மோகப்பெருந்தீயில் உதிரும் சிறுசாம்பல் : சு.வேணுகோபாலின் ஆட்டம்

ஆட்டம்ஆடாதவர்களுக்கு வாழ்க்கையில்லை. வாழ்க்கையில் ஆடாதவர்கள் இல்லை. ஆட்டமே வாழ்க்கை. வாழ்க்கையே ஆட்டம். மானுட ஆட்டம் ( நாவலிலிருந்து )

மனிதன் எப்போதும் ஒரு சமூக விலங்கு. தனிமையை ரசிக்கலாம்; கொண்டாடலாம். ஆனால், அவனால் அதிலேயே நிலைபெற்று இருக்க முடியாது. அதனால்தான் இன்றும் கூட தனிமைச்சிறை என்பது கொடூர தண்டனைகளில் ஒன்றாக இருக்கிறது. உணவு, உடை, உறைவிடம் என உடல் சார்ந்த அடிப்படைத்தேவைகள் நிறைவேறியதும் பாதுகாப்புக்கு அடுத்தபடியாக அவன் வேண்டி நிற்பது சகமனித அங்கீகாரத்தைத்தான். அப்படியான அங்கீகாரத்தின் வழியே இச்சமூகத்தில் தனக்கான தனித்த அடையாளத்தை நிறுவிக்கொள்ள அவன் விழைகிறான். எழுத்து, ஓவியம், சிற்பம் போன்ற எல்லாவகையான கலைச்செயற்பாடுகளும் இதன் உபவிளைவுகளே. தனக்கான அடையாளத்தைக் கண்டடைவதிலும், கண்டடைந்ததைத் தக்கவைப்பதிலும் எழும் புறச்சவால்களையும், அகச்சிக்கல்களையும் பற்றிப் பேசும் நாவலாக இந்த ‘ஆட்டம்’ இருக்கிறது.

திருவிழாவை ஒட்டி ஊரில் நடைபெறும் கபடிப் போட்டிக்குத் தயார் ஆவதில் தொடங்கி, அதில் பங்கேற்று, தோற்று வெளியேறி, பட்ட அவமானங்களைத் தாண்டி அடுத்த வருடப் போட்டிக்கு முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்கும் இடத்தில் முடிகிறது கதை. வீரபாண்டித் திருவிழாவும், அதையொட்டி நிகழும் கபடிப் போட்டியுமே இந்நாவலின் களம்.

கதைநாயகன் வடிவேல் அவ்வூரின் மிகமுக்கிய கபடி விளையாட்டு வீரனாக இருக்கிறான். கபடியின் வழி கிடைக்கச் சாத்தியமிருந்த நல்ல வாழ்வை எல்லாம் உதறிவிட்டு, காதலின் பொருட்டு எழுந்த பிரச்சனையின் நிமித்தம் காதலியான கனகாவுடன் சொந்த ஊரைவிட்டு வெளியேறி திருப்பூருக்குப் பிழைக்கச் செல்கிறான். அங்கே ஏற்பட்ட தவறான தொடர்பால் அவன் மனைவி உடன் வேலை பார்த்த ஒருவனுடன் வீட்டைவிட்டு வெளியேறக் குழந்தைகளுடன் மறுபடியும் சொந்த ஊருக்கு வந்து தஞ்சமடைகிறான். சமூகத்தில் தன்னைப் பிணைத்துக்கொள்ளும் கண்ணியாக இங்கு குடும்பம் என்னும் அமைப்பே உள்ளது. அதில் சிக்கல் வரும் போது அவன் தளர்ந்தும் தனிமைப்பட்டும் போகிறான். அவன் மனைவியின் செய்கையால் விழைந்த அவமானம் மட்டும் ஆறாத வடுவாக அவனுள் தங்கிவிடுகிறது. இளமையில் சாதித்த கபடியில் மறுபடியும் பங்கேற்று வெற்றி பெற்று தன்னை நிரூபிப்பதன் மூலமாக முந்தைய அவமானத்தைக் கொஞ்சமாவதுத் துடைத்தெறிய விரும்புகிறான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது மேலும் மேலும் அவமானத்தில் போய் முடிகிறது.

இளமையில் ஏற்பட்ட காதலினாலும் அவன் மனைவியின் நெறி மீறிய நடத்தையாலும் வடிவேல் சந்திக்கும் சிக்கல் இந்நாவலின் முக்கிய இழையாக இருந்தாலும், காளையனுக்கும் அவனது சித்திக்கும் இடையிலிருக்கும் முறைதவறிய காமமும் கூடவேச் சேர்த்து நாவல் முழுவதும் பின்னப்படுகிறது (நெறிமீறிய உறவுச்சிக்கல்களை, சு.வேணுகோபாலின் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ போன்ற சிறுகதையில் வைத்தது போன்று நுட்பமாக இல்லாமல், இதில் இன்னும் சற்று வெளிப்படையாகவே வைத்திருக்கிறார்). மேலும் திருவிழாவுக்காக வந்து கூடியிருக்கும் குறக்குடியினர், மடியின் கனத்தோடு குட்டிகளைத் தேடி அலையும் நாய், அம்மா இல்லாமல் தவிக்கும் வடிவேலுவின் பிள்ளைகள், அத்தனை பிரச்சனைகளுக்கு நடுவிலும் ஒரே ஆறுதலாக இருக்கும் வடிவேலுவின் அம்மா, நடுவில் வரும் ‘அக்கா’ ஒருத்தி, தாயும் சேயுமாய் மலையேறுபவர்களுக்கு உதவும் குறப்பெண், தற்கொலை செய்து கொள்ளும் ராணியக்கா என்று இந்நாவல் பல்வேறு பரிமாணங்களில் கிளைத்துப் பிரிந்து, உயிர்ப்புள்ள மனிதர்களையும், அவர்களின் வாழ்வையும் கண் முன்னே நிறுத்துகிறது.

சு.வேணுகோபாலின் படைப்புலகைப் பற்றிப் பேசும்போது பலரும் அவரின் விவசாய ஞானத்தையும், பெண் மனதின் துல்லியங்களை எழுத்தில் கொண்டுவரும் நுட்பத்தையும் போற்றியே பேசுவார்கள். அவரும்கூடத் தான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதையே முக்கியமான விசயமாகக் கருதுவதாக நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார். பெண்களின் மனதறியும் வல்லமை சு.வே-யின் ஆதர்சமான தி.ஜா-வைப் போலவே இவருக்கும் கூடி வந்திருக்கிறது. இவரின் கிராமியம் சார்ந்த பின்னணியும் கூர்ந்த அவதானிப்பும்கூட இவற்றை அவருக்குச் சாத்தியமாக்கியிருக்கலாம்.

வடிவேலுவின் மனைவியும், காளையனின் சித்தியும் மேற்கொள்ளும் மீறல்கள் அவர்களைச் சுற்றியிருப்பவர்களை சிதைத்தாலும் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் தமக்கு வேண்டியதை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களைச் சார்ந்து நிற்பவர்களின் வாழ்க்கை, அவர்களின் மோகப்பெருந்தீயில் சிறு சாம்பலென உதிர்கிறது. ஆனால், அவர்கள் அதைப் பற்றிச் சிறிதும் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள்.

பெண்களின் மனதை எழுதியதைப் போலவே ஆண்களின் மனதினையும் உள்வாங்கி

கார்த்திக் பாலசுப்ரமணியம்

எழுதியிருக்கிறார் என்பதை ஆட்டம் நாவலை வாசித்த எல்லாரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதில், வடிவேல் தன் மனைவி வேறு ஒருவருடன் கொண்டிருக்கும் தொடர்பை நினைத்து நினைத்து உள்ளுக்குள் கிடந்து புழுங்குகிறான். அதனால் விளையக்கூடிய அவமானத்திற்கு அஞ்சி நடுங்குகிறான். ஆத்திரம் பொங்கியெழ அவளை அடித்து வெளுக்கிறான். எட்டி மிதிக்கிறான். அவள் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு இதனை இன்னும் பக்குவமாகக் கையாண்டிருக்கலாம் என்று உருகி மறுகுகிறான். தன்னைத் துச்சமாக உதறி நீங்கிய பின்னரும் கனகாவின் நினைவுகளிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறான். (அதே போல, வேறோர் இடத்தில் தான் கோலோச்சிக் கொண்டிருக்கும் கபடியில் வேறு ஒருவனும் பெயர் பெறுவதைத் தாங்கவியலாமல் செய்யும் சூதும் செய்கிறான்) கனகாவை அவனால் மறக்கமுடியவில்லை. காட்டில் தனியாக நடக்கும் போது, பிள்ளைக்குத் தலை துவட்டும் போது என்று சின்னச் சின்ன நிகழ்வுகளில் கூட அவன் மனது கனகாவுடன் சென்று முடிச்சிட்டுக்கொள்கிறது. அவள் தன்னிடம் திரும்பி வந்துவிடமாட்டாளா என்று ஏங்குகிறது.

காமத்தின்பால் ஆட்பட்டு அதனால் தன் வாழ்வையே இழந்துவிட்ட காளையனின் கதாப்பாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

உறுமி, தப்பு, கொட்டு, தீச்சட்டி ஏந்தி வரும் பெண்டிர், தூரத்தில் ஒலிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல் என்று திருவிழாக்கான மனநிலையைக் கட்டமைக்கிறார். அதே போல கபடி விளையாட்டினைப் பற்றிய நுண்ணிய சித்தரிப்புகளின் வழியே அவ்வாட்டத்தை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார். கிராமத்து மனிதர்களின் குணவார்ப்புகளை, வாழ்க்கை முறைமைகளை, கொண்டாட்டங்களை, போதாமைகளை உள்ளது உள்ளபடியே எழுத்தில் கொண்டுவந்துள்ளார்.

நாவல் எங்கும் சரக்கொன்றைகள் பூத்துக் குலுங்குகின்றன. வண்ணத்துப்பூச்சிகளும், வண்டுகளும் ரீங்காரமிடுகின்றன. வயல்களில் படரும் மஞ்சள் பூக்கள், நதியின் மேல் வட்டமிடும் தைலான்கள், வெண்கொக்குகள், கரிச்சான் குருவிகள் என எல்லாவற்றுக்கும் இதில் இடமிருக்கிறது.

இப்படியாகப் புற உலகத்தையும் அக உலகத்தையும் இணைத்துப்பின்னிச் செல்லும் கதை சொல்லும் முறை இவருக்கு வாய்த்திருக்கிறது.

இந்நாவலில் சு.வே, ஒரு தேர்ந்த சாரதியைப் போல கதைக்குதிரையை கடிவாளத்தால் கட்டுப்படுத்தி, அதே நேரத்தில் அகப்புற விவரணைகளின் வழியே அதையே சற்று தளர்த்தி, கட்டற்ற தன்மையையும் சாத்தியப்படுத்தியிருக்கிறார். கபடியைப் பற்றிய விவரணைகளிலும், வீரபாண்டித் திருவிழாபற்றி சித்தரிப்புகளிலும் அவரின் மொழியின் வீச்சை அறியலாம்.

இந்த நாவலின் முடிவின் வரும் மனநலம் குன்றிய குழந்தைகளின் ஓட்டப்பந்தயம் பற்றிய நிகழ்வும் அதனை ஒட்டி வடிவேலுக்குள் நிகழும் கொந்தளிப்பும், மன மாற்றமும் சற்று வலிந்து திணிக்கப்பட்டதாக, அதுவரையிலான கதையோட்டத்திற்குப் பொருந்தாமல் நேர்மறையாக முடிக்க வைக்க வேண்டிய சுயபிரக்ஞையின்பால் எழுதப்பட்ட முடிப்பாக இருக்கிறது. உண்மையில் நாவல் கடைசிக்கு முந்தின அத்தியாயத்தில் முடிந்துவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...