வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு: விஷ்ணுபுரம் விருது அனுபவம்

IMG_2080அப்போது ஜெயமோகன் அறிவித்தார். இவ்வாண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை சீ.முத்துசாமிக்கு கொடுக்கவுள்ளோம். எனக்கு அது அதிர்ச்சியையும் கூடவே மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்தக் கூட்டத்தில் நான் எதிர்ப்பார்த்த சலசலப்பு இருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே சிலர் அவர்களுக்குள் முகபாவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். என் கண்கள் சீ.முத்துசாமியைத் தேடின. தூரத்தில் அவர் அமர்ந்திருந்தார். யாருக்கோ என்னவோ நடப்பது போல அங்கும் இங்கும் ஒரு பார்வை பார்த்தார். கூலிம் பிரம்மானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இரண்டு நாட்களுக்கான இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்ற சமயத்தில்தான் இது நடந்தது.

அதன் பிறகு வல்லினம் நண்பர்கள், விஷ்ணுபுரம் விருது குறித்தும் சீ.முத்துசாமிக்குக் கிடைப்பதற்கான காரணங்கள் குறித்தும் பேசினோம். நிச்சயம் நிகழ்ச்சிக்குக் குழுவாக சென்றுவிட வேண்டும் என்றும் கூட திட்டமிட்டோம். இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலையால் எங்கள் குழுவில் இருந்து ம.நவீனுடன் நானும் விஜயலெட்சுமியும் புறப்படும்படி ஆனது. ஏற்பாடுகள் செய்தோம்.

இங்குள்ள ஊடகங்களுக்கு இலக்கியம் என்றால் வைரமுத்துதான் என நமக்கு தெரிந்ததுதான் என்பதால் ம.நவீன் சீ.முத்துசாமிக்குக் கிடைக்கும் விருது குறித்து பத்திரிகைகளுக்குச் செய்தி தயாரித்து கொடுக்கச் சொன்னார். அதன் மூலம் வானொலியிலும் சீ.மு-வை பேட்டி கண்டனர். மற்றபடி இங்கு அவர் குறித்தும் அவருக்கான விஷ்ணுபுரம் விருது குறித்தும் முகநூலில் கூட வாழ்த்துச்செய்தியைப் பார்த்ததாக நினைவில் இல்லை.

இதற்கு முன்பாகவே விஷ்ணுபுரம் விருது குறித்தும் அந்த நிகழ்ச்சி குறித்தும் முந்தைய பதிவுகளைப் படித்து இருந்ததால் இம்முறை அங்கு சென்று நேரடியாக காணவிருப்பது உள்ளுக்குள் பூரிப்பையும் பயத்தையும் கொடுத்தது.

இப்போது கூட நிகழ்ச்சி முடிந்த நாளில் இருந்து இன்றுவரை பலரும் தங்களின் அனுபவத்தை எழுதிக்கொண்டிருப்பதைப் படிக்கின்றபோது, வைரத்தை ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் ஒவ்வொருவரும் பார்த்துப் பேசியிருப்பது போன்றே தோன்றுகிறது. அந்த வைரம் ஆளுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது.

இரண்டு நாள் விழாவாக அமைத்திருந்தார்கள். முதல் நாள் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், மறுநாள் விருது வழங்கும் நிகழ்ச்சியும் உரையும் இடம் பெற்றன.

இளைய படைப்பாளிகளுடனான கேள்வி பதில் அங்கம் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.111 கே.ஜே.அஷோக், சுரேஷ் பிரதீப், தூயன் போன்றோரின் பதில்கள் மிகவும் இயல்பாக அமைந்திருந்தன.  சமயங்களில் முன்னேற்பாடுகள் அற்ற பதில்களே நமது வாசிப்பின் பார்வையின் ஆழத்தை நமக்குக் காட்டுகிறது.  அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அமர்ந்த இடத்திலேயே நான் என்ன பதில் கொடுத்திருப்பேன் என மனதிற்குள் பேசிக்கொண்டேன். அவ்விடத்தில் அமர்ந்துகொண்டு மேடையிலிருந்து கீழே அமர்ந்திருப்பவர்களைப் பார்க்க வேண்டும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன்.

எண்ணத்தின் ஆற்றலா? அல்லது அடுத்த கட்டத்திற்கான முன்னேற்பாடுகளா? என தெரியவில்லை. ம.நவீன், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, டாக்டர் சண்முகசிவா இவர்களை மலேசிய இலக்கியம் சார்ந்த கேள்வி பதிலுக்காக மேடைக்கு அழைத்தார்கள். அதற்கான நெறியாளராக நண்பர் சீனு இருந்தார். கூடவே என்னையும் விஜயலெட்சுமியையும் அழைத்துவிட்டார். நாங்கள் மற்றவர் பேசுவதைக் குறிப்பாக ம.நவீன் பேசுவதைக் கேட்பதற்காகவே ஆவலாக இருந்தோம். ஏனெனின் இலக்கியம் என்ற தலைப்பில் தூங்கும் போது எழுப்பிக் கேட்டாலும் நவீன் நமக்கு புரியும்படி பேசுவார், மறுநாள் எழுப்பிக் கேட்டால் இன்னொரு கோணத்தில் அவரிடம் இருந்து பதில் இருக்கும் அதுவும் நமக்கு புரியும்படி இருக்கும்.

மேடையில், மலேசிய இலக்கியம் குறித்து ம.நவீன் குறுக்குவெட்டாக விளக்கினார். அதிலிந்து வந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். சமீபத்தில் கருத்து சுதந்திரம் குறித்து  விஜயலெட்சுமி எழுதிய கட்டுரை குறித்து சொல்லிய ஜெயமோகன் அது குறித்த கேள்வியைக் கேட்டார், விஜயலெட்சுமி அதற்கான பதிலை வரிசை தவறாமல் ஒன்றன் பின் ஒன்றாக கூறினார். நானும் என் பங்கிற்குப் பேசினேன். மேடையை விட்டு இறங்கும் வரை என் இதயம் துடிக்கும் சத்தத்தை நானே கேட்டுக்கொண்டிருந்தேன். மேடையில் அமர்வதற்கு ஆசை இருப்பதைவிட அதற்கான உழைப்பும் தேவை என புரிந்தது.

IMG_0384பிறகு மேடையில் இருந்த படைப்பாளிகளில் போகன் சங்கரைக் குறிப்பிட்டு சொல்லவேண்டும். அவரின் எழுத்துகளை இதுவரையில் படித்ததில்லை. ஆனால் கேள்வி பட்டதுண்டு. அவருடனான கேள்வி பதில் அங்கம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. கேள்வியை எதிர்கொள்ளும்  விதமும் பதில் கொடுக்கும் முறையும் அவர் பக்கம் கவனத்தை ஈர்க்கச் செய்தது. தனக்காக எழுத்துகளை மூதாதையர்களிடமிருந்து பெறுகிறேன் என சொன்னதும் எனக்கு அவர் நெருக்கமாகிவிட்டார். ஏனெனில் என்னிடமும் அந்த நம்பிக்கை உண்டு.

அடுத்ததாக எனக்கு பிடித்த அபிலாஷின் கேள்வி பதில் அங்கம். அபிலாஷின் கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். கட்டுரையில் அவர் சொல்லவரும் விடயமும் சொல்லும் விதமும் என்னைக் கவர்ந்தன. முதன் முறையாக அரங்கில் அவரைப் பார்க்கிறேன். எப்படியாவது அவரைச் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்று மனம் பரபரத்தது. அரங்கில் இப்போது அவருடனான கேள்வி பதில் அங்கம். அவர் முதலில் பேசினார். அவரிடம் பலரும் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்கள். ஏதாவது கேள்வி கேட்டு என் முகத்தையும் காட்டிவிட மனதிற்குள் அவரின் கட்டுரைகளை ஒவ்வொன்றாக ஓடவிட்டேன். ஆனால் அவரது கட்டுரைகள் தவிர புனைவுகளைப் படிக்காதது மனதில் ஒரு குறையாகவே பட்டது. கூடவே அவர் பதில் அளித்த தொனியும் அவரிடம் கேள்வி கேட்பதைத் தடுத்தது. எழுதியப்பின் அதற்கான பொறுப்பினை எழுத்தாளன் சுமந்துத்திரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதாக அது இருந்தது. இதனையொட்டி செந்தில் என்பவர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். உண்மையில் அச்சமயம் அபிலாஷைவிடவும், கேள்வி கேட்ட கே.என்.செந்தில் என்னை யோசிக்க வைத்தார். எழுத்து என்பது எழுதிவிட்டு கைகளைத் தட்டிவிட்டுப் போக வேண்டியது அல்ல, எழுதியதற்கும் எழுத வேண்டியதற்கும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் எழுதுகின்றவர்களுக்கு இருக்கவே செய்கிறது. படைப்புகளைப் புத்தகமாக்க துல்லியமாக செயல்பட முடிந்த நம்மால் நாம் எழுதியதற்கான எதிர்வினைக்கு பதில் சொல்லும் பொறுப்பு நமக்கில்லை என ஒதுங்கிக்கொள்வது ஏற்புடையது அல்லதான்.

விஷ்ணுபுரம் விருதுவிழா அன்று, சி.முத்துசாமி, ஜெயமோகன், ம.நவீன் என  அனைவரும் உரைகளை சிறப்பாகவே வழங்கினர்.  எனினும் வைரத்தை என் பார்வையில் இருந்து எனக்கான செய்திகளில் இருந்து இதனை பகிர முனைந்துள்ளேன். இன்னும் பல சுவாரஸ்யங்களின் ஊடே தமிழக பயணம் அமைந்தது. ஆனாலும் ஒரு படைப்பாளியாக தன்னை நினைப்பவன், உழைக்கவும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ளும் விதமாகவே எனக்கு அமைந்தது.

1 comment for “வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு: விஷ்ணுபுரம் விருது அனுபவம்

  1. January 9, 2018 at 8:50 pm

    அன்புள்ள தயாஜி…

    கோவையில் ஞாயிற்றுக் காலையில் நாம் பேசிய சில கருத்துக்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று விழைகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *