“எழுத்தாளனை உருவாக்க முடியாது” – மா.இராமையா

‘இம.இராமையா 01லக்கிய குரிசில்’ முனைவர் மா.இராமையா, 1946ஆம் ஆண்டு ‘காதல் பரிசு’ என்ற முதல் கதையை எழுதியதன் வழி மலேசியத் தமிழ்ச் சிறுகதை உலகின் அடியெடுத்து வைத்தவர். இதுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 1000திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் 50க்கும் மேற்பட்ட கவிதைகளும் 12 நாவல்களும் எழுதியுள்ளார். இவர்பெற்ற பரிசுகளின் பட்டியல் மிக நீண்டது. ‘மலேசிய இலக்கிய வரலாறு’ மற்றும் ‘மலேசிய இலக்கியக் களஞ்சியம்’ இவர்  ஆய்வு செய்து நூலாக வெளியிட்டது மலேசிய இலக்கிய உலகில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவருக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் இலக்கியத் துறையில் ‘முனைவர்’பட்டம் வழங்கி கௌரவித்தது. எழுபத்து ஆறு வயது நிரம்பிய இவர் ‘இலக்கிய குரிசில்’எனும் முத்திங்கள் இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.

கேள்வி: மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நீங்கள் இயங்கிய தொடக்கக்காலத்தை நினைவுகூர முடியுமா?

மா.இராமையா: பொதுவாகவே இந்நாட்டில் தமிழைத் தொடர்ந்து பயன்படுத்தவும், அதை வளர்க்கவும் இயலாத சூழல் முன்பு இருந்தது. தமிழகத்திலிருந்து வந்து இங்கு காலூன்றிய சிலர்தான், தமிழையும் இலக்கியத்தையும் கற்றிருந்த காரணத்தால் படைப்பிலக்கியத்தை உருவாக்க ஆர்வம் காட்டினர். இந்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் எழுதத் தொடங்கியது 1946க்குப் பிறகுதான். இவர்களும் மொழியை முழுமையாகத் தெரிந்து எழுதினார்கள் எனக் கூற முடியாது. ஆறாம் ஆண்டு அதையும் மீறி ஏழாம் வகுப்பு படித்தால் ஆசிரியராகி விடலாம். அதற்கு மேல் படிக்க அப்போது வாய்ப்பு இல்லை. அந்தச் சூழலிலும் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க கடுமையாகப் பாடுபட்டனர்.

கேள்வி: அக்காலகட்டப் படைப்பாளிக்கு இலக்கியம் படைக்க எவை முன்னோடியாக இருந்தன?

மா.இராமையா: இந்நாட்டில் எதுவும் இல்லை. அனைத்துமே தமிழகத்திலிருந்து கிடைக்கப் பெற்றவைதான். இலக்கியப் பத்திரிகைகள், நூல்கள் என வாசித்து அந்த வாசனை மாறாமல் இலக்கியம் படைக்கப்பட்டது. தமிழகச்சூழல், அவர்கள் வாழ்வு, அவர்களின் மொழி என எல்லாவிதத்திலும் அந்த வாசனை பரவியிருந்தது. இதை விரும்பாத கோ.சாரங்கபாணியின் துணிச்சலான விமர்சனத்திற்குப் பின், 1950களுக்குப் பிறகு சிறுகதைகளில் மண்ணின் மணம் கமழத் தொடங்கியது.

கேள்வி: மண்ணின் மணம் என நீங்கள் குறிப்பிடுவது தோட்டப்புற வாழ்வையா?

மா.இராமையா: ஆம். தோட்டப்புறச் சூழலைக் கொண்ட கதைகள்தான் பெரும்பாலும் எழுதப்பட்டன. இன்றும்கூட தோட்டப்புறச் சூழலில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் கதைகளில் பழமையான தோட்டப்புறச் சூழலே மீண்டும் மீண்டும் வர்ணிக்கப்படுகின்றன. நமது வாழ்வோடு ஒன்றியது அது.

கேள்வி: 50களில் முக்கிய நகர்ச்சியாக இருந்த கதை வகுப்பில் பங்கெடுத்தீர்கள் அல்லவா?

மா.இராமையா: ஆமாம். அது முக்கியமான வரலாற்று நிகழ்வு. அதன் நோக்கமே எழுத்தாளர்களை உருவாக்குவதுதான். அதற்கு முன்பு தமிழகப் படைப்புகளைப் பிரசுரித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் கந்தசாமி வாத்தியார் என அழைக்கப்பட்ட சுப.நாராயணன் கதை வகுப்பைத் தொடங்கினார். அதில் அதிகமும் தமிழ் ஆசிரியர்கள்தான் பங்கெடுத்தனர். அவர்கள்தான் அதிகமும் எழுதவும் தொடங்கினர். அப்போதெல்லாம் நான் மாணவன். வகுப்புக்குப் பின் அவர் தேர்வும் வைத்தார். சிறந்த கதைகளைத் தேர்வு செய்து அவரே சிலரை மேதை எழுத்தாளர்கள் என பட்டியலிட்டார். இப்படி ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக தமிழ் முரசு நாளிதழும் சிறுகதை போட்டி நடத்தியது. நானும் அதில் கலந்துகொண்டுள்ளேன். கதை வகுப்பில் கலந்துகொண்டவர்களில் பலரும் இறந்துவிட்டனர். அதேபோல கு,அழகிரிசாமி இலக்கிய வட்டத்திலும் கலந்துகொண்ட அனுபவம் இருந்தாலும் அவை நினைவில் இப்போது இல்லை.

 

கேள்வி: அப்போது தொடங்கி உங்களுக்கும் மா.செ.மாயதேவன் அவர்களுக்கும் நட்புண்டு அல்லவா?

மா.இராமையா: தமிழ் முரசில் எழுத்தாளர் பேரவை என தொடங்கினார். அதில் பதிபவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அந்தப் பேரவையில் முதல் நபராகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் மா.செ.மாயதேவன்தான். நான் இருபதாவது நபர் என நினைக்கிறேன். பலரிடமும் எனக்கு அப்போது கடிதத்தொடர்பு ஏற்பட்டது. ஆனால் நிறைந்து நிலைத்து நின்றது மா.செ.மாயதேவனின் நட்புதான். வாரம் ஒரு கடிதம் எங்களுக்குள் பரிமாறிக்கொள்வோம். அவர் அப்போது தைப்பிங்கில் பொண்டோக் தஞ்சோங்கில் இருந்தார். நான் குளுவாங்கில் வேலை செய்தேன்.

அப்போதுதான் அவர் இணைந்து சிறுகதை தொகுப்பு போடுவதைப் பற்றி ஒரு திட்டத்தைக் கூறினார். ஆளுக்கு நான்கு கதைகள் எழுதுதாகத் திட்டம். அவர் எட்டுக் கதைகளையும் தொகுத்து ஈப்போவில் உள்ள ஒரு பதிப்பகத்தில் வழங்கினார். முதலில் புத்தகம் விற்பனையானப்பின் பணம் கொடுத்தால் போதும் என்ற அச்சகத்தினர் நூல் அச்சேறியதும் முழு பணத்தையும் கொடுத்துவிட்டு நூல்களை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். இது எங்கள் இருவரையும் சங்கடமாக்கியது.

மா.செ.மாயதேவன் தன் சேகரிப்பில் கொஞ்சம் பணம் உள்ளதென்றும் என் சார்பாக 120 ரிங்கிட் வழங்கும்படியும் கேட்டார். அப்போது அது பெரிய தொகை. என் சம்பளமே 90 வெள்ளிதான். என் நண்பர் மூலமாக வட்டிக்கு ஒருவரிடம் பணம் வாங்கி அனுப்பினேன். நூல் அச்சானவுடன் எனக்கு 100 பிரதிகள் அனுப்பிவைத்தார். அதில் ஒரு பிரதியையும் நான் விற்கவில்லை. அனைத்தையும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் வாசிக்கக் கொடுத்தேன்.

ஆக! எனக்கு அதில் லாபம் என ஒன்றும் இல்லை. ஆனால் ‘இரத்த தானம்’ என்ற அந்தத் தொகுதிதான் இந்த நாட்டில் முதல் சிறுகதை தொகுப்புக்கான வரலாற்றை சுமந்தது. அது சிறந்த சிறுகதை தொகுப்பென நான் சொல்ல மாட்டேன். நாங்கள் புதிய எழுத்தாளர்கள்தானே. ஆனால் பலரும் தொடர்ந்து சிறுகதை தொகுப்புகளை வெளியிட அது புதிய வாசல்களைத் திறந்துவிட்டது.

 

கேள்வி: தோட்டப்புற மாற்றத்தைப்போல சிறுகதை மொழியிலும் புதுமை ஏற்பட்டுள்ளதைப் பற்றி.

மா.இராமையா: புதுமை செய்துள்ளோம் என நாம் நினைக்கிறோம். எங்கிருந்து வந்தது  இந்தப் புதுமை? நிச்சயம் பழமையில் இருந்துதான். புதுமை என்பதே பழமையின் மறுவடிவம்தான். ஆரம்பத்தில் இந்நாட்டில் தமிழ் போற்றப்பட்டது. இவர்கள் சிறுகதையைப் பற்றியோ கட்டுரையைப் பற்றியோ முறையாக அறிந்தவர்கள் அல்ல. அவர்களின் நோக்கம் முழுவதும் மொழி வளர்ப்புதான். நல்ல தமிழ் மொழியில் எழுத வேண்டும். மக்களுக்கு அது சேர வேண்டும். மக்கள் அதனால் பயன்பெற வேண்டும் என்பதே எழுத்தாளர்களின்  தலையாய எண்ணமாக இருந்தது. இப்படி மொழி, கருத்து, என்பதற்குப் பிறகுதான் வடிவம் நமக்கு வசப்பட்டது.

கேள்வி: எப்படி வசப்பட்டது?

மா.இராமையா: எழுத்தாளனை உருவாக்க முடியாது. எழுத்தாளன் உருவாக வேண்டும்.ம.இராமையா உண்மையான உந்துதலோடும் எண்ணத்தோடும் எழுதும்போது கதை தனக்கான வடிவத்தைத் தேடிக்கொள்ளும். இன்றைய இளம் தலைமுறையினர் பேனா எடுத்தவுடன் எவ்வளவு பணம் கிடைக்கும் என யோசிக்கின்றார்கள்.  நாங்கள் அன்று அப்படி யோசித்திருந்தால், இத்தனை இலக்கியம் படைத்திருக்க முடியாது. இன்று எழுதிய படைப்பு பத்திரிகையில் வெளிவராவிட்டால் பத்திரிகை ஆசிரியருக்குத் தொடர்புகொண்டு தொல்லை கொடுக்கிறார்கள். இல்லாவிட்டால் மிரட்டுகிறார்கள். எங்கள் காலத்தில் அப்படியல்ல. அதற்கேற்ற தரமான பத்திரிகை ஆசிரியர்களும் இருந்தனர்.

கேள்வி: நவீன இலக்கியத்தைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

மா.இராமையா: இப்போது நவீனம்தான் சிக்கலே. இந்த நவீனம் எங்கிருந்து வந்தது? இலக்கணத்தை ஒதுக்கி எழுதுவதா நவீனம்? புதிதாக ஓர் இலக்கியம் உருவாவது தவறில்லை. அதை ஏற்றுக்கொள்வதும்  தவறில்லை. அப்படித்தானே கட்டுரையையும் சிறுகதையையும் நாவலையும் ஏற்றுக்கொண்டோம். 1950களில் உருவகக் கதைகள் என்று பரவலாக எழுதப்பட்டன. இன்று அவை எங்கே? எந்த ஒரு புதிய வரவின் தரமும் காலத்தால் நிர்ணயிக்கப்படும்.

 

கேள்வி: புதுக்கவிதை எழுத நீங்கள் முயன்றதுண்டா?

மா.இராமையா:  கவிதை என்றாலே என் நினைவுக்கு வருவது மரபுக் கவிதைதான். புதுக்கவிதை நல்ல இலக்கியம்தான். அதை தவறான வடிவம் என்று எவரும் கூறவில்லை. ஆனால் அதற்கு ஏன் ‘புதுக்கவிதை’ எனப் பெயரிட வேண்டும்? வேறு பெயரைச் சூட்டி அதை நாம் ஏற்றுக்கொள்ளலாமே. ஒரு சிலரின் ‘உரைவீச்சு’ தரமாக உள்ளது. சிலரது புரியவில்லை. ஆனாலும் அதை நான் வெறுக்கவில்லை. இன்று பலரும் விரும்பிப் படிக்கும் வடிவமாக உரைவீச்சு திகழ்கிறது. அதுபோல பெண்களுக்கு மத்தியிலிருந்த நாவலின் மதிப்பும் மிகவும் குறைந்துவிட்டது.

கேள்வி: எப்படிச் சொல்கிறீர்கள்?

மா.இராமையா: எல்லாவற்றுக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத் திரைதான் காரணம். இவற்றைப் பார்த்து குட்டிச்சுவராகப் போவது நமது பெண்கள்தான். அதில் என்ன இருக்கிறது. நல்ல மொழியோ, கலாசாரமோ, பண்பாடோ அதில் காட்டப்படுவதில்லை. வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தயாரிக்கப்படும் இவற்றை எதிர்த்து இதுவரை எந்தப் பத்திரிகையும்  எழுதியதில்லை. எழுதினாலும் வெளியிடமாட்டார்கள். விளம்பரப் பணம் போய்விடும் என்ற பயம் அவர்களுக்கு. முதுகில் எலும்பு இருக்கிறதா இல்லையா எனத் தெரியவில்லை.

கேள்வி: இன்றைய நிலையில் உங்கள் எழுத்தார்வம் எப்படி உள்ளது?

மா.இராமையா: முன்புபோல் இல்லை. முன்பு  நேரங்காலம் பார்ப்பதில்லை. சனிக்கிழமை எழுத ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் கடித உரையில் படைப்பைச் சொருகி வைத்தால்தான் உறக்கம் வரும். இன்று நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. இந்தச் சோர்வுக்கு இன்னொரு காரணம் இளைய தலைமுறையினர்தான். போட்டிகள் நடத்துபவர்கள் மூத்த எழுத்தாளர்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என வயதுக் கட்டுப்பாடு விதிப்பதே எழுதுவதற்கு பெரும் தடையாக உள்ளது. எனது தொய்வுக்கு அதுதான் முதல் காரணம். போட்டி என்றால் அது எல்லோருக்கும் பொதுவானது. இளைய தலைமுறையினரோ மூத்தவர்களோ தரமான படைப்புகளுக்குத்தானே பரிசு. அதற்குப் பெயர்தான் போட்டி. மூத்தவர்களை ஒதுக்கி வைப்பது போட்டியாகாது. புதுமை தேவைதான். நாங்கள் வண்டிப்பாதை போட்டிருக்காவிட்டால் இன்று எப்படி நெடுஞ்சாலை உருவாகியிருக்கும்?

கேள்வி: படைப்பிலக்கியத்தில் மொழிக்கலப்பு பற்றிய சர்ச்சை நம் நாட்டில் இப்போதும் உள்ளது. அது குறித்து உங்கள் கருத்தென்ன?

மா.இராமையா: எனக்கு அதில் உடன்பாடில்லை. எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் மொழிக் கலப்போடுதான் எழுதுகின்றனர். தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் தமிழை அழிப்பவர்கள். அவர்களுக்கு மொழியைப் பற்றிய அக்கறை இல்லை. நாம் ஏன் அவற்றைப் பின்பற்ற வேண்டும்? இன்று ஈழத்தமிழர்கள் தங்களுக்கென்று தனி மொழியோடு  இலக்கியம் படைக்கவில்லையா? அதேபோல நமக்கென்று உள்ள மொழி அமைப்பை நாம் ஏன்  களங்கப்படுத்தவேண்டும்? நாம் ஒரு மொழியின் மரபை உருவாக்க வேண்டும். ஊடகங்களுக்கு இதில் முக்கிய பங்குண்டு. ஆனால் தொலைக்காட்சியில் வரும் அறிவிப்பாளர்களின் அலங்கோலமான சிகையைப் போலவே அவலட்சணமாக உள்ளது அவர்களின் தமிழும்.

கேள்வி: ‘வாசகர் வட்டம் இலக்கியத்திற்கு ஒன்றும் செய்யவில்லை’ என சில ஆண்டுகளுக்கு முந்தைய உங்கள் விமர்சனத்தால் சர்ச்சை எழுந்தது. இன்று என்ன நினைக்கிறீர்கள்.

மா.இராமையா: இன்றும் அதைத்தான் கூறுகிறேன். இவர்கள் இலக்கியத்திற்கு என்ன நன்மை செய்கிறார்கள்?  இவை உண்மையாக இயங்கியிருந்தால் இன்று ஒவ்வொரு பத்திரிகையும் லட்சக்கணக்கில் விற்பனையாக வேண்டும். வெறுமனே கூட்டம் கூடிக் கலைகிறார்கள். பிற இனம் இப்படியா இலக்கியம் வளர்க்கிறது. அதற்கு சில பத்திரிகைகளும் துணை போகின்றன. இங்கு யார்  உண்மையில் சேவை செய்கிறார்கள்? ஒரு சம்பவம் நடந்தால் உடனே அறிக்கைவிட்டு, தன் புகைப்படம் பத்திரிகையில் வருவதை மட்டும் உறுதி செய்கிறார்கள்.

கேள்வி: சிலர் ‘கலை’ என்பது ‘கலைக்காகவே’ என்கின்றனர். சிலர், ‘கலை’ என்பது மக்களுக்காக என்கிறார்கள். உங்கள் படைப்புகள் எவ்வகை?

மா.இராமையா: இலக்கியம்  என்றாலே அதில்  நிச்சயம் கருத்துச் சொல்லவேண்டிய கட்டுப்பாடு எழுத்தாளனுக்கு உண்டு. வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டுமே இலக்கியம் இருக்கக்கூடாது. டாக்டர் மு.வரதராசனின் புத்தகங்களை எடுத்துக்கொண்டால் அவை இன்றைக்கும் படிக்கக்கூடிய அம்சங்கள் நிரம்பியவை. ஒருவன் ‘அல்லி’ புத்தகத்தைப் படித்துவிட்டால் அவன் தவறு செய்யப் பயப்படுவான். ஆக, ஒரு படைப்பு மக்களுக்காகத்தான் உருவாக்கப்படுகிறது. அப்படிப்பட்ட கருத்துகளைப் பூடகமாக வைத்து படைப்பது எல்லா வாசகர்களையும் சென்றடையாது. என்னைப் பொறுத்தவரை கதை ஒரே முறையில் படித்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

கேள்வி: உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றிக் கூறுங்கள்.

மா.இராமையா: நான் பேனாவைக் கையில் எடுத்த நாளில் இருந்து அனைத்து பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படித்தேன். அதன்பின்னர், திராவிட எழுத்தாளர்களின் படைப்புகள் என்னைப் பாதித்தன. அதிகமாக என்னை சிந்திக்கச் செய்தது து.வி.நாராயணன் என்பவரின் ‘அழியட்டும் திராவிடம்’ எனும் மிகச் சிறிய புத்தகம்தான். மூட நம்பிக்கையை ஒழிக்காவிட்டால் திராவிடம் ஒழியட்டும் எனும் அவரின் சிந்தனை நல்ல தமிழ் நடையில் எழுதப்பட்டிருந்தது. அதன் பிறகு, அண்ணாவின் எழுத்து அதிகம் கவர்ந்தது. பின்னர் குமுதம், விகடன், போன்ற அக்ரகாரத்து எழுத்துகளைப் புறக்கணிக்கத் தொடங்கினேன்.

கேள்வி: சிறுகதைகளில் எவரை ஆழ்ந்து படித்தீர்கள்?

ம.இராமையா 02மா.இராமையா: குறிப்பிட்டு எவரும் இல்லை. எவருடைய நடையையும் பின்பற்றக்கூடாது என நினைத்தேன். எனக்கான தனிநடையை உருவாக்குவதே என் நோக்கமாக இருந்தது. புதுமைப்பித்தனையும் மௌனியையும்கூட கொஞ்சம்தான் படித்தேன். நமது சிறுகதைகளில்தான்  நமது வரலாறு உண்டு. எனது கதைகளும் அப்படித்தான். எனக்கான தனி நடையில் நேரடியாக வாசகனிடம் பேசுகிறேன். ஆனால்,  இன்று எழுதப்படும் கதைகளில் உள்ள கதாபாத்திரங்களின் பெயர்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. கதாபாத்திரங்களுக்குக்கூடத் தமிழ்ப் பெயரை வைப்பதை நமது எழுத்தாளர்கள் விரும்புவதில்லை.

 

கேள்வி: இன்றுள்ள நமது தினசரிகளில் பிரசுரமாகும் கதைகளின் தரம் பற்றி உங்கள் பார்வை?

மா.இராமையா: அப்போதெல்லாம் தரமான படைப்பு, தரமற்றப் படைப்பு என்ற பேதம் இல்லை. காரணம் அன்று தரமான எழுத்தாளர்கள் மட்டுமே இருந்தனர். சி.கமலநாதன், சி.அன்பரசன், மீனாட்சி, மு.தனபாக்கியம், மா.செ.மாயதேவன், மு.அப்துல் லத்தீப், நா.செங்குட்டுவன், நா.வரதராசன் இன்னும் சிலர். ஆனால் தமிழ் இதழ்களில் இன்றுள்ள எழுத்தின் வடிவம்கூட சிதைந்து ஓவிய எழுத்துகள் என அலங்கோலமாகக் காணப்படுகிறது. தமிழுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள எழுத்தின் வடிவத்தை  சிதைப்பதற்கு  நமக்கென்ன உரிமையுண்டு? இச்சிதைவுகள் எல்லாம் தமிழ் நாட்டைப் பின்பற்றுவதால் ஏற்படும் பிரதிபலிப்பு.

கேள்வி: அன்றைய எழுத்தாளர்களுக்கு, இன்றைய எழுத்தாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளிக்கு எது காரணம்? இளம் எழுத்தாளர்கள் மூத்தவர்களை அடையாளம் காண்பதில்லை. அதுபோல மூத்த எழுத்தாளர் புதியதாய் எழுதுபவர்களை அங்கீகரிப்பதில்லை என விமர்சிக்கப்படுவதைப் பற்றிக் கூறுங்கள்.

மா.இராமையா: இந்தக் கூற்று தவறானது. இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் அனுபவமிக்க எழுத்தாளர்களை அணுகிச் சென்று ஆலோசனைகளைப் பெறும் அளவிற்கு மனப்பக்குவத்தைப் பெறவில்லை. எழுத்துத் துறைக்கு வந்தபின் ‘தான் பெரியவன்’ என்ற எண்ணத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள். என் இளமைக் காலத்தில் சக எழுத்தாளர்களுடனான கலந்துரையாடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இடைவெளிக்கு இளம்  எழுத்தாளர்களே காரணம்.

 

சந்திப்பு: ம.நவீன்

புகைப்படங்கள் : சரவண தீர்த்தா

 

2 comments for ““எழுத்தாளனை உருவாக்க முடியாது” – மா.இராமையா

  1. SP Panneerselvam
    June 5, 2018 at 8:05 pm

    This is a very well planned interview. Best wishes, Regards
    Anbudan
    Se Pa Panneerselvam, singapore

  2. பொன் கோகிலம்
    June 7, 2018 at 12:02 pm

    கவிதை என்றாலே என் நினைவுக்கு வருவது மரபுக் கவிதைதான்.
    இந்த கூற்று என் தந்தையை நினைவுப்படுத்தியது. சிறந்த நேர்காணல்.

    பொன் கோகிலம்
    ??

Leave a Reply to பொன் கோகிலம் Cancel reply