ஒரு பனுவல் அதன் மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றல் ஆகும்போது அப்பனுவல் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இம்மொழியாக்கத்தில், மொழிபெயர்ப்பு (Translation) என்றொரு வகையும் மறுவுருவாக்கம் (Trancreation) என்றொரு வகையும் உள்ளன. இன்றைய மொழியாக்கத்தில் கதை, கவிதை, நாடகம் போன்ற இலக்கிய மொழியாக்கம் குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. இலக்கியம் அல்லா மற்ற பனுவல்களின் மொழியாக்கம்தான் அதிக அளவில் நடைபெறுகிறது.
இலக்கியம் அல்லாத மொழியாக்கம் வார்த்தைக்கு வார்த்தை ஓர் இயந்திர கதியில் மொழிபெயர்ப்புச் செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்பு மூலமொழியின் நிழலாக, பிம்பமாக அமைந்து படிப்போர்க்குப் புரியும்படியான ஓர் எளிய உருவங்கொண்டு உடனடி பயனைத் தருகிறது.
இலக்கிய மொழியாக்கம் என்பது மனந்தோயாமல் வெறும் அனிச்சமாகச் செய்யப்படும் மொழிபெயர்ப்பு காரியமன்று. அது மூலப்பனுவலை மனத்தால் உள்வாங்கியபடி அசைப்போட்டுக் கொண்டு புதுப்புது அர்த்தங்களை உருவாக்கி இன்னோர் அவதாரமாக பிறப்பெடுக்கும் ஒரு மறு உருவாக்கக் காரியமாகும். அதில் அர்த்தப்படுத்தலும் படைப்புக் கற்பனையும் ஆன்ம லயிப்பும் மேலோங்கி நிற்கும்.
இலக்கியத்தை மறு உருவாக்கம் செய்யும் ஒருவருக்கு தம் கருத்தியல் நோக்கில் செயல்படுவதற்கு அதிகச் சுதந்திரம் கிடைக்கிறது. இலக்கியம் அல்லாத பனுவலை மொழிபெயர்க்கும் இன்னொருவருக்கோ அந்தச் சுதந்திரம் கிடைப்பதில்லை. ஏனென்றால் அவர் மூலத்தில் நிழலை சொல்லுக்குச் சொல் பின்பற்றுகிறார். ஒரு படைப்பாக்கம் முதலில் எந்த மொழியில் எழுதப்படுகிறதோ அது அதன் மூல மொழியாகிறது (Source language). அந்த மூலப் பனுவல் இன்னொரு மொழிக்கு மறுவுருவாக்கம் பெறும்போது அந்த இன்னோர் மொழி இலக்கு மொழி (Target language) ஆகிறது.
தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் நூல், தமிழ் அறியாத ஆங்கிலத்தில் படிக்கும் வெளிநாட்டு வாசகர்களுக்காக உருவாக்கப்படுகிறது. அவர்களே இந்நூலின் இலக்கு. இந்த இலக்கு வாசகர்களுக்கு உதவுகின்ற மறு உருவாக்கக்காரர்களின் பணி மொழிபெயர்ப்பாளர்களின் வேலையைவிடச் சிரமமானது. அதிக உழைப்பைக் கோருவது. இருமொழிகளின் அடிப்படை புரிதல் திறனுக்கு அப்பாலும் அம்மொழிகள் பேசுவோரின் கலாச்சாரங்கள் பற்றிய அறிவும் ஆங்கில வாசகர்களை பற்றி கிரகிக்கும் உள்ளுணர்வு ஆற்றலும் மொழியாக்கம் தொடர்பான படைப்புக் கற்பனையும் தேவைப்படுகிறது. இவற்றுள் கலாச்சார பரிமாற்றத் திறனே மிகவும் முக்கியமானது. தமிழ்ப் படைப்பின் ஆன்மாவை சிதைத்துவிடாமல் அதை அப்படியே இலக்கு மொழியான ஆங்கிலத்தில் மறு உருவாக்கக்காரர் கொண்டு செல்ல வேண்டும். காரணம் கவிதை, கதை, நாடகம் ஆகியவை படைக்கப்படும் மூல மொழியில் பேசுவோரின் சமூகப் பண்பாடும் பழக்க வழக்கங்களும் பின்னி பிணைந்துள்ளன.
Children of Darknes என்ற வல்லினம் பதிப்பில் வந்த நூலில் எட்டு சிறுகதைகளை மொழிமாற்றம் செய்திருக்கும் புருஷோத்தமன் (மலேசியா) யமுனா, கவிதா (சிங்கை) ஆகியோர் அன்றைய மலாயாத் தமிழர்கள் இன்றைய மலேசியத் தமிழர்கள் சார்ந்த தொழில், சமூக வாழ்க்கைப் போக்குகளையும் கலாச்சார நடவடிக்கைகளையும் சமயச் சடங்குகளையும் மூலப் படைப்புகளின் ஜீவன் குன்றாமல் வாசகர்களுக்குச் செவ்வையாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
…
மலாயா, சிங்கப்பூர் ஆங்கில நாடுகளைப் பிரிட்டிஷ் காலனியவாதிகள் ஆண்டனர். அக்காலத்தில் இங்குள்ளோர் பேசிய மலாய், சீனம், தமிழ் முதலிய தாய் மொழிகள் உருவாக்கப்பட்டிருந்த சரித்திர, கலாச்சார, சமய நூல்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த காலனித்துவ ஆங்கிலேயர்கள் மூலப்பனுவல்களின் உயிரை குலைத்துவிட்டு தங்களின் வணிகச் சுரண்டலுக்காக ஆங்கில மொழி பண்பாட்டுக்கு ஏற்றபடி மொழியாக்கம் செய்தனர். அந்தச் செயலுக்கு (Demostication translation) என்று பெயர். அது நம் உள்ளூர் மூலப் பனுவல்களுக்கு அவர்கள் இழைத்துச் சென்ற ஓர் துரோகமாகும். காலனித்திற்குப் பிந்திய காலத்தில் ஆங்கிலம் கற்ற சுதேசிகள் தங்கள் பனுவல்களைத் தாங்களே மொழியாக்கம் செய்தபோது அவர்கள் தங்கள் மூலப் பிரதிகளின் ஜீவனைக் காப்பாற்றி ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்றனர். இந்த செயலுக்கு (Foreignising transcreation) என்று பெயர். Children of Darkness எனும் மறுஉருவாக்க ஆங்கில நூலில் நான் படித்தவரை தமிழ்க் கதைகளுக்கு இந்த (Foreignising transcreation) முறையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
…
இன்றைய உலகில் எந்தவொரு நட்டிலும் ஒரே மொழி பேசும் மக்கள் இல்லை. மேற்கத்திய காலனிய ஆட்சிகளுக்குப் பின்னரும் பொருளியல் அடிப்படையில் உலகமயமாக்கல் ஏற்பட்ட பிறகும் பெரும்பான்மை மொழிகள் பேசுவோர் சிறுபான்மை மொழிகள் பேசுவோர் என்ற வகையிலேயே அநேக உலக நாடுகளின் மக்கள் ஒவ்வொரு தேசிய சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இலக்கியத்தை பொறுத்தவரை பல மொழிகள் பேசுப்படும் நம் நாடுகளில் மறுஉருவாக்கம் எனப்படும் இலக்கிய மொழிமாற்றப் பணி மிகவும் முக்கியமானது. நம் இலக்கியங்கள் உலக மொழி வாசகர்களுக்கு சென்றடைய அவை முதலில் ஆங்கிலத்தில் மறு உருவாக்கம் பெறுதல் வேண்டும். அந்த ஆங்கில வழி நூல்கள் Frankfurt Book Festival போன்ற பிரபல உலக புத்தக விழாக்களில் பங்குபெறுதல் வேண்டும். அப்போதுதான் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து நம் தமிழ்ப் படைப்புகள் ஐரோப்பிய மொழிகளிலும் ஆசிய நாட்டு மொழிகளிலும் ஆப்பிரக்க மொழிகளிலும் புத்தகக் கண்காட்சிகளில் திரளும் இலக்கிய முகவர்கள் மூலம் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலக வாசகர்களை சென்றடையும்.
…
Children of Darkness நூலின் மா. சண்முகசிவா, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகிய நான்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில் மா. ராமையா, பூ.அருணாசலம், கோ.முனியாண்டி, ராஜகுமாரன், சி.முத்துசாமி, சாமி மூர்த்தி, ந.மகேஸ்வரி கதைகளும் இடம்பெறுதல் அவசியம் என இத்தொகுப்பை வாசித்தபோது தோன்றியது. மேலும், Tan Sri, Mahamayi, Vedic Agama Sastera, Dulang, Aiyoh, Kavadi போன்ற நம் மொழி வட்டாரத்தில் புழங்கும் சொற்களின் பொருளை ஆங்கில வாசகர்கள் புரிந்துகொள்வது கடினம். இம்மாதிரியான வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் தருகின்ற அருஞ்சொற்பொருள் பட்டியலை நூலின் இறுதி பக்கங்களில் வல்லினம் பதிப்பகம் இணைத்தல் அவசியம்.
2
சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில் இருந்துதான் சிங்கப்பூரில் தமிழ்மொழி படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெறத் தொடங்கின. எண்பதுகளின் ‘சிங்கா’ இதழ்களில் பல தரமான தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்று தேசிய வாசகர்களுக்குச் சென்றன.
Epigram என்ற சிங்கப்பூர் பதிப்பகம் மா.இளங்கண்ணன், லதா முதலியோரின் நாவல் சிறுகதை படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து ஆங்கில வாசகர்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
பேராசிரியர் எட்வின் தம்பு அவர்களை தொகுப்பாசியர்களாக் கொண்டு Fiction of Singpore, Poetry of Singapore என்ற தலைப்புகளில் சிங்கப்பூரின் நான்கு மொழி படைப்புகள் நேர்க்கோடு எழுத்துகளாக (Parallel Pritings) மூலமொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. சிங்கை அரசாங்கத்தில் நான்கு அதிகாரத்துவ மொழிகள் கொள்கையாலும், தேசிய கலை மன்றத்தின் Translation Grant என்ற மானிய தொகையாலும் இதுபோன்ற முயற்சிகள் தழைக்கின்றன.
3
Children of Darkness என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றிருக்கும் எட்டு மலேசிய சிறுகதைகள் ஆங்கில வாசகர்களின் வாசிப்பில் எப்படிப் புலப்படும் என்பதை ஓர் அனுமானத்தில் கணிக்க முயன்றேன்.
மா.சண்முகசிவா எழுதிய ‘சாமி குத்தம்’ –God’s Wrath சிறுகதையில் ஒரு குப்பை லாரி தற்செயலாக ஒரு கோயிலின் வெளிச்சுவரை இடித்துவிட அச்சம்பவம் ஓர் அரசியலா மாற்றப்படுகிறது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி அரசியவாதிகள் வரப்போகும் தேர்தலை முன்வைத்து நாளிதழில் சர்ச்சைகளை உசுப்பி விடுகிறார்கள். முனியாண்டி கோயில் முனீஸ்வரன் கோயிலாக உருவாக்கப்படுகிறது. சிறுதெய்வ வழிபாடு பெருதெய்வ வழிபாட்டுக்கு உயர்த்தப்படுகிறது. மனிதர்களைப் போலவே கடவுளரும் மேல்நிலையாக்கம் பெறுகிறார்கள். எதேச்சையாக ஏற்படுகின்ற ஓர் கோயில் இடிப்பு தமிழ்ச் சமூகத்தின் ஊடகம், அரசியல் போன்றவற்றில் புகுந்து எவ்வாறான மாற்றங்களைச் செய்கிறது என ஓர் ஆங்கில வாசகனால் உள்வாங்க இயலும். தமிழ் ஊடகங்களை நுட்பமாக விமர்சனத்துக்குள்ளாக்கும் இக்கதையினால் சமகால மலேசிய பத்திரிகை உலகை எந்நாட்டு வாசகரும் அறிந்து கொள்வர்.
கார் ஓட்டும் ஓர் கீழ்நிலை ஊழியர் சலுகையைத் தவறாகப் பயன்படுத்திச் செய்த பிழையிலிருந்து தப்பிப்பதற்கு தன்னுடைய நிர்வாகியின் தெய்வ நம்பிக்கையைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அச்சிக்கலிலிருந்து மீள்வதை ‘மெர்ர்சிடிஸ் பென்சும் முண்டக்கன்னியம்மனும்’ (Mercedes Benz and Mundakanniamman) என்ற மா.சண்முகசிவாவின் கதை விவரிக்கிறது. விபூதியும் குங்குமமும் போலி வேஷத்திற்கு துணை போகின்றன. இக்கதையை வாசிக்கும் ஆங்கில வாசகர் ஒருவர் தமிழ்ச் சமூகத்தில் உள்ள பக்தி எவ்வாறு வர்க்க வேறுபாட்டுக்குள் நுழைந்து அதிகாரத்தை மடைமாற்றம் செய்கிறது என்பதை உணர்வார். நவீன இலக்கியத்திற்கென்றே உள்ள விமர்சனப்பூர்வமான பார்வை எளிதில் ஓர் ஆங்கில வாசகனைச் சென்றடையும். கதையின் இறுதியில் காரோட்டி பின் இறுக்கையில் சாய்ந்திருக்க நிர்வாகி தன் காரை மரியாதையுடன் ஓட்டிச் செல்வது அவர்களையும் சிரிக்க வைக்கும்.
அரு.சு. ஜீவானந்தனின் ‘புள்ளிகள்’ (Granules) கதை நேர்மையுள்ள ஓர் அடிநிலை சிறுவனையும் அவனுக்குச் சமூகத்தில் சற்றே உயர்ந்திருக்கும் பத்தர் ஒருவர் அவனை சொற்ப காசுக்கு ஏமாற்றுவதை கூறுகிறது. பத்தர் தொழில் எவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் இயங்குகிறது என்றும் சாக்கடை நீரை வடித்து வாழவேண்டிய நிர்பந்தம் அக்காலச் சூழலில் தமிழர்களுக்கு இருந்ததையும் ஓர் ஆங்கில வாசகன் புதுமையாக உணர்வார். இருவேறு சமுக படிநிலைகளில் உள்ளவர்களிடமிருக்கும் முரண்பட்ட குணங்களையும் அவர்களால் அறிய முடிவதோடு இக்கதைக்குள் மையமாக ஒளிந்திருக்கும் மார்க்கசிய தன்மையையும் ஓர் ஆங்கில வாசகனால் பகுத்துணர முடியும்.
‘அட இருளின் பிள்ளைகளே’ (Damn… Children of Darkness) என்ற கதையும் அரு.சு.ஜீவானந்தனால் எழுதப்பட்டதே. தொழிநுட்ப வளர்ச்சியில் உதயமாகும் ஒரு கண்டுபிடிப்பு ஒருவரின் அறியாமையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்குகிறது. விவசாயத்தில் ஈடுபட தெரிந்த துலுக்காணத்திற்குப் புதிய தொழிநுட்பக் கருவியைக் கையாளத் தெரியவில்லை. மேல்நிலையில் தனக்கு மேலே இருக்கும் கம்பத்துத் தலைவன் முன்னே உட்காராமல் கூனிக்குறுகி நிற்கும் அவனது அடிமை மனம் வர்க்க வேறுபாட்டை எந்நாட்டு வாசகனுக்கும் எடுத்துக்காட்டும். மேலை நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி ஒரு தோட்டத்தில் எப்படியான மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை எந்த ஆங்கில வாசகனும் வியந்தே அறிவான். மேலும், மலேசியா போன்ற ஒரு நாட்டில் வாழ்ந்த தமிழர்களின் அக்கால சமூக நிலையையும் தேர்ந்த வாசகன் ஒருவனால் கணிக்க முடியும்.
கோ.புண்ணியவானின், ‘குப்புச்சியும் கோழிகளும்’ (Kuppuchi and the Chickens) என்ற ஆக்கம் ஒரு பெண்ணின் பாதுகாப்பு நிலை பொருளாதாரத்தைச் சார்ந்து நிற்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. தமிழர்கள் சீன முதலாளிகளிடம் வேலை செய்யும் நிலையையும் வேலைக்காகவும் பணத்துக்காகவும் ஒரு தமிழ்ப் பெண் சீன முதலாளியின் ஆசைக்கு இணங்கத் தயாராவதையும் ஓர் ஆங்கில வாசகனால் எளிதில் உணர முடியும். அவர்கள் ஆட்சியில் உருவான தேயிலைத் தோட்டங்களிலும் ரப்பர் காடுகளிலும் உள்ளூர் பெண்களுக்கு அவர்களால் நிகழ்ந்த கொடுமைகள் ஒருமுறை அவர்கள் நினைவுக்கே தட்டுப்படலாம். சுதந்திரம் பெற்றும் தமிழர்கள் இன்னொரு இனத்திற்கு அடிமையாக இருப்பதை அறியவும் நேரலாம்.
‘கரகம்’ (Karakam) கோ.புண்ணியவானின் மற்றுமொரு சிறுகதை. கதையும் பொருளியல் சார்ந்தும் கடவுள் நம்பிக்கையைச் சார்ந்தும் எழுதப்பட்டுள்ளது. காசுக்காக கரகம் ஆடும் சாமிக்கண்ணு பூசாரி முறைதவறி பெற்ற தன் காசு பணத்தை இழக்கிறார். மக்கள் கூட்டத்தில் ஒரு சிலரும் தண்டிக்கப்படுகிறார்கள். தமிழ்க் கலாச்சாரம் அறியாத வாசகர்கள், செய்த தவறால் ஒருவர் கண்பார்வை இழக்க சாமி தண்டனை கொடுத்ததாக எண்ணலாம். மிக நுட்பமாகவே சாராயத்தில் கலக்கப்பட்ட நச்சுப்பொருளை ஆசிரியர் விவரிக்கிறார். மிகைக் கற்பனையில் (Speculative fiction) உருவாக்கப்பட்ட புனைவாகவும் இக்கதையை ஓர் ஆங்கில வாசகர் எண்ணினால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
‘வெண்மணல்’ (white Sand) ஓர் உருவகச் சிறுகதை. பழம்பெருமை பேசிக்கொண்டிருக்கும் ஓர் மூத்த தலைமுறைக்காரரின் இயலாமையை இளைஞன் ஒருவன் சுட்டிக்காட்டுவதை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. சதா இடித்துக்கொண்டிருக்கும் இடிகல்லின் ஒலி மூத்த தலைமுறைக்காரரின் அப்பா வைத்திருந்த குதிரை வண்டியின் ஒலியை அவர் நினைவுக்குள் செலுத்துவதை சை.பீர்முகம்மது படிமமாக்கியுள்ளார். எந்நாட்டு வாசகனாலும் நுட்பமான வாசிப்பு இல்லையென்றால் இந்த படிமத்தையும் அதன் நுட்பத்தையும் அறியவே முடியாது.
சை.பீர்முகம்மதுவின் மற்றுமொரு கதை ‘வாள்’ (Sword). இந்தக் கதை ஒரு காலகட்டதைப் பிரதிபலிக்கும் Periodic story. இக்கதையிலும் வாள் ஒரு கதாபத்திரமாக வந்து செல்கிறது. கதையின் தொடக்கத்தில் வாளை தவறவிடும் வாசகன் ஒருவன் கதையின் இறுதியிலும் அந்நுட்பத்தை அனுமானிக்க முடியாது. சயாம் மரண ரயில் பாதை கட்டுவதற்கு பல்லாயிர கணக்கான தமிழர்கள் ஜப்பானியர்களால் பட்ட அல்லல்களை ஆங்கில வாசகன் ஒருவனால் உள்வாங்க முடியும். இவ்வரலாற்று சம்பவங்கள் குறித்து பல்வேறு ஆங்கில நூல்களில் பதிவாகியுள்ளதை வாசித்திருந்தால் அவ்வாசகர்கள் இக்கதையை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள உதவும்.
…
மனிதர்களைப் போலவே கடவுளர்களும் மேல்நிலையாக்கத்திற்கு உட்படுத்தப்படுதல், சமய நம்பிக்கைகள் இன்னொருவரின் சுயநலத்திற்காகக் கீழ் இறக்கப்படும் நிலை சமூகப் பொருளியல் ஏணியின் ஒவ்வொரு படியிலும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி சுரண்டிக் கொள்ளும் கொடூரம், அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்தில் பின்தங்கிவிடும் கீழ்நிலை மாந்தர்களின் அறியாமை, ஆண் பெண் உடல் இச்சைகள், துட்டுக்கு விலைபோகும் தெய்வ ஆட்டம் போன்றவை ஆங்கில மொழி வாசகர்கள் இக்கதைகளின்வழி பெற்றுக்கொள்வர். அதேவேளையில் மலாயா–மலேசியத் தமிழர்களுடையே நிழவிய மேல் கீழ் வர்க்க பேதங்களையும் சமய நம்பிக்கைகளில் இருந்த பிற்போக்கு தனங்களையும், தலைநிமிரா அடிமைத்தனத்தையும், கீழ்நிலையினரின் அறியாமையையும், முயலாமையும் அந்நிய வாசகர்கள் இனம் காண்பார்கள். இன்னொரு வகையில் சொன்னால் இக்கதைகள் ஒவ்வொன்றும் ஒடுக்குவோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் மத்தியில் நடைபெற்ற போராட்டங்களைக் காட்டியிருப்பதோடு அடித்தட்டு மக்களின் (Subalterns) குரலையும் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவே இன்றைய மூன்றாம் உலக நாடுகளின் இலக்கிய பதிவாகவும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அவ்வகையில் வல்லினம் பதிப்பகம் உலகப் போக்குடன் ஒத்து தரமான முறையில் இக்கதைகளை மொழிபெயர்த்திருப்பது பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
அண்டனூர் சுரா
கட்டுரை வாசித்தேன். மொழிப்பெயர்ப்பு கதைகள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் செல்வது வரவேற்கத்தக்க ஒன்று. சாமிக்குத்தம் என்கிற கதை இந்தியாவின் நடப்புக்கால கலாச்சாரம். கட்டுரையில் மொழிப்பெயர்ப்பு வகைமைக்குறித்து பேசியிருப்பதும் நன்று