புனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்

img105ந.மகேஸ்வரி கதைகள் எழுதிய அதே காலகட்டத்தில் வடக்கில் இருந்து படைப்புகளை தந்துகொண்டிருந்தவர் பாவை. இவரின் சிறுகதை தொகுப்பு 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானப்பூக்கள்’. இந்நூலை தனி ஒருவராக வெளியிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முன்னுரையில் வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள  12 சிறுகதைகளும் 1972 முதல் 1986 வரை அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை என்பதோடு  பல படைப்புகள் ‘பவுன் பரிசு’ உட்பட பல்வேறு பரிசுகளை வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. ”என்னுடைய கதைகளின் நோக்கம் சமுதாயத்தைத் திருத்தவேண்டும் என்பதல்ல; இப்படியெல்லாம் நடக்கின்றதே! இதனை நாம் எப்படி வெல்லப் போகிறோம்? விலக்கப் போகிறோம்? என்பதே,” என்று எழுதுகிறார் பாவை (நூல் முன்னுரை)

இந்நூலில் சமகாலப் பிரச்சனைகளும் ஆண், பெண் உறவுச் சிக்கல் தொடர்பான கதைகளும் அதிகம் இடம்பிடித்துள்ளன. மலேசிய உருவாக்கத்தின் தொடக்க காலம் என்பதை உணர்த்தும் பிற இன பண்பாட்டு மோதல்களைச் சுட்டும் படைப்பும் உள்ளது. அதேபோல் தோட்டத் துண்டாடலால் உள்நாட்டிலேயே அகதியாக விரட்டப்பட்ட கணபதியின் கதையும் முக்கிய இடம்பிடிக்கிறது.

பாவையின் மென்மையான கவித்துவ மொழி நடை சிறப்புகுரியது. எல்லா கதைகளையும் பதற்றமோ கொந்தளிப்போ இன்றி அமைதியாகவே நகர்த்திச் செல்கிறார். பல்வேறு கருத்துகளையும் ஒரு வினாவாக முன்வைக்கும் தனித்துவமான பாணி அவர் எழுத்தில் காணப்படுகிறது. அவர் கதைகளில் புதுமையான உவமைகளும் வர்ணனைகளும் சிறப்பாக இடம்பெருகின்றன, ‘எனக்குள் கல்லெனக் கவிந்து போயிருக்கும் இந்தத் தனிமையை விரட்ட’, ‘மழை வந்துவிட்டால், இருந்த இடம்தெரியாமல் சிதறி ஓடும் மேகத்துணுக்குகளைப் போல்’ போன்ற எண்ணற்ற கவித்துவ உவமைகள் எல்லா கதைகளிலும் உண்டு. மேலும், “கற்பூரம் கரைந்துப் போகாமல் இருக்க காற்றுப் போகாத ஒரு டப்பா எப்படி அவசியமாகிறது,… அதைப்போல் பெண்மையும் உலர்ந்து போகாமல் இருக்க தாய்மையெனும், ஒரு மாபெரும் சக்தி அவளுக்கு துணையாக இருக்கிறது…” என்பன போன்ற கற்பனைகளும் உள்ளன.

பாவை தன் கதைகளில் பெண் பால் பரிவை அதிகமாகவே காட்டி படைப்புகளை எழுதியிருக்கிறார். தான் ஒரு பெண்ணியவாதி என்பதை அடையாளப்படுத்த இக்கால கட்ட பெண் எழுத்தாளர்கள் அதிகம் மெனெக்கெட்டுள்ளனர் என்பதை உணரமுடிகிறது. அதோடு பாவை மேலும் கொஞ்சம் அதிகபட்சமாக, தன் நூலுக்கு மூன்று பெண் பிரபலங்களை அணித்துரைகள் எழுத வைத்து அவற்றை நூலின் முன்பக்கங்களில் நிரப்பியிருக்கிறார். அவர்களும் பெண்ணிய உணர்வு மிளிர தங்கள் அணித்துரைகளை எழுதியுள்ளனர்.

ஆயினும், பாவை முன்வைக்கும் பெண் கதாப்பாத்திரங்கள் தங்கள் கணவனின் துரோகத்தை சகிக்க முடியாமல் அமைதியாக விலகிச் செல்வதை நெறியாக கொண்டுள்ளனர். அப்படிச் செல்பவர்களின் அடுத்தகட்ட வாழ்க்கை ‘ஒரு புனித வேள்வியாக’ மாறிவிடுகிறது. ஆகவே இவர் படைத்துக் காட்டும் புரட்சிப் பெண்கள் யாவரும் சீதை, அகலிகை, கண்ணகி போன்ற புராண தொன்மங்களின் நகல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தொடராத நிழல்கள்’ (1982), கதையின் நாயகி தன் கணவனின் கள்ள உறவை ஏற்க முடியாமலும் அவனுடன் போலித்தனமாக வாழப்பிடிக்காமலும் அவனிடம் இருந்து மிக நாகரீகமாக குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறாள். தற்கொலை முயற்சிகளைவிட இது ஏற்புடையது என்றாலும் அந்த முடிவை அவள் எடுக்க முழுக் காரணமாக இருப்பது தாய் என்னும் நிலையே. ஆகவே அவளின் அடுத்தகட்ட வாழ்க்கை புனிதம் மிக்க தாயாகக் கட்டமைக்கப்படுவதை உணரலாம்.

‘ஒற்றையாய் ஆடும் நாற்காலி’யின் நாயகி ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி சபல புத்தியால் தன் கணவனின் நண்பனுடன் நெருக்கமாக இருந்துவிடுகிறாள்.

“ஒரு சின்ன தடுமாற்றங்க… அதைத் தவிர உடலாலே ஒரு தீங்கும் நடந்து போகலீங்க…..”  என்று அவள் இறைஞ்சுகிறாள்.

ஆயினும், “அந்நியன் பிடியில் அரை வினாடி நீ இருந்தால்கூட உன் உடல் கறைப் பட்டதுதான்” என்று சினந்து அவள் கணவன் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறான். பல ஆண்டுகள் சென்று, முதுமையும் தனிமையும் உறுத்தும் நேரத்தில் அந்தக் கணவன் தான் விலக்கி வைத்த மனைவியை மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு மன்றாடுகின்றான். ஆனால், அந்தப் பெண் தான் சபலப்பட்டு செய்தத் தவறுக்குத் தண்டனையாக இப்போது மேற்கொண்டுள்ள புனித தவ வாழ்க்கையை விட்டுவிட்டு வரமுடியாது என்று கூறிவிடுகிறாள். “இது ஒரு புனிதமான வேள்வி….! இந்த வேள்வித் தீயிலிருந்து வெளியேறி மீண்டும் வெறும் சாம்பலாக வாழ நான் விரும்பலே…” என்பது அவள் முடிவு.

அடுத்து ‘பண்புகள் வாழ்கின்றன” (1974) என்னும் கதையில் சீனப் பெண்ணைக் காதலித்து மணந்த தமிழ் இளைஞன், திருமணத்திற்குப் பிறகு அவளின் உடையலங்காரத்தையும் அவள் ஆண்களுடன் பழகும் முறையையும் வைத்து அவள் மேல் சந்தேகம் கொள்கிறான். அந்தச் சந்தேகம் பெரியதாகி இருவரும் பிரியும் நிலையில் அவள் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்று விடுகிறாள். அக்கடிதத்தில், ‘என்றாவது ஒருநாள் நானும் ஏற்றிவைத்த குத்துவிளக்குப் போல் பண்பு நிறைந்தவள், என்று தாங்கள் உணர்ந்தால் அதுவே எனக்குப்போதும்… இந்த சீனத்து லீ ஒரு இந்திய லீயாக வாழ்வேன், நிச்சயமாக’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

பெண் சபலப்படுதல் அல்லது சந்தேகத்திற்குள்ளாதல். பிறகு கணவனால் வெறுக்கப்படுதல் (சபிக்கப்படுதல்), கணவனின் சாபத்தை ஏற்று விலகிப்போதல், பாலுணர்வுகளை முற்றாக விலக்கி வாழ்தல் (புராணங்கள் கல்லாய் சமைதல் என்று கூறுவதை உணர்வுகள் அற்று வாழ்தல் என்றும் பொருள்படுத்தலாம். கல்லாய் கிடந்த அகலிகை ராமனின் பாதத்துகள் பட்டு பெண்ணாய் உருக்கொண்டாள் என்பதை, சர்வ உணர்வுகளையும் மறந்து ஜடநிலையில் வாழ்ந்து கொண்டிருந்த அகலிகை ராமனின் தொடுதலால் உணர்ச்சிகள் மீண்டெழ காமமும் ஆசைகளும் உள்ள இயல்பான பெண்ணாக மாறி வந்தாள் என்பதே நவீன வாசகனின் புரிதலாக இருக்கவேண்டும்)  பிறகு சாபவிமோசம் பெறுதல் அல்லது தீக்குளித்து தன் தூய்மையை நிலைநாட்டுதல், போன்ற பெண்களின் உடலை ஒழுக்கவாத முதல்பொருளாக வைத்து கற்புநெறி கோட்பாடுகளைப் பேசுதல் புராணகால கதையாடல் முறை என்பதை நாம் அறிவோம்.  ஆகவே பாவை, தன் நவீன சிறுகதைகளில் முன்வைக்கும் பெண் கதாபாத்திரங்கள் தொன்மை கதை மாந்தர்களின் நகல் என்பதை மறுக்க முடியாது.

அடுத்ததாக, சமகாலப் பிரச்சனைகளைச் சுட்டும் கதைகளான ‘வேப்பமரம்’, ‘வரம்புகள்’ இரண்டும் பெற்றோரின் எதிர்பார்புகளை நிராசையாக்கும் பிள்ளைகளைப் பற்றிய கதைகளாகும். ஏறக்குறைய மலேசியாவில் கதை எழுதும் ஆண் பெண் எழுத்தாளர்கள் அனைவருமே குறைந்தது ஒரு கதையையாவது இந்தக் கருப்பொருளில் எழுதியிருப்பர். ந.மகேஸ்வரியின் ‘அப்பா’, ‘ஐவராவோம்’, ‘சுமைதாங்கி’ போன்ற கதைகளும் இந்த வகைக் கதைகள்தான். ஆயினும் ‘வேப்பமரம்’, படுத்தபடி பகல் கனவு காணும் சுயநல தந்தையையே நமக்கு அடையாளம் காட்டுவதில் கதையின் நோக்கம் தோல்வியடைகிறது.

அதேபோல் மொழி, தமிழ்ப் பள்ளி, தமிழாசிரியர்கள் போன்ற கருப்பொருள்களில் கதை எழுதுவதும் மலேசியச் சூழலில் மிகவும் பிரபலமாகும். நாளிதழ்கள் இவ்வாரான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உணர்ந்து (அல்லது பத்திரிகை ஆசிரியர்களே கேட்டு வாங்கியோ) இக்கருவில் கதை எழுத எழுத்தாளர்கள் இன்று வரை சளைப்பதில்லை. இந்த மாதத்தில் வெளிவந்த இதழ்களை ஒரு சேர வாசித்தாலும் தாய்ப்பாசம், தந்தையின் தியாகம், தமிழ்ப் பள்ளியின் மேன்மை அல்லது அவலம் ஆகிய கதைப் பொருளில் எழுதப்பட்ட இரண்டு கதைகளையாவது நாம் வாசிக்க முடியும், பாவையும் இந்த அடிப்படைத் தகுதியை நிலைநிறுத்த ‘தானே தனக்கு பகையானால்” என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியிருக்கிறார்.

ஞானப்பூக்கள், விழிப்பு போன்ற மிக செயற்கையான கதைகளோடு, ‘இதழ் உதிர்ந்த ஒரு மலர்”, “இனிமேல் ஒருவன் வருவானோ” போன்ற நாவலுக்குரிய அகண்ட கதைகளும் சிறுகதைகளாக எழுதப்பட்டுள்ளன.

இவற்றோடு நம் கவனத்தில் தங்கும் இரண்டு சிறுகதைகளையும் பாவை இத்தொகுப்பில் இணைத்துள்ளார். ‘செல்லாக்காசு” என்ற கதையில் மலேசியாவில் தோட்டத் துண்டாலுக்குப் பின் வேலை பெர்மிட் இல்லாததால் சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்ட ஒரு அடிமட்ட சமூகத்தின் பிரதிநிதியை முன்னிலைப்படுத்தியுள்ளார். மிகையுணர்ச்சியோடு பிரச்சாரமும் இக்கதையில் இருந்தாலும் 1972ஆம் ஆண்டில் பினாங்கில் கட்டைவண்டி ஓட்டிகளின் வாழ்க்கையையும் அதன் ஊடே தோட்டத் துண்டாடலின் பின்விளைவுகளையும் பதிவுசெய்திருப்பதால் இக்கதை முக்கியத்துவம் பெருகிறது. இக்கதை பாட்டாளிவர்க்கத்தின் அவலங்களையும் முதலாளிவர்க்கத்தின் அதிகார போக்கையும் மாக்சிய நோக்கில் காட்சிப்படுத்துவது தனிச்சிறப்பு.

அடுத்ததாக, “குழலோடு சேரும் மலர்கள்” (1979),  மிக மெல்லிய சகோதர பாசத்தையும் பெண்களின் பாசம் காலம்தோறும் நகரும் தன்மைகொண்டது என்பதையும் யதார்த்தமாக சொல்லிச் செல்கிறது. திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் அக்காள் தன்னுடனே எப்போதும் அன்புடன் இருப்பாள் என்று நம்பும் சிறுவன், பிறகு அக்காள் திருமணமான சில நாட்களிலேயே தன் கணவனுக்கே முன்னுரிமை கொடுப்பதைக் கண்டு வியந்து நிற்கிறான். இன்றைய வாசகனுக்கும் மனதோடு உரையாடலை நிகழ்த்தும் கதைப்பாங்கு இதற்கு உண்டு. ஆனால் இக்கதை எந்தப் பரிசும் பெறாத சிறுகதை என்பதை குறிப்பிட வேண்டும். எவ்வித பிரச்சாரமும் இல்லாத – சமூகத்துக்குப் புத்திமதி சொல்லாத – தன்முனைப்புத் தூண்டுதல் செய்யாத – மன உணர்வுகளைக் கலாபூர்வமாக மட்டுமே அணுகும்  கதைகளுக்கு மதிப்பளிக்க தெரியாத இலக்கியப் புரிதலே நாட்டில் அன்றும் இருந்தது என்பதற்கு இக்கதையை உதாரணமாக காட்டலாம். அழகிய மொழியுடன் கட்டுகோப்பு சிதறாமல் பாவை எழுதியிருக்கும் சிறந்த படைப்பாக நாம் இச்சிறுகதையையே முன்னிலைப் படுத்த முடியும்.

60களில் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் பாவை, ந. மகேஸ்வரியைப் போன்றே அன்று தலைதூக்கி இருந்த முற்போக்கு இலக்கிய ஈடுபாடு அற்றவராகவே இருக்கிறார். மொழி ஆளுமையிலும் வடமொழிச் சொற்களைத் தாராளமாகப் பயன்படுத்துகிறார். அதோடு சமுதாய மேன்மைக்குச் சமய சிந்தனை அவசியம் என்பதையும் வலியுறுத்தி எழுதும் போக்கையே அவர் கொண்டிருக்கிறார். மேலும் அன்று மலேசிய அரசியலில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களைத் தன் சிறுகதைகளில் பதிவு செய்வதையும் அவர் தவிர்த்திருக்கிறார். இவை ஒரு படைப்பாளியின் குறைகள் அல்ல. அது அவர்களின் சுதந்திரத்திற்கு உட்பட்டது. ஆனால் ஒரு புகழ்பெற்ற மலேசிய பெண் படைப்பாளியின் இலக்கிய நோக்கு எதை நோக்கி இருந்தது என்பதை அறிந்துகொள்ள இந்தத் தெளிவு அவசியமாகிறது. தன்னைச் சுற்றி நிகழும் நடப்புகளை எளிய இலக்கிய வாசகர்கள் ஏற்றுக் கொள்ளும் அல்லது பாராட்டும் வகையில் கதையாக்கும் பணியையே அவர் தன் படைப்புலகின் முக்கிய பகுதியாக்கி இருக்கிறார். தன் வாசகர்களுக்கு எது பிடிக்கும் என்பதை ஓரளவு உணர்ந்த நிலையில் இலக்கியம் படைக்கும் இவ்வகை போக்கு பெண் எழுத்தாளர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டியதும் அவசியமே.

(தொடரும்)

1 comment for “புனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்

  1. ஸ்ரீவிஜி
    December 6, 2017 at 5:04 pm

    நகைச்சுவையான எழுத்துநடை பாண்டியன் சார். சில இடங்களில் எழுதப்பட்ட சிலேடைகளில் வாய்விட்டுச்சிரித்தேன். சீரியஸா காமடி பண்றீங்க.!
    எளிமையான தூய தமிழ் எழுத்துநடை உங்களின் தனிச்சிறப்பு. தொடரட்டும் சார். நல்லவேளை புத்தகம் போட வேண்டும் என்கிற மாயை என்னைப் பீடிக்கவில்லை. தப்பிச்சேண்டாசாமி. இல்லேன்னா, அடி பலமா விழும். ! பிரபல எழுத்தாளர்களே வல்லின விதிவிலக்கு அல்ல..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...