யுகசந்தியின் கலைஞன்: கூந்தப்பனையை முன்வைத்து

கூந்தப்பனைதேர்ந்த எழுத்தாளன் உலகை உன்னிப்பாக கவனிக்கிறான். நாம் அன்றாடம் புழங்கும் வெளியில் நாம் கவனிக்கத் தவறிய ஏதோ ஒன்றை புலனுக்கு உணர்த்தும்போது நம்முள் ஒரு சன்னமான வியப்பு மேலிடுகிறது.“இந்த உலகம் எனக்கும் நன்கு பரிச்சயமானதுதான்.இதை ஏன் நான் கவனிக்கவில்லை?” அறிந்த உலகில் அறியாத ஒன்றைக் காட்டுகிறான். இந்த நம்பகத்தன்மையும் அணுக்கமுமே வாசகன் எழுத்தாளனின் உலகில் நுழைவதற்கான மந்திரவாசல். ஒரு கசகசப்பான பேருந்து பயணத்தின் ஊடாக மொத்த வாழ்வையும் சித்தரித்துவிட சு. வேனுகோபாலால் முடிகிறது.

பதாகை இணைய இதழில் சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சு. வேணுகோபால் சிறப்பிதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்று கட்டுரைகளை தொகுத்திருக்கிறேன். ‘ஆட்டம்’ ‘நிலம் எனும் நல்லாள்’ ஆகிய நாவல்களைக் கொண்டு ஒரு கட்டுரையை அப்போது எழுதி இருந்தேன். கூந்தப்பனை குறுநாவல் தொகுப்பை முன்வைத்து சு. வேணுகோபாலின் மொத்த படைப்புலகைப் பற்றிய சில அவதானிப்புக்களை இக்கட்டுரையில் எழுத முயல்கிறேன்.

2001ஆம் ஆண்டு வெளியான ‘கூந்தப்பனை’ தொகுப்பு(தமிழினி வெளியீடு) – ‘கண்ணிகள்’, ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’,  ‘அபாயச் சங்கு’,  ‘கூந்தப்பனை’ ஆகிய நான்கு குறுநாவல்களை கொண்டது. இத்தனை ஆண்டுகளில் பல்வேறுவிதமான வாசிப்புகளும் விமர்சனங்களும் இக்கதைகளுக்கு கிடைத்திருக்கும். இலக்கியம் சமகாலத்தைப் பேச வேண்டும், எக்காலத்திற்கும் உரியதைப் பேச வேண்டும் என்பதாக பன்னெடுங்காலமாக விவாதங்கள் நடந்துவருகின்றன. வேணு சமகால சித்தரிப்புகளின் ஊடாக காலதீதத்தை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கிறார். காமமும், அகங்காரமும், கருணையும் வழியும் கதைமாந்தர்களை உலவவிடுகிறார்.

‘கண்ணிகள்’ ஒரு புதிர் விளையாட்டைப் போல்ஒரு வாயிலை திறந்து பல பாதைகளில் ஒன்றை தேர்ந்து, இறுதியாக அனைத்து பாதைகளுமே பாதாளத்தில் முட்டி நிற்குமாறு அமைக்கப்பட்ட புதிர்ப்பாதை (maze). எல்லா பாதைகளிலும் ஆளுண்ணும் பூதங்கள் வாய்பிளந்து காத்திருக்கின்றன. மனிதன் எங்குதான் செல்ல முடியும்? ஜின்னிங் தொழில் துவங்கி விவசாயக் கூலியாள் கிடைக்காமல் வேளாண்மை நட்டமாகி பயிரிடுவதை நிறுத்திவிட்டு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றுகிறார் ரங்கராஜன். ஆனால் காய்கள் சூம்பி விடுகின்றன. பிள்ளையின் படிப்புச் செலவுக்கு கந்து வட்டி வாங்கி திருப்ப முடியாமல் நிலத்தை எழுதிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க அவர் எடுக்கும் மற்றொரு முயற்சியின் இறுதியில் மதம் மாற வலியுறுத்தப்படுவதோடு கதை முடிகிறது. இந்தக் கதையின் பொருட்டு குறிப்பாக அதன் முடிவின் பொருட்டு வேணு கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பார். வாழ்வாதாரத்திற்காக தன் அடையாளத்தை தொலைத்தல் என்பதே இக்கதையின் மையம். உடைமைகள், உறவுகள் என ஒவ்வொன்றாக அவரிடமிருந்து வாழ்க்கையின் புதிராட்டம் பிடுங்கிக் கொள்கிறது. எளிய மதச் சிக்கலாக கதையை குறைத்து புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் இதே தொகுப்பில் உள்ள மற்றொரு கதையான கூந்தப்பனையில் ஒரு தேவாலயத்தின் அருகே அமர்ந்து கதை நாயகன் புலம்புவான்,“எத்தனைமுறை கேட்டிருப்பேன்? தரவில்லையே இறைவா! நீ ஒரு இந்துவுக்கு தரமாட்டாயா? இந்த சன்னிதானத்தில் சொல்கிறேன். எனக்கு அதை ஒரே ஒருமுறை போதும் – தந்து எடுத்துக்கொள். மதம் மாறி உன் பாதங்களில் கிடக்கிறேன்”. “கண்ணிகள்” வலிமிகுந்த வீழ்ச்சியின் சித்திரத்தைச் சொல்கிறது.

“வேதாளம் ஒளிந்திருக்கும்” தொகுப்பில் சற்றே இலகுவான கதை. நுண்சித்தரிப்புகள் வழியே கதை நகர்கிறது. அடிக்கடி சண்டையிட்டு அற்ப காரணங்களுக்காக பிரிந்து செல்லும் தம்பதிகளை சேர்த்து வைக்கும் சங்கடமான பணியை கதைநாயகன் எப்படியோ ஏற்றுக் கொண்டு விடுகிறான். எனக்கு இத்தொகுதியின் சிறந்த கதையாக இக்கதையே தோன்றியது. பேருந்துப் பயணத்தின் ஊடாக விசுவநாதனின் பார்வையும் பின்னர் அவனுடைய மனைவி ஈசுவரியின் பார்வையும் ஒன்றையொன்று நிரப்பும் வண்ணம் எளிய உரையாடலின் வழியே கடத்தப்படுகின்றன. விசுவநாதனுக்குள் உள்ள வேதாளத்தை ஒளித்துக்கொண்டுதான் ஈசுவரியை அழைக்க செல்கிறார்கள். கதைசொல்லிக்கு சர்வ நிச்சயமாக விசுவநாதனின் வேதாளம் வெளிப்படும் என்பது தெரிந்திருக்கிறது. கதையின் மற்றொரு நுட்பமான தளம் என்பது ஈசுவரியின் கூற்றுக்கள் வழியாக கதைசொல்லி தனக்கும் தன் மனைவிக்குமான உறவை பரிசீலனை செய்வது. இறுதியில் தனக்குள்ளும் ஒரு வேதாளம் இருப்பதை கதைசொல்லி கண்டுகொள்கிறான். சற்றே தேவைக்கு அதிகமாக விவரிக்கப்பட்டதாக தோன்றும் பேருந்துப் பயணம் என்பது அவன் தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் பயணமும்கூட.  இக்கதையில் மெல்லிய அங்கத தருணங்கள் இழையோடி வாசிப்பின்பத்தை அளிக்கின்றன. மனைவியை சமாதானம் செய்து அழைத்துவர பெரும் குடிகாரனான விஸ்வநாதன் கதைசொல்லியைச் சந்திக்கும் தருணத்தில் “விஸ்வநாதர்களுக்கு இந்த மாதிரி சமயங்களில் பவ்யம் பிச்சு உதறுகிறது” என்று எழுதுகிறார். கதைசொல்லி வீட்டை அடைந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியை வழமைப்போல் எழுப்பாமல் தானே உண்டு தட்டைக் கழுவி வைத்ததும் தூக்கம் முழிக்கும் மனைவி அவனுடைய வினோத நடத்தையை கண்டு குடித்திருக்கிறானோ என்று சந்தேகிப்பது சிறந்த இருள் நகைச்சுவை. “ஒன்ன வெட்டாட்டியும் ஒம் பிய்ய வெட்டுவேங்குற கததான்” எனும் சொலவடையை வெவ்வேறு சூழல்களுக்கு எண்ணி எண்ணி பொருத்திக்கொண்டேன்.

“அபாயச் சங்கு” சுருளி குடும்பத்துடன் இடம் பெயர்ந்து விவசாயத்தை விடாப்பிடியாக செய்து வருகிறார். சுரேந்திரன் எதிர்வீட்டு பெண் மீது காதல் கொள்கிறான். அவள் அவனைக் கைவிடும்போது காமத்தில் தன்னை அமிழ்த்திக் கொள்கிறான். ஒட்டுமொத்தமாகவே உக்கிரமான வீழ்ச்சியின் சித்திரத்தைச் சொல்கிறது கதை. இந்தக் கதையில் சுரேந்திரன் – கோகிலா, சுரேந்திரன் – ரத்னமணி உறவு சார்ந்து பிரதானமாக கதை நகர்ந்தாலும் சொல்லப்படாத ஊக இடைவேளியில் சுரேந்திரன் – கனகா சார்ந்த திரியும் ஓடுகிறது. ஒருவகையில் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு தொந்தரவு செய்கிறது.கோமதி பெரியம்மாவின் குடும்பக் கதை கதைக்கொரு கூடுதல் அடர்த்தியை அளிக்கிறது. நில உடமையாளனும் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவனும் ஏறத்தாழ ஒரே விதியை சென்றடைகிறார்கள். சுரேந்திரன் வாழ்விலிருந்து தப்பிச்செல்லும் முடிவை எடுக்கும் முன்னரே முதலாளி வீட்டு பாஸ்கரன் கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி செல்கிறான். “அபாயச் சங்கு” யாருக்காக?எதற்காக? என்றொரு கேள்வியை இந்தச் சூழலைப் பொறுத்தே எழுப்ப முடியும். வேளாண்மையும் கிராமங்களும் இங்கே செத்து அழிகிறது என்பதற்கான அபாயச் சங்கு இது.எளிய உரையாடல் வழியாக சமூக மாற்றங்களை அவதானித்து தன் கதைகளில் இயல்பாக கொணர்வதில் வேணு தேர்ந்தவர். வேளாண்மையின் நசிவு மற்றும் நிரந்தர அரசு வேலையின் மீதான ஈடுபாடு, அதன் பொருட்டு சாதிகூட இரண்டாமிடத்திற்கு சென்றுவிடுகிறது. சுருளியப்பனின் பாத்திரமும் அம்மாவின் பாத்திரமும்கூட முக்கியத்துவம் பெறுகின்றன. மொழியாலும் கூர்மையான உணர்வு வெளிப்பாடுகளாலும்  இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.

தொகுப்பின் இறுதி கதையான “கூந்தப்பனை” தமிழில் எழுதப்பட்ட முக்கியமான கதைகளில் ஒன்றாக விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. கதை ஒரு அசாதாரண சூழலை கற்பனை செய்து பார்க்கிறது. அந்தச் சூழலில் மனித மனம் எப்படி செயல்படும் என்று சிந்தித்துப் பார்க்கிறது. பிள்ளைப் பேறு அற்றவர்களின் கதைகள் நாமறிந்தவைத்தான், ஆனால் ஆண்மையற்றவனின் கதை அவனுடைய கோணத்தில் விரிவது தமிழுக்கு இக்கதை வந்தபோது புதிய களமாக இருந்திருக்கும். சதீஷின் தத்தளிப்புகளும் சீற்றங்களும் வாசகனை வெகுவாக அலைக்கழிப்பவை. திடகாத்திரமான கதைநாயகன் சதீஷ் அவனுடைய உடற்கட்டின் காரணமாக எந்தப் பெண்ணையும் தன்னை நோக்கி திரும்ப செய்பவன்.

002

வேணுவின் பல பாத்திரங்கள் பெரும்பாலும் திடகாத்திரமான உடலுடையவர்களாகவும் இருக்கிறார்கள். பாலியல் சித்தரிப்பில் விரசத்திற்கும் கலைக்குமான சன்னமான கோடு உள்ளது. தண்டவாளத்தில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்று அந்த கோட்டில் பயணிக்கிறார். சில இடங்களில் தவறினாலும் பெரும்பாலும் கச்சிதமாக இருக்கிறது அவருடைய அகமொழி. இந்தக் கதையின் புறச் சித்தரிப்பைப் பற்றியும் சொல்ல வேண்டும். நீர் ஒரு பெரும் படிமமாக கதையில் விரிகிறது. நீர் மரபில் இனப்பெருக்க வளத்தின் குறியீடு. சோமனாக சுக்கிலமாக நீரே கொண்டாடப்படுகிறது. கதை முடிவில் சதீஷ் அடையும் தரிசனம் நீரைக் கொண்டு அபாரமாக வெளிப்பட்டுள்ளது. வேணு தன் கதைகளில் மரபான படிமங்களை அதே பொருளில் பயன்படுத்துவதற்கு தயங்கியதில்லை. நிலம் எனும் நல்லாளில் நிலம் பெண்ணாக உருவகப் படுத்தப்படுகிறாள். கூந்தப்பனையில் இறுதிக் காட்சியில் நீரை கண்டடையும் வரை அனைத்துமே வறட்சியாக காய்ந்து கிடக்கின்றன.

கூந்தப்பனை காட்டும் சூழல் முதலில் நம்பகத்தன்மை சார்ந்த கேள்வியை எழுப்பியது. இப்படியொரு வாழ்க்கை சாத்தியமா? நண்பன் மற்றும் மனைவியின் மனமாற்றம் போதிய வலுவுடன் சித்தரிக்கப்படவில்லையோ எனத் தோன்றியது. ஆனால் வாசிக்க வாசிக்க இது எங்கோ நடந்து கொண்டிருக்கும், நடக்கச் சாத்தியமுள்ள நிகழ்வும்கூட என்ற எண்ணம் வலுவடைந்தது. மேலும் புனைவெழுத்தாளன் ஒரு சன்னமான சாத்தியத்தை ஊதிப் பெருக்குபவன், ஆகவே நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பொருளில்லை.

சதீஷ் காமத்தால் அல்லல்படுபவன். “அவனுக்குள் இன்னொருவன் இருந்து கொண்டு கேலி பண்ணுவதை என்ன செய்வது?அந்த இன்னொருவனை உசுப்பிவிட்டது ஜனங்களாகத்தான் இருக்க வேண்டும். தன்னைவிட பலம் பொருந்திய இன்னொருவனை உதறவே முடியவில்லை. அந்த ஆகிருதி விருட்சமாக உள்ளே விரிய விரிய இவன் கூனிக்குறுகிப் போனான்.” மற்றொரு இடத்தில் சதீஷுக்குள் இருக்கும் காமத்தைப் பற்றி இப்படி எழுதுகிறார்-“வெடிக்கவே வெடிக்காத பலூன்போல சிந்தனையில் காமம் ஊதிப் பெருகிகொண்டிருந்தது.”

ஒருவகையில் கூந்தப்பனை சதீஷ் வெண்முரசின் விசித்திர வீரியன் பாத்திரத்தின் அகச் சித்தரிப்புடன் நெருக்கமானவனாக இருக்கிறான்.  உடலில் காமம் அணைந்து மனதில் காமம் கனன்று கொண்டிருப்பவர்களின் தத்தளிப்பை வேணு கதையாக்கியிருக்கிறார். உடல் காமம் மனக் காமமாக தகிக்கிறது. அறைச் சிப்பந்திக் கிழவரின் உரையாடல் வழியாக மீட்சியின் வாசலை முதன்முதலாக கண்டுகொள்கிறான்.“உப்புதான் சாப்பாடுன்னு நினைக்கப் படாதில்லையா?உங்க மனசு முழுக்க அது இருக்கு. வாழ்க்கையில் அது முக்கியந்தான். ஒத்துக்கிடுதேன்  ஆனா அதுவே முக்கியமில்லை .” அடுத்த நிலையில் இரு ஆட்டுக்குட்டிகள் அன்னை ஆட்டின் மடியில் முட்டி பால் குடிக்கும்போது அவை சிணுங்குவது பாலுவின் குரலைப் போலவும் தன் குரலைப்போலவும் கேட்கிறது என்று எழுதும் இடம் நுட்பமானது. அங்கே ஹேமலதா இருவருக்கும் அன்னையாகிறாள். காமம் உன்னத நிலையை நோக்கி நகர்கிறது. இந்த அகமாற்றம் புறத்திலும் பிரதிபலிக்கிறது. ஆணி மாத உச்சி வெயிலில், உலகமே காய்ந்திருக்கையில் மந்தாரை மலர் மட்டும் பூத்து குலுங்குகிறது. இதற்கடுத்த புள்ளியில் எது அழகு என்றொரு விவாதத்தை கதை மேற்கொள்வதன் வழியாக சதீஷின் காமம் அழகாக உன்னதமடைகிறது. அதன் ஊடாக அழகு புனிதம் கொள்வதுதான் ஆண்மையாஎன்றொரு கேள்வியை எழுப்பிகொள்கிறான். துயரத்துக்குள் துடிக்கும் ஜீவனை உணராதவன் அழகினைக் கண்டுவிட முடியுமாஎன்றொரு கேள்வியை எழுப்பிகொள்கிறான். தனக்குள் சுரக்கும் கருணையை, நீர்மையை கண்டுகொள்கிறான். அவனுடைய காமம் பெரும் கருணையாக, பேரன்பாக உன்னதமடைகிறது. அதை அள்ளி உலகுக்கெல்லாம் அளிக்கிறான். பாறைக்கடியில் உள்ள  ஊற்றுக்கண் திறந்து கொண்டது.

வேணுவின் மொழி கட்டற்ற பாய்ச்சலை நிகழ்த்தும் இடங்கள் என கதைகளில் நிகழும் கனவுகளை சொல்லலாம். ராட்டினம் சுற்றும் முகமூடி கிழவன் வரும் ‘அபாயச் சங்கு’ மற்றும் ‘கூந்தப்பனை’ கதைகளில் வரும் கனவுப் பகுதிகள் கதையை யதார்த்த தளத்திலிருந்து நகர்த்துகிறது. மொழியில் நுண்ணிய அக அசைவுகளை கைப்பற்ற முனைகிறார்.

வேணுவின் பாத்திரங்கள் இயற்கையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். “தோப்புகள் அழியத் தொடங்கும் பரிதவிப்பு அங்கு மிதந்து கொண்டிருந்தது. மலட்டு வெள்ளாமையை வைத்து என்ன செய்வது? மரத்தை அழிப்பது சிசுக்கொலை போலத்தான்.” (கண்ணிகள்).“தோப்பு போடுவதில் மனைவிக்கு இஷ்டமில்லை. பருத்தி, கேழ்வரகு, கம்பு பயிரிட்டு வந்த பழக்கம். அவற்றைப் பயிரிட்டுப் பார்க்காமல் போவோமே என்ற வேதனை தொத்திக் கொண்டது. காலங்காலமாக உறவாடி வந்த பயிர்கள் இனி இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.”  “ பிஞ்சுகளை இப்படியெல்லாம் வெட்டி ஒதுக்கி குறிப்பிட்ட கொத்துக்களை உருவாக்கின பழக்கம் இல்லை. வெட்டி ஒதுக்குவது பாவச் செயல்போலத் தாக்கியது. “சாகும் தறுவாயை உதறிய சில மரங்களின் குருத்து ஓலைகள் இளம் பச்சையை நீட்டிக் கிடந்தாலும் ஓரக்கீற்று நுனிகள் ஏற்கனவே காய்ந்து கிடந்தன.” அவருடைய புதிய நாவலான ‘வலசை’ கூட சூழலியல் பிரக்ஞையை அடிநாதமாகக் கொண்டதே. தாவரங்களின் மரணம் வெகுவாக அவர்களை அலைக்கழிக்கிறது.

சு.வேணுகோபாலின் இக்கதைகள் எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நிகழ்பவை. துல்லியமாகச் சொல்வதென்றால் உலகமயமாக்கலுக்குப் பின் வேணு எழுத வருகிறார். ஆனால் அவருடைய வாழ்வும் விழுமியங்களும் இளமையும் உலகமயமாக்கலுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. விழுமியங்களும், இளமையும், கிராமங்களும், வாழ்க்கையும், முந்தைய தொழில்களும் குறுகிய காலத்தில் பழையதாக ஆகி காலாவதியாகும் யுகத்தில் முந்தைய காலத்திணனின் திகைப்பை எழுதுகிறார். தூர்தர்ஷனில் இருந்து ஸ்டார் டிவி அறிமுகம் ஆகும் காலகட்டம்.

பெரும்பாலான வேணுவின் கதைகளைப் போல் இக்கதைகளும் சிறு நகரங்களில் நிகழ்பவை. “ஊரில் இன்னார் இனியார் தெரிந்திருப்பது சாதாரணமாகவே இருக்கிறது. அதனால் இது கிராமம். சுடிதார் , பேக்கிஸ் போட்டுக்கொண்டு அடுத்த தெருவில் உள்ள நண்பர்கள் வீட்டில் அரட்டை அடித்துவிட்டு வருவது வளர்ந்து வருவதால் கிராமத்தின் சாயலை நழுவவிட்டு நகரத்தின் மோஸ்தரை  உடுத்திக்கொண்டது மஞ்சனத்தாம்பட்டி. அர்த்தநாரீஸ்வரர் வடிவம்.” மொத்தமாகவே வேணுகோபாலின் படைப்புக்களில் நகரமயமாகி வரும் தமிழகத்தைப் பற்றிய சித்திரம் தொடர்ந்து ஊடாடிவருவதை காண முடிகிறது. கிராமங்களின் வீழ்ச்சியும் தொடர் சித்திரமாக, அவை நகரங்களின் நீட்சியாக தனித்தன்மை இழப்பதை காட்டுவதாகவும் இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இருவேறு நாகரீக உலகிற்கு இடையே தத்தளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒருவகையில் கிராமத்திலிருந்து வேளாண்மை நசிந்து சிறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்களின் முதல்தலைமுறை கதைசொல்லியாக வேணுவை புரிந்துகொள்ளலாம்.

வேளாண்மையை,பூர்வ நிலத்தைக் கைவிட்ட வேதனை வேணுவின் கதை மாந்தர்களில் பிரதிபலிக்கிறது. தனக்குள் இருக்கும் கிராமத்தானை கொல்ல முடியாமல் தவிக்கும் சிறுநகர பாத்திரங்கள் என ‘ஆட்டம்’, ‘கூந்தப்பனை’, ‘அபாயச் சங்கு’, ‘நிலம் எனும் நல்லாள்’ ஆகிய கதைகளைக் கொண்டு ஒரு பார்வைக் கோணத்தை முன்வைக்க இயலும்.  நசிவிலிருந்து முழுச்சீரழிவுக்கும் (‘அபாயச் சங்கு’, ‘கண்ணிகள்’) மீட்சிக்கும் (‘கூந்தப்பனை’, ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’) இடையிலான ஊசல் என வேணுவின் படைப்புகளை வகைப்படுத்தலாம்.

இன்னும் சற்று நுணுக்கமாக வேணுவின் கதைமாந்தர்களை நோக்கினால் அவர்கள் தங்கள் கனவுகளை தொலைத்தவர்கள். நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே ஊசலாடும் மனிதர்களைப் போல் வாலிபத்திற்கும் மத்திய வயதிற்கும் இடையே ஊசலாடுபவர்கள். தங்கள் இளமையின் ஆற்றலும், லட்சியமும், வேகமும், துடிப்பும் கண் முன் துடித்து அடங்குவதை கண்டு பதட்டம் கொள்பவர்கள். பற்றுகோல் கிடைப்பவன் எப்படியோ மேலேறி விடுகிறான். வாழ்வதற்கான நம்பிக்கையை அடைந்துவிடுகிறான். அப்படி கிட்டாதவன் அழிந்து போகிறான். கதைகளின் ஊடாக இந்த இருமை துலங்கி வருவதை காண முடிகிறது. அபாயச் சங்கு கதையில் வரும் சுரேந்திரனைப் பற்றிய இவ்வரிகள் ஒட்டுமொத்தமாக வேணுவின் கதைமாந்தர்களைப் பற்றியதும்கூட எனத் தோன்றியது-“நிகழமுடியாத விசயங்கள் மனதைப் புரட்டி அலைக்கழித்து தனக்குள்ளே வெறிகொண்டு நீள, முடிவில் சிதறிப் போய் விடுகின்றன.சிதறியதில் மிச்சம் மீதியை நினைவின் துருத்தி ஊதி ஊதி அவஸ்தையை நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கிறது. அப்படியும் நிகழ்ந்து விடுகிறபோது,ஓர் அமைதி மட்டும். சொல்லமுடியாத அமைதி.”

இக்கதைகளில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அபாயச் சங்கு கதையில் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் வரும் கவித்துவமான வரி ஏனோ துருத்தலாக, தொந்திரவாக தென்பட்டது. வேணுவின் கதைகளில் உள்ள மிக முக்கியமான சிக்கல், வீழ்ச்சியின் கதைகள் இயல்பாக, வீரியத்துடன் வெளிப்படுவது போல் வலுவாக மீட்சியின் கதைகள் வெளிப்படவில்லை என்பதே என் எண்ணமாக இருந்தது. கதைப்போக்கில் ஒட்டாமல் ஞானம் போதிக்கும் கதாபாத்திரங்கள் வேணுவின் கதைகளில் தோன்றிவிடுகிறார்கள். இதையே நான் ‘நிலம் எனும் நல்லாள்’, ‘ஆட்டம்’ ஆகிய கதைகளைப் பற்றிய விமர்சனமாகவும் வைத்திருந்தேன். ‘கூந்தப்பனை’, ‘அபாயச் சங்கு’ ஆகிய கதைகளிலும் இத்தகைய தருணங்கள் உண்டு. ஆனால் இம்முறை அது எனக்கு பெரிய துருத்தலாக தெரியவில்லை. ஏனென்று யோசிக்கையில், ஒருவகையில் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறார், அத்தோடு தன்னையொத்த, கிராமங்களில் இருந்து பெயர்ந்து, ஊசலாடிக் கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களை நோக்கியும் வேணு பேசுகிறார். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். “பார் இதோ நான் புதிய நிலத்தில் காலூன்றி விட்டேன், அச்சத்தை கைவிடு, மனிதர்கள் அபாயமானவர்கள்தான் ஆனால் உலகம் ஒன்றும் அத்தனை மோசமில்லை, எப்படியும் பிழைத்துகொள்ளலாம்.”

வேணுவின் ஆதர்சங்களில் ஒருவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் வேறொரு யுக சந்தியில் நின்று பேசியவர். ஏதோ ஒருவகையில் எழுத்தாளன் அல்லது கலைஞன் எப்போதும் யுக சந்தியில் நின்று பேசுபவனாகத்தான் இருக்க முடியும். சு.வேணுகோபாலின் யுக சந்தி புறவயமானது மட்டுமல்ல அகவயமானதும் கூட. சு.வேணுகோபால் யுகசந்தியின் கலைஞன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...