இஸ்ரேலிய எழுத்தாளர் எட்கர் கரிட் (Etger Keret) சிறுகதைகள்

உன்னுடையவன் – Your Man

keret62021(1)என்னைவிட்டு பிரியப்போவதாக எபிகாயில் கூறியபோது நான் அதிர்ச்சியில் இருந்தேன். வாடகை வண்டி அவளுடைய இடத்தில் தான் வண்டியை நிறுத்திவிட்டிருந்தது. அவள் காரிலிருந்து இறங்கி அருகிலிருந்த நடைபாதையில் நின்றவாறு இதற்குமேல் என்னைத் தேடி வர வேண்டாம் என்றாள், இதைப்பற்றி தொடர்ந்து பேசவும் விரும்பவில்லை என்றாள். இதெல்லாம்விட மிக முக்கியமாக என்னிடமிருந்து எந்த செய்தியும் அவளிடம் போய்ச் சேரக் கூடாதென்றாள். புத்தாண்டு வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து அட்டை என எதுவும். பிறகு வண்டியின் கதவை அறைந்து சாத்தினாள். வாடகை வண்டிக்காரன் ஜன்னல் வழியாக அவளைச் சபிக்கத் தொடங்கினான். நான் பின் இருக்கையில், உணர்வற்றிருந்தேன். எங்களுக்குள் சண்டையோ அல்லது வேறெதுவோ நடந்திருந்தால் இந்தச் சூழலை எதிர்கொள்ள என்னாலான எதையாவது முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகியிருப்பேன். ஆனால், இன்று எல்லாமே சரியாகத்தான் போனது.

படம்தான் சொதப்பியது, மற்றபடி எல்லாம் சரியாகத்தான் போனது. அதற்கு பிறகுதான் திடீரென்று சற்றும் எதிர்பாராத விதமாக அவளது அத்தனை நீண்ட சொற்கள், கதவை அறைந்து சாத்தியதும் படீரென்ற அந்த சத்தமும்! நாங்கள் ஒன்றாய் இருந்த அந்த ஆறு மாதங்கள் மொத்தமாய் அப்படியே போய்த் தொலைந்தது. ஒரு பயனுமில்லாமல்! “அடுத்து என்ன?” நிமிர்ந்து பின்புறமாய் கண்ணாடியில் பார்த்து வாடகை வண்டிக்காரன் கேட்டான். “உன் வீட்டுக்குக் கொண்டு போய் விடட்டுமா? அப்படி உனக்கொரு வீடிருந்தால் அங்குபோய். உன் அப்பா அம்மா இருக்கும் இடத்துக்கு? நண்பர்கள் வீட்டுக்கு? நகரத்தில் உடல் மசாஜ் விடுதிக்கு? நீதான் முதலாளி. நீதான் ராஜா.” எனக்கு என்னை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது தெரிந்ததெல்லாம் ஒன்று மட்டும்தான். எனக்கு இப்போது நடந்திருப்பது ஞாயமில்லை.

ரொனிட்டும் நானும் பிரிந்தபோது நான் எனக்குள் சத்தியம் செய்துகொண்டேன். என்னை இவ்வளவு காயங்களுக்கு உட்படுத்தும்படி யாருடனும் இனி நெருங்கிப் பழகுவதில்லை என்று. ஆனால் அதன்பிறகுதான் எபிகாயில் வந்தாள். எல்லாமும் மிக அற்புதமாய் போய்க் கொண்டிருந்தது. இப்போது எனக்கிப்படி நடந்திருப்பது ஞாயமில்லை. “சரிதான்,” வாடகை வண்டிக்காரன் ஒருமாதிரியாக உறுமினான். அவன் காரை நிறுத்திவிட்டு இருக்கையைக் கொஞ்சமாய் சாய்த்துக்கொண்டான். “சூடாக இருக்கும்போது எதற்கு கார் ஓட்டனும். எனக்கு ஒரு சிக்கலும் இல்லை. கார் மீட்டர் ஓடிக் கொண்டுதான் இருக்கும்.” அந்த தருணத்தில்தான் வானொலியில் அம்முகவரி அறிவிக்கப்பட்டது. “ஒன்பது, மஸாடா தெரு. யார் வருகிறீர்கள்?” அந்த முகவரியை நான் இதற்கு முன் கேட்டிருக்கிறேன். அது என் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது. யாரோ ஆணியால் அதை என் ஞாபகத்தினுள் கீறி வைத்ததைப் போல.

ரொனிட்டுடன் எனக்கு பிரிவு ஏற்படும்போதும் இப்படித்தான். ஒரு வாடகை வண்டியில். மிகத் துல்லியமாக சொல்வதென்றால் அவள் வாடகை வண்டியில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது. நமக்கிடையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று அவள் கூறியிருந்தாள். தெளிவாய் தெரியும், அதன் பிறகு அவள் குறித்து எந்தத் தகவலையும் நான் தெரிந்திருக்க வில்லை. அப்போதும் நான் இப்படிதான் விட்டுச்செல்ல பட்டேன். ஒரு வாடகை வண்டியின் பின்னால் தனியொருவனாக சிக்கிக் கொண்டேன். அந்த வாடகை வண்டிக்காரன் சலிப்பூட்டும்படி வழ வழ வென ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். ஒரு சொல்கூட எனக்கு கேட்கவில்லை. இப்போது நச்சரித்துக் கொண்டிருக்கும், வானொலியில் கேட்ட அந்த முகவரி எனக்கு மிகத் தெளிவாய் ஞாபகத்தில் இருக்கிறது. “ஒன்பது, மஸாடா தெரு. யாருடைய அழைப்பு அது?”. இப்போது நான் வானொலியில் கேட்டது எதேச்சையாகக்கூட இருக்கலாம்தான். இருந்தும், வடகை வண்டிக்காரனை அந்த முகவரிக்குப் போகச் சொன்னேன். அந்த முகவரியில் அப்படி என்னதான் இருக்கிறதென்று நான் தெரிந்துகொண்டாக வேண்டும்.  நாங்கள் போய் சேரும்போது மற்றுமொரு வாடகை வண்டி எங்களைக் கடந்து சென்றது. அதனுள், பின் இருக்கையில், சிறிய தலையின் நிழல் படர்ந்திருந்தது. ஒரு சிறு பிள்ளையின் அல்லது குழந்தையினது. ஓட்டுனருக்கு பணம் கொடுத்துவிட்டு காரிலிருந்து இறங்கினேன்.

அது ஒரு தனித்த வீடு. நான் வாயில்கதவைத் திறந்தேன். சந்தடி பாதைவழி கதவிருக்கும் இடத்திற்குச் சென்றேன். வாசலில் மணி சத்தத்தை மூட்டினேன். அப்படி செய்வது முட்டாள்தனமானதுதான். யாராவது கதவைத் திறந்துவிட்டால் என்ன செய்வதென்றோ சொல்வதென்றோ அதுவரையிலும் எனக்கு புலப்படவில்லை. அந்த நேரத்தில் நான் அங்கிருப்பதற்கான காரணம் என்ன என்றுகூட எனக்குத் தெரியாது. அதை பொருட்படுத்தும் நிலையில் நான் இல்லை. பைத்தியக்காரத்தனமாக, மீண்டும் ஒருமுறை அந்த வாசல் மணியை அழுத்தினேன், மிக நீண்ட மணியோசை அது, பிறகு கதவை அறைந்து தட்டினேன், வீடு வீடாக சென்று சோதனையிடும்போது ராணுவவீரன் தட்டுவதுபோல, ஆனால் ஒருவரும் வெளிபடவில்லை.

மூளைக்குள், எபிகாயில் ரோனிட் பற்றிய நினைவுகள் வந்துவந்து போய் இதற்கு முன் நிகழ்ந்த காதல் முறிவுகள் பற்றிய நினைவுகளையெல்லாம் கிழறிக் கொண்டிருந்தது. ஒன்றோடு ஒன்று கலந்து, ஒரு திறளாய் திரண்டிருந்தது. அதே சமயம் இந்த வீடு, ஒருவரும் கதவை திறக்காமல் இருப்பது என் நரம்புகளைப் புடைக்கச் செய்தது. வீட்டை சுற்றி நடக்க ஆரம்பித்தேன், உள்ளே பார்க்க வசதியாய் ஏதும் சன்னல் இருக்கிறதாவென தேடினேன். அதில் எங்கும் சன்னல்கள் இல்லை, ஒரேயொரு பின் கதவு மட்டும், பெரும்பாலும் கண்ணாடியால் ஆனது. அதன்வழியாக உள்ளே பார்க்க முற்பட்டேன். ஒட்டுமொத்தமாய் ஒரே இருட்டு. தொடர்ந்து முயற்சித்து பார்த்தேன், இருந்தும் இருட்டை ஊடுருவி பார்க்கும்படி என் கண்களுக்குத் திறனேற்ற முடியவில்லை. எவ்வளவு துருவி பார்க்கிறேனோ அந்த அளவுக்கு அது இன்னுமின்னும் இருட்டாகிக்கொண்டே போனது. சட்டென அது என் சிந்தனையைச் சிறகடிக்க வைத்தது, உண்மையிலேயே அப்படிதான் நடந்தது. திடீரென்று தூரத்திலிருந்து நான் என்னை பார்ப்பதுபோல் இருந்தது. குனிந்து, ஒரு கல்லை எடுத்து, வேர்வை ஈரத்தில் நனைந்திருந்த சட்டையில் அதை சுருட்டி கண்ணாடியை உடைத்தேன்.

உள்ளே நுழைந்தேன், எங்கும் வெட்டிக்கொள்ளாமல் மிக கவனமாக, கதவைத் திறந்தேன். இருட்டுக்குள் துலாவி விளக்கின் விசையைத் தேடினேன். அதை அழுத்தியபோது, மஞ்சள் நிறத்தில் மங்கலாய் ஒளி வந்தது. அவ்வளவு பெரிய அறை மொத்தத்திற்கும் ஒரே விளக்கு.மிகச் சரியாய் அந்த இடம் என்னவென்று சொலவதென்றால்- மிகப்பெரிய அறை, தளவாடப் பொருள்கள் எதுவுமில்லை, முழுமுற்றாய் காலியாக இருந்தது. ஒரேயொரு சுவரைத் தவிர, அதில் முழுக்க பெண்களின் புகைப்படங்கள் நிரம்பியிருந்தன. சில படங்களுக்குச் சட்டகம் இருந்தது, சிலவை வெறுமனே சுவற்றில் ஒட்டப்பட்டிருந்தன. எனக்கு அவர்கள் அனைவரையும் தெரியும். அதில் டாலியா இருந்தால், ராணுவத்தில் என் காதலி; டேனியலெ, மேற்கல்வி படிக்கும்போது எங்கள் உறவு சீராகப் போய்க்கொண்டிருந்தது; ஸ்டீபனி, சுற்றுப்பயணத்துக்காக வந்தவள்; பிறகு ரோனிட்.

அவர்கள் எல்லாரும் அதில் இருந்தனர், இடதுபக்க மூலையில் மிக நுண்மையாய் வடிக்கப்பட்ட தங்கநிற சட்டகம், அதில் எபிகாயில், சிரித்தபடி. ஒளியை முடக்கினேன் மூலையில் சரிந்தேன், வலுவின்றி உடல் உதறியது. அங்கு வாழ்பவன் யாரென்று எனக்குத் தெரியாது, அதை ஏன் அவன் எனக்கு செய்துக் கொண்டிருக்கிறான், எப்படி ஒவ்வொன்றையும் வெற்றிகரமாய் சிதைத்துக் கொண்டிருக்கிறான், எதுவும் தெரியாது. ஆனால் மொத்த நினைவும் ஓரிடத்தில் நிலைகுத்தியது. எல்லாப் பிரிவுகளும், கடலிலிருந்து வெளிகுதித்த அந்த எல்லாக் கப்பல்களும்- டேனியலெ, எபிகாயில், ரோனிட் எங்களைப் பற்றியதல்ல; அவனைப் பற்றியதுதான்.

அவன் வருவதற்கு முன் எவ்வளவு நேரம் இப்படி கிடந்தேன் எனத் தெரியவில்லை. முதலில் கார் யாரையோ விட்டுச் செல்லும் சத்தம் கேட்டது, தொடர்ந்து முன்கதவில் சாவியை நுழைக்கும் சத்தம், பிறகு விளக்கு ஒளியேழுப்பப் பட்டது. அதோ அவன், என் நேரெதிர் நின்று சிரித்துக் கொண்டிருக்கிறான், கொடியவன், என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான். குள்ளமாக இருந்தான், சிறுவனைப்போல, பெரிய கண்கள், இமைகளில்லை, கைகளில் வண்ண நெகிழி பள்ளிப்பையைப் பிடித்திருந்தான். மூலையிலிருந்து நான் எழுத்தபோது விசித்திரமாய் ஒரு புன்னகையைச் செய்தான், கையும் களவுமாக பிடிபட்டவனைப் போல, நான் எப்படி அங்கு வந்தேன் என்றும் கேட்டான். “இவளும் உன்னைவிட்டு போய்விட்டாளா?” நான் அவனை நெருங்கும்போது கேட்டான். “பரவாயில்லை. வேறொருவள் வருவாள்.” நான், பதில் கூறுவதற்கு மாற்றாக, கல்லை அவன் தலையில் ஓங்கி அடித்தேன். அவன் கீழே சரிந்தபோதும் அடிப்பதை நிறுத்தவில்லை. எனக்கு இன்னொருவள் வேண்டாம், எனக்கு எபிகாயில் வேண்டும், அவன் சிரிப்பதை நிறுத்த வேண்டும்போல் இருந்தது.

நான் அவனை வதைத்துக் கொண்டிருந்த முழு நேரமும் அவன் “நீ என்ன செய்கிறாய், என்ன செய்கிறாய், நான் உன்னுடையவன், நான் உன்னுடையவன்,” என்றுதான் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். ஆகக் கடைசியாய் அவன் நிறுத்தும்வரை. எல்லாம் முடிந்தபின் நான் தூக்கி எறியப்பட்டேன். எறியப்பட்டு முடிந்ததும்,இலேசாய் உணர்ந்தேன், நெடுந்தொடர் நடையின் பாதியில் வேறொருவர் தூக்குப்படுக்கையை நம்மிடமிருந்து வாங்கி சுமக்கத் தொடங்கும்போது ஏற்படும் கணம் நீங்கியத் தன்மை, எதிர்பார்க்காத ஒரு கனமின்மை. ஒரு குழந்தையைப் போல் இலேசாய். உள்ளுக்குள் பிடிகொண்டிருந்த பயம், குற்றயுணர்வு, வெறுப்பு- அனைத்தும் காணாமல் போனது. வீட்டுக்குப் பின்னால், மிக தூரமில்லா இடத்தில், கொஞ்சம் மரக்கட்டைகள் இருந்தன. அவனை அதற்குள் தினித்துவைத்தேன். ரத்தத்தின் ஈரம்படிந்திருந்த சட்டையையும் கல்லையும் முற்றத்தில் புதைத்தேன். அதற்குப் பின் சில வாரங்கள் அவனைப் பற்றிய செய்திகளை நாளிதழ்களில் தேடினேன். செய்திப்பிரிவு, ஆள் காணாமல் போனதாக வரும் விளம்பரங்கள் என எதிலும் ஒரு தகவலும் இல்லை. என்னுடைய எந்த குறுஞ்செய்திக்கும் எபிகாயில் பதிலளிக்கவில்லை. குடுமி வைத்திருக்கும் உயரமான ஒருவனுடன் அவளைப் பட்டணத்தில் பார்த்ததாக வேலையிடத்தில் சிலர் கூறினார்கள். அதை கேட்ட மாத்திரமே உடைந்து போனேன், எனக்குத் தெரியும் என்னால் எதுவுமே செய்ய முடியாதென்று, ஏதோ நன்மைக்காகதான் அது முடிந்தது.

சிறிது இடைவெளிக்குப் பின்னர், நான் மியாவுடன் வெளியாகத் தொடங்கினேன். ஆரம்பத்திலிருந்தே அவளுடன் எல்லாமும் மிக அறிவார்த்தமாக நடந்தது. அதனால் சிக்கல் ஏதுமில்லை. பொதுவாக நான் மற்ற பெண்களுடன் இருந்ததுபோல் அல்லாமல் தொடக்கம் முதலே அவளுடன் மிக வெளிப்படையாகவும் என் பாதுகாப்பு வலையத்திலிருந்து வெளியேறியும் பழகினேன். இரவில், சமயங்களில் அந்தத் குள்ள மனிதனைக் கனவில் காண்பேன். அவன் உடலை மரக்கட்டைகளுக்கு மத்தியில் தினித்த அந்தத் தருணத்தை, பீதியில் விழித்துக் கொள்வேன். பிறகு, இந்த கனவில் ஒரு அர்த்தமும் இல்லை என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்வேன். இனி அவன் இங்கெங்கும் இருக்கப்போவதில்லை என்று நினைவுபடுத்திக் கொண்டு மியாவை பற்றிக்கொண்டு உறங்குவேன்.

நானும் மியாவும் ஒரு வாடகை வண்டியில் பிரிந்தோம். எனக்கு உணர்ச்சிகளே இல்லை என்றாள், இன்னதெனத் குறிப்பறிய முடியாதவன் என்றாள், சமயங்களில் என்னால் மிக மோசமாக பாதிப்படைவதாகக் கூறினாள்.  அவள் என்னுடன் மிக நல்ல தருணங்களை அனுபவித்திருப்பதாக நான் உறுதியாக நம்பினேன், காரணம் நான் அவற்றை அனுபவித்திருக்கிறேன். சில காலங்களுக்குப் பின் நாங்கள் சிக்கல்களை எதிர்நோக்கக்கூடும் என்றாள். ஆனால் அப்படி எதுவுமே என் கவனத்திற்குப் புலப்படவில்லை. அவள் அழத் தொடங்கினாள். என் தோள்களில் அவளை அணைத்துக்கொள்ள முயற்சித்தேன். என்னை புறந்தள்ளினாள். உண்மையில் அக்கறை இருக்கிறதென்றால் அவளை அப்படியே போக அனுமதிக்கச் சொன்னாள். அவளிடம் மீண்டும் செல்வதா, முயற்சித்துப் பார்ப்பதா என எதுவும் எனக்குத் தெரியவில்லை. வாடகை வண்டியிலிருந்த வானொலி ஒரு முகவரியைச் சொன்னது. “நான்கு ஆட்லர் சாலை.” ஓட்டுனரிடம் அங்கு அழைத்துச் செல்லும்படி கூறினேன். நாங்கள் போய்ச் சேரும்போது வேறொரு வாடகைக் கார் அங்கு நின்றுகொண்டிருந்தது. ஒரு காதல் ஜோடி அதில் ஏறியது, என் வயதிருக்கும், ஒருவேளை என்னைவிட கொஞ்சம் இளையவர்களாகக்கூட இருக்கலாம். அந்த வாடகைக் கார் ஓட்டி ஏதோ சொல்ல இருவரும் சிரித்தனர். நான் தொடர்ந்து போனேன்.  ஒன்பது, மஸாடா தெருவுக்கு. அவனது உடலை மரக்கட்டைகளுக்கு மத்தியில் தேடினேன், எதுவுமில்லை. துருபிடித்த இரும்பு கம்பி ஒன்று மட்டும் கண்ணுக்குத் தென்பட்டது. அதை கையில் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்.

முன்பிருந்தது போலவே அந்த வீடு இருந்தது. உடைந்த கண்ணாடி சில்லுடன் அதே பின் கதவு. இருளுக்குள் கதவின் பிடியை தேடி, எங்கும் காயம் ஏற்படாதபடி உள்ளூக்குள் நுழைந்து விட்டேன். வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருப்பதை அவதானித்தேன். இன்னும் காலியாகத்தான் இருந்தது, சுவரில் தொங்கிய அந்தப் படங்களைத்தவிர அனைத்தும் காலியாகத்தான் இருந்தது; குள்ள மனிதனின் அசிங்கமான பள்ளிப்பையும் ஒரு இருளும் தரையில் நசநசத்த கறையையும் தவிர அனைத்தும் அவ்வந்த இடத்திலேயே.  சுவர்ப் படங்களின் ஊடாகச் சென்றுக் கொண்டிருந்தபோது, அந்த பள்ளிப்பையைத் திறந்து உள்நோக்கினேன். கொஞ்சம் பணமும், பயன்படுத்திய பேருந்து ரசீதும், கண்கண்ணாடி வைக்கும் பெட்டியும், மியாவின் படமும் அதிலிருந்தது. அதில், அவளுக்கு முடி இருந்தது, பார்ப்பதற்கு தனிமையில் இருப்பது போலிருந்தாள். அப்போதுதான் சட்டென அவன் முன்சொன்னது நினைவுக்குத் தட்டுப்பட்டது. இறப்பதற்கு முன் அவன் சொன்னது, எப்போதும் இன்னொன்று வரும் என்று. நான் அவனை மிகச் சரியாக மனதிற்குள் காட்சிபடுத்தி பார்த்தேன், எபிகாயிலுக்கும் எனக்கும் காதல் முறிவான நாளில், எங்கெல்லாமோ போய், புகைப்படத்துடன் திரும்பி, நான் மியாவை சந்திப்பதை எப்படியோ உறுதிபடுத்தியிருந்தான்.  நான்தான் அதை இம்முறையும் ஊதித்தள்ளிவிட்டேன். இனியொருவளை இப்படி சந்திப்பேனா எனத் தெரியவில்லை. காரணம் என்னுடையவனை நான் கொன்று விட்டேன். நானே கொன்றுவிட்டேன்.

மூடியபடி (Shut)

19bf1e8c8cba1a299911274196c5677bஎல்லா நேரத்திலும் கற்பனையில் மூழ்கியிருக்கும் ஒருவனை நான் அறிவேன். நான் சொல்வது என்னவென்றால், தெருவில் நடந்து செல்லும்போதுகூட அவன் கண்களை மூடிக்கொண்டிருப்பான். ஒரு நாள், அவனுடைய காரில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து போய்க்கொண்டிருக்கும்போது இடது பக்கம் திரும்பி அவனைப் பார்த்தேன். அவனது இரு கைகளும் ஸ்டீயரிங் இருக்க, கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டிருந்தான். நான் மிக தீர்க்கமாகத்தான் இதை சொல்கிறேன். உண்மையில் அவன் இப்படித்தான் பிரதான சாலையில் கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.

‘ஹாகாய், இதென்னவோ நல்ல யோசனையாகப் படவில்லை’ நாந்தான் சொன்னேன். ‘ஹாகாய், கண்களை திற.’ ஆனால் அவனோ எல்லாம் சரியாகத்தான் நடந்துகொண்டுருப்பதுபோல் அப்படியே கார் ஓட்டுவதை தொடர்ந்தான்.

‘நான் இப்போ எங்க இருக்கேனென்று உனக்கு தெரியுமா?’ அவன் என்னிடம் கேட்டான்.

“கண்களைத் திற,’ நான் மீண்டும் கூறினேன். ‘இது என்னை பயமுறுத்துகிறது.’ ஆச்சரியமாக நாங்கள் எதனுடம் மோதி நொறுங்கவில்லை.

அவன் மற்றவர்களின் வீடுகளைப் பற்றி கற்பனை செய்வான், அவை அவனுடையது போல. அவர்களது கார்களைப் பற்றி, அவர்களின் தொழில்பற்றி. தொழில்பற்றி கற்பனை செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். அவர்களது மனைவி பற்றி. மற்ற பெண்களைத் தன்னுடைய மனைவியாகவெல்லாம் கற்பனை செய்வான். குழந்தைகள் உட்பட. தெருவில் அல்லது பூங்காவில் சந்தித்த சிறுவர்கள் அல்லது தொலைக்காட்சி தொடர்களில் பார்த்தவர்கள் என தன்னுடைய பிள்ளைகளைவிட்டு மற்றவர்களைக் கற்பனை செய்வான். இப்படியே பல மணி நேரங்களைச் செலவழிப்பான். அது அவனுடைய தேர்வாக இருக்குமெனில், அவன் நிச்சயம் தன் மொத்த வாழ்வையும் இதில் கடத்துவான்.

‘ஹாகாய், எழுந்திரு. உன் சொந்த வாழ்க்கையைப் பார். உனக்கு மிக அற்புதமான வாழ்க்கை இருக்கிறது. அருமையான மனைவி, நல்ல பிள்ளைகள், எழுந்திரு,’ நான் கூறியபடி இருந்தேன்.

‘நிறுத்து,’ அவன் சொகுசு விதை நாற்காலியின் ஆழத்திலிருந்து பதில் கூறினான். ‘கெடுக்காதே. நான் இப்போது யாருடன் இருக்கிறேன் தெரியுமா? யோதாம் ரட்சபி, என் பழைய ராணுவ நண்பனவன். அவனுடன் ஒரு ஜீப் சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். என்னுடன், யோடி மற்றும் குட்டிப்பையன் எவிடர் மெண்டெல்ஸோன் இருக்கிறார்கள். யோடி, ‘அமிட்’ குழந்தை வளர்ப்பகத்திலேயே அதிபுத்திசாலி, கழுதைப்பயல். எவிடர், அந்த குட்டிப் பிசாசு, “அப்பா, தாகமாக இருக்கிறது பீயர் கிடைக்குமா?” என்று கேட்கிறான். காட்சிப்படுத்திப் பார். அவனுக்கு முழுதாய் ஏழு வயதுகூட ஆகியிருக்கவில்லை. அதனால் அவனிடம் கூறுகிறேன். “இல்லை எவி. அம்மா சொன்னது உனக்கு நினைவிருக்குதானே. பியர் குடிக்க உனக்கு அனுமதியில்லை.” அதாவது, அவனுடைய அம்மா, என் முன்னாள் மனைவி. ரோனா எதிடியா, பள்ளியிலிருந்து வருகிறாள். மோடலிங் பெண்போல் அழகானவள். ஆனால் உரம்வாய்ந்தவள், நகத்தைப் போல உறுதியானவள்.’

‘ஹாகாய், அவன் உன் பிள்ளையில்லை, அவள் உன் மனைவியும் இல்லை. உனக்கு விவாகரத்தும் ஆகவில்லையடா, நீ உன் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாய். உன் கண்களை திறந்து பார்.’

‘ஒவ்வொரு முறை பையனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரும்போதும், என் ஆண்குறி விறைத்துக் கொள்கிறது’ நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவன்போல் பேச்சை தொடர்ந்தான். ‘கப்பலின் பாய்மரம்போல் ஆகிவிடுகிறது. அவள் அழகானவள். என் முன்னாள் மனைவி, ஆனால் உரம் வாய்ந்தவள். அந்த உறுதிதான் எனக்கு கிழர்ச்சியூட்டுகிறது.’

‘அவள் உன் முன்னாள் மனைவி இல்லை. அதுபோல் உன் ஆண்குறியும் விறைக்கவில்லை.’ நான் என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் என மிக உறுதியாக எனக்குத் தெரியும். அவனது கால்சட்டை என் நேரெதிரில் மிக அண்மைய தூரத்தில், அவன் என்னைவிட்டு ஒரு மீட்டருக்குள்ளாகத்தான் இருக்கிறான். அதில் எதுவும் விறைத்திருப்பதாய் தென்படவில்லை.

‘நாங்கள் பிரிய வேண்டியிருந்தது. அவளுடன் இருப்பதை நான் வெறுத்தேன். அவளுக்கு அவளுடன் இருக்கவே வெறுப்பாய்தான் இருந்திருக்கும்!’ அவன் கூறினான். ‘ஹாகாய்,’ நான் கெஞ்ச ஆரம்பித்திருந்தேன். ‘உன் மனைவியின் பெயர் கார்னி. உள்ளபடி சொல்வதானால் அவள் அழகி. அவள் கடினமானவள் இல்லை. அதிலும் உன்னுடன் கடினமாய் இருப்பதில்லை.’ அவனது மனைவி உண்மையில் மிக மென்மையானவள். அவள் ஆத்மார்த்தமாய் கனிவு நிரம்பியவள், பெரிய மனம் அவளுக்கு, எல்லோரிடமும் இறக்கம் கொண்டவள். நாங்கள் ஒன்பது மாதம் ஒன்றாய் இருக்கிறோம். ஹாகாய் காலையில் சீக்கிரமே வேலைக்குப் போய்விடுவான். நான் அவளைப் பார்க்க எட்டு முப்பதுக்குப் போவேன். அவள் அப்போதுதான் குழந்தைகளைச் சிறுவர் காப்பகத்தில் விட்டு வந்திருப்பாள்.

‘ரோனாவும் நானும் பள்ளியில் சந்தித்துக் கொண்டோம்.’ அவன் தொடர்ந்தான். ‘அவள்தான் என் முதல் மனைவி, நானும் அவளுக்கு அப்படித்தான். அவளை விவாகரத்து செய்துவிட்ட பின் நான் பலருடன் இருந்திருக்கிறேன். ஆனால் எவளும் அவள் அருகில் நிற்க தகுதியற்றவள். உனக்குக்குக்கூட தெரியும், கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்தால் அவள் இதற்குமுன் திருமணம் செய்து கொள்ளாதவள் போலிருப்பாள். ஒருவேளை அவள் யாரையாவது துணையாக அடையாளம் கண்டிவிட்டால் நிச்சயம் அது என்னை நொறுக்கிவிடும். என்னதான் எங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டாலும்கூட, வேறெதெல்லாமோ நடந்துவிட்டாலும்கூட. நான் நிச்சயம் நொறுங்கிப் போவேன். ஒருபோதும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேறு எவளும் அவள் அளவுக்கு இல்லை. அவள் மட்டும்தான். அவளுக்கு மட்டும்தாம் அந்த இடம்.’

‘ஹாகாய், உன் மனைவியின் பெயர் கார்னி. அவளுடன் வேறு யாரும் இல்லை. நீ இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறாய்.’

‘ரோனாவுடனும் யாருமில்லை.’ தன் காய்ந்த உதடுகளை வழித்துகொடுத்துக் கொண்டான். ‘ஒருவனுமில்லை. அப்படியேதும் இருந்திருந்தால் நான் தற்கொலை செய்துக் கொண்டிருப்பேன்.’

கார்னி இப்போது வீட்டிற்குள் நுழைந்தாள். பொருட்கள் வாங்கிய பையைக் கையில் சுமந்திருந்தாள். மிக எதேச்சையான ‘ஹாய்’யை என்மீது சுண்டிவிட்டாள். நாங்கள் ஒன்றாய் இருக்கத் தொடங்கியதிலிருந்து மற்றவர்கள் சுற்றியிருக்கும் சூழல்களில் அவள் என்னிடம் அதிக இடைவெளியை உருவாக்கியபடியே இருந்தாள். அவள் ஹாகாய்க்கு ‘ஹாய்’ சொல்லியிருக்க வில்லை. சதா எல்லா நேரமும் கண்களை மூடிக் கொண்டிருப்பவனிடம் அதைச் சொல்லியும் அர்த்தமில்லை என்பதை அவள் அறிவாள்.

‘என் வீடு. டெல் அவீவ் நடுவில். சாளரத்திற்கு வெளியே ஒரு மல்பெரி மரத்துடன், அழகான வீடு. ஆனால் சிறியது. மிக மிக சிறியது. எனக்கு வேறொரு அறை வேண்டும். வார இறுதிகளில், எனக்கு குழந்தைகள் எல்லாம் இருக்கும்போது, நான் அந்த நாற்காலி-கட்டிலிலிருந்து எழுந்துகொள்ள வேண்டும். என் கழுத்துக்குக் கடும் வலியைக் கொடுக்கிறது. வரும் கோடைக்காலத்துக்குள் நான் ஒரு முடிவு எடுக்காமல் போனால், நான் வெளியேற வேண்டியிருக்கும்.’

பேருந்துகள் மடிந்துவிட்ட அந்த இரவு – The Night the Buses Died

அவைகள் மடிந்துவிட்ட அந்த இரவில் நான் பேருந்து நிலையத்தில் நீண்ட இருக்கைgaza warயொன்றில் காத்திருந்தேன். என் பேருந்து அட்டையில் துளையிடப்பட்ட பகுதியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அவை எதையெல்லாம் எனக்கு நினைவூட்டக்கூடும் என கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஒரு துளை முயல் போலிருந்தது. அது என் விருப்பத்திற்குறியது. மற்றவைகள், எவ்வளவு நேரம் வெறித்துப் பார்த்தாலும் அவை வெற்றுத் துளைகளாக மட்டுமே தெரிந்தன.

“ஒரு மணி நேரமாக காத்திருக்கிறோம்.” அறை தூக்கத்தில் ஒரு கிழவன் புலம்பினான்.

“அதைவிட அதிக நேரம். அந்த பேருந்து நிறுவனம், இரு நேர சேவை செய்யும் அந்த இழிபிறப்பு பேருந்து, அரசாங்கத்தை எதிர்க்கும்போது மட்டும் நேரம் காலம் பார்க்காமல் வந்து சேரும். பேருந்து வரும் என நாம் காந்திருக்கத் தொடங்கினால் முதலில் நமக்கு சாவு வந்துவிடும்.”  தன் அர்ச்சனைகளை முடித்துக்கொண்ட கிழவன் தொப்பியைச் சரிசெய்தபின் உறங்கிப் போனான்.

மூடிய அவனது கண்களைப் பார்த்து சிரித்துவிட்டு துளைகளை வெறிக்கத் தொடங்கினேன். ஏதாவது மாறுமா என்று பொறுமையாகக் காத்திருந்தேன். வேர்த்து விருவிருக்க ஒரு இளைஞன் விருட்டென கடந்து சென்றான், நிற்காமல், திரும்பிப் பார்த்து வறண்ட தொண்டையில் மூச்சிறைக்கக் கத்தினான். “காத்திருந்து பயனில்லை. பேருந்துகள் எல்லாம் மடிந்துவிட்டன. எல்லாம்.” எங்களைக் கடந்து ஓடி சில தூர எல்லைகளைக் கடந்தபின், இடுப்பை இடது கையில் இறுக்கி பிடித்தபடி திரும்பினான், எங்களைப் பார்க்க. ஏதோ முக்கியமான ஒன்றை எங்களிடம் கூற மறந்துவிட்டவனைப் போல பார்த்தான். அவனது கன்னங்களில் கண்ணீர்துளி வியர்வைபோல் மின்னியது.

‘எல்லாமே,” வெறி குரலில் கத்தியவன் பின்னர் மீண்டும் திரும்பி ஓட ஆரம்பித்தான். கிழவன் திடுக்கிட்டு எழுந்து கொண்டான். “அவனுக்கு என்ன வேணுமாம்?” “ஒன்னுமில்ல தாத்தா,” முணுமுணுத்தேன். தரையிலிருந்த முதுகு பையை எடுத்துக் கொண்டு சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். “இளையவனே… நீதான்… எங்கு போகிறாய்?” கிழவன் என்னை நோக்கி கத்தினான்.

பழைய சாக்லேட் தொழிற்சாலையைக் கடக்கும்போது ஒரு காதல் ஜோடி அங்குக் காத்துக் கொண்டிருந்தது. இருவரும் விரல்களில் விளையாடிக்கொன்டிருந்தார்கள். இருவருள் எவரது ஆதிக்கம் அதிகமென நான் கண்டுகொள்ள வில்லை. “ஹேய்,” அந்த ஆடவன் என்னை அழைத்தான். அவளது கட்டைவிரல் ஆடவனின் விரிந்த உள்ளங்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது. “பேருந்துகளுக்கு என்ன ஆனதென உனக்கு ஏதும் தெரியுமா?” நான் தெரியாது என்பதாய் பாவனை செய்தேன்.

“ஏதாவது மறியலாக இருக்கும்,” அவளிடம் சொல்வது எனக்குக் கேட்டது. “பேசாமல் என்னுடன் தங்கிவிடு. இப்போதே நேரமாகி விட்டது.”  முதுகு பையின் பட்டை துருத்திக் கொண்டு முதுகில் வெட்ட, நான் அதை சரி செய்தேன். பிரதான சாலையில் பேருந்து கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்தது. எல்லோரும் மனம் தளர்ந்துபோய் வீடு திரும்பிவிட்டதுபோல் தெரிந்தது.பேருந்து வராததற்காக அவர்கள் வருத்தப்பட்டதுபோல் தெரியவில்லை. நான் தெற்கு நோக்கி நடந்தேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...