை அறிவதற்கு தாயின் வழியாக முயற்சி செய்துபார்த்தாள். பரமேஸ் சதா உளவு பார்த்துவிட்டு வந்து கையை விரித்தாள். வித்தியா வந்திருப்பதை கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்தவர்களைக்கூட இந்த நாடக கொம்பனி இயலுமானவரை நடித்து வழியனுப்பி வைத்தது.
திருவிழா முடிந்து நான்காம் நாள் நரேன் தனது நண்பன் ஒருவனின் வீட்டுக்குப்போய்வருவதாக மாமனார் சீதனமாக கொடுத்தவற்றில் ஒன்றான ஹீரோ ஹொண்டாவில் உரும்பிராயிற்கு போயிருந்தான்.
இரவு பத்து மணியாகியும் திரும்பி வரைவில்லை. மொபைலுக்கு அழைத்தால் பதில் இல்லை. தன்னுடைய போனை எடுக்கிறான் இல்லை என்று முன்னறையில் சார்ஜில் போட்டிருந்த தகப்பனின் போனிலிருந்தும் அடித்துப்பார்த்தாள் பதில் இல்லை. இது புதுத்தலையிடியாகப்போக தகப்பனிடம் போய் விசயத்தை சொன்னாள். போய் பார்த்து வருவதாக கூறிவிட்டு சங்கரலிங்கத்தார் மோட்டார் சைக்கிளுடன் வெளிக்கி;ட்டார்.
சாமம் தாண்டியிருந்தது. இருவரும் வரவில்லை. வித்தியாவும் தாயும் வாசல் படலைக்கும் வீட்டு வாசலுக்கும் இடையில் மாறி மாறி நடந்தவண்ணமிருந்தனர். இருவரையும் காணவில்லை. வேறு யாரிடமும் போய் சொல்லவும் பயமாக இருந்தது.
அதிகாலை நான்கு மணி.
உரும்பிராயிலிருந்து மருதனார்மடம் சந்தி நோக்கி வந்து கொண்டிருக்கும்போது தெற்குப்புறமாக காணப்படும் தோட்டக்காணியின் உட்புறமாக உள்ள பாழடைந்த வீடொன்றின் பின்புறமாக நரேனின் கைகள் அவிழ்க்கப்பட்டு கண்களை சுற்றிக்கட்டியிருந்த துணியும் அவிழ்த்துவிடப்பட்டது. வாயில் அரைவாசி திணிக்கப்பட்டிருந்த அவனது சேர்ட்டை வெளியே உருவியெடுத்தவனை கூர்ந்து பார்ப்பதற்கு சாதுவாக கண்ணை திறக்க முயன்றபோது கடைசி அடியொன்று முகத்தை பொத்தி இடியென்று விழுந்தது. மூன்று மணிநேரமாக விழுந்த அடியிலேயே அது ஒன்றுதான் லேசாக இருந்தது. இரத்தம் வடிந்து உறைந்த தாடை நிலத்தில் தொட மீண்டும் விழுந்தான். பிறகு கொஞ்ச நேரத்துக்கு சுற்று முற்றும் எந்த சத்தமும் கேட்கவில்லை. எல்லாமும் ஓய்ந்தது போல கிடந்தது. எழுந்திருக்க முடியவில்லை. வலியை பொறுத்துக்கொண்டு வலக்கையை ஊன்றி உடம்பை தூக்கவேண்டியிருந்தது. மொத்த ஊரும் கூடியிருந்த குதறியயெடுத்தது போல அனுபவித்து முடித்த மூன்று மணி மரணத்தை தந்த எவனும் தன் முன்னால் தற்போது இல்லாததை பெரும் ஏமாற்றமாக அவன் நினைக்கவில்லை. அடித்தவன் யாரென்று துப்பறிவதற்கு உடலில் மட்டுமல்ல மூளையிலும் பலம் இல்லை. உடல் முழுவதும் பிரவாகித்து ஓடிக்கொண்டிருந்த வலியொன்றுதான் இது கனவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தது. நிச்சயமாக உடம்பில் பல உள் காயங்கள் இருப்பதையும் பல இடங்களில் முறிவு ஏற்பட்டிருப்பதையும் ‘குத்துமதிப்பாக’ உணர்ந்தான்;. ஆனால், ஆள்கூறு விவரங்களை அறிவதற்கு குறிப்பிட்ட இடங்களை தொட்டுக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு கைகள் முடமாகிக்கிடந்தன. அப்படியே நித்திரையாகிப்போனான்.
சாதுவாக விடியத்தொடங்கியிருந்தது தெரிந்தது. பறவைகளின் சத்தமும் கூட்டமாக கேட்க ஆரம்பித்திருந்தன.
அந்த நேரம் பார்த்து பாழடைந்த வீட்டிற்கு பின்னால் காணப்பட்ட அடர்ந்த பற்றையின் வழியாக வாயை கொப்புளித்து துப்பிக்கொண்டு நடந்து வரும் உருவம் ஒன்று மங்கலாக தெரிந்து எழுந்தான். கண்கள் களைத்துப்போயிருந்ததால் எதையும் ஒரே தடவையில் உணர்ந்துகொள்ளக்கூடிய நிலையில் உடம்பிருக்கவில்லை.
அருகே வந்தவனுக்கு நிச்சயம் இருபத்தைந்து வயதுக்கு மேல் மதிக்க முடியாது. குறொக்ககொடைல் ரீசேர்ட். இரவு நடந்த கலவரத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதைப்போன்ற மலர்ச்சியான முகம். வாரியிழுந்த தலைமுடியில் லைட்டாக எண்ணை.
“அண்ணை வெளிக்கிடுங்கோ. இஞ்சநேக்க கொண்டுவந்து இரவில இப்படி ஆக்களை அடிக்கிறதே இவங்களுக்கு வேலையா போச்சு. எந்த இடமண்ணை நீங்கள்”
இதற்கு முன்னர் குறைந்தது பத்து பதினைந்து பேரையாவது இந்தக்கோலத்தில் பார்த்திருப்பான் போல. மிகச்சாதாரணமாக பேசினான்.
பதில் எதுவும் சொல்வதற்கு நரேனுக்கு நாக்கிலும் பலம் இருக்கவில்லை. உடைந்த ஒருபக்க முரசிலும்; வெடித்த சொண்டிலுமிருந்து இரத்தம் கசிந்து எச்சிலுடன் சேர்ந்து ஒருவித உவர்ப்பாக இருந்தது.
கசங்கிக் கிடந்த சேர்ட்டை உதறிப்போட்டுவிட்டு அங்கு கிடந்த தண்ணிப்போத்தல் ஒன்றிலிருந்த தண்ணியால் அடித்து முகத்தை கழுவிட்டான் அந்த மர்ம ஆசாமி. அருவி பாய்ந்தது போல கிடந்தது. பின்னர், கைத்தாங்கலாக தூக்கிச்சென்று பெருவீதிக்கு அருகாக வந்த ஓட்டோ ஒன்றை மறித்து அதில் ஏற்றிவிட்டான். முதல்நாள் இரவு தன்னை துவைத்தெடுத்த குறூப்பின் அம்புலன்ஸ் பிரிவுதான் இதுவாக இருக்குமோ என்று நரேனுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம். அதேவேளை, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்க்கும்வரைக்கும், திரும்பவும் வேறெங்காவது கொண்டுபோய் வைத்து அடிக்கப்போறாங்களோ என்ற பயமும் கூடவே வந்துபோனது. ஆனால், அவையெல்லாவற்றையும் கடந்தவனாக ஆஸ்பத்திரி போய் சேர்ந்தான்.
வலி கொஞ்சம் கொஞ்சமாக ஏறி இறங்கியது. ஆஸ்பத்திரியில் கட்டுப்போடும்போது குழறிய சத்தங்களின் இடைவெளியில்தான் –
யார் என்னை இழுத்துக்கொண்டுபோய் அடித்தார்கள், எதற்கு அடித்தார்கள் என்ற கேள்விகள் எல்லாம் நினைவில் வந்து வந்து போனது. மோட்டார் சைக்கிளை நிறுத்திய மாத்திரத்திலேயே ஒரு கூட்டம் தன்னை தரதரவென்று ஆட்டோவில் ஏற்றியது ஞாபகம் வந்தது. கண்களை கட்டியதும் ஆட்டோவுக்குள்ளேயே வாயில் துணியை அடைந்துவிட்டு அடிக்கும்போது ஒருத்தன் “டம்ளர் வாங்கினால் கரண்டி பிறீ எண்டு நினைச்சியோடா” என்று கேட்டு மூக்கிலேயே குத்தியது சாதுவாக விளங்க தொடங்கியது.
இப்போது நரேனுக்கு எல்லாமே தெளிவாக விளங்கிவிட்டது.
மேலும் எந்த சிக்கலிலும் மாட்டுப்படாமல் தப்புவதென்றால் உடனடியாக ஆஸ்திரேலியா சென்றுவிடுவதுதான் ஒரே வழியென்று முடிவெடுத்தான். எல்லாவற்றுக்கும் முதற்காரணம் வித்தியாதான் என்று உடம்பின் ஒவ்வொரு வலியும் விண் விண்ணென்று ரிங்டோன் அடித்துக்கொண்டிருந்தது. எல்லா வழத்தாலும் பிடிபட்டாச்சு. இந்த சீத்துவத்தில இனியும் நல்லவனுக்கு நடிச்சு நாற இயலாது. பேசாமல் இழுத்து போர்த்துக்கொண்டு ஊர் போய் சேரும் வழியை பார்க்கவேண்டும் என்று யோசித்தான்.
அதற்கு ஒரே ஒரு வழதிதான் உள்ளது. அது என்ன என்று கேட்டால் அதுவும் வித்தியாதான். ரிட்டேர்ன் டிக்கெட் பிரகாரம் இன்னமும் இரண்டு வாரத்துக்கு பிறகுதான் போவதாக இருந்தது. ஆனால், எப்படியாவது அதற்கு முன்னரே புறப்பட்டுவிடவேண்டும் என்று முடிவெடுத்தான்.
மாமன் சங்கரலிங்கத்தாரின் முகம்தான் அடிக்கடி முன்னால் வந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தது. தனக்கு ஏற்பட்ட சம்பவத்துக்கு யார் யார் காரணம், என்னவெல்லாம் திட்டம் போட்டிருந்தார்கள் என்று கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான் அதற்கு ஏற்ப அடுத்த கட்ட நடிப்பை அரங்கேற்றலாம் என்றாகவிட்டபோதும் இப்போதைக்கு வித்தியாவுக்கு போன் பண்ணி ஊரைவிட்டு தப்புவதற்கு வழி பார்க்கவேண்டும் என்று அவசரப்பட்டான்.
அப்போதுதான் மோட்டார் சைக்கிள் ஞாபகம் வந்தது. போய் துலையட்டும். இப்ப அதுவா முக்கியம்.
ஆஸ்பத்திரிக்கு முன்னாலிருந்து கடைப்பக்கமாக போய் ஓஸி சிகரெட் ஒன்றை வாங்கி பத்திக்கொண்டு வித்தியாவுக்கு போன் பண்ணினான். நேற்றிரவு குடிபோதையில் ஒரு கைகலப்பாகி ஆஸ்பத்திரிவரை போகவேண்டியதாகிப்போய்விட்டது என்று சிம்பிளாக ஒரு பொய்யை சீரியஸாக சொன்னான். வித்தியாவுக்கு அவன் பொய் சொல்லுவதொன்றும் புதிதல்லவே.
ஆஸ்பத்திரி, கைகலப்பு என்று நரேனின் வார்த்தைகளை கேட்டவுடனேயே வித்தியாவுக்கு மீதி அனைத்தும் விளங்கிவிட்டது. முதல்நாள் இரவு தன்னுடைய போனிலிருந்து அழைத்தபோது நரேன் எடுக்கவில்லை என்றவுடன் தகப்பனின் போனிலிருந்து நரேனின் நம்பருக்கு அழைக்க எடுத்தபோது சங்கரலிங்கத்தாரின் கடைசி நான்கு அழைப்பும் “ஆவா குறூப் கண்ணன்” – என்றிருந்தபோதே அவளுக்கு பொறி தட்டியது. இப்போது நரேன் வரிசைப்படுத்தும் அனைத்து பொய்களுக்கு சமாந்தரமாகவும் நடந்த உண்மை எதுவாக இருக்கும் என்று கணக்குப்போட்டு பார்த்தாள். மொத்ததில் ஊரைவிட்டு கிளம்புவதுதான் இப்போதைக்கு எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்ற முடிவுடன் நரேனை அவனது நண்பர் வீட்டிலேயே நிற்குமாறும் தான் பிளைட் டிக்கெட் விசயத்தை முடித்துவிட்டு அழைப்பதாகவும் கூறினாள்.
மகளுக்கு எப்போது போன் வரும் என்று எதிர்பார்த்திருந்தவர் போல, வித்தியா பேசி முடித்த உடனேயே “என்ன பிள்ளை” – என்றார் சங்கரலிங்கத்தார். தகப்பனின் முகத்தை பார்த்து அவளால் இதற்கு பிறகும் தொடர்ந்தும் பொய்களை வரிசையாக சொல்லிக்கொண்டிருக்க முடியவில்லை.
“போன பிரண்ட்ஸ் வீட்டில ஏதோ பிரச்சினையாம் அப்பா. அடிபிடியாம். பிரச்சினை பண்ணினவங்கள் அடிக்கிறதுக்கு சுத்திக்கொண்டு திரியிறாங்களாம். வேறொரு இடத்திலிருந்துதான் கோல் பண்ணினவர். நாங்கள் உடன கொழும்புக்கு வெளிக்கிடுறம்” – என்று சொல்லிக்கொண்டு அறைக்குள் போனாள்.
“நீ தனிய போறது பிரச்சினையில்லையே அம்மா. அப்பா வரவோ”
“இல்லையப்பா, நான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளுறன்”
அந்த கடைசி கேள்வியிலும் பதிலிலும் பல அர்த்தங்கள் தெறித்து விழுந்தன.
அவற்றை ஆளுக்காள் தெரியாமல் தகப்பனும் மகளும் பொறுக்கிக்கொண்டார்கள்.
ஒரேஇரவில் கொழும்புக்கு பயணம் ஏறிய வித்தியாவும் நரேனும் கொழும்பு வந்தவுடனேயே டிக்கெட்டை மாற்றிக்கொண்டு அவசர அவசரமாக ஆஸ்திரேலியா கிளம்பினர். கட்டுநாயக்காவுக்கு வரும் வரைக்கும்; சங்கரலிங்கத்தாரின் போன் கோல்கள் பல தடவைகள் வித்தியாவுக்கு வந்து போய்க்கொண்டிருந்தன. ஆனால், நரேன் பேசுவதை தவிர்த்துக்கொண்டு வந்தான்.
கடைசியாக விமானம் ஏறும்போது கட்டாயம் கதைக்கவேணும் என்று வித்தியாவிடம் சொன்னதால் நரேனிடம் தொடர்பில் வந்த சங்கரலிங்கம் முற்றிலும் மாறுபட்ட ஒரு குரலில் மிகப்பணிவாக “தம்பி, இஞ்ச இருக்கிறவங்கள் இப்படித்தான். தெரியாதே இப்ப எல்லாத்துக்கும் வெட்டு – குத்து சண்டை எண்டு தொடங்கீட்டாங்கள். நீங்கள் அங்க இருந்து யோசிக்கிறது மாதிரி இஞ்ச இருக்க ஏலாது. பாத்தனீங்கள்தானே. அங்க போய் திரும்பவும் இதே பிரச்சினையளில தலையை குடுக்காதேங்கோ” – என்று தெரிந்து எடுத்த வசனங்களை எழுதிவைத்து பேசுவதுபோல கதைத்தார்.
காயங்கள் எல்லாவற்றிலும் கீறி விளையாடுவதுபோல கிடந்தது நரேனுக்கு. வித்தியாவிடம் போனை கொடுத்துவிட்டான்.
மெல்பேர்ன் வந்து சேர்ந்து மூன்று மாதங்களாக வேலைக்கு போகவில்லை. “கல்யாணம் முதல் காதல் வரை” “வாணி ராணி” “பிக் போஸ்” என்று ஒரு தொகை வகையறாக்கள் நரேனை வீட்டுக்குள்ளேயே பிஸியாக வைத்திருந்தன. ஒருவருக்கும் கோல்கூட எடுத்து பேசவில்லை. வேலைக்கு மாத்திரம் அறிவித்திருந்தான்.
வித்தியா தான் வழமையாக பணிபுரியும் சீஸ் பக்ட்ரி வேலைக்கு போய்வந்தாள். வீட்டுக்குள் பேச்சுக்கள் எல்லாம் ஒரு சிறைச்சாலையில் கைதிக்கும் மனச்சாட்சிக்கும் இடையிலான சம்பாசணைகள் போல் குறுகிப்போயிருந்தன. ஒற்றை வார்த்தைகள்தான். சிலவேளைகளில் அதுவும் இல்லை. வித்தியா பழசை எல்லாம் மறந்து முழு குடும்ப பொறுப்புக்களையும் இழுத்துப்போட்டு செய்வதில் ஒரு சுதந்திரப்பறவையாக பறந்து திரிவதாக தெரிந்தாள். அவளது எல்லா நடவடிக்கைகளிலும் ஒரு மலர்ச்சி தெரிந்தது.
காயமும் காலமும் ஆறிப்போன ஒரு நாள் நரேன் தனது வேலை நண்பனும் ஆஸ்திரேலியாவுக்கு வந்த நாள் முதல் தெரிந்தவனுமாகிய ஜீவனுக்கு கோல் பண்ணினான்.
அவனை வித்தியாவுக்கு கண்ணில் காட்டக்கூடாது. நரேனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு வருகின்றபோதெல்லாம் தன் மீது மேயும் அவன் கண்களை அப்படியே பிதுக்கி எடுத்து வெளியில் எடுத்துப்போடலாமா என்பதுபோல இருக்கும் வித்தியாவுக்கு. ஆனால், இவள்தான் அவித்தெடுத்த அபலையாச்சே. ஜீவனைப்பற்றி தனது புருசனிடம்கூட இவ்வளவுகாலமும் தப்பாக பேசியது கிடையாது. எல்லாவற்றையும்போல இதையும் மனதுக்குள் போட்டு அமுக்கிக்கொண்டாள்.
நரேனின் கோல் வருவதை எடுத்துப்பார்த்த ஜீவன் –
“பொறு யாரோ கோல் பண்ணுறாங்கள். வெய்ட் பண்ணு. ம்… உன்ர ஆள்தான் அடிக்கிறார். இண்டைக்குத்தான் நம்பர் கண்டுபிடிச்சவரோ”
“அவனை விடு. இப்ப நீ உடன வாறியா. வேலை முடிஞ்சுது. காலம்பிற ட்ரொப் பண்ணிட்டு போன இடத்திலதான் நிக்கிறன். உன்னட்ட வந்து இனி வீட்டை போறதுக்கு இடையில நேரம் போகப்போகுது”
காரை எடுத்துக்கொண்டு வித்தியாவின் வேலைத்தளத்துக்கு விரைந்தான் ஜீவன்.
“Naren Missed call” – என்று அவனது போன் திரையில் கிடந்தது.
அதிரடியான திருப்புமுனை. அதே சமயத்தில் வித்தியாவின் தந்தை சாதுர்யமாக தனது மருமகனுக்கு பாடம் புகட்டியது ரசிக்க வைத்தது.எல்லா தந்தையை போல இவர் கிடையாது என்று நிரூபித்து விட்டார். அப்பாவி அபலை என்று மனதில் ஓடிக் கொண்டிருந்த வித்தியா கதாபாத்திரம் ஒரு பெண் நினைத்தால் எதற்கும் துணிந்து விடுவாள் என்பதை ஆண்களுக்கு எச்சரிக்கை தருகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை கதையில் எதிர்ப்பார்ப்புகளுடன் நம்மை நகர்த்தி சென்றது சிறப்பு. வாழ்த்துகள் தெய்வீகன்.