மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் நாளிதழ்களின் பங்களிப்பு முக்கியமானது. சிறுபான்மை இனமான இந்தியர்களின் எழுச்சிக்கும் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் நாளிதழ்களே ஒவ்வொரு காலத்திலும் பெரும் பங்காற்றியுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக தமிழ்ப்பத்திரிகையை இயக்கியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து மலாயாவுக்கு வந்திருந்த படித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இந்தியாவில் இருக்கும்போது பத்திரிகைத் துறையிலும் அரசியல் இயக்கங்களிலும் அனுபவம் பெற்றவர்களாக இருந்ததால் மலாயாவில் அவர்களுக்கு பத்திரிகை நடத்துவதில் ஆர்வமும் அனுபவமும் இருந்தது.
இதே சூழலில் மேல்தட்டு இந்தியர்கள் ஆங்கில நாளிதழ்களில் அதிக ஆர்வம் காட்டினர். மொழி, கலாச்சாரம் போன்ற விவகாரங்களில் இந்தியர்களால் நடத்தப்பட்ட ஆங்கில பத்திரிகைகள் ஆர்வம் காட்டவில்லை. இந்தியர்களின் சமூக அரசியல் பிரச்சினைகள், இந்தியர்களுக்கான அடையாளங்கள் போன்றவைகளில் மட்டுமே இவர்களின் அக்கறை அடங்கி இருந்தது.( The Indian, Indian Pioneer).
இப்பத்திரிகைகள் இந்தியர்களுக்கான அரசியல் சமூக அமைப்பினை உருவாக்கும்படி தலைவர்களை வலியுறுத்தி வந்தன. இந்தியர்கள் என்ற ஒரே குடையின் கீழ் அனைவரையும் ஒன்றினைக்கும் சக்தியாக இப்பதிரிகைகள் செயல்பட்டன. தொடர்ந்து செய்திகள் மூலம் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக மலாயா மத்திய இந்தியர் இயக்கம் (Central Indian Association of Malaya – செப்டம்பர் 1936) தோன்றக் காரணமாக இருந்தது . இதுவே மலேசியாவின் முதல் அரசியல் சமூக இயக்கமாகும்.
ஆய்வாளர் நா.பாலபாஸ்கரனின் கருத்துப்படி 1883-இல் பினாங்கில் வெளிவந்த ‘வித்தியா விசாரிணி’ என்ற நாளிதழே மலேசியப் பத்திரிகை உலகின் தொடக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. உலகத் தமிழ் நாளிதழ்களில் சுமார் 82 ஆண்டுகளாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மூத்த நாளிதழ் மலேசியாவில் வெளிவரும் தமிழ் நேசன் என்கிறார் கவிஞர் முரசு நெடுமாறன். 1924-இல் கி. நரசிம்ம ஐயங்காரால் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை தொடக்கத்தில் வார இதழாகச் செயல்பட்டது. இந்தியாவுடனான வணிகத் தொடர்பு உள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் வணிகம் தொடர்பான தகவல்களைத் தமிழ் நேசன் பிரசுரித்து வந்தது. இந்தியாவுக்கான கப்பல் பயண அட்டவனை தகவல், சந்தைப் பொருட்களின் விலை நிலவரங்கள், வணிக முக்கியத்துவம் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கைகள் போன்ற வணிகர்களுக்குத் தேவையான தகவலை தமிழ் நேசனில் வெளிவந்தது. அதே சமயத்தில் கவிதைகள், சிறுகதைகளுக்கும் தமிழ் நேசனில் இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல 1930களில் மிகவும் புகழ் பெற்ற தொழில் அதிபரான ஓ.ஏ.ஆர் அருணாசலம் செட்டியார், தமிழ் மொழி, இலக்கியம் வளர வேண்டும் எனும் நோக்கத்தில் 1938-இல் வாராந்திர இதழாக தமிழ்க் கொடியை ஆரம்பித்தார்.
ஆக, மலேசியத் தமிழர்கள் இந்நாட்டுக்கு உழைக்கும் வர்க்கமாக வந்திறங்கினாலும் அவர்களின் பத்திரிகையினூடான பயணத்தைத் தவிர்த்துவிட்டு முழு மலேசியத் தமிழர்களின் வரலாற்றைப் பேசிவிட முடியாது.
பத்திரிகைகளும் முன்னெடுப்புகளும்
ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய ‘மலாயன் யூனியன்’ திட்டத்தினால் இந்தியர்களின் நன்மைகள் பாராமுகமாக இருந்து விடக்கூடாது என்பதில் ஜனநாயகம், தமிழ் முரசு, தமிழ் நேசன் ஆகிய தமிழ் நாளேடுகள் முக்கிய பங்காற்றின. மலாயன் யூனியன் திட்டம் குறித்து தமிழ் நேசனில் சில தகவல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. (27 அக்டோபர் 1945). ஜனநாயகம் பத்திரிகை பல சிறப்பு கட்டுரைகள் வெளியிட்டது. (22,24 ஜனவரி; 6 பிப்ரவரி; 2,6 மார்ச் 1946).
மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா) தோற்றுவிப்பதற்கான ஆலோசனையைக் கொண்டு வந்த ஜோன் தீவியை ஆதரித்து தமிழ்ப் பத்திரிகைகள் பேசின. இந்திய மக்களுக்கான ஓர் அரசியல் கட்சியின் தேவையை தமிழ்ப் பத்திரிகைகள் எடுத்துரைத்தன. (ஜனநாயகம் 24 ஏப்ரல் 1946) ஜோன் தீவியின் நாடு தழுவிய மக்கள் சந்திப்பு குறித்த செய்திகளை பரவலாகப் பிரசுரம் செய்யப்பட்டது. (ஜனநாயகம், மே , ஜூன் ,ஜூலை, ஆகஸ்ட் 1946, தமிழ் நேசன் ஆகஸ்ட் 1946).
குடியுரிமையை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் ம.இ.கா உறுதியாக இல்லாததை எதிர்த்து பத்திரிகைகள் அதிருப்தி அடைந்தன. கூட்டரசு குடியுரிமையை ஏற்றுக்கொள்வதா இல்லையா எனும் குழப்பத்தில் ம.இ.கா இருந்து வந்ததமையால் நிபுணத்துவ பணியாளர்களும், வியாபாரிகளும் இக்குடியுரிமையை ஏற்கத் தயங்கினர். இதனை ஏற்றுக்கொண்டால் பிரிட்டிஷ் குடியுரிமை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் இவர்கள் இருந்தனர். அனைவரையும் பிரதிநிதிக்கும் கட்சியாக ம.இ.கா செயல்பட்டதால் குடியுரிமையை ஏற்கும் முடிவில் தயக்கம் காட்டியது. ம.இ.காவின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து ஜனநாயகம் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையைப் பிரசுரித்தது. குடியுரிமையின் முக்கியத்துவத்தையும் அதனை ஏற்கும்படியும் இந்திய சமூகத்தைக் கேட்டுக்கொண்டது. (24 அக்டோபர் 1946). ம.இ.கா வின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த ஜனநாயகம் , இந்தியர்களின் நலன்காக்க மாற்றுக் கட்சியைத் தொடங்கும் ஆலோசனையை முன்வைத்தது (28 அக்டோபர் 1946). பிறகு பலன் ஏதும் விளையாததை உணர்ந்த ஜனநாயகப் பத்திரிகை, ம.இ.கா தலைமைத்துவத்தின் மாற்றத்திற்கு ஆலோசனை வழங்கியது. இங்குள்ள இந்தியர்களின் உணர்வுகளை அறிந்திருக்கும் தலைவர் வேண்டும் என்றும் இது சாத்தியப்பட தொழிலாளர்கள் அதிகமாக அக்கட்சியில் உறுப்பினராக சேரவேண்டும் என்று ஜனநாயகம் தொழிலார்களைத் தூண்டியது.( 17,19,23 பிப்ரவரி 1948).
ஜனநாயகப் பத்திரிகையின் தொடர் அழுத்தத்தால் கல்விமான்கள் கூடி ஒரு முடிவை எடுத்தனர். கூட்டரசு குடியுரிமை இல்லாதவர்கள் ம.இ.காவில் உறுப்பினர்களாகச் சேர முடியாது என்னும் கட்சியின் சட்டத்திட்ட மாற்றங்களை முன்வைத்தனர். 1949ஆம் ஆண்டுக் கூட்டத்தில் ம.இ.கா இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. இந்தப் பரிந்துரையை ஆதரிக்குமாறு ஜனநாயகப் பத்திரிகை பேராளர்களைக் கேட்டுக் கொண்டது. (9 ஜூலை 1949). 5 மார்ச் 1950-இல் நடந்த மாநாட்டில் மலாயாவில் நிரந்தரமாக வாசிக்க முடிவெடுத்திருப்பவர்கள் குடியுரிமைக்கு பதிவு செய்யவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை பெற்றவர்களே ம.இ.காவில் உறுப்பியம் பெற முடியும் என்பது நிறைவேற்றப்பட்டது.( தமிழ் முரசு , 28 நவம்பர் 1950).
அன்று இந்தியர்களை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளச் செய்தது தமிழ்ப் பத்திரிகையின் ஆளுமைகளே. இந்தக் குடியுரிமை ஏற்பால் இன்றைய நடப்பு மலேசியாவில் இந்தியர்களும் ஓர் அரசியல் சக்தியாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர். மலேசிய மண்ணில் இந்தியர்களுக்கான அரசியல் அங்கீகாரம் வழங்கப்படுபவதற்கு தமிழ்ப் பத்திரிகைகளின் சமுதாய அக்கறையும் தூரநோக்கும் அதனை நடத்திய ஆளுமைகளின் பொது நலமும் காரணமாக இருந்துள்ளன. இன்று சட்டத்தில் உள்ள சலுகைகள் ம.இ.கா எனும் தணிப்பட்ட கட்சியால் கிடைக்கப்பட்டவை அல்ல (கே. அன்பழகன், Pelopor Persuratkhabaran India Di Malaysia: Pemikiran Dan Wawasan)
1975ஆம் ஆண்டில், தமிழ்ப் பள்ளியை மூடவேண்டும் என்ற மேல் தட்டு மக்களின் வேண்டுகோளை எதிர்த்து தமிழ் பத்திரிகைகள் போராடின. தமிழ் நேசன் தமிழ் பள்ளிகளைக் காப்பாற்றும் போராட்டத்திற்காக நிதி திரட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நரசிம்ம ஐயங்காரின் மறைவுக்குப் பிறகு சிறிது காலம் சீனரிடம் கைமாறி, பின்னர் 1947முதல் மலையாண்டி செட்டியாரின் கைவசம் வந்த தமிழ் நேசனுக்கு இந்நாட்டின் மொழி, இன வளர்ச்சியில் நீண்ட வரலாற்றுப் பங்குண்டு. எழுத்துலகில் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது, சுப.நாராயணன், பைரோஜி நாராயணன் மூலமாக 1950களில் கதை வகுப்பு ஆறு மாதங்கள் நடத்தியது, 1952-இல் பொறுப்பாசிரியராகப் பதவியேற்ற பிரபல எழுத்தாளர் கு.அழகிரிசாமி முன்னெடுத்த இலக்கிய முயற்சிகள், 1972-இல் முருகு சுப்ரமணியம் ஆசிரியராகப் பொறுப்பேற்று தமிழ் நேசனில் நடத்திய ‘பவுன் பரிசு திட்டம்’ எனத் தொடர்ந்து மலேசிய எழுத்தாளர்களுக்கு உந்துதல் கொடுத்ததன் வழி மலேசியாவில் தமிழ் இலக்கியம் செழித்திருப்பதற்கான முக்கியமான பணிகளை ‘தமிழ் நேசன்’ செய்துள்ளது என்றால் அது மிகையில்லை.
தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாட்டுச் சின்னமாகக் கருதப்படும் தமிழவேள் கோ.சாரங்கபாணி 1934-இல் தமிழ் முரசு பத்திரிகையை ஆரம்பித்தார். இதற்கு சான்றாக நா.பாலபாஸ்கரனின் ‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்’ என்ற விரிவான ஆய்வு நூல் பல அரிய தகவல்களை முன்வைக்கிறது. அப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய கோ.சாரங்கபாணி, தம் முன்னுரைகள் மூலம் சீர்த்திருத்தச் சிந்தனைகளைத் தூண்டி, மறுமலர்ச்சிக்கு வழிகோலி ஒரு திருப்புமுனையை மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்த முனைந்தார் என்பதை அணுமானிக்க முடிகிறது. ஈ.வெ.ராவின் கருத்துகள் இங்குள்ள எளிய மக்களை எட்ட தமிழ் முரசு துணை நின்றுள்ளது. 85% வறுமை வயப்பட்ட தோட்டத்தொழிலாளர்களாகவும் உரிமை உணர்வு அற்றவர்களாகவும் பட்டணப்பகுதியில் வாழ்ந்தோரிலும் மிகப்பலர் தன்முனைப்பற்று எழுச்சி எண்ணமின்றி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த நிலையில் தமிழ் முரசு மூலம் கோ..சாரங்கபாணி புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் பெரிதளவில் முனைப்பு காட்டினார். சிறுவர்களுக்கான சிறப்புப் பக்கத்தை தமிழ் முரசு கொண்டிருந்தது. எழுத்தாளர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் மணிமன்றம் பல எழுத்தாளர்கள் உருவாக முக்கியக் காரணமாக அமைந்தது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இதன்வழி எழுத்தாளர்கள் உருவாகினர். இவர்களே பின்னாளில் தமிழ் மணிமன்ற இயக்கத்தின் முக்கிய பங்களித்து மொழி வளர உதவினர்.
இதேபோல ஆதி.குமணன் பொறுப்பேற்றிருந்த ‘தமிழ் ஓசை’ பத்திரிகை குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் ஆதரவு பெற்று முன்னனி வகித்தது. காலஞ்சென்ற சட்டமன்ற உறுப்பினர் க.சிவலிங்கத்தால் தொடங்கப்பட்டது இப்பத்திரிகை. வானம்பாடி வார இதழில் பெற்ற முன் அனுபவம் ஆதிகுமணனுக்கு நாளிதழ்துறையில் பெரிதும் உதவியது. தமிழ் ஓசை நாளிதழை அவர் அரசியல், இலக்கியம் சமூக சிந்தனை என்று பல்வேறு கோணங்களிலும் மாற்று கருத்துகளை முன்னிலைப்படுத்தும் களமாக அமைத்துக் கொண்டார். தமிழ் ஓசை கவிதை துறையில் புதிய வடிவங்கள் வளர களமாய் விளங்கியது என்கிறார் முரசு நெடுமாறன் .வியாபார ரீதியாக மட்டும் இல்லாமல் அது தனது கொள்கைகளிலும் வெற்றி பெற்ற இதழாக இருந்தது.
1986-இல் முரு.சொ.நாசியப்பனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த மலேசிய நண்பனுக்கு, 1990-இல் ஆதி.குமணன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தை முதல் நாளைத் தமிழ் புத்தாண்டாக வலியுறுத்தியதிலும், கலை, இலக்கிய பண்பாட்டு வளர்ச்சிக்குத் தமிழர் திருநாளை முன்னெடுத்ததிலும் சமுதாயத்தைச் சிதைத்துக் குலைக்கும் சாதி ஒழிப்பைக் குறிக்கோளாய்கொண்டு பெயர்களில் ஒட்டியிருக்கும் சாதி பெயர்களை (அது செய்தியாக அல்லது விளம்பரமாக இருந்தாலும்) ஏற்பதில்லை என்ற முடிவும் அவரது உறுதியான கொள்கையை நிலைநாட்டின.
இதழ்களும் ஆளுமைகளும்
ஜப்பானியர் ஆட்சியிலிருந்தே பல பத்திரிகை ஆசிரியர்கள் தங்களைச் சமூகப் போராட்டத்துடன் இணைத்துக்கொள்பவர்களாக இருந்துள்ளனர். ஜப்பான் ஆட்சியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலர் இந்திய சுதந்திர இயக்கத்திலும் (IIL), இந்திய தேசிய ராணுவ இயக்கத்திலும் (INA) இணைந்தனர். இது இவர்களுக்கு முற்போக்கு உணர்வை விதைத்தது. இன்னும் சிலர் இடது சாரி சித்தாந்தத்தில் கவரப்பட்டு மலாயா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொண்டனர். சுய ராஜ்ஜியம் என்ற பொருள்கொடுக்கும் ‘ஸ்வராஜ்’ பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார் கோ.சாரங்கபாணி. IIL இயக்கத்தின் பரப்புரையாக இப்பத்திரிகை செயல்பட்டது.இவ்வியக்கத்தில் உள்ளவர்கள் சிலர் இப்பத்திரிகைக்கு செய்திகளைச் சேகரித்துக் கொடுத்தனர். இப்பத்திரிகையிலிருந்து வளர்ந்தவர்களில் ஒருவர் சுப்பிரமணியம் ஐயர். இவர் ஜனநாயகம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இந்தப் பத்திரிகை PKM கட்சியின் ஆதரவில் நடத்தப்பட்டது என்றும் போராளிகளின் குணம் படைத்ததாக விளங்கியதாகவும் ஆய்வாளர் ராஜேஸ்வரி கூறுகிறார்.( 1981).
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி அல்லது மலாயா கணபதி(1947) கம்யூனிஸ்டு சித்தாந்தத்தில் கவரப்பட்டார். முன்னனி பத்திரிகைக்கு ஆசிரியராகப் பணியாற்றிய கணபதி, முதலாளியத்துவ எதிர்ப்புக்கு வித்திட்டார். கணபதியின் செயல்பாடு தொழிலாளர்கள் மத்தியில் உரிமைப் போராட்ட உணர்வுக்கு வழிவகுத்தது. போராட்ட எழுத்துக்குக் கொடுக்கப்பட்ட விலை சிறைச்சாலையும் தூக்கு தண்டனையும்தான். உரிமைப் போராட்ட குணங்களையும் புரட்சித் தூண்டலையும் தங்களின் பத்திரிகைகள் மூலமாக பரப்பிய ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தூக்கிலும் தொங்க விடப்பட்டனர். கோ .சாரங்கபாணி, CV குப்புசாமி, சுப்ரமணிய ஐயர் ஆகியோர் பிரிட்டிஷ் ஆட்சியில் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஜப்பான் ஆட்சி காலத்தில் பிரிட்டிசுக்கு எதிராகத் திரும்பிய இவர்களின் எழுத்துக்கு இவர்கள் கொடுத்த விலை சிறைத்தண்டனையாகும். தோட்டத் தொழிலார்களின் நலன் விரும்பியாகப் போராடிய கணபதியின் ஆளுமையைக் கண்டு பிரிட்டீசார் அஞ்சினர். ரப்பர் தொழிற்துறையை மீண்டும் புத்திக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்த அவர்களுக்கு. கணபதியின் போராட்டம் முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கணபதி மீது ஆயுதம் ஏந்திய குற்றச் சாட்டைக் கொண்டு வந்து தூக்கில் ஏற்றியது ஆங்கிலேய அரசாங்கம். பத்திரிகையாளர் ஆர்.எச்.நாதன், கம்யூனிஸ்டுக்குத் துணைப்போனார் என்ற குற்றச்சாட்டோடு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தோட்டத் தொழிலார்கள் நடத்திய போராட்டங்களுக்கு மட்டுமே உதவியாகச் செயல்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரும்பிப் பார்க்கும்போது மலேசிய நாளிதழ் வரலாற்றில் பத்திரிகைகளின் நிலைபாடு சமுதாய, மொழி, இன வளர்ச்சி என்ற நிலையிலேயே உறுதியாக மையமிட்டிருந்திருக்கிறது. அதில் பணியாற்றிய பலரும் அவ்வூடகத்தைச் சுமந்து செல்லும் பெரிய ஆளுமைகளாகவே இருந்துள்ளனர். இவர்களைப் பயன்படுத்திப் பத்திரிகைகளும் பத்திரிகைகளைப் பயன்படுத்தி இவர்களும் சமுதாய முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டுச் செயல்பட்டிருப்பது இவ்விடம் தெளிவு. அவர்கள் நாளிதழ் ஆசிரியர்கள் என்ற நிலையைக் கடந்து மலேசியத் தமிழர்களின் சிந்தனையாளர்களாகவும் போராட்ட குணம் மிக்கவர்களாகவும் இருந்துள்ளது தனித்துவமானது. அவ்வகையில் மலேசியாவில் நாளிதழ் ஆசிரியர்கள் மட்டுமின்றி வேறு சில இதழாளர்களும் சமூக சிந்தனையை மையமாகக் கொண்டு தங்கள் ஆளுமையை நிலைநாட்டியுள்ளனர்.
உணர்வற்றிருந்த சமுதாயத்தை, கோ சாரங்கபாணி ‘தமிழர் திருநாள்’ மூலம் உயிர்த்தெழச் செய்தார். இந்திய ஆய்வியல் துறையில் தமிழ் நிலைத்து நிற்க, ‘தமிழ் எங்கள் உயிர்’ இயக்கத்தின் மூலம் நிதி திரட்டி தமிழையும் காத்ததோடு, மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ் நூலகத்தையும் அமைத்தார். இதன்வழி சமஸ்கிருதத்தைப் இந்திய ஆய்வியல் துறையின் ஊடக மொழியாக கொண்டுவர நீலகண்ட சாஸ்திரி வகுத்த திட்டம் முறியடிக்கப்பட்டது. அதேபோல தொழிலார்களுக்காக உருவான சங்கமணி பத்திரிகையை பி.பி.நாராயணன் துவக்கினார்.
நெடுநாள் சமுதாயம் பலனடையும் திட்டங்களை உருவாக்காவிட்டாலும் ஆதி குமணன் சமுதாயத்தின் உணர்வுகளையும் கொந்தளிப்புகளையும் நன்கு புரிந்து அதற்கான சில தீர்வுகளைக் கண்டார். உதாரணமாக, காமன்வெல்தில் தங்கம் வென்ற பெருநடை வீரர் சரவணனுக்கு அரசாங்கம் வாக்களித்தபடி பெர்டானா காரை பரிசாக வழங்காததால், மலேசிய நண்பன் நாளிதழில் விளம்பரம் செய்து, மக்களிடம் பணம் வசூலித்து 1998 டிசம்பர் 5இல் 98,000 ரிங்கிட் மதிப்பு வாய்ந்த ஹோண்டா சிவிக் காரை மக்கள் கார் என பரிசாகக் கொடுத்ததையும் 2001-இல் குஜராத் நிலநடுக்கப் பேரிடருக்காக 10 லட்சம் ரூபாயை மக்களிடம் வசூல் செய்து உதவியதும் குறிப்பிட வேண்டியவை. இவை ஆதி குமணன் மேல் மக்கள் கொண்டிருந்த மரியாதையின் வாயிலாகவும் நம்பிக்கையின் வாயிலாகவும் சாத்தியமான வெற்றிகளாகும். அவர் அன்றைய நிலையில் அரசியல் அதிகாரம் கொண்டவர்களைக் காட்டிலும் மக்களின் ஆதாரவைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பத்திரிகை உலகில் அதிகாரத்துக்கு எதிராகத் துணிந்து எழுதிய ஆசிரியர்களில் பெரு.அ.தமிழ்மணி குறிப்பிடத்தக்கவர். இவர் ‘தூதன்’ வார இதழ் மூலம் நடத்திய போராட்டம் குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் சமுதாயத்துக்கு ஒதுக்கிய 10 மில்லியன் டெலிகோம் பங்கு, அதிகாரத்தில் உள்ள அமைச்சரால் திசைதிருப்பப்பட்டது என்ற செய்தியைத் தலைப்புச் செய்தியாக (10 மில்லியன் டெலிகொம் பங்குகளைச் சாமிவேலு திருடினார்- 1996) வெளியிட்டு பல அரசியல் தொல்லைகளுக்கு அவர் ஆளானார் . டெலிகொம் பங்குகள் விவகாரத்தில் விசாரணை நடத்திய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைச் சட்டத்துறைத் தலைவரிடம் (ஏ.ஜி) ஒப்படைத்தது, விசாரணையின் முடிவை கால தாமதம் இன்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இருமுறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது, டெலிகொம் பங்குகள் குறித்து எழுதப்பட்டு வந்த தொடர் கட்டுரைக்கு போடப்பட்ட இடைக்கால தடை உத்தரவை மீறியதனால் 46 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தது, விடுதலை ஆன பின், நீதி கேட்டு நெடும் பயணம் என்ற முழக்கத்தோடு நாடு முழுவதும் பயணம் செய்து மக்களுக்கு நிலைமையை எடுத்துக் கூறியது, ஆயுதத் தாக்குதலுக்கும் அமிலத் தாக்குதலுக்கும் உள்ளானது என இவரது பத்திரிகைப் பயணம் போராட்டமிக்கது.
பசுபதி முன்னெடுப்பில் உருவான செம்பருத்தி இதழும் இதழியல் துறையில் சமூகப் பொறுப்புடன் செயல்பட்ட குறிப்பிடத்தக்க ஏடாகும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் மலேசியாவில் நசிந்த தமிழ்ச் சமூகத்தின் குரலாகவும் அவ்விதழ் செயல்பட்டது. அறிவார்ந்த குழுவால் இயங்கிய அவ்விதழ் ஆய்வுகள் மூலமாக தங்கள் மாற்றுக்கருத்துகளை முன்வைத்ததோடு மொழி, இனம் குறித்த பிரக்ஞையை இளம் தலைமுறை மத்தியில் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. சமூகச் செயல்பாடுகள் மட்டுமல்லாமல் நவீன இலக்கியத்திலும் அது தன் கவனத்தைச் செலுத்தியது. உள்துறை அமைச்சின் தீவிர கண்காணிப்பில் பலமுறை கண்டிப்புக்குள்ளான செம்பருத்தி கல்விக்கூடங்களில் விற்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் சிந்திக்கும் ஒரு தமிழ் தலைமுறை உருவாக்கியதில் செம்பருத்தியின் பங்களிப்பு முக்கியமானது.
சிங்கப்பூரின் ‘புது யுகம்’ இதழின் ஆசிரியர், ‘நண்பன்’ துணை ஆசிரியர், ‘தமிழ் நேசன்’ பத்திரிகை துணை ஆசிரியர், ஞாயிறு பதிப்பின் பொறுப்பாசிரியர், மலேசியத் தொலைக்காட்சி செய்திப்பிரிவின் பொறுப்பாசிரியர், 14 வருடங்களாக தகவல் அமைச்சின் ‘உதயம்’ இதழ் ஆசிரியர், இதயம் இதழின் நிறுவனர் என இதழியல் துறையில் ஆழமான அனுபவம் உள்ளவர் எம்.துரைராஜ். ஒரு சிறந்த செய்தியாளராக இவரது பணி பத்திரிகை உலகில் முழுமையாக இருந்துள்ளது. தமிழ் மலரில் 3 ஆண்டுகள் ஆலோசகராக இருந்தபோது அப்போதைய இளம் எழுத்தாளர்களான ஆதிகுமணன், ஆதி இராஜகுமாரன், அக்கினி சுகுமாரன், எஸ்.பாலு, இந்திரன், பி.எல்.கே ராஜன் ஆகியோரை பத்திரிகைத்துறைக்கு அறிமுகம் செய்துவைத்தது இவரது முக்கியமான பங்களிப்பு. பின்னாட்களில் இந்த இளம் எழுத்தாளர்களின் கூட்டணியில் உருவான வானம்பாடி எனும் வாரப் பத்திரிகை புதுக்கவிதை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது வரலாறு.
சீனி.நைனா முகமது நடத்திய ‘உங்கள் குரல்’ இதழ் மரபு இலக்கியவாதிகளிடையே முக்கிய கையேடாக பயன்பட்டது. மலேசிய கல்வியாளர்கள் பலர் தமிழ் இலக்கணம் குறித்த ஆலோசனைகளை அவரிடம் இருந்தே பெற்றனர். ஆகவே அவர் மரபு இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஓர் ஆளுமையாக இருந்தார். தமிழ் இலக்கணத்துக்காவே சமரசங்கள் இன்றி நடத்தப்பட்ட இதழ் அது.
இவ்வாறு மலேசியப் பத்திரிகைகளும் அதன் ஆசிரியர்களும் செய்திகளை வழங்கும் ஊடகவியலாளர்களாக மட்டும் அல்லாமல், மொழி, இலக்கியம், கலை, சமூகம், அரசியல் என பல்வேறு நிலைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவே இருந்துள்ளனர். அவர்களின் ஆளுமையை நாட்டின் பல நிகழ்வுகளிலும் காண முடிந்துள்ளது. முருகு சுப்ரமணியம், சுப.நாராயணன், பைரோஜி நாராயணன், கு.அழகிரிசாமி போன்றோர் நவீன இலக்கியத்தை வளர்த்த வேளை கோ.சாரங்கபாணி, பெரு.அ.தமிழ்மணி, பசுபதி, ஆதி.குமணன் போன்றோர் சமூக நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தே வந்துள்ளனர். சீனி.நைனா முகமது மரபிலக்கியத்தை இதழியல் மூலம் வளர்த்ததில் முக்கியமான பங்காற்றியுள்ளார்.
இவ்வாறு மக்கள் ஆதரவுடனும் தனித்த கொள்கைப் பிடிமானத்துடனும் செயல்படும் இதழாளர்களின் பாணி தொடரவில்லை. குறிப்பாக நாளிதழ் துறை ஆதி குமணன் மறைவிற்குப் பிறகு பெரும் மாற்றங்களைக் கண்டது. மூத்த பத்திரிக்கை ஆசிரியர்களின் கொள்கைப் பிடிப்புகளை அடுத்த தலைமுறை தொடராமல் பாதியில் கைவிட்டது. கட்சி அரசியலில் சார்புநிலை எடுப்பதும் அதற்கேற்ப செய்திகளை வெளியிடுவதும் புதிய நாளிதழ் பண்பாடாக வளர்ந்ததோடு, முன்னர் பத்திரிகை ஆசிரியர்கள் கொண்டிருந்த சமூக நிலைப்பாடுகளில் சமரசம் செய்துகொள்ளவும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டனர். ஆதி குமணன் வாழ்ந்த காலத்தில் நாளிதழ் துறையில் கொண்டிருந்த நிலைப்பாடுகளை மூத்த பத்திரிகையாளர்களின் பொற்காலம் என்று குறிப்பிடலாம். அவர் மறைவிற்கு பின் இந்நிலை மெல்ல மறைந்து புதிய வகை பத்திரிகை ஆசிரியர்கள் தோன்றத் தொடங்கினர். ஆகவே மலேசிய தமிழ் நாளிதழ்களின் போக்கை ஆதி குமணனுக்கு முன் ஆதி குமணனுக்கு பின் என்று பிரித்துப் புரிந்துகொள்வது சிறப்பு
தொடரும்…
சிறந்த பதிவு.
இளம் வாசகர்கள் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியத் தகவல்கள்.