சிலந்தி

latha storyஐந்தடி அகலத்தில் நீளமாக இருக்கும் அந்தத் தாழ்வாரத்தின் பூத்தொட்டிகளில் கரும்பச்சை, இளம்பச்சை, செம்பச்சை என்று பலவண்ணப் பச்சைகளில் இருந்த இலைகளில் வெய்யில் நீண்டு படர்ந்திருந்தது.

நீளநீளமான வெள்ளைக்கோடுகள் இருக்கும் இலைகள் நிறைந்த செடியின் ஓரமாக எனது நாற்காலியை நிறுத்திவிட்டு, தனது கைப்பெட்டியைத் திறந்து ஒரு பெரிய நீலநிறத் துணியை எடுத்து எனது கழுத்தைச் சுற்றிக் கட்டினான் ஓய். பின் எனது நாற்காலியின் சக்கரத்தின் ஓரத்திலிருந்த மடக்கு மேசையை விரித்து, பெட்டிக்குள் இருந்து கத்திரிக்கோல்கள், சீப்புக்கள், கிளிப்புகள், கண்ணாடி என்று ஒவ்வொன்றாக எடுத்து அதன் மீது வைத்தான். பிறகு தலைமுடிகளை லேசாகக் கோதிவிட்டான்

அவன் தன் பெயர் ஓய் என்றுதான் சொல்லியிருந்தான். அது அவன் பெயராக இல்லாமலும் இருக்கலாம். அல்லது அவனது நீண்ட பெயரின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

பூனைக்குட்டியின் கால்களாக அவனது மெல்லிய விரல்கள் எனது தலைப் பரப்பில் தாள கதியில் நகர்ந்துகொண்டிருந்தன. வினோத பெயர் கொண்ட கொரிய தைலத்தைத் தடவி தலையை மசாஜ் செய்யத் தொடங்கியபோது, சிலந்திச் சண்டை போட்டு இருக்கிறாயா என்று குசுகுசுப்பதுபோல் கேட்டான். அவன் குரலில் எப்போதுமே பெண்மை நிறைந்திருக்கும். அந்தக் குரலின் மென்தடவல் எனக்குப் பிடிக்கும். காற்பந்தாட்டம் பற்றிச் சொன்னபோதுகூட அவன் அப்படித்தான் கேட்டான். அவன் கேள்வியில் பதில் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்காது. காற்றில் பறக்கும் இறகுபோல லேசான ஒன்றாகவே அவனது எல்லாக் கேள்விகளும் இருக்கும்.

நான் சிலந்திச் சண்டை பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை. அதனால் என்னிடம் சொல்வதற்கு எதுவுமிருக்கவில்லை. என் பதிலில்லாமல் அவனே தொடர்ந்தான்.

நான் நிறைய சண்டை போட்டு இருக்கிறேன். எதிராளிகள் சிலந்தி உலகின் வீரர்கள். எனக்கு அப்போது 14, 15 வயதிருக்கும் என்றபடி ஓய் கதையை ஆரம்பித்தான்.

“இரண்டு கைகளையும் நீட்டி, முகத்தை வலம் இடமாக மெதுவாக, மெல்லிய கர்வத்தோடு திருப்பி, கதகளி ஆட்டத்துக்கு ஆயத்தமாவதுபோல் இரண்டும், கால்களை விரித்து ஊன்றி நின்றன. பின் அதேநிலையில் உடலை மட்டும் இருபுறமும் அசைத்து நிலை பார்த்துக்கொண்டன. எல்லாக் கண்களையும் அகல விரித்து நேருக்கு நேர் பார்த்தபடியே தேர்ந்த மல்யுத்தக்காரர்களின் நேர்த்தியுடன் ஓர் ஒழுங்கில் கால்களை மடக்கி நீட்டின. ஒரு கணம்தான் பிறகு ஒரே தாவல். ஒன்றன் மேல் ஒன்று பாய்ந்து பிராண்டின. வலிமை திரட்டித் தாக்கின. பின் பிரிந்து வெளிவந்து ஓரிரு நொடிகள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் பாய்ந்தன.

ஆயத்தம், பாய்ச்சல், தாக்குதல், ஆசுவாசப்படுத்துதல், தாக்குதல் என எல்லாமே ஒரே தாளத்தில் சுருதி பிசகாத ஆட்டமென தொடர்ந்தன. சரியாக இரண்டு நிமிடம் 35 விநாடிகள். ஒன்று பின் வாங்கியது. அது தோற்றுவிட்டது.  முதலில் அது பின்னால் நகர்ந்தது. அப்போது மற்றது அதை நோக்கி வந்தது. ஆனால் பொருதத் தயாராக இல்லையென அது திரும்பியது. பின் சட்டென்று வேகவேகமாக போட்டித்தளத்திலிருந்து வெளியேறியது. மற்றது முதலில் சில கால்களை எடுத்து வைத்து அதைத் தொடரப் பார்த்தது. பிறகு ஏதோ யோசிப்பதுபோல கண்களைச் சுருக்கி சில கணங்கள் அசையாமல் நின்றது. பின் ஒவ்வொரு காலையும் கவனமாகத் தூக்கி வைத்து கம்பீரத்துடன் நடந்தது. பிறகு சோர்வுடன் போட்டித் தளத்தின் மூலையைச் சென்றடைந்தது.”

பாலா உடனே டைகரை சிவப்புப் பெட்டிக்குள்ளே தள்ளி விட்டு அதனை மூடிவிட்டான்.

“என் ஜோக்கர் அதுவரை தோற்றதில்லை. எனக்கும் தோற்ற அனுபவமில்லை. அன்று அது நடந்தது.”

அவன் சொல்லி முடித்தபோது மசாஜ் முடிந்திருந்தது. இனி அடுத்த முறை வரும்போதுதான் தொடர்வான். சில கதைகள் அப்போதே முடிந்துவிடும். சில கதைகள் நீளும். அவன் சொல்வதெல்லாம் உண்மைக் கதையா அல்லது கற்பனையா என்று ஆரம்பத்தில் நான் குழம்பிக்கொண்டிருந்தேன். கேட்க மட்டுமே பழகிக்கொண்டதும் குழப்பங்கள் நீங்கி விட்டன. இது முடிவில்லாத கதையாக இருக்கலாம் எனத் தோன்றியது.

அவன் என்னைக் குளியலறைக்குத் தள்ளிச் சென்றான். அங்குத் தலையை மட்டுமே கழுவுதற்கான ஒரு சாய்வு நாற்காலியுடன் கூடிய பேசின் இருக்கும். அந்தச் சாய்வு நாற்காலியில் நான் படுத்துக்கொண்டதும் என் தலையை பேசினில் வைத்து, என் முடியில் ஷாம்பு போட்டு அவன் மசாஜ் செய்யத்தொடங்கியபோது சிலந்தியின் கால்கள் என் தலையெங்கும் ஒற்றை கதியில் நடனமாடத் தொடங்கியிருந்தன.  மயிலிறகின் கூரிய நுண் அசைவுகளுடன் அந்தக் கால்கள் தலையிலிருந்து உடம்பெங்கும் ஊர்ந்தன. பின் குளிர்ந்த நீரால் ஒவ்வொரு மயிர்க்காலையும் அவன் அலச அலச உயிர்ப்பூட்டும் குளிர்மை உடலைத் தழுவியது. நான் கண்களை மூடிக்கொண்டேன். கழுவி முடித்தும் பூத்துவாலையால் தலையைத் துவட்டிக்கொண்டே, கொஞ்சம் நீளமாகிவிட்டது. வெட்ட வேண்டும் என்றான்.

ஹேர் டிரையரால் முடியைக் காயவைத்து, என்னை மீண்டும் சக்கரநாற்காலியில் உட்காரவைத்து, என் கட்டில் அருகில் கொண்டு வந்துவிட்டதும் கிளம்பத் தயாரானான். அவனது முகம் இயந்திரமாகியிருந்தது. ஒரு கையில் கைத்தொலைபேசியில் தகவல் அனுப்பியபடி, மறு கையில் தனது சிறிய பெட்டியைத் தூக்கிக்கொண்டு, தொலைத்த நேரத்தை மீட்டு எடுப்பதுபோல விரைந்து நடந்தான்.

அவன் என்னைப் பார்க்க மட்டும்தான் இந்த இல்லத்துக்கு வருகிறான். இங்குள்ள வேறு எவருடனும் ஓய் பேசுவதில்லை. அவனை எனக்கு யாரென்றே தெரியாது. இங்கு எவருக்குமே அவன் யாரென்று தெரியாது. எப்படி என்னைத் தேடி வந்தான் என்பதும் எனக்குத் தெரியாது. ஓய் இங்கு முதன்முதலில் வந்த நாள் குறித்தும் என் மூளைக்குள் எந்தக் குறிப்பும் இல்லை. சில சமயம் சில நாட்களுக்கு ஒரு முறை வருவான். சில சமயங்களில் பல வாரங்கள் கழித்து வருவான். அவன் குறித்த எண்ணமே மனதின் எந்த மூலையிலும் எழாத நேரத்தில் அவனது வருகை இருக்கும்.

இன்றைக்குக் கூரைச்சுவரில் கூடு கட்டத் தொடங்கியிருந்த கருநிற கண்களும் பழுப்புநிற உடலும் கொண்ட சிலந்தியை நான் தொடர்ந்துகொண்டிருந்தபோது ஓய் வந்தான். அவன் கடைசியாக வந்தது அமாவாசை அன்று. இன்று நிலவு முழுதாய் வளர்ந்து நிறைந்திருக்கிறது. இந்த இரண்டு நாட்களையும் எனக்கு தவறாமல் நினைவிருக்கும். அருகிலுள்ள சீன சைவக் கடையிலிருந்து மாதத்தில் இந்த இரண்டு நாட்களும் எங்களுக்கு உணவு வரும்.

சிலந்தி மெல்லிய நூலை இழுத்துக்கொண்டு ஒத்த அசைவில் மையத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருந்தது. ஓடிசி நடனம்போல அதன் ஒரே அசைவின் பல பரிமாணங்கள் வெளிப்பட்டு விரிந்துகொண்டிருந்தன. ஓய் சிலந்தி கதையைச் சொல்லத் தொடங்கிய பின்னர்தான் நான் சிலந்தியைத் தெரிந்துகொண்டேன். ஆனாலும், அதன் ஒவ்வோர் அசைவும் எனக்கு மிகப் பழக்கமானதாக இருந்தது. ஓய் என்னை வெளியில் அழைத்து வந்து, நாற்காலியில் உட்காரவைத்து, தாழ்வாரப் பகுதிக்கு தள்ளிச் சென்றான்.

அவனைப் பற்றி யோசிக்காவிட்டாலும் அவனது வருகையை நான் மிகவும் எதிர்பார்த்தேன். இந்த இல்லத்துக்கு பல பேர் வந்து போவார்கள். சிலர் அன்பளிப்புப் பொருட்கள் எடுத்து வருவார்கள். சிலர் மேசை, நாற்காலிகளைத் தூசி தட்டித் துடைப்பது, மெத்தை உறைகளை மாற்றுவது, கட்டில்கள் அருகே இருக்கும் மேசைகளுக்கு விரிப்புகளைத் துவைத்துப் போடுவது, அலுவலகக் கோப்புகளைச் சரிசெய்வது போன்ற வேலைகளைச் செய்வார்கள்.

இங்கே முப்பத்து மூன்று கட்டில்கள், அவற்றின் அருகில் சிறிய மேசையுடன் இணைந்த 33 இழுப்பறைகள், சுழல் நாற்காலிகள், ஆறு பெரிய சாப்பாட்டு மேசைகள், 48 நாற்காலிகள், பிறகு ஒவ்வொருக்குமான அலுமாரிகள், இரண்டு பெரிய வரவேற்பறைகளில் சோபாக்கள், நீள பெஞ்சுகள், மருந்து அலமாரிகள் என்று எக்கச்சக்கமான பொருட்கள் உள்ளன. தவிரவும் பொருட்கள் நிறைந்த பெரிய சமையல் அறை, பொருட்கள் வைக்கும் அறை, துணி துவைத்துக் காய வைக்கும் அறை, வாசிப்பு அறை, உடற்பயிற்சிக் கூடம், பணியாளர், அதிகாரிகளின் அறை, அலுவலகம் ஆகியவையும் உண்டு. பொருட்கள் மிகக் குறைவாக இருப்பது வழிபாட்டு அறையிலும் மற்றொரு உடற்பயிற்சி அறையிலும்தான். இந்த அறைகளையெல்லாம் ஒழுங்காக வைத்துக்கொள்ள யாராவது எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். இங்கே வாழும் நான் உட்பட 26 பேரும் பெரிதாக எந்த வேலையும் செய்வதில்லை. அதனால் யாருடனும் நான் நட்புப் பாராட்டுவதில்லை. பேசுவதும் இல்லை. எவரும் என்னுடன் உரையாட பெரிதாக முயற்சி எடுத்ததும் இல்லை. நான் ஊமை அல்லது செவிடாக இருக்கலாம் என சிலர் கருதியிருக்கக் கூடும்.

வழக்கம்போல ஓய் எதுவும் பேசவில்லை. சம்பிரதாய விசாரிப்புகள் அவனிடம் எப்போதுமே இருக்காது. என்னிடமும் இருந்ததில்லை. சில நேரங்களில் மென்மையான மௌனமாகவே அவனது வருகை இருக்கும்.

கதை சொல்லத் தொடங்கியதிலிருந்து எல்லாம் மாறிவிட்டிருந்தது. எப்போது தொடங்குவோம் என்று அவனுக்குள் இருக்கும் ஒரு மெல்லிய பரபரப்பு என்னிலும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. அல்லது என்னிலிருந்து அவனிடம் தொற்றியிருக்கலாம்.

இங்கிருப்பவர்கள், வருகையாளர்கள் எல்லாருமே என்னிடம் கதைகள் சொல்லிக்கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. அவை உண்மைபோன்ற கதைகள். அந்தக் கதைகளின் முக்கிய பாத்திரம் எப்போதும் நானாகவே இருப்பேன். தங்கள் கதைகளுக்கான முடிவுகளை அல்லது தொடக்கத்தை என்னிடம் எதிர்பார்த்தார்கள். என் கதைசொல்லும் திறமைக்குத் தொடர்ந்து சவால்விட்டுக்கொண்டே இருந்தார்கள். அவற்றை நான் உணர்வுகள் சேர்த்து சொல்ல வேண்டுமென விரும்பினார்கள். அதனால் எனக்குள்ளே உணர்வுகளை மூட்டி வளர்த்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு காலைவேளையில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தபோது எனக்கு இதில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. கதைகளுக்கு முடிவோ, தொடக்கமோ இல்லாத என்னிடம் கதைசொல்வதில் அவர்களுக்கும் ஆர்வமில்லாது போய்விட்டது.

என்றாலும், இங்கே வாழத்தொடங்கிய காலத்திலிருந்து வேறு எங்காவது போவது பற்றி நான் யோசித்ததும் இல்லை. இதற்கு முன்னர் எங்கே வாழ்ந்தேன் என்றும் எனக்குத் தெரியாது. எவரும் என்னிடம் என்னைப்பற்றி கூறியதில்லை. என்னுடைய அடையாள அட்டையில் ஏற்கெனவே அதிலிருந்த முகவரிக்கு மேலாக சிறு பச்சை நிறத்தாளில் இந்த முகவரி ஒட்டப்பட்டிருந்தது. இந்த தாளைப் பிய்த்து அடியிலிருக்கும் முன்னாள் முகவரியைப் பார்க்கவேண்டும் என எனக்கு எப்போதும் தோன்றும். ஆனால், இதுவரையில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த முகவரி அழிந்துவிடாமல் பாதுகாப்பதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். இங்கு எப்போது வந்தேன் என்பது நினைவில்லை. ஒரு முதல் நாள் இருக்க வேண்டும். அந்தநாளில் கூட எனக்குத் திரும்பிப் போகும் எண்ணம் இருந்ததாக நினைவில்லை. இங்கு வருவதற்கு முன்னர் இந்த இடம் எனக்கு நிச்சயம் பிடித்திருக்காது என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், இப்போது இந்த இடம் எனக்கு மிகுந்த லயிப்புடையதாக இருக்கிறது.

ஓயிடம், தோற்றுப்போன ஜோக்கரை என்ன செய்தாய்? என்று நானே கேட்டேன். நான் அப்படி அதுவரையில் ஓயிடம் எந்தக் கதை பற்றியும் கேட்டதில்லை. சில கதைகளை அவன் முடிக்காமலேயே விட்டிருக்கிறான். சில கதைகளுக்குத் தொடக்கம் இருக்காது. முடிவை மட்டுமே சொல்லியிருப்பான். சில கதைகள் முடிவோ, தொடக்கமோ இல்லாமல் இடையில் இருக்கும். எப்படி இருந்தாலும் அவனது கதைகளை அவனது தொடக்கத்திலும் முடிவிலுமே விட்டுவிடுவேன்.

ஓய் உடனே கதையை ஆரம்பிக்கவில்லை. எப்போதும்போல என்னைத் தாழ்வாரத்திற்குத் தள்ளிச் சென்ற பிறகே சொல்லத் தொடங்கினான்.

“ஜோக்கரை என்னுடைய சிவப்புப் பெட்டிக்குள் பத்திரமாக எடுத்து வைத்தேன். உனக்குlatha story 03 பிளாஸ்திரி பெட்டி தெரியுமா? தட்டையாக நீள்சதுரத்தில் இருக்கும் தகரப்பெட்டி! அது என் அம்மாவுடையது. எனக்கு ஜோக்கர் கிடைத்தபோது, அதற்குள்ளிருந்த எல்லா பிளாஸ்திரியையும் கொட்டிவிட்டு அம்மாவுக்குத் தெரியாமல் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டேன். அதைப் பத்திரமாகப் பாதுகாத்தேன். எத்தனையோ வி‌ஷயங்களைப் போல. ம்ம்… அவனுடைய சிவப்பு டப்பாவுக்குள் அவனை வைத்துவிட்டு, உடனே அவனுக்கு ஜோடி தேடிக் கிளம்பிவிட்டேன். எனக்கு அவமானமாக இருந்தது. எப்படியும் ஜெயிக்க வேண்டும். பாலாவை வெல்ல வேண்டும். சண்டையில் தோற்றுக் களைத்துப்போன சிலந்தியை ஜோடி சேர்த்தால், அது கு‌ஷியாகிவிடும். பெரிய பலம் வந்துவிடும் என்பது எங்கள் எல்லாருக்கும் தெரிந்திருந்திருந்து. பாலா அதற்காகவே எப்போதும் தனியாக பெண் சிலந்திகளை வளர்ப்பான்.

“கிளாராவும் மெய் லீயும் பெண் சிலந்திகளை சண்டையில் இறக்குவார்கள். அது ஆண் சிலந்திகளின் சண்டைபோல் உக்கிரமாக இருக்காது. பெண் சிலந்திகள் கால் முறிய சண்டை போடாது. ஆனால் அதில் குரூரத்தின் ஆழம் இருக்கும். சில நேரம் அவை தாக்கும்போது வளைந்த கோரக் கால்களால் மனதுக்குள் குத்திக்கிழிப்பது போல் இருக்கும். கிளாராவின் ரோஸி அப்படித்தான் சண்டைபோடும். கிளாராவும்தான்,” என்றவன் சில நிமிடங்கள் எதுவும் சொல்லாமல் என் பின்தலையை அழுத்திக் கொண்டிருந்தான்.

நானும் ‘ம்’ கொட்டவில்லை. அவன் விரல்கள் வெவ்வேறு கதிகளில் மாறி மாறி நடனமாடிக்கொண்டிருந்தன. சில நோடிகளின் அவை சோர்வடைந்தன. அப்போது அவன் கதையைத் தொடர்ந்தான்.

“அப்போது நான் குடியிருந்தது தெலுக்குராவில். லோரோங் ஜெயில் இருந்த ஒரு பெரிய வீட்டில் எட்டுக் குடும்பங்களோடு குடியிருந்தோம். வீட்டிலிருந்து கொஞ்ச தூரம்தான் ஃபிராங்களின் அவென்யூ. அதற்கு பின்னால் இருந்த கால்வாய்க்குள் இறங்கி சிறிது தூரம் நடந்தால் சின்னக் காடு ஒன்று வரும்.

அங்குதான் நாங்கள் சிலந்தி பிடிப்போம். ஒவ்வொரு செடியிலும், இலைகளைப் பார்த்துப்latha story 03 பார்த்துத் தேட வேண்டும். சிலந்திகள் இரண்டு இலைகளை தன் எச்சில் இழையால் இணைத்துக் இலைகளைக் கூடாக்கி, அதற்குள் குடி இருக்கும். பாண்டான் இலைகளில்கூட சிலந்தி இருக்கும். ஒரு இலைக்கு மேல இன்னொரு இலை மூடி இருந்தால், உள்ளே சிலந்தி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். ஒட்டியிருக்கும் இலையை மிக மெதுவாகத் திறந்து சிலந்தியைப் பிடிக்க வேண்டும். அது உடனே பறந்துவிடும். சிலந்தி பிடிப்பதே ஒரு பெரிய கலை. கிளாரா தன் சின்னக் கைகளுக்குள் பொத்தி அழகாகப் பிடிப்பாள். ஆண் சிலந்தி கிடைப்பதுதான் கஷ்டம். ஆனால் அன்றைக்கு நீண்ட நேரம் தேடித் திரிந்தும் எனக்குப் பெண் சிலந்தி கிடைக்கவில்லை. கால்வாய் முழுக்க நடந்துவிட்டேன். ஒரு பெண்கூட கண்ணில்படவில்லை.”

சிலந்தி ஆணா, பெண்ணா என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது அவனே சொன்னான்.

“இலையைத் திறந்ததுமே உள்ளே இருக்கும் சிலந்தியின் முக நிறத்தைப் பார்த்தே பெண்ணா, ஆணா என்று சொல்லி விடலாம்.  கண்களுக்கு நடுவில் வெள்ளைக் கோடுகள் இருந்தால் ஆண், அப்படிக் கோடு இல்லையென்றால் பெண். ஆண் சிலந்தி பெரிதாக, மெலிந்து இருக்கும். பெண் சிலந்தி சின்ன உருவத்தோடு, குண்டாக இருக்கும்.

“ரொம்பக் களைப்பாக இருந்தது. உடம்பில் சக்தியே இல்லாததுபோல் ஆனபோது அந்த முடிவை எடுத்தேன்.” என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். மசாஜ் செய்வதையும் நிறுத்திவிட்டிருந்தான்.

எனக்கும் பேசுவதற்கு ஒன்றுமிருக்கவில்லை. எனக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த அவனின் முகம் எனக்குத் தெரியவில்லை. அவன் வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை விலகியிருந்த அவனது விரல்கள் மூலம் உணர முடிந்தது. சிலநொடிகளில் மீண்டு வந்த அவன், திடீரெனக் கேட்டான்.

“நீ திருடியிருக்கிறாயா?”

“ஏன் திருட வேண்டும்” என்று நான் கேட்டேன்.

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்தான்.

“பாலாவிடம் நிறைய பெண் சிலந்திகளும் இருக்கும். அவனிடம் எனக்குக் கேட்கப் பிடிக்கவில்லை. கிளாராவிடம் சிலந்தி கேட்பது பற்றி நினைத்தபோதே எனக்குப் பதற்றமாகிவிட்டது. அவள் வீடு வரை போய் திரும்பி வந்துவிட்டேன்.”

எனக்கும் லேசாக பதற்றம் ஏற்பட்டது. கதை போதும் என்று சொல்ல நினைப்பதற்குள் அவன் மசாஜை விட்ட இடத்திலிருந்து தொடங்கிவிட்டான். தலைமயிருக்குள் புகுந்து, மேலிருந்து கீழாக துலாவித்துலாவி அவன் விரல்கள் நகர்ந்தன. மண்டையோட்டுக்குள்ளிருந்த நரம்பு முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிட்டவன், புருவங்களை நீவி, காது மடல்களை அழுத்தி, கழுத்துக்கு வந்தான். தோள்களைப் பிடித்து, முள்ளந்தண்டில் சொடுக்கெடுக்கும்போது வழக்கத்துக்கு மாறாக என் உடல் இளகியிருந்தது. எப்போதும்போல அவன் விரல்கள் உணர்ச்சியற்றும் வெதுவெதுப்போடும் என் உடலெங்கும் நகர்ந்துகொண்டிருந்தன. அவன் முடித்தபோது, மீண்டும் திருடியிருக்கிறாயா எனக் கேட்டான். இப்போதும் நான் பதில் சொல்லவில்லை. அவன் என்னிடம் பதில் எதிர்பார்க்கவில்லை. பணிப் பெண் வைத்துவிட்டுப்போன இரவு உணவை என்னருகே நகர்த்தி வைத்தான். என்னைச் சுற்றி எல்லாம் சரியாக இருக்கிறதா என நோட்டமிட்டான். அவன் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பியதும் நான் போர்வையை தலைக்கு மேலே இழுத்துவிட்டுத் தூங்கத் தொடங்கிவிட்டேன்.

இந்த முறை ஒரு வாரத்திலேயே ஓய் வந்தான். இன்றைக்குத் தலைமுடி வெட்டலாம் என்றும் சொன்னான். அப்படியென்றால் இன்று அதிக நேரம் கதை சொல்வான். வழக்கமாக தாழ்வாரத்திலேயே முடி வெட்டுவான். அளந்து அளந்து பொறுமையாக அவன் வெட்டுவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதன்பின் வழக்கமான மசாஜை செய்வான். அதுவரையில் அவன் கதை நீளும். என் கணக்கின்படியே ஓயின் கதை நீண்டது. என்னை நாற்காலியில் உட்காரவைத்து தாழ்வாரத்துக்குத் தள்ளிக்கொண்டே  நேற்று முடிந்த இடத்திலிருந்து  தொடர்ந்தான்.

“எங்கள் வீட்டில்தான் பாலா குடியிருந்தான். அவன் அப்பாவுக்கு சம்பளம் மிகக் குறைவு. அதனால் என் அம்மா அவர்களுக்கு இருபது வெள்ளிக்கு வீடு கொடுத்திருந்தார். வீடு என்றால் ஒரு அறை. அவன் எங்கள் வீட்டின் ஹாலில்தான் படிப்பான். நாங்கள் இரவு உணவு சாப்பிட்டதும் ஹாலில் இருக்கும் பெரிய மேசையில் அவன் மட்டுமே உட்கார்ந்து படிப்பான். நானும் அங்குதான் படிப்பேன். அங்கு குடியிருந்த மற்றவர்களும் அங்கு படிக்க வருவார்கள்தான்.

“அவர்கள் வீடுகளில் வெளிச்சமான விளக்கு இருக்காது. வீடென்றால் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அதன் ஒரு பகுதியை குசினியாக சிலர் தடுத்திருப்பார்கள். சிலர் எங்கள் பெரிய வீட்டின் பின்பகுதியில் இருந்த குசினியில் சமைப்பார்கள். சிலரின் பெரிய அறைக்குள் சின்ன பலகையால் தடுக்கப்பட்ட படுக்கை அறை இருக்கும். ராத்திரி முழுக்க பாலா மட்டுமே படித்துக்கொண்டிருப்பான்.

“எங்கள் வீட்டில் அப்படி எட்டு அறைகள் இருந்தன. முழு வீடும் எங்களுடையது என்பதால் எங்களுக்கு இரண்டு பெரிய அறைகள், தனி குசினி, ஹால் எல்லாம் இருந்தது. அந்த வீட்டிலேயே அந்த ஹால்தான் அகலமாக இருக்கும். நாலு விளக்குகள் இருக்கும். நாங்கள் படிக்கும்போது எல்லா விளக்குகளையும் அம்மா எரியவிடுவார். வெளிச்சமாக இருக்கும். பத்து மணிக்குள் எல்லாரும் படுக்கப்போய் விடுவோம். பாலா கிளம்ப மாட்டான். படித்துக்கொண்டே இருப்பான். அம்மா ஹால் விளக்கை அணைக்கும் வரை படிப்பான்,” என்றபடி முடி வெட்டுவதற்கு தயார்படுத்தினான். என் நாற்காலிக்குக் கீழே பேப்பரை விரித்தான். வெட்டும்முடி என்மேல் விழாமல் இருக்க என் கழுத்தைச் சுற்றி நீலநிறத்தில் மெல்லிய அங்கியை மாட்டிவிட்டான். பிறகு தலையில் தண்ணீரைத் தெளித்து, , முடிவெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மெல்லிய சீப்பால் முடியை வாரி விட்டான். கத்திரிக்கோலைப் பிடிப்பதிலும் சீப்பைப் பிடிப்பதிலும் அவன் கைகளில் ஒரு லாவகம் இருக்கும். கண்களை மூடியநிலையிலும் அந்த லாவகத்தை உணரலாம். சீப்பால் வாரியெடுத்த முடியை கத்திரிக்கோலால் வெட்டியபடியே பேசினான்.

“அன்றைக்கு இரவு நான் பாலாவுக்கு நேர் எதிராக உட்கார்ந்துகொண்டேன்.  மாலையில் இருந்து செய்ய வேண்டியதை பலமுறை ஒத்திகை பார்த்திருந்தாலும் உள்ளுக்குள் பயமாகவே இருந்தது. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து அவனைப் பார்த்தேன்.

“அவன் புத்தகங்களோடு தன்னுடைய மூன்று தீப்பெட்டிகளையும் டைகரை வைத்திருக்கும் சிவப்பு பிளாஸ்டர் பெட்டியையும் எடுத்துக்கொண்டுதான் வருவான். பாலாவுக்கு டைகர் எப்போதும் பக்கத்தில் இருக்க வேண்டும். அன்றைக்கும் எடுத்து வந்திருந்தான். நானும் கால்சட்டை பைக்குள் இருந்து என்னுடைய மூன்று தீப்பெட்டிகளை எடுத்து மேசையில் வைத்தேன். அதில் ஒன்று காலிப் பெட்டி. இப்போதும் நினைவிருக்கிறது,” என்றவன் என் தலையைக் குனியச் சொல்லி, பின்பக்கத்திலிருந்து முடிவெட்டத் தொடங்கினான்.

“கனமான கணக்குப் புத்தகத்தை முகத்துக்கு நேரே வைத்து என்னை மறைத்துக்கொண்டேன். முகவாயை மேசைமேல் வைத்து, முழங்கைகளை மேசையில் முண்டுகொடுத்தபடி புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டே அவனது தீப்பெட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் ஆங்கில வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தான். ஆசிரியர் நிறையப் பயிற்சி கொடுத்திருந்தார். அன்றைக்குப் பள்ளியிலிருந்து வந்ததுமே நான் எல்லாவற்றையும் அவசரமாக எழுதி முடித்துவிட்டேன். அவன் சில பக்கங்களை எழுதி முடித்ததும், தீப்பெட்டிகளைத் திறந்து பார்ப்பான். அவன் அப்படித்திறந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் உள்ளே இருப்பது என்ன சிலந்தி என மனதில் குறித்துக்கொண்டேன். பெண் சிலந்தியை அவனுக்கு இடது பக்கம் வைத்திருந்தான்.

“அடிக்கடி தலையை லேசாகத் தூக்கி ஹாலில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி இருந்தேன். யாரோ என்னைக் கவனிக்கிறார்கள் என்று தோன்றும்போதெல்லாம் தலையை நன்றாகக் குனிந்து புத்தகத்துக்குள் மறைந்துகொண்டேன். ஒவ்வொருவராக எழுந்து சென்றார்கள். பாலா எழுதுவதில் மும்முரமாக இருந்தான். சிறிய முள் 10லிருந்தும் பெரிய முள் மூன்றிலிருந்தும் மெல்ல நகர்ந்தன. நானும் பாலாவும் மட்டும்தான் மேசையில் இருந்தோம். அம்மா எந்த நேரத்திலும் விளக்கை அணைத்துவிடுவார். புத்தகத்தைப் பிடித்திருந்த கையை எடுக்கத் தயக்கமாக இருந்தது. முழங்கையை அகற்றாமலே வலது கையை மெல்ல எடுத்து, தலையைக் கோதிவிட்டேன். பிறகு கீழே இறக்கி சட்டென்று காலித் தீப்பெட்டியைப் பிடித்துக்கொண்டேன். பக்கவாட்டில் அவனைப் பார்த்தேன். அவன் இன்னும் எழுதிக்கொண்டிருந்தான். இடது கையால் என் கணக்குப் புத்தகம் கீழே விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டேன். கண்களை அசைக்காமல் அவன் இடதுபக்கத் தீப்பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“எப்படி எனக்குள் அந்த வேகம் வந்ததென்று தெரியாது. அம்மா லைட்டை அணைத்ததும் வலது கையை மின்னலாக நகர்த்தி அவனருகே காலிப் பெட்டியை வைத்துவிட்டு, அவனது பெட்டியை எடுத்து, கைக்குள் மூடிக்கொண்டேன். அவன் பார்க்கவில்லை. பார்த்திருப்பானோ என்று யோசித்தபோது காதுகள் இரண்டும் சூடாகிவிட்டன. கையிலிருந்த பெட்டியை கால்சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு, அவசரமாக என்னுடைய கணக்குப் புத்தகத்தையும் மற்ற தீப்பெட்டிகளையும் எடுத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டேன்.

சில கணங்கள் கத்திரிக்கோலின் சன்னமான சத்தம் மட்டுமே அந்த இடத்தை நிறைத்தது. பின்பக்கத்தை முடித்துவிட்டு, இடதுபக்கத்தில் வெட்டத்தொடங்கும்போது மீண்டும் கதையைத் தொடர்ந்தான்.

“நேராக என் அறைக்குள் வந்து கட்டிலில் உட்காரும் வரை என் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. கால்சட்டைப் பாக்கெட்டிலிருந்து பாலாவின் தீப்பெட்டியை வெளியில் எடுத்தபோது வியர்த்துக்கொட்டியது. எடுத்து புத்தகங்களுக்குள் மறைத்துவைத்தேன். மைலோ கொண்டு வந்த அம்மா உடம்பு சரியில்லையா என்று நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். என்ன செய்யுது, கொஞ்சம் முன்னாடி நல்லாதானே இருந்தே என்று அம்மாவின் கேட்கவும் அம்மா கண்டுபிடித்துவிடுவாரோ என பயந்துவிட்டேன். ஆனால், அம்மா கேள்விகளோடு என்னைவிட்டுவிட்டார்.

“மைலோவைக் குடித்துவிட்டு, மறைத்து வைத்த தீப்பெட்டியை எடுத்துத் திறந்தேன். பெண்தான். மறுபடியும் அதை மூடி, அதேஇடத்தில் ஒளித்துவைத்துவிட்டு படுத்தேன். ஆனாலும் ராத்திரியெல்லாம் நான் தூங்கவேயில்லை,” என்றவன் என் வலது பக்கம் வந்தான். அடிக்கடி பெட்டியைத் திறந்து சிலந்திகளைச் சரிபார்க்கும் பாலா வீட்டுக்குப் போய் தேடியிருக்கமாட்டானா, ஓயும் அவனும் மட்டும்தானே இருந்தார்கள். ஓய் மீது பாலாவுக்கு சந்தேகம் வந்திருக்காதா என யோசித்தேன். ஓயிடம் கேட்கவில்லை. அவன் கதை சொல்வதில் ஆழ்ந்திருந்தான். கனவில் பேசுபவன்போல் பேசிக்கொண்டிருந்தான்.

“நான் படித்த தெலுக்குராவ் பள்ளியில்தான் அவனும் படித்தான். லோரோங் எச்சுக்கு பின்னாலிருந்த கரும்புத் தோட்டத்தைத் தாண்டி எங்கள் பள்ளி இருந்தது. நான் சைக்கிள் வைத்திருந்தேன். பள்ளியில் இருந்து கிளம்பும்போது அவனைப் பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும் உன் டைகரை எடுத்துக்கொண்டு திடலுக்கு வா என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் சைக்கிளை மிதித்தேன்.

“அப்போதெல்லாம் சாலையில் வாகனங்கள் அதிகம் இருக்காது. பத்து நிமிஷத்தில் வீட்டுக்கு வந்துவிட்டேன். அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, வாசலில் வந்து பாலா வருகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் தலை தெரிந்ததும் உடனே அறைக்குள் சென்று அவனுடைய தீப்பெட்டியை எடுத்துப் பார்த்தேன். பெண் சிலந்தி பரபரப்பாக உள்ளே அசைந்துகொண்டிருந்தது. மூடியிலிருந்து பெட்டியை முக்கால்வாசி வெளியில் இழுத்தேன். அதன் வயிற்றை லேசாக நசுக்கினேன். வலியில் அது கத்தியிருக்கும். ஆனால் நான் கண்டுகொள்ளவில்லை. பிறகு சிவப்பு பிளாஸ்திரி பெட்டியிலிருந்து ஜோக்கரை எடுத்து மெல்ல அதற்குள் விட்டேன். உள்ளே போனதும் சில கணங்கள் ஜோக்கர் அசையாமல் நின்றான். பிறகு மெல்ல அதை நோக்கிச் சென்றான். அவன் உடம்பில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. தன் இரண்டு முன் கைகளையும் இறுக்கமாக்கினான். சண்டைக்கான தயார்நிலை போலல்லாமல் வேறுமாதிரியான முறுக்கம். பிறகு ஒரே பாய்ச்சல். அதன்மேல் ஏறிக்கொண்டான்.

“கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு மாதிரி பரபரத்தது. வியர்த்தது. திருடிய பயம் என்று என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டேன். ஜோக்கர் அசையத் தொடங்கியதும் அதை மெதுவாகப் பிடித்து அதனுடைய சிவப்பு பிளாஸ்திரி பெட்டிக்குள் விட்டு மூடினேன்.

“நான் வெளியில் வந்தபோது பாலாவும் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தான். வா மைதானத்துக்குப் போகலாம் என்று சொல்லி அவன் முகத்தைப் பார்க்காமல் வேகமாக நடக்கத் தொடங்கினேன்.”

ஓய்க்கு மூச்சு வாங்குவதுபோலிருந்தது. அவன் மெல்லத்தான் பேசிக்கொண்டிருந்தான். ஆனாலும் உணர்வற்றிருக்கும் அவன் கைகளில் மெலிதான நடுக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். முடிவெட்டுவதை நிறுத்தியிருந்தான். .  தேவைக்கதிகமாக சீப்பால் தலையை வாரிக்கொண்டிருந்தான். நான் காரணம் கேட்கவில்லை. இடையில் பேசினால் கதை குழம்பிவிடும்.

latha story 02“பாலாவோடு மற்றவர்களும் வந்தார்கள். எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆரம்பிக்கலாமா? என்று நானே கேட்டேன். அவன் ம்… என்றபடி கால்சட்டைப் பைக்குள் இருந்து சிவப்புப் பெட்டியை எடுத்தான். அந்தச் சிவப்புப் பெட்டி கொஞ்சம் பெரிதாக இருக்கும். நாங்கள் எல்லாருமே தரையில் வட்டமாக உட்கார்ந்தோம். திட்டமிடாமலேயே நானும் பாலாவும் எதிர் எதிரே அமர்ந்தோம். அவன் தனது சிவப்புப் பெட்டிக்குள் இருந்த டைகரை எடுத்து பெட்டியின் மேலே வைத்தான். நான் எனது ஜோக்கரை எனது சிவப்புப் பெட்டிக்குள்ளிருந்து எடுத்து அவனுடைய சிவப்புப் பெட்டியின் மேல் விட்டேன்.

“போதையின் உச்சத்தில் இருப்பவன் போல மிதப்பில் நடந்து வந்தான் ஜோக்கர். உடனே பாலா, ஓரத்தில் நின்றுகொண்டிருந்த தன்னுடைய டைகரை ஜோக்கருக்கு நேர் எதிராக சற்று நகர்த்தி வைத்தான்.

“சண்டை என்றால் சண்டை அப்படி ஒரு சண்டை. நாங்கள் யாருமே அதுவரையில் அப்படி ஒரு சண்டையைப் பார்த்ததில்லை. கிளாராவும் தன் கூட்டாளிகளோடு அங்கே நின்றாள். எங்கள் வீட்டில் இருந்தவர்கள், தெருப் பிள்ளைகள் என நிறைய பேர் கூடியிருந்தார்கள். எவருமே அசையவில்லை. எல்லாருமே ஒருவர் மீது ஒருவர் நெருக்கிக்கொண்டு கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஓய் என் முகத்துக்கெதிரே, மிக அருகில் நின்று முன்பக்க முடியை வெட்டத்தொடங்கினான். அவன் உடலிலிருந்து எழுந்த பூண்டு வாடை நாசிக்குள் புகுந்தது. நான் அசையாமல் அவனது கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“2 நிமிடம், 3, 4, 5 நிமிடம்… நேரம் ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய ஜோக்கருடன் பாலாவின் டைகரும் மீண்டும் மீண்டும் மோதின. ஏழாவது பாய்ச்சலில் ஜோக்கர் டைகரின் கால்களை ஓங்கித் தாக்கியது. பிள்ளைகளின் கூச்சல்களுக்கிடையே இரண்டும் ஆக்ரோ‌ஷமாகச் சண்டை போட்டன.

“பாலா பயந்துவிட்டான். சட்டென்று நடுவில் புகுந்து இரண்டு சிலந்திகளையும் விலக்கினான். நான் ஜோக்கரை சிவப்பு பிளாஸ்திரி பெட்டிக்குள் விட்டு மூடினேன்.

latha story 02“சுற்றி நின்றவர்களுக்கெல்லாம் சண்டை பாதியிலேயே நின்றுவிட்டதில் கடுங் கோபம். கிளாரா பாலாவைத் திட்டினாள். எனக்கு மனம் குளிர்ந்துவிட்டது. நான் சிவந்து போயிருந்த அவளின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது யாரோ என் கையில் இருந்த சிவப்புப் பிளாஸ்திரிப் பெட்டியைப் பறித்தார்கள். என்ன நடக்கிறது என்று நான் யோசிப்பதற்குள் ஜோக்கர் தரையில் விழுந்து, சுற்றி நின்றவர்களின் கால்களுக்குள் சிக்கி தன் எல்லாக் கால்களையும் இழந்துவிட்டது. அதன் ஒவ்வொரு காலும் தனித்தனியாகத் துடித்தது.

அவன் கதையை முடித்தபோது முடிவெட்டி முடித்திருந்தான். என் கழுத்தைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை எடுத்து உதறினான். என் மேலிருந்து முடிகளைத் தட்டிவிட்டான். அவன் தன் இருகைகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து, தலையில் மேலிருந்து கீழாகத் தட்டத்தொடங்கினான். பிறகு என் தோள்களைப் பிடித்துவிட்டான்.

கத்திரிக்கோல், சீப்பு, கிளிப்புகள் எல்லாவற்றையும் எடுத்து அவனுடைய சிறிய பெட்டிக்குள் விட்டு, தலை கழுவ என்னைத் தள்ளிக்கொண்டு போனான். சாய்வு நாற்காலியில் படுக்க வைத்து, பேசியில் தலையில் ‌ஷாம்பூவைப் போட்டு மசாஜ் செய்தபடி, “என் கையிலிருந்த சிலந்திப் பெட்டியை நீதானே பறித்தாய்” என்று கேட்டான்.

எனக்குத் தெரியாது என்றேன். தலையைக் கழுவியதும் என்னைத் தாழ்வாரத்தில் விட்டுவிடச் சொன்னேன். அவனைக் கோபப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அவன் குளிர்ந்த நீரால் என் முடியை அலசி, பூத்துவாலையால் துடைத்துவிட்டபடி மிக மெல்லிய குரலில் “என்னை மன்னித்துவிடு,” என்றான்.

நான் எதற்கு என்று கேட்கவில்லை. பிறகு அவன் சிலந்திக்கு சாப்பாடு கொடுப்பதற்காக விட்டில்பூச்சிகளைப் பிடித்து தலையை நசுக்கிக் கொல்வது பற்றியும் மூட்டைப் பூச்சிகள் பிடிப்பது பற்றியும் விவரித்துக்கொண்டிருந்தபோது, நான் தாழ்வாரத்தின் இளம்பச்சைச் செடியிலிருந்து பறந்து வந்த மஞ்சள் வண்ணத்தியை விரல்களுக்கிடையே நசுக்கிக் கொன்றேன். காற்றில் படபடத்த செத்துப்போன அதன் மஞ்சள் சிறகுகளை நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஓய் தனது பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தான். மீண்டும் சந்திப்போம் என்று அவன் சொல்லிக் கொள்வதில்லை
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *