பாஸ்கர் சார் பென்சால்டிஹைடு உருவாக்க வினையை எழுதி முடித்த போது மணி சரியாக 4.34. காலாண்டுத் தேர்வுகள் முடிந்திருந்ததால் வகுப்புகள் சற்று தளர்வாகவே நடந்தன. ஐந்து இருபது வரை நீடிக்கும் சிறப்பு வகுப்புகள் சில தினங்களாக இல்லை. இருந்தும் நரேனால் 446A-ஐ பிடிக்க முடிவதில்லை.
மூன்று நாட்களாக ஏதோவொன்று அந்தப் பேருந்தைப் பிடிக்க விடாமல் தவறச்செய்து விடுகிறது. முக்கிய காரணம் அந்தப் பேருந்து நான்கு நாற்பதுக்கெல்லாம் விளமலை கடந்து விடுகிறது என்பதுதான்.
இன்று நான்கரை மணிக்கு பெல் அடித்த போதிருந்தே அவன் மனம் பரபரக்கத் தொடங்கி இருந்தது.வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வெளியேறும் கலைந்த ஓசைகளும் வகுப்பு முடிந்த வரை கதவுக்கு பின்னே காத்திருந்தது போல எழும் சூழலின் வாகன சத்தங்களும் பள்ளிக்கு பின்பக்க குடியிருப்புகளின் புழக்க ஒலிகளும் கூட அன்று அவனை நிலையழியச் செய்து கொண்டிருந்தன. முதல் ஆளாக வகுப்பை விட்டு வெளியே வந்துவிட்டான். புதிதாக சுவரில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியின் மங்கலான ஒளியில் இவன் உடல் நீலமாகத் தெரிந்தது. கண்ணாடிக்குள் தெரியும் கண்களின் நிறத்தை அந்த பரபரப்பிலும் அவன் ரசிக்கத் தவறவில்லை. வேலுடையார் மேல்நிலைப்பள்ளிக்கு தெருப் பக்கமும், கொல்லைப்புறமும் உண்டு. தெருப்பக்கம் வழியாகச் சென்றால் அவ்வழியாக ஒரு வகையான கூச்சத்துடன் அக்கூச்சமே நளினத்தை அளிக்க மிதிவண்டியில் கடந்து செல்லும் பச்சை தாவணி அணிந்த ஜி.ஆர்.எம் பள்ளி மாணவிகளை காண முடியும். ஆனால் அங்கிருந்து விளமல் பேருந்து நிலையத்துக்குச் செல்ல எப்படியும் ஐந்து நிமிடங்களாகிவிடும். கொல்லைப்பக்க வாசல் குறுகலானது. மேலும் மாணவிகளுக்கான சைக்கிள் ஸ்டாண்டு அவ்வாயிலுக்கு அருகே இருந்ததால் வியர்வை நெடியும் பூமணமும் கலந்த மாணவிகளை லாவகமாகக் கடந்து தான் வெளியேற முடியும். ஆனால் மூன்று நிமிடத்தில் விளமலுக்கு சென்று விடலாம். முடிவு கட்டியவனாக நரேன் கொல்லைப்புற வாயிலை நோக்கி நடந்த போது அவன் மனம் முன்பே ஊகித்திருந்த படி காயத்ரி அவனுக்காக காத்திருந்தாள் முகத்தில் ஒரு நக்கலுடன். அவள் என்ன இடக்கு பண்ணினாலும் கண்டு கொள்ளாமல் நகர்ந்து விட வேண்டுமென எண்ணியவனாக தலையைத் தாழ்த்திக் கொண்டான். பதினொன்றாம் வகுப்பு சேர்ந்த போது குச்சியாகத்தான் இருந்தாள். ஆனால் அரையாண்டு முடியும் முன்பே எல்லோரையும் கவனிக்க வைக்கும் வனப்பு அவளில் கூடியிருந்தது. நரேன் அவள் அழகை எண்ணி அதிகமாக துன்புறவே செய்தான். அந்த துன்பம் அவன் விழிகளில் தெரியத்தொடங்கிய பிறகே காயத்ரி அதிகமாக அவனை சீண்டத்தொடங்கினாள். வேறு யாரையும் அவள் சீண்டுவதே கிடையாது என்பது நரேனுக்குத் தெரியாது.
காயத்ரியை கடக்கும் முன்பே கனிமொழியை பார்க்க நேர்ந்தது. முகத்தில் ஒரு சில பெரிய பருக்கள் தென்படத் தொடங்கியிருந்தன கனியின் முகத்தில். ஒரு முடிக்கற்றை மட்டும் முன்னே வந்துவிழ அவனுக்கு எதிரே நடந்து வந்துகொண்டிருந்தாள். அவளை ஒரு ஆசிரியருடன் தொடர்புபடுத்தி பள்ளியில் உலவிய கதையை நரேன் நம்பாமல் இல்லை. இருந்தும் அவள் முகத்தை நோக்கி ஒரு கள்ளப்பார்வையைச் செலுத்தாமல் கடக்க அவனால் முடியவில்லை. நரேன் போன்ற “நல்ல” பையன்கள் இப்படித் தன்னை பார்க்கும் போது அவளில் வெளிப்படும் கீழ்த்தரமான ஒன்றை பார்க்கும்போது அது அதிகாரமற்றதாக இருக்கும் போது எழும் கோணலான உதட்டுச்சுழிப்பு இப்போதும் அவளில் தோன்றியது. நரேன் நெருப்பள்ளி கொட்டப்பட்ட பாம்பு போல உள்ளுக்குள் துடித்துப்போனான். ஒருவேளை அவள் தன்னை அப்படி ஏளனமாகக் கடப்பதைத்தான் தான் தன் மனம் விரும்புகிறதா அந்த வதையில் துடிக்கத்தான் தான் அப்படி அவளை பார்க்கிறோமோ என்று கூட நரேன் பின்னாட்களில் எண்ணியிருக்கிறான். அந்த எண்ணம் அவன் மனதில உருக்கொள்ளத் தொடங்கிய பிறகு கனி அவனை அப்படி பார்ப்பதை நிறுத்திவிட்டிருந்தாள்.
கொல்லைப்புற வாயிலைக் கடந்தபோது காயத்ரி “என்ன விட்டுட்டு யார பாக்க இவ்ளோ ஃபாஸ்ட்டா போறச் செல்லம்” என அவனுக்கு இணையாக சைக்கிளைத் தள்ளியபடியே மெல்லக் கேட்டாள். நரேனுக்கு ஆத்திரத்திலும் அவசரத்திலும் அழுகை வந்து விடும் போலிருந்தது. காயத்ரி அவனை சீண்டுவது வழக்கம் தான் எனினும் அந்த சீண்டலின் எண் மதிப்பு அவனது மனவுறுதிக்கு நேர்தகவில் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. “செல்லம்”என்ற சொல் சட்டென அவன் மனதை அதிரச்செய்து விட்டது. நடையில் விரைவைக்கூட்டியபோது நான்கு நாற்பதுக்கு இரண்டு நிமிடங்களே இருந்தன.
கொல்லைப் பக்க வாசலைக் கடந்து அவன் சாலையை அடைவதற்கும் கவிதா டீச்சர் அவனைப் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. நரேன் பத்தாவது வரை சொந்த ஊரில் இருந்த அரசுப் பள்ளியில் படித்தவன். கவிதா அங்கு ஆசிரியையாக இருந்தவள். இருக்கிறவளும் கூட.
அவனைப் பார்த்து சற்றே விழி விரிந்தவளாக “டேய் நரேன் எப்படி இருக்க” என்று செழிப்பான கன்னங்களும் மயக்கும் விழிகளும் கொண்ட கவிதா டீச்சர் வழிமறித்தபோது அவனுக்கு என்னவோ போலாகிவிட்டது. அவளுக்கு தன் மேல் இருக்கும் ஒருவகையான அம்மாத்தனமான அன்பு எப்போதும் போல எரிச்சலையும் குற்றவுணர்வையும் ஒருங்கே கொடுத்தாலும் இப்போது அவனிருக்கும் அவசரத்தில் அவ்வுணர்வுகள் உச்சம்பெற்று மூச்சடைக்க வைத்தன.
“நல்லாருக்கேன் டீச்சர்” என அவசரமாக புறப்படும் நோக்கத்தில் சொல்லிக் கொண்டிருக்கும் அவனையே அவனால் நம்ப முடியவில்லை. அவன் ஒன்பதாவது படிக்கும் போது கவிதா டீச்சர் அப்பள்ளியில் சேர்ந்திருந்தாள். வளமான முலைகளை உடைய ஆசிரியைகள் பேசப்படுவதைவிட கவிதா டீச்சர் அதிகமாக (அவளுக்கும் வளமான முலைகள் இருந்தன) பேசப்பட்டதற்கு காரணம் முன்பே சொன்னது போல அவளது செழிப்பான கன்னங்களும் மயக்கும் விழிகளுமே. நரேன் இத்தகைய பேச்சுகளில் கலந்து கொள்கிறவன் கிடையாது. ஆனால் கவிதா டீச்சரை எண்ணும் போதெல்லாம் நெஞ்சு அதிரும். அவனை கவிதாவிடத்தில் அதிகம் நிம்மதியிழக்க வைப்பது அக்குளை கடந்து தெரியும் வியர்வை தான். அது குறித்த அருவருப்புணர்வும் அவனிடம் இருந்தாலும் அக்குளுக்கும் முலைகளுக்குமான இடைவெளியில் படரும் வியர்வை பார்க்காமல் அவனால் இருக்க முடிந்ததில்லை.
சில மாலைகளில் உலர்ந்த வியர்வை ஜாக்கெட்டில் வெண்ணிறக்கோடாகப் படிந்திருக்கும். ஒரு முறை அக்கோட்டினைப் பார்த்தபடி தேர்வுத்தாளை தவறவிட்டிருக்கிறான்.
ஆங்கில ஆசிரியையான அவள் ஓய்வு நேரத்தில் சொன்ன தேவதைக் கதையில் அந்த தேவதை அக்குளில் வியர்ப்பவளாக அவ்வியர்வை வெண்ணிறக்கோடாக ஜாக்கெட்டில் படிந்திருப்பவளாகவே இவனால் கற்பனை செய்ய முடிந்தது.
சின்ட்ரெல்லா கதையை ஒத்திருந்த அக்கதையை நரேன் இப்படித்தான் நினைவில் வைத்திருந்தான். உலகிலேயே மிக அழகானவளாக அவள் பிறந்தபோது அதனால் உலகுக்கு தீங்குதான் விழையும் என்றும் ஆகவே அவளை கொன்று விடுவதே நலம் என்றும் அவளது அப்பாவான ராஜாவிடம் யோசனை தெரிவிக்கப்பட்டது. மகளைக் கொல்ல விழையாத ராஜா பல்போன கிழவி ஒருத்தியிடம் காட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் அவளை வளர்க்கும்படிச் சொல்லி கொடுத்துவிட்டார். குழந்தையின் அழகால் பொறாமை கொண்ட கிழவி அவளுக்கு மூன்று வேளை உணவளித்து நன்றாகப் பார்த்துக் கொண்டாலும் அவள்தான் உலகின் மிகக்குரூரமான பெண் என அவளிடம் சொல்லி வந்தாள். பற்களற்று உடல் சுருங்கி தன் போல இருப்பதே அழகென்றும் உலகம் முழுவதும் மானுடர்கள் அவ்வழகுடன் மிளிர்வதாகவும் இவள் ஒருத்தி தான் நீண்ட கண்களும் கூர்மையான மூக்கும் சிறு வாயும் மிருதுவான கூந்தலும் வழவழப்பான சருமமும் கொண்ட குரூபி என்றும் கிழவி அவளிடம் சொல்லி இருந்தாள். இளவரசியின் அழகுகள் அனைத்தையும் அக்கிழவி இகழ்ந்தாள். இளவரசி அழும்போது கூட அவள் முகம் அசிங்கமாவதில்லை என்பதை கண்ட கிழவி அவள் கண்ணீரும் அருவருப்பானது என்றாள். அழக்கூட விரும்பாமல் தன் தீச்சுடரும் கண்களையும் நேர்கோடிழுத்தது போன்ற நீண்ட நாசிகளையும் வெட்டப்பட்ட மாதுளையின் நிறத்திலான உதடுகளையும் கொண்டிருந்த தன் அவலட்சமான முகத்தை கண்ணாடியில் பார்த்து உணர்வற்று நின்பாள் இளவரசி. நாள் முழுக்க அவளை ஏதேனும் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டே இருந்தாள் கிழவி. நாள் முழுவதும் இளவரசியின் உடல் வியர்த்து ஒழுகியது. தன்னுடலின் வியர்வையை மட்டுமே கிழவி குறை சொல்வதில்லை என்பதை கண்டு கொண்ட இளவரசி வியர்க்கத் தொடங்கினாள். கிழவி வேலை சொல்லாத தினங்களில் அறைமுழுக்க வெந்நீரை கொதிக்க வைத்து எழும் ஆவியில் நிர்வாணமாகக் கிடந்து வியர்த்தாள். கிழவிக்கு வயதாகி இருந்ததால் நாசிகளின் திறன் குன்றியிருந்தது. மனிதர்களின் அண்மையும் எண்ணங்களும் இல்லாதவளாய் வளர்ந்ததால் இளவரசியின் வியர்வைக்கு புனிதமான மிருக மணமிருந்தது. தூய்மையான ஈடுபாட்டுடன் இணையும் மிருகங்களால் அந்த மணத்தின் வீரியத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. இணையைக்கூடும் முன்னும் மகவுகளைக் கொஞ்சும் போதும் அந்த மணத்தை தாங்கள் அறிந்திருப்பதை அந்த மிருகங்கள் குழப்பத்துடன் உணர்ந்தன. அந்த வியர்வை மணத்தால் வனமிருகங்கள் அவள் மேல் பித்து கொண்டு அவளை அணுகின. அவளைக் கண்டதும் துன்புற்று அவளருகிலேயே படுத்து கண்ணீர் வடித்தன. அவற்றுடன் ஓடிவிளையாடிய இளவரசி அவள் தங்கியிருந்த மொத்த காட்டையும் தன் அரும்பும் வியர்வை மொட்டுகளால் மயங்கச் செய்திருந்தாள் . பறவைகளும் பூச்சிகளும் கூட அவள் வசம் வந்தன. ஆடை அணியாத அவள் வியர்வையின் உப்பூறியதால் எழுந்த வெண்ணிறத்துடன் தன் விழைவின் நறுமணத்தால் உலகை வென்றாள்.
“என்னடா பறக்கபோற மாதிரி இருக்க” என்று சிரித்தாள் இப்போதும் உடலில் வியர்வை சுரப்பிகள் வற்றிப்போகாத அந்த ஆசிரியை. அவனுக்கு இரண்டு வகையான வெறிகள் எழுந்தன. ஒன்று அவளை இறுகக் கட்டிக்கொண்டு விட வேண்டும். மற்றொன்று 446A-வை பிடிக்க வேண்டும். அவன் பின்னதைத் தேர்ந்தெடுத்து விரைந்து நடந்தான். அவன் விளமலுக்கு வந்த போது அந்த பச்சை நிறப்பேருந்து அவனைக் கடந்து சென்றுவிட்டிருந்தது.
லாவண்யாவின் முகம் நினைவுக்கு வர இரண்டு தோள்களிலும் மாட்டியிருந்த பையின் இடப்பக்க காதினை கழற்றிவிட்டு ஓடத்தொடங்கினான். பாஸ்கர் சார் பென்சீன் குறித்து பாடமெடுக்கத் தொடங்கியபோதுதான் லாவண்யாவின் மஞ்சள் வண்ணத்தில் சிறுசிறு பழுப்பு நிறக் கட்டங்கள் கொண்ட சுடிதார் நினைவில் வளரத் தொடங்கியது. பென்சீனை வளர்த்திச் சென்று சோப்பாக்கல் வினையை நடத்திய போது சம்மந்தமே இல்லாமல் லாவண்யாவின் உடலில் மைசூர் சாண்டல் சோப்பின் மனமிருப்பதான எண்ணம் தோன்றியது.
லாவண்யா அவனுடன் தான் பத்தாம் வகுப்பு வரைப் படித்தாள். ஆனால் பதினொன்றாவது சேர்ந்த பிறகு தான் அவளை நோக்கி ஈர்க்கப்பட்டிருப்பதே நம் நாயகனுக்குப் புரிந்தது. கோமாளித்தனமான அறுங்கோண வடிவம் கொண்ட வேற்றுகிரகப்பூச்சி போல இருக்கும் பென்சீன் வளையத்தை பார்க்கும் போதெல்லாம் லாவண்யாவின் சுடிதாரும் நினைவுக்கு வந்துவிடுவது அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அந்த சுடிதாரின் நிறம் மைசூர் சாண்டல் சோப்பை ஒத்தது. பென்சீனுக்கும் அந்த சடிதாருக்கும் மைசூர் சாண்டல் மனம் இருந்தே தீரவேண்டும் என நரேன் தீவிரமாக நம்பினான். அதோடு மாலைவேளைகளில் பள்ளி முடிந்து சைக்கிள் மிதித்தவாறு வீடு திரும்பும் அவளுடலில் ஒட்டியிருக்கும் சுடிதாருக்கு இருக்கும் மணம் அவன் கற்பனையில் மேலும் வளரத்தொடங்கி இருந்தது.
பென்சீன் சுடிதார் மைசூர் சாண்டல் வரிசையில் இணைந்து கொண்டது இப்போது நரேன் துரத்திக் கொண்டிருக்கும் இந்த பேருந்து. திருவாரூரில் இருந்து மன்னார்குடி வரைச்செல்லும் இப்பேருந்து கமலாபுரத்தில் போய் நிற்கும். அங்கிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரம் கிழக்காகச் சென்றால் கொரடாச்சேரி. அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தான் மஞ்சள் நிற சுடிதார் அணிந்த மைசூர் சாண்டல் சோப்பு போட்டு குளிப்பவளான தினம் பள்ளி செல்லும் லாவண்யா படிக்கிறாள். அவள் சரியாக ஐந்து பதினைந்துக்கு கொரடாச்சேரியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நேரனின் வீட்டைக் கடப்பாள். அதற்குள் அவளைப் பார்க்க வேண்டுமெனில் ஐந்து பதினைந்துக்கு அவன் வீட்டை அடையும் வகையில் கமலாபுரத்தில் இருந்து இவன் புறப்பட்டுச் செல்ல வேண்டும். சிக்கல் என்னவெனில் இவன் வீட்டைக் கடந்து கொஞ்ச நேரத்தில் ஒரு சந்தில் திரும்பி தன் வீட்டுக்கு லாவண்யா சென்று விடுவாள்.
உத்வேகத்துடன் ஓடியதில் பேருந்தின் பின்புற ஏணியில் தொற்றிக் கொள்ள முடிந்தது. பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றதும் பவ்யமாக உள்ளே நுழைந்து விட்டான். துருக்கறையும் தூசியுமாக இருந்த அப்பேருந்து அவனுக்குள் மெல்ல உற்சாகத்தை நிறைக்கத் தொடங்கியது. மூச்சு விடுவது எளிமையானதைப் போலத் தோன்றியது. காயத்ரி கனிமொழி கவிதா என கடந்து வந்த பெண் முகங்கள் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த எரிச்சலூட்டும் குணங்கள் மங்கி இனியவையாகத் தோன்றத் தொடங்கின. சாலையின் இருபுறமும் விரிந்த தரிசாக கிடந்த வயல்களிலும் வற்றிக் கிடந்த குளங்களிலும் மாலை கிரிக்கெட்டுக்கான ஆயத்தங்கள் தொடங்கி விட்டன. வாசல் தெளிப்பதற்கு பல வீடுகளில் இருந்தும் பெண்கள் எட்டிப் பார்த்தனர். 446 A அடுத்தடுத்து வரும் 358V மற்றும் 473F இவற்றை விட கூட்டம் குறைவானதாக இருந்தது. அடர் கருப்பு நிறத்தில் இருக்கும் நடந்துநர் பஸ் பாஸை வெளியே எடுக்க சொல்லி வெறுப்பேற்ற மாட்டார். மாலை சீக்கிரமாக பள்ளி முடியும் சிறு பிள்ளைகளைக் கூட இப்பேருந்தில் பார்க்க முடியும். கமலாபுரத்தை பேருந்து நெருங்கிய போது அவன் மனம் நெருடத் தொடங்கியது. அவளைப் பார்ப்பதைக் கைவிட்டு பேசாமல் இப்பேருந்திலேயே மன்னார்குடி போய்விட்டால் என்ன என்று தோன்றியது. இப்பேருந்து மன்னார்குடியும் செல்லாது. எரிபொருள் தீராத ஓட்டுநர் தேவையற்றதாக இப்பேருந்து சென்று கொண்டே இருக்கும். நறுமணம் மிக்க வியர்வை உடையவளாக லாவண்யா இப்பேருந்தில் அமர்ந்திருப்பாள். நான் அவளெதிரே காலங்களற்று அமர்ந்திருப்பேன். முதலில் இந்த சாலையும் பின்பு இப்பேருந்தின் சக்கரங்களும் மறையும். தொடர்ந்து பேருந்தின் இருக்கைகளும் அதன் உடலும் மறையும். அடுத்ததாக நானும் பேருந்தெனும் ஓட்டமும் மறையும். பின்னர் அவளும் மறைவாள். பின்னர் அந்த நறுமணம் மட்டும் காற்றில் என்றுமே இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது தாக்குண்டவனைப் போல அந்த நறுமணத்தை நாசியில் உணர்ந்தான். மிருதுவான தோலுக்கு மட்டுமே உரிய மணமது. குழந்தைகளின் உடலில் பால்வாடை என்று தோன்றிய கணமே அதுவல்ல என அகம் மறுத்தது. கவிதாவின் முகம் நினைவில் எழுந்து குற்றவுணர்வைத் தந்தது. கமலாபுரத்தில் இறங்கியபோது மணி ஐந்தைக் கடந்திருந்தது. எண்ணங்கள் ஏதுமற்றவனாக மிதிவண்டியை அழுத்தினான்.
வேகத்தை குறைக்கச் சொல்லி மனம் கெஞ்சியது. ஒருவேளை லாவண்யாவை பார்ப்பது (அதாவது இப்படி கஷ்டப்பட்டு பார்ப்பது) இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான். அந்த எண்ணம் அவனே ஆச்சரியம் கொள்ளும் வகையில் உறுதியடையத் தொடங்கியது. மனம் முழுக்க துயரும் வெறியும் அழுத்தியது. ஹாண்டில்பாரை இறுக்கிப் பிடித்தபோது தசைகள் முறுக்கேறின. ஒரு வகையான அலட்சியம் நிறைந்த லாவண்யாவின் புன்னகை நினைவில் எழுந்து உடலைத் தளரச் செய்தது. வீட்டினை நெருங்கிய போது எதையோ ஊகித்துக் கொண்டது போல மனம் பரபரப்படையத் தொடங்கியது. லாவண்யாவை இன்று பார்க்கப் போவதில்லை என மனம் ஏற்கனவே உணர்ந்திருந்ததால் அவளைக் காணாமல் வீட்டுக்குள் நுழைந்தது கூட ஏமாற்றம் தருவதாக இல்லை. இருந்தும் மனதுக்கு முற்றிலும் விரோதமானதாக ஒரு உணர்வு அவனுக்குள் மிக ஆழமாகத் தோன்றியது.
“ஏன்டா சீக்கிரம் வந்துட்ட?” என்ற சாதாரண கேள்வியை அம்மா கேட்டபோது கூட தன் உள்ளத்தின் லயம் குன்றியது போன்ற வெறுப்பை நரேன் தன்னுள் உணர்ந்தான். சரியாக இந்த வெறுப்புணர்வு எப்போது தோன்றியது என்று யோசித்தபடியே பின்னே சென்ற போது லாவண்யாவின் தெருவின் வளைவு திரும்பும் இடத்திற்கு அவன் மனம் சென்று முட்டி நின்றது. அவனுக்கு துளியும் விருப்பம் இல்லாவிட்டாலும் அரை வினாடி கூட கேட்டிராத லாவண்யாவின் அம்மாவின் ஓலம் அவன் நினைவில் எழுந்து தொலைத்தது. வாசலில் சில இரு சக்கர வாகனங்கள் பரபரப்புடன் விரைந்து கொண்டிருந்தது அவன் சந்தேகத்தை உறுதிபடுத்தியது. எதையோ கண்டு பயந்து போனவனாக வீட்டின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான். இவ்வளவு நேரமும் மனதின் கூச்சல் புறத்தை கவனிக்கவிடாமல் செய்திருந்தது. அவனது அறைகளற்ற ஓட்டு வீட்டிலும் சாலையிலும் நிலவிய அமைதி இப்போது அச்சுறுத்துவதாக இருந்தது. ஆனால் இருசக்கர வாகனங்கள் வழக்கத்துக்கு மாறான வேகத்துடன் சென்று கொண்டிருப்பதாக அவனுக்குப்பட்டது. அது தன் பிரம்மை என எண்ணிக் கொள்ள விரும்பினான். அப்படி எண்ணிக்கொள்ள முடியாதபடிக்கு வாகனங்களின் இரைச்சல் அவனைத் தாக்கியது. அச்சூழலில் ஆற்றில் சிறுவர்கள் குதித்து விளையாடும் ஒலியையோ அம்மா வாசல் தெளிக்கும் சத்தத்தையோ அல்லது வேறேதும் உயிருள்ள ஒலியையோ அவன் கேட்க நினைத்தான். ஆனால் ஆபாசமான வசைச்சொல் போல சீரான இடைவெளியில் வாகன இரைச்சல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. தன்னை அம்மா அழைக்கப் போகிறாள் என்று அவன் மனம் ஊகித்த கணமே “தம்பி இங்கவாடா இங்கவாடா” என பரபரப்புடன் அழைக்கும் அம்மாவின் குரல் கேட்டது. அக்குரலை அப்போது தீவிரமாக வெறுத்தான்.
வெளியே செல்லாமல் கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு “என்னம்மா இப்போ. படிக்கவிட மாட்டியா நீ” என்று உள்ளிருந்தே சத்தம் போட்டான்.
உள்ளே விரைந்து வந்த அம்மா தயங்கி நின்றாள். நிமிர்ந்து பார்த்தால் அவள் அறிந்ததை சொல்லி விடுவாள் என்றெண்ணி பயந்தபடி தலையை நிமிர்த்தாமல் அமர்ந்திருந்தான்.
“தம்பி” என்றாள் மீண்டும் மெல்ல. அவன் எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.
“என்னம்மா”
“குடியானத்தெரு பொண்ணு ஒன்னு ஆக்ஸிடென்ட்ல செத்து போயிட்டாம். வாசுகி அக்கா இருக்காங்கள்ல அவங்க பொண்ணு சந்தியா” என்று அம்மா சொன்னபோது அவனுடலில் பெரும் நிம்மதி பரவியது. அந்த நிம்மதியை மனதின் ஒரு மூலை அஞ்சியது.
மற்றொரு மூலை மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்தது. அந்த மூலை அம்மாவை திருப்திபடுத்துவதற்காக முகத்தில் அதிர்ச்சியை வரவழைத்துக் கொண்டு “எப்பம்மா என்னம்மா நடந்துச்சு. டென்த் வரைக்கும் என்கூட தாம்மா அந்த பொண்ணு படிச்சது” என்றது. அவளும் லாவண்யாவும் ஒன்றாகத்தான் பள்ளி சென்று இருக்கின்றனர். மினி பஸ் ஒன்று வளைவில் திரும்ப முனைந்த போது நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்திருக்கிறது. சைக்கிளில் ஓரமாகச் சென்று கொண்டிருந்த சந்தியாவை அணைந்தவாறே அப்பேருந்து கவிழ்ந்திருக்கிறது. அவளைத் தவிர வேறு யாரும் இறந்திருக்கவில்லை.
சந்தியாவின் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும் போதுதான் அந்த உண்மையை அதிர்வுடன் உணர்ந்தான். லாவண்யாவும் அங்கிருந்தாள். அவள் அம்மாவுக்கு பின்னே அவள் தோளைப்பிடித்தவாறு விசும்பலாக அழுதுகொண்டு. லாவண்யாவால் அழ முடியும் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. லாவண்யாவை பார்க்கும் போதெல்லாம் தோன்றும் அந்த நறுமண உணர்வு முற்றாக அவனைவிட்டு நீங்கியிருந்தது. மறுநாள் முதல் தான் பள்ளியின் தெருப்பக்க வாசல் வழியாகவே சென்று வந்ததாக என்னிடம் சொன்னான்.
1 comment for “446 A”