நுண்வெளி கிரகணங்கள்: விலகும் இருள்

நுண்வெளி கிரகணங்கள்சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியர்களின் வாழ்வில் நிறைய பொதுத்தன்மைகள் ஏற்படத் தொடங்கின. நவீனக் கல்வியும் சந்தையும் ஒரு பொது மொழியையும் பொதுவான மனநிலையையும் மக்களிடையே உருவாக்கத் தொடங்கின. ஒரு வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் அவர்கள் மாணவர்கள் ஒத்த வயதினர் ஒரே வகையான பாடங்களைப் பயில்கின்றனர் என்ற பொதுத்தன்மைகள் உருவாகின்றன. ஆனால் அவர்களின் நிறம், உயரம், ஜாதி, உணவுப்பழக்கங்கள், உறவுமுறைகள் என எதுவும் பொதுவாக இல்லை. இந்த தனி அடையாளங்களை ஒரு மாணவனின் வீடு அவனுக்குக் கொடுக்கிறது. அவன் அணிந்திருக்கும் சீருடைக்குள் இந்த தனி அடையாளங்களைப் புதைத்துக் கொண்டு அவன் பொது அடையாளத்துக்குள் வர முயல்கிறான். பொது அடையாளங்களும் தனி அடையாளங்களும் ஏறத்தாழ எதிரெதிர் தன்மை உடையவையாக இருக்கின்றன. ஏனெனில் அவனது பொது அடையாளத்தை கட்டமைத்தது மேற்கில் இருந்து நீண்ட கரம். அவன் தனி அடையாளங்களை தன் மரபின் மடியிலிருந்து பெற்றுக் கொள்கிறான். இந்த முரணை எழுதிய ஆரம்பகால படைப்புகளில் ஒன்று ரவீந்திரநாத் தாகூரின் கோரா. அப்போது தோன்றிய பிரம்ம சமாஜமும் அதற்கு முன்பிருந்த மரபாசாரங்களும் மோதிக் கொள்கின்றன. இவற்றுக்கு இடையே காதலும் இளமையும் கொண்ட ஒரு தலைமுறை நல்லியல்புகளையும் உண்மையான லட்சியங்களையும் கண்டடைவதாக அந்த நாவல் கட்டப்பட்டிருக்கும். சிக்கல் என்னவெனில் கோராவின் எண்பது சதவீதத்தை மேற்கிலிருந்து நீண்ட அந்த கரமே கட்டமைக்கிறது.

நுண்வெளி கிரகணங்கள் மடியில் இருந்து எழுந்த ஒரு படைப்பாளி சொல்லும் கதை.

நாவலின் மிகப்பெரிய பலம் அது கட்டமைக்கும் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த புற உலகம். விவசாய குடும்பம் என்ற ஒற்றை வரியிலோ நெல் அம்பாரமாகக் குவிகிறது என்ற வகையிலான மேம்போக்கான சூழல் விவரணைகளிலோ நின்று விடாமல் மிளகாய் காய வைப்பதில் இருந்து மடை அடைப்பது வரை மிக நுணுக்கமான தகவல்கள் வழியாக கட்டமைக்கப்பட்டிருப்பதும் சூழலை அறிவதன் வழியாக மட்டுமே படைப்பினை முழுதாக உள்வாங்க முடியும் என்ற தேவையை ஏற்படுத்தாமல் மிக நேர்த்தியாக அச்சூழலுக்குள் வாசகனை ஆசிரியரின் மொழி உள்ளிழுத்து விடுவதும் இப்படைப்பின் ஓட்டத்தில் மிக எளிதாக ஒன்றி விடச்செய்கின்றன.  இருபதாம் நூற்றாண்டின் இறுதியை கதைக்களமாக கொண்டுள்ள இந்த நாவல் விவசாயமும் விளைபொருட்களும் ஒரு பன்னாட்டு வியாபாரமாக மாறி வரும் சூழலையும் நிலத்தடி நீர் குறைவதையும் விவாசயத்தை விட்டு மெல்ல ஒரு தலைமுறை வெளியேறுவதையும் சித்தரிக்கத் தவறவில்லை.

தனகோபால் என்ற பதினைந்து வயது சிறுவனின் கனவுடன் தொடங்குகிறது நுண்வெளி கிரகணங்கள். தனகோபாலின் அப்பா ரங்கசாமி ரங்கசாமியின் அண்ணன் சீரங்கு தங்கை சௌடம்மா அவர்களின் தகப்பன் திம்மைய கௌடர் என இக்குடும்பங்களின் கதையே நாவலின் பெரும்பாலான பகுதியை கட்டமைத்திருக்கிறது.

தனகோபாலின் கனவின் வழியாக தேனியின் சுற்றவட்டாரப் பகுதிகளில் காப்பு குல ஒக்கலிகர்கள் குடியேற்றங்களை அமைத்த வரலாறு தொன்மமாக சொல்லப்படுகிறது. இஸ்லாமிய படையெடுப்புகளினால் தெற்கு நோக்கி நகர்ந்த மக்களின் கதையாக சொல்லப்படும் தொன்மத்தின் மற்றொரு வடிவம் கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலில் இருக்கிறது.

சித்தையகௌடர் (கவுண்டர்) ஒரு வழக்கில் இருந்து மீள்வதற்காக தன் மகன் ஒருவனை கொலை செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது. அவர் தன் இரண்டாவது மனைவி தேவம்மாவிடம் சொல்கிறார். அவள் உடன்பட மறுக்கவே மூத்த மனைவியின்  அனுமதியுடன் அவரது மகன் ஒருவனை கொலை செய்கிறார். தேவம்மாவின் வாரிசுகளுக்கு சொத்தென எதுவும் கொடுக்காமல் எல்லாவற்றையும் மூத்த மனைவியின் மற்ற பிள்ளைகள் பெயரிலேயே எழுதி வைக்கிறார். இறுதிக்காலத்தில் குற்றவுணர்வு அழுத்த ஏழுவில்பட்டியில் கட்டிய பிரம்மாண்டமான வீட்டினை தேவம்மாவின் பையனான திம்மையகௌடருக்கு எழுதி வைக்கிறார்.

மிகப்பிரம்மாண்டமான வீடு ஆனால் அதை முழுதாக பராமரிக்கக்கூட முடியாத நிலையில் இருக்கும் குடும்பம் என நிலப்பிரபுத்துவ காலத்தின் முடிவை மிகச் சரியாக இந்த நாவல் தொடுகிறது.

கல்வியில் நிலைக்க முடியாதவர்களாவகே இந்த நாவலில் இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி வருகின்றனர். அரசு வேலையோ ஆசிரியர் பணியோ கிடைக்காமல் ரங்கசாமியின் மூத்த மகன் அசோக் தந்தையுடன் விவசாயம் பார்க்கிறான். பன்னிரெண்டாம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சியுறத் தவறிய காயத்ரி வீட்டுடன் தங்குகிறாள். தனகோபால் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறான். அசோக் நித்யாவையும் காயத்ரி சதீஷையும் காதலிக்கின்றனர் என வழக்கமான வாழ்க்கைக் கதைகளை இந்த நாவல் தன் கட்டுமானத்தில் கொண்டிருந்தாலும் இக்கதைகளின் வெளிப்பாட்டில் காணக்கிடைக்கும் பிரத்யேகம் ஈர்ப்புறச் செய்கிறது.

003

உதாரணமாக காயத்ரி காதலிக்கும் சதீஷ் காப்பு குல ஒக்கலிகர் இனத்தவன் எனினும் அதில் மூணுபளவினர் என்ற தனி உட்பிரிவைச் சேர்ந்தவன். குஞ்சடிகா என்ற பிரிவு மூணுபளவினரை தாழ்ந்ததாக நினைக்கிறது. அவர்களுடன் மண உறவு வைத்துக் கொள்வதில்லை. காயத்ரி குஞ்சடிகா பிரிவைச் சேர்ந்தவள். இதுபோல இந்த நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொருவரின் முடிவின் மீதும் மரபின் ஆதிக்கமும் அதைக் கடந்து செல்வதற்கான பிரயாசையும் வெளிப்பட்ட படியே இருக்கிறது. கோரைப் பாயில் அமர்வதை தவிர்க்கிறார்கள், மணமான பெண்கள் தாலி அணிவதில்லை என இன வரைவியல் சார்ந்த பல தகவல்கள் நாவல் முழுவதுமே விரவிக் கிடக்கின்றன. மற்றொரு கிளைக்கதையாக முனைவர் பட்ட ஆய்வுக்கென காப்பு குல ஒக்கலிகர் சமூகத்தை “ஆய்வு” செய்ய விக்னேஷ் எனும் மாணவன் மதுரையில் இருந்து வருகிறான். சித்தையன் கோட்டையில் நிகழும் இம்மனிதர்களின் வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கிற அதேநேரம் இன்னொரு பக்கம் தாள்களில் புதையும் ஆவணமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. உயர் மத்தியத்தர வகுப்பினனாக காட்டப்படும் விக்னேஷின் குடும்பம் உயிரற்றதாக இன்ப நுகர்வில் மட்டுமே நாட்டம் கொண்டதாக சித்தரிக்கப்பட்டிருப்பது கிராமத்தின் உயிரைக்காட்ட மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மனிதர்கள் உட்புதையும் இருளை எந்தவித தாட்சண்யமும் இன்றி நெருங்கித் தொடுவது சு.வேணுகோபாலின் எழுத்தின் சிறப்புகளில் ஒன்று. அவரது வெண்ணிலை சிறுகதை தொகுப்பு குறித்த கட்டுரையொன்றில் விரிவாக அது குறித்து எழுதியிருக்கிறேன். நுண்வெளி கிரகணங்களும் அதை நிகழ்த்தத் தவறுவதில்லை. இருள் நம்மிலிருந்து எங்கோ தூரத்தில் இருக்கிறது என்ற சமாதானத்தை இந்த நாவலில் வரும் சௌடம்மா,பத்மா ஆகிய பெண்களுக்கு நடைபெறும் வன்முறைகள் மறுக்கின்றன. ஆணின் வன்மம் பெண் குறி மீதான தாக்குதலின் வழியாகவே வெளிப்படுகிறது. சாதாரணமாக ஒரு பேருந்து வரத் தாமதமாவதற்கோ ஒரு தருணம் சரியாக அமையாததற்கோ ஒரு ஆணின் வாயில் பெண்ணின் பிறப்புறப்பைச் சொல்லும் சொல் வெளிவருவதைப் பார்க்க முடியும்.

பெண்ணின் மீதான ஆதிக்கத்தை நிறுவ ஆண் அவளது பிறப்புறுப்பை இலக்காக்குகிறான். பாகீரதியின் மதியத்தில் பாகீரதியின் மீது ஆங்காரம் கொள்ளும் அவள் கணவன் அவளை வன்புணர்வுக்குள்ளாக்குவான். அச்சித்தரிப்பில் ஒரு அந்நியத்தன்மை இருக்கும். ஆனால் சௌடம்மாவிற்கு வீரசிக்கு இழைப்பதும் பத்மாவுக்கு அவள் கணவன் இழைப்பதும் எந்தவித அந்நியத்தன்மையும் அற்றவை. அதன்பிறகும் அவர்களது வாழ்க்கைத் தொடர்கிறது. எல்லா வன்மங்களும் சமாதானம் நோக்கிச் செல்கின்றன. சௌடம்மா கருவில் இருக்கும் குழந்தை தொடையிடுக்கில் சிதைந்து ஒழுகும் கவிச்சியுடன் பேருந்தில் அமர்ந்திருக்கிறாள். ஆனால் அடுத்த தலைமுறை பெண்ணான பத்மாவால் தனக்கு நிகழ்ந்ததை வெளியே சொல்ல முடிகிறது. கணவனை ஏதோவொரு வகையில் பணிய வைக்க முடிகிறது.

வீரசிக்குவைப் பிரிந்து வாழும் சௌடம்மா வீட்டிற்கு வரும் ஜமீல் என்ற இஸ்லாமிய வியாபாரியுடன் வீட்டை விட்டு நீங்குகிறாள். தங்கையான சௌடம்மாவை வெறி கொண்டு தேடுகிறார் வீராச்சாமி. ஆனால் அந்த அனல் மெல் அடங்குவதை சித்தரிப்பது இந்த நாவலின் நவீனத் தன்மைக்குச் சான்று. பொதுவாக வலுவான கிராமியப் பின்புலம் கொண்ட படைப்பாளிகளிடம் காணக் கிடைக்காத குணங்களில் ஒன்று இது. சு.வே ஆரோக்கியமான மாற்றங்களை விழைகிறவராக சமரசத்தை ஏற்றுக் கொள்கிறவர்களாகவே தன் பாத்திரங்களை வார்க்கிறார். மாட்டினை உண்ணும் இஸ்லாமியனால் துரத்தப்பட்டதன் வஞ்சத்தை மறந்து பெண் வாழ்ந்தால் போதுமென எண்ணும் நிலைக்கு அந்தக் குடும்பம் வருகிறது.

ரங்கசாமியின் நம்பிக்கைகள் நொடித்துக் கொண்டே வருகின்றன. பொருளாதாரம் ஆட்டம் காண நேர்கையில் அவர் உள்ளுக்குள் இறக்கத் தொடங்குகிறார். மகனின் காதல் மகளின் காதல் மணமாகி கணவனைப் பிரிந்த தங்கை இன்னொருவருடன் ஓடிப்போனது பாரம்பரிய வீட்டினை இழக்க நேர்வது மகளின் திருமணம் நின்று போவது பயிரில் போட்ட பணம் மூழ்குவது என அவர் இறப்பை நோக்கிய பயணத்திலேயே இருக்கிறார்.

ஒரு இடத்தில் டைஃபாய்டு உச்சமடைந்து தனகோபால் பிதற்றுகிறான். பேய் பிடித்தவனாக  அவன் பிதற்றுகையில் அவர் காத்து வந்த ரகசியம் ஒன்று வெளிப்பட ரங்கசாமி இறந்து போகிறார். நல்ல புத்திசாலியாக இருந்தும் குடித்து ஊர் சுற்றுகிறவராக மாறிப்போன ரங்கசாமியின் அண்ணனான சீரங்குவை அவர் குடும்பம் புரிந்து கொள்கிறது. அவர் கூறும் நம்பிக்கையான சொற்களோடு நாவல் முடிகிறது.

ஒரு நாவலில் வரக்கூடிய பாத்திரம் ஒரு கருத்தை நிறுவுவதற்காகவோ அல்லது இடத்தை இட்டு நிரப்புவதற்காகவோ உருவாக்கப்டுவதில்லை. அது நிஜமான மனிதனின் பாவனையை மேற்கொண்டாலும் ஒரு நாவல் பாத்திரம் ஒரு நிஜ மனிதனை விட பூரணமும் நித்தியத்தன்மையும் கொண்டது. ஒரு பாத்திரத்தை அதன் அடையாளத்துடன் எடுத்துப் பார்க்கும் போது அது கடந்து வந்த வாழ்வின் சுவடுகளை அப்பாத்திரம் பிரதிபலிக்க வேண்டும். ஒரு பாத்திரம் நாம் காணக்கூடிய ஒரு மனிதனின் அத்தனை சிக்கல்களையும் கொண்டதாக அதையும் கடந்து விரியக்கூடிய உட்சிக்கல்கள் கொண்டதாக ஒரு பாத்திரம் அமையும் போது மட்டுமே முழுமையடைகிறது. அத்தகைய முழுமைகளின் சங்கமிப்புகளையே ஒரு நாவலில் நாம் காண்கிறோம். அவ்வகையில் நுண்வெளி கிரகணங்களில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் அடர்த்தி மிக்கவையாக தனக்கான அபிலாஷைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. ஒவ்வொருவரின் பார்வையில் இருந்தும் விரித்தெடுத்து இப்படைப்பை முழுமை செய்து கொள்ள முடிகிறது.

sures

தன் வயிற்றில் பிறந்த ஒரு மகனை கணவனின் நலனுக்காக பலி கொடுக்க மறுக்கும் தேவம்மா இந்த நாவலில் முதல் மீறலை நிகழ்த்துகிறாள்.  அச்சரடில் தொட்டு இந்த நாவலை விரித்தெடுத்து புரிந்து கொள்ளவே நான் முயல்கிறேன். குடும்பத்தின் மீது அன்பு கொண்டவராக இருக்கிற ரங்கசாமி தனக்கு வேலை செய்த ஒரு தாழ்ந்த குலத்தவனிடம் பணத்தை வசூலிக்க அவனைக் கட்டி வைத்து அடிக்கிறார். மகளின் காதலையோ மகனின் காதலையோ அவரால் ஏற்க முடிவதில்லை. ஆனால் இளமையில் அவர் நிகழ்த்திய ஒரு முறைமீறல் வெளிப்பட்டு விடும் இடத்தில் அவர் முழுவதுமாக நொடித்துப் போகிறார். விவசாயத்தின் சரிவு குடும்ப உறவுகளின் சிதைவு என ஒரு பக்கம் வீழ்ச்சியின் சித்திரத்தை இந்த நாவல் வழங்கினாலும் வேறொரு வகையான வாழ்க்கைக்குள் மனநிலைகளுக்குள் இளைஞர்கள் தங்களை நுழைத்துக் கொள்வதையும் அவற்றின் மீது நம்பிக்கை கொண்டு வாழத் தொடங்குவதையும் சொல்லி முடிகிறது.

நாவலின் தலைப்பினை முழுவதும் வாசித்து முடித்தபிறகே நாவலுடன் இணைத்துக் கொள்ள முடிகிறது. கிரகணத்தை சூரியனை நாகம் விழுங்குவதாக சொல்லும் ஒரு ஐதீகம் நம்மிடையே உண்டு. வெல்ல முடியாததாக நிற்கும் சூரியனை மெல்ல மெல்ல ஒரு இருள் சக்தி விழுங்குகிறது. அந்நேரம் எல்லா தெய்வங்களும் தங்களுடைய ஆற்றலை இழக்கின்றன. மீண்டும் வரும் ஒளி வேறானதாக அதுவரை வாழ்ந்த நிகழ்வுகளுக்கு புது அர்த்தம் கொடுப்பதாக புதிய நம்பிக்கைகளை கனவுகளை மனதில் நிறைப்பதாக உள்ளது. அத்தகையதொரு நுண்வெளி கிரகணம் சூழ்ந்து மீளும் ஒரு குடும்பத்தின் கதையே இந்த நாவல்.

2 comments for “நுண்வெளி கிரகணங்கள்: விலகும் இருள்

  1. B. Mary Ernest Christy
    August 10, 2018 at 10:20 am

    சுரேஷ் பிரதீப் அவர்கள் நுண்வெளி கிரகணங்கள் நாவலை மிக விரிவாகவும் நுட்பமாகவும் விமர்சனம் செய்துள்ளார். அதில் எடுத்துக்காட்டி விளக்கியிருக்கும் சில முக்கியமான தருணங்களைப் படிக்கும்பாேது முழு நாவலையும் வாசிக்கும் ஆவல் ஏற்படுகிறது. மிகவும் அருமை.

  2. Naveen
    August 15, 2018 at 12:17 am

    அருமை சுரேஷ் பிரதீப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *