ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசியத் தேவைகள் என இரு பகுதிகளாக பதில் சொல்லச்சொல்லி பள்ளிகளில் கேட்பார்கள். எது இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மால் உயிர் வாழ முடிகிறதோ அது ஆடம்பரத் தேவைகள். எது இல்லையென்றால் நம்மால் உயிர் வாழ முடியாதோ அது அத்தியாவசிய தேவைகள் என இலகுவாக ஆசிரியர் பாடம் நடத்தியிருந்தார். இப்போதுவரை அந்த எளிய கோட்பாடாக நினைவில் இருக்கிறது. மற்ற எந்த அறிவியல் அறிவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அத்தியாவசிய தேவைகளான இருப்பிடமும், உணவும் வரும் பட்டியலில் இப்பொழுது சமூக ஊடங்களும் சேர்ந்துக்கொண்டன.
சில வாரங்களுக்கு முன்பு, தோழி ஒருத்தி முகநூலில் தனக்கு வேலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்திருந்தாள். பலரும் அவளுக்கு வாழ்த்துகளையும் அவளுக்கு வேலை கொடுத்த முதலாளியைப் பாராட்டியும் பின்னூட்டங்கள் எழுதுயிருந்தார்கள்.. அத்தனை பேர் வாழ்த்துகள் சொல்லும் வகையில் வேலை கிடைத்தது அரிய விடயமா என்றால் நீங்கள் சந்தேகிக்கலாம். காரணம் உண்டு. அந்தத் தோழி மாற்றுத்திறனாளி. இயல்பாக நடக்க முடியாதவள். ஆயினும் அந்த மனத்தடங்கள் அவளுக்கு இருந்ததாக தெரியவில்லை. அழகுதானப்பொருள்களை விற்கும் கடையில் வேலை கிடைத்திருந்தது. அதன் பொருட்டு அவளுக்கு வேலை கொடுத்த முதலாளியையும் பாராட்டு மழையில் நனைய வைத்தார்கள்.
சில நாட்களுக்கு முன்பு அந்தத் தோழி முகநூலில் தன் ஊனத்தைக் குறிப்பிட்டு மனம் வருந்தி எழுதியிருந்தாள். பலரும் பதறியடித்துக் கொண்டு காரணம் வினவிக்கொண்டே போனார்கள். தோழி காரணத்தை பகிர்ந்திருந்தாள். சிக்கல் அங்குதான் தொடங்கியது. தன்னால் அடிக்கடி மாடிப்படி ஏறிவர முடியாது என இவள் சொல்ல, அதற்கு அவளது முதலாளி காரணங்கள் சொல்வதை நிறுத்து என சொல்லி விட்டாராம். தன் உடற்குறையை பொருட்படுத்தாது முதலாளி அப்படி கூறியிருப்பது அவளின் மனம் நோகும்படி செய்துவிட்டதாகவும் முதன் முறையாக தன் ஊனத்தை கண்டு மனம் வருந்துவதாகவும் எழுதியிருந்தாள்.
கடந்த மாதம் வேலை கொடுத்ததற்கான பாராட்டு மழையில் நனைத்தவரை இன்று கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் முகநூல் நண்பர்கள். தோழிக்கும் முதலாளிக்கும் நடந்த உரையாடல் எப்படிப்பட்டது என நமக்கு தெரியவில்லை. யார் பக்கம் நியாயம் எனவும் நாம் இப்போது பேசப்போவது இல்லை. பேசவேண்டிய விடயம் வேரொன்று உள்ளது.
ஒருவர் மீது இன்னொருவர் செலுத்தும் வன்முறைக்கான வரையறை என்ன? ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு எப்படி வன்முறையாக மாறிவிடுகிறது. ‘தான் நேசிக்கும் ஒன்றின் மீது மனிதன் சுலபமாக வன்முறையை கையாளுவான், என படித்தது இப்போது நினைவிற்கு வருகிறது. தோழியின் இரண்டு பதிவுகளில் இருந்து இதனை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஒரு முறை கருணையாகவும் ஒத்துழைப்பாகவும் அன்பாகவும் தெரியும் புரிதல், அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளாமல் வன்முறையாக மாறிவிடுகிறது.
தோழியின் உடல்குறையைக் காரணம் காட்டி பலரும் வேலை மறுக்க, வேலை கொடுத்தவர் உயர்ந்த இடத்திற்கு செல்கிறார். சீக்கிரமே, ‘படி ஏறி வரவேண்டும் காரணம் சொல்ல வேண்டாம்’ என்றதும் தெய்வம், மிருகமாகிவிடுகிறது. சூழலும் இருவரின் மனநிலையும் அதற்கேற்ற விளைவுகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அப்படியிருக்க மூன்றாம் தர மனிதர்கள் இதனை சரியாக புரிந்துக் கொள்ள இயலாமல் போகிறது.
எனக்கு உடற்கட்டழகர் ஒருவரை அறிமுகம் உண்டு. தனது மனதில் நினைத்திருக்கும் உடலமைப்பை பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும். எத்தனை வலியினை உடல் தாங்கிக்கொள்ள வேண்டும் என நன்கு அறிந்திருப்பார். அதற்கென்றே பிரித்தியேகமான பயிற்சியாளர் ஏற்பாடு செய்து பணம் கட்டியிருப்பார். ஆனால் எல்லோராலும் நினைத்த மாதிரி உடலமைப்பை கைகொள்ள முடிவதில்லையே. ஆனால் பயிற்சியாளர் அவரை விடுவதாய் இல்லை. அவரை கடுமையாகவே கையாண்டு பயிற்சி கொடுத்து சரியான உடல் கட்டமைப்புக்குக் கொண்டுவந்தார். இதனையே பரத நாட்டியம் முதல் தற்காப்பு கலை வர என எல்லா துறைகளிலும் பொறுத்திப்பார்க்கலாம்.
எல்லா இடங்களிலும் தொழில்களிலும் லாபத்தை அல்லது பலனை எதிர்ப்பார்க்கும் மேலாளர் கண்டிப்பைக் காட்டுவது இயல்புதான். இன்னொரு பார்வையில் அந்தத் தோழியின் முதலாளி அவளை மற்றவர்களைப் போல சராசரி பெண்ணாகவே அணுகி அவள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க முயல்கிறார் என்றும் எண்ண நிறைய வாய்ப்புகள் உள்ளன. கூடுதல் சலுகைகளை வழங்கி ஒரு பெண்ணை பலவீனமாகக் காட்டுவதைவிட சகஜமாக அணுகி அவளிடம் நம்பிக்கை விதைப்பதும் நல்ல தலைமைத்துவம்தானே.
இங்கு நான் நடந்த சம்பவத்தின் சரி தவறுகளைச் சொல்லவில்லை. எல்லா சம்பவங்களுக்கும் இருவேறு தரப்புகள் இருக்கும்போது முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் வெகுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் எளிய உணர்ச்சிகளின் முக்கியத்துவத்தையும் அதை வைத்து தங்கள் ஆளுமையை அளவிடும் அறியாமையையும் ஆராயப்பட வேண்டியது,
சொல்வதற்கும் பகிர்வதற்கு எதையாவது கொடு என சமூக வலைத்தளங்களை நம்மை நெருக்கிகொண்டிருப்பதாக நினைக்கின்றோம். இறுக்கமான இன்றைய சூழலில் அதிலிருந்து கொஞ்ச நேரமாவது வெளிவரலாம் என சமூக வலைத்தளங்களில் நுழைத்து மெல்ல மெல்ல அதன் வசம் தங்களை முழு நேரத்தையும் தொலைத்தவர்களை நாம் காண்கிறோம். பதட்டம் வரும் நேரங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைவிட சமூக வலைத்தளங்கள் உடனடி ஆசுவாசத்தை நமக்கு கொடுப்பதாக நினைக்கின்றோம்.
இதையெல்லாம் பார்க்கும் போது சூழல் நம்மை அதன் வசம் இழுத்துப்பிடிதிருப்பதாக தெரிகிறது. சூழலை எதிர்கொள்ள தியானம் செய் என சொன்னாலும் அதையும் முகநூலில் போட்டு அதற்கு வரும் கமெண்டுகளை பார்த்துக்கொண்டிருப்போமே தவிர சூழல் நம்மை தியானிக்க விடாது. அப்படியான சூழலில் நாம் கொடுக்கும் எதிர்வினைதான் நம்மை பல சமயங்களில் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அது நவீன மனிதனுக்கு விடப்பட்ட சாபமாகவே தொடர்கிறது.
சிறப்பான பார்வை நண்பர் தயாஜி.நம் அடிமைத்தனம் அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. அத்தியாவசியம் ஆடம்பரம் என்று தொடங்கி சங்கிலி தொடர் போல சமூக ஊடகங்கள் வரைக்கும்,உங்கள் ஆழமான புரிதல் விரிவடைகிறது.