பெருமிதம், தாழ்வுணர்வு மற்றும் சில தடுமாற்றங்கள்

01)

21762838_1480486425321429_4654187497600265211_oமலேசியாவிலிருந்து ‘வல்லினம்’ இலக்கியச் செயற்பாட்டியக்கத்தைச் சேர்ந்த குழுவினர் 2018 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களுடைய வருகையின் நோக்கம் மலேசிய இலக்கியம் பற்றிய அறிமுகத்தையும் அதையொட்டிய பரஸ்பர இலக்கிய உரையாடல்கள், அறிமுகங்களையும் நிகழ்த்துவது. இதை வல்லினம் இதழின் ஆசிரியர் ம. நவீன் தன்னுடைய பதிவில் கீழ்வருமாறு தெளிவாக விளக்கியுள்ளார். “‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும் இன்னொரு நிலப்பரப்புக்குக் கடத்த முடியும். மலேசியத் தமிழர்கள் கலை வெளிப்பாட்டின் சாதக, பாதகங்களை அறிய அவர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் உள்வாங்க வேண்டியுள்ளது. ‘வல்லினம் 100’ களஞ்சியம் அத்தகையதொரு குறுக்குவெட்டு பார்வையை வழங்கவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எனவே அதை சிங்கப்பூர், தமிழகத்தை அடுத்து இலங்கையில் பரவலான கவனத்திற்கு எடுத்துச் செல்வது உலகத் தமிழர்கள் பார்வைக்கு மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பக்கத்தைக் காட்டும் பணி என்றே உருவகித்துக்கொண்டோம்” என.

இந்த வருகையில் வல்லினம் ஆசிரியர் ம. நவீன், பாண்டியன், தயாஜி, சரவண தீர்த்தா, ஶ்ரீதர், கங்காதுரை, விஜயலட்சுமி என ஏழு பேர் கூடியிருந்தனர். கண்டி உள்ளிட்ட மலையகம், கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை, வடக்கே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, இறுதியாகக் கொழும்பு என இவர்களுடைய பயண வழி அமைந்தது. இந்த வழியில் சந்திப்புகள், உரையாடல்கள், கூட்டங்கள் என்றவாறு நிகழ்ச்சிகள் நடந்தன.

பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியாவுக்குச் சென்ற பின்னர் நவீனும் பாண்டியனும் இலங்கைப் பயணம் குறித்த கட்டுரைகளை எழுதினார்கள். இதில் நவீனின் கட்டுரை, இலங்கையின் இலக்கியச் சூழல் மற்றும் வாசக நிலை பற்றிய விமர்சனங்களை முன்வைத்திருந்தது. குறிப்பாக உரையாடல்களில் தொனித்த எதிர்மறை அனுபவங்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார் நவீன். இதைத் தொடர்ந்து மெல்லிய சர்ச்சையும் கண்டனமும் சிறிய அளவிலான எதிர்ப்புக் குரல்களும் ஈழச்சூழலில் உருவாகியுள்ளன.

என்னதான் காரணங்களைச் சொன்னாலும் நவீனின் கட்டுரைக்கு அவசரப்பட்டு கண்டனங்களையோ எதிர்ப்பையோ வெளிப்படுத்தியிருக்கத் தேவையில்லை. அப்படிச் செய்வது, கதவுகளை மூடுவதற்குச் சமம். ஏற்கனவே அவர்கள் பங்கு பற்றிய இடங்களில் நடந்த கசப்பான – எதிர்மாறான சம்பவங்களின் நீட்சியாகவே இது அமையும். எந்த வகையிலும் பயன்தராச் செயல். மட்டுமல்ல, எதிர்நிலை விளைவுகளையும் உண்டாக்கக் கூடியது. இந்த மாதிரியான எதிர் மனோநிலையின் வளர்ச்சி நம்மைத் தனிமைப்படுத்துவதிலேயே போய் முடியும். இத்தகையதொரு நிலையே தற்போது நமது இலக்கியச் சூழலிலும் அரசியற் சூழலிலும் காணப்படுகிறது. இலங்கைக்கு கலை, இலக்கியத்துறையைச் சேர்ந்தவர்கள் யாராவது வர முயற்சித்தால், அதைக்குறித்த சர்ச்சைகள், எதிர்ப்புச் செயற்பாடுகள் எழுந்தமானமாக நடக்கின்றன. ஒரு முகநூல் குறிப்புப் போதும், எதிர்ப்புப் படையே போருக்குப் புறப்பட்டு விடும். அது ரஜினிகாந்தாக இருந்தாலென்ன, லஷ்மி சரவணகுமாராக இருந்தால் என்ன? எல்லாவற்றையும் அரசியல் ரீதியாகவே நோக்குவதும் கற்பிதம் செய்வதுமே இதற்குக் காரணம். இது நம்மை மூழ்கடித்த அரசியலின் விளைவு. எப்போதும் எம்மைக் குறித்தே அதீதமாகக் கற்பிதம் செய்து ஏனைய தரப்புகளை விலக்கிப்பார்க்கின்ற மனோபாவம். இதனுள்ளோட்டமாக செயற்படுவது தோல்வி மனோநிலை. இதைக் கடக்க வேண்டும். எத்தகைய அரசியல் கருத்துடையவர்களும் வந்து போகட்டும். எவரையும்  எதிர்கொள்ளக்கூடிய ஆன்ம பலம், கருத்தியல் பலம் நமக்கிருந்தால் எதற்கும் அச்சப்படத்தேவையில்லை.

வல்லினம் குழுவினரின் நோக்கம் மலேசிய இலக்கிய அறிமுகத்தை இலங்கைச் சூழலில் ஆரம்பிப்பது, அதைத் தொடர்ந்த உரையாடல்களையும் பரஸ்பர உறவையும் தொடர்வதேயாகும். இதில் ஒரு அங்கம் இலங்கை இலக்கியத்தையும் இலக்கியச் செயற்பாடுகளையும் அவர்களும் அறிந்து கொள்வது. இது மலேசியப் படைப்பாளிகள், வாசகர்களுக்கு மட்டுமல்ல, இலங்கைச் சூழலில் உள்ளோருக்கும் அவசியமானது. எந்தச் சந்தர்ப்பத்திலும் உள்நோக்குடன் அரசியல் ரீதியான தலையீடுகளைச் செய்வதோ இலங்கைப் படைப்புச் சூழலைப் பற்றிய எதிர்மறையான சித்திரத்தைப் பொதுச் சூழலில் பரப்புவதோ அவர்களுடைய நோக்கில்லை என்பது என்னுடைய அவதானம். இதை அவர்களைத் தொடர்ந்து படித்து வருவதன் வழியே கூறுகிறேன். எனவே, இந்த வகையிலேயே தொடக்க நிலையாக இந்தச் சந்திப்புகளும் உரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டன. அவர்களில் யாரும் நமது பிடரியில் குட்டிப் பாடம் நடத்தும் எண்ணத்தோடு நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. நான் கலந்து கொண்ட யாழ்ப்பாணக் கூட்டத்திலும் சரி, என்னோடு அவர்கள் தனிப்பட நடத்திய உரையாடலிலும் சரி எதையும் போதனை செய்யும் முனைப்பை உணரவில்லை.

சந்திப்பு அரங்குகளிலும் பிறகு கட்டுரையிலும் நவீன் முன்வைத்த கருத்துகள் நமதுகுழு கவனத்திற்கும் பரிசீலனைக்குமுரியவையே தவிர, எதிர்ப்பதற்கான அடிப்படைகளைக் கொண்டவையல்ல என்பது என்னுடைய எண்ணம். முக்கியமாக அவர் கண்டனத்தையோ பழித்துரைப்பையோ செய்யவில்லை. வேண்டுமானால் அவருடைய பதிவை மீளப் படித்துப்பார்க்கலாம். இல்லாத ஒன்றை – நடக்காத எதையும் உள்நோக்குடன் குறிப்பிடவும் இல்லை. பதிலாக உரையாடல்கள் முன்முடிவுகளின் அடிப்படையில் நிகழ்வதன் கவலையையே அவர் வெளிப்படுத்தியிருந்தார். சாய்வு கொண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பது அர்த்தமில்லாதது. ஆனாலும் அவற்றுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்படிப் பதிலளிக்காமல் விட்டால், தம் கேள்விகள் நியாயமானவை. பதிலளிக்க முடியாதவை. பதிலளிக்க முடியாததில் இருந்தே உரியவர்கள் தவறானவர்கள் என்று அர்த்தப்படுத்துவார்கள். ஆகவே விருப்பமில்லாமலே பதில் கூறவேண்டிய நிர்ப்பந்தம். இருந்தாலும் அந்தப் பதிலில் திருப்திப்பட மாட்டார்கள். தாங்கள் எதிர்பார்க்கின்ற பதிலை மட்டுமே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். உண்மையை அல்ல.

இத்தகைய ஒரு நிலையில்தான் நவீன் மீதான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனாலும் சினேகபூர்வமான விமர்சனத்தைத் தன்னுடைய அனுபவத்தின் வழியாக முன்வைத்திருக்கிறார் நவீன். வேண்டுமானால், நாம் அவருடைய புரிதலைப்பற்றிய உரையாடல்களைத் தொடர்ந்து அதைப்பற்றிய மேலதிக விளக்கங்களை அளிப்பதே சரியானது. அதுவே புரிதலுக்கான வாசல்களைத் திறக்கும். ஆனால், நடந்திருப்பதோ வேறு.

வருகையாளர்களையும் உரையாட முனைவோரையும் தயக்கமுற வைக்கும் வகையிலான எதிர்ப்பு நடவடிக்கைகளும் தடுப்பு முனைவுகளும் நம்மைக் குறுக்கி உட்சுருங்கவே செய்யும். விரிந்து பரந்து செல்ல வேண்டிய நமது பயணம் குறுகிச் சுருள்வது நல்லதல்லவே!

(02)

29683425_10157264986229951_4354664671237711492_nபெருமிதம், தாழ்வுணர்வு என்பவற்றுக்கிடையில் எழும் தடுமாற்றங்கள், தயக்கங்களுக்கு அப்பால், விரிவான உரையாடலை நடத்தி, அதன் வழியே தொடர்ச்சியான இலக்கியச் செயற்பாடுகளையும் தொடர்பாடலையும் நிகழ்த்துவதே ஒரு சூழலுக்கு அவசியமானது. முறையான இலக்கிய விமர்சனம் இதற்கு மேலும் வலுச்சேர்க்கும். இதைத் துணிவோடு செய்யக் கூடிய ஆளுமைகள் வேண்டும். இவர்களே ஒரு தொடர்ச்சியான அலையை, இயக்கத்தை உருவாக்குவர். இவர்களால்தான் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலத்துக்கும் ஒளியூட்ட இயலும். இதற்கு வெளியே தூக்கி நிறுத்தப்படும் புகழுரைகள், அலங்காரங்கள் எல்லாம் வெட்கப்படும்படியாகி விடுவன. கறாரான விமர்சனமும் நேரிய மதிப்பீடுகளும் நற்சூழலுக்கு உயிர்ப்பூட்டி, படைப்புச் சூழலைப் பலமடைய வைக்கும். இந்த நிலையில் எத்தகைய தடுமாற்றங்களும் தாழ்வுணர்ச்சியும் ஏற்படாது. நல்லதொரு படைப்புச் சூழல் வலுவானதாக உருவாகுமாக இருந்தால், எத்தகைய விமர்சனங்களையும் அது திறந்த மனதோடு எதிர்கொள்ளும். அதேவேளை உள்நோக்குடன் செய்யப்படும் குறைப்படுத்தல்களைக் கூட அது எளிய புன்னகையோடு கடந்து செல்லும்.

ஏறக்குறைய இத்தகையதொரு செல்நெறியில்தான் வல்லினம் இலக்கியச் செயற்பாட்டியக்கம் இயங்கி வருகிறது. வல்லினத்தையும் அதனோடு இணைந்தியங்கும் எழுத்தாளர்களையும் கவனிப்பவர்கள் இதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இலங்கைக்கு வந்திருந்த வல்லினம் குழுவினர் இந்த வழி நம்பிக்கையாளர்கள். இதே பண்புநிலையைக் கொண்டே செயல்பட்டனர்.  இதனால்தான் இவர்கள் இலங்கைக்கு வரும்போது மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படி வந்தவர்களுடன் தொடக்கத்திலேயே முறிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல. எப்போதும் நல்லன நோக்கிக் கதவுகளைத் திறப்பதே நமது பணியாக இருக்க வேணும்.

இதற்கு எதிர்மாறாக நடப்பது நமது தரப்பின் (ஈழச்சூழலின்) பலவீனம் என்றே சொல்வேன். இதற்குப் பின்னால் தாழ்வுணர்ச்சியே இயங்குகிறது. எப்போதும் எம்மைப் பற்றிய அதீத உயர்வு எண்ணத்தின், பெருமிதத்தின் பிரதிபலிப்பாக எழும் தாழ்வுணர்ச்சி. மறுவளமாக நம்மை மற்றவர்கள் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்ற சந்தேகம். இரண்டுக்குமிடையிலான இந்த ஊசலாட்டம் நிதானத்தை இழக்க வைக்கும். ஒரு நண்பர் கூறுவதைப்போல தலையணைக்கு அடியில் கத்தியை வைத்துக் கொண்டு படுக்கும் எண்ணம் இது. இதனால் நியாயமான அடிப்படையில் உண்மையை உரைத்தால்கூட கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது. சீறத் தொடங்குகிறோம். இது ஒரு நோய்க்கூறு. அநேக சந்தர்ப்பங்களில் இதை அவதானித்திருக்கிறேன்.

ஈழத்து இலக்கியத்தைப் பற்றியும் ஈழப் படைப்புச் சூழல் தொடர்பாகவும் வெளியே யாராவது விமர்சனங்களை முன்வைத்தால், உடனே அவர்களை நோக்கி எதிர்ப்பை வெளிப்படுத்துவது. அணி கூடித் திட்டுவது. பழித்துரைப்பது. பகைமையை உண்டாக்குவது. காழ்ப்புக் கொள்வது போன்றவை நம்மில் பலருடைய பணியாக உள்ளது. இது அவசியமற்ற ஒன்று. முன்வைக்கப்படும் விமர்சனங்களை உரியவாறு எதிர்கொள்ளும் பக்குவமே எப்பொழுதும் அவசியமானது. வலுவான – கறாரான விமர்சனங்களே நம்மை உயர்த்தும். அந்த விமர்சனங்களில் எத்தகைய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன? மேன்மைப்படுத்தும் விடயங்கள் என்ன? இவை எந்த அடிப்படையில் நிகழ்கின்றன? என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவற்றில் உள்நோக்கத்துடன் குறைத்து மதிப்பிடும் தவறுகள் இருப்பின் அதை அவற்றுக்கான வலுவான ஆதாரத்துடன் மறுக்கலாம். மேலும் தெளிவூட்டலாம். அதைக் குறித்த விரிவான உரையாடலை நிகழ்த்தலாம். இதற்கு நம்மிடம் விரிவான வாசிப்பு வேண்டும். விவாதிப்பதற்கான தைரியம் வேணும். தொடர்ச்சியான செயல்பாட்டின் மூலமே இதெல்லாம் சாத்தியம். இதற்கெல்லாம் கடுமையான உழைப்புத் தேவை. இன்றைய நிலையில் இது நம்மிடையே மிகக் குறைவு. அதிலும் புலம்பெயர் சூழலில் உள்ள அளவுக்கு ஈழத்தில் இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த இலக்கியம், சினிமா, ஓவியம், நாடகம் போன்ற கலைச் செயற்பாடுகளை அவதானித்தால் இது புலப்படும். ஒப்பீட்டளவில் புலம்பெயர் நாடுகளில் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலுக்குள்ளும் இவற்றில் பலர் தீவிரமாக இயங்குகிறார்கள். ஷோபாசக்தி, விமல் குழந்தைவேல், இரவி அருணாசலம், சயந்தன், தமிழ்நதி, திருமாவளவன், சேரன், சுகன், கற்சுறா, பிரதீபா, சந்திரா, இளைய அப்துல்லா, தேவகாந்தன், சுமதி, நடேசன், முருகபூபதி, ஜே.கே, இளங்கோ, றஸ்மி, தேவ அபிரா, பொ. கருணாகரமூர்த்தி, தமயந்தி, பானுபாரதி, குணா கவியழகன், மெலிஞ்சி முத்தன், லெனின் சிவம், கருணா, தர்மு பிரசாத், தர்மினி, ஆஸி.கந்தராஜா, வ.ஐ.ச.ஜெயபாலன் எனப் பலரை இங்கே குறிப்பிடலாம். இங்கே குறிப்பிட்ட பெயர்களுக்கு அப்பாலும் பலர் உள்ளனர். இவை ஒரு எடுத்துக்காட்டுக்காகவே குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த இருபது ஆண்டுகால வெளிப்பாடுகளில் இவர்களுடைய படைப்புகள் கூடுதலான கவனத்தைப் பெற்றுள்ளன. வாசிப்பிலும் அதைப்பற்றிய வெளிப்பாடுகளை முன்வைப்பதிலும் புலம்பெயர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்களவு பங்களித்து வருகிறார்கள். இளங்கோ (டிஸே தமிழன்), நடேசன், முருகபூபதி போன்றவர்கள் தங்கள் வாசிப்பைத் தொடர்ந்து அவற்றைப் பற்றிய அறிமுகங்களையும் விமர்சனங்களையும் செய்கின்றனர். இவ்வாறான தொழிற்பாடே தொடர்ச்சியான இயக்கத்தை சமூகச் சூழலில் உண்டாக்கும். மேலும் அழுத்தமாகச் சொல்வதெனில், கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான கவனத்திற்குரிய நாவல்களில் பெரும்பாலானவையும் புலம்பெயர் சூழலில் உள்ளோரால் எழுதப்பட்டவையே. ஷோபாசக்தியின் Box, குணா கவியழகனின் அப்பால் ஒரு நிலம், விடமேறிய கனவு, கர்ப்ப நிலம், தமிழ்நதியின் பார்த்தீனியம், அ.இரவியின் வீடு நெடுந்தூரம், சயந்தனின் ஆறாவடு, ஆதிரை, நடேசனின் அசோகனின் வைத்தியசாலை, கானல் தேசம், பொ. கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள், அனந்தியின் டயறி, விமல் குழந்தை வேலின் கசகறணம், தேவகாந்தனின் கனவுச் சிறை, கலிங்கு எனப் பல.

ஈழத்தில் நடந்த போரும் அது உண்டாக்கிய விளைவுகளும் ஈழத்து இலக்கியச் சூழலைப் indexபாதித்தது. வெளிப்பாட்டுக்கான வாய்ப்புகளை முடக்கியது என்பதெல்லாம் உண்மையே. இதற்குள்ளும் ஆர். எம். நௌஷாத், ஹஸீன், ஓட்டமாவடி அறபாத், அனார், த. மலர்ச்செல்வன், வி.கௌரிபாலன். திசேரா, நிலாந்தன். பா. அகிலன், ஸர்மிலா ஸெய்யித், றியாஸ் குரானா, ஜமீல், ரிஷான் ஷெரிப், கருணாகரன், யோ. கர்ணன், யதார்த்தன், சித்தாந்தன், தானா விஷ்ணு, சி.ரமேஸ், மயூரரூபன், அனோஜன் பாலகிருஸ்ணன், ந. சத்தியபாலன், கிரிஷாந், தமிழ்க்கவி, சுயாந்தன், பிரிந்தன், ஈ.சு.முரளிதரன், பரணிதரன், சோ.ப, தீபச்செல்வன், இராகவன், சோலைக்கிளி, சாந்தன், முஸ்டீன், உடுவில் அரவிந்தன், அ.ச. பாய்வா எனக் குறிப்பிடக்கூடிய பலர் எழுதி வருகின்றனர். வெளியீட்டு முயற்சிகளும் நடக்கின்றன. ஆனாலும் வாசிப்பு, விமர்சனம், புதிய அலைகளை உண்டாக்கக்கூடியவாறான எழுத்து, படைப்புச் செயற்பாடு என்றால் அது குறைவே. விமர்சனம் என்பது இல்லை என்ற நிலையே தொடர்கிறது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு புத்தகத்துக்கும் முறையான விமர்சனம் ஈழச்சூழலில் எழுதப்படவில்லை என்பதிலிருந்தே இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இலக்கிய இதழ்களிலும் சரி, நடைபெறுகின்ற கூட்டங்கள், சந்திப்புகள், வெளியீட்டு நிகழ்வுகள் போன்றவற்றிலும் இதுதான் நிலை. மேலே குறிப்பிட்ட படைப்பாளிகளைப் பற்றியோ அல்லது அதற்கு முந்திய தலைமுறையினரைப் பற்றியோ யாரும் விரிவாக எழுதுவதில்லை. புதிய பார்வைகளை முன்வைப்பதில்லை. சந்தேகமே இல்லை. இது தேக்கமே. இதைக் கடந்து கறாரான விமர்சனத்தை யாராவது முன்வைக்க நேர்ந்தால், குறித்த எழுத்தாளரோ கவிஞரோ வாடிப் போய்விடுகிறார். தொடர்ந்து ஒரு அணி அவரைச் சுற்றி உருவாகிறது. அல்லது அவரால் ஒரு அணி உருவாக்கப்படுகிறது. எப்படியோ முன்வைக்கப்பட்ட விமர்சனத்துக்கும் விமர்சனத்தை முன்வைத்தவருக்கும் எதிரான ஒரு அணி உருவாக்கப்பட்டு விடுகிறது. இதன் உள்நோக்கம் என்ன? பாராட்டும் புகழுரைகளும் வேண்டும் என்பதுதானே. இதுவே இன்றைய ஈழத்துப் படைப்புச் சூழலின் பொது நிலையாகும்.

இதை மறுத்துரைப்பவர்கள், கடந்த 25 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க விமர்சனங்களில் பத்தினையாவது அடையாளப்படுத்துமாறு பகிரங்கமாகவே கேட்கிறேன். அறியப்பட்ட விமர்சகர்கள் எத்தனைபேர் உள்ளனர்? இப்படியான நிலையில்தான் எந்தச் சிறிய விமர்சனச் சொல்லையும் எதிர்கொள்ளத் திராணியற்ற மனநிலை உருவாகிறது. இவ்வாறான மனங்களைக் கொண்டமைந்ததே இன்றைய ஈழச்சூழல். இதுதான் வெளியே இருந்து வரும் விமர்சனக்குரலைக் கண்டு அச்சமடைகிறது. இதற்கான தற்காப்பாகவே அது எதையும் எதிர்க்க முனைகிறது.

நுஃமான்ஆனால், இதற்கு மாறான ஒரு நிலை ஈழச்சூழலில் இருந்தது. 1970, 80 களில் இலக்கியத்திலும் விமர்சனத்திலும் செயற்பாட்டியக்கங்கள் வலுவாக இயங்கின. பேராசிரியர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான் போன்றவர்கள் மட்டுமல்ல, மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை, இரசிகமணி கனகசெந்திநாதன், அ. யேசுராசா, செ. கிருஸ்ணராஜா, சபா ஜெயராசா, சி. சிவசேகரம் போன்ற பலர் தொழிற்பட்டனர். இவர்களுடைய விமர்சனத்தின் மூலம் வெவ்வேறு நோக்கு நிலைகள். வெவ்வேறு கோணங்கள் படைப்புச் சூழலில் ஏற்பட்டது. இதுவே இலக்கியத்துக்கு அழகு. இதில் வெட்டுக்குத்துகள், நிராகரிப்புகள், திட்டமிட்ட மறைப்புகள், புறக்கணிப்புகள், அணிச் சேர்க்கைகள், குழுத்திரட்சிகள் என ஏராளம் உள்நெருடிகள் இருந்தாலும் ஒவ்வொரு தளத்திலும் வலுவான முன்வைப்புகள் நடந்தன. ஒவ்வொன்றுக்குமான பெறுமதிகள் இருந்தன. இன்றும் இவற்றின் பெறுமதியை நாம் உணர முடியும். பிறகு மெல்ல மெல்ல இந்த நிலை ஒடுங்கி இன்று முற்றாகவே வற்றி விட்டது.

மறுபடியும் நல்லதொரு விமர்சனச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முயன்றோம். முதற்கட்டமாக அண்மைய ஆண்டுகளில் வெளியான நாவல்களைக் குறித்து உரையாடலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அது வெற்றியளிக்குமிடத்து ஷோபாசக்தி, அ. முத்துலிங்கம், சயந்தன், குணா கவியழகன், விமல் குழந்தைவேல், ஆர்.எம். நௌசாத், நடேசன், பொ. கருணாகரமூர்த்தி, தமிழ்க்கவி போன்றோருடைய எழுத்துகளைப் பற்றி, அவர்களுடைய நாவல்களை முன்வைத்துக் கூட்டங்கள் நடத்துவது என்பது திட்டம். தொடர்ந்து தமிழ்நாடு உள்ளடங்கலாக தமிழ்ப்பரப்பில் வெளியாகும் படைப்புகள் பற்றியும் அவற்றின் போக்குகளைப் பற்றியும் பேசலாம். அப்படியே சர்வதேச இலக்கியம் நோக்கிய விரிதல். இந்த நோக்குடன் ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்திருந்தபோதும் போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கிடையிலும் அரசியலைப் புகுத்தி இடைவெளிகளையும் தயக்கங்களையும் நிரப்பினார்கள் சிலர். நோக்கம், கசப்பை நிரப்பித் தடையை ஏற்படுத்துவதே.

ஆனால் இதற்கு மறுதலையாக, எப்படியாவது புதியதொரு விமர்சனப் பண்பாட்டை – கறாரான முறையில் விமர்சிக்கும் பண்பை வளர்த்தெடுக்க வேண்டும் என இளைய தலைமுறையினர் ஊக்கத்தோடு செயற்பட முன்வந்தனர். இதில் முறையான விமர்சன முறைமை இன்னும் உருக்கொள்ளாது விட்டாலும் வாசிப்பைத் தொடர்ந்த உரையாடல்களைச் செய்வதிலும் முடிந்தளவுக்குக் கறாரான விமர்சனங்களை முன்வைப்பதிலும் கிரிஷாந், றியாஸ் குரானா, ஜிப்ரி ஹசன், யதார்த்தன், அனோஜன் பாலகிருஸ்ணன், மிஹாத், கபில் போன்றவர்கள் குறிப்பிடக்கூடியவர்கள். அனோஜன் பாலகிருஸ்ணன் இதில் ஒரு படி மேலே சென்று, முந்திய தலைமுறையைச் சேர்ந்த பதினைந்து பேரின் படைப்புகளைப் பற்றி தொடர்ச்சியாக எழுதியிருந்தார். இதைப் பற்றிப் பொது வெளி பெரிதாகக் கண்டு கொண்டதாக இல்லை. ஒரு இளைய படைப்பாளியின் கடுமையான உழைப்பையிட்டு யாரும் பேசவில்லை. ஆனால், நவீன் போன்று வெளியாட்கள் யாராவது எதையாவது சொல்லி விட்டால் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது ரோசம். மறுவளத்தில் எந்த உழைப்பும் சிரத்தையும் இல்லாமல் மூத்தவர்களில் பலரும் அரசியல் மேடைகளை அலங்கரிப்பதிலும் பொன்னாடைக் கனவுகளின் பின்னேயும் ஒடுங்கிப் போய் விட்டனர். பல்கலைக்கழகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவை பழைய கூடாரங்களாகி விட்டன. அங்கே எல்லாமே சக்குப் பிடித்து விட்டது.

இத்தகைய பின்னணியில்தான் ஈழத்தின் இலக்கியச் சூழல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அபூர்வமான காரியங்கள் அங்கும் இங்குமாக நடக்கின்றன. இலங்கைத் தமிழ் இலக்கியத்தைக் குறித்து எவரேனும் அபிப்பிராயங்களைச் சொல்ல முற்பட்டால், நீ யார் எங்களைப்பற்றிக் கதைப்பதற்கு? எங்கள் எழுத்துகளை மதிப்பிடுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? உரிமை இருக்கு? என்றவாறு சந்நதம் கொள்கிறார்கள். ஆனால், இதே ஆட்கள் தமிழக ஏடுகளில் தங்களுடைய புத்தகங்களுக்கான அறிமுகமோ மதிப்புரையோ வந்து விட்டால் அதையிட்டு பெரும் புளகாங்கிதம் அடைகிறார்கள். அதிலும் தமிழகத்தில் பெயர் அறியப்பட்ட எழுத்தாளர்கள் இந்த எழுத்தாளர்களுடைய எழுத்துகளைப் பற்றிப் பெருமிதமாக எழுதிவிட்டால் போதும். திருவிழாத்தான். பெருங்கொண்டாட்டம் நடத்தி விடுகிறார்கள். இன்னொரு தரப்பினர் தமிழகப் பதிப்பகங்களில் புத்தகங்களை அச்சிடுவதற்காக ஆலாய்ப்பறக்கிறார்கள். ஆனால், ஒரு ஒற்றுமை உண்டு, எல்லோருக்கும் விமர்சனம் பிடிப்பதில்லை. விமர்சனம் இல்லை என்றால் மறுபார்வை இல்லை. தெளிவு இல்லை. திருத்தமும் சீராக்கமும் இல்லை.  பன்முகமும் ஜனநாயகமும் இல்லை. இவையெல்லாம் இல்லை என்றால் வளர்ச்சியும் இல்லை. இதையெல்லாம் புரிந்து கொள்வதும் இல்லை.

(03)

தளையசிங்கம்மலேசியாவிலிருந்து நாம் பல பத்தாண்டுகளாக மரப்பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். மலேசியத் தேக்கு எங்களில் பலருடைய வீடுகளில் தளவாடங்களாகவும் கதவுகளாகவும் மதிப்புச் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் பல மரத்தளவாடக் கடைகளில் மலேசிய மரப்பொருட்களே நிரம்பிக் கிடக்கின்றன. ஒரு காலத்தில் இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் – அதுவும் யாழ்ப்பாண உயர் வர்க்கத்தினருடைய பொருளாதாரத்துக்கு மலேசிய வாழ்க்கையே உதவியிருக்கிறது. “மலேசியன் பென்சனியர்கள்” யாழ்ப்பாணத்தைப் பொருளாதார வலுவினால் கட்டியாண்ட காலமொன்றிருந்தது. 1920  தொடக்கம் 70, 80 கள் வரையில் மலேசியப் பொருளாதாரம் யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான “பெரிய வீடுகள்” மலேசியாவில் பெற்ற வருவாயின் மூலமே உருவாக்கப்பட்டன. “மலேசியன் பென்சனியர்ஸ்” என்ற சொல், அது உருவாக்கிய அடையாளம் எல்லாம் அன்று சாதாரணமானதல்ல. தொட முடியாத சிகரம், கனவு அது. அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் “மலேசியன் பென்சனியர்ஸ்”க்கு எனத் தனியான சங்கமே இருந்தது. இன்னும் இந்த அடையாளத்தின் சாட்சியாக யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் “மலேசியன் பென்சனியர்ஸ்” என்ற கட்டிடமே உண்டு. அந்தக் கட்டிடத்தில்தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கை நெறி நடக்கிறது.

இப்பொழுதும் பல வழிகளில் மலேசியாவைத் தமது வசதிக்கும் வாய்ப்புக்குமாக ஈழத்தமிழர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பிடக்கூடிய அளவு தொகையினர் இன்னும் கூட மலேசியாவில் தங்கியிருக்கின்றனர். இதைவிட இந்தப் பத்தாண்டுகளில் கூடப் பல்வேறு காரணங்களுக்காக மலேசியாவை நோக்கிப் பலர் சென்றிருக்கிறார்கள். ஆனால், இவ்வளவுக்கும் மலேசியாவில் குடியேறியிருந்த அல்லது அங்கே எதன் நிமித்தமாகவோ வாழ்ந்த, வாழ்கின்ற  ஈழத்தமிழர்கள் இலக்கியத்தில் செயற்பட்டதற்கான தடங்களைக் காணவில்லை. மட்டுமல்ல, மலேசியத் தமிழிலக்கியத்தையோ மலேசியாவில் உள்ள பிற மொழி இலக்கியங்களையோ ஈழச்சூழலுக்கு அறிமுகப்படுத்தியதற்கான தடயங்களும் இல்லை. இதையிட்ட கவலைகளும் நம்மவர்களுக்கில்லை. அங்கே இலக்கியம் மற்றும் கலைசார்ந்து (மொழிச் செயற்பாட்டில்) செயற்படுவோர் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குச் சென்று குடியேறியோரே. அவர்களுடைய பங்களிப்புகளின் வழியேதான் நாம் மலேசிய தமிழ் இலக்கியத்தை அறிய முடிகிறது.

வல்லினம் குழுவினருடைய சந்திப்பின்போதும் இதை வெளிப்படுத்திப்பேசினேன். அப்பொழுது அங்கேயிருந்த குமாரதேவன் என்னை மறுத்தார். “அக்கரை இலக்கியம்” என்ற தலைப்பில் மலேசிய இலக்கியப் படைப்புகள் யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியாவுக்குச் சென்றவர்களால் எழுதப்பட்டுள்ளன என்றார் குமாரதேவன். இதையிட்ட விவாதங்களும் கேள்விகளும் அந்த அரங்கில் சிறிய அளவில் நடந்தன. குமாரதேவனின் தகவலைத் தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றனர் மலேசியப் படைப்பாளிகள். ஆனாலும் இந்தத் தகவலைத் தொடர்ந்து தேடிப்பார்க்க முடியும் என்று சொன்னார்கள். இருந்தாலும் இதைப் பற்றிய மேலதிக தகவல்கள் அல்லது ஆதாரங்கள் ஏதும் இருந்தால் தாருங்கள். அது தங்களுடைய தேடலுக்கு உதவியாக இருக்கும் என்று கேட்டனர். இதற்கான சரியான பதில் அங்கே சொல்லப்படவில்லை. முடிந்தளவுக்கு யாழ்ப்பாணத்தில் அதைத் தேடிப் பார்க்கிறோம் என்று சி. ரமேஸ் மட்டும் சொன்னார். மல்லிகை இதழில் அதைக் குறித்து ஒரு கட்டுரை வந்தது என்றார் குமாரதேவன். என்றாலும் இதைத் தொடர்ந்த தேடல்கள் நடக்கும் என்று நம்பமுடியாது. பொத்தாம் பொதுவாக எதையும் மறுக்க முனைவது, நம்மைப் பற்றிப் பெருமை பேசி, நம்மை உயர்த்த முற்படுவது. இதுவே அடிப்படை நோக்கம்.

அந்தக் கூட்டம் வல்லினம் 100 ஆவது இதழை மையப்படுத்தியதாகவே ஒழுங்கமைக்கப்பட்டது. ஆனாலும்  வல்லினம் குழுவினர் அதைக் கடந்து மலேசிய இலக்கியத்தைக் குறித்து முடிந்தளவுக்கு விரிவாகப் பேசினார்கள். மலேசிய அரசின் இலக்கியக் கொள்கை, மலே மொழிக்குக் கூடுதல் வாய்ப்புகள், சீன, மலாய் இலக்கியங்கள், ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருந்த மலேசியத் தமிழ் இலக்கியத்தின் போதாமை, அதிலிருந்து புதிய தலைமுறையின் விலகலும் புதியன நோக்கிய பயணமும், வல்லினத்தின் செயற்பாடுகள் என்றிருந்தன உரைகள். தெளிவான முன்வைப்பு.

ஆனால் தொடர்ந்த உரையாடலில் இதை இன்னும் விரிவாக்கிக் கொள்வதற்கான கேள்விகள் அமையவில்லை. மலேசியாவில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களும் இலக்கியத்துக்குப் பங்களித்திருக்கிறார்கள், அதை மறுக்க முடியாது. வல்லினம் ஜெயமோகனைச் சார்ந்து இயங்குகிறதா? நவீன், ஜெயமோகனுடன் சாய்வு கொண்டுள்ளாரா என்ற விதமான கருத்துகளும் கேள்விகளுமே முன்வைக்கப்பட்டன. இது உட்சுருங்கிக் கொள்வதற்கான உணர்ச்சிகரமான சூழலை உருவாக்கியது. ஏறக்குறைய இதே தொனிதான் நவீனுடைய கட்டுரைக்குப் பிறகு எழுதப்பட்ட அநேக பதிவுகளிலும் காணப்படுகிறது. இது ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடே. இதற்கப்பால், வல்லினம் குழுவினருடன் விரிவான உரையாடலை நடத்தியிருக்க வேண்டும். இந்தத் தவறினை விட்டு விட்டோம். வீடு தேடி வந்த செல்வத்தைக் கை விட்டதைப்போன்ற செயல் இது. உண்மையில் மலேசியப் படைப்பாளிகளை – வல்லினம் குழுவை – நாமே இலங்கைக்கு அழைத்திருக்க வேணும். அவர்களுடன் விரிவும் ஆழமும் கூடிய உரையாடல்களைச் செய்திருக்க வேண்டும். தொடர்ந்து உரையாடுவதற்கான – கூடிச் செயற்படுவதற்கான திட்டங்களை உருவாக்கியிருக்கலாம். தவறி விட்டது. இதையிட்ட மனக்குறை எனக்குண்டு. எனக்கு மட்டுமல்ல, வேறு சில நண்பர்களுக்கும் உண்டு என்பதை இந்தச் சந்திப்புகளை அடுத்து நடந்த உரையாடல்களில் அறிய முடிகிறது.  இனி இணைய வழியே இதைத் தொடர வேணும். அதற்கான நம்பிக்கையோடும் நட்புரிமையோடும் பரஸ்பர உரையாடலுக்கும் உறவுக்கும் அழைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...