பேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு சுரங்கம். ஒவ்வொரு வருடமும் விடுமுறை காலங்களில் மட்டும் வந்துவிட்டுப் போகும் ஓர் அந்நியமான நகரம். அம்மாவிற்கு ஒவ்வாத இரைச்சல்கள். நாள் முழுக்க புலம்பியபடியே வருவார். பாட்டி இல்லாத ஒரு நகரம்.
தேர்தல் காலம் நெருங்கிவிட்டால் நகரங்கள் பரப்பரப்படைகின்றன. குறைந்தபட்சம் ஆங்காங்கே அவசர கூட்டங்களும் அதிரடியான சரிக்கட்டல்களும் நடக்கத் துவங்கும். ஒவ்வொரு இயக்கமும் அரசியல் கட்சியும் தனிமனிதர்களும் தேர்தலைத் தனக்குச் சாதகமான ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறார்கள். தேர்தல் சமூகத்தில் வாழக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வேலையைக் கொடுக்கிறது. ஏதோ ஒரு அதிகார சக்தியிடம் தன்னைக் கட்டாயம் ஒப்படைத்துக்கொள்வதன் மூலம் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியும் என நம்புகிறார்கள். இலாப நஷ்ட கவலையின்றி தேர்தலை நோக்கிய உரையாடல்கள் ஆழமாகவும் விரிவாகவும் மொன்னையாகவும் மேலோட்டமாகவும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன.
அப்பொழுதுதான் கடையைத் திறந்திருப்பார் போல. கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சேரத் துவங்கியிருந்த ஓர் ஒட்டுக்கடை. “இந்தத் தடவை பார்த்துருவம் யார் ஜெயிக்கறான்னு.. மக்கள் சக்தின்னா சும்மாவா” ஒட்டுக் கடையில் நின்று தேர்தலை விமர்சிப்பதிலிருந்து யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என எப்பொழுதும் ஒரு சாராரைத் தன் வசப்படுத்தும் நடவடிக்கைகள் வரை தேர்தல் சார்ந்து அதீதமான தன்னார்வம் இருந்துகொண்டிருக்கிறது. அது ஒரு சக்தியாக மாறி அடுத்தவர்களை ஆக்கிரமிப்பு செய்கிறது. அப்படியொரு சக்தியை ஒரு குரூரமான தன்னார்வமாக என் பாட்டியிடம் மட்டும் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அவருடைய சமக்காலத்திய மனிதர்களும் ஒருவேளை அப்படித்தான் இருப்பார்களோ என யூகிப்பத்திலிருந்து தவிர்க்க முடியவில்லை. இதை ஒரு குடியுரிமை மீதான ஆர்வமாக இருக்குமா? அல்லது பின்பற்றுதலின் மீதுள்ள பற்றாகவோ அல்லது அதையும் மீறி நாட்டுப் பற்றாகவோ இருக்குமா?
அந்த ஒட்டுக்கடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு அதற்கு மேல் சாவகாசமாகப் பேச நேரம் இல்லை என நினைக்கிறேன். சட்டென எழுந்து எந்தத் தீர்மானமும் இல்லாதவர்கள் போல களைந்து சென்றனர். திடீரென பாட்டியின் மரணம் மனதைத் தின்றது. 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்று பாட்டி இல்லாத இரண்டாவது தேர்தல் ஆண்டு. பாட்டி என்பவர் மிகக் கச்சிதமான ஒரு கதை மாதிரித்தான் எனக்குள் சேமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்குள் நான் கண்டடைந்த அந்தச் சக்தி விநோதமானது.
ஒருமுறை டிசம்பர் மாத விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போகும்போது தேர்தல் காலமாக இருந்தது. அதிகாலையிலேயே நகரம் முழுக்க பாரிசான் சுவ்ரொட்டிகளைக் கயிற்றில் கட்டி தொங்கவிடத் துவங்கியிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் பட்டு சுவரொட்டிகளில் இருக்கும் தலைவர்களின் முகம் பிரகாசித்தன. தேர்தல் சமயத்தில் பலருக்கு வேலை கிடைத்துவிடுகிறது. இரவு முழுக்க பலர் விழித்திருக்கிறார்கள்.
பேருந்து வந்து நிற்கும்போது அம்மா பாதி உறக்கத்தில் இருந்தார். நான் தான் அவரைத் தட்டி எழுப்பினேன். ஒருவேளை நான் அவருடன் செல்லாமலிருந்தால் அநேகமாக அவர் இடத்தைத் தவறவிடுவது உறுதி. கீழே இறங்கியதும் சுற்றிலும் பார்த்தேன். பாதி உயிரைக் கையில் பிடித்து தவித்துக்கொண்டிருந்தது கோலாலம்பூர். ஆங்காங்கே பத்திரிக்கையை அடுக்கிக் கொண்டிருப்பவர்கள் உட்பட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் தாவி குதித்து வேலை செய்து கொண்டிருந்தனர். வாடகை காரைப் பிடித்து வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம் கொடிகள் படர்ந்திருந்தன. நகரமே ஏதோ ஒரு கொடிக்கு நடுவில் ஒளிந்துகொண்டிருப்பது போன்று அத்தனை கோலாகலம். அவர்களில் யாரையும் அவ்வளவாகத் தெரியவில்லை. பிரதமரின் முகம் மட்டும் பரிச்சியமானவையாக இருந்தது.
“இங்கத்தான் உண்மைலேயே தேர்தல்” அப்படிச் சொல்லும்போது அம்மா என்னை அலட்சியமாகப் பார்த்தார். கட்டாயம் அவர் ஒரு வரலாற்றுக் குறிப்பை எடுத்து விடுவார் என மட்டும் அவரின் முகப்பாவனை காட்டியது. காட்சிகளைச் சட்டென சிலாகித்துவிட்டு அம்மாவைப் பார்த்தேன்.
“முன்னெ கோலாகெட்டில்லே இருக்கும்போது தேர்தல்னா எங்களுக்கு திருவிழா மாதிரி தெரியுமா???” அம்மா கேட்டக் கேள்வியின் வினா தொனி அடங்குவதற்குள் பாட்டி வீடு வந்திருந்தது. பாட்டி காலையிலேயே எழுந்து தோளில் கலர் துண்டைப் போட்டுக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்தார். அன்று அவர் உற்சாகமாக இருந்ததற்கு எங்களின் வருகை காரணமில்லை என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்.
சட்டென அறைக்குள் சென்றவர் கையில் ஒரு காலண்டரை எடுத்துக்கொண்டு வந்தார். அதில் திகதிகளுக்கு சிவப்பு வர்ணத்தில் வட்டமிடப்பட்டிருந்தன.
“என்ன பாட்டி படிக்க ஆரம்பிச்சிட்டிங்களா?” அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை.
“எப்பெ தேர்தல்ன்னு பாருடா” எனச் சொல்லிவிட்டு விரல்களில் ஏதோ கணக்கிடத் துவங்கினார். பாட்டி மாமாவுடன்தான் இருக்கிறார். ஆனால் மாமாவிற்கு அரசியலில் ஈடுபாடும் ஆர்வமும் இல்லை. அவருக்கு எப்பொழுதும் மலேசிய அரசியலின் மீது கடுமையான கோபம் இருக்கிறது. தொலைகாட்சியில்கூட அரசியல் செய்திகளைக் கேட்பதிலிருந்து தவிர்த்துவிடுவார். ஒரு தேசத்திலிருந்து எப்படி எந்தப் பிடிப்பும் இல்லாமல் வெறும் வயிற்று மனிதனாக விலகி வாழமுடியும் என்பதற்கு மாமா ஒரு உதாரணம். அவரிடம் நாடு குறித்த எந்த விழிப்பும் அக்கறையும் இருந்ததில்லை.
நாட்டைப் பற்றியோ வரலாற்றைப் பற்றியோ ஏதாவது ஒரு சொல் பாட்டியிடமிருந்து வெளிப்பட்டால் அன்று முழுவதும் அவருக்குள் தேக்கி வைத்திருக்கும் வெறுப்பையும் அறியாமையையும் ஒரு கருத்தாக்கமாக ஆக்கி அதைக் கேட்பது பிறரின் கடமையைப் போல பிரசங்கம் செய்யத் துவங்கிவிடுவார். அவரைப் போல எல்லோரும் பற்றற்றவர்களாக சம்பாரிப்பதில் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனும் ஒரு அந்தரங்கமான அதிகாரம் அவரிடம் இருக்கிறது. அவருடைய அலட்டல்களைக் கேட்பதைவிட மௌனமாக இருந்துவிடுவது மேல் எனப் பாட்டி நினைத்திருக்கக்கூடும். அப்படி அவர் ஒரு முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில்தான் அவருடைய கலர் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொள்ளும் பழக்கத்திற்கும் ஆளாகியிருப்பார் என அனுமானிக்க முடிகிறது.
பாட்டி பூப்போட்ட சட்டையைத்தான் அணிவார். பிறகு ஒரு வெளுத்துப் போன கைலி. மேலே ஒரு கலர் துண்டை அணிந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவார். அம்பாங் சம்பூரான்( அம்பாங் பகுதியிலுள்ள வசிப்பிடம்) பகுதியிலுள்ள பலரிடம் பாட்டிக்கு நல்ல பழக்கம் இருந்தது. குறிப்பாக மேட்டுப் பகுதியிலுள்ள வீடுகளில் பாட்டியின் வயதை ஒத்தவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களின் வீட்டுப் பக்கமாகச் சென்று அவர்களுடன் நாடு குறித்து உரையாடும் ஒரு பழக்கத்தைப் பாட்டியிடம் காணமுடிந்தது. கலர் துண்டை அணிந்தவுடன் பாட்டியின் உடல்மொழியில் ஒரு கம்பீரத்தையும் வேகத்தையும் தரிசிக்க முடியும். வீட்டை விட்டு வெளியேறும் கணம் அவர் ஒரு விடுதலைக்காகப் போராடுவதைப் போல உணர்கிறார். தன் மகனின் அலட்சியப் போக்குக்கும் அவரின் நாட்டின் மீதான பற்றுக்கும் மத்தியில் ஒரு போர் நிகழ்வதைப் போலவும் அதை முறியடிக்க அவர் போரின் எல்லையில் தன் நண்பர்களைச் சந்தித்து ஆற்றாமையைக் குறைத்துக்கொள்வதைப் போலவும், தினமும் இது வாடிக்கையாக நிகழ்கிறது.
அன்று முழுவதும் பாட்டி எல்லாம் வேலைகளையும் அவசரமாகச் செய்து முடித்தார். அம்மாவிடம்கூட சரியாகப் பேசவில்லை. அவ்வப்போது தன் கலர் துண்டை எடுத்துச் சரிப்படுத்தி வைத்துக்கொண்டார். தேர்தல் வரை நாங்கள் அங்கு இருப்பதாகத் திட்டம். மாமா தேர்தல் முடிந்து போனால்தான் பேருந்துக்கு டிக்கெட் கிடைக்கும் என்று எச்சரித்துவிட்டார். ஆகையால் தினமும் மாலை 5மணிக்கு பாட்டி வீட்டை விட்டு வெளியேறிவிடுவதையும், அப்படி வெளியேறும்போது அவர் நட்வடிக்கைகளில் ஒரு பெரும் மாற்றம் தென்படுவதையும் கவனிக்க முடிந்தது. அது ஒரு போருக்குத் தயாராகும் போர் வீரனின் சாயலை ஒத்திருந்தது. அவருடைய பாவனை போருக்குப் பயந்து வாழும் ஒரு சிலரை உற்சாகப்படுத்தும் விதமாகவும் இருந்தது.
மூன்றுமுறை பாட்டியுடன் அவர் செல்லும் இடங்களுக்கு உடன் சென்றிருக்கிறேன். அவருடைய முக்கிய கவலை தேர்தல் அன்று ஓட்டுப் போட முடியுமா என்பதாகவே இருந்தது. எல்லோரிடமும் அதையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் அவர்களையும் ஓட்டுப் போட உற்சாகப்படுத்தினார்.
“என் பையன் ஓட்டுப் போட விடலைனா, நான் வீட்டெ விட்டுப் போயிருவன்” எனப் புலம்பிக் கொண்டே வந்தார். கடைசிவரை ஓட்டுப் போடுவது குறித்து அவருக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பும் கவலையும் அண்டியிருந்தன. வெகுநாட்கள் சிறைலிருந்து தான் மீட்கப்படும் ஒரு நாளாகவே தேர்தலை அவர் கற்பனை செய்து வைத்திருந்தார். தாத்தா இருந்த காலத்தில் அவர்கள் இருவருமே காலையிலேயே 24 ஆம் நம்பர் பேருந்தைப் பிடித்து ஓட்டுப் போடக் கிளம்பிவிடுவார்களாம். போகும் வழியெல்லாம் தாத்தா மலாயாவுக்கு வந்த கதையைச் சொல்லிக்கொண்டிருப்பார். பற்கள் இல்லாமல் போன அந்த வாயிலிருந்து வெளிவரும் தாத்தாவின் சொற்களுக்கு வீரியம் இருந்ததில் ஆச்சர்யம். அதை அவர் எங்கு வைத்து எப்படிக் கூர்தீட்டி செம்மையாக உச்சரிக்கிறார் என்பதே பெரும் குழப்பம். இயல்பாகவே பற்கள் இல்லாதவர்களின் பேச்சும் சொற்களும் பலவீனமாகத்தான் ஒலிக்கும். ஆனால் தாத்தாவிடம் ஏதோ ஒரு வித்தை இருந்திருக்கிறது. அதை அவர் நாட்டைப் பற்றியும் மலாயாவுக்கு வந்த கதையையும் மட்டும் பேசுவதற்கே செலவழித்தார்.
வீட்டில் அதிகாரத்தை இழந்த பெரியவர்கள் அடுத்ததாக அடையும் ஒரு மனநிலைத்தான் இது எனப் புரிந்துகொள்ள முடிகிறது. தலை எடுத்தல் என்பது குடும்பத்தின் முக்கியமான தலைமுறை அரசியல். வீட்டில் வளரும் ஒரு மகன் அல்லது மகள் அந்தக் குடும்பத்தின் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளும் தருணம் எப்படி நிகழும் என்பது தெரியாது. ஆனால் அது ஒரு பயங்கரமான அதிகார மாற்றம். இத்தனைநாள் தன் கட்டுபாட்டிற்குள் இருந்த குடும்பத்தின் மீதான அதிகாரத்தை ஒருவர் சிறுக சிறுக இழந்து பிறகு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது சம்பவத்தில் தான் அதை முழுமையாக இழந்துவிட்டோம் என உணரும்போது, அவர்கள் பரிதவித்துப் போய்விடுகிறார்கள். அதிகாரம் ஒரு மனிதனை எப்படி இன்னொரு பகுதியில் அவனை பழக்கத்திற்கு ஆளான ஒரு மிருகம் போல வளர்த்திருக்கிறது என்பதற்கு இது போன்ற விசயங்கள் ஆதாரம்.
ஆகையால், பாட்டியைப் போல தாத்தாவைப் போல அதிகாரத்தை முழுமையாக மாமாவிடம் ஒப்படைத்துவிட்டு, பலவீனமடைந்து கிடந்த அவர்களின் ஆளுமையை எப்படி மீட்டெடுப்பது எனத் தெரியாமல் தத்தளிக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த ஒரே இடம், வரலாறும் நாடும்தான். ஒரு வகையினர் தனது இழந்துபோன அதிகாரத்தை இப்படித்தான் கூர்தீட்டிக்கொள்கிறார்கள். கூட்டமாக வந்து குவிக்கப்பட்ட நம்மவர்கள், குடும்பமாகப் பிரிந்து வாழத் துவங்கியதுதான் அடிமை நிலத்திலிருந்து அவர்கள் உருவாக்கிக்கொண்ட அதிகாரங்கள். அதனை இழக்கும்போது மீண்டும் கூட்டமாக வந்து சேர்ந்ததன் வரலாற்றை பற்றி பேசிக்கொள்கிறார்கள். அதிகாரம் உருவானதற்கு அடிநாதமாக இருந்த வந்தேறி சமூகம் சந்தித்த இழப்புகளையும் தவிப்புகளையும் மீட்டுணர்வதன் மூலம் அவர்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள். பாட்டிக்குத் திடீரென முளைத்த நாட்டுப் பற்றுக்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன்.
குடும்பத்தில் எது குறித்தும் முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளான பாட்டி தனக்கிருக்கும் கடைசி உரிமை ஓட்டுப்போடுவதுதான் என அவர் தீர்க்கமாக நம்புகிறார். அதனை இழக்க அவர் தயாராக இல்லை. ஆனால் தன்னுடைய இழந்த அதிகாரத்தைச் சரிக்கட்டத்தான் அவருக்குள் நாட்டுப் பற்று முளைத்துள்ளது என்கிற பிரக்ஞை அவருக்கில்லை. அதை அவர் ஒரு சக்தியாகக் கருதுகிறார். சமூகத்தில் தனக்கிருக்கும் முக்கியத்துவம் அதுதான் என நினைக்கத் துவங்குகிறார். அதன்படி தன் உரையாடல்கள், தன் கவலைகள் என அனைத்தையும் வடிவமைக்கிறார். ஒரு மனிதனுக்குள் உருவாகும் அதிகார மனப்பான்மை அவனை எப்படியெல்லாம் பிரக்ஞைக்கு உட்பட்டும் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டும் இயக்கும் என சமக்காலத்திலேயே கவனிக்க முடிகிறது.
தேர்தல் அன்று பாட்டி பரப்பரப்பாக இருந்தார். காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பவுடர் பூசி முகத்தைப் பொழிவாக்கி அமர்ந்திருந்தார். மாமாவுக்கு அன்று விடுமுறை என்பதால் அவரை எப்படிச் சமாளிப்பது என்பதே அவருக்குக் கவலையாக இருந்திருக்கும். எப்பொழுதோ அவருக்கு வந்த ஓட்டுப் போடுவதற்கான கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு முன்கதவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“எத்தன மணிக்குடா தொறப்பாங்க?”
“எப்படிப் போலாம்? பஸ்ஸு இருக்கா?”
பாட்டி என்னிடம் தொடர்ந்து எதையாவது கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்குப் பதற்றம் உடல் முழுவதும் பரவியிருந்தது. குரலில் நடுக்கமும் கூடியிருந்தது. ஒருவேளை மாமா தன்னைத் தடுத்துவிட்டால் என்ன செய்வதென தெரியாமல் பதறிப்போயிருந்தார். அம்மா என்னிடம் சொல்லி பாட்டியை அழைத்துக் கொண்டு ஓட்டுப் போடும் இடத்திற்குப் போகச் சொன்னார். சட்டென பாட்டியிடன் புது தெம்பு வந்திருந்தது. மாமாவை அம்மா சமாளித்துக்கொள்கிறேன் என உறுதியளித்தார். பாட்டி கலர் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டார். இருவரும் வெளியே வந்ததும், பாட்டி என்னிடம் உறுதியான குரலில் சொன்னார்.
“என்னைக் கூட்டிட்டுப் போக டேக்சி வரும் பாரேன், அங்க போனோன தலைல போட்டுக்க தொப்பி தருவானுங்க. தாத்தா அந்த மாதிரி தொப்பிலாம் நெறையா வச்சிருந்தாரு” சொல்லி முடிப்பதற்குள் அந்தப் பக்கமாகக் கடந்துபோன வாடகை கார் எங்களை இலவசமாக ஏற்றிக்கொண்டு ஓட்டுப் போடும் இடைநிலைப்பள்ளிக்கு விரைந்தது. பாட்டி இறங்கியதும் அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் அவரை சகல மரியாதையுடன் ஓட்டுப் பதிவு செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றனர். பாட்டி நான் உடன் வந்திருப்பதையும் மறந்திருந்தார். 20 நிமிடம் கழித்து பாட்டியை ஒரு மலாய்க்காரர் கைப்பிடித்து அழைத்து வந்தார். பாட்டியின் முகத்தில் நான் அன்றொரு பிரகாசத்தைப் பார்த்தேன். இதற்கு முன் அவர் மீது உருவான அனைத்து புரிதல்களையும் அது களைத்துப் போட்டது போல இருந்தது.
கலர் துண்டை சரிசெய்துவிட்டு பாட்டி என்னிடம் வந்தார். தலையில் அணிந்திருத்த கட்சி கொடியுள்ள தொப்பியைக் காட்டினார். “எப்படியா இருக்கு? உனக்கும் வேணுமா?” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த ஒரு ஆளிடம் தொப்பி வேண்டும் எனும் கூறிய அவரது குரலில் ஓர் அதிகாரத்தைக் காண முடிந்தது.
“டேய் அங்க பாரு கொடியை எப்படிக் கட்டியிருக்காங்கனு” என்று அம்மா கூறும்போதே அவர் கைக்காட்டிய திசையைக் கவனித்தேன். பற்பல வடிவங்களில் கட்டப்பட்டிருந்த கொடிகளில் வெறும் கவர்ச்சி மட்டுமே ஒட்டிக்கொண்டிருப்பதாகத் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.