கனவு

ஷன் 03“கனவ சொல்லவா சார்?”

“ம்…சொல்லுமா.”

“அம்மாவ பாக்கப்போறேன். அவங்க கால புடிச்சி அழறேன். அம்மா வந்துருமான்னு கெஞ்சிறேன். அப்போ மழ பேஞ்சிக்கிட்டு இருக்கு. காத்து வேகமா அடிக்குது. அம்மாவும் என்னைய கட்டிப்புடிச்சிக்கிட்டு அழறாங்க. அப்ப அந்த ஆளு வருது. அம்மாகிட்டேருந்து என்னைய புடிச்சி இழுக்குது. ஒரு அறையில போயி அடைச்சி வைக்குது. அம்மாவ போயி அடிக்குது. அம்மா அலர்ற சத்தம் கேக்குது. நாம் மயங்கிடுறேன். பாதி நெனவு வந்த மாதிரி தெரியுது. ஏதோ மலையிலிருந்து ஒரு பெரிய பாற உருண்டு வந்து எம்மேல விழுகுது. அடிவயிறு வலிக்குது. தொடையெல்லாம் ரத்தம். எந்திரிச்சி ஓடுறேன். அருணா ஓடு… ஓடிரு இங்க வராதன்னு அம்மாவோட குரல். இப்படிக் கனவு வந்திச்சி சார்”

எதிரே நாற்காலியில் பீதியும் பயமும் கலந்த அவளது பார்வை எதையோ தேடுவதுபோல் அங்கும் இங்குமாக அலைபாய்ந்துகொண்டிருந்தது. இமைப்பட்டைகள் வீங்கி கண்கள் சிவந்திருந்தன. வார்டன் மிஸ்.கோமதி லேசாகக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார்.

கைகளில் இருக்கும் கோப்புகளைப் புரட்டியபடி “பெயர் அருணா. அப்பா பேரு முனியாண்டி. அம்மா பேரு குமாரி. வயசு பதினாறு. நம்ம இன்ஸ்டிடியூட்ல பேக்கரியில சேர்ந்திருக்கா. அப்பா இல்ல. அம்மா ரெண்டாவது ஹஸ்பனோட இருக்கா. இவ பாட்டிக்கிட்ட வளருரா. பாட்டிக்கு குடல்ல கேன்சர். இவ அம்மாவ பார்க்க போயிருக்கா. போலிஸ் ரெய்டு. இவள, இவ அம்மாவ, அவ ஹஸ்பண்ட எல்லாரையும் லாக்கப்புல புடிச்சி வச்சிட்டாங்க. ஸ்டெல்லாங்கறவங்க போயி இவளமட்டு வெளியில கொண்டு வந்து இங்க சேத்திருக்காங்க. உங்க பேர சொல்லிதான் சேத்தாங்களாம்.”

“ஆமா ஸ்டெல்லா சொன்னாங்க. நீங்க போகலாம் மேடம் நான் பேசிக்கிறேன்,” ஸ்டெல்லா என்றவுடன் அருணா நிமிர்ந்து எங்கள் இருவரையும் பார்த்தாள்.

“ஸ்டெல்லா டீச்சர் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க அருணா. அவங்கதான் உனக்கு இதுதான் பாதுகாப்பான இடமுன்னு சொன்னாங்க. இங்க உனக்கு போலிஸ் தொந்தரவெல்லாம் இருக்காது. நீ பாதுகாப்பா இருக்கலாம்மா.” சுருண்ட கேசம் முகத்தில் விழ மேசை விளிம்பை விரல்களால் சுரண்டிக்கொண்டு தரையைப் பார்த்திருந்த அருணா விழி நிமிர்த்தி என்னைப் பார்த்தாள். பார்வையில் நம்பிக்கை கொஞ்சம் கூடி வந்திருந்தது.

“சாப்பிட்டியாம்மா?” என்றேன். சட்டையின் காலரை வாயில் கௌவியவாரே “ம்” என்றாள்.

“ஹாஸ்டல் பிடிச்சிருக்கா அருணா?” பதில் இல்லை. அவளது பார்வை “இது கரிசனையா விசாரணையா?” எனக்கேட்பதுபோல இருந்தது.

“நீ வீட்டுல இருந்தா போலிஸ் வந்து அடிக்கடி விசாரிப்பாங்க. நீ இங்க இருந்தாதான் உனக்கு நல்லதுன்னு ஒன் பாட்டியும் ஸ்டெல்லா டீச்சரும் உன்னை இங்கே இருக்கட்டுமுன்னு கொண்டு வந்து விட்டிருக்காங்க.” இன்னமும்கூட கலங்கிய கண்களின் பார்வையில் நம்பிக்கை தெரியவில்லை.

“இங்க பாரு அருணா, நீ அழுதுகிட்டே இருந்தா உன் உடம்புதான் கெட்டுப்போகும். கவலையெல்லாம் மனசுல போட்டு அமுக்கி அமுக்கி வச்சிக்கிட்டு இருந்தா உனக்கு தூக்கம் வராது. அப்புறம் மனநோய்தான் வரும்.” லேசான தலை அசைவு நான் சொல்வதை உள்வாங்கிக் கொள்வதுபோல இருந்தது. அவளது இடது கையின் கண்ணாடி வளையல்களுக்கிடையே குறுக்காக நிறைய தழும்புகள். பிளேடால் சொந்தமாகக் கீறிக்கொண்டதின் அடையாள மிச்சங்கள் அவை.

“உங்க அம்மாவ போலிசுல பிடிச்சிக்கிட்டு போய்ட்டாங்கன்னு கவலப்படாத. நம்ம பசுபதி சார் ஒரு நல்ல லாயர். அவர வச்சி சீக்கிரமே அவங்கள வெளியே கொண்டு வந்துடலாம்.” முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. சுட்டுவிரலால் ரப்பர் வளையத்தைச் சுற்றுவதும் இறுக்குவதும் பின் தளர்த்துவதுமாகச் செய்துகொண்டிருந்தாள்.

“சார்… பாட்டியப் பார்க்கனும். ப்ளீஸ்… பாட்டி பாவம். என்னைவிட்டு பிரிஞ்சிருக்க மாட்டாங்க. அவங்க இங்க வந்தா என்னை பார்க்க விடுவாங்களா?” அவள் கண்களில் திரண்டிருந்த சோகம் உருண்டு விழுந்தது. வார்த்தைகள் கெஞ்சின.

“அம்மாவ பிடிச்சிக்கிட்டு போயிருக்காங்களே. போலிசுலு அடிப்பாங்களா சார்?”

“ச்செ ச்செ… பொம்பளைங்கள போலிசுல அடிக்க மாட்டாங்க. நல்லா பாத்துக்குவாங்க”

“அப்ப ஆம்பளைங்கள…”

“லேசா தட்டுவாங்க. வேற ஒன்னும் செய்ய மாட்டாங்க.” இதை சொல்லும்போது அந்த லேசான தட்டுதலில் ரொம்ப பேரு செத்துப் போயிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். அவளிடம் சொன்னால் பயப்படக்கூடும்.

“ரொம்ப நாளைக்கு வச்சிருப்பாங்களா சார்?”

“இல்லம்மா…அதெல்லாம் கேச பொறுத்தது. கஞ்சா கேசுதான. நம்ம பசுபதி சார் இந்த மாதிரி எத்தனையோ கேச பாத்திருக்காரு. வெளியில சீக்கிரமே கொண்டு வந்துடுவாரு. நீ கவலைப்படாதம்மா”

“நெசமாவா?” தலையை அசைத்துக்கொண்டாள். என் வார்த்தைகளின் நம்பிக்கை அவளைச் சென்றடையும் முன்னமே உதிர்ந்து விழுந்தன. நான் சொன்னதில் அவளுக்குக் கொஞ்சம் கூட திருப்தி இல்லை எனத்தெரிந்தது. குனிந்துகொண்டாள். உடல் லேசாகக் குலுங்கியது. தலையை உயர்த்தாமலேயே “பாட்டிய பார்க்கனும் சார்” எனத்திரும்ப திரும்பச் சொன்னாள். மடித்துப் பின்னப்பட்டிருந்த இரட்டைச் சடையை பின்னால் தள்ளிவிட்டுக்கொண்டாள்.

“வேற என்ன மாதிரியான கனவு வந்து உன்னைய வந்து தொந்தரவு பண்ணுது?”

ஷன் 02“ஒரு நாளு வந்த கனவ என்னால மறக்கவே முடியாது. நான் அம்மா எனக்குப் பால் கொடுன்னு கேட்டுட்டு அழறேன். அம்மா என் கன்னத்தில அறையுது. உனக்கு பதினாறு வயசுடி. இப்பப் போயி பால் கேட்குறன்னு திட்டுது இல்லம்மா நான் குழந்தைதான்னு அழுகுறேன். எனக்குப் பால் கொடுன்னு அம்மா சட்டைய கிழிச்சிடுறேன். அம்மா அலறுது. அதுக்கு மாரு இல்ல. கையால நெஞ்ச பொத்திக்கிட்டு கத்திக்கிட்டே ஓடுது.”

“கனவு யாருக்கும் ஞாபகம் இருக்குறதில்ல. உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு ஞாபகம் இருக்கு அருணா?”

“தெரியல சார். ”

நாசி சிவந்திருந்தது. அவள் அழுது ஓய்ந்தபின் அமைதியாவாள் என்ற நம்பிக்கையில் எழுந்துகொண்டேன்.

“நான் வரேம்மா… பாட்டிய கூட்டிக்கிட்டு வரேன். தைரியமா இரு, இங்க மலர் அக்கா, ஜஸ்டினா அக்கா எல்லாரும் உன்னை நல்லா பாத்துக்குவாங்க.” மனசுக்கு என்னவோபோல் இருந்தது. பனிக்கட்டிகளின் மேல் கால்கள் ஊன்றி நின்றாலும் அதன் கீழாக நீர் உருகி ஓடுவதுபோலவும் எந்த நேரமும் விழலாம் போலவும் தோன்றியது.

கதவைத் திறந்தேன். உள்ளே காற்று நுழைந்தது. அறையின் அடர்த்தி இளகி என்னுடன் வெளியேறுவதுபோல இருந்தது. சுருண்ட கேசங்களைத் தள்ளிவிட்டுக்கொண்டே நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக்கொண்டாள்.

***

மின்தூக்கியின் பக்கத்தில் இருந்த இருட்டுச்சந்தின் வாசலில் சவரம் அறியாத தாடையும் கலைந்த கேசமுமாக ஒருவர் படுத்திருந்தார். என் காலணி சத்தம் கேட்டு அவர் புரண்டு படுக்கையில் கட்டியிருந்த கைலி விலகிவிட்டது. கையில் சாமி கயிறு. முன்பு அது சிவப்பு வண்ணத்தில் இருந்திருக்க வேண்டும். பக்கத்தில் கிடந்த காலி புட்டி மிச்சமிருந்த போதையுடன் உருண்டு சுவரில் மோதி நின்றது. இரண்டு மலாய் சிறுமிகள் ஏதோ சொல்லிச் சிரித்தவாறு அவரைக் கடந்து செல்கையில் என்னிடம் ‘லிப்ட் ரோசாக்’  என்றனர். மூச்சிரைக்க ஏழாவது மாடியை ஏறி அடைந்தபோது இதயத்துடிப்பு காதில் கேட்டது.

பன்னிரெண்டு இலக்கமிட்ட கதவை அடைந்தபோது மூச்சிரைத்தது. முனீஸ்வரன் ஐயா அரிவாள் ஓங்கிய கையோடு மீசையும் முளியுமாக கதவில் நின்றிருந்தார். கதவு லேசாகத் திறந்திருந்தது. பக்கத்து வீட்டுப் பையன் எட்டிப் பார்த்துவிட்டு வெளியே வந்தான். கையில் இருக்கும் பந்தை உருட்டிக்கொண்டே “பாட்டி உள்ளதான் இருக்கு போங்க” என்று அனுமதியளித்தான். காலணியைக் கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன்.

“ஆறது?” என்றவாறே தரையில் படுத்திருந்த அந்த மூதாட்டி எழுந்து அமர்ந்துகொண்டாள். கண்களை இடுக்கிக்கொண்டே என்னைப் பார்த்தவள் அடுத்த கணம் “ஐயா… ஐயா… டாக்டர் ஐயாவா? வாங்க வாங்க…” என்று பதற்றத்துடன் எழுந்தாள். “என்னைத் தெரியுமா” என்றேன்.

“ஏனுங்க தெரியாது?”

“நல்லதா போச்சி. நேரா விசயத்துக்கு வந்துடுறேன். அருணா வந்ததிலிருந்து அழுதுக்கிட்டே இருக்கா. தூக்கத்துலயும் ஏந்திரிச்சி அழறா.” சொல்லி முடிக்கும் முன்பாகவே பாட்டி பேச ஆரம்பித்தாள்.

“ஏங்கய்யா அழமாட்டா? பச்ச மண்ணு சாமி.” என தோளில் கிடந்த துண்டை முகத்தில் போட்டுக்கொண்டு குலுங்கினாள். “இந்த வயசுல எந்த கண்றாவியெல்லாம் பார்க்கக்கூடாதோ எதை போயி பாத்துருவாளோன்னு பயந்தேனோ போக வேண்டாமடி கண்ணுன்னு கெஞ்சினேனோ… எம்பேச்ச கேட்காம அங்க போயி…” குரல் உடைந்து அழுதாள்.

நான் காத்திருந்தேன். அழுகை அடங்கியது. “இப்படி இருங்கய்யா” என நாற்காலியைக் காட்டிவிட்டு எழுந்துசென்றாள். அந்த வீட்டில் கால் வளைந்த ஒரே ஒரே ஒரு பிளாஸ்டிக் நாற்காலி மட்டுமே இருந்தது. அதில் அமரலாமா என யோசித்துக்கொண்டிருக்கும்போதே முகத்தைக் கழுவி விட்டு எதிரே வந்து அமர்ந்தாள்.

“பேராவுல தோட்டத்த வித்தவனுங்க ஈரக்குலைய புடிங்கி எறிஞ்ச மாதிரி எங்கள ஒரு சல்லிக்காசு கூட கொடுக்காம தூக்கித் தெருவுல எறிஞ்சாங்க. நண்டானுஞ் சுண்டானுமா நானும் அவரும் மூனு பொட்டப்புள்ளைங்களோட இங்க வந்து சேர்ந்தோமுங்க. அதெல்லாம் பெரிய கதைங்க. சொல்லனுமுன்னா காலம் போதாதுங்கய்யா.” காயங்கள் தழும்பேறிய குரலில் அவள் சொல்லிச் செல்கையில் தலையில் சாமான்களும் இடுப்பில் குழந்தையும் சுமந்தவாறு  அவளும் அவளது புருஷனும் அந்தத் தோட்டத்துச் செம்மண்ணில் புழுதிக்காற்றில் செம்பனை மரங்களிடையே நடந்து வருவது தெரிந்தது.

“வந்த கொஞ்ச நாள்லயே மூத்தவ ஜன்னிகண்டு காச்சல்ல போயிட்டா. அவருக்கு ஆஸ்துமா நோயி. கோல்ப் திடல்ல புல்லு வெட்டும்போது திடீருனு அவரும் போய்ட்டாரு. ஜொகூர்ல எங்க சொந்தக்காரரு ரெண்டாம் மகள நான் வளக்குறேனு கொண்டு போயிட்டாரு. அவருக்குப் புள்ள இல்ல. கடைசிதான் இவ. இங்க ஸ்கூல்ல படாதபாடுபட்டு படிக்க வச்சேங்க. லோரி கிளினரா ஓடிக்கிட்டிருந்த ஒரு பொடியனோட போயிட்டு ஒரு வருஷம் கழிச்சி வந்தா. கையில ஒரு புள்ளையோட. எங்க போன ஏன் போனேனெல்லாம் நான் கேக்கலங்க. கேட்டுத்தான் என்ன ஆகப்போவுதுங்க.”

“அந்தக் குழந்தைதான்…”

“ஆமாங்கய்யா. ஒரு மாச புள்ளையிலேருந்து நாந்தான் அவள இந்த உள்ளங்கைக்குள்ள வச்சி பொத்திப் பொத்தி வளர்த்தேன்.” என்று இரு கைகளையும் விரித்துக்காட்டினாள்.

“இதையாவது வளர்த்து நல்லபடியா ஆளாக்கிடலாமுன்னு ராப்பகலா கோல்ப் கிளப்புல கோப்பிக்கடையிலன்னு வேலை பார்த்து வளர்த்து வறேங்கய்யா. இவ அம்மாள வீணா போன ஒருத்தன் சேத்துக்கிட்டு கொடுமையினா கொடுமைப்படுத்திக்கிட்டு இருக்கான். இங்க வராதேன்னு கண்டிஷனா சொல்லிட்டேன். புள்ள மனச கெடுத்துடுவா. ஆனாலும் வந்து வந்து அழுதுட்டு போவா. நாந்தான் கெட்டுக் குட்டிச்சுவரா போயிட்டேன். அருணாவையாவது நல்லா படிக்கவச்சி வளத்துருமான்னு அழுவா.”

காற்பந்தை மார்போடு அணைத்துக்கொண்டிருந்த பக்கத்துவீட்டுச் சிறுவன் வீட்டுக்குள் நுழைந்தான். “பாட்டி, ஸ்டெல்லா டீச்சர் இன்னைக்கு டியூசன் இல்லன்னு சொல்லிட்டாங்க.” என்று சொல்லிவிட்டு கையில் இருக்கும் பந்தை உருட்டிக்கொண்டே வெளியில் ஓடினான். அந்தக் காற்பந்தை உதைத்து விளையாட பரந்து விரிந்த திடல் ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவன் விரல்களோடு விளையாடிக்கொண்டிருந்தது அந்தப் பந்து.

“ஸ்டெல்லா டீச்சர் ஒரு புண்ணியவதிங்க. இங்க புள்ளைங்களுக்குக் காசு வாங்காம டியூசன் சொல்லிக் கொடுப்பாங்க. உங்களப்பத்தி அவங்கதான் சொன்னாங்க. உங்க படத்த ஃபோனுல காட்டுனாங்க. அவங்ககூட அவகிட்ட எவ்ளோ சொன்னாங்க. அவன் கஞ்சா கேசுல ஜெயில்ல இருந்தப்ப அவன விட்டுட்டு வந்துருன்னாங்க. போலிசுக்குக் காசு கொடுத்துட்டு கேசு இல்லாம செஞ்சி அந்தப் பாவி பய வந்துட்டான். அவன விட்டுட்டு வந்தா அவள கொன்னுருவான்னு பயப்படுறாங்க அவ. ஆம்பள இல்லாத வீடு. என்ன பண்ண சொல்றீங்க”

“போலிசுல சொல்லலாமுல்ல” என்றேன்.

“ஏங்க… நாங்க சொன்னா போலிசு கேக்குமாங்க. அதுவும் போலிசுக்குப் போறோம்னுஷன் 01 அவனுக்குத் தெரிஞ்சா எங்க கதி என்னாவறது? ஒரு நா அம்மாவ பார்க்க போவனும்மு அடம்பிடிச்சா அருணா. வேணாம்மா அது ரொம்ப மோசமாக இடமுன்னு சொல்லிப் பார்த்தேன். ஒருநாள் ஸ்கூல்ல இருந்து அவளே புறப்பட்டு போயிட்டா. இதுக்கு முந்தியே அவ அம்மாவப் பார்க்க போயிருப்பாளோன்னு எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு. சௌக்கிட்டுல ஒரு சந்துக்குள்ள…எப்படித்தான் புள்ள கண்டுபுடிச்சி போனான்னு தெரியல. அன்னிக்கு ராவுல போலிசு கஞ்சா கேசுல எம்மவள அருணாவ அந்தப்பாவிய புடிச்சிக்கிட்டு போயிடுச்சி. யாரு போலிசுக்குத் தகவல் கொடுத்தாங்கன்னு தெரியலங்க. நானும் ஸ்டெல்லா டீச்சரும்தான் அலறி அடிச்சிக்கிப்போயி ஸ்டேஷனிலிருந்து கூட்டி வந்தோம். ஸ்கூல்ல படிக்கிற பச்சப் பொம்பளப்புள்ளய லாக்கப்புல வச்சிருக்கக்கூடாதுன்னு நம்ம பசுபதி ஐயா இன்ஸ்பெக்டர்கிட்ட பேசி எப்படியோ கொண்டு வந்துட்டோம்.”

நரைமுடிகளை காதோரம் ஒதுக்கித் தள்ளிவிட்டுக்கொண்டாள். கைகளை விரித்துக்காட்டியவாரே “புள்ளைக்கு என்ன நடந்துச்சி ஏது நடந்துச்சின்னு சொல்லக்கூட தெரியல. அழுது அழுது காய்ச்சலே வந்துடுச்சி. அப்புறம்தான் டீச்சர் சொல்லி உங்க ஸ்கூல்ல சேர்த்தோமுங்க. அவளப் பார்க்காம எனக்கு அன்ன ஆகாரம் தொண்டக்குளியில இறங்குதில்லைங்க. அவ போன நேரமா பார்த்தா போலிசு வந்து புடிச்சிக்கிட்டு போவனும். எவனோ சொல்லிதாங்க இது நடந்திருக்கு. எல்லாம் விதிங்க. என் தலவிதிங்க.” தலையில் அறைந்துகொண்டாள்.

“பாட்டி கவலைப்படாதீங்க. அருணா ஹாஸ்டல்ல நல்ல பாதுகாப்பா இருக்கா. நல்லா படிச்சி முன்னுக்கு வந்துருவா.”

“அவள நல்லபடியா காப்பாத்திக்கொடுங்கய்யா. உங்களுக்குக் கோடி புண்ணியம். ” என்றவாறு என் கைகளைப் பிடித்து கைகளில் ஒத்திக்கொண்டாள்.

பாட்டியின் கைகளில் இருந்து என்னை உருவிக்கொண்டாலும் மனசிலிருந்து உருவிக்கொள்ள முடியவில்லை. அந்தக் கைப்பிடியின் சூட்டோடு படியிறங்கி வந்தேன். போதையில் கிடந்த தாடிக்காரர் இப்போது உட்கார்ந்திருந்தார். எதிரே நாய் ஒன்று அவரைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது. அதன் உடலில் மயிர் இழந்து சிவந்த செதில் செதிலாக தோல் உதிர்ந்திருந்தது. வாஞ்சையோடு அதனைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தார். அவர்களுக்குள் ஏதோ ஒரு உரையாடல் நடந்துகொண்டிருந்தது. அந்த அந்நியோனியத்தைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. இப்பொழுது அந்தத் தாடிக்காரர் வேறொருவராகத் தெரிந்தார்.

***

அருணாவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. முந்தின நாள் பாட்டியைப் பார்த்ததில் ரொம்பவும் மாறிப் போயிருந்தாள்.

“அருணா எப்படி இருக்க?” என்றேன்.

“ம்” என்று சொன்னவள், “நல்லா இருக்கேன்” என்றவாறு தலையை இருமருங்கும் அசைத்தாள். நெற்றியில் திருநீற்றுக் கீற்றுடன் சின்னப்பொட்டு நிறைவாக இருந்தது.

“இப்ப சந்தோஷமா இருக்கியா?”

“ம்” மறுபடியும் அதே தலை அசைவு. இதழ்கள் விரித்துச் சிரித்த அதே கணம் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் கொட்டியது.

“அழுதுக்கிட்டே சந்தோஷமா இருக்கேன்னு சொன்ன முத பொண்ணு நீதாம்மா” சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டே சிரித்தாள்.

“உங்க அம்மாவ பார்க்க போக வேணாமுன்னு பாட்டி சொல்லியும் ஏம்மா போன… பாரு பெரியவங்க சொன்னத கேட்காம போயி போலிசுல மாட்டிக்கிட்டீல”

“ஒரு நா கனவுல அம்மா பொணப் பெட்டியில உக்காந்துருக்காங்க. யார் யாரோ ஆம்பளைங்க அந்தப் பொணப் பெட்டியிலேருந்து வெளியே குதிச்சி ஓடுறாங்க. நா பக்கத்துல நின்னுக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்கேன். ரெண்டு போலிஸ்காரங்க அம்மா எயிட்சுல செத்துடாங்கன்னு சொல்லுறாங்க. நான் தலமுடிய விரிச்சி போட்டு உக்காந்துருக்கிற அம்மாவ பார்த்து அம்மா இன்னும் சாகலன்னு சொல்றேன். அம்மா ஒன்னுமே பேசாம சிரிச்சிக்கிட்டு இருக்கு. பயந்துபோயி தூக்கத்துல இருந்து ஏந்திரிச்சி அன்னிக்கு ராவு பூரா அழுதுகிட்டே இருந்தேன். பாட்டிக்கிட்ட சொன்னேன். ஸ்டெல்லா டீச்சர்கிட்ட சொன்னேன். யாருமே கண்டுக்கல. என்னால போகாம இருக்க முடியல…” பெருமூச்சு விட்டாள்.

“எப்படியும் அம்மாவ வீட்டுக்குக் கூட்டியாந்துருனுமுன்னுதான் போனேன்.”

“நீ சின்னப்புள்ளம்மா. அது ரொம்ப மோசமான இடம். அங்கயெல்லாம் நீ போயிருக்கக்கூடாது.”

“போவலன்னா அவங்கள எப்படிக் காப்பாத்துறது? ”
இப்போது அழுகையெல்லாம் இல்லை. முகத்தில் ஓர் அமைதி வந்து சேர்ந்திருந்தது. தீர்க்கமாக இருந்தது பேச்சு. “நீ எப்படிக் காப்பாத்துவ அவங்கள. இப்ப பாரு போலிசுல மாட்டிக்கிட்டாங்க”

“அதுதான் சார் காப்பாத்தறதுங்கறது. வேற எப்படி சார் காப்பாத்த முடியும்?”அமைதியாக இருந்தாள். என் பார்வையைத் தவிர்த்தவாறு கீழே குனிந்துகொண்டாள்.

“அவங்க உள்ளயே இருக்கட்டும் சார்.” அதுக்கு மேல் அவளால் பேச முடியவில்லை. பளிச்சென்ற வெளிச்சம் அறைக்குள் வந்து சென்றதுபோல இருந்தது. யாருடைய காரின் ஹெட்லைட் வெளிச்சமோ எங்கள் அறையின் சன்னலை நோக்கிய திரும்புதலில் உள் நுழைந்து முகத்தில் அடித்துவிட்டு மறைந்தது.

“நேத்து ஒரு கனவு சார். ஆத்துல தண்ணி வெள்ளமா அடிச்சிக்கிட்டேபோவுது. நானும் அம்மாவும் முங்கி முங்கி குளிச்சிக்கிட்டு இருக்கோம். பாட்டி கரையில நின்னுகிட்டு இருக்கு…” இவளின் கனவுகள் நீண்டுகொண்டே போகின்றன. இவள் கனவுகளாகப் புரிந்துகொண்டதையும் அதுவரை எனக்குப் புரியாமல் போயிருந்ததையும் நினைத்துக்கொண்டே வீடு திரும்பினேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...