எல்லாமும் சரிதான்

dr siva 02பொட்டுப்பொட்டாகப் பனித்துளிபோல் நெற்றியில் வியர்வை துளிகள் பூத்திருந்தன. “காய்ச்ச… இப்பதான் அடங்கி வேர்க்குது டாக்டர்…” மடியில் கிடந்த குழந்தையை மார்பில் அணைத்தபடி பதற்றம் கலந்த கவலையை டிரேகன் ராஜாவின் முகத்தில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சாதாரண சளிக்காய்ச்சலுக்கெல்லாம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் டிரேகனைப் பார்க்கும்போதெல்லாம் இவன் ஏன் இங்கே வர்றான் என்றுதான் நினைப்பார் டத்தோ டாக்டர் கந்தையா.

அவன் கிளினிக் வருவதை விரும்பியவரில்லை அவர். டிராகன் ராஜாவின் தோற்றப் பொலிவு அப்படி. அவன் மருத்துவமனைக்குள் நுழையும்போதே அவனை நின்று நிதானித்து ஒரு சில கணங்களாவது பார்த்து வியந்து வாய்க்குள்ளாகச் சிரித்துவிட்டு நகராத ஜீவன்கள் இருக்கமாட்டார்கள்.

வெங்கலச் செம்பைக் கவிழ்த்து வைத்த மாதிரி அறவே உரோமம் அற்ற கபாலம். காதுகளில் மினுக்கும் தோடு. கட்டைவிரல் தடிமனில் ஒரு தங்கச் சங்கிலி, உருத்திராட்ச மாலை, ஸ்படிக மாலை எல்லாம் மார்பை ஒட்டியும் சட்டைக்கு வெளியிலுமாக தொங்கிக்கொண்டிருக்கும். அத்தனை விரல்களிலும் மோதிரங்கள். புதருக்குள் பதுங்கியிருக்கும் வெள்ளை முயல் தலையை நீட்டுவதுபோல சிரிக்கும்போது கறுகறுவென்று தாடி மீசைக்குள்ளிருந்து தெரியும் பற்கள். அடர்ந்த புருவங்களிடையே பரந்த நெற்றிப் பிரதேசத்தின் அடிவாரத்தில் புருவங்களை இணைக்கும் அரக்கு குங்குமம். முழங்கை மறைத்து முழங்கால் வரையில் தொங்கும் கறுப்புச் சட்டையில் பெரிய டாலர் பொத்தான்கள். ஆறடி உயரம் அதற்கேற்ற உடம்பு. இவன் என்ன ரௌடியா, கோமாளியா எனக் குழம்ப வைக்கும்.

“டெங்கி காய்ச்சலா இருந்தாலும் இருக்கும். வார்ட்டுல அட்மிட் பண்ணுறேன். இங்க ஃபீஸ் கொஞ்சம் அதிகம். யூனிவர்சிட்டி ஹாஸ்பிட்டலுக்கு சூரா தரவா?” டாக்டரின் குரலில் தயக்கம் தெரிந்தது டிராகனுக்கு.

“டத்தோ… காசப் பத்தி கவலைப்படாதீங்க. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் பிள்ளைக்கு இல்லாத காசா? என் உசிரே இவதாங்க. இங்கயே சேர்த்துடுங்க. நோ ப்ராபளம்.”
டாக்டரின் கண்களில் இன்னமும் தயக்கம் தெரிந்தது.

“ஹங்காங்கில் இருந்து வரேன் டாக்டர். கெந்திங் பாஸ் டத்தோ ஶ்ரீக்கு பாடிகாட்டா போயிருந்தேன். நேத்து நைட்டு லில்லி போன் அடிச்சா. புள்ளைக்கு காய்ச்சல்னு. பாஸ்கிட்ட சொல்லிட்டு காலையில ஃபஸ்ட் ஃபிளைட் எடுத்து வந்திருக்கேன்.” பணம் ஒரு பொருட்டில்லை என்பதை இப்படித்தான் சொல்ல முடிந்தது டிரேகனுக்கு.

“நைனா பயமா இருக்கு” என்றவாறு ட்ராகனின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டது குழந்தை. “ஏன்டா கண்ணு பயப்படுற? நைனாதான் வந்துட்டேன்ல,” என்று சமாதானப்படுத்தியவாறே அவளது இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டார். “நர்ஸ் அட்மிஷன் போடுங்க. கிட்ஸ் வார்ட்,” என்றவாறு அவள் நீட்டிய தாள்களில் டாக்டர் எழுதலானார்.

“ஐஸ்வரியா. நான்கு வயது. அப்பா பெயர்?” டிரேகனின் முகத்தைப் பார்த்தார்.

“டிரேகன்… உன் ஐசியில டிரேகன்னா இருக்கு?” கேள்வியில் கொஞ்சம் கிண்டல் தொனித்தது. டிரேகன் அதை புரிந்துகொண்டான். நாகராஜுன்னு எழுதுங்க. இருபது வருஷம் முன்னாடி சேவல் கழுத்தை அறுத்து ரத்தம் தொட்டு வச்சி சூடம் காட்டி கேங்குல சேக்கும்போது வச்ச பேரு டிராகன். நாகமுன்னாலும் டிராகன்னாலும் சீனத்துல ஒன்னுதான் டாக்டர்.” டாக்டரின் முகம் லேசாக வெளிறியது.

பத்து நாட்களும் காலையிலும் மாலையிலும் ஐஸ்வரியாவை வார்டில் பார்க்க வரும்போதெல்லாம் டிராகனைப் பார்த்து பேசுவதில் அன்பும் அக்கறையும் காட்டினார் டாக்டர். எப்பவும் கடுகடுவென்று இருக்கும் அவர் முகத்தின் இறுக்கம் டிராகனைப் பார்க்கும் போதெல்லாம் இளகி மலர்வது தாதிகளுக்குமே வியப்பாகத்தான் இருந்தது. தன் மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த மஞ்சள், சிவப்பு, கறுப்பு கயிறுகளின் மகிமை, எந்தக் கோயிலில் எந்த மாதிரியான பூஜைகள் செய்து அவை கட்டப்பட்டிருக்கின்றன, அவை எப்படியெல்லாம் தன்னைக் காத்திருக்கின்றன என்று அவன் விலாவரியாகச் சொல்லும்போது தான் அடையும் வியப்பையும் மகிழ்ச்சியையும் காட்டி அவனை அவர் பாராட்டுவது டிராகனுக்கு மேலும் உற்சாகத்தைத் தரும்.

நடுச்சாமத்தில் சுடுகாட்டில் அவன் செய்த பூஜைகளைக் கேட்டு அவர் கண்களில் தெரிந்த அச்சம் “ஒகே டிரேகன் வா, கீழே என் அறைக்குச் சென்று பேசுவோம்,” என்று இழுத்துச்சென்றது.

ஒருநாள் அவர் டிராகனிடம் “நீ எப்படிப்பா கேங்கில சேர்ந்த,” எனக் கேட்டு வைத்தார்.

“உங்கப்பா கவர்மெண்டுல பெரிய லெவல்ல வேல செஞ்சிருப்பாரு. உங்கள நல்லாப் படிக்க வச்சி டாக்டர் ஆக்கிட்டாரு. என் அப்பாவும் கவர்மெண்டுலதான் இருந்தாரு. ஆனா என்னைப் படிக்க வைக்கலயே என்ன பன்னுறது?”

“கவர்மெண்டுலயா இருந்தாரு?”

“ஆமாமா… சுங்கை பூலோ ஜெயில்ல கவர்மெண்ட் சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு. என்னை வளர்த்தது எங்க அம்மாதான்.” அறைக்கு வெளியே இந்த சிடுமூஞ்சி டாக்டரயும் இந்த ஆளு சிரிக்க வைக்கிறானே என்று வியப்பார்கள் தாதியர்கள்.

“நா சின்ன வயசுல எலும்பும் தோலுமாதான் இருப்பேன். பாதி நாள் சீக்குல கிடப்பேன். அம்மா ஆசுபத்திரியில கிளீனர் வேல பார்த்துச்சி. ஸ்கூலுக்குப் போறது ரொம்பக் குறைவு. ஆனா ஸ்கூலுக்குப் போனா நான்தான் ஹீரோ. எவனையும் துணிஞ்சி அடிப்பேன். பயங்கறதே இல்ல. என்னை ஒரு தடவ பெரிய வாத்தியார் பையன் கேலி பண்ணுனான். நாக்காலிய தூக்கி ஒரே அடிதான். மூஞ்ச பேத்துட்டேன். ஸ்கூலே எனக்கு அடங்கிடுச்சி. எங்க அப்பா பேர கேட்டுட்டு பெரிய வாத்தியாரு ஜேம் ஆயிட்டாரு. அதான் சார். நம்மள பாத்து எவனும் பயப்படனுமுன்னா முத அடி நம்மக்கிட்டேருந்து வரணும்.”

டாக்டர் அவனைத் தயக்கத்துடன் பார்த்தார்.

“நான் கெட்டவன்தான் டாக்டர். இப்ப திருந்தி நல்லவனா இருக்கேன். ஒரு உண்மையdr siva 01 சொல்லுறேன். எனக்கு ஹார்ட்டுல ஓட்ட இருக்கு. ஆஸ்துமா இருக்கு. ஒரு கிட்னிதான் வேல செய்யுது. ஒரு சண்டையில் படக்கூடாத எடத்துல அடிப்பட்டிருச்சி. லில்லி எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கா. படிப்பு ஏறல. தகிரியம் ஒன்னுதான் இருக்கு. ரொம்ப ராங்கி பண்ணுவேன். பணம் கொடுத்து அதோ அவன அடிச்சிட்டு வான்னா யாரா இருந்தாலும் அடிச்சிட்டு வந்திடுவேன். அதுவே என் பொழப்பா ஆயிடுச்சி. அம்மா சாவும்போது அப்பனப்போல இருக்காதடான்னு சொல்லிட்டு போச்சி. டக்குனு மாறுனேன். பெரிய தலை டத்தோ ஶ்ரீ லிங் கூப்பிட்டாரு. கேங்க விட்டேன். செக்கியூரிட்டி செர்விஸ், பாடிகாட் சப்ளை, நெகிரியில இருக்குற பன்றி பண்ணையில போயி புரொட்டெக்‌ஷன் பண்ணி வசூல் பண்ணிட்டு வர்றதுன்னு வண்டி ஓடுது. எதுவும் போலீஸ், கீலிஸ்னா டத்தோ ஶ்ரீ கவனிச்சுக்குவாரு. “

இருவருக்கும் நெருக்கம் அந்தச் சொற்ப நாட்களிலேயே அதிகமானது. ஐஸ்வரியாவின் மொத்த ஆஸ்பத்திரி கட்டணத்தையும் டாக்டரே கட்டினார். அவரது இந்த கருணையைக் கண்டு ட்ராகன் மிகவும் நெகிழ்ந்தபோது, “நாளைக்கு நைட்டு உனக்கு ஹில்டன்ல டின்னர். ஒகெயா?” என்றார் டாக்டர்.

எதிரே மேசை நிறைந்த தட்டுகளும் தட்டு நிறைந்த உணவுகளையும் பார்த்து வியந்த ட்ராகன், “டாக்டர் எனக்கு சுகர் இருக்கு. இவ்வளவும் சாப்பிட்டா என்னாவது?”என இரு கைகளையும் மேலே தூக்கி சரணடைபவனைப் போல் சொன்னான்.

“பரவாயில்லப்பா அது வேணாம்னா ஒகெ. கொஞ்சமா ட்ரிங்க்ஸ் சாப்பிடு,” என அவனது கோப்பைகளில் விஸ்கியை ஊற்றி ஐஸ்கட்டிகளைப் போட்டார். தனது அனுபவத்தில் டிரேகன் இப்படிப் பலபேரைப் பார்த்திருக்கிறான். தன்னால் அவருக்கு ஏதோ காரியம் ஆக வேண்டி இருப்பதை அவனால் உணர முடிந்தது. ஆனால் அதை அப்பட்டமாக வெளிக்காட்டிக்கொள்வது தொழில் தர்மமல்ல. “நீங்க எவ்வளோ பெரிய டத்தோ. என்னோட உக்காந்து ஒன்னா ட்ரிங்க்ஸ் சாப்பிடுறீங்களே,” என்று இழுத்தான்.

“தண்ணி அடிக்கும்போதும் சுடுகாட்டிலும் எல்லாரும் சமம் மேன். தண்ணி உள்ள இறங்கிட்டா சுதி ஏறிடிச்சுனா பெரிய மனுஷன், சின்ன மனுஷன் எல்லாம் ஒரே லெவலுக்கு வந்துடுவானுங்க,” சொல்லிவிட்டுச் சிரித்தார் டாக்டர்.

விஸ்கியை உள்ளிழுத்தவாரே டாக்டரைப் பார்த்தான் டிராகன். முடி களைந்திருந்தது. சட்டை பொத்தான்களை கழற்றிவிட்டுக்கொண்டார். ஏர்கண்டிஷனிலும் அவருக்கு வியர்த்திருந்தது.

“சொல்லுங்க டத்தோ,” என்றான்.

“சொல்றேன். சொல்றேன் கொஞ்சம் டைம் கொடு,” என்றார்.

எங்கே எப்படி ஆரம்பிப்பது என்பதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது அவருக்கு. கிளாஸில் மீண்டும் விஸ்கியை நிரப்பினார்.

“டிராகன் நீ எனக்கு ஒரு உதவி செய்யனும்.”

“சொல்லுங்க டத்தோ செய்யுறேன்,” என்றான்.

“எனக்கு நீ டிடேக்டிவ் வேலை செய்யனும்.”

“அதுக்கென்ன… செஞ்சா போச்சி.”

“நேரடியா சொல்லிடுறேனே. என் வைஃப் நேசமலர். அவங்க எங்கே போறாங்க. என்ன செய்யுறாங்க, யார சந்திக்கிறாங்க, எல்லா டீடெய்ல்சும் கண்டுபிடிச்சி சொல்லனும்.”

தலையை ஆட்டியவாரே “பிரச்சன இல்ல. செஞ்சிடுறேன் டத்தோ,” என்றான்.

“ஏன்னு கேட்கல நீ. அதையும் சொல்றேன்.” இரண்டு மிடறு குடித்துவிட்டு தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டார். “இன்னும் ஊத்திக்கப்பா,” என பாட்டிலைக் காட்டினார். எங்கே அவன் அதிகமாகக் குடித்துவிட்டால் தான் சொல்ல வந்தது அவனுக்குப் புரியாமல் போய்விடுமோ என்ற எண்ணமும் அவருக்குள் ஓடியதால் பாட்டிலை எடுத்து தன்னருகில் வைத்துக்கொண்டார்.

“கல்யாணம் பண்ணி முப்பது வருஷமாச்சி. புள்ள இல்ல. அஞ்சி வருஷம் முன்னால எனக்கும் என் பிலிப்பினோ நர்ஸ் ஒருத்திக்கும் கனெக்‌ஷன் உண்டாயிருச்சி. அவ என்னமோ தந்திரம் மந்திரம் பண்ணி என்னை வளைச்சி போட்டுட்டா.”

“பண்ணுவாளுங்க பண்ணுவாளுங்க. இந்த பிலிப்பினோகாரிங்க பொழப்பே இப்படித்தான்.”

“அதனாலதான் என் வைஃப் கோபமா பிரிஞ்சிட்டா. சொத்தெல்லாம் வேற அவ பேருல இருக்குப்பா. ரொம்பவும் செலவு பண்ணுறாங்கன்னு அக்காவுண்டன் சொல்றாரு.”

“வேற யாரு மேலயாவது உங்களுக்கு டவுட்டு இருக்கா டாக்டர்?”

“இருக்கு இருக்கு. லாயர் சிவபால சுந்தரமுன்னு ஒருத்தன் இருக்கான். படிக்கிற காலத்துல இருந்து அவங்கமேல அவனுக்கு ஒரு கண்ணு. நேசமலர் அப்பா ஒரு மில்லியனேர். அவனோ ஒரு பிச்சைக்காரனே. நான் ரிச் ஃபேமலி. எனக்குப் பொண்ண கொடுத்தாரு. அதுல அவனுக்கு ஆத்திரமய்யா. ஒருவேளை அவங்கிட்ட இவ ….” பேச முடியாமல் இருமினார்.

விஷயத்தை புரிந்துகொண்டான் டிராகன். ஆனாலும் பேச்சு தொடர்ந்தது. நேசமலர்மீது தான் கொண்டிருந்த அன்பைப்பற்றிப் பேசிக்கொண்டே போனார். எங்கே அவளது சொத்துக்காகத்தான் தான் இதைச் செய்வதாக அவன் நினைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாகப் பேசினார். “டிராகன் நீ குடிச்சிருக்க. என் டிரைவர உன்ன வீட்டுல விடச்சொல்லுறேன். பத்திரமா போ,” என்று கார் பார்க் வரையில் வந்து விடைகொடுத்து அனுப்பினார் டத்தோ டாக்டர் கந்தையா.

***

dr sivaஇன்றும் அறைக்குள் இருவரைத் தவிர வேறு யாருமில்லை. மேசையின் மீது உணவு குறைவாகவும் விஸ்கி, ரம், வோட்கா என மதுவகைகள் அதிகமாகவும் இருந்தன. இந்த மூன்று மாத இடைவெளியில் டாக்டர் மிகவும் சோர்ந்து போயிருந்ததுபோல் தோன்றியது டிராகனுக்கு.

“டாக்டர் நான் குடிச்சா ரொம்ப உளறுவேன். கண்டதையெல்லாம் சொல்லிடுவேன். ரொம்ப ஊத்தாதிங்க ப்ளீஸ்,” கெஞ்சுவதுபோல டிராகன் சொன்னது உண்மையா, நடிப்பா என்று அவருக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை.

“நீ குடிச்சாத்தான் உண்மையச் சொல்லுவேன்னா… குடிய்யா குடி. நிறையவே குடி. நான் குடிச்சாதான் நீ சொல்ற உண்மைய ஏத்துக்குவேன். எதுவானாலும் சொல்லுமேன்.” எதனுடனோ எதையோ எதோ ஒரு விகிதத்தில் கலந்து குடித்துக்கொண்டே இருந்தார் டாக்டர்.

“இப்ப சொல்லு டிரேகன். கோ ஆன். ஐ எம் ரெடி.”

“சத்தியமா சொல்றேன் டத்தோ. நீங்க நம்பனும். மேடம் ரொம்ப நல்லவங்க. காலையில வீட்டுல பூஜை. அப்புறம் கோவில்ல பூஜை. அப்புறம் சிவானந்தா ஆசிரமம். ஹோம். இப்படித்தான் தினமும். இதுதான் உண்மை. அவங்களப்போயி சந்தேகப்படுறீங்களே டத்தோ,” அவர் குடிக்கக் கலந்து வைத்திருந்ததை எடுத்துக்  குடித்தான் ட்ராகன். எந்தவித சலனமும் இல்லாத முகத்தோடு டாக்டர் தனக்கான காக்டெய்லை வேறொரு கிளாஸில் கலந்துகொண்டார்.

கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில்ல சங்காபிஷேகம் செய்யிறாங்க. சிவானந்தா ஹோம்ல இருக்குற புள்ளைங்களுக்கு எல்லாம் இவங்கதான் மம்மி. அவங்கள வாட்ச் பண்ணுன பாய்ஸ் சொன்னாங்க. மேடம் தங்கமானவங்க.”

“ஹ்ம்.சொல்லு மேல சொல்லு.”

அவனது முகத்தைப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டே பேசினார் டாக்டர். கண்கள் கிளாசில் இருந்த திரவத்திலேயே இருந்தது.

“மேடம் அந்த லாயர பாப்பாங்க. பாவம் அந்த ஆளு சீக்காலி. அவங்களுக்குள்ள ஏதும் இல்ல டாக்டர்.”

டாக்டரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

“சொல்ரேன்னு கோவிச்சிக்காதீங்க. பிலிப்பினோகாரிய விட்டுட்டு மேடம்கிட்ட மன்னிப்புக்கேட்டு போய் சேர்ந்துக்குங்க.”

இப்போது டிராகன் பாட்டிலில் உள்ளதை கிளாசில் ஊற்ற முடியாமல் தடுமாறி மேலும் கீழுமாக சிந்திக்கொண்டான். “இப்ப நான் என் வாழ்க்கைய சொல்றேன் கேளுங்க,” என்றான். இப்போதுதான் அவர் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தார். கடகடவென இரண்டு மிடறு குடித்துவிட்டு கிளாஸை மேசையில் ஓங்கி அடிப்பதுபோல வைத்தான் டிராகன்.

“என் குழந்தைய நீங்கதான் காப்பாத்துனீங்க. உங்ககிட்ட உண்மையா இருப்பேன்.  என் மகதான் என் உசுரு. உசிர காப்பாத்திட்டிங்க. எனக்கு ஒரு சண்டையில் அடிபட்டு எல்லாமே போச்சுனு சொன்னேன் இல்லையா? அத லில்லிகிட்ட சொல்லாமலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பெரிய துரோகம்,” வாயையும் மூக்கையும் அழுத்தி துடைத்துக்கொண்டான். “அவ ஏத்துகிட்டா. பத்து வருஷம் கழிச்சி ஐஸ் பொறந்தா. நான் ஏத்துக்கிட்டேன். ரைட்?” எந்தச் சலனமும் இல்லாமல் டாக்டர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். நாற்காலியை விட்டெழுந்து தள்ளாடியவாறு தொப்பென்று தரையில் அமர்ந்துகொண்டான். மெல்ல நகர்ந்து சுவரில் சாய்ந்துகொண்டான். அவனையே பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் எழுந்து வந்து அவனெதிரில் தரையில் அமர்ந்துகொண்டார். அவனது கரங்களைப் பற்றிக்கொண்டார்.

“அவகிட்ட உண்மைய சொல்லாதது தப்புத்தானே டாக்டர்?” என்று சொன்னான். மனசுக்குள் உங்ககிட்ட உண்மையச் சொல்லுறதும் தப்புத்தானே என நினைத்துக்கொண்டான்.

“எல்லாமும் சரிதான் டாக்டர்!” என்று சமாதானமாகச் சொல்லிவிட்டு எழுந்துகொண்டான்.

5 comments for “எல்லாமும் சரிதான்

 1. June 5, 2018 at 9:06 am

  டாக்டர் சண்முகசிவாவின் எல்லாமும் சரிதான் கதையை அதிகாலையில் படித்தேன். அது என் இயல்புக்கு மாறான வேளை. காலை 8.30 மணிதான் என் இயல்பு நேரம். ஆனால் இன்று வெகு சீக்கிரம் படுக்கையை நிராகரித்தது உடல். ஒருகால் அது இக்கதையை வாசிக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தால் இருக்கலாம்.

  டாக்டர் வெகு நாட்களுக்குப் பிறகு எழுதிய கதை இது. ஆனாலும் அவரின் எழுத்து நடை முன்பைப்போலவே சிக்கலில்லாமல் கூடி வந்திருக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் அங்கதத்தையும், தீவிரத்தையும் நான் ரசித்து வாசித்தேன். டிரேகன் உள்வாங்கிக் கொள்ளமாட்டான் என்பதற்காக டத்தோ டாக்டர் விஸ்கி புட்டியை தன் பக்கம் நகர்த்திக் கொண்டதும், தன் மனைவியை புலனாய்வு செய்யும்படி டிரேகனை ரகசியப் பணிக்கு அமர்த்தியபோதும் அங்கதமும் சீரியஸ்நஸ்ஸும் கொஞ்சம் அழுத்தமாக உணர வைத்திருக்கிறார். அதைவிட முரண் டிரேகன் தன் மனைவி மாற்றானுக்குக் குழந்தை பெற்றுக் கொடுத்ததைச் சொல்லி டாக்டர் மனைவி மீதான சந்தேகத்தை புல்லென சிறுக வைத்து கதையை முடித்தது. டிரேகன் புல்லாக போட்டிருந்த வேளையில் டத்தோ டாக்டருக்கு புத்தி சொன்னது சீரியஸ்ஸிலும் சீரியஸ். அங்கதத்திலும் அங்கதம்! ( ஆனால் டாக்டர், தன் அனுபவத்தில் இவ்வாறான தம்பதிகளை டத்தோ டாக்டர் நிறைய சந்தித்திருக்கிற வாய்ப்பிருக்கிறதே)

  கதையில் டத்தோவின் ஆணாதிக்கத் திமிரை பிரிந்த தன் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப் படுவதிலிருந்து தொட்டுக் காட்டுகிறார். அவர் ஒரு பிலிபின்ஸ் காரியோடு சல்லாபித்தது பெரிதாகக் காட்டாத போக்கும் அவரின் ஆணாதிக்கப் போக்கைச் நிறுவுகிறது. தன்னைப்போலவே தன் மனைவியும் சோரம் போயிருப்பார் என்ற அல்ப சிந்தனையையும் முன்வைக்கும் தருணம் ஆனாதிக்கமின்றி வேறென்ன?

  மெத்தப் படித்து சமூகத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர் இழிபண்பையும், சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் டிரேகன் போன்றவரின் புரிந்துணர்வையும் ஒப்பீட்டு ரீதியில் அழகிய முரண்வழி கதையை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. கதை நெடுக்க இந்த பண்பு மோதல்கள் நடக்கின்றன. முரண் நகையும் பண்பு மோதல்களும் சிறுகதையின் சுவாரஸ்யத்தைக் கூடுதல் சுவையோடு படைத்துக் காட்டும். டத்தோ டாக்டர், டிரேகன் என்று இரு பாத்திரங்க்ளின் படைப்பே பண்பு மோதல்களில் துலங்குகிறது. டாக்டரின் மனைவியும் டிரேகனின் மனைவியும் கூட எவ்வளவு பாத்திர மோதல்கள். விட்டுக்கொடுத்துப்போகும் சண்டியர், பொறாமை குணமிக்க டத்தோ, டிரேகனின் மனைவி பெற்றுக் கொடுத்த ,ரத்தபந்தமற்றதை தன் சொந்த மகளாகச் சுவீகரித்துக் கொண்டதும், உடல் சுகத்துக்காக பிலிப்பின்ஸ் காரியோடு சல்லாபித்து குடும்ப உறவுக்கு குந்தகம் விளைவித்த டத்தோவும் எத்துணை பெரிய முரண். தன் சுயநலத்துக்காக ஒரு சண்டியரோடு ஒரே மேசையில் தண்ணி போடுவதும்… இப்படி நிறைய.

  ஒரு சாதாரணக் கதைதான் . ஆனாலும் அதன் சுவை கெடாமல் இருப்பதற்கான உரையாடலும், சம்பவங்களும், முடிவும் மிகுந்த வலிமையோடு நிறுத்துகின்றது கதையை. ஆமாம், ஒட்டு மொத்த டத்தோ வகையறாக்களுக்கு அடியாள் தேவையெனபதால்தான் நாட்டில் இத்தனை கேங் குழுமங்களா? ஏன் டாக்டர் இப்படிப் போட்டு உடைக்கிறீர்கள்?

 2. M. Sunthari
  June 5, 2018 at 5:50 pm

  Good story. Meelum pala khataikal ezhutha valthukkal. 👌👌👌👌

 3. Selina
  June 6, 2018 at 1:46 am

  படித்ததில் அசந்து விட்டேன்… கதை மேலும் நீளாதா என்று ஏக்கம் கொள்கிறேன்.

 4. June 20, 2018 at 2:47 pm

  Simple theme but beautifully crafted by an accomplished narrator. This short story amplifies everything good about an excellent narrative. Excellent.

 5. அண்டனூர் சுரா
  June 28, 2018 at 6:38 pm

  டாக்டர் தன்னை தேடி வரும் பேசண்ட் அல்லது கூட வருபவரிடம் யன் மனச்சுமையை இறக்கி வைக்கும் இது போன்ற கதைகள் பெரிதும் தேவையே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *