ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் : மழையாகாத நீராவி!

?????????????????

ஜெயந்தி சங்கர்

மலேசிய, சிங்கப்பூர் பெண் படைப்பாளிகளில் மிக அதிகமாக தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுபவர் ஜெயந்தி சங்கர். மொழிபெயர்ப்புத் துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. அவரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ நூலை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் ஒரு நூல் தொகுக்கப்பட வேண்டும் என நண்பர்களிடம் பரிந்துரைத்ததுண்டு. ஜெயமோகனின் பொதுவழியில் பெரும்சலிப்பு’ எனும் அவரது சிறுகதைகள் குறித்த விமர்சனத்திற்குப்பின் தனது முக்கியமான சிறுகதைகள் தவிர்க்கப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டுள்ளதாக ஜெயந்தி சங்கர் தனது முகநூலில் தெரிவித்திருந்தார். அந்த விமர்சனத்திற்குப் பிறகு வாசகர்களுக்காக அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த அவரது 10 முக்கியமான சிறுகதைகளை வாசித்தேன். அதற்கு முன்பும் பொதுவான அவரது சில சிறுகதைகளை வாசித்து அடைந்த மனச்சோர்வே இம்முறையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளில் உள்ள சிக்கல் அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் வழியாக மேலெழுந்து செல்லும் உணர்வுகளை அவரே கீழே பிடித்து இழுக்க அதற்குள் ஒரு செய்தித் தன்மையை வைப்பதுதான் என முதல் வாசிப்பிலேயே தோன்றத்தொடங்கியது.  ஜப்பான் எழுத்தாளர் ஹருகி முராகாமி சிறுகதைகளை வாசிக்கும்போது மனதின் நுண்மையான பகுதிகள் மேல், வாழ்வின் கவனிக்கத் தவறிய அம்சங்களின் மேல், மானிட அந்தரங்க அலைக்கழிப்புகளின்மேல் அவர் சொற்கள் ஒளிபாய்ச்சி செல்வதாகத் தோன்றும். ஆனால் கதையைப் படித்து முடித்தவுடன் கதை அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். முதல்காரணம் மிக நுண்மையான அப்பகுதிக்கும் மொத்தச் சிறுகதைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. ஏதோ தத்துவ நூலிலிருந்து அது திட்டமிட்டே அக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளதுபோல அந்நியப்பட்டு நிற்கும். அந்த நுண்மையான அகச்சித்தரிப்புக்கு அருகில் வராத ஒரு பொத்தம் பொதுவான பார்வையுடன் முராகாமி கதையை முடித்திருப்பார். அதுவும் செய்தித்தன்மையில் இருக்கும். ஜெயந்தி சங்கரின் சிறுகதைகள் அவ்வாறானவை.

ஒரு நல்ல சிறுகதையில் இருக்கவேண்டிய நுணுக்கமான வாழ்வு குறித்த பார்வை ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளில் எங்காவது இருக்கவே செய்கிறது. ஆனால் அப்பகுதி ஜெயந்தி சங்கர் காட்ட வரும் வாழ்வோடு இசைந்துபோகாமல் ஒரு விருந்தாளியைப்போல தலைகாட்டிவிட்டுச் செல்கையில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சேற்று நீர் சூரியனால் நீராவியாக மாறி வானுக்குச் சென்று மழையாகவும் மாறாமல் சேறாகவும் தேங்காமல் மண்ணிலேயே உலாவி மறைந்துபோவதுதான் ஜெயந்தி சங்கர் கதைகளுக்கும் நிகழ்கிறது. உதாரணமாகக் ‘கோடரித்தைலம்’ சிறுகதையைச் சொல்லலாம்.

விபத்தில் சிக்கி மனப்பிறழ்வுடன் உள்ள மகளின் செயலைக் காட்டும் ஒவ்வொரு கணமும் இக்கதை பதைபதைப்பை ஏற்படுத்தக்கூடியதுதான். கத்தியைக் காட்டி நேத்தைக்கு வாங்கினேன் என்பவளைப் பார்த்து வீடு வீடாக உணவு கொடுப்பவர் ‘இதையே ஆறு மாதமா சொல்ற’ எனும் இடத்தில் செல்வியின் உளச்சிக்கல் முழுமையாகவே புரிந்துவிடுகிறது. ஆனால் கதையில் மீண்டும் மீண்டும் இரு இடங்களில் விபத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்பதையும் ஜெயந்தி சங்கர் விவரிக்கும்போது கதை செய்தித்தன்மைக்குள் சென்றுவிடுகிறது. கதையின் கடைசியில் செல்வியை பிடித்துக்கொண்டு செல்வதும் அதெல்லாம் தெரியாமல் அவள் வேறொருவளாகி அப்பாவை நினைத்துக் கலங்குவதும் பலவீனமான முடிவு. சிறுகதையின் மையம் மகள் மேல் அதிகம் அன்பு வைத்துள்ள தந்தை, மகளுக்கு நடக்கும் ஒரு விபத்துக்குப்பின் ஏற்படும் பொருளியல் சிக்கல், வாழ்வியல் சிக்கல்களால் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வன்பிலிருந்து விடுவித்துக்கொள்வதாக இருந்திருந்தால் இது குறிப்பிடத்தக்க சிறுகதையாக மாறியிருக்கும். அன்பு என்பது புற நெருக்கடிகளில் என்னவாக மாறுகிறது எனப்பேச விஸ்தாரமான களமுள்ள கதை. கதையில் அப்பகுதி மிகச்சொற்பமாகப் பேசப்படுகிறது. ஆனால் ஜெயந்தி சங்கர் அந்த நுண்ணிய பகுதியில் இருந்து தாவி வழக்கமான மனப்பிறழ்வின் முரணியக்கம் பற்றி எழுதத்தொடங்கும்போது அக்கதை தட்டையாகிவிடுகிறது. இதே நிலைதான் ‘தம்மக்கள்’ சிறுகதைக்கும் நடக்கிறது.

சிங்கப்பூரில் வசிக்கும் அப்பா தனக்குப் பிறந்த குழந்தை தவழும் அந்தக்கணத்தைப் பார்க்க நினைக்கிறார். தவழும் அந்தக் காட்சியைப் பார்க்க அவருக்கிருக்கும் உளவியல் காரணங்கள் எதுவும் கதையில் சொல்லப்படவில்லை. அவருக்கு அது ஆசையாக இருக்கிறது அவ்வளவே. அந்தப் பருவத்தைக் கடந்த குழந்தையைப் பார்க்க வருபவர் குழந்தையைத் தவழ வைக்க முயல்கிறார். ஆனால் இதற்கிடையில் கதை வெளிநாட்டில் வேலை செய்யும் அப்பாவுக்கு நேரும் நெருக்கடிக்கடிகளைப் பேசத்தொடங்குகிறது. ‘கோடரித்தைலம்’ போல இக்கதையும் எளிய சிணுங்கலுடன் முடிந்துவிடுகிறது. ஜெயந்தி சங்கரால் அவரே உருவாக்கும் ஒரு வாழ்வின் முக்கிய அங்கத்தை கவனப்படுத்தவே முடியவில்லை. மேம்போக்கான பகுதிகளிலேயே அவரது கண்கள் மேய்ந்துகொண்டிருப்பது கவலைக்குரியது.

வாசித்தவரை ஜெயந்தி சங்கரின் பெரும்பாலான கதைகளின் சிக்கலே மேற்சொன்ன இரு கதைகளில் உள்ள மேம்போக்கான நிலைதான். அவரால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் நுணுகிக் கவனிக்க இயலவில்லை. இலக்கிய வாசிப்புள்ள பல நண்பர்களிடம் நான் காணும் அம்சமும் இதுதான். காட்டப்பட்டுள்ளதைக் கடந்து அவர்களால் ஒரு படைப்பிலக்கியத்திற்கு உள்ளே சென்று அதனை தனக்கான ஒன்றாகக் கண்டடையவே முடியாது. ஒரு படைப்பிலக்கியத்திடம் முழுமையாக ஒப்புக்கொடுத்த வாசகனுக்கு மட்டுமே அப்படைப்பு தன்னை எல்லா கோணங்களிலும் திறந்து காட்டுகிறது. வாழ்வை, சக மனிதர்களை, தத்துவங்களை, மேம்போக்காகவோ பொதுமைப்படுத்தியோ புரிந்துகொள்ள முயலும் ஒருவரால் அதன் ஒரு கோணத்தை மட்டுமே உள்வாங்க முடியும். அந்த மேம்போக்கான கோணத்தை மட்டுமே பகிரவும் முடியும்.

ஜெயந்தி சங்கரின் பலமாக இருப்பது சீன சமூகத்தைப் பற்றிய புரிதலைச் சொல்லலாம். சிங்கப்பூரில் வாழும் ஒரு படைப்பாளியாகத் தமிழ்ச் சமூகத்தின் மனநிலையிலிருந்து மட்டும் எழுதாமல் பிற கலாசாரங்களையும் அறிந்து அவர்கள் பார்வையிலிருந்தும் வாழ்வைப் பார்ப்பது தமிழ் வாசகனுக்குப் புதுமையானது. மலேசியாவில் பல ஆண்டுகள் பிறந்து வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்கள் அவ்வாறான கதைகளை எழுதுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் ஜெயந்தி சங்கர் மலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஒரு முன்மாதிரி எழுத்தாளர். அவர் அவ்வாறு முயல்வது தமிழுக்குப் புதிதாக இருந்தாலும் அது கலை வடிவத்தை அடைந்துள்ளதா என்பது முக்கியமான கேள்வி. ‘யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்’ எனும் சிறுகதை ஜப்பான் – சீன வம்சாவளியில் பிறந்த யூகா வோங் வரலாற்று நினைவுகளால் சீனர்கள் மத்தியில் படும் சிக்கல்களை பேசுகிறது. அவளைச சீனராக அங்கீகரிக்க அவள் வகுப்புத் தோழிகளால் இயலவில்லை. அவர்கள் பார்வையில் அவள் ஜப்பான்காரி. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு ஜப்பானியர்கள் தங்களுக்குச் செய்த கொடுமைகளை நினைவில் வைத்து அவளை வெறுக்கின்றனர். மாறாக அவள் ஜப்பானுக்குக் குடிபெயர்ந்தால் அவளைச் சீனப்பெண்ணாக எண்ணிப் புறக்கணிப்பர். இவ்வாறான வரலாற்றின் பின்னணியைக் கொண்டு கதையை எழுத ஜெயந்தி சங்கருக்குப் போதுமான தரவுகள் உள்ளன. அதன் துணையுடன் புற உலகை அவரால் கட்டமைக்க முடிகிறது.  ஆனால் அவ்வாறான இன்னலுக்குள்ளாகும் பெண் ஒருத்தியின் உளவியலின் அடிப்படையைக்கூட அவரால் சென்றடைய இயலவில்லை என்பதே வருத்தம். கதையின் எவ்விடத்திலும் இந்த இருதலைக்கொள்ளி மனநிலையின் தவிப்பு வெளிப்படவே இல்லை. புறத்தகவல்கள் கட்டுரை வடிவிலும் உள் நோக்கிப் பாயாத பார்வை மேலோட்டமாகவே நின்று விடுகிறது. கல்விக்கூடங்களில் இதுபோன்ற வரலாற்றுத் தகவல் அடங்கிய கதைகளுக்கு முக்கியத்துவம் உண்டுதான். இலக்கியப் பிரதியின் தேவை வரலாற்றை அல்லது ஒரு தகவலைச் சொல்வது மட்டுமே என்ற அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இதுபோன்ற சில அம்சங்கள் உதவுகின்றன. ஆனால் ‘தேநீரகம்’ ஜெயந்தி சங்கரின் வரலாற்று அறிவு குறித்து சந்தேகிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

அவர் தேர்வு செய்துகொடுத்த கதைகளில் வடிவமைதியுடன் கச்சிதமான மொழியில் எழுதப்பட்ட நல்ல கதை இது. கதை சொல்லியான ச்சியா லிம் 1935இல் பிறந்தவன். அவன் நாட்டில் இனக்கலவரம் நடந்து முடிந்திருந்த ஒரு காலத்தை கதையில் கொண்டு வருகிறான். அது ஜப்பானியர் ஆட்சி முடிந்து ஆங்கிலேயர்களின் ஆட்சி நடக்கும் காலம் என்கிறான். உண்மையில் அக்காலக்கட்டத்தில் எந்த இனக்கலவரமும் நடக்கவில்லை. இனக்கலவரம் நடந்தது 1964இல். அப்போது ஆங்கிலேயர் ஆட்சியும் இல்லை. ஒருவேளை கம்யூனிஸ்ட் கலவரத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டாலும், அது நடந்தது 55/56களில். அப்போது கதைசொல்லி சிறுவனாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் கதையில் வருவதுபோல் சீனப்பள்ளிகள் கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திற்குத் துணைபோகும் சூழலெல்லாம் 1950களில் நிகழ்ந்துள்ளன. கதையில் சொல்வதுபோல ஜப்பானியர்கள் நாட்டைவிட்டு சென்ற பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர்கள் உடனடியாக சீனப்பள்ளிகளை மூடியதற்கான ஆதாரங்களை ஜெயந்தி சங்கர் காட்டினால் நன்று.

ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளை வாசிக்கும்போது ஏன் அவரால் மனித உணர்வுகளுக்குள் நுழைய இயலவில்லை என்ற கேள்வியே எழுகிறது. அவரால் லௌகீக வாழ்வையும் புறச்சூழலையும் விவரிக்க முடிந்த அளவு அகம் நோக்கி தனது பார்வையைச் செலுத்த இயலவில்லை. ‘தூரத்தே தெரியும் வான் விளிம்பு’  இவ்வாறு முற்றிலும் உளவியலை மையப்படுத்தியதே. புதிய பள்ளியின் சூழலை ஏற்காத ஒருவன் ஏக்கத்தின் தொகுப்பு செய்யும் அர்த்தமற்ற செயல்கள் கதையில் ஒட்டாமலேயே இருக்கின்றன. ‘புதியதோர் உலகம்’ சிறுகதை ‘தூரத்தே தெரியும் வான் விளிம்பு’ சிறுகதையின் இன்னொரு பகுதி எனலாம். கல்விச்சூழலின் அழுத்தத்தைச் சொல்ல வரும் ஜெயந்தி சங்கரால் மீண்டும் மீண்டும் புறச்சூழல்களையே சித்தரிக்க முடிகிறது.

‘முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்’ போன்ற சிறுகதைகள் ஏன் எழுதப்பட்டன எனத் தெரியவில்லை.  காற்பந்து விளையாடும் இளைஞனிடம் நட்பாகும் நான்கு பெண்களின் அடாவடித்தனத்தைக் கதையாக்குகிறேன் என ஏதோ ஒன்றை எழுதி வைத்துள்ளார். அவர் தான் எழுதியதில் சிறந்ததாகக் கருதும் இக்கதை எதன் பொருட்டு தேர்வு பெற்றதென உண்மையில் புரியவில்லை. அதேபோல ‘ஒத்திகை, மெலிசாவின் தேர்வுகள்’ ஆகிய சிறுகதைகள் குமுதத்தில் வரவேண்டிய ஒரு பக்க கதைகள். அவை ஜெயந்தி சங்கரின் கடும் உழைப்பால் விரிவாக்கப்பட்டு சிறுகதைகளாகப் பிரசுரமாகியுள்ளன.

ஜெயந்தி சங்கர் வழங்கியிருந்த பத்து சிறுகதைகளில் ‘ஓடிப்போனவள்’ என்னைக் கவர்ந்தது. பல்வேறு கலாச்சாரங்களும் நாகரீகமும் வாழ்வோடு கலந்துவிட்ட ஒருவருக்கு எளிய மனிதர்கள் பதைபதைக்கும் விழுமியங்கள் அசட்டுத்தனமானவை. ஜெயந்தி சங்கர் சிறுகதைகளில் காட்டும் கதாமாந்தர்கள் அதுவரை தமிழ் இலக்கியங்கள் காணாதவர்கள். சிங்கப்பூர் எனும் பெருநகரின் பரபரப்பில் வாழ்பவர்கள். இக்கதையில் வரும் நான்ஸி வீட்டை விட்டு ஓடிப்போகிறாள். அது அவளுக்கு வழக்கமானது. ஆனால் ஓடிப்போவது அவளுக்கு ஒரு விளையாட்டுபோல உள்ளது. அம்மாவின் மிரட்டலால் ஓடி ஒளிந்துகொள்ளும் காதலனைத் தேடுகிறாள். அம்மாவும் அவள் ஓடிப்போனதை ஒரு விளையாட்டுபோலவே அணுகுகிறாள். இக்கதையில் மொத்த சமூகமும் கௌரம் என்பதைக் கடந்து எது குறித்தும் தீவிரமாக இல்லை எனக் காட்டும் ஜெயந்தி புல்வெட்டி மூலம் ஒரு மனிதத்தன்மை கொண்ட ஒருவனைக் காட்டுகிறார். அவன் கண்களில் ஈரம் உள்ளது. மொத்தக்கதையும் காட்சிப்படுத்தலால் புனையப்பட்டுள்ளது. ஓர் அபத்தத்தை நாகரீகம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்றும் எளிய மனிதர்களிடம் எவ்வாறு இன்னமும் அது பிணைந்திருக்கிறது என்றும் நுட்பமாகச் சித்தரிக்கிறார் ஜெயந்தி சங்கர்.

மலேசியக் கல்விக்கூடங்களில் ஒரு சிறுகதையின் தரத்தை அளக்கும் விதம் எப்போதுமே எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். கதையின் களம் புதிதாக உள்ளதா, பல்லின கலாச்சாரம் புகுத்தப்பட்டுள்ளதா, கருத்து தெளிவாக உள்ளதா, கதாபாத்திரங்கள் முழுமையாக வார்க்கப்பட்டுள்ளனவா என்பனவற்றை ஆராய்ந்து ஒரு சிறுகதையின் தரத்தை முடிவு செய்வார்கள். கதையின் கலைநுட்பத்தைப் பற்றி கேள்வியே இருக்காது. ஒருவேளை கல்விக்கூடங்களுக்கு ஜெயந்தி சங்கரின் சிறுகதைகள் சென்றால் உரிய அங்கீகாரங்களைப் பெறலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...