ப்ளூடூத் என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதும் அது தானாகவே வந்து ஜோஹனின் காதுகளில் அமர்ந்துகொண்டது. அது தரம் உயர்த்தப்பட்டு வெவ்வேறு வடிவம் எடுத்தாலும் உடனுக்குடன் எப்படியாவது அவரை வந்தடையும் ரகசியம் யாரும் அறியாதது. அவற்றின் வழியேதான் நானாவித உலகப்பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிக்கொண்டிருந்தார். சிலுவாருக்குள் நேர்த்தியாக நுழைக்கப்பட்ட சிவப்பு பனியனும் இடையில் பெல்ட்டும் அணிந்து புல்தரையில் அவர் பேசிச்செல்லும் விதம் பார்க்க “காதலின் தீபம் ஒன்று” பாடலை நினைவுபடுத்தும் விதமாக இருக்கும். நெருங்கிச்சென்று என்ன பேசுகிறார் என்று கவனித்தால், யாருக்கோ தலை போகிற பிரச்சினை ஒன்றில் தீர்வு சொல்லிக் கொண்டிருப்பார். வானத்தின் கீழ் உள்ள அத்தனைப் பிரச்சினைகளுக்கும் அவரிடம் தீர்வுகள் இருந்தன. சாத்தியக்கூறுகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதேயில்லை. அடுப்புக்கரிக்குச் சவால் விடும் நிறத்தில் இருப்பார். அவரிடம் யாரும் நிறம் குறித்து பகடியெல்லாம் செய்ய முடியாது. செவுளில் அறைந்து விடுவார். அப்படி வாங்கிய ஓரிவரை நேரடியாக நான் அறிவேன்.
ஒரு நாளைக்கு பத்து பிரச்சினைகளுக்காவது தீர்வு சொல்லவில்லை என்றால் தலை வெடித்து விடும் என்பது போல போவோர் வருவோரிடம் எல்லாம் “என்ன பிரச்சின ஒனக்கு சொல்லு ப்ரோ” என்பார். உண்மையில் அவருக்கு எல்லாவித பிரச்சினையிலும் அனுபவம் இருந்தது. ஆனால் விபரம் தெரிந்தவர் எவரும் அவரிடம் தீர்வு காண வருவதில்லை. சிலர் வேண்டுமென்றே நக்கலுக்காக அவரிடம் வந்து “இதை எப்படி செய்யணும்” ப்ரோ என்று கேட்பார்கள். அதையெல்லாம் அவர் உணர்வதில்லை. எத்தனை வழிகளில் அதை செய்து முடிக்கலாம்; எதில் செலவு அதிகம்; எதில் கம்மி; யாரைப் பார்க்க வேண்டும்; எந்த வித கோப்புகள் வேண்டும் என எல்லாவற்றையும் ஒரு ஏ4 பேப்பரில் எழுதி நீட்டுவார். அப்படி அவர் நீட்டும் பேப்பரை அவரையே திரும்ப படிக்கச்சொன்னால் திணறி விடுவார். எழுத்துகள் கொச கொசவென பேப்பர் முழுவதும் நிறைந்து இருக்கும். அப்படி அவர் தீர்வுகள் சொல்லி முடித்ததும் பெருமை பொங்க சுற்றி இருப்பவர்களின் முகத்தைப் பார்ப்பார். அங்கீகாரத்தை எதிர்நோக்கியபடி இருக்கும் கண்களில் ”சூப்பரா சொன்னிங்க ப்ரோ” என்று எவராவது சொல்வாரானால் அவர் நீண்ட காலம் ஜோஹனின் நண்பராக நீடிக்கக் கூடிய அந்தஸ்தைப் பெற்றுவிட்டார் என்று பொருள். ஒருவேளை அவரின் தீர்வுகளை நிராகரித்து நீங்களாக ஒரு தீர்வை சொல்பவராக இருப்பின் சந்தேகமேயில்லாமல் அவரின் முதல் எதிரியாகிவிட அனைத்து சாத்தியங்களும் உண்டு.
பூர்ணம் விஸ்வநாதன் ஒரு படத்தில் “யாரும் என்னை அவ்வளவு சீக்கிரத்துல ஏமாத்திட முடியாது; யாரையும் பாத்த உடனே நான் சொல்லிடுவேன் அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு” என்று சொல்வார். ஆனால் எல்லோரிடம் ஏமாந்து நிற்பார். இம்மி பிசகாமல் அது ஜோஹனுக்குப் பொருந்தும். அவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருந்தாலும் ஐந்து வயதிலிருந்து நூறு வயது வரை உள்ளவர்களை பாரபட்சமில்லாமல் ப்ரோ என்றே விளிப்பார். தலையில் ஒரு முடி கூட கருமை நிறம் கிடையாது. பார்பி பொம்மையின் செயற்கை கேசம் போல எல்லாமே மங்கிய வெண்மை நிறம். கட்டை மீசை. மீசையிலும் ஒன்று கூட கருப்பு நிறமில்லை. சராசரிக்கும் குள்ளம். இவ்வளவு குள்ளமானவர் எப்படி இராணுவத்தில் பணிபுரிந்திருப்பார் என்ற சந்தேகம் எங்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால் எவரும் கேட்பதில்லை. கேட்பதற்குத் தைரியமும் எவருக்கும் இல்லை. கேட்காமலே ஓய்வான சமயங்களிலோ தீர்வுகள் தேவைப்படாத தருணங்களிலோ தான் இராணுவத்தில் செய்த சாதனைகளை சொல்லிக்கொண்டிருப்பார். அதாவது போர்க்காட்சிகள் நம் கண் முன்னே நிகழ்வது போல சொல்வது அவரின் தனித்தன்மை. அவை எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. நம்பும்படியாக இருக்காது என்பது மட்டும் அனைவரும் அறிந்திந்திருந்தோம்.
பெரும்பாலும் அவரை நாடி வருபவர்கள் எளிய கூலித்தொழிலாளிகளான பங்களாதேசிகள், இந்தியர்கள்தான். ‘கம்பெனி மாத்தணும். மொதலாளி கேன்சல் பண்ண மாட்டேங்கறான்’ என வந்து நிற்பார்கள். “எவன் சொன்னான் கேன்சல் பண்ண முடியாதுன்னு? புல்ஷிட், வேல புடிக்கலன்னு சொல்றதுக்கு எல்லா உரிமையும் உனக்கு உண்டு. வா நான் உன் மொதலாளிகிட்ட பேசறேன். முடியாதுன்னா, மினிஸ்ட்ரி ஆஃப் மேன்பவர் போலாம்” என அதே சூட்டோடு டாக்சி பிடித்து கம்பெனிக்குபோய் ஒரு ஏறு ஏறிவிட்டு வருவார். வேலையிடத்துப் பிரச்சினை, இன்சூரன்ஸ் கேஸ் லாயர் இழுத்தடிப்பது, இழப்பீடு தொகை குறைவாக வருவது, இன்கம்டாக்ஸ் பிரச்சினைகள், பணம் கைமாத்து வாங்கி ஏமாற்றும் சம்பவங்கள், சில்லறை சண்டைகள் என ஒரு நாளைக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கும் வைக்கும் நிபுணராக எங்களிடையே திகழ்ந்தார்.
அவரால் பலனடைந்தவர் ஏராளம். இதெற்கெல்லாம் எங்கும் காசு எதிர்பார்க்க மாட்டார். கொடுக்க சக்தியுள்ளவர்களிடமும் கேட்டு வாங்கிக்கொள்வதில் கூச்ச சுபாவமுடையவர். அவரால் எனக்கும் ஒருமுறை பலன் கிடைத்திருக்கிறது. அந்தச் சம்பவத்திலிருந்து எனக்கும் நண்பரானார் ஜோஹன்.
இவ்வளவு விஷயங்களுக்கு தீர்வு சொல்கிற ஒருவர் இணைய மோசடிகளில் எப்படிப்போய் ஏமாந்தார் என்பதுதான் நான் வியந்த ஒரு விஷயம்.
ஆப்பிரிக்க சகோதரர் ஒருவர் தனது சொத்து முழுவதையும் இவர் பெயருக்கு எழுதி வைக்க முடிவு செய்திருப்பதாக அன்பொழுக எழுதிய கடிதத்தைப் படித்ததும் கலங்கிப்போனார். சொத்து முழுவதும் என் பெயரில் இருந்தாலும் என்னால் அதை அனுபவிக்க முடியாதபடி உயில் எழுதப்பட்டிருக்கிறது என்றார். அதில் உள்ள சட்ட சிக்கல்கள் இரண்டு பக்கத்திற்கு விலாவாரியாக எழுதப்பட்டிருந்தது. பொறுமையாக வாசித்துப்பார்த்தார். கடைசி வாசகம் அவரை கலக்கமுறச் செய்தது. “பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துகளை உங்கள் பெயருக்கு மாற்றியவுடன், ஏதோ நீங்கள் பார்த்து திரும்ப கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறேன்” என உறுதிமொழி ஏற்றிருந்தார். ”என்ன செய்ய வேண்டும் ப்ரோ” என இவர் அனுப்பிய கடிதம் கண்டதும் உற்சாகமாகியிருக்க வேண்டும் அந்த ஆப்பிரிக்க தோழன். அடுத்தடுத்து சொத்து மாற்றுவதற்குண்டான சாத்தியக்கூறுகள் இமெயிலில் பரிமாறப்பட்டன. தன் கடைசி காலத்தை ஆப்பிரிக்க காடுகளில் வனவிலங்குகளை நேசித்துக்கொண்டே கழிக்கலாம் என்று கனவு கண்டார் ஜோஹன். கடைசி மெயிலாக 1000 அமெரிக்க டாலர்களை அனுப்பினால் பூர்வாங்கப் பணிகள் தொடங்க ஏதுவாக இருக்கும் என்று பதில் வந்ததும் நேராக வெஸ்டர்ன் யூனியன் சென்ற ஜோஹன் தன் கையிருப்பில் இருந்து அனுப்பிவிட்டு வந்தார். அதற்கு அடுத்த தினத்திலிருந்து ஆப்பிரிக்கர் மெயில் அனுப்புவதை நிறுத்திவிட்டார். நான்கைந்து நாட்கள் சோகமாகக் காணப்பட்ட ஜோஹன் நேரே என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னதும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்து விட்டேன்.
“ஏன் ப்ரோ, இதுபோல ஆயிரக்கணக்கான இமெயில்கள் தினமும் அனுப்புகிறார்கள். ஏமாந்த சோனகிரி எவனாவது ஒருத்தன் மாட்டுவான். உலகத்துக்கே தீர்வு சொல்ற நீங்க இதுல போய் எப்படி ஏமாந்திங்க” என்று கேட்டேன்.
“அவனோட பேலஸ் புகைப்படம், தோட்டம் துறவு எல்லாமே அனுப்பினானே அவ்வளவும் பொய்யா” என்று அப்பாவியாய் கேட்டார் ஜோஹன்.
“அதெல்லாம் இருக்கறது உண்மையா இருக்கலாம். ஆனா அவனுக்கு சொந்தமா இருக்கறது வாய்ப்பில்ல ப்ரோ” என்றேன்.
“ஆமால்ல, எங்கியோ இருக்கற ஆப்ரிக்காகாரன் எனக்கு எதுக்கு தானம் தரணும்னு நான் யோசிச்சிருக்கணும். என் தப்புதான். இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் வெளியே தெரிய வேணாம் ப்ரோ” என்றபடி வலது கையால் காதில் உள்ள ப்ளூடூத்தை அழுந்தப்பிடித்து பேசிக்கொண்டே சென்றார். அப்போது கூட பத்து மைலோ ஒன்றாக கலக்கிக் குடித்த தெம்போடு பேசிக்கொண்டே சென்றார்.
தினமும் இரவு நேரங்களில் அவர் தலைமையில் ஒன்று கூடி பேசிக்கொண்டிருப்போம். அவர்தான் நடுநாயகமாகப் பேசிக்கொண்டிருப்பார். எவர் எதைக்குறித்துப் பேசினாலும் “இப்டிதாம்பா நம்ப ஆள் ஒருத்தன் அங்க போனாம்பாரு” என்று அவிழ்த்து விடுவார். எதுவாக இருந்தாலும் கூட்டத்தில் ஒருவன் எதாவது பேச்சை ஆரம்பிக்க வேண்டும் அதிலிருந்து பேச்சை நள்ளிரவு வரை இழுத்துக்கொண்டே செல்வது தன் கடமை என்று பேசிக்கொண்டிருப்பார்.
“ஏன் ப்ரோ உங்களுக்கு சொந்தமா பாசிரிஸ்ல வீடு இருக்குன்னு கேள்விப்பட்டேன். ஆனா ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கிருக்கிங்க” என்று கேட்டேன்.
“அது ஒண்ணுமில்ல ப்ரோ. வீட்ல நான் மட்டுந்தான் தனியா இருக்கேன். பயங்கரமா போர் அடிக்குது. சாப்பாடு செஞ்சி சாப்பிடறதுல இருந்து, துணிமணி தொவச்சி போடற வரைக்கும் எல்லாமே பிரச்சினதான். ஒராளுக்கு என்னன்னு சமச்சி, கழுவி கமுத்தறது. பொண்டாட்டி இருந்தவரைக்கும்தான் வீடு அவ இல்லன்னா வீடே கெடையாது. அவங்க செத்ததுக்கு அப்புறம் இப்படி ஹோட்டல் ஹோட்டலா தங்கி சுத்திட்டு இருக்கறதுதான் பிடிச்சிருக்கு. நாலு செவுத்துக்குள்ள எப்டிப்பா ஒரு மனுஷனால வாழ முடியும். அதுவும் என்னப்போல பேசிகிட்டே இருக்கறவன் எப்டி இருப்பான். அதான் இப்டி சுத்திட்டே இருக்கேன்.”
“பிள்ளைங்கலாம் இல்லியா?”
“ஏன் இல்ல? ரெண்டு பொண்ணு ப்ரோ. கட்டிக்குடுத்தாச்சி. ஒண்ணு சுவீடன்ல இருக்கு. இன்னொன்னு ஆஸ்திரேலியா. இப்பக்கூட போய் பாத்துட்டுதான் வந்தேன். நமக்கு வாழ்க்கைல எல்லா சுகத்தையும் பாத்தாச்சுங்க ப்ரோ. என் வாழ்க்கையில இனி பொதுச்சேவை செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன். அதான் போற வர்ற ஏழை பங்களாதேஷி, மலாய்க்காரன், இந்தியாக்காரனுக்கு ஒதவி செய்யலாம்னு இங்க வந்துட்டேன்.”
ஃப்ளை எமிரேட்ஸ் என்று எழுதப்பட்ட கழுத்து சட்டையில் பை கிடையாது. இறுக்கமாக இருந்தது. பனியனின் உட்புறம் தோள்பக்கமாக எப்போதும் ஒரு சிகரெட் பாக்கெட் சொருகி வைத்துக்கொள்வார். விழ வாய்ப்பில்லாத இடம். அங்கிருந்து சிவப்பு நிற மார்ல்ப்ரோ பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொள்வார். “நாளைக்கு காலைல ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு ப்ரோ. அப்புறம் பார்க்கலாம்” என்று அன்றைய கூட்டங்கள் இப்படிதான் நிறைவுறும்.
எப்போதும் நலிவுற்றவர்களைக் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்த ஜோஹன் ஒருவார பயணமாக இந்தியா போனார். போவதற்கு ஒருவாரம் முன்பே அலப்பறைகளை நான்கு புறமும் சிதறிவிட்டுத்தான் சென்றார்.
“என் தலைமுறைல யாருமே ஊருக்குப் போகல லா. நாந்தான் மொத ஆள். தாத்தாவுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு. எல்லாத்தையும் போய் தானம் குடுத்துட்டு வரப்போறேன். ஒருவாரம் தங்கி எவ்வளவு நிலம் இருக்கு எல்லாத்தையும் அளந்து பாத்துட்டு ஏழை பாழைங்களுக்கு குடுத்துட்டு வரலாம்னு இருக்கேன்” என டீக்கடையிலிருந்து ஹோட்டலில் துணி வெளுக்கும் பர்மாகாரன் வரை ஒருத்தரை விடாமல் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘டிக்கெட்டு போட காசிருக்காது பெருசுகிட்ட, ஆனா பீத்தல் தெருவ பொளக்குது’ என்ற உள்ளுணர்வுடன் எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தனர்.
அவர் சென்ற ஒருவாரத்தில் அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை கிட்டத்தட்ட அனைவருமே உணர்ந்திருந்தோம். மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து இருட்டில் புகைக்கு நடுவே அவர் ஆவேசமாக பேசிக்கொண்டிருப்பது எதோ பெரிய சதித்திட்டம் ஒன்றை தீட்டிக்கொண்டிருக்கும் தோற்றத்தை தரும். நடமாட்டமில்லாத தெருமுனை ஓரத்தில் நான்கு பேர் நின்று விடிய விடிய பேசுவது அந்த ஒருவாரத்தில் இல்லாமலே போனது. வேலை முடிந்து வந்த அத்தனை தலைகளும் ஜோஹன் வழக்கமாக நின்றிருக்கும் இடத்தை பார்த்து ஏமாற்றத்துடனே திரும்பிக்கொண்டிருந்தனர். சில்லறைப் பிரச்சினைகளுக்கு அவரைத் தேடி எத்தனை பேர் வந்து போகிறார்கள் என்று தெரிந்தது. யார் வந்தாலும் டீ சொல்லும் ஜோஹன் இல்லாது போனது எல்லோருமே உணர ஆரம்பித்தார்கள். ஒன்றிரண்டு பேர் “ஜோஹன் இன்னும் வரலியா” என எட்டிப்பார்த்து விசாரித்துச் சென்றனர்.
“ஒருவாரம்தான சொல்லிட்டுப் போனாப்ல, எங்க இன்னும் காணோம்” என டீமாஸ்டர் கூட ஹோட்டலில் வந்து விசாரித்துவிட்டுப்போனார். எல்லோரும் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தபோதுதான் ஊரிலிருந்து அழைத்தார்.
“இங்க பெரிய பிரச்சின பண்றாங்கப்பா… காசுலாம் காலியாயிருச்சி, டிக்கெட் போட்டு அனுப்பி வைங்க. நான் வந்ததும் காசு செட்டில் பண்றேன்னு” என்று சொன்னாராம். தகவல் வந்ததும் தெரியாதது போல எல்லோரும் விலகிச்சென்றனர். இரண்டொரு நாளில் அவருக்கு டிக்கெட் போட்டு அனுப்பியதும் வந்து சேர்ந்தார் ஜோஹன். யாருக்கும் அவர் மீது காழ்ப்புகள் இல்லை. அவர் அளித்த தினசரி கேளிக்கைகளை விரும்பியவர்கள் சிலர் டிக்கெட்டுக்கு உண்டான பணத்தைப் பங்கிட்டுக்கொண்டனர்.
ஊர் வந்த நாளே அலப்பறைகளை ஆரம்பித்துவிட்டார். கையடக்க கேமிராவில் ஒரு வீடியோ வைத்திருந்தார். அதில் தென்னந்தோப்பு, கிணறு வயல்வெளி, கொய்யாத்தோப்பு, மரங்கள், தரிசு நிலம் என வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. நடு நடுவே அவரும் வீடியோவில் பதிவாகியிருந்தார். அங்கேயும் ப்ளூடூத்தும் காதுமாகத்தான் சுற்றியிருக்கிறார். “இவரு எனக்கு பங்காளி முறை வேணும். இவர எப்டி கூப்பிடறதுன்னு தெரியல. ப்ரோ உங்கள எந்த மொறைல கூப்புடணும்” என்றார். அவர் பார்க்க ஜோஹனைவிட இளையவராகத்தான் இருந்தார்.
“எல்லாமே நம்ம சொத்துதான் ப்ரோ, அளந்து பாத்துட்டேன் மொத்தம் நானூறு ஏக்கர். தேனியில் எதோ ஒரு ஊர் சொன்னார். ஊர்ல இருக்கற மக்கள் எல்லாரும் பாவம்யா. தவிச்ச வாய்க்கு தண்ணி இல்லாம தடுமாறிகிட்டு இருக்காங்க. நம்ம நெலத்துக்குக் கீழ ஒரு காலத்துல ஆறு ஓடுச்சாம். நீரோட்டம் அதிகமா இருக்கற இடம்னு சொல்றாங்க. எல்லாருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணி இலவசமா தரலாம்னு ஒரு ப்ராஜெக்ட் முடிவு பண்ணிட்டேன். நாலு இடத்துல போர் போட்டு தண்ணிய சுத்திகரிக்க ஒரு ஃபாக்டரி கட்டப்போறேன். பக்காவா ப்ளான் எல்லாம் ரெடி. இங்க வாட்டர் மேனேஜ்மெண்ட்ல நம்ம கூட்டாளி ஒருத்தர் வேல செய்றாரு. அவர்கிட்ட போய் ப்ளான் சொல்லி ஐடியா கேக்கப்போறேன். நிறைய வேலை இருக்குய்யா என்று தெருமுனையில் முழங்கிக்கொண்டிருந்தார்.”
வழக்கம்போல வாயைப்பிளந்து எல்லோரும் கேட்டுக்கொண்டோம். அடுத்து வந்த இரண்டு நாட்களில் எல்லோருக்கும் அந்த வீடியோ காண்பிக்கப்பட்டிருந்தது.
“ஊர்ல நானூறு ஏக்கர்னா சும்மாவா… ஜோஹன நாமல்லாம் மண்ட ஓடின்னு நெனச்சிட்டு இருந்தோம். ஆளு பெரிய எடந்தான் போல” என்று பேசிக்கொண்டிருந்தோம்.
“யோவ் அந்தாளு ரீலு உடறான்யா… நானூறு ஏக்கர நாப்பது அம்பது வருசம் கழிச்சி போன ஒடனே தூக்கிக் குடுக்கறவன் நல்லவன் எவன்யா இருக்கான். அவனுக்கு ஆயிரம் சொந்தம் இருந்துருக்கும். எவன் எவனோ ஆண்டுகிட்டு இருந்துருப்பானுங்க. இவரு போன ஒடனே இந்தா புடிச்சிக்கன்னு குடுத்துருவானுகளா? அவர்தான் சொல்லிகிட்டு இருக்காருன்னா நீங்களும் இளிச்சவாயன் மாதிரி கேட்டுகிட்டு இருக்கிங்க. இவர் போய் யாரு என்ன விவரம் எடம்லாம் எங்கெங்க இருக்குன்னு விசாரிக்க ஆரம்பிச்சதுமே பாஸ்போர்ட்ட புடிங்கி வச்சிகிட்டு தொறத்தி விட்டாங்களாம். விட்டா போதும்னு ஓடியாந்த மனுசன் வந்து விடற ரீல பாத்தியா” என்று கலாய்த்தார் ஒருவர்.
“ஆமால்ல, நாலு செண்ட் இடத்தையே நாலஞ்சி வருசம் சும்மா விட்டா வேற ஒருத்தன் பட்டா போட்டுகிட்டு வந்து நிப்பான். நானூறு ஏக்கருக்கு சும்மாவா விடுவாங்க. மனசாட்சியே இல்லாம ரீல் விடறான்யா இந்தாளு” என்று புலம்பியது ஒரு குழு.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மறுநாள் வரைபடங்களை பாதுகாப்பாக சுருட்டி வைக்கும் குழாயினை முதுகில் மாட்டியபடி உற்சாகமாக வந்திறங்கினார். கெத்தாக குழாயைத் திறந்து ஒரு பெரிய வரைபடத்தை எங்கள்முன் விரித்துக் காண்பித்தார். மேலே கொட்டை எழுத்தில் “வள்ளி வாட்டர்ப்ளாண்ட்” என்று எழுதியிருந்தது. சட்டக வரைபடத்தில் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி நடுவில் பெரிய கோபுரம் வைத்ததுபோல பெரிய பாக்டரி. கேட்டிலிருந்து வரிசையாக லாரிகள் வந்து போவதுபோல வடிவமைக்கப்பட்டிருந்தது.
என்ன ஜோஹன் இதெல்லாம் என்றோம்.
“வாட்டர் ப்ராஜெக்ட் லா… கொஞ்சம் நிலத்தை வித்து கம்பெனி ஆரம்பிக்கப்போறேன். தேனிய சுத்தி எங்கெல்லாம் தண்ணிப்பஞ்சம் இருக்குதோ அங்கல்லாம் வீடு விடா தண்ணி குடுக்கப்போறேன்.”
”இலவசமா” என்றதும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
“ஆமாம் லா… இருக்கப்போறது இன்னும் கொஞ்சநாள்தான். புண்ணியத்தை தேடி வச்சிட்டுப் போவமேன்னுதான் பண்ணிட்டுருக்கேன். மனுசன் எவ்ளோதான் எடுத்துகிட்டு போவ முடியும். சொல்லு ப்ரோ…” என்று எங்கள் எல்லோரையும் பார்த்தார்.
“கெழவனுக்கு முத்திடுச்சி” என்று சிலர் முணுமுணுத்தனர். ஹோட்டலில் வேலை செய்யும் அருண் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார். இடையிடையே நக்கலாக சிரிக்கவும் செய்தார். ஜோஹனுக்கு புன்னகையில் பேதம் பிரித்தறிய தெரியாதது. அவர் குற்றமல்ல. நக்கலுக்கு சிரித்தால் கூட மகிழ்ச்சி என்றே பொருள் கொள்ளும் புனித ஆத்மா.
ஒருவாரகாலத்தில் அந்த வரைபடம் ரோவல் ரோட்டில் அனைவருமே பார்த்த விஷயமாக ஆனது. பேசிய விஷயத்தையே திரும்பத் திரும்ப ஒரேநாளில் பல தடவை பேசுவது இந்த மனிதனுக்கு சங்கடமளிக்காதா என்று தோன்றும் அளவுக்கு வள்ளி வாட்டர்ப்ளாண்டை சிங்கப்பூர் பிரபல்யம் அடையச் செய்தார்.
கொஞ்ச காலத்தில் அவரே மறந்துபோய் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பிசியாகிவிட்டிருந்தார். யாராவது நினைவில் வைத்திருந்து “அந்த வள்ளி ப்ராஜெக்ட் என்னாச்சு ப்ரோ?” என்று விசாரிக்கும்போது மட்டும் பெருமூச்சொன்றை விட்டபடி அயற்சியாக சொல்வார்.
“ஊர்ல யாருமே நியாயமா இல்ல ப்ரோ. என் தாத்தா பேரு முனியன். பாட்டி பேரு வள்ளி. அந்தக் காலத்துலயே இங்க வந்ததினால சொந்தம் விட்டுப்போச்சு. அவரும் இங்கயே செட்டில் ஆயிட்டாரு. டாகுமெண்ட்ஸ்லாம் எங்கருக்குன்னு கூட தெரியல. எல்லாமே வாய்வழி வரலாறுன்னு ஆகிப்போச்சு. நீதான் முனியனுக்குப் பேரனான்னு கேக்கறாங்க. அப்படி ஒரு ஆளே இல்லன்னு சொல்றாங்க. ஒண்ணுமே புரியல ப்ரோ. நல்லது செய்யக்கூட விடமாட்றாங்க” என அலுத்துக்கொள்வார். தினப்படி வள்ளி வாட்டரை யாராவது நினைவுபடுத்திக் கேட்பதும் அவர் புலம்புவதும் நடந்தது.
“திடீரென ஒருநாள் யூரோப் டூர் போறேன். மகளை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அங்க போய் தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு ரெண்டு மூணு மாசம் கழிச்சி வரலாம்னு இருக்கேன்” ப்ரோ என்றார்.
அப்போதுகூட “ப்ரோ நீங்க போய்ட்டீங்கன்னா யார் எல்லோருக்கும் சட்ட உதவிகளை செய்யறது?” என்றே நக்கலாக கேட்டனர்.
“வந்துருவேன் ப்ரோ, சும்மா கொஞ்ச நாளிக்கிதான. எங்கப்போனாலும் ரோவல் ரோடுதான் என் அட்ரஸ் ப்ரோ. என் உயிர் போனாலும் இங்கதான் போகும்” என நெகிழ்வாய் பேசி எல்லோரையும் கலங்க வைத்தார். “எங்க போனாலும் நம்ம மூலக்கடை மரணவிலாஸ் மீகோரிங் சாப்புடாம நம்மளால இருக்க முடியாது. பேரன் பேத்திகள பாத்து ரொம்ப நாள் ஆச்சு. ஏற்கனவே மாரப்பொளந்து ஆபரேஷன் பண்ணிருக்கேன். எப்பவேணாலும் டிக்கெட் வாங்கிட்டுப் போற கண்டிஷந்தான ப்ரோ. அதுக்கு முன்னாடி பாத்துட்டு வந்துட்டா மனசுக்கு நிம்மதியா இருக்கும்ல. மனுசனுக்கு அப்பப்போ ஒரு மாறுதல் வேணும் ப்ரோ. நதி மாரி ஓடிட்டே இருக்கணும். போய் அப்படியே யூரோப்ல ஒரு ரவுண்டு அங்கேருந்து நேரா ஆஸ்திரேலியால சின்ன மகள பாத்துட்டு நேரா ரோவல் ரோட்டுக்கு ரிட்டர்ன் ஆயிடுவேன். எல்லா ஊர்லயும் நாட்கள் கொஞ்சம் மந்தமா நகரும் ஆனா சிங்கப்பூர்ல நாட்கள் எல்லாம் ரெக்க கட்டிட்டுப் பறக்கும். வந்துருவேன் ப்ரோ.”
இப்படியெல்லாம் சமாதானம் சொல்லிவிட்டுதான் எங்களிடம் இருந்து விடைபெற்றார். “உண்மைலயே இந்தாளு யூரோப் போறானா இல்ல நம்மகிட்ட பீலா விடறானா” என்று கூட சிலர் நமட்டுச் சிரிப்புடன் அவர் சென்ற பிறகு பேசினர். போன சில நாட்களில் அவர் உண்மையிலேயே சுவீடனுக்குதான் சென்றார் என அருண் வந்து சொன்னார். *46 ல இருந்து போன் வந்துச்சுய்யா” நம்மள எவன் எதோ ஒரு நாட்டுலருந்து கூப்பிடறான்னு பாத்தா நம்ம ஜோஹன்” என்று அருண் அண்ணனே வந்து சொன்னார்.
அகால வேளைகளில் புதுப்புது எண்களில் இருந்து அழைப்பு வரும். ப்ரான்ஸ் என்பார். அடுத்த வாரம் “லண்டன்ல இருந்து ஜோஹன் பேசறேன் ப்ரோ” என்பார். அவருக்குப் பிடித்த மான்செஸ்டர் அணி விளையாடும் கால்பந்து மைதானத்தில் இருந்து எடுத்தது என்று போட்டோ அனுப்பினார். சிலநாட்கள் தகவல் ஒன்றுமே இல்லாமல் இருக்கும். சடாரென எதோ ஒரு நாட்டிலிருந்து அழைப்பார். இப்படியே மூன்று மாதம் சென்றது.
ஒருநாள் வந்திறங்கினார். ரோவல் ரோடே அல்லோகலப்பட்டது. எல்லோரையும் கட்டியணைத்துதான் பேச்சையே ஆரம்பித்தார். “ரொம்ப மிஸ் பண்ணிட்டிங்களா ப்ரோ” என்று கண்ணடித்தபடி கேட்டார். ஆமால்லா நீங்க இல்லாம கூட்டம் கூடறதில்ல, கோப்பிக்கடைக்காரர் தினமும் கேக்க ஆரம்பிச்சிட்டார். ரோவல் ரோட்டின் ரோமியோ ஜோஹன் இல்லாம களையிழந்து போச்சு என்றோம். வந்துட்டன்ல இனிமே டெய்லியும் மீட்டிங்குதான் என்றவுடன் அந்த இடமே கலகலப்பானது. தினசரி யூரோப் டூர் பற்றிய கதைகளை வாய்பிளந்தபடி கேட்டோம். “வெள்ளக்காரன் வெள்ளக்காரந்தாய்யா…. அவன அடிச்சிக்க முடியாது. என்னா மாதிரி நாகரீகமானவங்க தெரியுமா. ஏர்போர்ட்ல நான் போற ப்ளைட் வர கொஞ்சம் தாமதமாச்சி. அந்தக் கொஞ்ச நேரத்துக்கு காம்பன்சேஷன் குடுக்கறான்யா. அந்தமாதிரி எவனாலயும் தர முடியாது. எல்லா ஹோட்டல்லயும் நமக்கு ஒரு ப்ரெண்டு கெடச்சிடறான். நல்ல ஜாலியா இருந்துச்சி. ப்ரான்ஸ்ல இருக்கும்போது ஒரு ஜப்பான்காரன் மொழி தெரியாம திண்டாடும்போது நான் உதவி பண்ணேன். சிங்கப்பூர் வந்தா கால் பண்றேன்னு சொல்லி நம்பர்லாம் வாங்கிருக்கான். அனேகமா வருவான் இங்க கூட்டிட்டு வந்து பார்ட்டி வைக்கறேன்னு சொல்லிருக்கேன்லா.” இந்த உற்சாகமான மனிதரைத்தான் இத்தனை நாள் நாங்க மிஸ் பண்ணோம்.
தினசரி தீர்வுகளில் பழையபடி மூழ்கினார் ஜோஹன். அவருக்கென தினசரி எதாவது ஒரு பிரச்சினையும் அதைத் தொடர்ந்து சென்று தீர்ப்பதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படியொரு நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. அவருடைய ஈமெயில் கணக்கில் ஒரு மடல் வந்திருந்தது.
“பூரண வாழ்த்துக்கள்” ஒருங்கிணைந்த பிரிட்டன் தேசிய லாட்டரியில் உங்களுக்கு இரண்டு பில்லியன் பரிசு விழுந்திருக்கிறது. கடந்த மாதம் நடந்த லாட்டரி குலுக்கலில் எங்கள் கணினி உங்கள் பெயரைத்தான் தெரிவு செய்திருக்கிறது. நீங்கள் இன்று முதல் இரண்டு பில்லியன் லண்டன் பவுண்டுக்குச் சொந்தக்காரர். உங்களது பரிசுத்தொகை லண்டன் லாட்டரி கருவூலத்தில் பத்திரமாக இருக்கிறது. இப்போது அதன் உரிமையாளர் நீங்கள். சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்குப் பிறகு மொத்தப்பணமும் உங்கள் வங்கிக்கணக்கிற்கு மாற்றப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். கடிதத்தில் குறிப்பிடப்பட்ட குலுக்கல் எண் மற்றும், இக்கடிதத்தின் பிரத்யேக எண்ணையும் குறிப்பிட்டு உங்கள் வங்கிக்கணக்கு விபரங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தலைமைச் செயலாளர்.
சைமன் பீட்டர்தன்
கடிதத்தின் கீழே நிறைய எண்கள் குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது வரி படிக்கும்போதே இது ஒரு ஏமாற்றும் ஓலை என்று. முழுதாக படிக்காமல் நிராகரித்தால் இதை நம்பி விபரங்களை தந்தாலும் தந்துவிடுவார் என்பதால் முழுதாக வாசித்தேன்.
“ஜோஹன் ப்ரோ லண்டன்ல எதாச்சும் லாட்டரி வாங்கனீங்களா?”
“இல்ல ப்ரோ….”
“அப்புறம் எப்படி இது உண்மைன்னு நம்பறிங்க?”
“நான் நிறைய இடத்துல என்னோட ஈமெயில் குடுத்துருந்தேன்ல. அவங்க இணைய சர்வரில் பதிவாகியிருக்கும் அதுல இருந்து என்னை செலக்ட் பண்ணிருக்கலாம்ல.”
“ப்ரோ… அப்படிலாம் இல்ல. குப்பனுக்கோ, சுப்பனுக்கோ ஒரு ஈமெயில் இருந்தாலும் அதுக்கும் இப்படிதான் அனுப்புவாங்க. எல்லாமே ஏமாத்தற கூட்டந்தான்.”
“போங்க ப்ரோ. வெள்ளக்காரனுங்க ஏமாத்த மாட்டானுங்க. யாரப்பாத்தாலும் ஏமாத்தறவன்னே சொல்லிட்டு இருக்கிங்க” என்று அலுத்தபடி சென்றுவிட்டார்.
அடுத்தநாள் ஜோஹனுக்கு விழுந்த லாட்டரி பற்றிதான் ரோவல் ரோடு முழுக்கப் பேச்சு அடிபட்டது. விபரம் தெரியாதவர்கள் அதை உண்மை என்று நம்பித்தான் போனார்கள். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. மனிதர் அத்தனை உறுதியோடும், தன்னம்பிக்கையோடும் மக்களிடையே பிரிட்டிஷ்காரர்களைப் பற்றி உயர்வாக பேசி நம்ப வைத்திருந்தார்.
“கெழவனுக்கு முத்திடுச்சி… சீக்கிரம் அள்ளிப்போட்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேத்துடுங்க” என்று ஜோஹனை வெறுப்பவர்கள் ஒருபக்கம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
அதைப்பற்றியெல்லாம் என்றுமே கவலைப்படுபவரல்ல ஜோஹன். பார்க்கும் நேரத்தில் எல்லாம் “அதை நம்பாதிங்க” என்று சொல்லிப்பார்த்தாலும் கேட்கும் மனநிலையில் இல்லை. அவர் எண்ணம் முழுக்க இரண்டு பில்லியன் பவுண்டை எப்படி இங்கே கொண்டு வருவது என்பதில்தான் இருந்தது. தினமும் அதற்காக சைமனுடன் பேச்சுவார்த்தையில் இருந்தார்.
திடீரென மறுபடி நிறைய பேப்பர்கள் அடங்கிய கோப்பு ஒன்றுடன் நடமாட ஆரம்பித்தார். அவரே ஒருநாள் என்னிடம் வந்து இரண்டு பில்லியனுக்கான திட்டங்களை சொன்னார்.
“சொன்னா எவனும் நம்ப மாட்டேங்கறான் ப்ரோ. உண்மையிலே எனக்கு லாட்டரி அடிச்சிடுச்சி. இந்தமுறை ஏமாற மாட்டேன். சைமன்கிட்டயே பேசிட்டேன். என்கிட்ட ஒரு அருமையான திட்டம் இருக்கு.”
சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் என்ன திட்டம் ப்ரோ என்றேன்.
அதற்காகவே காத்திருந்தவர் போல கோப்புகளில் இருந்து ஒரு பேப்பரை உருவி எடுத்தார். “புதிதாக ஒரு கம்பெனி திறந்திட்டேன். “வள்ளி ஏர்லைன்ஸ்” லாட்டரிப் பணத்தை வச்சு ஏர்லைன்ஸ் ஆரம்பிக்கப் போறேன். இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்கும் ரொம்ப சீப்பா ப்ளைட் விடப்போறேன். இனிமே யாரும் ரெண்டு வருஷம், ஒரு வருஷத்துக்குன்னு ஊருக்குப் போகவேணாம். வார இறுதிய வீட்ல கொண்டாடற மாதிரி ரொம்ப ரொம்ப குறைவான கட்டணத்துல இது நடத்திக்காட்டுவேன். டைகர், ஏர் ஏசியாகாரன்லாம் அலறி அடிச்சிகிட்டு ஓடப்போறான் பாருங்க. நம்ம ஆளுங்க இனிமே வீட்டைப் பிரிஞ்சி ரொம்ப நாள் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. மாசம் ஒருமுறையாச்சும் போய் வர்ற மாதிரி வரலாறு மாறப்போகுது.”
அடுத்து அவர் சொன்னதுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. “நேரா சிங்கப்பூர்ல ப்ளைட்ட டெலிவரி பண்ணா ரொம்ப செலவாகுமாம். இந்தோனேசியாவுல இருந்து வாங்கப்போறேன். அங்க வெல கொஞ்சம் கொறவுதான்” என்றார்.
கண்டிப்பாக பிசகிவிட்டதுதான். சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஊதுகிற சங்கை எல்லோருமாக சேர்ந்து ஊதிப்பார்த்து சோர்வடைந்து விட்டாயிற்று. எல்லோரும் செய்கிற கிண்டலாம் அதற்குப்பிறகு கம்பெனி, லாட்டரி தொடர்பான விஷயங்களை எங்களோடு பகிர்ந்துகொள்வதைத் தவிர்த்தார். முன்புபோல நின்று பேசுவதில்லை.
ஒருநாள் திடீரென பெட்டியுடன் ஹோட்டலை காலிசெய்தார். சக்கரம் வைத்த பெட்டியை இழுத்துக்கொண்டே வந்தவர் என்னைப் பார்த்ததும் நின்றார்.
“எங்க ஜோஹன். லண்டனுக்கா?” என்றேன் சிரித்தபடி.
“இல்லலா… இங்கதான் இந்தோனேசியா போறேன். ரெண்டு ப்ளைட் வந்து சேர்ந்துடுச்சாம். தகவல் சொன்னாங்க. இங்க கொண்டு வர்றதுக்கு முன்னாடி பெயிண்டிங் வேலை, பேர் எழுதற வேலை, அப்புறம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங் வேலை எல்லாம் இருக்கு. இங்க செஞ்சா ரொம்ப செலவாகும். இந்தோனேசியாவுலயே எல்லாத்தையும் முடிச்சிட்டு இங்க கொண்டு வரணும். ஒரு ஆள் பக்கத்துல இருந்தா வேலை சீக்கிரம் நடக்கும்ல. அதான் நானே கெளம்பிட்டேன். அடுத்து நீங்க ஊருக்குப் போறது நம்ம வள்ளி ஏர்லைன்ஸ்லதான் ப்ரோ. மொத டிக்கெட் ஒங்களுக்குதான். போகவர முற்றிலும் இலவசம்” என்றார். இவரெல்லாம் தன்னம்பிக்கை வளர்ச்சி குறித்த பேச்சாளராக வந்திருந்தால் நிறைய பேர் பலனடைந்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். வழக்கம்போல இறுக்கி அணைத்தபடி “சீக்கிரம் ப்ளைட்ல வரேன் ப்ரோ” என விடைபெற்றார்.
அப்படிச் சொல்லிச் சென்று ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. இந்தோனேசியாவுக்கு சென்றவர் அதற்குப் பின் என்ன ஆனார் என எங்கள் எவருக்குமே தெரியவில்லை. அவரைப்பற்றி விசாரிக்க அவரைத் தவிர வேறு எவரையும் எங்கள் யாருக்கும் தெரியவில்லை. தினமும் அவரைத் தேடி யாராவது வருவதும் சலிப்புடன் ”ஆள் இல்லையென்று” பதில் அளிப்பதே எங்கள் வேலையாகிப்போனது. எவராவது ஒருவர் ஜோஹன் குறித்த தகவலைத் தாங்கி வருவாரா என வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் ஒவ்வொருவரும் ஏங்கினோம். யாரும் வராததால் நாளடைவில் மறந்தும் போனோம். ‘ஒருவேளை பெயிண்ட் கெடைக்காம தேடிகிட்டு இருப்பாரோ’ என்றுகூட கிண்டலாக நினைத்துக்கொள்வதுண்டு. என் வாழ்வில் சந்தித்த தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஜோஹன் ஒருவர்தான்.
தலைக்கு மேலே விமானம் பறந்து செல்லும் சத்தம் கேட்கும்போதெல்லாம் சிறுபிள்ளை போல அண்ணாந்து வானத்தைப் பார்ப்பதுண்டு. ஒருவேளை அது “வள்ளி ஏர்லைன்ஸ்” ஆகக்கூட இருக்கலாம் என்ற நம்பிக்கைதான். அதுதான் ஜோஹன்.