காவிக் கொடியும் கவிதை வரிகளும்

mநான் முதன் முதலாக கோலாலம்பூருக்குப் பயணம் செய்தது ஒரு வரலாறு போல் இன்றைக்கும் நினைவுகூறத்தக்கதாக உள்ளது. என் முதல் கோலாலம்பூர் பயணமானது ஏதோ ஒருவகையில் மலேசிய அரசியல் போக்குடனும் சமூக சிந்தனை மாற்றத்துடனும் தொடர்புடையதாக இருப்பது எதிர்பாராதது.

நானும் என் அண்ணனும் அடிப்படையில் திராவிடச் சிந்தனை தாக்கத்தால் வளர்ந்தவர்கள். எங்கள் அப்பா தீவிர பெரியார் பற்றாளராகவும் நாத்திகம் பேசுபவராகவும் இருந்தார். பிராமண எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு போன்ற பல விடயங்கள் எங்களுக்கு அவரிடமிருந்து அத்துப்படியாகி இருந்தன. மலேசியாவில் பெரியார் பற்றாளர் என்போர் மிகச் சிறுபான்மையோர். எனினும் மொழியின் அடிப்படையில் அவர்கள் பெரும்பான்மை இந்தியர்களைக் கவரும் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முரணாக, என் அம்மா தீவிர பிள்ளையார் பக்தையாக இருந்தார். வீட்டில் என் அம்மா உருவாக்கி வைத்திருந்த சிறிய பூஜைமாடத்தில் பிள்ளையார் படமே பிரதானமாக இருந்தது. அந்த பூஜை மாடம் என் அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. மாலை ஆறு மணி ஆனதும் பூஜை மாடத்தில் எங்கள் தாயுடன் சேர்ந்து நாங்களும் இறைதுதி பாடல்களைப் பாடி பக்தியில் கலந்துவிடுவது வாடிக்கை. பெரும்பான்மை திராவிட ஆதரவு ஆண்களைப் போன்றே, என் அம்மாவின் பக்தி நடவடிக்கைகளில் அப்பா தலையிடுவதில்லை.

இந்த கலவையான பின்புலத்தில் நாங்கள்  பகுத்தறிவு பாசறையைப் பின்னணியாகவும் தேவார திருவாசகங்களில் கருத்து செலுத்துவதுமாக வினோத தலைமுறையாக வளர்ந்தோம்.  எங்களுக்கு அது எந்த வகையிலும் குழப்பமாகவோ சுமையாகவோ இருந்தது இல்லை.

துடிப்பான கருத்து பரிமாற்றங்களும் சமூக பார்வையும் புதியனவற்றை நோக்கி எங்களைச் செலுத்திக் கொண்டே இருந்தது. இச்சூழலில்தான் கோலாலம்பூரில் நடைபெறவிருந்த இந்து இளைஞர் எழுச்சி முகாம் பற்றி கேள்விப்பட்டோம். இந்து சேவை நிலையம் என்கிற அமைப்பு அந்த முகாமை நடத்தியது.  அந்த முகாமில் ஏற்கனவே கலந்து கொண்ட குணா, பத்தா என்கிற இரண்டு நண்பர்களின் உத்வேகம் எங்களையும் ஈர்த்தது. உடனே அதில் கலந்து கொள்ள நானும் என் அண்ணனும் நண்பர்கள் சிலருடன் ரயிலில் பயணம் செய்ய முடிவுசெய்தோம்.

அன்று வடக்கில் இருந்து கோலாலம்பூருக்குப் பயணம் செய்வது, இன்று போல் சுலபமானது அல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன் சவால்கள் மிக்க பயணமாக அது இருந்தது. அன்றைய நிலையில் போக்குவரத்து வசதிகள் குறைவாகவே இருந்ததால் மக்கள்  பெரும்பாலும் ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்வர். சொந்தக் காரில் பயணம் செய்வோர் மிகக் குறைவு. ஆறு அல்லது ஏழு மணி நேரம் குலுங்கி குலுங்கி ஆங்காங்கே நின்று நிதானமாக பயணம் செல்லும் ரயிலில் படுக்கை வசதி இருந்தது. மூன்றாம் தர பயணச்சீட்டுக்கு இருக்கை எண் இருக்காது. முந்தியவர் துண்டு போட்டு இடம் பிடித்துக் கொள்ளும் நிலைதான். பிந்தியவர் தரையில் அமர்ந்தேனும் பயணத்தைத் தொடர்வார். இருக்கைகளும் மர பெஞ்சுகள்தான். கண்ணாடி சன்னல்களைக் கீழே இறக்கிவிட்டு காற்றுவாங்கியபடி பயணம் செய்யலாம். கழிப்பறை பக்கத்தில் இருக்கும் இரும்பு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சிகரெட் பிடிக்கலாம். ரயிலின் தட தட சத்தம் பயணத்துக்குப் பின்னும் காதுகளில் நீங்காமல் கேட்டுக் கொண்டிருக்கும். அப்படியும், “கே.எல்-லுக்குச் சென்று வந்தேன்” என்று நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவு அது முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும்.

இந்து சேவை சங்கம், இளைஞர் எழுச்சி முகாம்களை நடத்த துவங்கிய காலம் மலேசியாவில் மதம் சார்ந்த தீவிர சிந்தனைகள் தலைதூக்கத் தொடங்கிய காலம் என்று சொல்லலாம். மலேசியாவில் மத அடிப்படைவாதம்  மேலோங்கி வளரத் தொடங்கியதும் அதே காலகட்டத்தில்தான். இஸ்லாமிய வங்கி முறை, இஸ்லாமிய தலைமைத்துவ மாண்புகள், இஸ்லாமிய நன்னெறி கூறுகள், இஸ்லாமிய பள்ளிகள், இஸ்லாமிய அரசாங்க/ தனியார் பள்ளிகள் என்று ஒருபுறமும் வீடு வீடாக சென்று மதம் பரப்பும்  கிருஸ்துவ பெந்த கோஸ் அமைப்புகள் மறுபுறமுமாக மத மேலெடுப்புகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணிவது அதிகரித்தது. பள்ளிகளில்  முக்காடு கட்டாயமாக்கப்பட்டது. ஹலால் விதிகள் கடுமையாக்கப்பட்டன. இஸ்லாமியர் இஸ்லாமியரல்லாதோர் இடைவெளி அதிகரித்தது. ஒருவகையில் அந்த இடைவெளியே அரசியல்வாதிகளுக்கு ஓட்டுவங்கி திரட்ட சாதகமாக அமைந்தது. இஸ்லாமுக்கு ஆதரவான குரலுக்கே பெரும்பான்மை மலாய்காரர் ஓட்டு கிடைக்கும் என்னும் நிலையை எல்லா மலாய் அரசியல் கட்சிகளும் சாதகமாக பயன்படுத்த முனைந்தன. ஆகவே அனைத்துலக ரீதியில் மலேசிய அரசு தன்னை இஸ்லாமிய காவலனாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமானது.

மறுபுறத்தில், இதற்கு சற்றும் குறையாமல் மலேசிய இந்துக்களும் தங்கள் சமய நிலைபாடுகளில் தீவிரம் காட்டினர். 60ஆம் ஆண்டுகளில் தமிழர்களிடையே உயர்ந்து நின்ற மொழி உணர்வு முன்னெடுப்புகள் மெல்ல குறைந்து சமய முன்னெடுப்புகள் புதிய அலையாக தோன்றிய காலம் என்று 80ஆம் ஆண்டுகளைக் குறிப்பிடலாம். இந்த அலையின் நீட்சியாகவே 2007 ஹிண்ராஃப் அமைப்பு தோற்றம் கண்டதை குறிப்பிடவேண்டும்.

இக்காலகட்டத்தில் இந்து மதம் குறித்த புதிய பிரக்ஞைகளும், கருத்தாடல்களும், மத தூய்மைவாத பேச்சுகளும் சைவ சமய அடைப்படைவாதமும், இஸ்கோன் அமைப்பினரின் பரப்புரைகளும், நிலை பெறத்துவங்கின.

இந்து மத நடவடிக்கைகள் மிகவும் சுதந்திரமாகவே முன்னெடுக்கப்பட்டன. கோயில் நிர்மாணிப்பு முதல் சமய விழாக்கள் வரை தடைகள் இன்றி நிகழ்ந்து கொண்டிருந்தன. தோட்டப்புறங்களில் கோயில் திருவிழா என்பது உச்சபட்ச கொண்டாட்டம் என்பதை இன்றைக்கும் பலர் நினைவுகூறுவதைக் காணமுடியும். நகர்களிலும் போக்குவரத்தை நிறுத்தி தேரோட்டங்களும் ரத ஊர்வலங்களும் பெரும் ஆரவாரத்தோடு நடைபெறுவது வழக்கம்.  ஆயினும் பிற மதங்களைப் போல் மதக் கல்வியைப் போதிக்கும் அமைப்புகள் இல்லை என்கிற குறைபாடு இருந்தது. இன்று போலவே அன்றும், சமயக் கல்வியின் வழி சமூகத்தை நல்வழிப்படுத்தி விடலாம் என்று தலைவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

பக்தியின் வெளிப்பாடாக, வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்ட கோயில்கள், பிரமாண்ட தெய்வச்சிலை நிர்மாணிப்புகள் என்று மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டன. உலங்கூர்தியில் பறந்து பூச்சொரியும் குடமுழுக்கு விழாக்கள் ஆங்காங்கே தலைவர்கள் முன்னிலையில் நடந்தன. ஆகம வகுப்புகளும், யாகங்களும் நடத்தும் ஆன்மீக மடங்களும் புதிது புதிதாய் தோன்றின. சமய சடங்குகளையும் சோதிட பரிகாரங்களையும் மூலப்பொருளாக்கி விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்களும் தோன்றி வெற்றிகரமாக செயல்பட்டன.

இக்கால கட்டத்தில் பல சமயம் சார்ந்த புதிய அமைப்புகள் தோன்றின.  உதாரணத்துக்கு, 1982-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஶ்ரீமுருகன் கல்வி நிலையமும் அதே ஆண்டு உருவான இந்து தர்ம மாமன்றத்தையும் குறிப்பிடலாம். ஶ்ரீமுருகன் நிலையம் இந்து சமயத்தை அடிப்படையாக வைத்தே தன் கல்விச் சேவையை முன்னெடுத்தது. இந்து மத தத்துவங்களின் அடிப்படையிலேயே அது தன் கொள்கைகளை வகுத்துக் கொண்டது. மலேசிய இந்துக்கள் கல்வியிலும் சமய நம்பிக்கையிலும் ஒரு சேர உயர்வதன் வழி சிறந்த குடிமக்களாக இருப்பர் என்பது டாக்டர் தம்பிராஜாவின் நம்பிக்கை. ஆகவே கல்வி தேர்ச்சியோடு தொடர்பே இல்லாத யாகம், யாத்திரை, விரதம் போன்ற வழக்கங்களைக் கல்வியின் பெயரால் மாணவர்களிடம் இன்றும் வழியுறுத்திக் கொண்டிருக்கிறது. புதிய வரவான ‘பக்தி சக்தி’ கல்வி மையமும் அதையே செய்து கொண்டு இருக்கிறது.

இந்து சங்கம் போன்ற பழமையான சமய அமைப்புகள் உயர்குடி இந்துக்களால் நிர்வகிக்கப்பட்டு உயர்குடி இந்துக்களுக்காக மட்டுமே திட்டங்களை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தன.  கோயில்கள் வியாபார மையங்களாக செயல்படுவதில் முனைப்புக் காட்டி சொத்து சேர்த்தன. இந்து இளைஞர் இயக்கம் போன்ற பிற இயக்கங்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகளின் ஆணைகளுக்குக் காத்திருந்தன.  ஒரு சிலர் மட்டும் முனைப்போடு தேவார வகுப்புகளை நடத்தி தங்கள் சமூக பங்கை நிறைவு செய்து கொண்டிருந்தனர்.

அன்றைய நிலையில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்களை விட கிருஸ்துவ அமைப்புகளே அச்சுறுத்தல் தருவதாக இருந்தன. இந்துகளை இஸ்லாமியர்களாக மாற்றுவதை விட கிருஸ்துவராக மாற்றுவது எளிதாக இருந்தது. இஸ்லாமியர் ஆன பின்பு ஏற்படும் தீவிர பண்பாட்டு மாற்றம் கிருஸ்துவத்தில் இல்லாததால் கிருஸ்துவை ஏற்பது இலகுவாக நடந்துக்கொண்டிருந்தது. திருமணங்களாலும் வறுமையின் காரணமாகவும் பலர் கிருஸ்துவராக மாறினர். கிருஸ்துவ மதம் பரப்புவோர் தங்கள் இலக்கை சரியாக தேர்வு செய்து இயங்கினர்.  அதேசமயம் அரசாங்க வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, பதவி உயர்வு போன்ற  வெகுமதிகளைப் பெற சில படித்த இந்துக்கள் இஸ்லாமியர்களாக மாறிக்கொண்டனர். இதுபோன்ற புறச்சூழல்களில் இருந்து இந்துக்களைப் பாதுகாக்க பொருத்தமான அமைப்புகள் இல்லை என்கிற குற்றச்சாட்டு பலரிடமும் இருந்தது.

1972-ஆம் ஆண்டில் கெர்லிங்கில் நடந்த கோயில் உடைப்பும் உயிர்சேதமும் மலேசிய இந்துக்களிடையே பரவலாக பதற்றத்தை ஏற்படுத்தியது. கமாரூடின் ஹாஜி அகமது காஜாங் என்னும் மத போதகரின் பரப்புரைகளைப் பின்பற்றிய இளைய இஸ்லாமியர் குழு ஒன்று நாட்டில் உள்ள இந்து கோயில்களையும் சிலைகளையும் தகர்க்க முடிவெடுத்தது. அதன்படி அவர்கள் கூட்டரசு பிரதேசத்திலும் சிலாங்கூரிலும் தொடர்ந்து கோயில் உடைப்பில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலை நேரத்திலும் நள்ளிரவு நேரத்திலும் ஆயுதங்களுடன் கோயில்களைச் சிதைத்துவிட்டு தலைமறைவாகிவிடும் சம்பவங்கள் தொடர்ந்தன. இதன் தொடர்ச்சியாக சிலாங்கூர் கெர்லீங்கில் உள்ள மாரியம்மன் கோயிலை உடைக்க முற்பட்டபோது அக்கோயிலைக் காவல் காக்க அமைக்கப்பட்ட குழுவினரின் தாக்குதலால் நான்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் மாண்டனர்.  இந்தக் கொலை வழக்கு நீதிமன்றம் சென்று நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், நாட்டில் தலையெடுத்திருந்த இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனை குறித்த கவனம் பெருகியது. மலேசியாவில் இந்து சமயத்தையும் கோயில்களையும் பாதுகாக்க  தீவிரமாக செயல்படும் அமைப்பு ஒன்று தேவை என்ற சிந்தனையில் இளைஞர்கள் குழு மலேசிய இந்து சங்கத்தின் வழி சமய உத்வேகம் பெற்று முன்வந்தனர். பின்னர் அவர்கள் தனியாக இந்து சேவை சங்கத்தை அமைத்து இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினர். இந்து சேவை நிலையம் இளைஞர்களுக்குச் சமய கல்வியை முன்னிறுத்தாமல் சமய பாதுகாப்பு உணர்வை முன்வைத்து இயங்கத் தொடங்கியது. ஆனால் அதன் பின்புலம் மிக விரிவாக ஆராயத்தக்கதாக இருந்தது.

பொதுவாக மலேசியாவில் இறைமறுப்பாளர்களும் இந்து மத வெறுப்பாளர்களும் கூட விவேகானந்தரை ஏற்றுக்கொள்வர்.  இந்து மதத்தை நவீன முகத்தோடு இளைஞர்களிடம் அறிமுகப்படுத்த விரும்பும் எல்லாருமே விவேகானந்தரை முன்னிறுத்துவது அதனால்தான். இந்து சேவை நிலையமும் விவேகானந்தரையே முன்னிறுத்தியது.  நாங்கள்  இந்து சேவை சங்கத்தை அறியும் முன்னரே விவேகானந்தரை ஓரளவு அறிந்திருந்தோம். ஆனால் நான் அவரை தமிழர் என்றே நீண்ட நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன்.

கோலாலம்பூரில் நாங்கள்  கம்போங் பாண்டானில் இருந்த பலகை வீட்டுக் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். முதன்முதலாக கோலாலம்பூர் சென்ற எனக்கு கம்போங் பாண்டான் புறம்போக்கு குடியிருப்பு குழம்பமான சித்தரிப்பைக் கொடுத்தது. நாட்டின் தலைநகரில் அப்படியானதொரு குடியிருப்புப் பகுதி இருப்பதை நான் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். இந்து சேவை நிலையம் அங்குதான் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த எளிமையான வீடு ஒன்றே அவ்வமைப்பின் தலைமையகமாக இருந்தது. அதன்பின் பலமுறை அங்கு சென்று தங்குவது வாடிக்கையானது.

அந்தப் பழைய வீட்டில் எனக்காக ஒரு அதிசயம் காத்திருந்தது இப்போதும் வியப்பூட்டுகிறது.Ramaji-282x300 நான் அப்போது சி.மோகனின் இலக்கியக் கட்டுரை ஒன்றை படித்து தீவிர இலக்கிய அறிமுகம் பெற்றிருந்தேன். தி.ஜா, நீல.பத்மநாபன், க.நா.சு, சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்களின் பெயர்களை அறிந்திருந்தேன். ஆனால் வாசிக்க அதிகம் படைப்புகள் கிடைக்கவில்லை. நீல.பத்மநாபன், வண்ணநிலவன், அசோகமித்திரன் ஆகியோரின் சில நூல்கள் மட்டுமே கிடைத்திருந்தன. மற்ற படைப்புகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்த காலம் அது. அப்படியொருநாள் அந்தப் பழைய வீட்டிலிருந்த  சிறிய நூலகத்தை அலசியபோது ‘விஜயபாரதம்’ என்கிற இதழ்கள் கிடைத்தன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைப் பரப்பு இதழ்களான அவற்றில் நான் எதிர்பார்க்காத இலக்கியம் இருந்தது ஆச்சரியம். பசுவைய்யா, சி.சு செல்லப்பா, மொழிமாற்றுப் படைப்புகள் போன்ற பலரின் நவீன கவிதைகளும் சிறுகதைகளும் அதில் இருந்தன. இந்தத் திடீர் கண்டெடுப்பில் வந்த வேலையை மறந்து என் கவனம் முழுவதும் இலக்கியத்திலேயே குவிந்திருந்தது.  நான் அத்தனை இதழ்களையும் பொக்கிஷம்போல் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். ஆயினும் மற்றெல்லாவற்றையும் விட இலக்கிய வெளியே எனக்கு நாட்டமான இயங்கு வெளி  என்பதை மிக தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன்.

நாங்கள் இந்து சேவை சங்கத்தில் மிகவும் உற்சாகமாக வரவேற்கப்பட்டோம். இந்து சேவை முகாம் நடத்துனர்கள் எல்லாருமே பிரம்மச்சாரிகளாக இருந்தனர். திடகாத்திரமான படித்த இளைஞர்கள் குழுவோடு நாங்களும் கலந்து கொண்டோம். அந்த அமைப்பில் நிர்வாகக் குழு என்று ஒன்றில்லை. ஆனால், ராமாஜிதான் அதன் பொறுப்பாளராக இருந்தார்.   சிவாஜி, பாலாஜி போன்ற பெயர்களை அறிந்திருந்த நான், சேவை சங்க அறிமுகத்தால்தான் எல்லா பெயர்களுக்குப் பின்னும் ஜி ஒட்டு வைத்து அழைக்க முடியும் என்று அறிந்தேன். ராமாஜி, மகேஸ்ஜி, விசுஜி, கருஜி என்று ஒருவருக்கு ஒருவர் அழைத்துக் கொள்வது வேடிக்கையாக இருக்கும். பிறகுதான் அது ஹிந்தி பண்பாட்டு வழியில் ஒருவரை மரியாதையாக அழைக்கும் முறை என்று தெரிந்தது.  நான் தொடர்ந்து அங்கு இருந்திருந்தால் நானும் பாண்டியன்ஜி என்றோ பாண்டிஜி என்றோ ஆகியிருப்பேன்.

இந்து சேவை நிலையம் இந்தியாவில் இயங்கிய கரம்சேவாக்களின் நீட்சி என்பதை அறிந்தோம். ஆர் எஸ் எஸ்,  VHP போன்ற மதவாத அமைப்புகளின் தொடர்பில் இந்து சேவை சங்கம் இருந்தது. ஆகவே அவர்களின் அரசியல் பார்வைகளும் முன்வைக்கும் நியாயங்களும் விவாதத்துக்குரியனவாக இருந்தன. இந்தியாவில் பெருவாரி இந்துக்களுக்குச் சார்பாக சங்கபரிவார்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இந்து சேவை சங்கத்தார் இங்கிருந்து ஆதரவு தந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நாத்துராம் கோட்சேவை ஒரு நாயகனாகவே சித்தரித்தார்கள். அகண்ட பாரதம், ஒரே இந்தியா போன்ற கோஷங்களால் கவரப்பட்டிருந்தார்கள். இந்தியாவின் பொதுமொழியாக சமஸ்கிருதம் இருப்பது சிறப்பு என்பது அவர்கள் கருத்து. தமிழ் நாட்டின் திராவிட அரசியலை முன்பு அறிந்திருந்த எனக்கு இவை முற்றிலும் புதிய விடையங்களாக இருந்தன. தீவிர விவாதங்களும் நடந்தன.

இந்தியாவில் இருந்து தன் நிர்வாகிகளைத் தாய் அமைப்புகள் அவ்வப்போது ஆசிய நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. அவர்களில் ரவிக்குமார்(ஜி) என்பவர் பழக்கத்துக்கு மிகவும் இனிமையானவராக இருந்தார். அப்போது, அயோத்தி ராமர் கோயில் எல்லாரது பேச்சுப் பொருளாக இருந்தது. உணர்ச்சி மேலிட அதன் வரலாற்றை விளக்குவர். அக்கலவரத்தில் உயிர் நீத்த இரண்டு சகோதரர்களை மாவீரர்களாக கொண்டாடினார்கள். மலேசியாவில் இருந்தும் சில கரம் சேவகர்கள் ராமர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட சென்றனர்.

அந்த முகாம்களில் விவேகானந்தரோடு மேலும் பல புதியவர்களைப் படங்களின் வழியாக அறிந்து கொண்டேன்.  அனைவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடையவர்கள். குறிப்பாக தொப்பியும் ம.பொ.சி மீசையும் வைத்த  Dr.K.B.ஹெட்கவர், நீண்ட முடியுடன் இருக்கும் M.S. கல்வல்கர்(குருஜி), சவர்கார் , திலகர் போன்ற புதிய முகங்கள் அவை. அதோடு பாரத மாதா உருவக படமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் வழக்கமாக நான் அறிந்த ‘ஓம்’ என்கிற பிரணவம் வடமொழி வரிவடிவில் ૐ அறிமுகப்படுத்தப்பட்டது. அது வடமொழி இல்லையென்றும் பிரணவத்துக்கான பொது வடிவம் என்றும் பின்னொரு விளக்கம் தரப்பட்டது. வீடுகளுக்குச் சென்று கூட்டு வழிபாடுகள் சமய பிரச்சாரங்கள் செய்யவும் பயிற்றுவிக்கப்பட்டோம். மதமாற்ற பதற்றம் உள்ள சிற்றூர்களுக்குச் சென்று சமயப் பிரச்சாரங்களும் சமூக சேவைகளும் செய்வது வழக்கமாயிற்று. சேவை நிலையத்தின் அடிப்படை அம்சம் சமய தொண்டர்களாக இருப்பது மட்டுமே என்பதால்  தலைமைத்துவப் போராட்டங்கள் எழவில்லை.

பின்னர் நாங்களே சொந்தமாக இந்து இளைஞர் முகாம்களை சில நகரங்களிலும் எங்கள் ஊரிலும் தொடர்ந்து நடத்தினோம். பல அமைப்புகள் ஆதரவு தந்தன. கலாச்சார உடையுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் அளவுக்கு முன்னேறியிருந்தோம். நாங்கள் சன்யாசிகளாகிவிடுவோமோ என்கிற அச்சம் எங்கள் அம்மாவிடம் இருந்ததாக பிறகு அறிந்தோம். எங்களைப் போன்றே நாட்டின் பல இடங்களிலும் இளைஞர் குழுக்கள் செயல்பட்டன. இன்றும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாட்டில் அவ்வப்போது எழும் கோயில் உடைப்பு பிரச்சனைகளுக்கு எதிராக  அவர்களின் குரல் ஒளித்துக் கொண்டிருப்பதை  ஊடகங்கள் வழி அறியமுடிகிறது.

சில வருட அனுபவத்திலேயே இந்து சேவை சங்கதின் கொள்கைகளோடும் நோக்கங்களோடும் என்னால் பொருந்திப் போக முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அதில் தொடர்வது சாத்தியம் அற்றது என்பது தெரிந்தது. ஆயினும் அதன் பொறுப்பாளர்களிடம்  இருந்த மரியாதை காரணமாக நேராக சொல்லமுடியவில்லை. கல்லூரி வாய்ப்பு வந்ததும் அதை காரணமாக்கி முற்றாக விலகிக்கொண்டேன்.

சமய நடவடிக்கைகளில் இருந்து முற்றாக நீங்கிவிட்டாலும், சேவை சங்கத்தின் கொள்கைகளோடு முரண்பட்டு நின்றாலும், அன்று கொண்டுவந்த ‘விஜயபாரதம்’ இதழ்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன. வாழ்க்கையின் எல்லா திசைகளிலும் பறந்தாலும் எனது தரையிறக்கம் இலக்கியத்தில் மையம் கொண்டிருப்பதை இப்போது உணர்கிறேன். கூண்டிலிருந்து பறந்த பறவை மீண்டும் தன் கூண்டுக்குத் திரும்புவது போன்றது அது.  வாசிப்புக்கு தேவையான நூல்கள் இப்போது சுலபமாக கிடைத்தாலும், நீண்டகாலம் பேராவலோடு தேடிய இலக்கியம் எதிர்பாரா இடத்தில் கிடைத்த மகிழ்ச்சியைத் தக்கவைக்க, பழுப்பேறிய அந்த இதழ்களைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.

ன்.

1 comment for “காவிக் கொடியும் கவிதை வரிகளும்

  1. Rajarajan
    January 11, 2018 at 9:12 am

    அருமை. என்ன ஒரு பசுமையான நினைவுகள். மறக்க முடியாத காலங்கள். ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையின் போக்குக்கு அடிதளமிட்ட சம்பவங்கள். எல்லாம் நினைவில் நிற்கும் செல்வங கள். அந்த கம்போங் பாண்டான் சேவை சங்க நடவடிக்கைகளில் இருந்து முறன் பட நேரடி காரணமாக அமைந்த விடையம் சங்க நடவடிக்கைகளில் குறிப்பாக உடற்பயிற்சி மற்றும் அணிவகுப்பு பயிற்சிகள் தமிழ் கட்டளைகளில் இருந்து திடுமென இந்தி மற்றும் சமசுகிரத மொழிச் சொற்களை கொண்ட கட்டளைகளாக பெயர்களாக உருமாற்றம் பெற்றதை நாம் அதாவது நானும் நீங்களும் கடுமையாக எதிர்த்தார் கேள்வி எழுப்பினோம். எனக்கு இன்னும் நினைவு உள்ளது இந்த எதிர்ப்பு உணர்வு ஒரு நாள் சங்க கொடி வணக்க நிகழ்சிக்குப் பின் விசு ஜி யோடு அரை வட்டமாக கொடிக்கு முன்னால் அமர்ந்து தொடங்கிய ஒரு உரையாடல் ராமாஜிக்கும் நமக்கும் நேரடி வாக்குவாதமாக மாறியது. அதில் தமிழ் மொழியை முன்னிருத்தியதில் அவருக்கு வருத்தம் நமக்கு தமிழ் பிறங்கடை ஆனதில் வருத்தம். இதுவே பின்னாளில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து விட்டோம் நேரம் இல்லை என்று காரணம் காட்டி ஒதுங்கிக் கொள்ள காரணமாக இருந்த்து. எல்லாம் நினைவுகள் பசுமையான நினைவுகள். இன்னும் தன்னலமற்ற தன்னையே தேய்த்த சேவையாளர்கள் என்ற பட்டியலில் இராமாஜிக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *