நல்ல புழுதியும் நலம்கெட்ட வீணைகளும்

தயாஜி 04மலேசிய முகநூலர்கள் மத்தியில் அதிகமாக ஒரு காணொளி பகிரப்பட்டது. காரில் இருந்து அக்காணொளியை ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். தெருவில் நைந்து, கிழிந்து, அழுக்குப் படிந்த ஆடையுடன் மெலிந்த, நீண்ட செம்பட்டை முடியுடன் தளர்ந்திருக்கும் வயோதிகரிடம் காரில் இருந்தபடியே இளைஞர் ஒருவர் ஏதோ விசாரிக்கிறார்.

“இன்னும் பாட்டுப் பாடறீங்களா ?”

“ஆமா பாடிகிட்டுதான் இருக்கேன்…”

“ஓ… எங்க பாடறீங்க?”

“தாய்லாந்துல ஒரு நிகழ்ச்சி இருக்கு அதுக்கு ரெடியாகிறோம். கூட்டாளி ஸ்பான்சர் பண்றாங்க. அடுத்து அங்கதான் கலை நிகழ்ச்சி வச்சிருக்கோம்… போய்டுவோம்..”

காரில் இருந்து சிவப்பு வண்ண உறை வெளியில் வருகிறது. பெருநாள் காலங்களில் பணம் வைத்து கொடுக்கப் பயன்படும் சீனர்களின் ‘அங் பாவ்’ உறை அது. வயோதிகர் நன்றி சொல்லியவாரே அதனை வாங்கிக்கொள்கிறார்.

உண்மையில் அக்காணொளி பலரைபோல என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 80களில் புகழ் பெற்ற மலேசிய மலாய்ப் பாடகரான அவரை இப்படிப் பரதேசி கோலத்தில் பார்க்கையில் யார் மனம்தான் கலங்காது.

ஆறு ஆண்டுகளுக்கு முன் மின்னல் பண்பலையில் அறிப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்காசாபுரியில் இருக்கும் உணவகங்களில் பலதரப்பட்ட உணவுகள் இருக்கும். ஒருமுறை, எங்களுக்கு முன்பே பெருத்த பூனையொன்று சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அண்டாவில் இருந்த கோழிக் குழம்பை நக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்ததில் இருந்து வெளியில் சென்று சாப்பிடுவது எங்களுக்குப் பழக்கமானது. பின்னர் அங்கு வளர்ந்த எலிகள், பூனைகளை ஓட ஓட விரட்டியதால் பூனைகளின் தொல்லை இல்லை என்று பெருமைபட்டுக் கொண்டார்கள்.

அப்படி வெளியில் சாப்பிடச் செல்லும் பல சமயங்களில் அந்த முதியவரைப் பார்த்துள்ளேன். தீவிர சிந்தனையைக் காட்டும் முகம்.  வாட்டசாட்டமான தேகம். கறுத்து தோள்பட்டையில் விழுந்திருக்கும்  கேசம்; கறுப்புக் கண்ணாடி; நெகிழியில் தேநீர்; வேகமான நடை என இருப்பார்.

ஒருமுறைகூடத் தளர்ந்த நடையையோ சோர்ந்துவிட்ட முகத்தையோ கண்டதில்லை. சில சமயம் வாகன நெரிசலில் சிக்கி அங்காசாபுரியில் இருந்து பிரிக்பீல்ஸை அடைவதற்கு முன்பாக அவர் நடந்தே சென்று சேர்ந்திருப்பார். ‘யாரோ ஒரு ஆள்’ என்றுதான் முதலில் அவரைக் கடந்து சென்றிருந்தேன். பின்னர் ஒரு சமயம் நண்பர் கூறியபோதுதான் தெரிந்தது, அவர் Ben Nathan என்று. 80களில் மலாய் பாடல் ஆல்பம் செய்து புகழ் பெற்றவர். அப்போது புகழின் உச்சத்தில் இருந்த ‘எலிகேட்ஸ்’ குழுவுக்குப் போட்டியாக வருவார் என பலராலும் கணிக்கப்பட்டவர்.

மலேசியத் தமிழ் இசை துறையில் இப்போது கிடைக்கபெறும் புகழும் ஓரளவு பணப் புழக்கமும் அன்றைய காலங்களில் இல்லை. ஆனால் இதற்கு எதிர்விசையில் இயங்கிக்கொண்டிருந்தது மலாய் இசை உலகம். அங்கு கலைஞர்களுக்குப் புகழும் பணமும் எப்போதும் ஏராளம்தான்.

அன்று அப்படிப்பட்ட சூழலில் ஓர் இளைஞர் ஒரே ஆல்பத்தில் மலேசியாவின் மலாய் இசை துறையில் புயல் போல தோன்றியுள்ளார் என்றால் அவர் புகழும் சம்பாத்தியமும் எப்படியானதாக இருந்திருக்கும் எனக் கற்பனை செய்யமுடிகிறது. ஆடம்பரமான வீடு, வாகனம் என வாழ்க்கை உற்சாகமாகவே நகர்ந்திருக்கும். ஆனால் அது எதுவும் அவர் வாழ்வில் நடந்திருக்கவில்லை அல்லது நிலைக்கவில்லை என்பதுதான் துயரம். புயல்போல நுழைந்தவர் அதைவிட வேகமாகக் காணாமல் போனார்.

அந்த இசைக் கலைஞன், அந்தப் பாடகன், யாரும் தன்னை அறியமுடியாத அரிதாரமொன்றை அணிந்துகொண்டான்.

அந்தக் காணொளியின் அதிகப்படியான முகநூல் பகிர்வு, அவரது  ரசிகர்களை மீண்டும் அவர் பக்கம்  திரும்ப வைத்தது. விளைவாக, அவருடன் மேடையில் ஒன்றாகப் பாடிய நாட்டின் புகழ்பெற்ற பாடகரான Datuk DJ Dev இவரைத் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. Ben Nathan-னிடம் எஞ்சியிருக்கும் நினைவுகளை அவர் வாயிலேயே சொல்ல வைத்தார். அவரது உறவினர்களின் உதவி மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அதனை முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். Ben Nathan பேசும் ஆங்கிலமும் அவர் கொண்டிருக்கும் தோரணையும் என்னைப் பிரமிக்க வைத்ததுபோலவே காவல் துறையினர் அவரை அழைத்துச்செல்ல முயலும்போது அவர் அடைந்த பதற்றமும் கலவரமும் கலங்கடித்தது. முழுமையாக அதனை பார்க்க முடியாதபடி வேதனைக்குள்ளானேன்.

யோசிக்கையில் தொலைத்தபின் தேடுவது ஒரு பக்கம். பக்கத்தில் இருப்பதை தெரிந்தே தொலைப்பது மறுபக்கம் என வாழ்க்கை நம்முடன் விளையாடிக்கொண்டிருப்பதாகவே எண்ண வைக்கிறது.

மனப்பிறழ்விலும் அடிக்கடி தனது வெளிநாட்டு கலை நிகழ்ச்சி குறித்து அவர் பேசிக்கொண்டிருந்ததால், யாரோ வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி செய்வதாகச் சொல்லி ஏமாற்றி அவரை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலர் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்.

***

இயல்பாகவே மலேசியக் கலைஞர்களுக்கு மட்டுமின்றி, கலைத்துறையில் இருப்பவர்களுக்கே வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் இருக்கிறது. ரசிகர்களைச் சந்திப்பது ஒரு காரணமாக இருந்தாலும் அதன்வழி வரும் வருமானமும் ஒரு காரணம் எனலாம். வெளிநாட்டுக் கலைஞர்களை மலேசியாவிற்கு அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதற்கே தனியாக ஏஜெண்டுகள் இருக்கிறார்கள்.

இங்கு வரும் தமிழகக் கலைஞர்கள் பொதுவாகவே சொல்லும் வார்த்தை ‘பல நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள் மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்’ என்பதுதான். முன்பு அறிஞர் அண்ணா சொல்லி ஏமாற்றியதை இப்போதும் சொல்லி மலேசியத் தமிழர்களை ஒரு கற்பனை உற்சாகத்திற்குள் தள்ளி கைதட்டல் பெற்று, வருவோர் எல்லாம் நன்றாக வாழ்ந்து செல்கிறார்கள். ஆனால் மலேசியத் தமிழ்க் கலைஞர்கள் வாழ்வதற்கான எந்த வாய்ப்பையும் சினிமாவில் ஏற்படுத்தித் தருவதில் மட்டும் அவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது.

மலேசியாவில் இருந்து தமிழ் சினிமாவில் சாதிக்கக் கிளம்பியவர்களின் பட்டியலில் முக்கியமாக இருவரின் பெயர் எப்போதும் இடம்பெறும். ஒருவர் மலேசியா வாசுதேவன் மற்றவர் மலேசியா ரவிச்சந்திரன்.

IMG-20170411-WA0009

மு.பகிருதின்

கறுப்பு வெள்ளைப் படங்கள் வந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் மலேசியக் கலைஞர்கள், தமிழகத்திற்குச் சென்று திரைப்படம் எடுத்தார்கள் என்பது வரலாறு. 1974-75ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் இருந்து ஒரு குழு தமிழகம் சென்றுள்ளது. அங்கு ‘ரத்தப் பேய்’ என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.  மு.பகிருதின் என்பவர் மூபன் புரோடக்‌ஷனில் அப்படத்தைத் தயாரித்திருக்கிறார். சிவாஜி ராஜா நாயகனாக நடிக்க சிங்கையைச் சேர்ந்தவர் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். என்னதான் தமிழகத்தில் சென்று தயாரித்த திரைப்படம் என்றாலும் வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல மலேசியாவில் ராமா பிலிம்ஸ் மூலமாகத் திரையில் காட்டியும் அதேநிலைதான். இப்போது விசாரிக்கையில் அதன் தரம் அவ்வாறு அமைந்ததாகச் சொல்கிறார்கள். அதனால்தானோ என்னவோ அப்படம் குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை.

நான்சொல்ல வந்த விசயம் அதுவல்ல. அத்திரைப்படத்துக்காகஅச்சமயம் தமிழகம் சென்றிருந்த மலேசியா வாசுதேவன் அப்படத்தில் பாடியுள்ளார். அதன்பின் அவருக்கு அங்கொரு கதவு திறந்துள்ளது. சில படங்களில் பாடும் வாய்ப்பைப் பெற்றவர் ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்தில் ‘ஆட்டுகுட்டி முட்டையிட்டு’ என்கிற பாடலைப் பாடி பட்டித்தொட்டியெங்கும் கவனிக்கப்பட்டார். தன் குரல் வளத்தால் குறுகிய காலக்கட்டத்திலேயே பிரபலமானார் வாசுதேவன். ‘முதல் மரியாதை’ திரைப்படம் அவரைப் புகழின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. பாடுவதோடு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார். மலேசியா வாசுதேவன் இசைத்துறையில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும் இறுதிக் காலம் வரை அவருக்குத் தமிழ் சினிமா உலகம் எந்த ஒரு விருதினையும் கொடுக்கவில்லை என்பது ஆச்சரியம்.

இன்னொருவர் மலேசியா ரவிச்சந்திரன். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இயக்குனர் ஸ்ரீதர் மூலம் அறிமுகமானார். ஒல்லியான தேகம். துறுதுறுவென திரையில் தோன்றும் அவரது நடிப்புப் பாணி போன்றவை பலரையும் அவர் பக்கம் ஈர்த்தது. தொடர்ந்து பல படங்கள் அவருக்கு வெற்றியைக் கொடுத்தன. அவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்று வரை பிரபலம். ஆனால் அவரால் தொடர்ந்து நிலைக்க முடியாமல் போனது. எம்.ஜி.ஆர் படங்களுக்கு நிகராக அவர் படங்கள் சில வெற்றி பெற்ற சமயம், அடுத்த எம்.ஜி.ஆர் எனவும் அவர் குறித்து பேசினார்கள். அப்போது ஏதோ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் நடந்து வந்துகொண்டிருந்த சமயம் எல்லோரும் எழுந்து நிற்க, இவர் மட்டும் அமர்ந்திருந்து புகை பிடித்துக்கொண்டிருந்ததாகவும் அதன்பின் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் பின்னர் வாய்ப்புகளே இல்லாமல் போனதாகவும் சொல்லும் செய்தி இன்றளவும் உண்மையா வதந்தியா எனத்தெரியாமல் உலாவிக்கொண்டு இருக்கிறது. அவருக்கும் எந்த ஒரு விருதும் தமிழ்ச் சினிமா மூலமாக கிடைக்கவில்லை. அவரின் மறைவுக்கு முன், மலேசியாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தார்கள்.

பாடலுக்கு ஒருவர் நடிப்புக்கு ஒருவர் என மலேசியாவில் இருந்து போதுமென கொஞ்ச காலம் நினைத்திருந்த தமிழ் சினிமா தற்போது இங்குள்ள இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்புகளை ஓரளவு கொடுத்து வருகிறது. யோகி பி, ‘பொல்லாதவன்’ திரைப்படத்திலும் கவிதை குண்டர் என்ற பெயர் கொண்ட எம்.சி.ஜெஸ் ‘மாசிலாமணி’ திரைப்படத்திலும் டாக்டர் பெர்ன் ‘ஆதவன்’ திரைப்படத்திலும் பாடி கவனம் பெற்றார்கள். தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழகத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளிலும் மேடையில் பாடியுள்ளார்கள். அப்படி பாடும்போது சினிமாவில் அவர்கள் பாடியுள்ள பாடல்களைக் காட்டிலும் அவர்கள் பாடியிருக்கும் மலேசிய தமிழ்ப்பாடல்களுக்குத்தான் கைத்தட்டல்கள் அதிகம் கிடைக்கின்றன.

இங்குள்ள கலைஞர்களில் சிலர் முழுநேரக் கலைஞர்களாகவும் சிலர் பகுதிநேரக் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். மேடையில் நடிப்பவர்கள், வானொலி நாடகங்களுக்குப் பின்னணி பேசுகின்றவர்கள், திரைப்படம் எடுப்பவர்கள், குறும்படங்களில் இயங்குபவர்கள், டெலிமூவி வெளியீடு செய்பவர்கள், இசை ஆல்பம் வெளியீடு செய்பவர்கள், அரசாங்க வானொலி, தொலைக்காட்சியில் இருப்பவர்கள், தனியார் வானொலி, தொலைக்காட்சியில் இருப்பவர்கள் என பல பிரிவினர் உள்ளனர்.

இவர்களில் அரசாங்க வானொலி, தொலைக்காட்சிகளில்பணிபுரிவோருக்கு மாதாந்திர வருவாய் குறைவின்றி வருகிறது. தனியார் வானொலி, தொலைக்காட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளமே பல பெயர்களில் கிடைக்கிறது. ஆனால், மேடை நாடகம் மற்றும் வானொலிகளில் நடிப்பவர்களைத் தவிர இதர கலைஞர்களின் மூல வருமானமே தைப்பூசத்தில்தான். டெலிமூவிகள், இசை ஆல்பங்கள் போன்றவை அதிக அளவு அங்குதான் விற்பனையாகின்றன. இவ்வாறு தைப்பூசத்தை மையப்படுத்தி மலேசிய கலைத்துறைக்கான விற்பனைச் சந்தையை ஏற்படுத்தியதில் முன்னோடியாக தி கீய்ஸ் (The Keys)இசைக்குழுவைச்  சொல்லலாம்.

தயாஜி 031990களில் டார்கியின் தி கீய்ஸ் (The Keys)இசைவட்டு மலேசியத் தமிழர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. அதுவரை தமிழ் சினிமாப் பாடல்களையே கேட்டு அதுவே மலேசியத் தமிழர்களுக்கான இசையென நம்ப வைக்கப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் டார்க்கியின் அடித் தொண்டையில் இருந்து உருவான மலேசியத் தமிழ்ப் பாடல் வரிகளாலும் காதைக் கிழிக்கும் இசையமைப்பாலும் ஈர்க்கப்பட்டனர்.  பல மூத்த இசையமைப்பாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் டார்க்கியின் இசையை இளைஞர்கள் தங்களுக்கான இசையாக உணர ஆரம்பித்தார்கள். மலேசிய மலாய் இசைக் கலைஞர்களின் பாணியிலான இசையை டார்க்கி வழங்கியிருந்தாலும் அவரது பாடல் வரிகள் சாதாரண தோட்டத்து இளைஞன் பேசும் மொழியில் இருந்தது அதற்கான காரணமாக இருக்கலாம். தொடர்ந்து அவரது பல பாடல்கள் இளைஞர்களை முணுமுணுக்க வைத்தன. தைப்பூசத்தில் அதற்கு முன் அதிகம் விற்பனையாகும் தமிழகத் திரையிசைப் பாடல்களைப் பின்னுக்குத் தள்ளி டார்க்கியின் ஆல்பம் விற்பனையில் சாதனை படைத்தது. மலேசியத் தமிழிசைத் துறையில் டார்க்கி பெற்ற இடத்தை வேறு யாரும் இன்னமும் அடையவில்லை எனலாம்.

அவர் பல கலைஞர்களுக்கு முன்னுதாரணம் ஆனார். அவர் வெற்றியில் நம்பிக்கை அடைந்ததயாஜி 02 பல இளைஞர்கள் பாடல் ஆல்பம் வெளியிட ஆரம்பித்தார்கள். ஒவ்வொன்றும் மலேசிய இசையாக மலேசிய பாடல்களாக இளைஞர்களால் கொண்டாடப்பட்டன. முதலில் அப்பாடல்களை ஒலிபரப்ப உள்ளூர் அரசாங்க வானொலி தயக்கம் காட்டியது. அதே காலக்கட்டத்தில் இளம் தலைமுறையால் நடத்தப்பட்ட தனியார் வானொலியின் தோற்றம் புதிய இசைக் கலைஞர்களுக்கு மாற்று ஊடகம் ஆனது. தி.எச்.ஆர் வானொலி இளைஞர்கள் வானொலி ஆனது. வெகு சீக்கிரம் இளைஞர்களின் அமோக ஆதரவை அவ்வானொலி பெறவே, வேறு வழியில்லாமல் இங்குள்ள தொலைக்காட்சி நிலையமும் அரசாங்க வானொலியும் அப்பாடல்களை ஒலிபரப்பத் தொடங்கினார்கள்.

தமிழ்த் திரை இசைப்பாடல்களே மலேசியத் தமிழர்களுக்கான இசையுலக அடையாளம் எனும் நோக்கில்  பல காலமாக மலேசிய டி.எம்.எஸ்கள், மலேசிய எஸ்.பி.பி, மலேசிய ஜானகி, மலேசிய எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோர் மேடைகளிலும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாடி வந்திருந்த சூழலில் டார்க்கியால் உருவான எழுச்சி பல உள்நாட்டு ஆல்பங்களை உருவாக்க வழி அமைத்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இசைக்கலைஞர்கள் தோன்றி ஒரு சில பாடல்களில் பிரபலமானார்கள். தமிழ் சினிமா வாய்ப்புகள் இவர்களைத் தேடி வந்தாலும் இவர்கள் தங்கள் அசல் தன்மையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நிலைத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் தமிழகத் தமிழ்ச் சினிமாவில் முகம் காட்டுவதே இங்குள்ள நடிகர்களுக்கு வாழ்வின் லட்சியமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. பலர் தமிழகத் தமிழ்ச் சினிமாவில் சேர்ந்திருக்கிறார்கள்; முகம் காட்டியிருக்கிறார்கள்; சிலர் நன்றாகவும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகைகள். தமிழக நடிகைகளுக்கே உருப்படியான வரவேற்பு கொடுத்திடாத தமிழகத் தமிழ்ச் சினிமா இவர்களையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திரையிலும்கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதாபத்திரங்களும் கிடைத்ததில்லை.

மலேசியாவில் வானொலி நாடகங்களிலும் பலகுரல் மேடை அறிவிப்புகளிலும் புகழ் பெற்றவர் ப.மகேஸ்வரன். இவரும் தமிழ் சினிமாவில் தலைகாட்டியுள்ளார். தியாகராஜன் இயக்கிய படங்களில் இவரைக் காணலாம். ‘மன்னவா, ஷாக், மம்பட்டியான்’ போன்ற படங்களில் எப்போது வந்தார் எப்போது போனார் என்றே தெரியாத அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் இருக்கும்.

மலேசிய கலைத்துறையில் புகழ் பெற்றவர்களில் ஒருவர் சுகந்தி பெருமாள். அவர் நடித்த நாடகங்களுக்கு தனியே ரசிகர்கள் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் 90களில் மலேசியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட பாடகியாவே அவரைச் சொல்லலாம். அவர் தமது கலைப் பயணம் முத்தாய்ப்பாய் இருக்குமென தமிழகம் சென்றார். சில திரைப்படங்களில் முகம் காட்டினார். ஒரு படத்தில் மசாலா பாடலுக்கும் ஆடினார். பின்னர் குஷ்புவின் குங்குமம் நாடகத் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். தொடரில் ஏனோதானோ என்ற ஒரு கதாபாத்திரம். சமீபத்தில் நாடு திரும்பிய அவர் கலைத்துறையில் இருந்து ஒதுங்கிவிட்டாரென சொல்கிறார்கள்.

மலேசிய நடிகைகளுக்குத் தமிழ்ச் சினிமா கொடுத்திருக்கும் கதாபாத்திரங்களைப் பார்த்தாலே அதில் உள்ள அலட்சியத்தை அவதானிக்க முடியும். ‘நாடோடிகள்’ திரையில் சாந்தினி என்பவர் நடித்தார்.நண்பர்களின் பல தியாகங்களுக்குப் பின் காதலனுடன் ஓடிவிடும் அவர், ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல ஆசை தீர்ந்ததும் தன் வீட்டுக்குச் சென்றுவிடுவார்.

‘நாணயம்’ திரைப்படத்தில் மலேசிய நடிகை ரம்யா நடித்திருப்பார். தொடக்கத்தில் கதாநாயகியாக காட்டப்பட்டு இறுதியில் வில்லியாகக் காட்டுவார்கள். அத்திரைக்கதைப்படி வயதான வங்கி அதிகாரியின் சின்ன வீடாக அவர் வருவார். தன் கணவனுக்காகக் கதாநாயகனைக் காதலிப்பதாக ஏமாற்றுவார். அடுத்து சுந்தர்.சியுடன் ‘சண்டை’ திரைப்படத்திலும் ‘தீ’ திரைப்படத்திலும் நடித்திருப்பார். ‘சண்டை’ திரைப்படம் மாமியார் மருமகனுக்கு நடக்கும் போராட்டத்தை சொல்லுவதாக இருக்கும். அதில் ஊறுகாயாக பயன்படுத்தப்பட்டவர், ‘தீ’ திரைப்படத்தில் கறிவேப்பிள்ளையாக வந்து போவார்.

கறிவேப்பிலைபோல அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மலேசியக் கலைஞர்களைத் தமிழகத் தமிழ் சினிமா பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. அதிலும் மலேசியாவில் படப்பிடிப்பு என்றால் கறிவேப்பிலைகளை அதிகமாக போடுவார்கள்.

தமிழகத் தமிழ்ச் சினிமாவில் அங்கம் வகிப்பதுதான் கலைக்கான தகுதி என நம்பிக்கொண்டிக்கும் மலேசியக் கலைஞர்கள் ஒரு பக்கம் என்றால் தமிழ்ப் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அதேபோன்ற பாணியில் திரைப்படங்களைத் தயாரிக்கும் உள்ளூர் இயக்குனர்கள் மறுபக்கம்.

இங்குள்ள நடிகர்களிடமும் தமிழக நடிகர்களின் சாயலை நாம் காணலாம். தமிழகத்திலாவது ஒரு விஜய்தான். ஆனால் இங்கு பல விஜய்களை காணலாம். இதற்கெல்லாம் முன்னோடியாக சுகன் பஞ்சாட்சரத்தைச் சொல்லலாம். மலேசியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமான ‘நான் ஒரு மலேசியன்’ திரைப்படத்தை இயக்கி நடித்த சுகன் பஞ்சாட்சரத்தின் நடிப்பில் எம்.ஜி.ஆரின் சாயலை அப்பட்டமாகக் காணலாம்.

இதேபாதிப்பு இன்றும் தொடர்கிறது.சமீபத்தில் வெளிவந்த மைந்தன் திரைப்படம் விஜய் படம் போலவே உள்ளது. மலேசியாவிற்கான கதையாக இல்லாமல், தேய்ந்து போன தமிழ் சினிமாவின் மறு உருவாக்கமாகவே இத்திரைப்படம் அமைந்துவிட்டது. அதனால்தானோ என்னவோ தமிழகம் சென்று அங்குள்ள திரையரங்குகளில் படத்தை வெளியிட்டார்கள். ‘புயல் 18’ என்கிற திரைப் படத்தைப் பார்த்தால் மலேசியாவிலும் ‘சிம்பு’ இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இதற்கிடையில் சிறிய மாற்று முயற்சிகளாக விளையாட்டு பசங்க, அப்பளம், வெட்டிப்பசங்க, என் வீட்டுத்தோட்டத்தில் போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.

தமிழகத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்காத கலைஞர்கள் ஒருபக்கம், தமிழத் திரைப்படம் போல படங்களை உருவாக்கும் உள்ளூர் தயாரிப்பாளர்கள் மறுபக்கம் எனும் நிலையில், தமிழ் சினிமாவிற்கு மலேசியாவில் இருந்து தயாரிப்பாளர்கள் செல்வதும், அங்கு இன்னொரு வழமையான தமிழ்த் திரைப்படத்தை இயக்குவது என மூன்றாவது அணி ஒன்றும் கிளம்பியுள்ளது. உதாரணமாக ‘புன்னகைப்பூ’ என்று அழைக்கப்படும் தனியார் வானொலி அறிவிப்பாளர் கீதாவை சொல்லலாம். தொடக்கத்தில் ‘நர்த்தகி’ என்ற திருநங்கை குறித்த திரைப்படத்தைhg தயாரித்தவர். பின் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘பட்டியல்’, ‘ஒரு நடிகையில் வாக்குமூலம்’ போன்ற படங்களைத் தயாரித்தார். சமீபத்தில் ‘காவல்’ என்ற திரைப் படத்தைத் தயாரித்ததோடு, அதில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். இது ஒருவகையில் அவருக்கான வணிகமாகச் சிறக்குமே தவிர இதனால் மலேசியக் கலைத்துறைக்குப் பெரிதாக எந்த லாபமும் இல்லை.

இவ்வாரான ஒரு வறண்ட தமிழ் கலையுலகச் சூழலில்தான் ‘மறவன்’, ‘வெண்ணிற இரவுகள்’ போன்ற திரைப்படங்கள் வரத்தொடங்கின. ஓரளவு மலேசியத் தமிழ் வாழ்வை அல்லது அதன் மிகச்சிறிய பகுதியைச் சொல்ல மறவன் முயன்றது என்றால் மிகச் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘வெண்ணிற இரவுகள்’ இருந்தது. குறைந்தபட்சம் கலைத்தன்மையுடன் இப்படங்கள் இருந்தன. இதன் உச்சமாக வெளிவந்த திரைப்படம்தான்  ‘ஜகாட்’.

தயாஜி 06பெரும்பாலான திரைப்படத் தயாரிப்பாளர்கள் இங்கு சொல்லும் காரணம் ஒன்றை கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது மலேசியாவைப் பொருத்தமட்டில் இங்கு தமிழர்களின் எண்ணிக்கை மலாய்க்காரர்கள், சீனர்களுக்கு அடுத்த நிலைதான். இங்குள்ள தமிழர்களை நம்பித் திரைப்படம் எடுத்தால்  வியாபார ரீதியில் வெற்றி பெற முடியாது. ஆகவே தமிழகத்தில் திரையிடப்படுவதால் மட்டுமே வியாபாரம் வெற்றி பெறும். இவ்வாறு பலர் நம்பிக்கொண்டிருந்த சமயத்தில்தான் சஞ்ஜய் பெருமாள் இயக்கிய ‘ஜகாட்’ திரைப்படம் வெளிவந்தது. 80களில் முடிவிலும் 90களின் தொடக்கத்திலும் உள்ள மலேசியச் சூழலை மிக யதார்த்தமாகப் படமாக்கியிருந்தார். தமிழர்கள் இந்நாட்டில் இருக்கும் நிலை, அவர்கள் எவ்வாறு வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள் என்பதையொட்டி திரைக்கதையமைத்து பல ஆண்டுகள் அதற்காக உழைத்து அப்படத்தை இயக்கினார். இங்குள்ள தமிழர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள், சீனர்கள் என பலரும் திரையரங்கம் சென்று இத்திரைப் படத்தைப் பார்த்து அப்படம் சொல்லும் நுண்ணரசியலைப் பேச ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக மலேசிய வரலாற்றில் முதன்முறையாக ‘ஜகாட்’ என்ற ஒரு தமிழ்த் திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. மலேசியத் தமிழ்ப் படம் மலேசியத் தமிழ் ரசிகர்களுக்கானது என்ற பம்மாத்தெல்லாம் உடைந்தே போனது.

 ***

தமிழ்த் திரையை நம்பி கெட்டவர்களைப் பற்றிய கதைகளை ஒரு செய்தியாகவே ஏற்றுக்கொள்ளும் மனம் Ben Nathan-னின் வீழ்ச்சியில் பதற்றம் அடைவது அவர் அசல் கலைஞன் என்பதால்தான். அவரது பாடல்கள் அசலானவை. குரல் அசலானது. அவர் யாருடைய பிம்பமாகவும் இல்லை. மலேசிய மண்ணுக்கான கலைஞனாகத் தன்னை நினைப்பவர்களிடம் மட்டுமே அசல் கலைத்தன்மையைக் காண முடிகிறது. அவர்களுக்கான தேவை எல்லாக் காலத்திலுமே இருக்கிறது. எம்மண்ணும் தனக்கான கலைஞனை அவ்வளவு சீக்கிரத்தில் தோற்கவிடாது. குறைந்தபட்சம் அடுத்த தலைமுறையை அவர்களுடைய புகழால் எழுச்சி அடைய வைப்பதுபோலவே வீழ்ச்சியால் வருந்தவாவது வைக்கும்.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...