கலை இலக்கிய விழா 10

cover 001இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கான ஏற்பாடுகள் மிக உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படமும் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் ‘கலை இலக்கிய விழா 10’ மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்துக்கான மேலும் ஒரு படிக்கல்லாகத் திகழும். இது வல்லினத்தின் இறுதி கலை இலக்கிய விழா என்பதால் இலக்கிய வாசகர்கள் தங்கள் வருகையை முன் பதிவு செய்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் வெளியீடு காணும் நூல்கள் பின்வருமாறு:

மீண்டு நிலைத்த நிழல்கள்– கடந்த 12 ஆண்டுகளாக ம.நவீன் நேர்காணல் செய்த பேட்டிகளின் தொகுப்பு நூலான இதில் மொத்தம் 24 மலேசிய – சிங்கப்பூர் ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். கலை இலக்கியம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  மலேசியச் சிங்கப்பூர் இந்தியர்களின் பல்வேறு வாழ்வின் போக்குகளை அதன்  வரலாற்று தடயங்களுடன் இந்த நேர்காணல்கள் வழி அறிய இயலும்.

மா.சண்முகசிவா சிறுகதைகள்- கடந்த 20 ஆண்டுகளாக மா.சண்முகசிவா எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இதுவரை நூலுரு காணாதப் புதியச் சிறுகதைகள். அங்கதச் சுவையுடனும் உளவியல் நுட்பத்துடனும் எழுதப்பட்ட இக்கதைகள் மலேசிய நவீனத் தமிழ் இலக்கிய உலகுக்கு வலு சேர்க்கும் தரம் கொண்டவை. 8 சிறுகதைகள் அடங்கியுள்ள இது மா.சண்முகசிவாவின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு ஆகும்.

போயாக்- கடந்த இரண்டு ஆண்டுகளில் ம.நவீன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. உள்மடிப்புகளைக் கொண்டுள்ள இவரது கதைகள் நுட்பமான வாசகனுக்குப் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்துபவை.  மலேசியா மட்டுமல்லாமல் தமிழக விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்த சில சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 8 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பு மலேசியாவில் இதுவரை தமிழ் புனைகதைகளில் கவனம் கொள்ளாமல் இருந்த களங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.

கே.எஸ்.மணியம் சிறுகதைகள் – புலம்பெயர் தமிழர் வாழ்வின் அபத்தங்கள், குறைபாடுகள், தனிமனித, தேசிய அடையாள உருவாக்கத்தின் தேக்கம், மேலும் பலவித சர்ச்சைக்குறிய விடயங்களுக்கு இலக்கியவுரு கொடுப்பவர் கே.எஸ்.மணியம். தென்னாசியாவின் புலப்பெயர்வு (South Asian diaspora) வரலாற்றுப் பதிவுகளாக இதுவரை தமிழர்கள் கடந்துவந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் பேசும் கே.எஸ். மணியத்தின் படைப்புகளை முதன் முறையாக விஜயலட்சுமியின் மொழிப்பெயர்ப்பில் தமிழில் வெளிவருகிறது.

 அவரவர் வெளி- மலேசிய இலக்கியம் குறித்து தொடர்ந்து தன் கவனத்தைச் செலுத்தி வரும் அ.பாண்டியனின் நூல் விமர்சனங்களும் அறிமுகங்களும் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு இந்நூல்.  கறாரான விமர்சனங்கள் மூலம் படைப்பிலக்கியத்தை அணுகும் அவரது பார்வை மலேசிய தமிழ் இலக்கியத்தை அறிய விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவதோடு முந்தைய நிலைபாடுகளையும் அசைத்துப்பார்க்கும் தன்மையைக் கொண்டவை.

ஊதா நிற தேவதை– தொடர்ந்து உலக சினிமா குறித்து எழுதிவரும் இரா.சரவணதீர்த்தாவின் கட்டுரைத்தொகுப்பு. பெண்ணியத்தை மையப்படுத்தி இயக்கப்பட்ட திரைப்படங்களில் உள்ள உள்ளார்ந்த குரலை அவரது கட்டுரைகள் பதிவு செய்கின்றன. திரைப்படத்தின் தொழில்நுட்பத்தையோ அதன் கதையையோ  விவாதிக்காமல் இயக்குநர் பொதித்து வைத்துள்ள அதன் ஆன்மாவை தொட முயல்பவை இவரது சினிமா கட்டுரைகள்.

நாரின் மணம்- வாழ்வில் தான் எதிர்க்கொண்ட எளிய அனுபவங்களின் நுண்மையான பகுதியைத் தொட்டு பேசுபவை ம.நவீன் பத்திகள். பெரும்பாலும் தனது பாலியத்தின் அனுபவங்களை பேசும் அவரது பத்திகள் கலைஞர்களிடம் இயல்பாக உள்ள அபோதத்தின் மனநிலையைத் திட்டுத்திட்டாக வெளிக்காட்டுபவை.

ஏழு நூல்கள் வெளியீடு காணும் அதே வேளையில் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படங்களும் வெளியீடு காண்கின்றன.

அட்டை 01துவக்கமும் தூண்டலும்– மா.செ.மாயதேவன் மற்றும் மா.இராமையா மலேசிய சிறுகதை இலக்கிய உலகின் முன்னோடிகள். முதல் சிறுகதைத் தொகுப்பை 50களில் வெளியிட்டவர்கள். அவர்களின் அனுபவங்களையும் தொடக்கக்கால இலக்கியப் போக்கையும் பதிவு செய்துள்ள ஆவணப்படம் இது. தனிமனித வாழ்வினூடாக இலக்கிய வரலாறை தேடும் முயற்சி இது.

காலமும் கவிதையும்– அக்கினி மற்றும் கோ.முனியாண்டி இந்நாட்டில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு உழைத்தவர்கள். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பின் வழி புதுக்கவிதை போக்கைத் தீவிரமாக முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்கள். மலேசியப் புதுக்கவிதையின் போக்கை இவர்கள் ஆவணப்படம் வழி பதிவு செய்யும் முயற்சி இது.

மூன்று குறுநாவல்கள் வெளியீடு

வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டம் 2017 இல் தொடங்கியது. எழுத்தாளர்களைக் குறுநாவல் எழுதவைத்து அதனை செறிவாக்கம் செய்து நூலாகப் பதிப்பிக்க வேண்டும் என்பதே வல்லினம் குழுவின் அடிப்படையான நோக்கம். இது போட்டியல்ல. சோர்வடைந்திருக்கும் மலேசிய நாவல் இலக்கிய வளர்ச்சியைப் புத்தாக்கம் பெற வைப்பதே வல்லினம் குழுவின் அடிப்படை நோக்கம்.

இந்தக் குறுநாவல் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்களுக்கு முதலில் பட்டறை நடத்தப்பட்டது. ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் குறுநாவல் நுணுக்கங்கள் குறித்து விளக்கினர். இருநாட்கள் நடந்த இந்தப்பட்டறைக்குப் பின்னரே எழுத்தாளர்கள் குறுநாவல் எழுதப் பணிக்கப்பட்டனர்.

சுமார் 14 குறுநாவல்கள் இந்தப் பதிப்புத்திட்டத்திற்கு வந்திருந்தன. இதில் இறுதிச்சுற்றுக்கு எட்டு நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நாவல் எழுதியவர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு வெவ்வேறு நடுவர்களிடம் அனுப்பப்பட்டது. இறுதியில் பதிப்புக்குத் தகுதி கொண்டவை என மூன்று நாவல்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட நாவல்கள் எழுத்தாளர்கள் அனுமதியுடன் செறிவாக்கம் கண்டன. அதன் மையம் சிதையாமல் வடிவமும் மொழியும் கூர்மை செய்யப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட நாவல்களின் விபரம்:

குறுநாவல் 1: ரிங்கிட்
ஆசிரியர் : அ.பாண்டியன்

indexமலேசிய வரலாறு – வளர்ச்சி முழுவதும் இனம் சார்ந்தே இருப்பது தவிர்க்க முடியாதது. பெரும்பான்மை – சிறுபான்மை  என்பன போன்ற பொதுவான வேறுபாடுகளை விட பூமிபுத்ரா – பூமிபுத்திரா அல்லாதோர் என்கிற அரசியல் அடையாள பிரிவினையே இந்நாட்டின் அரசியலை முடிவு செய்யும் மையமாக இருந்துவருகிறது.

ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அதிகமாக மலேசியாவில் குடியேறிய இந்திய நாட்டு மக்களும் சீன நாட்டு மக்களும் இந்நாட்டின் பொருளாதார சூழலை மட்டுமின்றி அரசியல் சூழலையும் வெகுவாக மாற்றி அமைத்தார்கள். சுல்தான்களின் அதிகாரத்தின் கீழ் மரபு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்துவந்த மலாய்காரர்கள், சுதந்திர போராட்ட காலத்தில் தங்கள் மண் சார்ந்த உணர்வெழுச்சியைப் பெற்றனர்.  அதன்வழி மலாயாவின் அரசியல் அதிகாரம் தங்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர்.  போராட்டங்களின் வழியும் பேச்சுவார்த்தைகளின் வழியும் சுதந்திர மலேசியாவின்  அரசியலமைப்புச் சட்டங்களை வரைந்தனர்.

ஆயினும்  பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றும் சீன – இந்திய அரசியல்வாதிகள் முன்வைத்த  விண்ணப்பங்களுக்கு ஏற்பவும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்நாட்டில் குடியேறிய மக்களுக்குத் தாய்மொழி, சமயம் போன்ற சில விவகாரங்களில்  அனுமதியும் குடியுரிமை தளர்வுகளும் வழங்கப்பட்டன.

ஆக, சுதந்திர மலேசியாவின் தளம், பல்வேறு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆயினும், இரண்டாம் உலகப்போர், கம்யூனிஸ்டு பயங்கரவாதம் போன்ற குழப்பங்கள் மலேசிய இனங்களுக்கிடையே குறிப்பாக மலாய் – சீன சமூகங்களிடையே தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி வந்திருக்கிறது.  இன வெறுப்பு என்பது இந்நாட்டில் நீறு பூத்த நெருப்பாக இருந்தாலும் சில நேரங்களில் கொழுந்து விட்டெரியும் பெரும் தீயாக மாறி உயிர்களை குடித்து விடும் அபாயகரமானது.

பொதுவாக 1969-ஆம் ஆண்டு நடந்த மே இனக்கலவரத்தை இந்நாட்டு அரசியலில் கருப்பு தினமாகச் சொல்வது வழக்கம். ஆயினும் மே கலவரத்துக்கு முன்பும், மலேசியாவில் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. குறிப்பாகச் சீனர்கள் அதிகம் வாழும் பினாங்கு மாநிலத்தில் இனப்பதற்றம் எப்போதும் உச்ச நிலையிலேயே இருந்துள்ளது.  1957-1967க்குள் மூன்று இனக்கலவரங்கள் பினாங்கில் நடந்து உயிருடற்சேதங்களும் நிகழ்ந்துள்ளன. அரசியல் போராட்டங்கள் மட்டுமின்றி தொழிற்சங்க போராட்டங்களும்  இனக்கலவரமாகத் திசைமாறிய வரலாறு உண்டு.  சிறுக சிறுக நடந்த பல இனக்கலவரங்களின் உச்சமே கோலாலம்பூரில்  வெடித்த மே கலவரம்.

1967-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்த புதிய நாணயமான ‘ரிங்கிட்’ தொடர்பில் எழுந்த சர்ச்சையும்  முன்பிருந்த பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் பினாங்கில் ஓர் இனக்கலவரம் வெடிக்க காரணமாகின.  பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு 15 விழுக்காடுவரை வீழ்வது மக்களுக்கு பெரும் பணச்சுமையைக் ஏற்படுத்தும் என்ற கருத்தை முன்வைத்து  பினாங்கில் இயங்கிய தொழிலாளர் கட்சி, அரசு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. அக்கட்சி காந்திய நெறியில் ‘ஹர்தால்’ (கதவடைப்புப் போராட்டம்) நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற நிலையில் சில குழப்பங்களால் சட்டென்று  ‘ஹர்தால்’ இனக்கலவரமாக மாறி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு மலேசிய மக்களின் இனவாதப் போக்கு முற்றுவதற்கு மேலும் ஒரு காரணமானது.

அ.பாண்டியன் ‘ரிங்கிட்’ குறுநாவல் மூலம் பெரும்பாலும் கவனப்படுத்தப்படாமல் இருக்கும் இந்த வரலாற்றைப் புனைவாக்க முனைந்துள்ளார். இது இவரது முதல் நாவல் முயற்சி. ஹசான் எனும் மனிதனின் நீண்ட வாழ்க்கைக்குள் நுழைந்து செல்லும் இந்த வரலாறு அவரை என்னவாக மாற்றியுள்ளது என்றும் அகண்டு கிடக்கும் காலத்திடம்  அந்த வரலாற்றுக்கு என்ன மதிப்பு உள்ளது எனவும் நுட்பமாக சித்தரித்துள்ளார் அ.பாண்டியன். வாழ்க்கையையும் வரலாற்றையும் குறித்து ஓர் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய  தனித்ததொரு தரிசனத்தின் தெறிப்புகள் இந்நாவல் முழுவதும் இருப்பது சிறந்த புனைவுக்கான தகுதியைப் பெற்றுத்தருகிறது.

குறுநாவல் 2 : மிச்சமிருப்பவர்கள்
ஆசிரியர் : செல்வன் காசிலிங்கம்

index03நவீன நாவல் வடிவம் வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கில் படைக்கப்படுவதில்லை. அது வரலாற்றை ஆராய்கிறது. மொத்த எரிமலை வெடிப்பின் காத்திரத்தை ஒரு கைப்பிடி தீக்குழம்பில் மீள்புனைவு செய்கிறது. ஆறியப்பின் உண்டாகும் கெட்டித்தன்மையையும் அது கவனத்தில் கொள்கிறது. பின்னர் அது தனிச்சையாய் உருவாக்கிக் கொடுத்துள்ள வடிவத்தை இரசிக்கவும் செய்கிறது. இவ்வாறு ‘மிச்சமிருப்பவர்கள்’ பெரும் போராட்ட வரலாற்றின் உஷ்ணம் வாசிப்பவர் நாசிகளில் நுழையும் வண்ணம் புனையப்பட்ட குறுநாவல் என தாராளமாகக் கூறலாம்.

25 நவம்பர் 2007 மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் மிக முக்கியமான தினம். ஒருவகையில் மலேசிய வரலாற்றிலும் அரசியல் சூழலிலும் பெரும் திருப்பங்கள் உருவாக்கிய தினம். முப்பது அரசு சார்பற்ற இந்து அமைப்புகள் கூட்டணியாக இணைந்த ‘இந்து உரிமைகள் போராட்டக் குழு’ (Hindu Rights Action Force) இந்து மக்களின் உரிமைகள், கலாசார பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும் எனும் தங்களின் அடிப்படைவாத குரலில் இருந்து மேம்பட்டு இன, மொழி, சமய, கலாசார அடிப்படையில் மலேசியாவின்  சிறுபான்மையினர் நசுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனும் சமூகப் போராட்டக் குரலாக எழுந்து மலேசியத் தலைநகரை நிலைகுத்த வைத்த தினம் அது.

இண்ட்ராப் (HINDRAF) பேரணி என வருணிக்கப்படும் இந்த மாபெரும் போராட்டத்தில் இரண்டு லட்சம் மலேசிய இந்தியர்கள் திரண்டனர். பல்லின மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு எழவும் காரணமாக இருந்த இந்தப் போராட்டத்தைப் பற்றிய முதல் நாவல் இது. ஆனால், இண்ட்ராப் எனும் இயக்கம், அது முன்னெடுத்த அரசியல், அவ்வரசியலின் சரிபிழைகள், போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பின்னணி என ஆராயாமல் ஒரு சமூகத்தின் எளிய குடிமகன் எவ்வாறு தன்னை இந்தப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டான் என்றே நாவல் புனையப்பட்டுள்ளது. அவ்வகையிலேயே மலேசிய வரலாற்று நாவல்களில் பெரும்பாலும் கவிந்திருக்கும் பத்திரிகை செய்தித் தன்மை குறைந்து அசலான நல்லப் புனைவாகிறது.
செல்வா எனும் கதாபாத்திரம் நாவலின் மூன்று பாகங்களையும் இணைக்கிறது. இதில் முதல் பகுதியிலும் மூன்றாவது பகுதியிலும் நாவலாசிரியரே கதைச்சொல்லியாக இருக்க, இரண்டாவது பாகத்தில் செல்வா தன்னிலையில் இருந்து கதையை விவரிக்கிறான். மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நில பறிமுதல், கல்வி வாய்ப்புகளில் பாராபட்சம், சிறையில் நடந்த தொடர் மரணங்கள், சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிச் சூடுகள் என தொடர்ந்து இந்தியர்கள் மேல் நடந்த – நடக்கும் அழுத்தங்கள் எவ்வாறு சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கி வாழும் ஒருவனைப் போராட்டத்துக்குள் இழுத்துவிடுகிறது என சுவாரசியம் குன்றாமல் எழுதியிருக்கிறார் செல்வன் காசிலிங்கம்.

நிகழ்காலத்தில் ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நினைவுகள் வழியாக இறந்தகாலத்திற்குத் தாவிச்செல்லுதல், நாவலில் அறிமுகப்படுத்தும் ஒருவன் வாழ்வின் இக்கட்டான தருணங்களை இன்னொரு துணைக்கதையாகச் சொல்லிச் செல்லுதல் என மாயக்குதிரை போல காலங்களைத் தாண்டித் தாண்டிச் செல்லும் பாணி முதல் நாவலிலேயே குழப்பம் இல்லாமல் ஆசிரியருக்குக் கைக்கூடியுள்ளது ஆச்சரியமானது.

ஆம்! இது இவரது முதல் நாவல். இருபது ஆண்டுகளுக்கு மேல் நாளிதழ்களில் எழுதிக்கொண்டிருந்தாலும் வல்லினம் சிறுகதை போட்டிகள் மூலம் தொடர்ந்து முதலாவது இரண்டாவது பரிசு பெற்று கவனம் பெற்றதுடன் குறுநாவல் பதிப்புத்திட்டம் வழியாகவும் மலேசிய நவீன இலக்கிய உலகத்தில் தனது கால்களை ஆழமாகவே பதித்துள்ளார்.

 

குறுநாவல் 3: கருங்காணு
ஆசிரியர்: அ.ரெங்கசாமி

index 02

கப்பல் ஏறி தமிழகத்திலிருந்து வந்தது முதல் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைப்பது வரை தமிழர்கள் மத்தியில் இருந்த மனநிலையையும் உளவியலையும் சித்தரிப்பதால் இந்நாவல் பதிப்புக்குத் தேர்வு பெற்றுள்ளது.

கறிய சிறு ஆற்றின் ஓரம் வாழும் ஒரு குடும்பம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏற்படும் இடர்களில் இருந்து தப்பி தங்களை மீட்டுக்கொண்டு வந்தும் இறுதியில் மீண்டும் ஒரு பிரமாண்டமான சிக்கலின் முன் ஸ்தம்பித்து நிற்கிறது என குறுநாவல் விவரித்துச்செல்கிறது.
மையமான கரு என இல்லாமல் தமிழர்கள் வாழ்வில் அவ்வப்போது நிகழ்ந்த பெரும் துயங்களின் சாரல்களை இந்நாவல் பதிவு செய்துள்ளது. கிள்ளான் கலகம், சயாம் மரண இரயில் தண்டவாளம் போடும் பணி, கம்யூனிஸ கொடுமைகள் என பல்வேறு காலக்கட்டங்களை எளிய சித்திரமாகச் சொல்லிச்செல்லும் இந்த நாவல் லட்சியவாதக் குரலில் ஒலிக்கிறது.

85 வயதைக் கடந்துவிட்ட அ.ரெங்கசாமி இதுவரை 5 நாவல்களை எழுதியுள்ளார். ஐந்துமே மலேசிய இந்தியர்கள் எதிர்க்கொண்ட சிக்கல்களைப் பேசுபவை. இந்த நாவல் அதன் தொகுக்கப்பட்ட சுருக்கம் எனலாம்.

இறுதியாக:

வல்லினம் பதிப்பாசிரியராக இந்தக் குறுநாவல் பதிப்புத்திட்டம் மூலம் இத்தகைய படைப்புகள் கிடைத்துள்ளது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.  இதுவரை பேசப்படாத இரு முக்கியமான வரலாறுகள் புனைவாக்கப்பட்டுள்ளதோடு மலேசிய நாவல் என்பதற்கான தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளன. விமர்சகர்கள் வாசகர்கள் மூலமே இந்நாவல்கள் தொடர்ந்து கவனப்படுத்தப் பட வேண்டும். அது நிகழ்ந்தால் இம்முயற்சி முழுமையடையும்.

நிகழ்ச்சி நாள்: 18.11.2018 (ஞாயிறு)

நேரம் : பிற்பகல் 2.00

இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)

அனைத்துத் தொடர்புக்கும்:

ம.நவீன் – 0163194522 (கோலாலம்பூர்)
அ.பாண்டியன் – 0136696944 (பினாங்கு, கெடா)
க.கங்காதுரை – 0124405112 (பேராக்)
சரவண தீர்த்தா – 0195652222 (நெகிரி, மலாக்கா, ஜொகூர்)

3 comments for “கலை இலக்கிய விழா 10

  1. Sunthari Mahalingam
    July 16, 2018 at 10:30 pm

    thangkalin sheevaikal menmeelum thodara vaaalthukkal

  2. Mohamed Najimudeen
    July 20, 2018 at 3:11 pm

    வல்லினம் பத்தாவது இலக்கிய விழா வெற்றிகரமாக இடம் பெற இறைவனை வேண்டுகின்றேன் – டாக்டர் நஜிமுதீன்

  3. அ.புனிதவதி
    August 26, 2018 at 8:22 am

    புதுமையில் படைப்பு . உண்மையின் உன்னதம் . உயர்ந்து நிற்கும் த.னித்துவம்
    நேர்மையின் கண்ணாடி ,உழைப்பின் விளைச்சல் . முத்தோரின் ஆசி , எழுத்தாளர்களின் கெளவரிப்பு .நேர்த்தியான விமர்சனம் . இலக்கியத்தின் உளி வல்லினம் பத்தாண்டுகளின் அடைந்த வீரநடையைக் கொண்டாடுவோம் .

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...