ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 3

இளம் தலைமுறையின் இடைக்கால ஈடுபாடுவாசகர் வட்டம்

ரெ.பாண்டியன், விஜயன், அரவிந்தன், ராஜசேகர், ராஜாராம், சூரியரத்னா, பாலமலர் போன்றவர்களால் 1988ல் தொடங்கப்பட்ட வாசகர் வட்டம் நவீன இலக்கிய வாசிப்பு, விமர்சனத் தேடலுக்குக் களம் அமைத்தது.

இதே காலகட்டத்தில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவின் தமிழ்ப் பகுதியும் உயர்நிலைப் பள்ளி மூத்த தமிழாசிரியர் மத்திய குழுவும் இணைந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறுகதைப் போட்டி நடத்தி, தேர்வுபெற்ற கதைகளை நூல்களாக வெளியிட்டது. டி.டி.சாம்ராஜின் முயற்சியில் வெளிவந்த ‘ஒரு புல்லாங்குழல் புயலை உச்சரிக்கிறது’, ‘விடியலை நோக்கி’ ஆகிய அந்த இரு தொகுப்புகளும் கவனத்தில்கொள்ளத்தக்கவை. அமீருத்தின் உட்பட சில நல்ல ஆற்றல்மிக்க படைப்பாளர்களை அடையாளம் காட்டிய நூல்கள் இவை. ‘ஒரு புல்லாக்குழல் புயலை உச்சரிக்கிறது’ என்ற பரிசுபெற்ற தலைப்புக் கதையை எழுதிய அமீருத்தீன் தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதினார். இன்றுவரையில் பாடல்கள் எழுதுகிறார்கள். ஆனால், மற்றவர்களின் ஆர்வம் ஓரிரு கதைகளுடனேயே நின்றுவிட்டது.

1990ல் சிங்கப்பூர் 25 ஆண்டுகளை எட்டிய நிலையில், இந்த நாட்டு இலக்கியங்களின் இரண்டு மேம்பாடுகள் குறித்துக் குறிப்பிட்ட பேராசிரியர் எட்வின் தம்பு, பல்வேறு இனக் குழுக்களிடம் சிங்கப்பூரில் தங்கள் அனுபவங்களை சிங்கப்பூரர்களாக பதிவிடுவதில் அதிகரித்துள்ள நம்பிக்கையையும் புதினத்தின் வளர்ச்சியையும் சுட்டியுள்ளார் (Words for the 25th Readings, 1990). எனினும், பிற மொழிகளின் அனுபவங்களை மற்ற மொழிகளுக்கான ஆசிரியர்களது (Editors for the other languages) பார்வை வழியாகவே பெறுகிறார். தமிழைப் பொருத்தவரையில் இந்த நம்பிக்கையும் வளர்ச்சியும் துளிர்விட்டன என்றாலும் ஆழமான தடங்களைப் பதிக்கவில்லை.

அகவயமான தேக்கம்

ஏறக்குறைய 1950களின் இறுதியில் பெரும் எழுச்சியைக் கண்ட சமூக அக்கறைப் படைப்பிலக்கியத்தின் இறுக்கத்திலிருந்து விடுபட்டு, புதிய பார்வையுடன் வெளிப்படத்தொடங்கிய அடுத்த தலைமுறை எழுத்துகள், 1990களுக்குப் பின்னர் மெல்லத் தேக்கம் காணத் தொடங்குகிறது.

பொருள்தேடலையும் வாழ்க்கை உயர்வு கோரிய கடும் உழைப்பையும் இதற்கான காரணங்களாகக் கூறுகின்றனர் படைப்பாளர்கள். இவை புறவயமான காரணங்கள்.

வெவ்வேறு சமூகங்களின் பண்பாட்டுக் கொண்டாட்டங்களுடன் வெள்ளிவிழாவைக் கொண்டாடி, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிய சிங்கப்பூரின் பயணத்தில் தேசிய அடையாளச் சொல்லாடல்கள் வலுப்பட்டன. அந்தந்த இனங்களின் தனித்த பண்பாடுகளின் செழிப்பே சிங்கப்பூரின் தனித்தன்மையான அடையாளம் என்ற நிலைப்பாட்டுடன் சமூகங்களின் பண்பாட்டுச் செறிவுக்காக அரசாங்கம் பலவழிகளிலும் உதவிகளைப் பெருக்கிய அதேநேரத்தில், மொழி, பண்பாடு சார்ந்த அடையாளத் தேவைகளுக்கான உணர்வு நலிவடையத் தொடங்கியது.

மொழி, பண்பாடு, படைப்பிலக்கியம், சமூகம் சார்ந்த அகவயப்பட்ட சுய எழுச்சியும் சமூக எழுச்சிகளுக்கான தேவைகளும் இல்லாமல் போவதும் அல்லது உணரப்படாமல் இருப்பதும் இலக்கியப் படைப்புக்கோரும் உள்மன வெளிப்பாட்டுக்குத் தடையாகிறது. அதனால், உள்ளொளித் தேடல் குறைகிறது.

இதற்கொரு முக்கிய காரணம் தமிழ் மொழியின் நிலை, இலக்கியம் குறித்த கொள்கை உருவாக்கம் போன்றவை தமிழ்ச் சமூகத்தின் கைகளில் இல்லாது போனது.

sg-swf2017nov6-aram“இங்கு தமிழ் மொழி நிலை குறித்த கொள்கை உருவாக்கம் தமிழ் சமூகத்தின் கைகளில் இல்லாத நிலையில், கல்விச் சமூகம் இலக்கணத் தமிழை காப்பதில் அக்கறை காட்டுகிறது. இங்குக் கற்றுத்தரப்படும் தமிழ், இளையர்களுக்கு எவ்வித தொடர்பு ஆர்வத்தையும் உருவாக்காது. மொழிக்கு எந்தப் பயன்பாட்டையும் அவர்களால் காண முடியாது. அவர்களின் இந்தப் போக்கில் தவறு காண முடியாது. இதனால் பெரும்பாலோர் தமிழில் பேசுவதில்லை,” என்று கூறியுள்ளார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெரால்ட் ஷிஃப்மன் (ஷிஃப்மன், ஹெரால்ட், எஃப், 2009). ஒரு மொழியில் ஈடுபாடு இருக்கும்பட்சத்திலேயே அம்மொழியின் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படும். பேராசிரியர் ‌ஷிஃப்மன் குறிப்பிடுவதைப் போல, இந்த நாட்டில் பிறந்து, கல்வி கற்கும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு இலக்கியத்தில் நாட்டம் இல்லாமல் இருப்பதற்கு கல்வி முறை ஒரு காரணமாக இருக்கலாம்.

சமுதாயத்தின் உயர்வுக்கான தேவைகள் அனைத்தையும் அரசாங்கம் முன்னெடுத்த அதேநேரத்தில், கோ.சாரங்கபாணி, அ.வீரமணி போன்ற தலைவர்களும் இல்லாதநிலை ஏற்பட்டது. தலைவர்களைச் சார்ந்தே செயல்பட்டுப் பழகிவிட்ட சமூகம் எதற்குமே ஒரு தலைமைத்துவத்தைத் தேடுவதும் ஒரு காரணம்.

கலை, இலக்கியத்தில் அரசாங்கத்தின் அக்கறை, கொள்கை மாற்றங்கள், பொருளியல் அடிப்படையிலான மேம்பாட்டு முன்னெடுப்புகள்.

1980களின் இறுதியில் நாட்டு நிர்மாணப் பணிகளுக்கு வலுச்சேர்க்க கலை இலக்கியப் பயன்பாட்டின் தேவை உணரப்பட்டது. நாடு என்ற சிந்தாந்தத்தை உருவாக்கும் முயற்சியில் மக்களை ஒன்றிணைக்க, ஒவ்வோர் இனத்தின் தனி அடையாளமும் பேண வேண்டும் எனக் கூறப்பட்டது. அதேநேரத்தில், இனங்களுக்கிடையிலான உறவாடல்களை வளர்க்கும் நோக்கில் மொழிபெயர்ப்புகள், கூட்டு இலக்கிய முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன.

நான்கு மொழி கவிதை வாசிப்பு முதன் முதலில் 5.12.1980ல் அன்றைய ஃபோர்ட் கேனிங்கில் இருந்த டிராமா சென்டரில் நடந்தது. முதல் நான்கு மொழி கவிதைப் போட்டி 1977ல் நடைபெற்றது. வெற்றிபெற்ற படைப்புகளைச் சமூக வளர்ச்சி அமைச்சின் கல்வி பதிப்புத் துறை பிரிவு வெளியிட்டது. இரண்டாவது போட்டி 1984ல் நடந்தது. 1980 மார்ச்சில் தேசிய அளவில் சிறுவருக்கான சிறுகதைப் போட்டி நான்கு மொழியிலும் நடைபெற்றது. தொடர்ந்து தேசிய சிறுகதைப் போட்டியைக் கலாசார அமைச்சு 1982ல் தொடங்கியது. இலக்கியப் பரிசு 1980ல் தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் எழுத்தாளர் வாரம் 1988ல் தொடங்கப்பட்டது.

அமைச்சின் ஆதரவில் சிங்கா இலக்கிய இதழ் 1980 டிசம்பரில் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு இருமுறை பிரசுரமான அந்த இதழ் 1990கள் வரை வெளிவந்தது. ஆங்கில இதழில், தமிழ், சீன, மலாய் படைப்புகளும் இடம்பெற்றன.

“கவிதை என்பது ஆடம்பரம். நமக்குச் சாத்தியமல்ல. மக்களுக்கு இலக்கியம் முக்கியமல்ல, வாழ்க்கைத் தத்துவம்தான் முக்கியம்,” என்று 1965ல் நாட்டின் பயணத்தைத் தொடங்கினார் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ.

சிங்கப்பூர் 25 ஆண்டு கால வளர்ச்சியை எட்டிய நிலையில், “பொருளாதார வளர்ச்சி ஓரளவு நிலைபெற்றவிட்ட நிலையில், சிங்கப்பூரின் பொருளியலிலும் தேசிய மேம்பாட்டிலும் சிங்கப்பூரின் கலாசாரத்துக்கும் கலைகளுக்கும் அதிக கவனமும் வளமும் ஒதுக்க வேண்டிய கட்டத்தை நாம் எட்டியுள்ளோம். கலாசாரமும் கலைகளும் நாட்டுக்கு உயிர்த்துடிப்புத் தருகின்றன. நமது வாழ்க்கையின் தரத்தையும் மேம்படுத்துகிறது,” எனக் கூறினார் அன்றைய முதலாவது துணைப் பிரதமர் கோ சோக் டோங். (கலாசார கலைகள் மன்றத்தின் அறிக்கைக்கு 1989, ஏப்ரலில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்).

சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக, கலாசார கலைகள் மன்றத்தின்கீழ் உருவாக்கப்பட்ட இலக்கியத்துக்கான குழு, சிங்கப்பூரைத் துடிப்புமிக்க கலாசாரச் சூழல்கொண்ட உலகத்தரம் வாய்ந்த நகரமாக்குவதற்கான பரிந்துரைகளை 1988ல் முன்வைத்தது.

நாட்டின் பொருளியல் இலக்குக்குத் துணைபுரியும் இலக்கிய உருவாக்கக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. 1991ஆம் ஆண்டு தேசிய கலைகள் மன்றம் அமைக்கப்பட்டது. கலை மையங்கள், நிகழ்கலைகளுக்கான இடங்கள், அதிக நூலகங்கள் அமைக்கப்படுகின்றன.

தொடர்ந்து, சிங்கப்பூரின் கலை, கலாசாரத்தை வாழ்க்கைப்பாணியாக ஏற்றுமதி செய்வதை இலக்காகக்கொண்ட புத்தாக்க நகரத் திட்டம் (Renaissance City Plan RCP) வெளியிடப்பட்டது. இதன்தொடர்பில் 2000, 2005, 2008 என மூன்று கொள்கை அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

அடுத்து 2012ல் கலை, கலாசார உத்திபூர்வ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. சிங்கப்பூரின் கலை, கலாசாரத்துக்கான திட்டமிடலில் மக்களின் ஆலோசனையையும் கருத்துகளையும் உள்ளடக்கிய முதல் அறிக்கை இது. இத்திட்டத்திற்கு ஐந்தாண்டு காலத்துக்கு $270 மில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

வெளிநாட்டினர் வருகையால் ஏற்பட்ட வளர்ச்சி

IMG_4209கலை, இலக்கிய வளர்ச்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தொடங்கிய 1990களில், அடுத்தகட்ட பொருளியல் வளர்ச்சித் திட்டத்திற்கு சிங்கப்பூரை நகர்த்த,  வெளிநாட்டினரைத் தருவிக்கும் கொள்கையை அரசாங்கம் கைக்கொண்டது. சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங், 1997ஆம் ஆண்டு தேசிய தின உரையில், சிங்கப்பூரர்களுக்குச் சிறந்த இல்லத்தை உருவாக்க உலகெங்குமிருந்தும் திறன்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார். வெளிநாட்டவர்களை இங்கு மூன்று நிலைகளில் ஈர்க்கும் கொள்கையை முன்வைத்தார். அதன்பின், கடந்த 20 ஆண்டுகளில் படித்த, திறன்கள் பெற்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரிப்பால், பொருளியலின் அபரிமித வளர்ச்சியோடு கலை, இலக்கியம் உட்பட மற்ற துறைகளும் வளர்ச்சி காணத் தொடங்கின.

ஆதரவு, வாய்ப்பு, தளங்களின் பெருக்கம், சூழலின் செழிப்பு

எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ் இலக்கியச் சூழல் 2000ஆம் ஆண்டுகள் தொடங்கி செழித்துக்கொழிக்கிறது.

எழுத்தாளர் விழா, $10,000 இலக்கியப் பரிசு, $10,000 தங்க முனை விருது, நூல் வெளியிட மானியங்கள், ஒரு மாத மொழி விழா, தேசியக் கவிதை விழா என அரசாங்க ஆதரவு ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. வாரம்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. போட்டிகள், பரிசுகளுடன் 1990களுக்குப் பிறகான இணையத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் படைப்பிலக்கிய வெளிப்பாட்டுக்கான தளங்களும் பெருகி உள்ளன.

2015லிருந்து இந்த ஆண்டின் (2017) பாதி வரையில், புதினம், கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், நாடக நூல்கள் என்று கிட்டத்தட்ட 300 நூல்கள் வரை வெளியிடப்பட்டுள்ளன.
இதில் தமிழ் பதிப்புத்துறையில் நம்பிக்கையோடு இறங்கியிருக்கும் கிரிம்சன் எர்த் பதிப்பகம் மட்டுமே கிட்டத்தட்ட 90 நூல்களைப் பதிப்பித்துள்ளது.

தங்கமீன் வாசகர் வட்டம், இளைமைத்தமிழ்.காம் போன்ற முயற்சிகள் மூலம் புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதுடன், அறிமுக எழுத்தாளர்களுடன்  பல காலம் எழுதுபவர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறது தங்கமீன் அமைப்பு. ‘வேறொரு மனவெளி’-பெண்கள் சிறுகதைத் தொகுப்பு, புதியவர்கள் பலரது சிறுகதைகள் அடங்கிய ‘சிலிக்கான் இதயம்’, ‘நதிக்கரை நாகரீகம்’, ‘அப்பாவின் படகு’ உட்பட 2007லிருந்து இதுவரையில் 32 நூல்களை இது வெளியிட்டுள்ளது. மேலும் இவ்வமைப்பை நடத்திவரும்  திரு பாலுமணிமாறன் 2010 அக்டோபர் முதல் சில ஆண்டுகள் வரை தங்கமீன் இணைய இதழையும் வெளியிட்டார்.

2000ல் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவால் கடற்கரைச் சாலை கவிமாலை என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின் மா.அன்பழகன், இறைமதி ஆகியோர் தலைமையில் இயங்கிவரும் கவிமாலை அமைப்பு மாதந்தோறும் கவிதை நிகழ்ச்சி, மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு – போட்டிகள், ஆண்டுவிழாகளை நடத்துவதுடன் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றிய படைப்பாளர்களுக்கு 2003 முதல் ஆண்டுதோறும் “கணையாழி விருது” வழங்கி வருகிறது. இவ்வமைப்பு 2016ஆம் ஆண்டு வரையிலும் 90 நூல்களை வெளியிட்டுள்ளது. இதில் 2008 முதல் கவிமாலைக் கவிதைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1988 முதல்  (அவ்வப்போது சில கால இடைவெளியுடன்) வாசிப்பு, பகிர்வு, உரையாடல் கூட்டங்களை நடத்தி வரும் வாசகர் வட்டம் அமைப்பு, திருமதி சித்ரா ரமே‌ஷின் ஒருங்கிணைப்பில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டு இலக்கிய நிகழ்ச்சிகள், ஆண்டு விழாக்களை நடத்தி வருவதுடன் 12 நூல்களையும் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய தமிழ் இலக்கிய அமைப்பாகக் கருதப்படும் 110 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், நா.ஆண்டியப்பனின் தலைமையின்கீழ் முத்தமிழ் விழா, கண்ணதாசன் விழா போன்ற ஆண்டு விழாக்களுடன் மாதந்திர கதைக் களம், நூல் வெளியீடுகள், இலக்கிய ஆய்வரங்குகள், நிகழ்ச்சிகளை சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் நடத்தி வருகிறது.

வளரும் படைப்பாளருக்கான கல்வெட்டு எனும் பயிற்சிப் பட்டறையை அவாண்ட் தியேட்டரின் செல்வநாதன் 2015, 2016 இரண்டு ஆண்டுகளுக்கு நடத்தினார். புதினம், கவிதை, நாடகம் ஆகிய துறைகளில் தேர்ச்சிபெற்ற படைப்பாளர்களிடமிருந்து இளையர்கள் பயிற்சி பெற்றனர். இளஞ்சேரன் போன்ற ஒருசில இளம் படைப்பாளிகளை கல்வெட்டு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய நூலக வாரியம் நான்கு மொழியிலும் வாசிப்பை வளர்க்க 2005ஆம் ஆண்டிலிருந்து ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ தேசிய இயக்கத்தை நடத்தி, உள்ளூர் வெளிநாட்டுப் படைப்புகளை பல புத்தாக்க வழிகளில் அறிமுகம் செய்து வருகிறது. தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளுக்கான சிறுகதைப் பயிலரங்கும் போட்டியும் 1980களின் இறுதியில் இருந்து இன்றுவரையில் தொடர்கிறது. அவற்றில் தேர்வுபெற்ற கதைகள் நூல்களாக வெளியிடப்படுகின்றன. கல்விக் கழகமும் பயிற்சி ஆசிரியர்களுக்கு இலக்கிய ஆர்வமேற்படுத்தும் முயற்சியாகப் பயிலரங்குகள், போட்டிகள், வெளியீடுகளைச் செய்து வந்துள்ளது. டாக்டர் சீதாலட்சுமி ‘அமைதியான புயல்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இராஜிக்கண்ணு, அ.மல்லிகா  முயற்சியில் ‘கதை அரங்கம்’, ‘கதை அரும்பு’, ‘சிறுகதைக் கனி’, ‘கதைச் சோலை’ என நான்கு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. த.திருமாறன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் சிறுகதைகளை ‘கடல் தேடும் நதிகள்’ என்ற தலைப்பில் 2015ல் வெளியிட்டுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகனுடன் உடனிருந்து பயிலும் திட்டத்தை, தேசியக் கல்விக் கழகம் 2016ல் மேற்கொண்டது. மாற்றுக்கருத்துகளுக்கு இடம் தராத, இறுக்கமான கட்டமைப்பு உள்ள நாட்டில், இருக்கின்ற சிந்தனைகளைக் கலைத்துப்போடும் சமகாலத்தின், தீவிரமான படைப்பாளியான ஜெயமோகனை அழைத்துவந்து மாணவர்களுக்கு இலக்கியப் பயிற்சியும் அறிமுகமும் ஏற்படுத்திய முயற்சி வரவேற்கத்தக்கது. இந்தப் பயிற்சியின்போது பயிற்சி ஆசிரியர்கள் எழுதிய சிறுகதைகளைச் ‘சிங்கப்பூர் சிறுகதைக்கொத்து’ என்ற தலைப்பில் கல்விக் கழகம் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

சிறியதும் பெரியதுமாக இன்னும் பல நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதழ்களின் பங்கு

16649148_1367735143269500_6377318202211850528_nஇந்நாட்டில் படைப்பிலக்கியத்தை உருவாக்கி வளர்த்தெடுத்ததில் இதழ்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. இலக்கிய வரலாற்றை எந்தக் கோணத்தில் எழுத நினைத்தாலும், முழுமையான ஒரு பார்வையைப் பெற, இதழ்களை ஆய்வு செய்தே ஆகவேண்டும். இவற்றில் வெளிவந்த ஏராளமான எழுத்துகள் இன்னமும் நூல் வடிவம் பெறவில்லை.

1875முதல் ஜப்பானியர் ஆதிக்கம் தொடங்கிய 1941வரை சிங்கப்பூரில் தமக்குத் தெரிந்தவரை 40 தமிழ் இதழ்கள் சிங்கப்பூரில் வெளிவந்துள்ளதாக ஆய்வாளர் ந.பாலபாஸ்கரன் குறிப்பிடுகிறார். இந்நாட்டின் முதல் நான்கு பத்திரிகைகளின் வெளியீட்டில் தொடர்புள்ளவரான சி. கு. மகுதூம் சாயபு சொந்தமாகவே தீனோதயா அச்சகம் வைத்திருந்தவர். தொடக்க காலத் தமிழ்ப் புத்தகங்கள் பலவற்றை அச்சடித்துக் கொடுத்தவர்.
அதன்பின்னர் புதுயுகம் வார இதழ் (1954), மாதவி  மாத இதழ் (1959), தமிழ் மலர் (1963) நாளிதழ், உரிமை (1966) வாரம் இருமுறை இதழ், வானொலி வார இதழ் 1967, மனோகரன் (எல்.டி.ரமணி), திரையொளி (1956), தமிழோசை இலக்கிய, கலைமலர், இந்தியன் மூவி நியூஸ், கண்ணகி  மாத இதழ், தேச தூதன் (1962),முஸ்லிம் இளைஞன், தூதன், பிறைக்கொடி, செம்பிறை, அறிவுப் பேரிகை, இளைஞன் குரல், உதயசூரியன், மாணவன் இதழ் என பல இதழ்கள் அவ்வப்போது வெளிவந்துள்ளன.

சிங்கப்பூரில் கையெழுத்து இதழ்களும் வெளிவந்துள்ளன. செம்வாங் வட்டாரத்தில் 1960களில் எம்.கிரு‌ஷ்ணன் தமது நண்பர்களுடன் சேர்ந்து கையெழுத்து இலக்கிய இதழ் ஒன்றையும் சந்திரசேகரன், ராஜசேகரன் சகோதரர்கள் ‘கலைக்கொத்து’ என்ற கையெழுத்து இலக்கிய இதழையும் வெளியிட்டுள்ளதாக செ.ப.பன்னீர்செல்லம் தெரிவித்தார். மேலும் 1960களில் கேப்டன் கோவிந்தராஜு ‘முக்கனி’ என்ற கையெழுத்து இதழையும் கடையநல்லூர் ஜமீலா என்ற புனைபெயரில் எழுதும் பா.நா.ஷம்சுத்தீன், க.து.மு.இக்பால், செய்யது முஹம்மது மூவரும் 1970களில்  ‘நகைச்சுவை’ என்ற கையெழுத்து இதழையும் அமைச்சின் பத்திரிகை வெளியீட்டு உரிமம் பெற்று வெளியிட்டுள்ளனர். பாசிர் பஞ்சாங், புக்கிட் பாஞ்சாங், நேவல் பேஸ், செம்பவாங், மார்சிலிங், கிராஞ்சி, கம்போங் பாரு, தஞ்சோங் பகார் என அன்று தமிழர்கள் செறிவாக வாழ்ந்த இடங்களிலெல்லாம் இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிறிய வெளியீடுகள் வெளிவந்துள்ளன. பதியப்படாது மறக்கப்பட்டுவிட்ட முயற்சிகள் இவை.

கடந்த 82 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழுடன், 1990களின் இறுதியிலிருந்து புதிய குடியேறிகள்  நடத்திய, நடத்தி வரும், சிங்கை எக்ஸ்பிரஸ், திசைகள்- திசை, சிங்கைச் சுடர், நாம், தனி, புதிய நிலா, செம்மொழி, சிராங்கூன் டைம்ஸ் போன்ற அச்சு  இதழ்கள், தங்கமீன் இணைய இதழ் ஆகியவற்றுடன் அவ்வப்போது வெளிவரும் பள்ளிகள், கல்விநிலையங்கள், அமைப்புகளின் மலர்களும் இதழ்களும் இணையப் பக்கங்களும் படைப்பிலக்கிய வெளிப்பாட்டுக்கு விரிந்த தளத்தை அமைத்துள்ளன.

சிங்கப்பூர் படைப்பாளர்களுக்கு பெரும் ஊக்கம் தந்து, படைப்புகளைப் பெருமளவில் வளர்ப்பதில் 1990களின் மத்தியிலிருந்து இணையம் முக்கிய பங்காற்றி வருகிறது. இணையப் பக்கங்களினால் படைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் படைப்புகளுக்குப் பரந்த அறிமுகமும் கிடைக்கிறது. காயத்திரி இளங்கோ, உமா நாதன் போன்ற இளையர்கள்  வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வருகின்றனர். இன்னும் சிலர் சமூகஊடகங்களில் அவ்வப்போது எழுதுகின்றனர். இது ஆரோக்கியமான சூழலில்லைதான் என்றபோதிலும் அவர்களின் வளர்ச்சிக்கு இது ஒரு தொடக்கமாக இருக்கலாம்.

உலகமயமாக்கல், தொடரும் இடம்பெயர்வுகளால் மாறிவரும் அடையாளத் தேடலும், திரும்பும் வரலாறும்

கடந்த 20 ஆண்டு கால சிங்கப்பூரின் தமிழ் இலக்கியப் பயணத்தை அவதானித்தால் உலக அளவிலான ஓர் அடையாளத் தேடலை உணர முடியும். இக்கால கட்டத்தில் இங்கு குடியேறியவர்களின் வாழ்வியலுடன், நிலங்களின் எல்லைகளுக்குள் அடங்கிவிடாத அவர்களது உலகமயமான பார்வைகளையும் இக்காலகட்டப் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

ஜெயந்தி சங்கரின் ‘திரிந்தலையும் திணைகள்’ நாவல், 1990களின் தொடக்கத்தில் இந்நாட்டில் குடியேறியவர்களின் வாழ்க்கை எவ்வாறு நாட்டின் வளர்ச்சியோடு இணைந்து செல்கிறது என்பதையும் அதேநேரத்தில் அவர்களின் கருத்துருவாக்கங்கள், சிந்தாந்தங்களை எவ்வாறு பல்வேறு வெளித்தாக்கங்களும் கட்டமைக்கின்றன என்பதையும் விவரிக்கிறது.

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘ஏக்கங்களுக்கும் உயிருண்டு’ (தமிழ் முரசு 12.2.2017) சிறுகதை, சித்ரா ரமே‌ஷின் ‘நவீன சுயம்வரம்’ குறுநாவல் (ஒரு துளி சந்தோ‌ஷம் தொகுப்பு, 2016) போன்ற படைப்புகள் சிங்கப்பூர், அமெரிக்கா, தமிழ்நாடு என்று எல்லைகள் கடந்த வாழ்க்கை அனுபவங்களைக் காட்டுகின்றன.

உலகமயமாக்கத்தாலும் தொடர்ந்துகொண்டே இருக்கும் இடப்பெயர்வுகளாலும் ஏற்படும் அடையாளச் சிக்கல்கள், தேடல்கள், அடையாள உருவாக்கத்திற்கான தேவைகளை நுட்பமாக எடுத்துரைப்பது இன்றைய இலக்கியத்தின் முன்னுள்ள சவால்.

இத்தகைய ஒரு சவால்தான் கிட்டத்தட்ட 100, 150 ஆண்டுகளுக்கு முன்னான சிங்கப்பூரிலும் இருந்துள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது. அன்றைய படைப்பாளர்களும் இத்தகைய இடப்பெயர்வுகள், எல்லைகள் கடந்த வாழ்வனுபவம், பண்பாட்டுப் பாதுகாப்பு, அடையாளத் தேடல்கள் குறித்தே எழுதியுள்ளனர். காலமும் சூழ்நிலைகளும் பயன்பாட்டு மொழியுமே மாறுபட்டுள்ளன.

இந்நாட்டில் பிழைக்க வேண்டுமானால், மலாய், ஜாவா, பூகிஸ், போயான், சீனம், தமிழ், ஹிந்துஸ்தானி, வங்காளி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, மராட்டியம், அரபு, போர்த்துகீஸ், துருக்கி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, இங்கிலீஷ் முதலிய மொழிகளைத் தெரிந்திருக்க வேண்டும் என்று 1888ல் சிங்கப்பூரின் முன்னோடிப் பத்திரிகையாளரும் பதிப்பாளருமான மகதூம் சாயுபு (சிங்கை நேசன், 24.9.1888)  குறிப்பிட்டுள்ளார்.

தொடக்க காலம் முதல் வணிக மையமாகவும் இந்த வட்டாரத்தின் பதிப்பு மையமாகவும் திகழ்ந்துள்ள சிங்கப்பூரில், பன்மொழி நூல்களும் கிடைத்துள்ளன. மேற்கத்திய இலக்கியங்களையும் ஆசிய இலக்கியங்களையும் ஒருசேர அறிந்துகொள்ளும் வாய்ப்பை இங்கு வாழ்ந்தவர்கள் பெற்றுள்ளனர். அதன்மூலம் தங்கள் எழுத்துகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரின் முதல் தமிழ்ப் பத்திரிகையான ‘சிங்கை வர்த்தமானி’யையும் (1875) தொடர்ந்து ‘தங்கை நேசன்’, ‘சிங்கை நேசன்’ பத்திரிகைகளையும் வெளியிட்ட சி.கு.மகுதூம் சாயபு, சிங்கை நேசனில் நாட்டு நடப்புகளைச் சுவையான உரையாடல் பத்திகளாக எழுதி, (17.9.1888) நவீன வகைமையை  இந்நாட்டுத் தமிழ்த்துறையில் முன்னெடுக்கிறார்.

புலவர்கள், பண்டிதர்களின் வறண்ட செய்யுட்களால் தமிழ்க் கவிதைச் சூழல் சோர்வுற்றிருந்த 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் வெளிவந்த அ.ரங்கசாமி தாசரின் ‘குதிரைப் பந்தய லாவணி’ (1893), ஒரு நவீன படைப்பு. அக்கால சிங்கப்பூரை, தமிழ் மக்களின் வாழ்க்கையூடே வர்ணிக்கும் இந்த லாவணி, தமிழ் நாட்டுக்கும் சிங்கப்பூருக்குமான சமூக, பண்பாட்டு, சிந்தனைத் தொடர்பைக் கவிதைச் சித்திரமாகக் காட்சிப்படுத்துகிறது.

அதேபோல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காரையம்பதி அ.நாகலிங்கம் இயற்றிய, ‘சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் ஓர் இனிய கற்பனா சரிதம்’ என்ற நாவல், அன்று மலாயாவில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வைப் படம் பிடிக்கிறது. 1927ல் கோலாலம்பூர் லாஸர் அண்ட் ஸன்சால் அச்சிடப்பட்ட இந்த நாவலை, “மனத்தை உயர்த்தும் நூல். நவீன கதைகளில் சிலவற்றை உயர்தர நாவலென்று ஆங்கிலேயர் வகுத்துப் போன்றுவதுண்டு. அத்தகைய நாவல்களில் இந்நூல் ஒன்று,” என தமிழ் நேசன் (28.3.1928) குறிப்பிடுகிறது.

நூறாண்டுகளுக்கும் முற்பட்ட சிங்கப்பூர், மலாயாவில் இலங்கைத் தமிழர்களின்images (2) வாழ்க்கையை விவரிக்கும் மற்றொரு நாவல் ‘1947-1951 சிவபாக்கியம்-கண்ணகியம்மை’. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ் ஆசிரியர் ஸ்ரீ.ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை, இந்து சாதனம் என்ற தமது பத்திரிகையில் எழுதிய ‘உலகம் பலவிதம்’ என்ற தலைப்பின் கீழ் கட்டுரைகள், தொடர்கதைகள் போன்ற இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதில் நான்காவது முயற்சியாக இந்த நாவலை எழுதியுள்ளார் (உலகம் பலவிதம், 2017). அன்று இலங்கை, சிங்கப்பூர், மலாயா நாடுகளுக்கிடையே இருந்த பண்பாட்டுத் தொடர்புகளையும் சிந்தனைப் பரிமாற்றங்களையும் சித்திரிக்கிறது.

மலாயாவுடன் மட்டக்களப்பு வாழ்க்கைத் தொடர்புகள் பற்றிக்கூறுகிறது 1936ல் சிங்கப்பூர் விக்டோரியா பிரஸில் பதிப்பிக்கப்பட்ட க.டொமினிக்கின் ‘அழகானந்த புஷ்பம்’ நாவல்.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இந்த வட்டாரத்தில் வாழ்ந்த ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ ஆகிய இரு நாவல்களும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, பர்மா போன்ற நாடுகளில் இரண்டாம் உலகப் போர்க் காலத்தின்போது வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கின்றன. தமிழகத்திலிருந்து தென்கிழக்காசிய நாடுகள் வரையிலும் ஒரே ஆட்சியின்கீழ் காலனித்துவக் குடிமக்களாக பரவி வாழ்ந்த தமிழர்களின் சிந்தனைகளும் மனப்போக்குகளும் நிலத்துக்கு நிலம் மாறுவதையும் புதிய அடையாள உருவாக்கங்களையும் இந்த நாவலில் காணலாம்.

வட்டச்சுற்றாக மீண்டும் மீண்டும் அடையாளத் தேடலிலேயே சுழன்றுகொண்டிருக்கிறது சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் என்பதை இதனூடே அவதானிக்கமுடியும்.

பன்முகத்தன்மையோடு தொழிற்படும் தமிழ்த் தொடர்ச்சி

கிட்டத்தட்ட இருநூறாண்டுகால வரலாற்றைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் இலக்கியத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அதன் பன்முகத்தன்மை சிலிர்க்கவைக்கிறது. கால வேறுபாடுகள் காட்டும் மனித வேறுபாடுகளினூடே தவிர்க்க முடியாதபடிக்கு ஒரு தமிழ்த் தொடர்ச்சி எவ்வாறு தொழிற்பட்டுள்ளது என்பதை இந்த இலக்கியத் தொடர்ச்சி விளக்குகிறது.
காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் எழுதப்பட்ட பின்காலனித்துவ இலக்கியங்கள் அனைத்தும், அவற்றின் கருத்துருவாக்கங்களால் நாட்டைக் கட்டியமைப்பதாகவே தொடக்கத்தில் இருந்துள்ளன.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்களும் அத்தகையனதாம். தமிழ்நாட்டு நினைவுகள் (nostaligic), பற்றுகள் வழியாக சிங்கப்பூரைத் தங்கள் நாடாகக் கட்டியெழுப்பியவை 50கள் முதல் 80கள் வரையிலான பெரும்பாலான படைப்புகள்.

சிங்கப்பூரின் சிறுபான்மைத் தமிழினம், பெரும்பான்மையினங்களுடன் போட்டியிட்டுப் பலபடிகளிலும் முன்னேற வேண்டும் என்ற இலட்சியத்தோடு எழுதப்பட்ட இந்தப் படைப்புகள், அப்போட்டி ஓட்டத்தில் பண்புகளும் பண்பாடும் மொழியும் தொலைந்துவிடக்கூடாது என்ற அக்கறையோடு உருவாக்கப்பட்டவை. இந்த காலகட்டத்துப் படைப்புகளின் அழகியல், கலைத்தன்மை, படைப்பமைதிபற்றிக் கேள்விகள் இருக்கலாம். ஆனால், அவை காட்டிய வாழ்க்கைச் சித்திரங்கள் ஊடாக சமூகப் பாடுகளையும் சிந்தனை மாற்றங்களையும் அடையாள உருவாக்கங்களையும் நிச்சயம் காணமுடியும்.

புற நிர்மாணங்களூடாக அக நிர்மாணத்தைக் கட்டியெழுப்பிய பின்னர் தலையெடுத்த அடுத்த தலைமுறையினரும், தொடர்ந்து எழுதிய சில முதல் தலைமுறையினரும் நாடு என்பதான சிந்தனைக்கு அப்பாற்பட்ட வாழ்வியல், தத்துவார்த்த சிந்தனைகள், விரிந்த பார்வைகளைத் தரும் இலக்கியங்களை அவ்வப்போது படைத்துள்ளனர் 1990ன் தொடக்கத்தில் முன்னைய படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உத்தியில்   படைப்பாக்கத்திற்கு அதிகாரம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை  ‘பீடம்’ என்று நவீன குறுநாவலாகப் படைத்துள்ளார் இராம.கண்ணபிரான்.

என்றாலும், பெரும்பாலான சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள் இன்னமும் நாடு சார்ந்ததாக, இந்நாட்டை ஒட்டிய வாழ்வை, இருப்பை வலிந்து கூறுவதாக உள்ளன. 50களுக்குப் பின்னர் எழுச்சி பெற்ற பின்காலனித்துவப் படைப்புகளிலிருந்து 80களின் இறுதியில் தோன்றிய புதிய இலக்கிய முகிழ்ப்பு விரிந்து விகாசிக்கும் முன்னரே தேங்கிவிட்டது.

அதன்பின்னர் புதிதாக வந்தவர்களும் தொடர்ந்து எழுதும் சிலரும் படைக்கும் இலக்கியம், வடிவத்திலும் படைப்பு உத்திகளிலும் கோட்பாடு சார்ந்த மேம்பாடுகளைக் கண்டுள்ளன. எனினும், உள்ளீடுகள் பெரும்பாலும் இருப்புநிலை சார்ந்ததாகவே உள்ளன. அதுகுறையல்ல. ஆனால், படைப்பிலக்கியத்தை அழகியலாக்கும் அறங்களை மறுபரிசீலனைக்குட்படுத்தி பண்பாட்டு விமர்சனத்தை முன்வைக்கும் இலக்கியங்கள் பெருகாமல் இருப்பதே அக்கறைப்பட வேண்டிய வி‌ஷயம். அதேநேரத்தில், இருப்பதை மறுத்து, அதைக் கடந்து வளரும் தொடர்ச்சியானதொரு இலக்கியச் செயல்பாடு இல்லாதநிலையில், ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகவே தொடங்கப்படுவதின் சாத்தியப்பாடு இதுவாகவே இருக்க முடியும்.

படைப்பிலக்கியத்தில் அதிக பங்காற்றும் புதிய குடியேறிகளும் வெளிநாட்டினரும் இங்கு பல காலமாக வாழ்கின்றபோதிலும் இந்நாட்டின் வாழ்வியலும் வழக்கங்களும் மொழிப் புழக்கமும் இன்னமும் பலருக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் கதை மாந்தரைப் பிரதிபலிக்கவும் யதார்த்தநிலையைக் கூட்டவும் பலர் தங்கள் படைப்புகளில் லா சேர்த்து எழுதுகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் பரிச்சயமில்லாத ஒரு வழக்கைப் பயன்படுத்தும்போது அது கதைக்குள் செயற்கையாகிவிடுகிறது.

உமா கதிரின் மார்க்கும் ரேச்சலும் கதையில் மலாய் கடையில்  கூட்டு, பொரியல், குழம்பு, ரசத்துடன் ‘சைவர்’ பரிமாறுகிறார்கள். சைவ உணவுக்கு சைவர் என்ற பதத்தை அவர் பயன்படுத்துகிறார். சயோர் என்பது மலாய் மொழியில் காய்கறிகளைக் குறிப்பது.

சீன கதைமாந்தர்களைத் தமிழர்களாக்குவது முன்னைய போக்கு (‘வழி பிறந்தது’, ‘அலைகள்’ மா.இளங்கண்ணன், ‘சிங்கப்பூர் குழந்தைகள்’, ‘பாட்டி’, சே.வெ.சண்முகம்). தற்போது சீனக் கதை மாந்தர்களைக் கொண்டு தமிழ்ச் சிந்தனையில் கதை சொல்லும் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர் இன்றைய எழுத்தாளர்கள் (‘யூகோ வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்’ -ஜெயந்தி சங்கர், ‘பெயர்த்தி’- அழகுநிலா, ‘விசைப்படகு’- சசி மயூர்). உலகளாவிய தமிழ் மக்களுக்கு இத்தகைய படைப்புகள் ஒரு மாறுபட்ட வாழ்க்கையைக் காட்டும். ஆனால், இந்த நாட்டின் வாழ்வை அறிந்தவர்களால் இத்தகைய படைப்புகளுடன் ஒட்ட முடியாமல் இருக்கிறது.

2017, மே மாதம், சிங்கப்பூர் கவிதை விழா ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய ஆங்கில மொழிக் கவிஞரும் இலக்கிய விமர்சகருமான டாக்டர் குவீ லீ சுவீ, சிங்கப்பூரில் படைப்பாளர்கள் பெருகிவிட்டார்கள். எல்லாரும் புத்தகம் போடுகிறார்கள். வாசகரைத்தான் காணோம் என்றார். இன்றைய யதார்த்தநிலை இதுதான்.

பரிசுகள், விருதுகள், பயிற்சிகள்மூலம் ஆழ்மனத் தூண்டலை ஏற்படுத்த முடியாது. கேளிக்கை என்ற நிலையிலிருந்து மேலெழுந்து அரசியல், அறங்கள், பண்பாடு என அனைத்துநிலையிலும் உணர்வுநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு பரிமாற்றத்தைத் தரக்கூடிய உயிர்ப்புமிக்க எழுத்துகள் உருவாக, இவற்றையெல்லாம் தாண்டிய ஓர் உந்துதல், மனஅரிப்பு தேவைப்படுகிறது. இதை இந்நாட்டின் படைப்பிலக்கிய வரலாற்றில் காணக்கூடிய எழுச்சிநிலைகளும் தேக்கப் போக்குகளும் விளக்குகின்றன.

சிங்கப்பூர் இலக்கிய அடையாளத் தேடலை அடுத்த கட்டத்துக்குச் எடுத்துச் செல்லும் இருமொழிகளிலும் எழுதும் இளையர்கள், தமிழ்ப் படைப்பிலக்கியத்திலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதுடன் சிங்கப்பூரில் பிறந்து 1980களின் இறுதியில் எழுதத் தொடங்கிய சிலரும் தற்போது ஆரோக்கியமான படைப்புகளைத் தொடர்ந்து படைந்து வருகின்றனர். சித்துராஜ் பொன்ரா‌‌‌ஜின் படைப்புகளை  ஜெயமோகன் போன்ற கறாரான விமர்சகர்கள் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பலர் நாடகம், குறும்படம் போன்ற நிகழ்கலை, காட்சிக்கலைகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இளஞ்சேரன், காயத்திரி இளங்கோ, அஸ்வினி செல்வராஜ், ஹரிணி, ஜெயசுதா என ஒரு சிலர் படைப்பூக்கத்துடன் செயல்படுகிறார்கள். எழுதுவதோடு, சிங்கப்பூர்ப் படைப்புகளை இவர்கள் படிக்கத் தொடங்கியிருப்பதும், அவற்றை விமர்சிக்கத் தலைப்படுவதும் முக்கியமானது.

இச்சிறுநாட்டின் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராகிவிட்ட தமிழ் பேசிப் புழங்கும் தமிழ்ச் சமூகம் அதன் மொழியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதன் அடையாளம் இந்தத் தொடர்ச்சி. மக்கள் தங்களுக்கான ஒரு சுயவிளக்கத்தையும் பண்பாட்டையும் உருவாக்கும் செயல்பாட்டின் விளைவே அடையாளம். ஆனால், அது சமூக, பொருளாதார, அரசியல் செயல்பாடுகளாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். இலக்கிய ஆர்வம், வாழ்க்கை ஈடுபாடு, படைப்புச் சக்தி ஆகியவற்றின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பாக இலக்கியம் அமைகிறது.

பகுதி 1

பகுதி 2

முற்றும்

3 comments for “ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 3

 1. Arasi
  April 6, 2018 at 7:34 am

  50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் தமிழ் வளர்ந்த கதையை கோவையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் குமாரி லதா. பல முக்கிய தகவல்களை புள்ளிவிவரங்களோடு தொகுத்திருக்கிறார். புத்தக வெளியீடுகள் அதிகம் என்று மார்தட்டிக்கொண்டாலும் வாசிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டால் அவை வெறும் ஆவணங்களாக மட்டுமே பயன்படும். எழுத்தாளர்களை முன்னிறுத்தும் விழாக்களையே பெரிதும் காணமுடிகிறது. ஆனால் அச்சுப்பிரதிகள் மீதான ஈர்ப்பு குறைந்துவருவது கண்கூடு. வாசகர்கள் இன்றேல் படைப்புகளின் நிலை? ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதுபோல விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இளைய படைப்பாளிகள் தென்படுகின்றனர். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தை தழுவிக்கொண்டாலொழிய இளைய வாசகர்களைப் பெற முடியாது. தொடர்ந்த நல்ல வாசிப்பே தரமான படைப்பாளிகளை உருவாக்கும். இளையர்களிடையே வாசிப்பை ஊக்குவிப்பதற்கான மேம்பட்ட முயற்சிகள் தேவை. அவை வாசகர்களை மையப்படுத்துவதாக இருப்பதுடன் அந்த முயற்சிகளின் பலன்கள் அளவிடப்பட்டு தேவையான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆணிவேர்கள் செழித்து வளரவும் நீர்ப்பாசிகள் மேம்பட்டு வேர்விடவும் புதிய வேர்கள் துளிர்த்திடவும் வாசிப்பை வளர்த்திடல் அவசியமன்றோ?

 2. MK KUMAR
  April 6, 2018 at 8:32 am

  சிங்கப்பூர் தமிழ் இலக்கியப்பாதையை மிக விரிவாகவும் ஆழமாகவும் முன்வைத்த கட்டுரை. வாழ்த்துகள்.

 3. N P Karthigayan
  April 6, 2018 at 3:17 pm

  Dearest Latha
  My heartiest congratulations to you on your noble effort to trace and record the progress and growth of Tamil literature in Singapore from.pre war years to current period
  It is with much pleasure that I note that the your generation is taking a great effort to stimulate progress in local writing and the spoken language
  The National Library Board too is making positive contributions to encourage the reading and writing effort by Singaporeans in the vernacular languages
  You have addressed a serious problem encountered by younger generation in the wide gap existing between spoken and written language
  Trust this issue is jointly addressed by teachers students and parents to make Tamil a living language in our Lion City for generations to come
  My very best wishes to you for a very bright and successful future
  NP Karthigayan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *