சரவாக். என்னை எனக்கு அறிமுகப்படுத்திய மாநிலம். இதை நான் மாநிலம் என குறிப்பிடுவதை விட இனம், மொழி, மதம், சீதோசன சூழல் என மாறுப்பட்ட இந்த நிலத்தை நாடு என்று சொல்வதுதான் சரியாகப் பொருந்தும்.
படிக்கும் காலங்களில் பாடப்புத்தகத்தில் சரவாக் பற்றி படித்ததோடு சரி. பின்னர் அதைப்பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. பல்கலைக்கழகத்தில் என்னோடு வேதியல் வகுப்பில் படித்த இருவர் மூலமாகச் சரவாக்கிய மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற அறிமுகம் ஓரளவு கிடைத்தது. ஆனால் சொற்களால் கிடைத்த அவ்வனுபவத்தைவிட மகத்தான இயற்கையும் அதை அஸ்திவாரமாகக் கொண்ட வாழ்க்கை சூழலையும் அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. என்னதான் தோட்ட வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் வேறு யாரோ வசதியாக வாழ்வதற்காகத்தான் நாம் அடிமை படுத்தப்படுகிறோம் என்ற எண்ணம் என்னுள் சிறுவயதிலிருந்தே உறைந்திருந்தது ரப்பர் காடுகளை ரசிக்க முடியாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம்.
சரவாக்கில் நான் வேலை நிமித்தமாகச் சென்றது முதல், தனது தாத்தாவின் தாத்தா முதல் வாழ்ந்த கம்பம் இதுதான் என பெருமையோடு மார்த்தட்டி சொல்லும் பழக்கம் இங்கே குட்டி குசுமா வரையில் இருப்பதைக் காண்கிறேன். அதோடு தன் ஊரில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் தனி வரலாறு உண்டு என்றும்; அதை மறக்காமல் தன் சந்ததிக்கும் பிறருக்கும் சொல்வதில் இவர்கள் தவறுவதில்லை. தங்கள் வாழ்வை அந்நிலத்தின் தடயமாக்குவதில் இவர்கள் இன்றும் மும்முரம் காட்டி வருகிறார்கள். அதற்கு மாநில அரசு மிகவும் சாதகமாக உள்ளது. அதோடு இயற்கை தானாகவே இங்கு அபரிமித அழகை அள்ளி தந்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் எதாவது ஒரு கதை. அந்தக் கதையின் வழி ‘என் நாட்டை; என் ஊரை; என் ஊரில் இருக்கும் பிராணிகளை; என் நிலபரப்பை; மரங்களை கற்களை என் வீட்டை ஏளனமாக எண்ணாதீர்கள். மீறினால் இயற்கையே உங்களுக்குத் தண்டனை கொடுக்கும்’ என சொல்லாமல் சொல்வது போலவே இக்கதைகள் இருக்கும். மொத்தத்தில் என் இன பாரம்பரியத்தின் மீது கை வைக்காதீர்கள் என்ற எச்சரிக்கை கொஞ்சம் கடுமையாகவே இவர்கள் சொல்லும் கதைகளில் புலப்படுகிறது. இயற்கையை ஒட்டி சொல்லப்படும் இக்கதைகள், நம் மனத்தில் ஆழமாக அவர்களின் நம்பிக்கையைப் பதிய வைத்துவிடுகிறது. அவ்வாறான சில கதைகளையே தொகுக்க முயன்றேன்.
‘பாத்து குடீக்’ கதை (Cerita Batu Kudik)
கதை நடந்த சிற்றூர்: செமாலாதோங், சிமுஞ்சான்
சிமுஞ்சான் வட்டாரத்தில் செமாலாதோங் என்னும் ஒரு கம்பம் அருகில் உள்ள ஒரு நீண்ட வீடு, பல நூறு ஆண்டுகளுக்கும் முன் கல்லான கதைதான் இது. பிடாயு மொழியில் ‘குடீக்’ என்றால் மழை என்று அர்த்தம். கல் மழை பெய்து வீடு முழுவதும் கல்லானதால் இந்த வீட்டை ‘பாத்து குடீக்’ என்றழைக்கின்றனர் இங்குள்ள மக்கள். இந்தக் கல்லின் மேற்பரப்பில் இன்றளவும் மனித முக சாயல்களை காணலாம். இதையொட்டி இங்குப் பிரபலமான ஒரு கதை உண்டு.
மூதாட்டி ஒருவர் தனது பேரனோடு ஒரு நீண்ட வீட்டருகில் பசி தாளமுடியாமல் கையேந்தி நின்றார். அந்த நேரத்தில்தான் அந்த நீண்ட வீட்டில் குடியிருந்தவர்கள் ஏதோ ஒரு பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆக, அந்தச் சுற்று வட்டாரமே மிகுந்த மகிழ்ச்சியோடு ஆட்டமும் பாட்டமுமாக கலைக்கட்டி இருந்தது.
பசியால் துவண்டிருந்த அந்த மூதாட்டியின் கோரிக்கையை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக, அங்குள்ளவர்கள் அந்த மூதாட்டியையும் அவர் பேரனையும் பரிகசித்து அங்கிருந்து துரத்தி விட்டனர். இதனால் கவலையும் கோபமும் கொண்ட அந்த மூதாட்டியின் பேரன் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி ஒரு நாய்க்கு போட்டு அதை தங்களை விரட்டி விட்டவர்களின் இடம் நோக்கி ஏவி விட்டான்.
அந்நேரமோ அந்த நீண்ட வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் மது போதையில் திளைத்திருந்தனர். அந்நிலையிலும் அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த நாயை பார்த்து இன்னும் வேகமாகச் சிரித்துக்கொண்டிருந்தனர். திடீரென்று அந்த வீட்டின் மேல் மின்னல் மின்னி மிக பெரிய இரைச்சலோடு இடி விழுந்தது. அவ்வளவுதான். அந்த வீடும் அதில் இருந்தவர்களும் ஒட்டு மொத்தமாகக் கல்லாகிவிட்டனராம்.
இந்தக் கல் இன்னமும் சிமுஞ்சான் பகுதியில் பல சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து கொண்டிருக்கும் ஒரு அம்சமாக திகழ்கிறது. அதன் மேற்பரப்பில் மனிதர்கள் உடல் போன்ற தோற்றங்களை இப்போதும் காணலாம். ஆனாலும் இந்நிகழ்வு சரித்திரப்பூர்வமானதா என்பதற்கு ஆதாரம் கிடையாது. ஆயினும் இக்கதை இங்குள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் காலங்காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.
லெகேண்டா பூஜாங் செனாங் (Legenda Bujang Senang)
கதை நடந்த சிற்றூர்: பாத்தாங் லுபார், ஶ்ரீ ஆமான்
சரவாக் முழுவது பெரிய ஆறுகளைப் பாத்தாங் என்றழைப்பார்கள். அதிலும் ஶ்ரீ ஆமான் மாவட்டத்தில் ஆறுகளும் முக்கியமாக பாத்தாங் லுபாரும் அதில் வசிக்கும் முதலைகளும் பிரசித்தி. இங்கே ஆறுகளும் முதலைகளும் இங்கு வாழ்வோரின் வாழ்வாதாரங்கள். ஆற்றுக்குள் மனிதன் இருந்தால் அவன் முதலைக்கு உணவாவான். முதலை தரை மேலேறினால் அது மனிதனுக்கு உணவாகலாம். இந்த மனிதனுக்கும் முதலைக்குமான வாழ்வியல் போராட்டம் பலகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி, சரவாக் மக்கள் முதலை பிடிப்பதில் தனிதிறனும் லாவகமும் பெற்றிருப்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
இங்குள்ள நாட்டுப்புற கதைகளில் முதலைகளின் சாரம் மிகவும் அதிகம். அதிலும் முதுகில் வெள்ளை கறுப்பு கோடுகள் கொண்ட குறிப்பிட்ட முதலை வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவற்றில் ஒரு முதலையின் அட்டகாசம் 1940-ஆம் ஆண்டு தொடங்கி 1992-ஆம் ஆண்டு முடிவுற்றது. அதுதான் ‘பூஜாங் செனாங்’ என அழைக்கப்படும் மிகப் பெரிய முதலை. இது பிடிபடாத வரை இங்கு முதலைகளின் மனித வேட்டை ஆக்ரோஷமாக இருந்தது. ஆற்றுக்கு குளிக்கவோ அல்லது மீன் பிடிக்கவோ செல்லும் 10 பேரில் யாராவது ஒருவர் காணாமல் போகும் சம்பவம் அச்சுறுத்தலாக இருந்தது. எனவே எல்லாருமே ஆற்றருகில் கவனமாகவே இருப்பார்கள். இது உண்மை கதை. பெரும்பாலும் சரவாக்கில் கூறப்படும் கதைகளுக்கு ஏற்ப எதாவது ஒரு மிஞ்சிய தடயத்தை அங்குப் பார்க்கலாம். அல்லது தடயத்திலிருந்து தான் புனைவுகள் உருவானதா என்பதில் இன்னும் எனக்குக் குழப்பம் உண்டு.
ஆனால் இது புனைவு கிடையாது. பூஜாங் செனாங் பிடிப்பட்டு கொல்லப்பட்ட பின் எத்தேச்சையாக அதன் தலைப்பாகம் காப்பாற்றப்பட்டு ஜோங் க்ரோக்கடைல், சீபுரான் என்னும் இடத்தில் பதனிடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருக்கிறது.
1992-ஆம் ஆண்டு பிடிப்பட்ட இந்த முதலையின் வம்சாவளி இன்னும் மனிதர்களை கொல்வதாகவும் ஆனால் உடலை மட்டுமே சிதைத்து போடுவதாகவும் மக்கள் கூறுவதில் இருந்துதான் இம்முதலையை ஒட்டிய கதைகள் தொடங்குகின்றன.
இந்த பூஜாங் செனாங் என்னும் முதலையின் கண்கள் சிவந்த பெரிய முட்டை கண்களாம். அக்கண்களை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் பார்க்க முடியுமாம். அவ்வளவு பயங்கரமான பெரிய கண்களாம். அதன் உடல் அமைப்பு ஒரு விரைவு பேருந்து அளவுக்கு பூதாகரமாக இருக்குமாம். முதலில் இது ஒரு முதலையே இல்லையாம். அது ஸ்க்காரங் ஆறு அருகில் வசித்த சீமாலுங்குன் என்ற ஒரு ஈபான் வம்சாவளியிலிருந்து வந்த வீரனாம். இவன் எதிரிகளின் தலையை சீவுவதில் நூதன திறன் பெற்றவனாம். பலர் இவனது வாள் வீச்சில் உயிரோடு தலையை இழந்ததாகக் கூறப்படுகிறது. சீமாலுங்குன் புகழ் அவன் வசித்த இடம் மட்டுமின்றி பாத்தாங் லுபார் வரையிலும் கூட பரவி இருந்தது. எதிரிகள் சீமாலுங்குனுக்கு ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பினர். அந்தச் சக்தியைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு நாள் சீமாலுங்குனின் மனைவியைக் கடத்தி விட்டனர். தன் திறமையின் மேலுள்ள நம்பிக்கையிலும் தன் மனைவிமேல் கொண்ட காதலாலும் எப்படியும் மனைவியைக் காப்பற்றி விடலாம் என விரைந்து பாத்தாங் லுபாருக்கு சென்றான் சீமாலுங்குன். அவன் வந்து சேர்ந்ததுதான் தாமதம். அவன் கண்முன்னே அவன் மனைவி குத்தி கொல்லப்பட்டாள். சீமாலுங்குன் தண்ணீரில் இருந்தால் அவனைச் சுலபமாகக் கொன்றுவிடலாம் என்று தெரிந்து கொண்ட எதிரிகள் அவனோடு சண்டையிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீரருகில் தள்ளி சென்று குரூரமாகக் கொன்றுவிட்டனர். இவனது உயிரற்ற உடல் அப்படியே நீரில் மூழ்கும்படி விடப்பட்டன.
சீமாலுங்குனுக்குச் சக்தி அளித்த தேவதை அங்கு தோன்றி அவர்கள் இருவரையும் மீண்டும் உயிர்பெற செய்ய எண்ணியது. ஆனால் மனிதர்களாக இல்லாமல் முதுகில் கறுப்பு வெள்ளை கோடுடைய மிக பெரிய முதலை ஜோடிகளாக உருமாற்றம் கொடுத்து உயிர் பெற்றெழ வைத்தது. தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பழித்தீர்த்துகொள்ளதான் தங்களைப்போன்ற முதலைகளைக் கொல்லும் மனிதர்களைக் கொல்வதாக கூறப்படுகிறது. இவ்வகை முதலைகள் செனாங் ஆற்றருகில் அதிகம் காணப்பட்டதால் இதற்கு பூஜாங் செனாங் என பெயர் ஏற்பட்டது.
இன்றளவும் இந்தப் பழித்தீர்க்கும் படலம் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. பூஜாங் செனாங், பூஜாங் சமராஹான், பூஜாங் தீசாக், பூஜாங் செப்லாக் என ஒரே வகை முதலைகள் பிடிபட்டவாறுதான் உள்ளன. ஆயினும், ஶ்ரீ ஆமான் மக்கள் சீமாலுங்குன் இன்னும் முதலை ரூபத்தில் இருப்பதாகவும் அவன் ஈபான் குல தலைவரோடு மாய உடன்படிக்கை செய்துகொண்டதாகவும் நம்புகின்றனர்.
லெகேண்டா புத்ரி சந்த்துபோங் (Legenda Puteri Santubong)
கதை நடந்த சிற்றூர்: சந்த்துபோங்
சரவாக் என்றாலே நம் நாட்டில் பலருக்கு ஆறு, கடல், முதலைகள் தவிர்த்து நினைவில் தோன்றுவது உயரமான மலைகளும் அவற்றில் வசிப்பதாக நம்பப்படும் அமானுஷ்ய சக்திகளும்தான். சரவாக் என்பது தீபகற்ப மலேசியாவுக்கு சமமான நிலப்பரப்பு உடையது. அதில் பல புகழ்பெற்ற மலைகள் உள்ளன. ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு கதையைத் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. அதில் மிகவும் பிரசித்தி பெற்றது குனோங் சந்த்துபோங்.
நான் சரவாக் வராதவரை சந்த்துபோங் பற்றி சரித்திர பாடப்புத்தகத்தில் மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் 2009-ஆம் ஆண்டு சரவாக்கில் முதல் முதலாய் காலடி வைத்ததிலிருந்து இன்றளவும் விட்டு போகாமல் ஒட்டி கொண்டிருக்கும் என் காதல் மலை சந்த்துபோங். ஆசிரியர் தொழில் தவிர்த்து நான் புறப்பாட நடவடிக்கை பயற்றுனராகப் பணியாற்றும் இடம் இந்த சந்த்துபோங் மலையடிவாரம்தான். கடந்த 7 ஆண்டுகளாக இங்கு வந்துபோய் கொண்டிருக்கும் எனக்கு, சந்த்துபோங் வந்தாலே நிஜத்துக்கும் நிழலுக்கும் மத்தியில் திணறும் ஒரு நிலை வந்துவிடும்.
இங்கே இன்னுமும் உயிரோடு இருக்கும் கதைகள் தேவலோக இளவரசி சந்த்துபோங் சம்பந்தப்பட்டவை. இவர் தனக்குப் பிடித்தவர்களைத் தன்னோடு எடுத்து சென்று விடுவார் என்றும் நம்பப்படுகிறது. சந்த்துபோங் இளவரசிக்கு செஜிஞ்ஜாங் என்ற உறவுமுறை அக்கா இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விரு தேவலோக இளவரசிகளின் இதிகாசம் இங்குள்ள அனைவருக்கும் தெரியும். புதிதாக யாரேனும் இங்கு வந்தால் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அல்லது அவர்கள் இங்குள்ள சக்திகளுக்குத் தகுந்த மரியாதை செலுத்த வேண்டி இக்கதை தவறாமல் சொல்லப்படுகின்றன.
புத்ரி சந்த்துபோங், புத்ரி செஜிஞ்ஜாங் ஆகிய இவ்விரு தேவலோக இளவரசிகள் அழகில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது. இதனால் இருவருக்கும் இடையில் கொஞ்சம் பொறாமை இருந்தது. மூத்தவர் செஜிஞ்ஜாங்; இளையவர் சந்த்துபோங். அக்காலத்தில் இரு கம்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை சரிசெய்ய இவர்களின் தந்தை இவ்விரு இளவரசிகளையும் பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார். பூலோகத்துக்கு அனுப்பும்முன் ஒரு விஷயத்தையும் சொல்லிதான் அனுப்பினார். அதாவது, பூலோகத்தில் இருக்கும்போது இந்த இளவரசிகள் மத்தியில் ஏதேனும் சண்டையோ தகராறோ அல்லது மனக்கசப்போ ஏற்பட்டால் இருவருக்குமே விமோசனம் இல்லாத சாபம் ஏற்படும் என்பதுதான் அந்த விஷயம். அதற்கு சம்மதித்தே இவ்விரு சகோதரிகளும் பூமிக்கு வந்திறங்கினர். அச்சமயம் பிரகாசமான ஒளி இரு கம்பங்களுக்கும் ஊடுருவுவதை அவ்வூர் மக்கள் அதிசயமாகப் பார்த்தனர். ஒளியினூடே இவ்வழகிய கன்னிகளின் அழகில் மொத்த கம்பமே ஸ்தம்பித்து நின்றதாம்.
புத்ரி சந்த்துபோங் கம்போங் பீரூ என்னுமிடத்தில் தங்கி அங்குள்ளவர்களுக்குத் துணி நெய்யும் கலையையும் புத்ரி செஜிஞ்ஜாங் கம்போங் பாசீர் என்னுமிடத்தில் நெல்லையும் அரிசியையும் முறம் கொண்டு பிரிக்கும் கலையையும் கற்று தந்தனராம். செய்யும் வேலைகள் வெவ்வேறாய் இருந்ததால் ஏற்கனவே தகராறில் இருந்த இரு கம்பங்களும் சமாதானமாய் இருந்தன. அதனால் பண்டமாற்று வணிகமும் சுமூகமாக நடந்து வந்தது. ஆனால் இந்தச் சமாதானம் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.
இவ்விரு கம்பங்களின் வளர்ச்சியையும் அவற்றை நிர்மாணிக்கும் இளவரசிகளின் அழகையும் கேள்விப்பட்டு இரண்டையுமே காண்பதற்காக புத்ரா செராப்பி என்னும் தேவலோக இளவரசர் அங்கு விஜயம் புரிந்தார். இதைக் கேள்விப்பட்ட புத்ரி சந்த்துபோங் மற்றும் புத்ரி செஜிஞ்ஜாங் தங்களை மென்மேலும் வியக்கத்தக்க அளவிற்கு அழகுபடுத்திக் கொண்டு புத்ரா செராப்பியின் முன்னிலையில் தங்களை ஆஜர் படுத்திக்கொண்டனர். புத்ரா செராப்பி ஆண்மகனுக்குறிய வேகமும் பார்த்ததுமே மனதை பறிக்கொடுக்கும் படியான அழகுக்கும் சொந்தக்காரர். இதனால் இளவரசிகள் இருவருமே தங்களை அறியாமல் புத்ரா செராப்பி மீது காதலில் வீழ்ந்தனர். அதே நேரத்தில் இளவரசரும் தன் முன்னே இருக்கும் பெண்களின் அழகில் மயங்கி விட்டார். அந்நாள் முதல் எப்படியாவது தங்களின் காதலை இளவரசரிடம் சொல்லிவிட வேண்டும் என இளவரசிகள் துடித்துக் கொண்டிருக்க இப்படியே இருவருக்கும் இடையில் போட்டி, பொறாமை, சண்டை என வம்பு அதிகரித்து கொண்டே இருந்தது. தாம்தான் அழகில் சிறந்தவள் என ஒருவரை ஒருவர் சொல்லிக் கொண்டனர். ஒரு நாள் வாய்ச்சண்டை முற்றி புத்ரி செஜிஞ்ஜாங் கோபத்தில் முறத்தை எடுத்து புத்ரி சந்த்துபோங் கன்னத்தில் ஓங்கி அடிக்க, சுருண்டு விழுந்த புத்ரி சந்த்துபோங் தனகிருந்த மிச்ச சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி பெலிண்டா என்னும் கூர்மையான வேல் போன்றதொரு ஆயுதத்தால் செஜிஞ்ஜாங் தலையில் தாக்கினார். அவ்வளவுதான். வானில் இடியிடித்து ஆக்ரோஷமாக மின்னல் மின்னி ஒளிக்கீற்று மேலிருந்து கீழிறங்கி இருவரையும் மேலே கொண்டு சென்று விட்டது.
வாக்குறுதியை மீறியதால் பெண்கள் இருவருமே சாபத்துக்கு ஆளானார்கள். புத்ரி சந்த்துபோங் மலையாகவும் புத்ரி செஜிஞ்ஜாங் புலாவ் கெரா என்ற தீவு கூட்டமாகவும் மாறி போயினர். செஜிஞ்ஜாங் அடித்த அடியால் சந்த்துபோங் மலை, ஓர் ஓரத்தில் ஒடுங்கி இருப்பதை இன்றும் காணலாம். காதல் கைகூடாத நிலையில் மனமுடைந்த புத்ரா செராப்பி ஒரு மலையில் நிரந்தரமாகக் காணாமல் போய்விட்டதாகவும் நம்பப்படுகிறது. அம்மலைக்கு குனோங் செராப்பி என்றே பெயர்.
இதில் குனோங் செராப்பி மற்றும் குனோங் சந்த்துபோங் ஆகிய இரு மலைகளும் மனித முக அமைப்பை கொண்டுள்ளன. புலாவ் கெரா பந்தாய் புத்ரிக்கு அருகாமையில் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் புலாவ் கெரா பகுதியில் படகோட்டி கொண்டிருக்கையில் கருப்பு டால்பின் துள்ளி விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இக்கதை மூலம் சகோதரத்துவத்தில் சண்டை இருக்கக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.
நடைமுறையில் சந்த்துபோங் மர்மம் நிறைந்த பகுதியாகத்தான் உள்ளது. இங்கே மலையேறிகள் பலர் காணாமல் போயுள்ளனர். வரம்பு மீறிய போக்கால் நிலை தடுமாறி பயமுறுத்தப்பட்டோர் பலர். நானும்கூட சந்த்துபோங் மலையேறும்போது ஒரு பெண் குரலில் பாடப்பட்ட மொழித்தெரியாத பாடலால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். முகம் தெரியாத உருவங்கள், வடிவங்கள் பொதிந்த சிறுக்கற்கள் இங்கே கிடைக்கின்றன. (இக்கற்கள் கடந்த ஆண்டு சந்த்துபோங் மலையடிவாரத்தில் நான் பணியாற்றிகொண்டிருந்தபோது கிடைத்தன. சில கட்டுப்பாடுகளால் அவற்றை அங்கேயே விட்டு வந்துவிட்டேன்). இது போன்ற மர்மம் நீண்டு கொண்டே இருக்கிறது. எனவே இங்குச் செல்வோருக்கு வரம்பு மீறிய பேச்சு வேண்டாம் என கடுமையாகவே நினைவூட்டப்படுகிறது.
லெகேண்டா பாத்து நாபாவ் (Legenda Batu Nabau)
கதை நடந்த சிற்றூர்: எங்கிலிலி, ஶ்ரீ ஆமான்
சரவாக் மாநிலத்தை பொறுத்த வரை இங்குள்ள பல இயற்கை நிலப்பரப்புகளுக்கும் சரி மலைகள் ஆறுகள் கற்கள் என எல்லாவற்றுக்குமே கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த வரிசையில் ஶ்ரீ ஆமான் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற ஒரு கதைதான் ‘நாபாவ்’ என்றழைக்கப்படும் சரவாக்குக்கே உரித்தான மிக பெரிய பாம்பு பற்றிய கதை. இதைப் பற்றிய கதைகள் பெரும்பாலும் மழைகாலங்களிலும் வெள்ளப்பெருக்குச் சமயத்திலும் அதிகம் சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் சரவாக் முழுவதும் ஆண்டு இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ கனத்த மழை பெய்து வெள்ளம் ஏற்படும். இதனால் ஆறுகளும் ஏரிகளும் கரை தெரியாமல் வெள்ளம் புரண்டோடும். ஒவ்வொரு முறை இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும்போதும் எல்லாரும் தங்கள் வாய்ப்பேச்சு வரம்பு மீறாமல் பார்த்து கொள்வர். நான் சரவாக் வந்து 8 வருடங்கள் ஆகியும் ஒவ்வொரு முறை கனத்த மழை பெய்யும்போதும் என் மாணவர்கள் உட்பட பலரும் ‘நாபாவ்’ பற்றிய அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர்.
நாபாவ் என்பது ஒரு மிகப்பெரிய பாம்பு. அது அனகொண்டா வகையைச் சேர்ந்தது எனவும் இது தோன்றினாலே கண்டிப்பாக ஓர் அசம்பாவிதம் நடக்கு என்றும், யாரேனும் அதை பழித்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்தோ அல்லது நிரந்தரமாக காணாமல் போய்விடுவார்கள் எனறும் ஆணித்தரமாக நம்பப்படுகிறது.
2004-ஆம் ஆண்டு மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் சரவாக் முழுவதும் ஏற்பட்ட மிகபெரிய வெள்ளப்பெருக்குக்கு முன்பு இப்பாம்பு காப்பிட் மற்றும் பெத்தோங் என்னும் இடங்களில் தற்செயலாகக் கண்டதாகஹெலிக்கப்டரிலிருந்து அந்த நாபாவ் ஆற்றை கடக்கும்போது ஒருவர் அதை புகைபடம் எடுத்து இனணயத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் இது உண்மையிலேயே இருக்கிறதா இல்லையா என்பது சர்ச்சைக்குறிய விஷயமாகவே வீவாதிக்கப்பட்டு வருகிறது.
ஶ்ரீ ஆமாக்ச் சேர்ந்த எங்கிலிலி என்னும் இடத்தில் நாபாவ் இப்படிதான் இருக்கும் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஒரு அதிசய கல் இருக்கிறது. அக்கல் முழுவதும் மஞ்சள் கருப்பு நிறத்தில் இருக்கிறது. எங்கிலிலி பட்டணத்திலிருந்து 15 நிமிட பயணத்துக்குப் பின் இந்த 9 மீட்டர் பூதாகர கல் இருக்கும் இடத்தை அடையலாம். இக்கல் பார்ப்பதற்கு இரையை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் மிகப் பெரியதொரு பாம்பை போலவே காட்சியளிக்கிறது. இதன் ஒரு பகுதி மட்டுமே நிலத்தின் மேற்பரப்பில் காணலாம். அதன் இன்னொரு பகுதி முழுவதும் மண்ணுக்கடியில் புதைந்து இருப்பதால் அதன் உண்மையான நீளம் எவ்வளவு என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரம் ஆண்டு கால பழமையானது இந்த நாபாவ் கல்.
நாபாவ் என்னும் இந்தக் கல் பற்றிய விவரங்கள் முதலில் சயாம் வம்சாவளியில் வந்த ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாம். பல ஆண்டுகளாக இதை ஒரு சாதாரண கல் என நினைத்து வந்த இங்குள்ள ஈபான் இனத்தவருக்கு இது கொஞ்சம் அதிசயமாக இருந்தாலும் அதன்பின் அவர்களும் நாபாவ் என நம்பத் தொடங்கி விட்டனர். அந்தச் சயாம்காரரின் கனவில் ஒரு மிகப்பெரிய பாம்பு தோன்றி குறிப்பிட்ட இந்த இடத்தில் தன்னை போன்ற ஒரு அடையாளத்தில் ஒரு கல் இருப்பதாகவும், அது கல் அல்ல, தானே அந்தக் கல் உருவத்தில் இருப்பதாகவும் தன்னை வணங்கினால் வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்றும் கூறியதாம். இப்படிதான் இக்கல்லைப் பற்றிய விவரங்கள் பரவத் தொடங்கியது.
அவர் சொன்னதுபோலவே தீபகற்பத்திலிருந்து இங்கே வந்து ஏற்றி வைத்த ஊதுபத்திகளும் மெழுகுவர்த்திகளும் சமர்ப்பித்த காணிக்கைகளும் அந்தக் கல்லருகில் காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர் வேண்டிக்கொண்ட பல விஷயங்கள் கைக்கூடியதாக அவரே சொல்ல, இக்கல் மென்மேலும் பிரசித்தி பெற்றது.
ஆனால் ஈபான் இனத்தவரிடையே வேரொரு நாபாவ் சம்பந்தப்பட்ட கதை உலாவுகிறது. நாபாவ் என்பது மாய சக்தி கொண்ட ஒரு பெரிய பாம்பு. இது அடிக்கடி மனித உருவம் எடுக்குமாம். அப்படி மனித உருவம் எடுக்கும்போது அழகிய ஆணாக உருமாறுமாம். ஒருமுறை அப்படி உருமாறி ஒரு ஈபான் வீரரின் மனைவியை அபகரிக்க முயலும்போது பிடிபட, கோபமுற்ற வீரர் 7 பாகங்களாக நாபாவைத் துண்டித்து ரெஜாங் நதியில் போட்டு விட்டார் என அக்கதையில் கூறப்படுகிறது. இத்தவறால் நாபாவ் சாபமிடப்பட்டு கல்லாக மாறி விட்டார் எனவும் கூறுகின்றனர். இப்படி நாபாவ் சம்பந்தப்பட்ட பல கதைகள் சுற்று வட்டாரத்தில் உலவுகின்றன.
அதுமட்டுமில்லாமல் இக்கல்லின் மேற்பரப்பில் ஜாவி எழுத்துக்கள் சிலவற்றை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இக்கல்லைத் தூற்றிய ஒரு சிறுவன் காணாமல் போய்விட்டதாகவும் இந்நாள்வரை கண்டுபிடிக்கப் படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் சக்தியின்மேல் விசுவாசம் கொண்ட சீனர்கள் கல்லின் அருகிலேயே சிறிய பீடத்தையும் இளைப்பாற ஒரு இடத்தையும் அமைத்துள்ளனர். காலப்போக்கில் நாபாவ் கல் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் ஓர் அம்சமாகவே மாறிவிட்டது.
அசம்பாவிதத்தை தவிர்க்க, ‘தயவு செய்து முட்டைகளையும் பாலையும் இங்கே வீசவோ ஊற்றவோ வேண்டாம்,’ என இங்கு வரும் மக்களுக்கு ஒரு சில நினைவூட்டல்கள் தரப்படுகின்றன. அதோடு அதிஷ்ட எண்களுக்குக் குறிகேட்பதும் வேண்டாம் என நினைவூட்டப் படுகிறது,
லெகேண்டா இக்கான் பாத்தின் (Legenda Ikan Patin)
கதை நடந்த சிற்றூர்: சரவாக் சார்ந்த தீவுக்கூட்டம்
கெளுத்தி மீன் ஆற்று மீன் வகைகளில் ஒன்று. நம்மில் பெரும்பாலோர் அதை சாப்பிட்டு இருக்கலாம். இதை ஆங்கிலத்தில் கேட்ஃபிஷ் என்றும் மலாயில் இக்கான் பாத்தின் என்றும் கூறுவார்கள். இதன் அறிவியல் பெயர் ‘Pangasius Sutchi’ என்பதாகும். ‘Ikan patin masak tempoyak’ அதாவது டுரியான் பழ சுளையை மாவு போல பிசைந்து அதோடு கெளுத்தி மீன் கறி சேர்த்து சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் தீபகற்ப மலேசியாவின் கிழக்கு மாநிலங்களில் இருப்பதை அங்குக் சில நாள் இருந்தபோதுதான் தெரிந்துகொண்டேன். ஆனால் பலரின் விருப்பமாக இருக்கும் இந்த மீனை சரவாக்கில் இருக்கும் மலாய்காரர்களும் இந்தோனேசிய தீவு கூட்டங்களின் இருப்பவர்களும் உண்பதில்லை என்பது எனக்கு பெருத்த ஆச்சரியத்தைத் தந்தது.
இது மயிரைமீன் கிடையாது. உடலமைப்பு மயிரைமீன் போலதான் காட்சியளிக்கும். இரண்டுமே வெவ்வேறு வகையைச் சார்ந்தவை. ஆனால் இரண்டுமே தமிழில் கெளுத்தி என்றும் ஆங்கிலத்தில் catfish என்றும் அழைக்கப்படுகின்றன.
இக்கான் பாத்தின் வெள்ளை கருப்பு, வெள்ளி, கருப்பு மற்றும் வெள்ளை என பல நிறங்களில் இருப்பதாக நான் அறிந்து கொண்டேன். இதன் வாய்ப்பகுதியில் கொடுக்கு போன்ற அமைப்பும் உடல் பகுதி சாதாரண மீன் போலவும் இருக்கும். இந்த மீன் இரவு நேரங்களில்தான் பெரும்பாலும் உணவு தேடும். அவை ஆற்றுக்கு அடியில்தான் எப்போது இருக்கும்.
ஒருமுறை பள்ளி சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டு சக ஆசிரியர்களுடன் அளவளாவி கொண்டிருந்த எங்களின் பேச்சு உணவு வகையறாக்கள் பக்கம் போக, அப்போது நாங்கள் அன்போடு அபாங் ஜோ என்று அழைக்கும் சிற்றுண்டிச்சாலை முதலாளி அவரின் சந்ததி இந்த வகை மீனை உண்ணவே கூடாது என்றும் அது அவரது சந்ததிக்கான கட்டுப்பாடு என்றும் அப்படியே மீறினால் உண்பவர் சித்தம் கலங்கி மரணம் வரை கொண்டு போகப்படலாம் என்றார். சொன்னவர் என் முகத்தில் தோன்றிய ஆச்சரிய முகபாவனையின் அர்த்தம் புரிந்து கொண்டாற்போல் அதன் காரணமாக காலங்காலமாய் சொல்லப்பட்டு வரும் ஒரு விஷயத்தை சுருக்கமாகச் சொன்னார்.
இப்போது இருக்கும் சரவாக் முன்னொரு காலத்தில் போர்னியோ தீவு கூட்டத்தில் அடக்கம். இந்தோனேசியாவோடு மிகுந்த நெருக்கமான நிலப்பரப்பையும் கலை,கலாச்சார ஒற்றுமைகளையும் கொண்டுள்ளது. இங்குள்ள மலாய்காரர்களும் இந்தோனேசியர்களும் உறவினர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். எனவே, இந்தோனேசிய கதைகள் இவர்களின் மத்தியிலும் இருக்கிறது என்பதற்கு இந்தக் கதையும் ஒரு உதாரணம். இவர்களில் பெரும்பாலானோர் மேற்கு சுமத்ராவிலிருந்துதான் வந்திருக்கின்றனர். மேற்கு சுமத்ராவிலுள்ள ரியாவ் என்னும் இடத்தில்தான் கதையின் சாரம் ஆரம்பம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன் இங்கு வசித்த அவாங் காடிங் என்னும் ஒரு மீனவர் மீன் பிடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி போகையில் ஆற்றங்கரையிலிருந்த பாறையின் மேலே பெண் குழந்தையொன்று இருப்பதைக் கண்டெடுத்தார். அந்தக் குழந்தை ஒரு ஆற்று மீனின் அரசப் பரம்பரையைச் சார்ந்தது என நம்பினாலும் கருணையின் காரணமாக அக்குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் சென்று தனது மற்ற பிள்ளைகளைப் போலவே எந்த ஒரு குறையில்லாமல் கல்வி, பண்பு நெறிகளைச் சொல்லி கொடுத்து வளர்க்கிறார் அவாங் காடிங். அதற்கேற்றாற்போலவே டாயாங் குமுனா என பெயர் சூட்டப்பட்ட அக்குழந்தையும் பண்புநெறிகள் நிறைந்த அறிவும் பேரழகும் ஒருசேர்ந்த பெண்ணாய் வளர்கிறாள்.
அப்போது அவாங் உசோப் என்னும் ஒரு அழகான ஆண்மகன் டாயாங் குமுனா துணி உலர்த்தி கொண்டிருந்தபோது எத்தேச்சையாகப் பார்த்துவிட, அக்கணமே கண்டதும் காதல் கொள்கிறார். எனவே பெண்கேட்டு சம்பந்தம் பேச அவாங் காடிங் வீட்டுக்கு செல்ல, அங்கே டாயாங் குமுனா ஒரு விசித்திரமான விதிமுறையை விதிக்கிறார். அதாவது எக்காரணத்தைக் கொண்டும் டாயாங் குமுனாவை சிரிக்க வைக்க முயலக்கூடாது. இதற்கு சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்ய சம்மதிப்பேன் எனக் கூற, ஆச்சர்யமடைந்த அவாங் உசோப் தான்கொண்ட காதலின் காரணமாக முழுமனதோடு விதிமுறைக்குச் சம்மதித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமும் உறவினர் புடைசூழ கோலாகலமாக நடந்தேறியது. மனமொத்த தம்பதிகளாக அவாங் உசோபும் டாயாங் குமுனாவும் வாழ்ந்துவர, அவர்களின் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. திருமணமான சில நாள்களில் அவாங் காடிங் நோயால் இறந்து விட்டதாக செய்தி வர, இதனால் பல மாதங்களாகத் துயரால் அவதிப்பட்டார் டாயாங் குமுனா. ஆனால் அடுத்தடுத்து பிறந்த ஐந்து குழந்தைகளின் வரவால் டாயாங் குமுனாவில் கவலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டது. அதோடு டாயாங் குமுனா இயல்பு வாழ்க்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி சந்தோசமாக இருந்தார்.
ஆனால் என்னதான் சந்தோசமாக இருந்தாலும் அவாங் உசோப் அவர்களின் மகிழ்ச்சி டாயாங் குமுனா சிரிக்காமல் இருப்பதால் முழுமை பெறாததாகவே எண்ணினார். ஒரு நாள் மதியம் குடும்பம் முழுவதும் அவர்கள் வீட்டில் கூடியிருந்தது. அப்போதுதான் இவர்களின் கடைசி பிள்ளை தத்தி தத்தி நடக்க, அதை பார்த்து அனைவரும் ஆனந்ததில் சிரித்தனர். ஆனால் டாயாங் மட்டும் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் இருக்க, அவாங் உசோப் டாயாங் குமுனாவை சிரிக்கச் சொல்லி வற்புறுத்தியதுதான் தாமதம். டாயாங் குமுனாவின் வாயில் மீனின் செதில்கள் தோன்ற ஆரம்பித்தன. இதை உணர்ந்த டாயாங், ஆற்றை நோக்கி விரைந்தாள். இதைப் பார்த்த உசோப் மற்றும் பிள்ளைகள் விஷயம் தெரியாமல் பின்தொடர்ந்தனர்.
கரையை அடைந்ததும் டாயாங் குமுனா உடல் மொத்தமுமே மீனாக மாற ஆரம்பித்தது. இதை பார்த்த உசோப் அப்போதுதான், தான் செய்த வாக்குறுதியை மீறிவிட்டதை உணர்ந்தார். ஆனால் காலம் கடந்து விட்டது. டாயாங் குமுனா முழு மீனாக மாறும் முன் பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்ளும் படியும் தான் மீனாய் மாறிய பின் அந்த மீன்வகைகளை அவர்தம் சந்ததியினர் சாப்பிடக்கூடாது எனவும் சத்தியம் வாங்கி கொண்டார். அப்படி யாரேனும் சாப்பிட்டால் அது தன் சந்ததியையே சாப்பிடுவதாக அர்த்தம் என்றும் அதனால் பாதகம் நேரும் என்றும் சாபம் கொடுத்து விட்டார். எனவேதான் அவாங் மற்றும் டாயாங் என குடும்ப பெயர் கொண்ட யாரும் பாத்தின் மீன்வகைகளைச் சாப்பிடுவதில்லை. இது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பலர் இன்னும் நம்பாமல் போனாலும் சம்பிரதாயங்களுக்கு மதிப்புக் கொடுத்து பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என ஒரு நெறியும் இக்கதையின் ஊடாக அறிவுறுத்தப்படுகிறது. இன்னும் கொஞ்சம் யோசித்தால் மீன்களின்மேல் அக்கறை கொண்ட யாரோ ஒரு பழங்குடி சொல்லிவிட்டுச் சென்ற கதையாக இருக்குமோ என்றும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இண்டாய் லெலிப்பாய் (Indai Lelipai)
கதை நடந்த சிற்றூர்: காப்பிட் அல்லது சிபூரான்
லெலிப்பாய் என்றொரு மீன் இங்கு இருக்கிறதாம். ஆனால் இணையத்தில் இந்த மீன் பற்றிய விவரங்களை என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இந்த மீன் சம்பந்தப்பட்ட கதை காப்பிட் மற்றும் சிபூரான் என்னும் இரு வேறு இடங்களில் ஒரே மாதிரியாக கூறப்படுகிறது. ஆனால் அதன் தடயங்கள் மட்டும் வெவ்வேறாக உள்ளன. இக்கதை ஈபான் வம்சாவளியினரிடையே பெரும்பாலும் கூறப்பட்டுவருகிறது.
முன்னொரு காலத்தில் கணவன் மனைவி இருவரும் ஊராரோடு சேர்ந்து பழங்கால முறைப்படி மீன் பிடிக்க சென்றனர். பழங்கால முறை என்பது கூரான நுனி கொண்ட ஒரு நீண்ட கம்பால் மீனை குறிப்பார்த்து குத்துவது. இந்த முறையை இங்குள்ளவர்கள் ‘தூபாய்’ என்பார்கள். இந்த லாவகத்தை இங்கே பெரும்பாலானோர் பெற்றிருந்தனர். அதோடு, கதை நடைப்பெற்ற காலக்கட்டத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி இடுப்புக்கு மேல் உடை தரித்திருக்க மாட்டார்கள்.
இப்படி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ சட்டென்று லெலிப்பாய் வகை மீன் தோன்றி, அந்த மனைவியின் மார்பகத்தில் முழுவதுமாக ஒட்டிக்கொண்டது. உடனே, மார்பகத்துக்குச் சொந்தக்காரியான அந்த பெண், ‘ஆண்கள் மட்டுமல்ல இப்போது மீன்களும் கூட மார்பகத்தைத் தடவ ஆரம்பித்து விட்டன’ எனக் கூற, சுற்றி இருந்த அனைவரும் எகத்தாளமாக சிரித்தனர். அந்தப் பெண்ணின் கணவன் உட்பட.
அவ்வளவுதான், வானில் பலத்த மழையோடு இடியும் மின்னலும் சாரமாரியாக வந்து விழ ஆரம்பித்தது. அங்கிருந்த எல்லாரும் மழைக்குப் பயந்து, ஒதுங்க இடம் தேடி ஓடினர். ஆனால் இது அந்தக் கணவன் மனைவிக்கு நேர்ந்த கெட்ட நேரம். தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு முன்பே இருவரும் கட்டிப்பிடித்த நிலையில் கல்லாகி போயினர். நிகழ்ச்சி நடந்த இந்த இடம் இப்போதும் கம்போங் பாத்து கோங் என அழைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட இந்த இடம் எங்கே இருக்கிறது என்று தேடி போனால் அது சீபுரான் பகுதியில் இருப்பதாக கூகுள் மேப் காட்டுகிறது. ஆனால், அதே கதையின் சாரம் காப்பிட் பகுதியிலும் இருப்பதால் எது நிஜம் என ஊர்ஜிதப்படுத்துவதில் சிறிது குழப்பமும் ஏற்படுகிறது. ஆனால் இந்தக் கதையின்வழி எந்த ஒரு பிராணியையும் நாம் சிறுமை படுத்தக் கூடாது என்பதைதான் அறியமுடிகிறது. என் பள்ளி அறிவியல் உதவியாளரான ஃபிலிசியா என்னும் ஒரு ஈபான் பெண் மூலமாகத்தான் இக்கதையை அறிந்துக்கொண்டேன்.
முடிவாக
சரவாக் என்பது ஒன்றைக் கலாச்சாரம் கொண்ட மாநிலம் அல்ல. 30 பழங்குடி சமூகத்தின் கூட்டுத்தொகுப்பிலும் பல்வேறு உட்பிரிவுகளாலும் தன்னை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கும் பெரிய நிலபரப்பு. எந்த மூலையில், எதன் வாயிலாக அம்மாநிலத்தின் புதிய முகம் பிரதிபலிக்க இருக்கிறதோ என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை சரவாக் இக்கதைகளின் மூலமாகவே தக்கவைத்துக் கொண்டுள்ளது. வெளியுலகம் அறியா இன்னும் பல இரகசியங்கள் தன் மலைகளுக்குள்ளும் குகைகளுக்குள்ளும் நதிகளுக்குள்ளும் சரவாக் பொதித்து வைத்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன். ஜாக்கி சானின் ‘தெ ஃபொர்பீடன் கிங்டம்’ என்ற திரைப்படத்தில் வருவதுபோல இக்கதைகளின் சாரத்தில் மூழ்கும்போதும் ஒரு சில குகைகளுக்குச் சென்று பார்க்கும்போதும் நானே பல நூற்றாண்டுகள் பின் சென்று மீள்வதுபோல உணர்கிறேன். நாகரிகம் என்ற பெயரில் மாற்றங்கள் பல ஏற்பட்ட போதிலும் சரவாக் அதன் அழகான நிஜ முகத்தைத் தக்க வைத்து கொள்வதுதான் அதன் ஈர்ப்புக்கு முழுமுதற்காரணமாக இருக்கிறது.