மலேசிய எழுத்தாளர்களின் வாழ்க்கை

கே.எஸ்[2006ஆம் ஆண்டு Nou Hach மாநாட்டில் எழுத்தாளர் கே.எஸ். மணியம்  வழங்கிய சொற்பொழிவு]

வணக்கம்! சக எழுத்தாளர்களிடமும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களிடமும் பேசுவதற்கான இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நான் பேசப்போவதில் உங்களுக்குத் தேவையான சில கருத்துகள் இருக்கும் என்று நம்புகிறேன். தொடக்கமாக, மலேசியாவின் இலக்கியம் குறித்த காட்சியை உங்கள் முன் வைக்கிறேன். இந்த நாட்டில் மலாய், சீனம்/மெண்டரின், தமிழ், ஆங்கிலம் என  நான்கு இலக்கிய மரபுகள் உள்ளன. கல்வி, கலாச்சாரம், தனிப்பட்ட விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து, மலாய், மெண்டரின், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத முடியும். இந்நாட்டில் மலாய் தேசிய மொழி என்பதால் மலாய் இலக்கியம் தேசிய அல்லது மலேசிய இலக்கியம் என்று கருதப்படுகிறது. என் பார்வையில் மலேசியர்களின் வாழ்க்கை, தரிசனங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பு எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை பொருட்படுத்தி தேசிய இலக்கியம் என முத்திரையிட வேண்டிய அவசியமில்லை.

மலாய் இலக்கியம் ஆதிக்கம் செலுத்துகிற இலக்கியமாக இருப்பதற்கு தேசிய மொழியில் எழுதப்படுவதை மட்டும் காரணமாகக் கூற முடியாது, மாறாக மற்ற மொழிகளைக் காட்டிலும் மலாய் மொழியிலேயே அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் இந்நாட்டில் இருப்பதும் ஒரு காரணமே. விளைவாக, மலாய் இலக்கியம் மேலதிகமான கவனத்தையும் பெறுகிறது. ஒரு எழுத்தாளரின் ஆக்கம் எதிர்பார்க்கும் தரத்தைக் கொண்டிருந்தால், டேவான் பஹாசா டான் புஸ்தாகா எனும் தேசிய பதிப்பகம் உடனடியாக அதனை பதிப்பித்துவிடும். இத்தேசிய பதிப்பகம் சிறுகதை, நாவல், நாடகம் எழுதும் போட்டிகளையும் நடத்தி பரிசுகளும் தருகிறது. பரிசுகளின் வரிசையில் ‘ஹடியா சஸ்த்ரா’ – இலக்கிய பரிசு அல்லது இலக்கியவாதி விருது போன்ற வகைகளும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து முக்கிய மலாய் எழுத்தாளர்களும் இந்த விருதைப் பெற்றுவிட்டார்கள், தேர்வுக்கு முன்மொழிய பெயர் இல்லாத நிலை இப்போது உருவாகியுள்ளது! மிகுதியாக விருதுகளும் பரிசுகளும் என மலேசியா பல்வேறு வகைப்பட்ட (தேசிய கனவுகள், லட்சியங்களை நிறைவேற்றும் வகையிலான படைப்புகளை உருவாக்கியிருக்காத) தன் நாட்டு கதாநாயகர்களுக்கு கார்களையும் வீடுகளையும் பரிசளிக்க விரும்புகிறது. சமாட் சைட், இந்நாட்டு தேசிய இலக்கியவாதிகளுள் ஒருவர், தன் மகன் மூலமாக பதிப்பகம் ஒன்றை தனிப்பட்ட முறையில் நடத்தி வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்மூலம் தனது படைப்புகளை மீண்டும் மீண்டும் பதிப்பித்து திறம்பட விநியோகிக்க இப்பதிப்பகத்தை நடத்துகிறார். மலாய் படைப்புகளைப் பதிப்பிக்க ஏகப்பட்ட பதிப்பகங்கள் இங்கு இயங்குகின்றன, பெரிய லாபம் ஈட்டுவதில் குறிக்கோளாக செயல்படுகின்றன. இதன் விளைவாக, வெகுஜன இலக்கியங்கள், பெரும்பாலும் காதலை மையமிட்டு உருவாக்கப்பட்ட படைப்புகள், காமம், ஏக்கம் போன்ற வகை சார்ந்தவைகள் மிகுந்த இலாபகரமானவையாகிவிட்டன. வெறும், ஒரு புத்தக விற்பனையின் மூலம் 140,000 ரிங்கிட் வரை ஒரு எழுத்தாளரால் சம்பாதிக்க முடிகிறது!

சீன, தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் தங்களைச் சுயமாகத் தற்காத்துக் கொள்ள விட்டுவிடப்பட்டுள்ளனர். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படைப்புகளுக்கு சில இலக்கிய போட்டிகளைத் தவிர வேறொன்றும் நடந்ததில்லை. 1980களின் பிற்பகுதியில் MacDonald’s, Shell சில போட்டிகள் நடத்தி பணம் வழங்கின, பிறகு The Straits Times போட்டிகளை நடத்தியது, ஆனால் இந்தப் போட்டிகள் எதுவும் தொடரப்படவில்லை. சீனா, தாய்வான் போன்ற சீன மொழி பேசும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக்கொண்டு, இங்கு சீன எழுத்தாளர்கள் தங்கள் சொந்த மரபுகளை உருவாக்கியுள்ளனர். அதேபோல தமிழர்கள் தென்னிந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தங்களது இலக்கியங்களுக்கான மரபுகளை உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடும். ஆங்கிலவழி எழுத்துப் பாரம்பரியம், நான் பொருந்திவரும் இவ்வகை இலக்கிய மரபு 50 ஆண்டுகளாக பிழைத்து மட்டும் வருகிறது, செழிக்கவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் பல குழுக்களைச் சார்ந்தவர்கள்: மூத்த எழுத்தாளர்கள் – என்னைப்போல; இளம் எழுத்தாளர்கள் – எழுத்துத் துறையில் தங்கள் கைகளை முடுக்கி விட்டிருப்பவர்கள், ஆளுமைகள் – புத்தக வாசிப்பு அமர்வுகளை வைத்திருப்பவர்கள்; இறுதியாக, சர்வதேசவாதிகள் – வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு எழுதும் சூத்திரம் தெரிந்து எழுதும் எழுத்தாளர்கள். மலேசியாவிலேயே வாழ்ந்துகொண்டு தங்கள் சொந்த நாட்டின் அனுபவங்களிலிருந்து ஏதாவதொன்றை வெளிகொண்டுவருபவர்களையே நான் முக்கியமானவர்களாகக் குறிப்பிடுவேன்.

ஓர் எழுத்தாளர் எந்த குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒருசில அடிப்படைத் தன்மைகளிலிருந்து அவர்கள் தப்பிவிட முடியாது. முதலாவது, எழுத்துத் துறையில் தொடர்ந்து இயங்கினாலும் வாழ்வாதாரத்துக்காக நிச்சயம் உழைக்க வேண்டும். சர்வதேச எழுத்தாளர்களுக்கு ஆறு இலக்கங்களில் கிடைக்கும் முன்பணம்போல மலேசிய எழுத்தாளர்களுக்கு அந்த மாதிரியான பொருளாதார சுதந்திரம் அனுபவிப்பதற்கில்லை. அவர்களுக்கு மந்தகாசமான புத்தகம்-கையெழுத்திடும் பயணமும் புகழ் கவர்ச்சியும்கூட இருப்பதில்லை. மலேசியாவில் எழுத்தாளரின் வாழ்க்கை பெரும்பாலும் வழக்கத்திற்குள் உழல்பவை. ஒன்பது முதல் ஐந்து வரையிலான வேலை நேரம், ஆசிரியர்கள் விரிவுரைஞர்கள் என்றால் பள்ளி, பல்கலைக்கழக அட்டவணை நாள்கள். இவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் நெகிழ்வான வேலை நேரம் -1997 வரை யுனிவர்சிட்டி மலாயாவில் நான் போதிக்கும்போது கிடைத்ததை போல. மற்றவர்கள் பணிகளுக்குத் தங்களை அர்பணித்துவிட்டவர்கள். இதன்மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால், எழுதுவதுபோல் பாவணை செய்து கொண்டு, உண்மையில் தாங்கள் எழுதுவதாக எவரும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள முடியாது. அவர்களது எழுத்துகளே அவர்களை விரைவில் அடையாளம் காட்டிவிடும். ஒன்று, சாலைகளின் எல்லைகளில் அவை சரிந்துவீழ்ந்துவிடும், அல்லது, அவரவர் எழுத்து வட்டத்துக்குள்ளேயே மட்டும் சிலகாலம் எடுபடும். எழுத்தாளன் என்பவன்/ள் எழுதுவதற்கான பொறுப்பை முழுமையாக ஏற்க வேண்டும். இது எழுத்தாளரிடம் இருக்கும் கட்டொழுங்கிலிருந்து காட்டப்படுவது: அவன்/ள் தினமும் எழுதுகிறாரா அல்லது ஒவ்வொரு வாரமும் எழுதுகிறாரா என்பதுபோல; படைப்பின் உருவத்திலும் மொழியிலும் அவன்/ள் வைக்கும் உன்னிப்பான கவனம் போன்றவை. இப்படியானவர்கள்தான் மலாயிலும் சரி ஆங்கிலத்திலும் சரி நிலையான வாசக கவனத்தைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்பில் தென்படும் vision–பார்வையிலிருந்து அவனது பொறுப்பை (Commitment) அடையாளம் காணமுடியும். இது சற்றே மறைமுகமானதுதான், ஆனால் படைப்பாளனின் படைப்பிற்கு இணக்கத்தையும் ஆற்றலையும் கொடுக்கும் இவ்வகை உணர்வுநிலை ஒருவரால் அடையக்கூடியதே.  1996 ஜூலை, ஒரு பத்திரிகை நேர்காணலில் எனது சொந்த vision –பார்வை குறித்து பேசினேன். மனிதனுக்குள் இந்த பிரபஞ்சத்தைக் காண வேண்டும் என்றேன், இது, பிரபஞ்சத்துக்குள் மனிதனைப் பார்க்கும் பார்வையிலிருந்து எதிர்விசையில் இயங்குவது. இரண்டாவது கூற்றானது, இப்பிரபஞ்சத்தில் மனிதனின் இடம்: கிரகம், நாடு, சமுதாயம், முதலியவற்றில் எல்லாம் மனிதனின் இடம் என்பதாக பொருள் தரக்கூடியது. ஆனால் மனிதனுக்குள் பிரபஞ்சத்தைப் பார்ப்பதன் மூலம் ஒரு தனிமனிதனுக்குள் எத்தனையெத்தனை குணநலன்களை (நபர்களை) அடைய இயலும் என்பதைக் காண முடியும். அடிப்படையில், இதுவே ஓர் எழுத்தாளனின் நம்பிக்கை அல்லது கோட்பாடாக இருந்து செயல்படுகிறது. அந்த நேர்காணலில் நான் கூற விளைந்த அர்த்தம் என்னவென்றால், என் எழுத்துக்களில் பலவிதமான மனிதர்களையும் அவர்தம் அடையாளங்களையும் நான் ஆராய விரும்பினேன் என்பதுதான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தன் ஊதாரி மகனை கல்வியில் கரைசேர்க்கப் போராடும் ஒரு விதவையாக; குடும்பத்தில் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அண்ணியாக; பின் மைத்துனனை மயக்கி அவன் அதிகாரத்தைக் கையிலேந்தி பழிதீர்ப்பவளாக; வெற்றிகரமான தொழிலதிபராக இருந்து திடீரென்று வாழ்க்கையில் மாபெறும் வெறுமையை உணர்ந்தவனாக; ஒரு மலாய் இளைஞனாக, பின் வயது மூப்பெய்தி இந்த நிலத்தின் ஆன்மாவை உணர்ந்தவனாக; சீன இரும்புக்கடை ஒன்றில் உதவி ஊழியனாக, ரோமியோ-ஜூலியட் காதல் மோகத்தில் பருத்த, மலட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டவனாக என இப்படி பல நபர்களாக என்னால் ஆக முடிந்துள்ளது.வேறு வகையில் சொல்வதானால், ஒரு குறிப்பிட்ட படைப்பு கோறும் ஆளாக உருவெடுத்து, அப்படி ஆவதன்வழி அந்தத் தனிமனிதன் தன்னுள் வைத்திருக்கும் உள்ளுணர்வு அனுபவத்தை அடையாளம் காண முடியுமா? என்றால் அதைதான் என் படைப்புகளின் வழியாக நான் செய்துகொண்டிருக்கிறேன்.

அந்த மாபெரும் தரிசனமே ஒரு எழுத்தாளனை வாழ்நாள் முழுக்க வழிநடத்தி அவனது படைப்புக்கான உருவத்தைக் கட்டமைக்கிறது. அதுவே அவனை மிகக் குறைந்த கால இடைவெளியில் வாசகனுடன் மிக நெருக்கமான உரையாடலை ஏற்படுத்தும் படைப்பை உருவாக்க வைக்கிறது. இதன் அர்த்தம், நிகழ்கால அல்லது கடந்த காலங்களில் சமூகத்தில் நடக்கும் விடயங்களுக்கு வினையாற்றுதல் மற்றும் படைப்பாற்றலின் தேவையை சக மனிதனுக்கு உணர்த்த விளைதல் என்பதே. மற்ற அனைத்து வடிவங்களைக் காட்டிலும் இலக்கிய வடிவம் இதனை மிக நேர்த்தியாக திறம்பட செய்ய வல்லது என்று நம்புகிறேன். ஏடுகளில் இருக்கும் சொற்களால் தூண்டப்பட்டு அதன்மூலம் தனக்கான காட்சிகளை சிருஷ்டித்துக் கொள்ளும் வாய்ப்பை இலக்கியம் ஒருவனுக்கு அனுமதிக்கிறது. அதன்வழி அவனே ஒரு படைப்பாளனாகிறான்; செயல், அல்லது எதிர்வினையற்ற வெற்று நுகர்வாழனாக மட்டும் இருப்பதில்லை அவன். இலக்கியம் உங்களுக்குள் இருந்து ஒரு குரல்போல பேச தொடங்கும். மறைமுகமாக உங்களைச் சுற்றியுள்ள சூழல்கள், சமூக போக்குகள் மற்றும் தேவைகள், வரலாற்றின் செல்வாக்கு குறித்து உங்களிடம் ஒருவித விழிப்புநிலையை உருவாக்கிகொண்டே இருக்கும். இந்த குரல் உங்களுக்குள் வரலாறு மீதான ஆழமான விழிப்புணர்வை உருவாக்கும் என்றும் சொல்வேன். என் படைப்புகளுக்கும் இவைதான் தூண்டுதல்கள்.

சரி, என் படைப்புகள் எதைப் பற்றியது? அனைத்தும் பொதுவாக இருப்பு, உரிமை சார்ந்தவை, அதன்மூலம் நாட்டிற்கு உரிமையானவன் அல்லது தேசிய அடையாள உணர்வை பெறுவது ஆகியனவற்றை பொருட்கொள்கிறேன். நான் எழுதிருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கதைகளில் இந்த உணர்வை முழுவதும் ஆராயும் கதைகளாக ‘Haunting the Tiger’, ‘Arriving’ எனும் இரு கதைகளைக் குறிப்பிடுவேன். Haunting the Tiger மூன்றாம் தலைமுறை இந்தியன் தனது நாட்டை அடையாளம் காண முற்படுவது. அதில் அவன் அனைத்து வகையான சடங்குகளையும் முயற்சிக்கிறான், அவற்றில் முக்கியமானது அவன் வேட்டையாடிய உயிரின் (பன்றி அல்லது மான் போன்றவை) இரத்தத்தைத் தரையில் விழச் செய்வது. ஆனால் இவ்வாறு செய்வதன்மூலம் அவன் பேருவகைக் கொள்வதுபோன்ற அனுபவங்கள் காட்டப்படவில்லை. அவன் பாக் மாட் என்பவனைச் சந்திக்கிறான். பாக் மாட், அந்நாட்டுக் குடிமகன், அவனுக்கு அந்நாட்டு தொல்குடிகளின் ஆவிகளுடன் நெருங்கிய உறவு இருப்பதாக நம்பப்படுகிறது. புலியை வேட்டையாடுவதற்கு பதிலாக அதைச் சூழ்ந்துகொள்ளும் பயணத்தை மேற்கொள்கிறார்கள் இருவரும். புலி தங்களது பார்வையில் அகப்படும்போது, முத்து, கதையின் நாயகன், தன் ஆளுமையில் தீ மூழ்வதாகக் கருதுகிறான். அதனால், அங்கிருந்து ஓடி மறைகிறான். மரணப்படுக்கையில் கிடக்கும்போது, இந்த நாட்டின் ஆன்மாவுடன் தன் அடையாளத்தை (நெருங்கிய ஒற்றுமையை அல்லது தொடர்பை) உருவாக்கிக் கொள்ள முயலாததால் வாழ்வு சூன்யமாய் கிடைப்பதை உணர்கிறான்.

Identity- ‘அடையாளம்’ எனும் உணர்வையே ‘The Return’ (1981), ‘In a Far Country’ (1993), ‘Between Lives’ (2003) ஆகிய மூன்று நாவல்களும் பரிசீலிக்கின்றன. The Return நாவலில் ரவி, கதையின் நாயகன், காலனித்துவ கல்வி முறை மூலம் பிரிட்டிஷ் கலாச்சாரதின்மீது ஈர்ப்பு கொள்கிறான்.  அவனது இலட்சியம் வறுமையிலிருந்து விடுதலை, கௌரவ வாழ்க்கை வாழ வழியமைப்பது. இங்கிலாந்தில் பயிற்சி முடிந்து வந்த ஆசிரியராக இருக்கும்போது அவன் இதை அடைகிறான். ஆனால் குடும்ப உறவுகளின் செலவில்தான் தனக்கு கிடைத்திருக்கும் இப்போதைய நிலை என்கிற மாதிரியான தொல்லைமிகு சந்தேகம் அவனை இம்சிக்கத் தொடங்குகிறது. தன் லட்சிய அடைவைப் பற்றி அவன் கொண்டிருக்கும் சந்தேகத்தை ‘Full Circle’ எனும் கவிதை வரிகளில் அவன் வெளிபடுத்துகிறான். இதுவே நாவலை முடித்து வைக்கும் பகுதியாகவும் அமைகிறது. கடைசி சில வரிகள்:

‘சொற்கள் சேவகம் செய்வதில்லை

அவைகளால் நீ உருகுலைவாய்

பெயரிடமுடியா சின்ன சின்ன தூண்டு விசைகளாக

நகரங்களின் இருண்ட சாலைகளில் திக்கற்றலையும் அவை, குமுறலுடன்.

அவை தெளிவற்ற முடிச்சுட்டிருக்கும்

உணர்வுகளால், ஒளிர்வற்று, பண்பாடற்று,

மனதிற்குள் புதைந்திருக்கிறது, அது எவ்வித சேவகமும் செய்யாது.’

‘In a Far Country’ பல கதைமாந்தர்களை உள்ளீடாய்க் கொண்டுள்ளதால் எழுதுவதற்கு பெரிய சவாலாக இருந்தது. பிரபஞ்சத்தை மனிதனுள் பார்க்கும் என் இலட்சியத்தை நிறைவேற்ற என் முழு ஆற்றலையும் கோரியது இந்தப் படைப்பு. இந்நாவல் சிக்கலான உரைநடையில் பல்வேறு கதைமாந்தர்களையும் அவர்களுக்கு இந்த நாட்டினுடனான உறவையும் அலசுகிறது. கடைசியாக, ‘Between Lives’ இந்நாட்டின் ஒரு அங்கமாக தன்னை பாவிப்பதற்கு ஒரு புலம்பெயர்வாசியின் போராட்டங்களுக்கும், அந்தப் போராட்டங்களை மறக்கக் கூடாததற்கான தேவைக்கும் உருவங்கொடுக்கும் கதை. இது ஒரு முழு மலேசிய நாவலாகும். இந்நாவலில் வரும் கதைசொல்லி இளம் மலேசிய இந்தியப் பெண்ணாக இருந்தாலும்கூட நாவல் முழுக்கவே மலாய், சீனர், இந்தியர் எனும் மூன்று முக்கிய சமூகங்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கிறது. என் படைப்புகள் மற்ற ஆக்கிரமிப்புகள் குறித்தும் பேச்சுகின்றன, நான் இப்போது அவற்றுக்குள் நுழைய அவகாசமில்லை.

தொடக்கத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் எனது படைப்புகளை வெளியிடும் அதிர்ஷ்டம் எனக்கு இருந்தது. அது 1970களின் இறுதி மற்றும் 1980களின் தொடக்கக் காலப்பகுதி. என் கதைகள் மலேசியா, பிறகு சிங்கப்பூர் பல்கலைக்கழக இதழ்களில் பிரசுரமாயின. Heinemann Asian Writers Series எனும் தொடர் பதிப்பாக்க முயற்சியில் எனது முதல் நாவலான ‘The Return’ பதிப்பிக்கப்பட்டது. ஆனால் Heinemann 1980களின் இறுதியில் அப்பதிப்பாக்க முயற்சியை நிறுத்தியது. மலேசியப் படைப்புகளைப் பதிப்பித்து வெளியிடுவது அக்காலப்பகுதியில் பலவிதமான சிரமங்களைக் கொண்டது.

அதனால், லண்டனை பதிப்புத் தளமாகக் கொண்ட Scoob Books வருகையின்போது, என்னிடம் போதுமான எண்ணிக்கையில் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட தயாராக இருந்தன. ‘In a Far Country’,  ‘Haunting the Tiger: Contemporary Stories from Malaysia’, ‘Sensuous Horizons: the Stories and the Plays’ ஆகிய மூன்றும் இப்பதிப்பகத்தில் வெளிவந்தவை. இந்த பதிப்பகத்தார் தனிப்பட்ட காரணங்களை முன்னிறுத்தி 2000ஆம் ஆண்டு முதல் மலேசிய படைப்புகளைப் பதிப்பிப்பதில் தங்களுக்கு இருந்த ஆர்வத்தை முடக்கினர்.

பிரசுரமாகாத படைப்பு தன் இருத்தலின் மிக முக்கியமான நோக்கத்தை அடைவதிலிருந்து தோல்வியுறுகிறது: அது வாசகனை சென்றடைவதில் தோல்வியடைகிறது. நான் தொடக்கத்தில் கூறியதுபோல, மலாய் படைப்புகள் மற்ற மொழிகளில் வெளிவரும் ஆக்கங்களைவிட மிக எளிதாக பதிப்பிக்கப்படுகின்றன, ஏனெனில் அவற்றுக்காக ஒரு தேசிய பதிப்பகம் இயங்குகிறது. மற்ற மொழி வாசகர்களைக் காட்டிலும் கணிசமான அளவில் மலாய் வாசகர் எண்ணிக்கை இருப்பதால் இப்பதிப்பகத்தின் வேலையும் இன்னும் எளிதாகிறது, இதனால் சில வேளைகளில் வெகுசன இலக்கியங்கள் தவறுதலாய் வெற்றியும் அடைந்துவிடுகின்றன. இவ்வாறு கூறுவதன்வழி ஆங்கில இலக்கியங்களைப் பதிப்பிக்க பதிப்பாளர்களே இல்லை என்று கூறிவிட முடியாது. Silverfish Books, மிக அண்மைய காலமாய Maya Press போன்றவை இருக்கின்றன. என்னுடைய  ‘Between Lives’ நூல் Maya Pressல் பதிப்பிக்கப்பட்டதுதான். இந்தப் பதிப்பகங்களில் நூல்களைப் பதிப்பிக்க எழுத்தாளர்கள் பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை, அதே சமயம் இவர்கள் கொடுக்கும் ராயல்டி தொகையும் பெரிய அளவில் இருப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு காரணம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதும் ஆங்கில இலக்கியம் வாசிப்பவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் இருப்பதும்தான். ஆனால் இந்த காரணிகளெல்லாம் ஒரு எழுத்தாளனின் உற்சாகத்துக்கு முட்டுக்கட்டையாகாது.  அவர்கள் தங்கள் கணினிகள், குறிப்பேடுகள் அல்லது நோட்டுப்புத்தகங்களில் தங்களின் ஆகச் சிறந்த படைப்புகளை (Masterpieces) பெற்றெடுக்க, தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள்!

விநியோக வட்டம் என்பது சிக்கலானது, அணுகக்கூடிய ஒவ்வொரு நகரங்கள், புறநகர்களை உள்ளடக்கியது. அதேபோல அதிக விலைகோறுவதும் விநியோகப் பிரிவுதான். பதிப்பிக்கப்பட்ட நூலின் விலையில் 40 விழுக்காடு விநியோகிப்பாளர்களுக்குப் போய்விடும். இது சுய வெளியீடு செய்யும் எழுத்தாளர்களும் பெரும் பின்னடைவைத் தரக்கூடியது. நீங்கள் எல்லாரும் அறிந்து வைத்திருப்பதைப்போல, சுயபதிப்பு இப்போது பரவலாகியுள்ளது, சுய பதிப்புகள் அனைத்தும் பதிப்பாளருக்கு பணம் கொடுத்து நூல் பதிப்பிக்கும் வகை சார்ந்தவையாகவும் இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் அமெரிக்கா, கனடாவில் சுயபதிப்பாக வெளிவந்த என் இரு நாவல்களுக்கு பின்னர் பெரிய பதிப்பு நிறுவனம் ஒன்றிலிருந்து அழைப்பும் கணிசமான அளவு முன்பணமும் வந்தது.  மலேசியாவில் அப்படி சில சுய பதிப்பாளர்கள் இருக்கிறார்கள், புலம்பெயர் வரலாறு, அல்லது அதுசார்ந்த இலக்கியப் பிரதிகளை பதிப்பிப்பவர்கள். நினைவுக்குறிப்புகள் (Memoirs) பதிப்பிப்பவர்களும் உண்டு. எழுத்தாளர்கள் குறைந்தபட்சம் புத்தக பதிப்புச் செலவுகளை மீட்டெடுக்க விநியோகிப்பாளர்களை நாடுவதைக் கடந்து சுயமாகவே புத்தகக் கடைகளுக்குச் சென்று போடுவதும் உண்டு.

எனக்குத் தெரிந்து மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில், எழுத்தாளர்களுக்குள் நெருக்கமான பிணைப்பு இல்லை. ஆனால் சில எழுத்தாளர் வட்டங்கள் இருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் என்று இளம் எழுத்தாளர் குழுக்களை நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன், அவர்கள் புத்தக வாசிப்புக் கூட்டங்களை நடத்துகின்றனர். அப்படியான குழுக்கள் கவிதைத் தொகுப்பு நூல்களை எளிய வடிவங்களில் பதிப்பித்துள்ளனர். அதனுடன், வெளிநாட்டு எழுத்தாளர் வந்தால் அவர்களை கெளரவிப்பது, உடன் சந்திப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்வது, எழுதிக்கொண்டிருக்கும் நூல் குறித்து கருத்து பரிமாற்றம் செய்வது போன்றனவும் நடத்தப்படுகின்றன. சில வேளைகளில் சிறிய அளவிலான புத்தக வெளியீடுகள் நடக்கின்றன, மீண்டும் இவைகளில் எழுத்தாளர்கள் கூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எழுத்தைத் தவிர மற்ற அனைத்திற்கும் நன்றிக்குறியதாய் இருப்பவைகளைக் கடந்து எழுத்தாளர்களின் கூட்டுறவுக்கான திறந்தநிலை அமைப்புகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதுவேகூட சிக்கலுக்கும் தேவையற்ற புறங்கூறலுக்கும் வழிவகுக்கலாம். இது அனைத்து இலக்கிய சமூகத்திலும் நடக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால், எழுத்தாளர்கள் தங்கள் சொந்த படைப்பு தேவைக்காக மட்டும் அல்ல, உலகளாவிய நிலையில் பதிப்புத் துறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான நேரம் இதுவே.

எழுதுதல் கடினமானது; கடும் கட்டொழுங்கைக் கோருவது. ஆனால் அதுதான் வாசகனிடம் நேர்மையாகவும் நெருக்கமாகவும் சென்று பேசும் ஒரே குரல். உடனடி புகழ், வசீகரம், பிரபலம் எனும் அந்தஸ்து போன்ற போலியான கவன ஈர்ப்பு, கவர்ச்சி ஆகியவற்றை எழுத்தாளர்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். எழுதுதல் என்பது தன்னையும் சமூகத்தையும் அடையாளம் காணும் ஒரு தொடர்ச்சியான செயல்பாடு, பணத்திற்காகவும் வெற்று மினுமினுப்புக்காகவும் அதை தியாகம் செய்துவிடக் கூடாது. எழுத்தாளர்கள் தொடர்ந்து தங்கள் எழுத்து எனும் கைவினைப் பணியில் ஈடுபடுவதோடு அந்த வேலையில் தங்கள் உறுதிப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு போதிய ஆக்கங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

மூலம் : Maniam, K.S. (July 4, 2012). The Life of Writers in Malaysia. Nou Hach Literary Journal. Retrieved from http://www.nouhachjournal.net/?p=561

2 comments for “மலேசிய எழுத்தாளர்களின் வாழ்க்கை

  1. Sunthari Mahalingam
    July 16, 2018 at 10:31 pm

    Vaalthukkal

  2. அண்டனூர் சுரா
    July 18, 2018 at 1:44 pm

    கட்டுரையாளர் சொல்வதைப்போல எழுத்து ஒரு கட்டொழுங்கான தியாகம்தான். அதை விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் தியாகம் செய்துவிடக்கூடாதுதான். ஆனாலும் எழுத்தாளர்கென்று ஒரு வயிறு இருப்பதும் அது அவனுக்குள்ளும் பசிக்கிறது என்பதை யார் அறிந்து என்னவாகியிருக்கிறது.ம்…?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...