குண்டர் கும்பல் கலாச்சாரமும் தமிழ்ச் சமூக மெளனமும்

3முன்னுரை

மலேசியத் தமிழ்ச்சமூகம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் அவலங்களையும் சீர்கேடுகளையும், அதனால் ஏற்படும் வீழ்ச்சியையும் இந்த இயற்பியல்  விதியைச்சார்ந்தே ஒப்பிட முடிகிறது. அறிவியல், பொருளாதாரம், கல்வி, இலக்கியம் என எல்லாவற்றிலும் முன்னணி வகித்த தமிழர்களின் நிலையை இன்று  ஒரு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாகத்தான் கணிக்க முடிகிறது. இந்த மாற்றத்தைச் சங்கத்தமிழ் மரபிலிருந்தெல்லாம் கணக்கெடுக்க வேண்டியதில்லை. கடந்த 200 ஆண்டுகளில் தமிழர்கள் இந்நாட்டில் என்னவாக இருந்தார்கள்; இருக்கிறார்கள் என ஆராய்ந்தாலே உண்மை புலப்படும்.

கடும் உழைப்பாளிகளாக, பல அரசு வேலைகளை அலங்கரித்து, மலேசியாவில் முதல் சீனப்பத்திரிகைப் பிரசுரம் முதல் ஊடகத்துறையில் கோலோச்சி, ஆங்கிலேயர்களைக் கிள்ளான் கலவரத்தில் முதன் முதலில் எதிர்த்துப் போராடி, வறிய நிலையிலும் மொழியைப் பிடித்து வைத்திருந்த தமிழர்கள் இந்நாட்டில் இன்று குற்றச்செயல்களுக்கு அடையாளமாகிவிட்டனர்.

இந்நாட்டின் அரசாங்கமும் இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாய் சொல்லும் ஏனைய அரசியல் கட்சிகளும் உருவாக்கும் புதியத் திட்டங்களால் தமிழ்ப்பள்ளி, இந்தியக்கலாச்சாரம் போன்றவற்றில் சிற்சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றுக்கான தற்காலிக தீர்வையும் இத்தரப்பினரே வழங்கி, இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்களின் சிக்கல் என்பது கோயிலும் தமிழ்ப்பள்ளியும் என்பதுமாகவே நம்பவைத்துவிட்டனர்.  நமது அரசு சாரா இயக்கங்களும், சமூகத்தலைவர்களும் சமூகத்துக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் என மேம்போக்கான நிவாரணிகளையும் வெற்றிக்கான கொண்டாட்டங்களையும் ஏற்படுத்தி தொடர்ந்து தமிழ்ச்சமூகத்தின் உண்மையான நிலையை கவனிக்கத் தவறிவிட்டனர். எடுத்துக்காட்டாக சில ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் பொருளாதார திட்டங்கள் மிக  மும்முரமாக பிற இன மக்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படும் தமிழ்த் திரைப்பட நேரம் குறித்தும் செய்தி ஒளிபரப்பு நேரம் குறித்தும் தீவிரமாக பேசிக் கொண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்துக் கொண்டும் இருந்தனர். அரசு சாரா இயக்கங்களும், இந்திய அரசியல் தலைவர்களும் இந்தப் போராட்டங்களில் ஆர்வமாகப் பங்கெடுத்ததுடன், அரசிடம் இருந்து ஒரு பதிலைப் பெற்று ‘போராட்டத்திற்கு வெற்றி கிட்டியது’ என்ற தலைப்பில் செய்தியாக்கி பரபரப்பு அரசியல் செய்து கொண்டிருந்தனர். இது போன்ற அற்ப சிந்தனையும் விளம்பர அரசியலும் செய்து மேடைகளில் சிங்கமென முழுங்குவதும் பத்திரிகை அறிக்கை விடுவதும் மட்டுமே தங்கள் பணியாகக் கொண்ட அரசியல் தலைவர்களும் பொது இயக்கங்களும் மலேசிய உருவாக்கத்துக்குப் பின்னான மலேசிய இந்தியர்களின் உண்மையான சிக்கல்களைத் திட்டமிட்டோ அல்லது தங்களது அறியாமையாலோ கவனப்படுத்த தவறி விட்டனர்.

விளைவு, மலேசிய இந்தியர்கள் கல்வி, பொருளாதார முன்னெடுப்புகளில் மைய நீரோட்டத்திலிருந்து மெல்ல ஓரங்கட்டப்பட்டனர். வாய்ப்புகள் அற்ற கையருநிலையில், சரிந்து விழும் வாழ்வை நிமிர்த்திப் பிடிக்கும் நோக்கோடு பல தீய, சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் அவர்களில் சிலர் பயணிக்கத் தொடங்கினர். குறிப்பாக 1970-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்நாட்டில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறை, குண்டர் கும்பல் என்கிற இருண்ட உலக வாழ்க்கையைத் துணிந்து தேர்வு செய்தனர்.

இன்று, மலேசியாவில் குண்டர் கும்பல் என்றால் அது இந்தியர்களை அதிகம்4(1) உள்ளடக்கியதாகக் காட்டப்படுகிறது. ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை குண்டர் கும்பலால் கவரப்பட்ட இந்திய இளைஞர் குழாம் இன்று உள்ளது. ஜானகிராமன் மாணிக்கம் எழுதிய மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை எனும் நூலில் 1996 முதல் 2002 வரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதிகளின் மொத்தத்தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 13%-க்குக் குறையாத எண்ணிக்கையில் இந்தியர்கள் உள்ளனர் என்கிறார். இதேபோல் 2000 முதல் 2014 வரை போலிஸ் தடுப்புக்காவலில் இறந்த 255 பேரில் 70% இந்தியர்கள் என்பதும்  2010 முதல் 2017 வரை சிறைச்சாலையில் இறந்த 1,654 கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பதும் எரிக் பெளலென் என்பவரின் கூற்றாகும். இவை கவலைக்கிடமாகிக்கொண்டிருக்கும் மலேசிய இந்தியர்களின் வாழ்வைச்சொல்வதாக உள்ளது.

மலேசிய குண்டர் கும்பல் – வரலாற்றுச் சுருக்கம்

மலேசியாவில் குண்டர் கும்பல் என்பதன் தோற்றுவாய் சீனாவோடு தொடர்புடையது. 19-ஆம் நூற்றாண்டில் மலாயாவுக்கு ஈய லம்பங்களில் குத்தகை முறையில் வேலை செய்ய வந்த சீன வணிகர்கள் தங்கள் மக்கள் குழுவை பாதுகாக்கும் பொருட்டு தொடங்கப்பட்டதே குண்டர் கும்பலாகும். ‘கொங்சி கெலாப்’ என்று அழைக்கப்பட்ட அக்குழுக்களில் கீ ஹீன், ஹை சான் போன்ற குழுக்கள் தங்களுக்குள் அபின் விநியோகம் தொடர்பாக போரிட்டுக் கொண்ட வரலாறு உண்டு. ஆங்கில அரசு மலாயாவில் சீன குண்டர் கும்பலை ஒழிக்கும் பொருட்டு (அபின் பங்கீட்டில் ஏற்பட்ட சச்சரவுக்குப் பிறகு) பெராங் ச்சாண்டு (Perang Candu) தொடங்கியது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் மலேசியாவில் சீன குண்டர் கும்பல்களின் கை ஓங்கியே இருந்தது. 1969-இல் நடந்த இனக்கலவரத்தின் பின்னணியாகக் குண்டர் கும்பல்கள் செயல்பட்டன என்று அரசு வெளியிட்ட MAGERAN அறிக்கை கூறுகிறது. நாட்டில் தொடர்ந்து இன பதற்றத்தைத் தக்கவைப்பதன் மூலம் தங்கள் ‘பாதுகாப்பு நிதி’ வசூலிப்புச் சுலபமாக நடக்கும் என்று அவர்கள் திட்டமிட்டு செயல்பட்டதாக அவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. ஆகவே கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மலேசியாவில் குண்டர் கும்பல் என்பது சீனர்களை மையப்படுத்திய சட்டவிரோத நடவடிக்கையாகவே இருந்தது. ஆனால் இன்று மலேசிய குண்டர் கும்பல்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக இந்திய சமூகம் மாறிவிட்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் குண்டர் கும்பல் கலாச்சாரத்தைப் பண்பாடாக கொள்ளாத ஒரு சமூகம் எப்படி இவ்வாறு ஆனது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய நிலையில் சீனர்கள் தங்கள் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை முற்றாக துறந்து விட்டு சென்றுவிட்டார்கள் என்று சொல்லமுடியாது. மாறாக, அரசு குண்டர் கும்பல் நடவடிக்கைகளுக்கு எதிராகத் எடுக்கும் தொடர் நடவடிக்கையால் அவர்கள் மிகச் சாதுர்யமாக தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டு செயல்பட முனைகின்றனர். ஆகவே அவர்கள் இந்திய இளைஞர்களைச் செயல்பட வைத்து தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை. பணத் தேவையின் காரணமாகவும், அதிகார ஆசையின் காரணமாகவும் வேறு பல உந்துதல் காரணமாகவும் பல இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பல் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட தொடங்குகின்றனர்.

குண்டர் கும்பலில் இந்திய இளைஞர்கள்

இக்கட்டுரைக்காக குண்டர் கும்பலில் ஈடுபட்ட சில மாணவர்களை அணுகி தகவல் சேகரித்தபோது குண்டர் கும்பலில் மாணவர்கள் இணையும் தொடக்க காரணங்களும் அவர்களின் தனித்துவ நடவடிக்கைகளும் புலனாகத் தொடங்கின.

6இடைநிலைப்பள்ளியில் இணையும் ஓர் இந்திய மாணவன் முதலில் பாதுகாப்புக்கருதியே தன் பள்ளியில் இயங்கும் குழுவினருடன் இணைகிறான். மொழிச்சிக்கல், தனது தேவையைக் கூற முடியாத சூழல் ஆகியவற்றால் அவன் தன் மொழியில் தனது தேவையைச் சொல்ல முடிகிற ஒரு குழுவைத் தேர்ந்தெடுக்கிறான். இந்த நிலை தமிழ்ப்பள்ளியில் இருந்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது தவறான கணிப்பு. உண்மையில் தேசிய மொழிப் பள்ளியில் இருந்தும் சீன மொழிப்பள்ளியில் இருந்தும் வரும் இந்திய மாணவர்களும் தங்கள் நிலை அச்சுருத்தலுக்குள்ளாகும்போது பிற மூத்த இந்திய மாணவர்களின் உதவியையே நாடுகின்றனர். வன்பகடி செய்ய முயலும் பிறஇன மாணவர்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்புக் கிடைப்பதை உறுதி செய்வதே குண்டர் கும்பல் தொடர்புக்கு முதல்படியாகும். பாதுகாப்பு உறுதியானபின் தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்தும் பொருட்டு தன்னைப்போல பிற மாணவர்களுக்குப் பாதுகாப்புத் தருபவனாகத்  தன்னை வளர்த்துக் கொள்கிறான். மேலும் தொடக்கத்தில் பாதுகாப்பு தரும் குழு, பின்னர் தங்கள் திட்டங்களுக்கு உதவ அதே மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும்போது அவன் நேரடியாக குண்டர் கும்பல் நடவடிக்கையில் பங்கேற்க துவங்குகிறான். பொருளாதார ரீதியாகவோ, கல்வி ரீதியிலோ, பிற திறன்கள் அடிப்படையிலோ தன்னை அடையாளப்படுத்த முடியாதவன் தனது ஆளுமையை சண்டை சச்சரவுகள் மூலம் வெளிப்படுத்துகிறான். மேலும் சில சூழல்களில் வகுப்பில் ஆசிரியர்கள் காட்டும் புறக்கணிப்பும், பொறுப்பற்ற குடும்ப பின்னணியும் அடித்தட்டு மாணவர்களின் ஆளுமைச் சிக்கலுக்கு அடிப்படை காரணிகளாகின்றன.

இவ்வாறு ஒரு குண்டர் கும்பல் அடையாளத்தில் உருவாகும் இளைஞன் தனது குழுவில் உள்ளவர்களை மட்டுமே நெருக்கமானவர்களாகக் கருதுகிறான். அதுவரை உடன் வந்த பிறநண்பர்கள் வேறு எண்களில் இணைந்தால் அவர்களின் நட்பைத் துறக்கவும் தயாராக உள்ளான். சகோதார பாசம், நட்பு, இரத்த சொந்தம் ஆகிய எதுவும் இந்தக் குழு மனப்பான்மைக்கு முன் சிறிதாகிவிடுகிறது. குடும்பமும் உறவுகளும் தனக்கு செய்யமுடியாத அரிய செயல்களை இந்தக் குழுக்கள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனை குண்டர் கும்பல் விசுவாசியாக்குகிறது. இவர்களின் இந்த விசுவாசமே அரசியல்வாதிகளின் நம்பிக்கையைப் பெற்றுத்தருவதாகவும் அவர்களின் கைக்கூலிகளாக இவர்கள் மாறவும் வழிசமைக்கிறது.

குண்டர் கும்பலில் உள்ளவர்கள் முதலில் தங்களுக்கான அடையாளங்களாக எண்களை, வண்ணங்களை, சின்னங்களைத் தனித்தனியாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கான பிரத்தியேகச் சின்னத்தை உடலில் பச்சையாகக் குத்தியிருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு குறியீடு உண்டு. பொது இடத்தில் அறிமுகமில்லாத ஒரே குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவரால் தாங்கள் கைக்குலுக்கும் விதத்திலேயே தங்கள் குழு அடையாளங்களைத் தெரிவிக்க இயலும். சில குறிப்பிட்ட விரல்களில் அணியப்படும் சின்னம் பொறித்த மோதிரங்கள் மூலமும் இவர்களால் தங்கள் குழுவை அடையாளம் காட்ட முடியும். மேலும், தாய்லாந்து கலாச்சார அடையாளங்கள் கொண்ட வடிவங்களை உடலில் பச்சையாகக் குத்திக்கொள்வதன் மூலமும் அதை ஒட்டிய வழிபாடுகள் மூலமும் இவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்பவர்களாக உள்ளனர். இதுபோன்று பச்சை குத்துவதன் மூலமாகவும் வருடத்தில் சிலமுறை தாய்லாந்தில் ‘பூக்குளியல்’ செய்வதன் மூலமும் தங்களுக்கு எதிரிகளால் தீங்கு ஏற்படாது என்பது இவர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் வெளிபாடு இவர்களைச் சமூகத்தில் தனித்து அடையாளம் காட்டுகிறது.

சில பிரத்தியேகச் சடங்குகளையும் குண்டர் கும்பலில் உள்ளவர்கள் கொண்டுள்ளனர். தங்கள் கடவுளின் முன்னிலையில் மந்திரிக்கப்பட்ட நீரில் தங்களின் ஒருதுளி இரத்தத்தைக் கலந்து அதை அனைவரும் பகிர்ந்து பருகுவதன் மூலம் தாங்கள் சகோதரர்களாகிவிட்டதாக நம்புகின்றனர். இன்னும் சில குழுவினர் குழுவில் புதிதாக இணையும் ஒருவனின் கழுத்தைச் சுற்றி கத்தியை வைத்து ஊதுவத்தியால் நெஞ்சில் சுடுவதன் மூலம் அவன் மன உறுதியைச் சோதித்தப்பின்பே குண்டர் கும்பலில் இணைக்கின்றனர். இவையெல்லாம் உளவியல் ரீதியாக தங்களின் ஒருவனாக மாறுபவனை விசுவாசியாக்கும் நடவடிக்கையாகவே கருதமுடிகிறது. இவ்வாறு குண்டர் கும்பலில் ஆகக் கடைசியாக சேர்ந்திருக்கும் இளைஞர்கள்தான் அக்குழுவுக்காக அதிகம் உழைக்க வேண்டியுள்ளது.

குழுவாக இயங்குபவர்களுக்குப் பிறரது பயமே மூலதனம். தங்களுக்கான பொருளாதாரத் தேவைக்கு இந்தப் பயத்தையே பிரயோகிக்கின்றனர். குறிப்பாகக் கட்டுமானப்பணியிடங்களில் உள்ள பொருள்களுக்கும் சட்ட விரோதமாக நடத்தப்படும் சூதாட்ட மையங்களுக்கும் உடம்புப்பிடி நிலையங்களுக்கும் பாதுகாப்புத்தருவதாகக் கூறி அதன் மூலம் இவர்கள் தங்களுக்கான வருவாயை ஈட்டுகின்றனர். பாதுகாப்பை நிராகரிக்கும் நிறுவனங்களைப் பயமுறுத்தியும் பணிய வைக்கிறார்கள். கள்ள குறுந்தட்டுகளை விநியோகிப்பதிலும் விற்பதிலும்கூட குண்டர் கும்பல் ஈடுபடுகிறது.

குண்டர் கும்பல் தலைவர் சொல்லும் காரியத்தைச் செய்வதுதான் குழுவினரின் முதன்மை வேலை. குழு தலைவன் சொல்லாத காரியங்களில் இறங்கி அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்குப் பெரும்பாலான தலைவர்கள் பொறுப்பேற்பதில்லை. இரு குண்டர் கும்பலுக்கு மத்தியில் ஏற்படும் சச்சரவுகள் ‘மேசை சமரசங்கள்’ (Table talk) மூலம் பெரும்பாலும் தீர்க்கப்படும் என்றாலும் தலைவர்களின் தலையீடுகள் இல்லாத பேச்சுவார்த்தைகள் வன்முறையிலேயே முடிகின்றன.

கபாலியின் புனைவும் ஜாகாட்டின் நிதர்சனமும்

சஞ்சிக்கூலிகளாக மலையகம் வந்திருந்தவர்கள் பல இன்னல்களை, கொடுமைகளைச் 8சந்தித்தார்கள். அந்தக் கொடுமைகளிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் தன்னையும் தன் குடும்பத்தையும் சமூகத்தையும் காப்பாற்ற புறப்பட்டவர்களைத்தான் தேசம் காக்கும் போராளிகளாகச் சொல்கிறோம். தங்களுக்காகப் போராடியவர்களை மக்கள் தங்களில் முன்னோடிகளாக, வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டனர். 1941-இல் தோட்டத் தொழிலாளிகள் ஒன்று திரண்டு ஆங்கில முதலாளிகளுக்கு எதிராகப் போராடினர். தொழிற்சங்கவாதிகளும் சோசியலிஸ்டுகளும் கம்யூனிச சித்தாந்த ஈர்ப்பு உள்ளவர்களும் முதலாளிகளுக்கு எதிராக இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். தோட்டப்பாட்டாளிகள் பல இடங்களிலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனர்களுக்குச் சமமான சம்பள உயர்வு கோரி தொடங்கிய போராட்டம் பெரும் கலவரமாக மூண்டதால்,  இந்திய ராணுவ வீரர்களைக் கொண்டு (பஞ்சாப் ரெஜிமண்ட்) இப்போராட்டம் முறியடிக்கப்பட்டது. பலர் சூடுபட்டு மாண்டனர். பலர் சிறைவாசம் சென்றனர். சிலர் நாடு கடத்தப்பட்டனர்; சிலர் நாட்டை விட்டு ஓடினர். (ஜானகிராமன் மாணிக்கம், மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை & அ.ரெங்கசாமி, விடியல்). அந்தப் போராட்டம் மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமான போராட்டமாகும். மலேசிய இந்தியர் வாழ்வில் அரசியல் பிரக்ஞையும் உரிமை சிந்தனையும் தலைதூக்க கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி எனும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னோடிகளே காரணமாகும்.

ஆனால், இந்த வரலாற்றுடன் பின்னர் வந்த குண்டர் கும்பல் அடியாட்களைத் தொடர்புபடுத்துதல் பிழையாகும். இதே கோணத்தில் புனைவாக்கப்பட்ட ‘கபாலி’ திரைப்படத்தில் காட்டப்படும் குண்டர் கும்பல் கலாச்சாரத்தை வரலாற்றின் ஆதாரமாக எடுத்துக் கொள்வது மலேசிய இந்தியர்கள் குறித்து தவறான கண்ணோட்டத்தையே உருவாக்கும். குண்டர் கும்பலில் இணைந்தவர்கள் சமுதாய சிந்தனையோ கொள்கை துடிப்போ கொண்டவர்கள் அல்ல. இந்நாட்டின் இந்திய குண்டர் கும்பலைச் சார்ந்தவர்களால் சமூகத்துக்கு நன்மை கிடைத்ததாகச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. மாறாக, உடல் வலிமையையும் வன்முறையையும் பயன்படுத்தி பொதுமக்களிடம் இயல்பாக இருக்கும் அச்சத்தை மூலதனமாக்கி பணம் பறிக்கும் பேர்வழிகளாகவே இவர்கள் செயல்பட்டார்கள். ஆள் கடத்தல், கொள்ளை, கொலை போன்றவற்றில் தொடங்கி பொருளாதார தேவைக்காக போதைப் பொருள்  விநியோகம் என சட்டவிரோத செயல்களையே இவர்கள் முன்னெடுக்கத் தொடங்கினர்.

பணக்காரர்களும் அரசியல் தலைவர்களும் இவர்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வது வழக்கமானது. இந்திய பிரதிநிதித்துவத்துவ கட்சி ஒன்று தன் ஆண்டு கூட்டங்களைச் செம்மையாக நடத்தவும் கட்சி தேர்தல்களை இலகுவாக நடத்தி முடிக்கவும் குண்டர் கும்பல் ஆட்களை பயன்படுத்திக் கொண்டிருந்தது 80-ஆம் ஆண்டுகளிலும் 90-ஆம் ஆண்டுகளிலும் வெளிப்படையாக மக்களிடையே பேசப்பட்டது.

எண்பதுகளின் இறுதியில் தோட்டப் பாட்டாளிகள் நம்பியிருந்த பால்மர வேலைகளுக்குத் தோட்ட நிர்வாகம் வேட்டு வைத்தது.  அன்றைய உலக பொருளாதார சூழலில் பால் மரத்தைவிட செம்பனை மர நடவு லாபம் ஈட்டும் துறை என கணக்கிடப்பட்டது. ஆகவே பல ரப்பர் தோட்ட பெரு முதலாளிகள் ரப்பர் தோட்டங்களைச் செம்பனை தோட்டங்களாக மாற்ற முனைப்பு காட்டினர். இதனால் பல தோட்ட மக்கள் நிலைகுலைந்து போயினர்.

7மலேசியத் தமிழர்கள் ரப்பர் மர நடவிலும் பால் சேகரிப்பு உக்திகளிலும் அனுபவம் பெற்றவர்களாக இருந்தனர். ரப்பர் மரத்தோடு அவர்களுக்கு ஏறத்தாழ எண்பது ஆண்டுகால உறவு இருந்தது. ஆனால், திடீர் என்று ரப்பர் நடவு நிறுத்தப்பட்டு செம்பனை நடவு தொடங்கியதும் இந்திய தோட்டத் தொழிலாளிகளுக்கு அதில் தேர்ச்சி இருக்கவில்லை. அவர்களுக்குப் புதிதாக பயிற்சி கொடுத்து தயார் செய்யும் காலமும் செலவும் முதலாளிகளுக்குச் சுமையாக இருந்தது. ஏற்கனவே, இந்தோனேசிய செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்து அந்தத் தொழிலில் அனுபவம் பெற்ற இந்தோனேசியத் தொழிலாளிகளை இறக்குமதி செய்வது செலவு குறைவானதாகவும் காலவிரயம் அற்றதாகவும் கருதப்பட்டது. ஆகவே, இங்கு இந்தோனேசியத் தொழிலாளர்களின் வருகை அதிகமானது. ஏற்கனவே பிரஜா உரிமை, வேலை உரிமம், தோட்டத்துண்டாடல் போன்ற பிரச்சினைகளில் நிலைகுலைந்து வாழ வழியில்லாமல் புறநகர்களுக்குக் குடிபெயர்ந்த தலைமுறையோடு இந்தப் புதிய தலைமுறையும் சேர்ந்துகொண்டது.

முதலில் நகரங்களை ஒட்டிய புறம்போக்கு நிலங்களிலும் மலாயன் ரயில்வே நிலங்களிலும் குடிசைவீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டும் சொந்தமாகக் கட்டிக் கொண்டும் வாழத்தொடங்கினர். புறம்போக்கு நிலங்களை அரசாங்கம் மேம்பாட்டுக்காக எடுத்துக் கொண்ட பிறகு குடிசைவாசிகளுக்காகக் கட்டிக் கொடுத்த தற்காலிக குடியிருப்பான  ரூமா பஞ்சாங்கில் வாழத்தொடங்கினர். புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்த வாழ்க்கையும் ரூமா பாஞ்சாங்கில் வாழ்ந்த வாழ்க்கையும் போதுமான வசதிகள் அற்ற சமூக சீர்கேடுகள் மலிந்த வாழ்க்கையாக இருந்தது. இங்கு வளர்ந்த இளைஞர்களும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் இயல்பாகவே வன்முறை மிக்க சமூக சூழலில் வளரத் தொடங்கினர். அரசும் அரசியல் தலைவர்களும் இவர்களை வாக்கு உருப்படிகளாக மட்டுமே கணக்குப் போட்டு அவ்வப்போது சில மானியங்களையும் திட்டங்களையும் கொடுத்து தங்கள் ஆதரவு தரப்பாக வைத்திருந்தனர். வருமானம் ஈட்டும் போராட்டத்திலும் தங்கள் தனிப்பட்டப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டும் குண்டர் கும்பல் ஈடுபாடு இவர்களுக்கு அவசியமானது.

ஏற்கனவே சீனர்கள் மத்தியில் எண்களுடன் இயங்கிய குண்டர் கும்பலில் தமிழர்கள் இணையத்தொடங்கியது இந்தச்சூழலில்தான். நகரம் கொடுத்த வறுமையாலும் அரசாங்கத்தின் பாராமுகத்தாலும் இந்திய இளைஞர்களின் ஆற்றல் அனைத்தும் சீனர்கள் கையில்  விழுந்தது. பணம் சம்பாதிப்பது கட்டாயமாகும் காலகட்டத்தில் வேறெதையும் யோசிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. தோட்டப் பாட்டாளிகளாக வாழ்ந்தபோது இருந்த கட்டுக்கோப்பு, மற்றவர் மீதான அக்கறை, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் எல்லாவற்றையும் பெருநகரங்கள் உருவாக்கி வைத்திருந்த பொருளாதார நெருக்கடிக்குப் பலி கொடுத்தனர்.

நகரங்களில் பல குண்டர் கும்பல்கள் உருவெடுத்தன. ஒரு தலைவனின் பெயரிலோ எண்ணை அடையாளமாகக் கொண்டோ அவை இயங்கின. அவை ஒன்றோடு ஒன்று பகை உணர்வுடன் செயல்பட்டன. ஒருபக்கம் பழைய பாணியில் பாதுகாப்பு வசூல் செய்வதும் இன்னொரு பக்கம் போதைப்பொருள்களை விற்று சம்பாதிப்பவர்களாகவும் அவர்கள் ஆனார்கள். சிறு குழுக்களுக்குள் போதைப் பொருள் விநியோகம் மற்றும் பாதுகாப்பு தொகுதி பங்கீடு தொடர்பாகவும் போட்டியும் சண்டைகளும் மூண்டன. போலீஸ் வேட்டையில் பலியானவர்களுக்கிடையே தங்களுக்குள் சுட்டுக் கொண்டும் வெட்டிக் கொண்டும் மாண்டவர்கள் பலராக இருந்தனர்.

தோட்டத்தைவிட்டு வெளியில் ஒன்றாக வந்தவர்கள் என்பதால் அவர்கள் தங்கள் மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக போதைப்பொருள்களை விற்கத்தொடங்கினர்.  மலேசியத் திரைப்படமான ‘ஜகாட்’ இந்தச் சூழலை மிக எதார்த்தமாக எடுத்துக்காட்டும்  திரைப்படமாகும். இப்படம் குறிப்பிட்ட காலக்கட்டத்து இந்திய இளைஞர்களின் போக்கிடமற்ற நிலையோடு எதிர்கால சமூகம் எதிர்நோக்கியிருக்கும் வெறுமையான சூழலையும் தெளிவாகக் காட்டியிருந்தது.

பொறுப்பற்ற அரசாங்கமும் புறம்போக்கு வாசிகளும்

கைக்குப் பண வரவு அதிகரிக்கவும், குண்டர் கும்பல் உறுப்பினர்களின் கை  ஓங்கியது.5 போதைப்பொருள் விநியோகத்தைத் தொழிலாகச் செய்த குண்டர் கும்பல் உறுப்பினர் பலர் போதைக்கே அடிமையாகி நலிந்து போனதும் உண்டு. மேலும், நாட்டில் துப்பாக்கி பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியபின் இந்தோனேசியக் கூலி கொலையாளிகளைப் பயன்படுத்தும் நிலையும் பெருகியது. ஆகவே, இந்திய குண்டர் கும்பல்கள் பொருளாதாரச் சிக்கலில் சிக்குண்டு கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆட்களை இழக்க ஆரம்பித்தன. போதைப்பொருள் தடை சட்டங்களால் கடுமையாகத் தண்டிக்கப்படுவதை தவிர்க்க நினைத்தவர்கள் தத்தம் பொருளாதாரச் சூழலைப் பொறுத்து கிடைத்த வேலைகளைச் செய்ய தொடங்கினார்கள்.

ஆகவே அவர்கள் ஆள் கடத்தல், நாட்டின் எல்லைகளில் துப்பாக்கி கடத்தல், வங்கி கொள்ளை, வாகன திருட்டு, வழிபறி போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட தொடங்கினர். இவற்றை இவர்கள் தனித்தோ பிற இன குண்டர் கும்பல்களுடன் இணைந்தோ செய்தனர்.

தொன்னூறுகளில் தொடக்கக் கட்டமாக இம்மாற்றம் வந்தது. அப்போதைய பிரதமர் நாட்டை முன்னேற்றும் திட்டத்தோடு தோட்டங்களை அழித்து நகரமாக்க முற்பட்டார். ஆயினும் அவர்  தோட்டங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. எடுத்துக்காட்டாக, இப்போது அரசாங்க அலுவலகங்களின் மையமாக விளங்கும் புத்ரா ஜெயாவை சொல்லலாம். தொடக்கத்தில் இவ்விடம் தமிழ் குடும்பங்களின் வாழ்விடம் என்றால் இன்று நம்புவது சிரமம்.

நகரமயமாக்களுக்கு இலக்கான பல மலாய் கம்பங்களுக்கும் ஃபெல்டா (Felda) நிலத்திட்ட உரிமையாளர்களுக்கும் கிடைத்த இழப்பீடுகளைப் போன்று இந்திய தோட்டப் பாட்டாளிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. பெரும்பாலான இந்தியர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாயினர். பெராங் பெசார், செப்பாங், டிங்கில், சிட்ஜிலி  போன்ற தோட்ட மக்கள் தங்களுக்குக் கிடைத்த சொற்ப இழப்பீட்டையும் குறுகலான அடுக்குமாடி வீடுகளையும் நம்பி தங்களின் அடுத்தக்கட்ட வாழ்க்கையைத் திட்டமிட வேண்டியிருந்தது.  ஆனால் இன்று, அந்தத் தோட்டங்களில் இருந்த சில கோயில்களுக்கு இழப்பீடாக இப்போது புத்ராஜெயாவில் ஒரு பிரமாண்ட கோயில் கட்டப்பட்டுவிட்டதை மட்டுமே தலைவர்கள் சாதனையாக சொல்வதைக் கேட்க முடிகிறது.

இதே நிலை நாட்டின் பிற பெருநகர் திட்டமிடலிலும் நடந்தது. பினாங்கில், பிறை வட்டாரத்தில் கம்போங் தெலோல் என்னும் புறம்போக்கு பகுதியை மேம்படுத்த அன்றைக்கு ஆட்சி செய்த பினாங்கு மாநில பாரிசான் அரசாங்கம் அங்கிருந்த மக்களை தற்காலிகமாக, மறுநிர்மானிப்பு செய்யப்பட்ட கொள்கலன்களை வீடுகளாக்கி சுமார் பத்து ஆண்டுகள் வரை தங்க வைத்தது. பல போராட்டங்களுக்குப் பின் மிகவும் பாதுகாப்பற்ற இரு நாற்பது மாடி மலிவுவிலை அடுக்குமாடிகளைக் கட்டி அங்கே இவர்களைக் குடியேற்றியது. ஆயினும் வழக்கம்போல ஒரு தமிழ்ப்பள்ளியையும் ஒரு கோயிலையும் மேம்பாட்டாளரின் தயவில் கட்டிக் கொடுத்து கழுவாய் தேடிக் கொண்டது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பினாங்கில் கம்போங் புவா பாலா அகற்றப்பட்டபோது எழுந்த சிக்கல்களையும் நாம் இவற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

இவ்வாறான சூழலில்தான் தமிழர்கள் வாழ்வில் பெரும்பாலான மாற்றங்கள் ஏற்பட்டன. வாழ்க்கைச் சூழல் அவர்களை இறுக்கமாக மாற்றியது. ஆண்களும் பெண்களும் தொழிற்சாலைகளில் மூன்று நேர வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். பிள்ளைகளின் கல்வியிலும் வளர்ச்சியிலும் போதிய கவனிப்பு இல்லாத நிலை உருவானது. பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க இரவு பகல் பார்க்காமல் அலைய வேண்டிய நிலை வந்தது. குடும்ப வன்முறைகளும் ஒழுக்கக்கேடுகளும் தலைதூக்கத் தொடங்கின. பெற்றோரின் கவனிப்பற்று வளர்ந்த குழந்தைகள் பள்ளியில் தங்கள் மனம்போன போக்கில் நடந்து கொள்வதாலும் கல்வியில் பின் தங்கிவிடுவதாலும் ஆசிரியர்களின் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படத் தொடங்கியது. பெற்றோர்களின் கவனிப்பு குறைவாக உள்ள பிள்ளைகளும் சிதைந்த குடும்ப அமைப்பில் இருந்து வரும் பிள்ளைகளும் அதிகமாக வன்முறைகளிலும் குண்டர் குப்பல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதைக் காணமுடிந்தது. வன்முறை, போதை, இருள் உலக வாழ்க்கை என அவர்கள் தேடிச்செல்லும் சூழல் அங்கிருந்தே தொடங்குகியது.

குண்டர் கும்பல்களின் பிற முக்கிய ‘தொழில்கள்’

குண்டர் கும்பலைச் சார்ந்தவர்கள் திரைமறைவில் பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தாலும் இன்றைய நிலையில் அவர்கள் சில ‘தொழில்களால்’ நன்கு அறியப்படுகின்றனர். இந்தியர்கள் மட்டும் இன்றி மலாய், சீன இனத்தவர்களும் குண்டர் கும்பலின் இந்த தொழில்களுக்கு ‘வாடிக்கையாளர்களாக’ இருக்கின்றனர்.

கார் இழுவை

10 (2)கார் இழுவை (Tarik kereta) செய்வது குண்டர் கும்பலில் உள்ளவர்கள் பணிப்புரியும் கொஞ்சம் நாகரீகமான தொழில் எனலாம். இதில் அவர்களுக்குமேல் முதலாளி என யாரும் இருக்க மாட்டார்கள். கார் இழுவை தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் அதை தனது சொந்தத்தொழில் என்ற நம்பிக்கையிலேயே செய்கிறார்கள்.

சாலை விபத்துகளால் சேதமுறும் வாகனத்தை இழுத்துச்செல்வது கார் இழுவை தொழில். மக்களின் அவசர தேவையைச் சாதாகமாக்கி செயல்படும் இத்தொழிலில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகின்றன.

விபத்தில் சேதமுற்ற காரை இழுத்துச்செல்லும் பணிக்கு முன்பாகவும் பின்பும் பல்வேறு நுண்ணிய சூழ்ச்சிகள் நடக்கின்றன. முதலாவதாக விபத்துகளைத் திட்டமிட்டு நடத்துவது. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் இந்த வேலைகள் நடக்கின்றன. எண்ணையை ஊற்றி வாகனங்களின் கட்டுப்பாட்டை இழக்க வைத்தல், எலுமிச்சைப்பழத்தில் ஆணியை செருகி வாகனத்தின் சக்கரத்தை வெடிக்க வைத்தல் போன்றவற்றால் விபத்துகளை உருவாக்குகின்றனர். இந்த பணியைப் பெரும்பாலும் ‘Call men’ எனப்படுபவர்கள் செய்கிறார்கள். ‘Call men’ எனப்படுபவர்கள் சாலை ஓரங்களிலும் வீடமைப்புப் பகுதிகளிலும் ஹாக்கிடாக்கியுடன் விபத்து நடக்கக் காத்திருப்பார்கள். எங்கேனும் விபத்து நடந்தால் அதை கார் இழுவை தரகர்களுக்குச் சொல்வது இவர்கள் வேலை. அவ்வாறு சொல்வதால் இவர்களுக்குக் கமிஷன் கிடைக்கிறது. சில சமயங்களில் விபத்துகள் நடக்காதபோது இவர்களே விபத்துகளை உருவாக்க முனைகின்றனர்.

விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வரும் கார் இழுவைக்காரர்களுக்கு வழிவிட்டு மற்றவர்கள் விலகிக்கொள்வர். இழுவை தரகரே கார் உரிமையாளரிடம் பேசி காரை இழுக்கவோ பழுதுபார்க்கும் பட்டறையில் சேர்க்கவோ அனுமதி பெறுவார். தங்களால் சாலையில் ஏற்படும் நெரிசலாலும் பதற்றத்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் காரை அப்புறப்படுத்த மட்டும் சம்மதிப்பதுண்டு. இந்தச் சம்மதமே பல சிக்கல்களுக்கு வழி சமைக்கும் என அவர்கள் அறிவதில்லை. காரை இழுவையில் ஏற்றலாம் என கையெழுத்து இட்ட அடுத்த நிமிடமே கார் இழுவைக்காரர்கள் தங்களின் கறாரான பேச்சைத் தொடங்குவர். தாங்கள் கூறும் பட்டறையில் காரைச் சேர்க்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காரை ஏற்றி இறக்கியதற்காகவே குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் வாதாடுவர். இவ்வாறு வாதாடுபவர்கள் பெரும்பாலும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். தரகர்கள் சொல்லும் கார் பழுதுப்பார்க்கும் பட்டறையில் காரைச் சேர்த்தாலும் குறிப்பிட்ட கமிஷன் பட்டறை மூலமாகத் தரகர்களுக்கு வந்து சேரும். இவ்வாறு இருப்பக்க லாபத்துடன் இத்தொழில் செய்பவர்கள் செழித்து வாழ்கின்றனர்.

கார் பரிமுதல்

கார் இழுவையை மையப்படுத்தி நடக்கும் மற்றுமொரு தொழில் கார் பரிமுதல். இது பெரும்பாலும் வங்கியின் மூலமே நடத்தப்படுகிறது. வங்கியில் தொடர்ச்சியாகக் கார் கடனைக் கட்டாதவர்களிடம் பணத்தை வசூல் செய்ய வங்கியின் துணையுடனேயே இவர்கள் இயங்குகின்றனர். கார் இழுவை போலவே கார் பரிமுதலுக்கும் உரிமம் வேண்டும். இந்த உரிமம் ‘KDNKK & ASM’ மூலமாகப் பெறப்படுகிறது. இந்த உரிமம் உள்ளவர்கள் வங்கியிடமிருந்து கார் கடனைச் செலுத்தாதவர்களின் பட்டியலைப் பெறுகின்றனர். பின்னர் இவர்கள் அந்தப்பட்டியலின் துணையுடன் காரை கண்டுப்பிடித்து பணத்தை வசூல் செய்ய விழைகின்றனர். இயலாதபோது காரை இழுத்துச் செல்கின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளுல் நுழைந்து காரை இழுப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இவர்கள் கார் வெளியாகும் நேரத்திற்காகக் காத்திருக்கின்றனர். இந்தக் கார் எப்போது வெளிவருகிறது என கண்காணிக்கும் பணியைச் செய்வதற்கென்றே சிலர் இருப்பர். அவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட வீடுகளைக் கண்காணித்து கார் வெளியாகும் தகவல்களைத் தருவர்.

கார் பரிமுதலில் குண்டர் கும்பல் தனித்த உத்திகள் மூலம் பணம் சம்பாதிப்பதும் உண்டு. உதாரணமாக கார் உரிமையாளரைக் கண்டுப்பிடித்தப்பின்னர் அவரிடம் பேரம் நடக்கும். மஒன்று, அவர் தனது காரை வங்கியிடம் ஒப்படைத்துவிட வேண்டும் அல்லது வங்கியில் கடன் வாங்கிய பணத்தைச் செலுத்த வேண்டும். இந்த இரண்டு பேரத்துக்கும் ஒத்துவர முடியாதவர்களிடம் தரகர்கள் மூன்றாவது பரிந்துரையை வைப்பர். வங்கிக்குச் செலுத்த வேண்டிய தொகையில் பாதியைத் தங்களுக்குக் கொடுத்தால் கார் கண்ணில் படவில்லை என வங்கியிடம் கூறிவிடுவதாகச் சொல்வர். இதுவே பல சமயங்களில் அவர்கள் தொழிலில் அதிக லாபத்தை ஈட்டித்தருகிறது. வங்கி வழங்குவதைவிட பல மடங்கு லாபமும் கிடைக்கிறது. சில சமயங்கள் பணம் முழுமையாக வசூலாகும் வரை காரைப் பரிமுதல் செய்து கார் உரிமையாளரின் சம்மதத்துடன் இவர்கள் தங்களது பயன்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதும் உண்டு.

வட்டித்தொழில்

பெரும்பாலான குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களின் உபத்தொழில் வட்டி வசூழிப்பதாகும்.11 (2) இந்தத் தொழிலுக்கென்று சில முறைகள் உள்ளன. வட்டிக்கு ஒருவர் பெரிய தொகை வாங்கினால் தன்னிடமுள்ள குண்டர் ஒருவரை அவருக்குப் பொறுப்பானவனாகப் போட்டுவிடுவார் முதலாளி. வட்டிக்கான பணம் சரியாக வரவில்லையெனில் முதல் கேள்வி அந்தப்பொறுப்பாளனை நோக்கியே பாயும். முதலாளியிடம் தொடர்ந்து நல்லப்பெயர் வாங்கவும் தனது கமிஷன் பாதிக்கப்படாமல் இருக்கவும் பொறுப்பாளன் கடன் வாங்கியவரை தொந்தரவு செய்யத் தொடங்குவான். கமிஷனை விரைந்து பெற இந்த பொறுப்பாளர்கள் குறிப்பிட்ட நாளுக்கு முன்பே கடனாளியை நச்சரிக்கத்தொடங்குவதும் உண்டு. இந்த நச்சரிப்பு பொறுப்பாளனின் அவசர பணத்தேவையையும் சார்ந்து சில சமயம் தீவிரமடையும். பணம் கொடுத்த முதலாளிக்கு, இடையில் நடக்கும் இதுபோன்ற உள்வேலைகள் குறித்த அக்கறை இருக்காது. அவரது தேவை குறிப்பிட்ட நாளில் தன் வங்கியில் இருக்கவேண்டிய வட்டியோ அல்லது அசலோதான்.

இந்த வட்டித்தொழிலை கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தத்தொழில் மாணவர்கள் குண்டர் கும்பலுக்குள் நுழைய முக்கிய வாசலாக உள்ளது. வட்டித்தொழிலில் மேலடுக்கில் இருந்து பெரும்பாலும் செயல்படுவது சீனர்கள். அவர்களே இத்தொழிலின் முதலீட்டாளர்கள். பல்வேறு பகுதிகளில் ‘லீடர்’ என அழைக்கப்படும் பண விநியோகிப்பாளர்களுக்கு இவர்களே ரகசியமான முறையில் பணத்தைப் பரிவர்த்தனை செய்கின்றனர். வட்டித்தொழிலில் எவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தாலும் அது இந்த முதலீட்டாளர்களை பாதிப்பதே இல்லை. அவர்கள் நிழல் மனிதர்களாகவே உலவுகின்றனர். பல்வேறு வணிகத்திற்கு முதலீடு செய்வதுபோலவே அவர்களுக்கு வட்டித்தொழிலும் சந்தை வாய்ப்பு மிக்க ஒரு தொழிற்துறை.

‘லீடர்’கள் பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு, உணவகங்கள் உள்ள பரபரப்பான இடம், பொருளாதார அடுக்கில் கடைநிலையில் உள்ள மக்கள் வாழும் பகுதிகளில் தங்களை மையப்படுத்திக்கொள்வர். ஒரு முதலீட்டாளருக்கு பல ‘லீடர்கள்’ இருப்பர். முதலீட்டாளர் ‘லீடருக்கான’ அடிப்படை வசதிகளை உரிய இடத்தில் செய்துகொடுப்பார். இந்த ‘லீடர்களாக’ பெரும்பாலும் இந்தியர்களே இயங்குகின்றனர். ‘லீடர்கள்’ தனியாக இத்தொழிலைச் செய்ய இயலாது. பண வசதி இருந்தாலும் முதலீட்டாளர் ஏற்படுத்திக்கொடுத்த வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு தனியாக வட்டித்தொழில் செய்வதும் தனியாக முதலீடு செய்வதும் கடும் குற்றமாகவே இத்தொழிலில் கருதப்படுகிறது. இந்த ‘லீடர்களுக்கு’ கீழ் வேலையாட்கள் இருப்பர். இவர்கள்தான் வட்டித்தொழிலின் இயந்திரங்கள் எனலாம்.

இந்த வேலையாட்கள் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் ஒரே எண்களை(குண்டர் கும்பல் அடையாள எண்) சேர்ந்தவர்களாக இருப்பதுண்டு. அது இந்தத்தொழிலில் அவர்களுக்குள் சண்டைச் சச்சரவுகள் வராமல் தடுக்கும். மேலே குறிப்பிட்டதுபோல பணம் வசூல் செய்வது; அதை கொடுக்கத் தாமதமாகும்போது மிரட்டுவது; சிவப்பு வண்ண சாயத்தை வீட்டில் ஊற்றுவது; கடன்பட்டவர் வெளியில் செல்ல முடியாதபடி தடுப்பது என இவர்கள் நடவடிக்கை அத்துமீறல்களாகவே இருக்கும். இவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படுவதுடன் வசூலாகும் பணத்தில் குறிப்பிட்ட தொகை கமிஷனாகவும் வழங்கப்படும். இவர்களின் முக்கியமான பணியே மிரட்டுவதுதான். அவ்வாறு மிரட்டி கடன்பட்டவரிடமிருந்து பிடுங்கப்படும் வங்கி அட்டைகளை இவர்கள் வைத்திருக்க அனுமதி இல்லை. இந்தத்தொழிலில் தங்களுக்கு மேல் மட்டத்தில் உள்ளவர்களிடம் காட்டப்படும் நேர்மை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதை அவர்கள் கடைப்பிடிக்காத பட்சத்தில் உட்பூசல்கள் உருவாகின்றன.

கட்டுரைக்காக இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் உரையாடியபோது வங்கி அட்டையை வாங்கி தனக்கு மேலுள்ள ‘லீடரிடம்’ தருவதில் பலருக்கும் விருப்பம் இல்லை என அறிய முடிந்தது. பொதுவாகவே பணம் வசூலிக்கும் குண்டர்கள் குறிப்பிட்ட நாளுக்கு முன்பே தங்கள் தேவைக்காகப் பணத்தை வசூல் செய்து, அதைப் பயன்படுத்தி பின்னர் குறிப்பிட்ட நாளில் முதலாளிகளின் வங்கியில் செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலமே அவர்களால் தங்கள் வாழ்க்கையை ஓரளவு ஓட்ட முடிகின்றது. வங்கி அட்டை ‘லீடர்’ கைகளில் போகும்போது இவர்களுக்கு அந்தச் ‘சலுகை’ கிடைப்பதில்லை.

இந்தத் தொழிலில் இன்னொரு பிரிவினர்தான் மாணவர்கள். குண்டர்கள் இவர்களை ‘பூடாக்’ (Budak) என அழைக்கின்றனர். ‘லீடரின்’ அனுமதியுடன் இவர்கள் இடைநிலைப்பள்ளி மாணவர்களை அணுகுகின்றனர். நம்பிக்கையான மாணவர்கள் மட்டுமே இத்தொழிலுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். வெகுளியான முகமும் நன்கு மலாய்மொழி பேசும் திறனும் இருந்தால் உடனடியாக இத்தொழிலுக்கு வாய்ப்பு கிடைக்கும். ‘பூடாக்’ செய்ய வேண்டியதெல்லாம் தகவல் சேகரிப்பதுதான். இவர்களுக்கு சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி வழங்கப்படும். தொடர்ச்சியாகக் கடனைத் திரும்ப செலுத்தாதவர்களின் தினசரி வாழ்வை கண்காணிக்கும் பொறுப்பு இவர்களது. குறிப்பிட்ட காலத்திற்கு கடன் வாங்கியவர் வீட்டில் உள்ள நடவடிக்கைகளை ஆராய்வதும் அதை வேலையாட்களிடம் தெரிவிப்பதுமே இவர்கள் வேலை. இதற்காக இவர்களுக்கு உணவுக்கான பணம் வழங்கப்படுவதுடன் கடன் வசூலானபின் சிறு தொகையும் கமிஷனாகக் கிடைக்கும். இந்தப் பணியில் ஈடுபடும் மாணவர்கள் பள்ளிக்கு மட்டம்போடுவதோடு பெரும்பகுதி நேரத்தை வீட்டுக்கு வெளியிலேயே செலவிடுகின்றனர்.

‘லீடர்களாக’ இருப்பவர்களிடம் உதவியாளர்களாகக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதுபோல இவர்களிடம் பணியாற்றும் ‘பூடாக்’ வருங்காலத்தில் குண்டர் கும்பலில் இணைய அனைத்து தகுதிகளையும் படிப்படியாக வளர்த்துக் கொள்கிறார்கள்.  வட்டிக்குப் பணம் கொடுக்கும்போது நிபுணத்துவமான பாணியையும் பின்னர் பணத்தை வசூலிக்கும்போது அநாகரீகமான முகத்தையும் காட்டும் குண்டர்களின் தொழில்தான் இதில் அதிகச் சவால் மிக்கது.

வட்டிக்கு கடன் வாங்குவதால் பல்வேறு சிக்கலை அடைபவர்கள் 1,000 முதல் 2,000 வரை கடன் பெற்றவர்களே. இவர்கள் வாங்கிய கடனைவிட பலமடங்கு அதிகப் பணத்தை வட்டியாகவும் வட்டிக்கு வட்டியாகவும் செலுத்தி பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். பெரும்பாலும் ‘லீடருக்கும்’ அவருக்கு மேல் உள்ள முதலீட்டாளருக்கும் இத்தொகை மிகச் சிறியது. சில சமயம் இப்பணத்தை வசூல் செய்ய முடியாதபோது அவர்கள் கடன் கணக்கை ‘பெரிய மனது’ வைத்து முடித்துவிடுவதும் உண்டு. ஆனால் இவ்வாறு முடிக்கப்படும் கணக்கால் இடைத்தரகராக செயல்பட்ட குண்டர்களே பாதிப்படைகின்றனர். அந்தத்தொகையில் அவர்களுக்குக் கிடைக்கும் கமிஷன் பாதிக்கப்படுவதால் ‘லீடர்’ முடித்துவைத்த கணக்கை இவர்கள் சொந்தமாக தொடர்கின்றனர்.
குடும்பச் சீர்கேடு

பெரும்பகுதி சமூகச் சிக்கல்கள் குடும்பத்தில் இருந்தே தொடங்குகின்றன. வன்முறையையும் வெறியாட்டங்களையும் இளஞர்கள் குடும்பச் சூழலில் இருந்தே கற்றுக் கொள்கின்றனர். உடலளவிலும் மனோநிலையிலும் தினமும் குடும்ப வன்முறைக்குள்ளாகும் சிறுவர்கள் தங்களுக்கான வழியாக வன்முறையையே தேர்வு செய்கின்றனர். வேலை இல்லா பிரச்சினை, பொருளாதார நெருக்கடி, மது அடிமை, கடன் சுமை போன்ற பிரச்சினைகளோடு வாழும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் பிழையான முன்னுதாரணமாகின்றனர். உதாரணமாக எழுபது அல்லது எண்பதுகளின் முடிவில் திருமணம் செய்தவர்களின் பிள்ளைகளைச் சொல்லலாம். ஏனெனில் தோட்டத்திலிருந்து அடுக்குமாடி வீட்டிற்கு சென்று வேலையில்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் வீட்டு பிள்ளைகள் வறுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். வீட்டிற்கு தூணாக இருக்க வேண்டிய அப்பா, வீணான மனிதராக நடமாடிக்கொண்டிருக்கும்போது அம்மாவும் வழி மாறிப்போன கதைகள் உண்டு. உழைக்க விரும்பாத குடிகார கணவனை நம்பி வாழ்வதை விடவும், வேலைக்கு வந்திருக்கும் வெளியூர்காரரையோ பக்கத்துவீட்டுக்காரரையோ நம்பலாம் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களின் கதைகளும் ஏராளம்.

பெற்றோரின் போக்கையும் சண்டை சச்சரவுகளையும் தினமும் கவனிக்கும் பிள்ளைகள் அதிலிருக்கும் சிக்கலை புரிந்துக் கொள்ள முயற்சிப்பதில்லை. ஆனால் அதிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ள முயல்கிறார்கள். அவ்வயதில் ஏற்படும் மனக்குழப்பம், அருவருப்பு, இயலாமை, வெளிபடுத்த முடியாத கோபம் முதலானவை அவர்களின் ஆளுமையை முற்றிலும் எதிரான திசைக்கு உந்தித் தள்ளுகிறது. தாழ்வு மனப்பான்மையால் உண்டாகும் அச்சமும் கோபமும் ஒரு இந்திய இளைஞனின் ஆளுமையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கிறது. மிகவிரைவில் அவர்கள் தங்களுக்கான உலகைத் தேடிக்கொள்கிறார்கள். சீரழிந்துக்கொண்டிருக்கும் குடும்பத்திலிருந்து உதிரியாக வெளிவரும் பிள்ளைகள் மேலும் சீரழிவுகளைக் கொண்டு வருகிறார்கள்.

இதுபோன்ற பொறுப்பற்ற குடும்பங்களில் அதிக பிள்ளைகள் இருந்தாலும் ஒருவருக்கும் பிறப்புப்பத்திரமோ அடையாள அட்டையோ இருப்பதில்லை. அதுவே பள்ளி செல்வதற்கான வாய்ப்பையும் இழக்க வைக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்ட பின்னரும் சிவப்பு அடையாள அட்டை பிரச்சினை ஒரு பக்கமும் அடையாள அட்டையே இல்லாமல் இருக்கும் பிரச்சினை இன்னொரு பக்கமும் உள்ள சமூகம் இந்தியர்களாகத்தான் இருக்க முடியும். கணினியும் இணையமும் உலக தகவல்களை கடலென வாரி வழங்கும் இன்றைய சூழலிலும், ‘மெகா மைடஃதார்’ (Mega MyDaftar) போன்ற பெரிய இயக்கங்கள் நடத்தி அடையாள ஆவண பிரச்சினையை தீர்க்கவேண்டிய சமூகமாக நாம் இருப்பது அவமானம்.

வறுமையும் கல்வியும்

இளைஞர்கள் தங்கள் சுய பொருளாதார தேவையையும் குடும்ப சுமையையும்9 தீர்த்துக்கொள்ளும் தகுதியும் அறிவும் இன்றி குறுக்கு வழிகளையும் சட்டவிரோத வழிகளையும் நாடுகின்றனர். வேலை வாய்ப்பு இல்லாமலும் தொடர்ந்து படிக்க இயலாமலும் தங்களின் அடுக்குமாடி குடியிருப்பில் சுற்றித் திரிகின்றனர். ஓரிடத்தில் நீண்ட நாள் வேலை செய்யும் பொறுமையும் அவர்களிடம் இருப்பதில்லை. இவ்வாறானவர்களைக் குண்டர் கும்பலில் இணைப்பது சுலபம். அவ்வப்போது தலைவன் சொல்லும் சிறு சிறு வேலைகளுக்குச் சம்பளமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் சிறுதொகைக்கு விசுவாசத்தை அதிகமாகவே காட்ட அவர்கள் தயாராக இருப்பதும், அதோடு ஆடம்பர வாழ்க்கையைச் சுவைக்க இளைஞர்கள் குண்டர்கும்பலில் இணைந்து எளிய வழியில் பணம் சம்பாதிக்க முயல்வதும் நிகழ்கிறது. சில மணிநேர வேலைக்கு ஆயிரக்கணக்கான வெள்ளிகள் கிடைக்கும் என்ற பேராசையில் போதைப்பொருள் கடத்தி போலீசிடம் பிடிபட்டவர்கள் பலர். பெரும் பணத்துக்கு ஆசைப்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்டு சுட்டுவீழ்த்தப்பட்ட குண்டர் கும்பல் உறுப்பினர் பலர்.

மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மாணவர்களின் மேற்கல்வி குறித்த கணக்கெடுப்பு மிக முக்கியமானது. 2011-இல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி 35,000 இந்திய மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளியில் இணைகின்றனர். இவர்களில் 28,000 மாணவர்கள் மட்டுமே முழுமையாக இடைநிலைக்கல்வியை முடித்து எஸ்.பி.எம் எனும் அரசாங்க சோதனையை எழுதுகின்றனர். இவர்களில் 3,000 மாணவர்கள் மட்டுமே எஸ்.தி.பி.எம் சோதனையில் அமர்வது அதிர்ச்சியான தகவல். 1,500 மாணவர்கள் மட்டுமே இவர்களில் அரசாங்க பல்கலைக்கழகத்தில் இணைகிறார்கள் என்கிறது இந்தக் கணக்கெடுப்பு.மேலும் 13 வயதிலிருந்து 17 வயதுவரை உள்ள 7,000 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்வியைத் தொடர முடியாமல் பள்ளிச்சூழலை விட்டு அகற்றப்படுகின்றனர். இவர்கள் எதிர்காலம் குறித்தோ சமூகத்தில் இவர்கள் என்னவாக மாறியுள்ளனர் என்பது குறித்தோ அக்கறை இல்லாத சமூகத் தலைவர்கள்தான் இன்று மருத்துவக்கல்லூரிகளையும் அதிகக்கட்டணம் வாங்கும் தனியார் பல்கலைக் கழகங்களையும் நடத்திக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் யூ.பி.எஸ்.ஆர் சோதனையின் தேர்ச்சியை மட்டுமே சமூகத்தின் வளர்ச்சி என பொய்யுரைக்கின்றனர்.

மேலும் மை ஸ்கில்ஸ் அறவாரியம் மேற்கொண்டுள்ள ஆய்வின் அடிப்படையில் பள்ளிச்சூழலைவிட்டு வெளியேறும் பத்து மாணவர்களில் நால்வர் குண்டர் கும்பல் மூலமாக வன்முறையிலும் பத்து மாணவர்களின் மூவர் போதைப்பழக்கத்திற்கும் பத்து மாணவர்களில் ஐவர் மது பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர் எனக் குறிப்பிடுகின்றது.

இதன் அடிப்படையில் ஓர் இளைஞன் குண்டர் கும்பலில் இணைய குடும்பம், பள்ளிச்சூழல், சமூகம் என பலவும் காரணமாக இருப்பதை அறிய முடிகிறது. அரசின் தவறான செயல்திட்டங்களும் இந்திய அரசியல்வாதிகளின் ஆரோக்கியமற்ற வழிநடத்தல்களும் சமூக அமைப்புகள் காட்டும் அலட்சியமும் இளைய சமூகம் குண்டர் கும்பல் கலாச்சாரத்தை நோக்கி நகர காரணமாகின்றன. ஆகவே, இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பலில் ஈடுபடுவதன் பொறுப்பை நாம் அனைவருமே பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் பொறுப்பேற்க வேண்டிய அனைவருமே அம்பை மட்டுமே நோகிறோமே தவிர எய்தவர்களை மறந்துவிடுகிறோம்.

முடிவு

இன்று சமூகத்தின் பெரும் பிணியாக வளர்ந்துவிட்டிருக்கும் வன்முறைக்கும் குண்டர் கும்பல் கலாச்சாரத்திற்கும் தீர்வுகாண அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். குடும்ப நிர்வாகத்தைப் பெற்றோர்கள் செம்மைபடுத்தும் அதேவேளை சமூக நிர்வாகத்தை செம்மைபடுத்த தலைவர்கள் முன்வரவேண்டும்.

இதுவரை மலேசிய அரசாங்கம் 11 திட்டங்களை (Rancangan Malaysia ke-11) வகுத்து செயல்பட்டுள்ளது. ஆனால் அடிதட்டு இந்திய இளைஞர்களை சமூகத்தில் நிலையான இடத்தில் இருத்திவைக்கும் பொருத்தமான திட்டம் எதையும் முன்னெடுத்ததில்லை. போதிய கல்வி தேர்ச்சி அற்ற மலாய் இளைஞர்களுக்கு மாரா தொழில் பயிற்சி கல்லூரி, கியாட் மாரா போன்ற கல்லூரிகளில் பல பயிற்சிகள் வழங்கப்படுவதுபோல் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனூடே அண்மைய காலமாக இந்திய மாணவர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் ‘கோமுணீட்டி கல்லூரி” (Kolej komuniti), தொழில் திறன் கல்லூரி’ போன்ற வாய்ப்புகளையும் நமது மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். பணம் சம்பாதிக்க பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி மாணவர்களைக் கவரும் தனியார் கல்லூரிகளின் கவர்ச்சியில் சிக்குவதால் ஏழைச்சமூகம் இன்னும் ஏழையாகவும் கடனாளியாகவும்தான் மாறும் என்பதை மாணவர்களும் பெற்றோரும் உணரவேண்டும்.

பிரதமர் துறை கடந்த மூன்று ஆண்டுகளாக மலேசிய இந்திய சமூக செயல்பாடுகளுக்காக சீடிக் (Sedic) என்ற பண ஒதுக்கீட்டை செய்து வருகிறது. நாட்டில் உள்ள பல அரசு சாரா இயக்கங்கள் இந்த மானியத்தைப் பெற்று தங்கள் ஆண்டு திட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒரு சில இயக்கங்களைத் தவிர்த்து பெருவாரியான இயக்கங்கள் மேம்போக்கான திட்டங்களையும் விளம்பர நோக்கம் கொண்ட வெற்று நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டிருப்பது வருத்தம் தருகிறது. உண்மையில் சீடிக் மானியத்தின்வழி முறையாக திட்டமிடல்களை மேற்கொண்டால் சரியான இலக்கை நாம் அடைய முடியும். குறிப்பாக இளையோரை தொழில் திறன் பெற்றவர்களாக மாற்றுவதன் வழி சுயதொழில் செய்யும் சமூகமாக அவர்களை உயர்த்த முடியும்.  அதேபோல் அண்மையில் அறிவிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களின் தூரநோக்கு திட்டம் (Malaysian Indian Blueprint) அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்த வேண்டும். அரசியல் நோக்கத்திற்காகவும் தேர்தல் நோக்கத்திற்காகவும் முன்வைக்கப்பட்ட வெற்று வாக்குறுதிகளாக அவை மறைந்துவிடக் கூடாது.  டத்தோ பத்மநாதன் முன்மொழிந்த பொருளாதார தூர நோக்கு திட்டத்தை தனிப்பட்ட அரசியல் பகைமையால் செயல்படுத்த விடாமல் செய்த அதிகார அடாவடித்தனங்களும் நிகழாமல் இருக்க வேண்டும்.

மலேசிய இந்தியர்களை மையமாக கொண்டு பல பொது இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் செயல்பட்டாலும் நாம் அறிந்தவரை தற்போது மை ஸ்கில்ஸ் அறவாரியம் மட்டுமே சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களை மையப்படுத்தி தொழில் திறன் பயிற்சிகளை வழங்கி வருவதைக் காணமுடிகிறது. குண்டர் கும்பலில் ஈடுபட்ட மாணவர்களை உளவியல் ரீதியிலும் அறிவுத்திறன் அடிப்படையிலும் கல்வி மூலம் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித்தர இந்த அறவாரியம் முன்வந்துள்ளது. நாட்டில் கல்வி சார்ந்து இயங்கும் பிற அமைப்புகளின் கவனமும் கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் மீதும் தொடர்ந்து கற்க வாய்ப்பில்லாத சிறுவர்கள் மீதும் குவிந்தால் சமுதாய மாற்றம் நிச்சயம்.

 

அ.பாண்டியன்
தயாஜி

5 comments for “குண்டர் கும்பல் கலாச்சாரமும் தமிழ்ச் சமூக மெளனமும்

  1. January 6, 2018 at 11:51 pm

    மிக நுண்ணிய ஆய்வுடன் எழுதப்பட்ட கட்டுரை. பாராட்டுகள்.

  2. January 17, 2018 at 9:32 am

    தமிழர்கள் அனைவரும் இக்கட்டுரையை வாசித்து அறிவுபூர்வமான
    மாற்றங்களை மக்களிடையே பரப்ப முனைதல் வேண்டும்.
    குற்றவாளி கூண்டில் வீழ்ந்து கிடக்கும் இளையோருக்கு உதவிக்கரம்
    நீட்டவேண்டும்.
    கட்டுரையாளர்கள் துணிவுடன் வெளிகொணர்ந்த உண்மைகளுக்காகப்
    பாராட்ட வேண்டும்.

  3. Brem
    August 6, 2018 at 8:40 pm

    மிக நேர்த்தியான பதிவு. வாழ்த்துகள்.

  4. komathy
    August 8, 2018 at 2:42 pm

    இந்த கட்டுரையை எங்கள் இதழில் பிரசுரிக்க அனுமதி கோருகிறோம். நன்றி

  5. yavanikasriram
    March 14, 2022 at 5:07 am

    மலேசிய இந்தியர்களின் இன்றைய சமகால அவலம் மிகச்சிறந்த முறையில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு ஆழ்ந்த கவலையோடு அதற்கான மாற்றுகளின் வழியையும் இக்கட்டுரை தனக்குள் முன்வைக்கிறது

    மை ஸ்கில்ஸ் அமைப்பிற்கு வாழ்த்துகளைத்தெரிவித்தாலும்
    இன்னுமான அதன் பணிகள் தீவிரம் பெறத்தான் வேண்டும்

    பாண்டியனுக்கும் தயாஜிக்கும் வல்லினத்திற்கும் பாராட்டுகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...