திறவுகோல் 9: வைகறைப் பூக்கள்

M.Balakrishnan

மா.இளங்கண்ணன்

சிங்கை எழுத்தாளர் மா.இளங்கண்ணன் அவர்களால் எழுதப்பட்டு, தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவில் பதிக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள இந்த வரலாற்றுப் புனைவு நாவல் 1941ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரையிலான சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் என்ற தன் இயற்பெயரை இளங்கண்ணன் என்று மாற்றிக் கொண்ட நூலாசிரியரின் தனித்தமிழ்ப் பற்று நாவலின் மொழியிலும் கண்கூடாகத் தெரிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் பாரதியின் விடுதலை உணர்வுப் பாடல்களை மேற்கோள் காட்டியிருப்பதன் மூலம் ஆசிரியர் தன் பாரதி வாசிப்பையும் பற்றையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி சிங்கப்பூரிலுள்ள தனது தாய்மாமன் வீட்டிற்கு வந்து சேர்கிறான் கதாநாயகன் அன்பரசன். சிங்கையில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தையும் அடக்குமுறையையும் காணும் அன்பரசனுக்கு சென்னையில் இருந்த போது செவி மடுத்திருந்த தேசத் தொண்டர்களின் உரைகள் மீண்டும்,மீண்டும் காதுகளில் எதிரொலிக்கின்றன. தாய்நாட்டிற்கான விடுதலை வேட்கை ஒரு புறம் இருந்தாலும் வயிற்றுப்பாட்டுக்காக அதே பிரிட்டிஷாரிடம் வேலைக்குச் சேரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பிரிட்டிஷ் காலாட்படை பயிற்சி நடைபெறும் ‘நீ சூன்’ படைப்பயிற்சித் தளத்தில் உள்ள ஸ்டோரில் அன்பரசனுக்கு வேலை கிடைக்கிறது. தன்னுடன் பணிபுரியும் நண்பனிடமிருந்து வாங்கி தவறாமல் அவன் வாசிக்கும் ‘நவசக்தி’ இதழ் வீடு, வாசல், குடும்ப நலம் என்றிருந்த அவனது குறுகிய பார்வையை நாடு, விடுதலை, மக்கள் என விசாலமாக்குகிறது.

அன்பரசனுக்குத் தன் மாமன் மகள் மணிமேகலையுடன் காதல், அந்த காதலுக்கு வில்லனாக அவள் மீது ஒருதலைக் காதல் கொண்ட அண்டைவீட்டுக்காரன் நல்லையா, நல்லையாவின் மோசமான செயல்பாடுகள் என்று இன்னொரு கதை நாவலில் நகர்ந்தாலும் அது மனதில் ஒட்ட மறுத்து செயற்கைப் புனைவாகவே நின்றுவிடுகிறது.பத்தாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‘ஜப்பான் சிங்கையில் குண்டு போடும் நிகழ்வு’ (1941 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் மார்க்கெட் தெருவில்)ஒன்பதாம் அத்தியாயம் வரை சாதாரண காதல் கதையைப் படித்த சலிப்பைப் போக்கி வாசிப்பை விறுவிறுப்பாக்குகிறது.

பிரிட்டிஷூக்கும் ஜப்பானுக்கும் இடையே நடந்த போர் சிங்கப்பூரில் சாமான்ய மக்களின் வாழ்வைப் பாதித்த சித்திரங்கள் இந்த புதினத்தில் பதிவாகி உள்ளன. பாதுகாப்புகருதி மாலை ஆறு மணிக்கு மேல் வீடுகளில்விளக்கேற்றாமல்,தீமூட்டாமலிருக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அபாயச் சங்கு ஒலித்ததும் வீட்டிற்கு அருகில் அமைக்கப்பட்ட சுரங்கத்திலோ பதுங்குக்குழியிலோ ஒளிந்து கொள்ள வேண்டுமாம். குண்டால் காயம் அடைந்தவர்களின், இறந்தவர்களின் உடமைகளைத் திருடுதல், உணவுப்பொருட்களைத் திருடுதல் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

அரிசி கிடைக்காமல் மக்கள் மரவள்ளிக்கிழங்கை உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஜப்பானியர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டையும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தையும் வாசித்தபோது சமீபத்தில் ‘Former Ford Factory’கண்காட்சியில் படித்த முட்டையைப் பற்றிய செய்தி நினைவுக்கு வந்தது. 1942ல் வெறும் ஐம்பது காசுகளாக இருந்த ஒரு டஜன் முட்டையின் விலை 1945ஆம் ஆண்டின் இறுதியில் 432 டாலராக உயர்ந்துள்ளது.

சோணந்த் என்ற ஜப்பானிய வீரர் இடுப்பில் குண்டுகளைக் கட்டிக்கொண்டு விமானத்திலிருந்து குதித்து பிரிட்டிஷாரின் ‘குயின் மேரி’ என்ற போர்க்கப்பலை அழித்த காரணத்தால் ஜப்பானியர்சிங்கைக்கு ‘சோணந்த்’(Shonanto) என்று பெயர் சூட்டியதாக நாவலாசிரியர் குறிப்பிடுகிறார்.‘Shonanto’ என்பதைத்தான் ஆங்கிலத்தில் ‘Syonan-to’அல்லது‘Syonan’ என்று அழைக்கிறார்கள். இதன் பொருள் ‘தெற்கின் ஒளி’ என்பதாகும்.

சிங்கையின் இந்தப் பெயர் மாற்றம் வரலாற்றிலிருந்து நீக்க முடியாததாக நிலைத்துவிட்டாலும் மக்கள் அந்தப் பெயரை மறக்கவும் அழிக்கவுமேவிரும்புகிறார்கள் என்பதைச் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்று சுட்டுகிறது.அப்பர் புக்கிட் தீமா சாலையில் அமைந்துள்ள ‘Former Ford Factory’ல்(பிரிட்டிஷ் ஜப்பானிடம் பிப்ரவரி 15, 1942ல் சரணடைந்த இடம்) இடம்பெற்றுள்ள கண்காட்சிக்கு முதலில் அரசாங்கம் சூட்டிய பெயர் ‘Syonan Gallery: War and its Legacies’ என்பதாகும். ஜப்பானியரின் வெற்றியைக் குறிக்கும் வகையிலும் போரில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு மனவலியை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள இப்பெயரை மாற்றவேண்டும் என்று பொதுமக்களில் பலர் வேண்டுகோள் விடுக்க அதை ஏற்றுக்கொண்ட அரசு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ‘Surviving the Japanese Occupation: War and its Legacies’ என்று பெயரை மாற்றி உள்ளது.

வெள்ளைக்கார துரைகள் முன்பு கேள்விக்குறி போல் வளைந்து சலாம் போட்டவர்கள் பின்பு இடுப்பை வளைத்துத் தலையைத் தாழ்த்தி ஜப்பானிய முறைப்படி வணக்கம் தெரிவிக்க ஆரம்பித்தார்கள் என்று நூலாசிரியர் கூறுவதன் வழியாக சிங்கையின் ஆட்சி மாற்றம் சாமான்ய மக்களின் வாழ்வில் பெரிதாக எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை என்பதை அறிய முடிகிறது.

மலாயாவில் எழுதப்பட்ட பெரும்பாலான தமிழ் புதினங்களில் ஜப்பானின் ஆட்சிக்கு கீழிருந்த மலாயா அதிக அளவில் பேசப்பட்டுள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக நடந்தேறிய  இந்திய தேசிய இராணுவத்தின் உருவாக்கத்தையும் பதிவு செய்ததன் மூலம் இந்நூல் மலாயா தமிழ் இலக்கியத்தில் தனக்கான முக்கியத்துவத்தைபெற்றுவிடுகிறது. வங்கச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிங்கப்பூர் வருகையும் உணர்ச்சி பொங்க அவர் ஆற்றிய உரையும் புலம் பெயர்ந்த இந்தியர்களிடம் குறிப்பாக தமிழர்களிடம்  ஏற்படுத்திய தாக்கத்தை இந்நூலின் வழியாக தெரிந்துகொள்ள முடிகிறது.

பெண்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை இந்திய தேசியப் படை நிதிக்கு கழற்றி கொடுக்கும் காட்சி, இந்திய தேசியப் படையில் சேர மக்கள் முன்வரும் காட்சி, இந்தியா விடுதலை பெற்றதும் தனது திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கதாநாயகன் கூறும் காட்சி, ஜான்சி ராணி படைப்பிரிவில் கதாநாயகி சேரத்துடிக்கும் காட்சி, போருக்கு அணி வகுத்துச் செல்லும் ஆண்களையும் பெண்களையும் ‘ஜெய் ஹிந்து’ என்ற முழக்கத்தோடு கூட்டம் வழியனுப்பும் காட்சி என ஒவ்வொன்றும் பிழைப்புத் தேடி மற்றொரு நாட்டிற்கு வந்து வாழ நேரிட்டாலும் மக்களின் மனதில் இந்திய விடுதலை உணர்வும் தேசப்பற்றும் ஓங்கி இருந்தன என்பதற்கு சாட்சியாகத் திகழ்கின்றன.

இந்திய தேசிய இராணுவத்தின் ஆண்கள் அணி அஸ்ஸாமை நோக்கி முன்னேறும் அதே வேளையில் பெண்கள் அணி பர்மாவை நோக்கி முன்னேறுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு அணிகளும் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு கைதிகளாக பிடிக்கப்படுகின்றனர். சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு ஏற்பட்ட பின்னடைவும் சுபாஷ் சந்திர போஸின் மரணமும் இந்திய தேசிய இராணுவத்தின் வீழ்ச்சிக்கு வித்திடுகிறது. இந்திய தேசிய இராணுவப்படையில் இடம் பெற்று போருக்குச் சென்று உயிரோடு திரும்பும் கதாநாயகனும் கதாநாயகியும் தமிழ் திரைப்படத்தில் வருவது போல திருமண மேடையில் இணைய நாவல் சுபமாக முடிகிறது.

வரலாற்றுத் தகவல்கள் அதிகமாகவும் புனைவின் ஆதிக்கம் குறைவாகவும் உள்ள நாவல்கள், மிகு புனைவால் வரலாற்றை அமுக்கிவிடும் நாவல்கள் போன்றவற்றிற்கு மத்தியில் சரியான விகிதத்தில் புனைவையும் வரலாற்றையும் கலந்து எழுதும் வித்தை சில எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் வசப்படுகிறதோ எனத் தோன்றுகிறது.ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த, வரலாற்றில் ஏற்கனவே எழுதப்பட்ட நிகழ்வுகளை தரவுகளாகக் கொண்டு வேறொரு மொழியில் அதாவது புனைவு மொழியில் எழுதும் முயற்சியில் சில நாவலாசியர்கள் பரிதாபகரமாக தோற்றுப்போகிறார்கள்.

தட்டையான கதாபாத்திரங்கள், நாடகத்தனமான காட்சிகள், சில இடங்களில் ஓங்கி ஒலிக்கும் எழுத்தாளரின் லட்சிய நோக்குகள் போன்றவற்றால் வைகறைப் பூக்களாக சிதறிக் கிடக்கும் வரலாற்றுத் தகவல்களை புனைவென்னும் நார் கொண்டு அழகான மாலையாகத் தொடுப்பதில் நூலாசிரியர் வெற்றி பெறவில்லை என்றாலும் மலேசிய, சிங்கை இலக்கியச் சூழலில் யாரும் சொல்லாத ஒரு வரலாற்று நிகழ்வைப் பேசு பொருளாக கொண்டதன் மூலம் ‘வைகறைப்பூக்கள்’ நாவல் சிங்கை இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடத்தை அடைந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...