புனைவுக் கலையின் உடல் கற்பனையால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் அதன் உயிர், வாழ்க்கையின் உண்மைகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது. சிங்கப்பூரில் தொடக்க காலத்தில் வெளிவந்த சிறுகதை தொகுப்புக்கு கட்டுக்கதைகள் என்றே தலைப்பிட்டுள்ளனர். ஆகவே புனைவுகள் படைப்பாளனின் கற்பனை எல்லைக்கு ஏற்ப விரிந்தும் ஆழ்ந்தும் சென்றாலும் அதன் உள்ளீடாக சுய அனுபவங்களும் வாழ்வியல் உண்மைகளுமே நிரப்பப்பட்டிருக்கும். உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில் நின்று படைப்பாளி மொழியின் வழி தன் கலையை நிகழ்த்துகிறான். அதன் வெளிப்பாடே புனைவாகிறது. தேர்ந்த புனைவாளன் பொருத்தமான விகிதிச்சார கற்பனையையும் உண்மையையும் கலந்து வாசகனுக்கு இலக்கிய அனுபவமாக கொடுக்கத் தெரிந்தவனாக இருப்பான். கற்பனையோ, தகவல் செறிவோ, பிரச்சார வேகமோ துருத்திக் கொண்டு தெரியாத படைப்புகளே இலக்கிய படைப்பாகின்றன. எழுத்தாளர் சு.வேணுகோபாலின் ‘திசையெல்லாம் நெருஞ்சி’ என்னும் குறுநாவல் தொகுப்பில் உள்ள மூன்று கதைகளை இந்தப் புரிதலோடு நாம் விரிவாக பேசலாம்.
‘திசையெல்லாம் நெருஞ்சி’ குறுநாவல் தொகுப்பில் மூன்று கதைகள் இடம்பெற்றுள்ளன. மூன்றும் வெவ்வேறு சூழலில் நிகழும் கதைகள். வெவ்வேறு கருக்களை அடிப்படையாக கொண்டவை. ஆனால் மூன்றும் ஏறத்தாள ஒரே களத்தில் நிகழக்கூடிய கதைகள். விவசாய மண்ணில் வாழும் சாமானிய மக்களைச் சுற்றியே இக்கதைகள் வரையப்பட்டுள்ளன. புதுமையான வடிவ முயற்சிகள் எதுவும் இல்லை. அடர்த்தியான சம்பவங்களைத் தொகுத்து ஒன்றன் மீது ஒன்று அடுக்கி எழுதப்பட்ட யதார்த்தவியல் கதைகளாக இவை அமைந்துள்ளன. முதலாவது கதை சற்று வேறுபட்டு நடுத்தர கிருஸ்துவ குடும்ப பின்னணியில் இருந்தாலும் அவர்களும் கிராம வாழ்க்கைக்கு அந்நியமானவர்கள் அல்ல. பிற இரண்டு கதைகளும் கிராம வாழ்க்கையோடும் விவசாய மண்ணோடும் இரண்டர கலந்த வாழ்க்கையைச் சொல்லும் கதைகளாகும்.
1
முதலாவது கதை, ‘இரட்சணீயம்’. பதின்ம வயது இளைஞனின் பாலியல் வேட்கையையும் அது தொடர்பாக எழும் குற்ற உணர்வின் மன உளைச்சலையும் விவரிக்கும் கதை. பதின்ம வயதின் தொடக்கத்திலேயே பாலியல் கிளர்ச்சிக்கு உட்படும் ஆல்பர்டு, பின்னர் தொடர்ந்து பெண்கள் துணை தேடுவதில் நாட்டமுடையவனாக மாறிவிடுகிறான். மதப்பற்றும் தேவாலய தொடர்பும் உள்ள குடும்பத்தில் பிறந்த ஆல்பர்ட்டுக்கு தான் பெரும் பாவச்செயலில் ஈடுபடுவதாக உணர முடிந்தாலும் காமம் ஒரு பித்தாக மாறி அவனை இயக்குகிறது. ஆயினும் ஆல்பர்டு உடல் தேவைக்கு பாலியல் தொழிலாளிகளை நாடிச் செல்வதில்லை. வயது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
மாறாக, அவன் தனக்கு அறிமுகமான பெண்களிடத்தில், அதிலும் திருமணம் ஆன பெண்களுடனேயும் முறையற்ற உறவுமுறைகளுடனும் கள்ள தொடர்புகளை வைத்துக் கொள்கிறான். பெண்களை மோகிக்க கள்ள வழிகளை திட்டமிடுபவனாக இருக்கிறான். ஜூலி, காடில்யா சித்தி, ஜெயராணி போன்ற திருமணம் ஆகி குழைந்தை உள்ள பெண்களுடன் அவனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விசயம் சம்பந்தபட்ட பெண்களே முன்னின்று அவனுடனான தொடர்பை வளர்க்கின்றனர். அவர்கள் அவனுக்கு மறுப்பு சொல்பவர்களோ காட்டிக் கொடுப்பவர்களோ அல்ல. அவனுடனான காமத்தை அவர்கள் விரும்புகின்றனர். தங்களின் நிறைவேறாத உடல் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளும் வடிகாலாக அவனைப் பார்க்கின்றனர். தாம்பத்திய வாழ்வில் நிறைவு பெறாத ஜெயராணி “என் கனவெல்லாம் முந்தியே நொறுங்கிப் போச்சுடா, திடீர்னு இப்படி ஒரு வழி திறக்குது பாரு… என்னைத் தவிர நீ யாருகிட்டயும் போகக்கூடாது” என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறாள். அதாவது, ஆல்பட்டை அந்த பெண்கள் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விடலைப்பருவ உடலிச்சையில் சுகம் கண்ட ஆல்பர்ட்டு தன் சுயாதீனத்தை மீட்க முடியாமலே மேலும் மேலும் தவறுகள் செய்கிறான். அவனது தவறுகள் எல்லாம் மொத்தமாக சேர்ந்து ஒரு பெரும் அவமான மூட்டையாக அவன் தோல்மேல் இருப்பதை உணரும் போது அவனது புதிய ஓட்டம் ஆரம்பமாகிறது. பெரும் அவமானத்துடனும் குற்றவுணர்வுடனும் வீட்டில் இருந்து தலைமறைவாக சில நாட்கள் அவன் வாழும் வாழ்க்கையை கதை விவரிக்கிறது.
காமமும் கள்ளத்தனமும் நிறைந்த ஆல்பட்டின் வாழ்க்கைக்கு நேர் எதிராக இருப்பது அவனது பெற்றோரின் கிருஸ்துவ வாழ்க்கையும் அதீத கவனிப்பும். அவர்கள் அவனை கல்வியில் முன்னேற்றி நல்ல நிலையில் வைக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் இருப்பவர்கள். பள்ளி தேர்வுகளில் சுமாராக தேறிய போதும் அவனை தட்டிக் கொடுத்தும் வேதாகம ஜெபங்களை நம்பிக்கையாக சொல்லியும் அவனுக்கு ஆறுதலாக இருக்கின்றனர். தேவாலயத்தில் பேராயராக இருக்கும் ஆல்பட்டின் அப்பாவும், அப்பாவின் சொற்களை தாண்டாத அண்ணனும், அன்பே உருவான அம்மாவும் அவன் குணங்களுக்கு முற்றிலும் எதிரில் இருப்பவர்கள். ஆனால் அவன் துர்குணங்களை முற்றாக அறியாதவர்கள் அல்ல.
தன் கெட்ட பழக்கங்களை ஆல்பட் தானே வெறுக்கிறான். தான் கர்த்தருக்கு எதிராக இருப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. தூய ஆன்மா தனக்குள் இல்லையோ என்று அஞ்சுகிறான். ஆனாலும் அவனால் தன் உடல் இயக்க வேகத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. உந்தித் தள்ளும் காமத்தால் பல மையில்கள் கண் மண் தெரியாமல் ஓடியவன் ஒரு கட்டத்தில் சட்டென முறிந்து விழுகின்றான். அந்தப் புள்ளியில் இருந்து அவனது சுய பரிசோதனையும் கர்த்தரை நோக்கிய மன்றாடும் பெருகி கண்ணீராய் ஓடுகிறது. கதை முழுதுமே நடவோட்டமாகவும் ‘எனக்கு கர்த்தரின் மன்னிப்பு உண்டா?’ என்று கேட்கும் தொணியிலும் எழுதப்பட்டுள்ளது. ஆகவே இக்கதையில் பதின்மவயது இளைஞனுக்குள் ஏற்படும் பாலியல் அலைகளிப்புகள் குறித்த மனோவியல் நோக்கு இல்லாமலே இருக்கிறது. உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான் என்ற பழைய சொல்லாடலின் நீச்சியாகவே இக்கதை இருக்கிறது.
மனோவியல் வளர்ச்சிப் படிகளில் பாலியல் முதிர்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மனோவியல் அடுக்குகளில் ஆழ்மனதை இயக்கும் முக்கிய கூறாக பாலியல் இருப்பதாக மனோவியல் அறிஞர்கள் கூறுவர். உயிரியக்கத்தின் சாரம் பாலியல் உத்வேகம்தான். பொதுவாகவே, உடலில் ஊறும் காமத்தின் புதிய ஈர்ப்பால் அதீதமாக கவரப்படுதலே விடலைப்பருவத்தின் எதார்த்தம். உடலியல் அடிப்படையிலும் மனோவியல் பார்வையிலும் இது இயற்கையின் ஒரு பகுதி. ஆனால் தவறான வழிகாட்டல்களோ அதிகப்படியான கட்டுப்பாடுகளோ மருந்தை முறித்து நஞ்சாக்கி விடுவதைப் போல இயல்பான காம உணர்வை காம வெறியாக மாற்றி விடுவதுண்டு. நமக்கு தெரிந்த இன்றைய பல பெரியவர்கள் ஆல்பர்ட்டு சந்தித்த அதே சூழல்களையும் அதே கள்ளத் தனங்களையும் கடந்துவந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதே அனுபவ உண்மை. வாழ்க்கைப் பருவங்களில் இளமை ரசிக்கத்தக்கதாய் இருக்க காமம் ஒரு முக்கிய காரணம். போகப் போக காமத்தை புரிந்து கொண்டவர்களாக அவர்கள் மாறும் போது முதிர்ச்சி கிட்டுகிறது. சிறுமைகள் குறைகின்றன. ஆயினும் சில விதிவிலக்குகளும் உண்டு.
ஆனால், ஆல்பட்டின் மனம் பிஞ்சிலே பழுத்தது போலவே பிஞ்சிலேயே கனிந்தும் விடுகிறது. அவன் ஒரு கட்டத்தில் தன் வாழ்க்கையே அவமானங்களின் தொகுப்பாக இருப்பதாக உணருகிறான். ஆல்பர்ட்டு தனது தவறுகளை மீட்டுணர முயன்றாலும் அதிலிருந்து தப்பிக்க அவன் தேடுவது கர்த்தரின் கருணையைத்தான். மனவெழுட்சியின் உச்சத்தில் நிற்கும் ஆல்பர்ட்டு தனது உடல் இச்சையைப் போக்க இறைநம்பிக்கையை அதற்கு எதிராக நிறுத்துகிறான். அவன் பெற்றோரின் வழி தான் கற்ற சமய அறிவும் ஏசுவின் கருணையும் தனக்கு கிடைக்கவேண்டும் என்ற மன்றாடல் அவனிடம் இருந்து வெளிப்படுகிறது. தன் உடலில் பெருக்கெடுக்கும் காமத்தை முற்றாக வற்றிப் போகச் செய்ய கர்தரிடம் இறைஞ்சுகிறான்.
ஆனால் அவன் கர்த்தரை நோக்கி ஓடுவதே ஒரு தற்காலிக தப்பித்தல் என்றுதான் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பாவைப்போல் அவன் கர்த்தரின் ஆசியுடைய நல்ல ஆன்மாவாக வாழ விருப்புவதும் கூட சந்தேகத்துகுறியதுதான். அவன் அப்பாவே கூட மதத்தின் துணையுடன் தன் குறைகளை மறைத்து வாழ்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. எரிகிற நெருப்பை போர்வைக்குள் மூடிவைக்க முனைவது போலத்தான் ஆல்பர்ட்டு தன் காமத்தை மதத்தின் துணையுடன் கடக்க நினைப்பதும் என்பதை நாம் உணர்ந்தாலும், கதையாசிரியர் அதுகுறித்த உரையாடல்களை முன்வைக்கவில்லை.
ஆகவே, மத நம்பிக்கையின் வழி உடலாசையை நெறிபடுத்த முனையும் பழைமைவாத சிந்தனையையே இது மீண்டும் வரையறுத்துக் காட்டுகிறது. அதோடு, காமம் என்பது இறைச்சிந்தனைக்கு எதிரான பாவச்செயல் என்கிற மதவாத சிந்தனையும் இழையோடியுள்ளது. சமய சிந்தனை விடலை மனங்களின் காமக் குழப்பங்களை உண்மையாகவே நெறிபடுத்துகிறதா என்ற சாமானிய சந்தேகத்திற்கு சு. வேணுகோபாலின் ‘இரட்சணீயம்’ எந்த பதிலும் தரவில்லை என்பதோடு அதே சிந்தனைப் போக்கை விமர்சனம் இன்றி அங்கீகரிக்கிறது என்பது அதன் பலகீனம்.
ஆல்பர்ட்டு தன் நிலையை பரிசோதிக்க துவங்கும் புள்ளி கதையின் தீவிரத்துக்கு பொருந்தாமல் இருக்கிறது. பிலாஸ் 2, தேர்வில் கணிதப்பாடத்தில் தோல்வி அடைந்ததால் பெற்றோருக்கு உண்டாகும் ஏமாற்றமும் சுற்றத்தாரின் ஏளனமும் அவனை முற்றாக திருப்பிப் போடுகிறது. ஆயினும் தேர்வினால் ஏற்படும் அவமானமும் விரக்தியும் அவனை அப்படி ‘நல்வழி’ நோக்கி நகர்த்தும் என்பதே மிகவும் சாதாராண இளையோர் தன்முனைப்பு கதைக்குறிய தோற்றத்தை கொடுத்துவிடுகிறது. ஆல்பட்டின் ஆழ்மன ஓட்டங்களை மனோவியல் நோக்கில் வாசகன் அணுகவிடாமல் தடுத்துவிடுகிறது.
ஒரு முறை ஆல்பர்ட்டு, ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, பிற பயணிகளின் கடுமையான ஏச்சுகளை வாங்குகிறான். அவன் பெரும் அவமானத்தோடு பேருந்தில் இருந்து இறங்கும் நிலை வருகிறது. மறுநாள் காலையில் பேருந்து நிலையத்தில் அவன் அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். ஆனால் அவள் எந்த சலனத்தையும் காட்டிக் கொள்ளாமல் அவனை அலட்சியப்படுத்தி வெறுமனே நிற்பது அவனைச் சுடுகிறது. அது அவளது வெறுப்பின் வெளிப்பாடா, மன்னிப்பா, முதிர்ச்சியா அல்லது அச்சமா? என்று புரியாமல் குழம்பினாலும், முதல்நாள் பயணிகளிடம் பட்ட அவமானத்தை விட இது அவனுக்குக் கூடுதல் அவமானமாக இருக்கிறது. ஆனால் அந்த அவமான உணர்வு சற்று நேரம் அவனை உளுக்கிவிட்டு சென்றுவிடுவதோடு முடிந்துவிடுகிறது. ஆல்பர்ட்டு தன் நிலையை சீர்தூக்கிப் பார்க்க அமைந்த அற்புதமான வாய்ப்பாகவும் கதையின் திருப்பத்துக்கான புள்ளியாகவும் இருந்திருக்கவேண்டிய இந்த நிகழ்ச்சி ஏனோ வெறுமனே கடந்து சென்று விடுகிறது. தேர்வு முடிவு தரும் தாக்கத்தைவிட வாசகனுக்கு மேற்கண்ட பெண்ணின் மெளனம் கடுமையான விளைவுகளை உண்டாக்குகிறது.
மனித மனதில் ஏற்படும் நொடி நேர திருப்பமும் மாற்றமும் மிக முக்கியமானவை. அந்த நொடி நேர தெறிப்பு பல ஆண்டு குமைச்சலின் வெளிப்பாடக இருக்கலாம். வெளிப்படையான காராணத்தை முன்வைத்து ஏற்படும் மாற்றம் செயற்கையானதும் தற்காலிகமானதுமாக அமைந்துவிடும். சிறுபிள்ளைகளின் வீம்புக்கு நிகரானது அது. ஆனால் சிறுகச் சிறுக குவியும் காரணங்கள் ஒரு புள்ளியில் உடைந்து தலைகீழான மன மாற்றத்தை நிகழ்த்திவிடக்கூடும். வெளிப்பட்டுத் தெரியும் சரிவை விட வெளியில் தெரியாத மற்றவை நிரந்தரமானவை. இலக்கியங்கள் அந்த மாற்றங்களை மையப்படுத்தி பெரும் எழுச்சிகளை நிகழ்த்திக் காட்டியுள்ளன. கோவலனுக்கு மாதவியோடு ஏற்பட்ட மனமாற்றத்தின் புள்ளி மிகவும் முக்கியமானது. அந்த மாற்றத்திற்குப்பின் சிலப்பதிகாரம் செல்லும் திசை அபூர்வமானது. கோவலனின் மன மாற்றத்திற்கு எது காரணம் என்ற பெரும் விவாதம் இப்போதும் தொடர்கிறது. தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலில் அப்புவுக்குள் ஏற்படும் மாற்றங்களும் கேள்விகளும் “உங்க அம்மா மட்டும் யோக்கியமா?” என்று இந்து கேட்கும் கேள்வியில் இருந்து தொடங்குகிறது. சு. வேணுகோபால், இரட்சணீயத்தில் அந்த அளவுக்கு அழுத்தமான புள்ளியை வைக்கவில்லை. ஆயினும் வாசகன் நுட்பமாக உள்நுழைந்து தேட போதுமான இடங்களைக் கொடுத்துள்ளார்.
இறுதியாக, நல்ல குடும்ப சூழலில் பிறந்து நெறியோடு வளர்க்கப்படும் ஆல்பர்ட்டு ஏன் தகாத வழியில் மனம் செலுத்துகிறான் என்ற கேள்வியும் நமக்கு எழவே செய்கிறது. அதற்கான போதுமான சான்றுகள் இக்கதையில் இல்லை என்றாலும், கூடா நட்பு மட்டுமே ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. சேர்வராயன் என்கிற ஆல்பர்ட்டின் நண்பன் அவனுக்கு உடந்தையாக இருப்பவன். ஒன்றாக ஊர் சுற்றுபவன். பலகீனமான கதாமாந்தனாக அவன் கதையில் வந்து போனாலும் அவனது பங்கை வாசகர்கள் சிந்திக்கவே செய்வர். ஆயினும், வெளிப்பட்டு தெரியும் எதையும் விட கதையில் மறைந்து கிடக்கும் சாத்தியங்களை அறிந்து கொள்ள தொடர் விவாதங்கள் உதவலாம்.
2.
இத்தொகுப்பில் உள்ள இரண்டாவது கதை ’உருமால் கட்டு’. கிராமங்களில் கடந்த தலைமுறைகள் உறவுமுறைகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் நவீன தலைமுறைகளிடம் இல்லை. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக்குடும்பங்களாக மாறியதோடு, உறவுமுறைகளின் மதிப்பும் வெகுவாக குறைந்துவிட்டது. இப்படியான மாற்றங்களை பண்பாட்டு தளத்தில் அலசும் அதே நேரம் பொருளாதார தளத்திலும் மிக நேர்த்தியாக அலசும் கதை உருமால் கட்டு. உறவுக்குள் பெண் எடுப்பதும் கொடுப்பதும் கிராம மக்கள் தங்கள் ரத்த உறவுகளை தக்கவைத்துக் கொள்ளும் வழி என்பதைக்தாண்டி பொருளாதார உத்திரவாதமாகவும் அமைக்கப்பட்டிருந்த நிலையை உருமா கட்டு விளக்குகிறது. நிலமும் விவசாயமும் செழித்திருந்த வாழ்க்கையில் உறவுகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையும் முன்னுரிமையும் விவசாயம் பொய்த்த தரிசு வாழ்க்கையில் தொலைந்து போயிருப்பதை இயல்பான கதையாடலின் வழி நுட்பமாக சொல்லிச் செல்கிறது இக்கதை.
நகரத்தில் பணிபுரியும் குபேந்திரன் தனக்கு ஏற்பாடாகியிருக்கும் உருமால் கட்டு விழாவிற்கு (திருமணத்தோடு தொடர்புடைய ஒரு சடங்கு. தாய்மாமன் முன்னிருந்து செய்யவேண்டிய விழா). சுற்றத்தாருக்கும் நண்பருக்கும் அழைப்பிதழ் கொடுக்க தன் சொந்த கிராமத்திற்கு வருகிறான். அதே கிராமத்தில் அவனது தாய்மாமன்கள் நால்வரும் பிற நெருங்கிய உறவினர்களும் வாழ்கின்றனர். ஆயினும் குபேந்திரனின் பெற்றோருக்கும் அவனது தாய்மாமன்களுக்கும் பகைமை உண்டு.
குபேந்திரனின் தாய் மூன்று அண்ணன்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள். ஆயினும் அவள் தன் மகள்களை அண்ணன் பிள்ளைகள் யாருக்குமே திருமணம் முடித்துக் கொடுக்காமல் வெளியாட்களோடு சம்மந்தம் வைத்துக் கொண்டது பகைமைக்கு முக்கிய காரணம். குபேந்திரனுக்கும் கூட அவனைவிட அதிகம் சம்பளம் வாங்கும் வெளியூர் பெண்ணையே திருமணம் செய்ய ஏற்பாடாகியிருக்கிறது. அவனை அதிகம் விரும்பிய மாமன் மகள் பூங்கொடியை “ஐவசு இல்லாத குடும்பத்தில் நான் ஏன் பொண்ணெடுக்கனும்?” என்று கேட்டு அவன் அம்மா தட்டிக்கழித்து விட்டாள். குபேந்திரனின் அக்காள்கள் இருவரும் உயர்கல்வி கற்று நகரங்களில் அரசாங்க வேலைகளில் இருக்கின்றனர். அவர்களின் புகுந்த வீடுகளும் செல்வச் செழிப்பிற்கு குறைவில்லாத இடங்கள். ஆனால் உரிமையும் முறையும் உள்ள சொந்தங்கள் தரிசு நிலங்களில் விவசாயத்தை விட்டுச் செல்ல முடியாமல் வறுமையோடு போராடிக்கொண்டு வாழ்கின்றனர்.
காலையில், வீட்டில் இருக்கப்பிடிக்காமல் தோட்டத்தில் விவசாய வேலையில் இருக்கும் தன் நண்பன் மணிவண்ணனை பார்க்க குபேந்திரன் நடக்கும் வழியில் எதிர்படும் உறவுகளுடனான உரையாடல்கள் வழி பெரும்பகுதி கதை சொல்லப்படுகிறது. பொதுவாகவே இக்கதையில் உரையாடல்கள் மிகவும் சிறப்பானவை. சுவாரசியமான உரையாடல்கள் வழி சு.வேணுகோபால் மண்ணையும் விவசாய வாழ்க்கையையும் அதன் சிக்கல்களையும்கூட மிக எதார்த்தமாக சொல்லிவிடுகிறார். கிராம மக்கள் விலாவாரியாக பேசுகிறார்கள். நகர வாழ்க்கையில் ஒன்றிவிட்ட குபேரன் ஒரிரு சொற்களில் பதில் தருகிறான். “பொண்ணு நெறைய படிச்சிருக்கும். ஏங் குபேந்திரா?” என்று நயமாக கொக்கி போடும் உரையாடல்கள் ரசமானவை. “ஐயோ… அதயேன் கேக்குற? என்று தொடங்கி மலேஸ்வரி அக்கா கூறிய பூங்கொடியின் சிரம வாழ்க்கையை அறிந்து அவன் மனம் வருந்துகிறான்.
குபேந்திரன் தன் வீட்டிற்கு வந்தது முதலே மனம் குழம்பிய நிலையிலேயே இருக்கிறான். அந்த ஊரில் வாழும் தன் சொந்தங்களை எதிர்கொள்ள உள்ளூர ஒரு தயக்கமும் மெல்லிய குற்ற உணர்வும் அவனிடம் உண்டு. ஏதும் குறை வைந்துவிடக்கூடாது என்கிற பயம் அவனிடம் இருக்கிறது. பகைமை உணர்வோடு இருக்கும் தாய்மாமன்கள் தன் திருமண ஏற்பாட்டில் ஏதாவது குறையைக் கண்டுபிடித்து சத்தம் போட்டு கலாட்டா செய்வார்களோ என்ற அச்சமும் அவனுக்குள் ஏற்படுகிறது. அதே நேரம் ஊர் மக்களின் அதிகப்பிரசங்கித்தனங்களையும் தொண தொணப்புகளையும் சலித்துக் கொள்கிறான். கிராம மக்கள் தங்கள் பாணியில் முன்வைக்கும் விவரனையான விசாரிப்புகளை அதிகப்படியான மூக்குநுழைப்புகள் என்று மனதில் கருவிக் கொள்கிறான். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றாலும், தனக்கு கிராமத்தில் இன்னமும் பிணைப்புகள் இருப்பதாக அவன் நம்பினாலும், உண்மையில் மனதால் அவன் நகரத்தானாக மாறியிருக்கிறான். அதன் வெளிப்பாடே அவனது சுறுக்கமான பேச்சு.
தோட்டத்தில் நண்பன் மணிவண்ணன், கருணை கிழங்கு பயிர் செய்யும் இடத்தில் நடைபெரும் உரையாடல்களும் பயிர் செய்யும் முறைகுறித்த விவரிப்புகளும் புது அனுபவமாக அமைகின்றன. வரப்பும் சேறும் கருணைகளும் விவசாய அனுபவம் உள்ள ஒரு படைப்பாளியால் நேர்த்தியாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. அதே இடத்தில் முன்னர் செழிப்பாக வாழ்ந்த சிறிய தாய்மாமன் முத்துராஜ் (பூங்கொடியின் அப்பா) மணிவண்ணனிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதை நேரில் பார்த்ததும் குபேந்திரன் உள்ளூர உடைந்து போகிறான். அவர் படித்தவர். கம்பீர தோற்றம் உள்ளவர். விவசாயத்தின் மேல் இருந்த நம்பிக்கையிலும் ஆசையிலும் அரசாங்க வேலை தேடாமல் இருந்துவிட்டார். கால ஓட்டம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டிருக்கிறது. அவர் நம்பிய விவசாயம் அவருக்கு கைகொடுக்கவில்லை. நிலம் இருந்தும் அதில் முன்னைய செழிப்பில்லை. அடிப்படையில் நீர் பற்றாகுறையினால் விவசாய நிலங்கள் வரண்டு கிடக்கின்றன. பாரம்பரியமாக விவசாயம் செய்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை பஞ்ச வாழ்க்கையாக மாறியிருப்பதை ராசு தாத்தா வழியும் அறிய முடிகிறது. மூத்ததலைமுறையின் பஞ்ச வாழ்க்கையே குபேரன் போன்ற புதிய தலைமுறை மனிதர்கள் நகரங்களுக்கு தொழில் தேடி செல்ல காரணமாக இருக்கலாம்.
மாலையில் அழைப்பிதழ்களை தன் தாய்மாமன்களிடம் கொடுக்க குபேரன் தன் தந்தையுடன் செல்கிறான். அப்படி வீடு தேடி சென்று கொடுப்பதுதான் சரியான முறை என்று அவன் அப்பா சொல்லவும் வேறு வழியின்றி குபேரன் செல்கிறான். முதல் வீடு மூத்த தாய்மாமன் கதிரய்யா வீடு. அவர்களிடம் அவனது அம்மா “இந்தா பாருங்க, எங்கண்ணன் தத்தக்காபுத்தக்கான்னு சத்தம் போட்டா ஒண்ணும் பேசாதீங்க. பேசாம பத்திரிக்கைய திண்ணையில வச்சுட்டு வந்திருங்க” என்ற ஆலோசனையைச் சொல்லி அனுப்புகிறாள்.
அதன் பின் கதிரய்யா வீட்டில் நடப்பவை உறவுகளின் பல பரிமாணங்களைக் காட்டி நிற்கும் காட்சிகள். கதிரய்யாவும் அவரது மனைவி செண்பகமும் நடந்துகொள்ளும் பாங்கும் அதற்கு குபேரனின் தந்தையின் பாவணையும் பிறகு குபேரனிடம் “சரிங்கிறது மாதிரி தலையாட்டிட்டு கழண்டுக்கணும். நொப்பமா இருக்கணும்டா” என்று தனிமையில் சொல்லும் அறிவுரையும் உறவுகளின் பாசாங்கு மனதை மிக கச்சிதமாக காட்டிவிடுகின்றன.
இக்கதையில் வரும் ‘அம்மா’ கதாப்பாத்திரம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. கதையின் முழு சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டிய இக்கதாப்பாத்திரம் இரண்டு இடங்களில் மட்டுமே காட்டபபடுகின்றன. குபேரனை நேசிக்கும் பூங்கொடிக்கு தன் நிலைப்பாட்டை குத்தலாக சொல்லும் நேரத்திலும் கதையின் கடைசிபகுதியில் தன் அண்ணங்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தன் கணவனுக்கு சொல்லும் போதும் மட்டுமே அம்மா பேசுகிறாள். அந்த பேச்சுகளில் ஒளிந்திருப்பது சுயநலமா அல்லது தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் பெண்ணின் இயல்பான குணமா என்பதை விவாதிக்கலாம்.
இக்கதையில் செங்கம்மாள் என்னும் தொன்ம கதாப்பாத்திரம் ‘அம்மா’ கதாப்பாத்திரத்திற்கு எதிரான பாத்திரமாக அமைந்துள்ளது. திருமணமாகி கணவன் வீடு சென்ற பின்னும் தன் அண்ணன்களின் நலனில் அதீத அக்கரை செலுத்தி தன் கணவனையே விலக்கி தாய்வீட்டிலேயே வாழ்ந்து மாண்ட செங்கம்மாளை ஊரார் தெய்வமாக்கி வழிபடுகிறார்கள். அவள் அந்த மக்களின் குலதெய்வமாகிறாள். ஆனால். அந்தக் குலதெய்வத்தையே வழிபட்டு வாழும் ‘அம்மா’ முற்றிலும் மாறுபட்டு தன் அண்ணன்களின் உறவை அற்பமாக நினைக்கும் பெண்ணாக இருக்கிறாள். செங்கம்மாளும் அம்மாவும் வாழ்க்கையின் இரண்டு துருவங்களில் வாழும் பெண்கள். இருவரின் பொருளாதார சமூக பார்வையும் முரணானவை. ஆனால் அவர்களே காலந்தோரும் குடும்பங்கள் இயங்க மையமாக இருப்பவர்கள்.
குபேரன் இரண்டு பெண்களின் கதைகளையும் அறிந்தவன். அதனால்தான் அவன் கண்கள் கலங்க இன்னொரு பெண்ணான தன் அத்தை செண்பகத்தின் காலில் எந்த மனத்தடையும் இன்றி விழுந்து ஆசி வாங்கிக் கொள்கிறான். பெண்களின் ஆசியோடே குடும்ப உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
3
இத்தொகுப்பின் தலைப்பை பெயராக கொண்ட மூன்றாவது கதை ‘திசையெல்லாம் நெருஞ்சி’. கிராம பகுதிகளில் சாதியம் தொழில்படும் இடங்களை மையமாக்கிய மிகவும் முக்கியமான கதை இது. வழக்கமான சாதிய எதிர்ப்பு பிரச்சாரமாக இல்லாமலும், சாதிய ஒடுக்குமுறைளுக்கான பரிவை கோரும் கதையாகவும் அமையாமல், சாதிய மனம் எப்படி இயங்குகிறது என்பதை காட்டும் கதை என்பதால் ‘திசைசெயெல்லாம் நெருஞ்சியை’ பல கோணங்களில் இருந்து வாசித்து விவாதிக்க முடியும்.
சாதிய அடிப்படையில் தங்களை உயர்ந்தவர்களாகவும் பிறரை கீழாகவும் கருதும் அந்த ஊர் மக்களிடையே இருக்கும் வினோத நம்பிக்கை முண்டக்கை அம்பட்டையனார் தெய்வமும் அதன் தொன்ம கதையுமாகும். ஒரு காலத்தில் அந்த சிற்றூரில் முடிதிருத்தும் தொழிலாளிகள் தொடர்ந்து நோயினால் இறந்து போகவும் ஊர்கூடி அய்யனாரிடம் கங்கனம் கட்டி விரதம் இருந்த நாற்பதாவது நாளில் ஒரு இளைய நாவிதன் அந்த ஊருக்கு வந்து சேர்கின்றான். அந்த இளைஞன் முடிதிருத்துவதோடு கூத்துக்கலையில் சிறந்து விளங்குகிறான். அந்த ஊரார் அதுவரை அறிந்திராத அர்புத நடங்களை அவன் ஆடிக் காட்டுகிறான். அவன் மேல் மூக்காயிக்கு காதல் உண்டாகிறது. இந்த கள்ளக்காதலை அறிந்த ஊர் மக்கள் திரண்டுவந்து அவனை தாக்கவும் அவனது துண்டித்து விழுந்த இடதுகை மட்டுமே மண்ணில் கிடக்க அவன் மறைந்து போகிறான். அதன் பின்னர் மக்கள் முண்டக்கை அம்பட்டையனார் கோயிலை அமைத்து வைகாசி கடைசி வெள்ளியில் பூசை வைக்கின்ற வழக்கம் வருகின்றது.
அதே சிற்றூரில் பரம்பரை நாவிதனாக இருக்கும் பழநியும் அவன் மனைவி குருவம்மாளும் நடைமுறையில் சாதிய அடிப்படையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை இக்கதை விவரிக்கிறது. நீண்டகாலமாக அதே ஊரில் முடிதிருத்தும் கடை வைத்து தொழில் செய்து வரும் பழநிக்கு அந்த ஊர் மக்கள் மேல் மிகவும் மரியாதை உண்டு. அவன் மனைவிக்கு அந்த ஊர் பல காரணங்களால் மிகவும் பிடித்தமான ஊராக இருக்கிறது. அந்த ஊர் மக்களும் பழநியிடம் மிகவும் நல்ல முறையிலேயே பழகுகின்றனர். பழநியின் சேவையையும் உதவியையும் அவர்கள் உரிமையோடு பெற்றுக் கொள்கின்றனர். அவனது கடை மாலை வேலையில் பலர் கூடி அமர்ந்து அரட்டை அடித்து மகிழும் களமாகவும் இருக்கிறது. அவனது இளமை காலம் முதல் அவனுக்கு சோறுபோட்டு வளர்த்த ஊர் அது என்பதால் பழநிக்கும் அந்த ஊர் மக்கள் மேல் மிகுந்த பாசம் உண்டு.
ஆனால், அந்த நட்பும் அன்பும் பிணைப்பும் சாதியமனோபாவத்திடம் முற்றாக தோற்றுப் போகும்படியான சம்பவம் ஒன்று நடந்துவிடுகிறது. பழநி தன் மகள் பொன்னியின் காதுகுத்துக்கு கிடைத்த ஐயாயிரம் ரூபாய் மொய்ப்பணத்தை குமரனுக்கு கடனாக கொடுக்கிறான். குமரன் அதே ஊரில் பால் பண்ணை நடத்தும் வியாபாரி. ஒரு மேல்தட்டு மனிதன் தன்னிடம் வட்டிக்கு கடன் கேட்டதில் பழநிக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதன் காரணமாகவே முன்பின் யோசிக்காமல் கையில் இருந்த பணத்தை கடனாக குமரனுக்கு கொடுத்துவிடுகிறான். வட்டிக்கு வாங்கிய பணம் மூன்று வருடம் சென்றும் குமரனால் திரும்ப செலுத்தப்படாததால் பழநி, குமரன் வீட்டுக்கே சென்று பணத்தை உடனே கொடுக்கும்படி கேட்கிறான். உண்மையில் குமரன் பல காரணங்களைக் கூறி பழநியை ஏமாற்றும் உள்நோக்கத்தோடே இருக்கிறான். தன்னை விட சாதியால் தாழ்ந்த ஒருவன் தன்னிடம் சட்டதிட்டமாக கொடுத்த பணத்தை கேட்பது அவனுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஒரு நாவிதன் தன்னைப் போன்றவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும் என்பதே அவன் எண்ணம். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு நச்சரிப்பதும் அத்துமீறல் என்றே நினைக்கிறான். அதை தொடர்ந்து குமரன் மது போதையில் பழநியின் கடைக்குச் சென்று அவனிடம் தகராறு செய்வதோடு அவன் மனைவி குருவம்மாளையும் இழிவாக பேசுகிறான். அவளுக்கு பாலியல் தொல்லையும் கொடுக்கிறான்.
பொறுமை இழந்த பழநி, குமரனை எட்டி உதைத்து விடுகிறான். இதனால் ஊர்பஞ்சாயத்து கூடுகிறது. பஞ்சாயத்து, குமரன் ஏன் பணத்தை கொடுக்க வில்லை என்பது பற்றிய விசாரனையாக இல்லாமல், பழநி எப்படி குமரனை உதைக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது. “அம்பட்டையான் எப்படி காலால் உதைக்கலாம்? இதற்கு பதில் சொல்லிவிட்டுத்தான் பணப் பிரச்சனையைத் தொடவேண்டும்?” என்று அதற்கு முன்பு பழிநிக்கு நட்பாய் இருந்த அந்த ஊர் கோபமாக குரல் எழுப்புகிறது.
அவன் அதுவரை நட்பாய் இருந்த சில ‘நல்ல’ மனிதர்களும் அவன் உதவியைப் பெற்ற சிலரும் கூட அவன் ஞாயங்களை சபையில் சொல்லாமல் மெளனம் சாதிக்கின்றனர். வலுவான சாதிய கட்டமைப்பில் இயங்கும் பஞ்சாயத்தின் முன்னும் ஊர் வழக்கங்களின் முன்னும் மனிதாபிமானங்களை விட சுயஅபிமானங்களே முதன்மையாகின்றன. அதே நேரம் மல்லையா தன் முன்விரோதத்தை இந்த நேரத்தில் சரியாக பயன்படுத்திக் கொண்டு பழநிக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்று ஆவேசமாக கூறுகிறான். பதினைந்து நாளில் வீட்டையும் கடையையும் காலிசெய்ய வேண்டும் என்றும் அன்றே வெளியேறிவிட வேண்டும் என்றும் கருத்துகள் பேசப்படுகின்றன.
பழநிக்கு இந்த இக்கட்டில் இருந்து எப்படி மீளவேண்டும் என்று தெரியும். பஞ்சாயத்துக்கு வரும்முன் குருவம்மாளும் பலமுறை சொல்லி அனுப்புகிறாள். பழநி தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டு பஞ்சாயத்தார் காலிலும் குமரன் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். தண்டம் கட்டச் சொன்னாலும் திரும்ப திரும்ப மன்னிப்பு கோர வேண்டும். பஞ்சாயத்தின் கருணையை பெறவேண்டும். அதுவே பஞ்சாயத்தார் மனம் இளக வழி. இறுதியில் சாதாரண தண்டம் கட்டச் சொல்வார்கள். கடனாக கொடுத்த பணத்தை குமரனிடம் இருந்து வசூலித்து கொடுக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொள்வார்கள். ஆதிக்க சாதிகளின் முன் மண்டியிட்டு பணிந்துவிடும் கீழ்சாதிக்காரர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் பழநி எதுவும் பேசாமல் நிற்கிறான். அவனுக்குள் அவனுக்கான நீதியைப் பற்றிய வினாக்களே எழுகின்றன.
“பேசாம நின்னா என்னப்பா அர்த்தம்?…” என்னும் பஞ்சாயத்து பெரியமனிதர்கள் ஆண்டியப்ப பிள்ளையின் கேள்வியிலும் ராமுத்தேவர் கேள்வியிலும் ‘‘காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடு” என்னும் அறிவுரை மறைந்திருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக, பழநி “சரி, வீட்ட காலி செஞ்சிடுறேன் சாமி” என்று சொல்லிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியாவதை அந்தப் பஞ்சாயத்தின் மேட்டிமை மனம் ஏற்க முடியாமல் கொந்தளிக்கிறது. “அம்பட்டையனுக்கு இவ்வளவு திமிரா? இழுத்து போட்டு நாளு மிதி மிதிங்கடா அவன” என்று சிலர் சீறுகின்றனர்.
இதற்குமுன் பல சந்தர்ப்பங்களில் பழநியிடம் சுபாவமாக நடந்து கொண்டு அவன் உதவியை பெற்றவர்கள் கூட, “இவன்க எல்லாம் இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்பானுங்க. வக்காளி, ஒரு அம்பட்டையான் திருப்பி அடிக்கிற வரைக்கும் வந்திட்டான்னா இது ஊரா? காடா? “ என்று சினந்தெழுகின்றனர்.
அதன் பின்னர் பழநி அதே ஊரில் தனிமை படுத்தப்படுகின்றான். ஊர் மக்கள் அச்சத்தின் காரணமாகவும் சாதிய வெறுப்பின் காரணமாகவும் பழநி குடும்பத்தாரிடம் பேசுவதையும் தவிர்க்கின்றனர். பழநி தினமும் புதிதாக கடை போட இடம்தேடி பல இடங்களுக்கும் ஊர்களுக்கும் அலைகிறான். எல்லாம் தோல்வியில் முடிகிறது. பதினைந்து நாள் கெடு நெருங்கவும் அவனுக்குள் பதற்றம் அதிகரிக்கிறது. தான் பஞ்சாயத்தாரிடம் மன்னிப்பு கேட்டுவிடுவதே சரியோ என்று அவன் சிந்திக்கிறான். ஆனாலும் குருவம்மாள் அந்த ஊர் தங்களை கைவிட்டு விடாது என்றே நம்பிக்கையுடன் இருக்கிறாள். அவள் மதிக்கும் சில பெரிய மனிதர்களை சந்தித்து மன்னிப்பு கேட்டு நிலைமையை சரியாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறுகிறாள். பழநிக்கும் அது சரியாகவே படுகிறது. கடைசி நேரத்தில்…”சரி இனிமேல் இப்படியெல்லாம் நடந்துக்கக் கூடாது” என்று கூறி ஊரார் தங்களை மன்னித்து விடுவார்கள்; இந்த ஊரிலேயே வாழலாம் என்ற நம்பிக்கை குருவம்மாளிடம் இருக்கிறது. ஆனால் அந்த நம்பிக்கை மல்லையாவின் தான்தோன்றித்தனமான செய்கையால் சிதைந்து போகிறது.
பழநியின் தன்மானம் தொடர்ந்து சீண்டப்படுகிறது. சாதி மனம் உள்ளூர் பெரியவர்களை மனிதாபிமானம் அற்றவர்களாக செய்கிறது. கதை முடிவில் பழநி எடுக்கும் முடிவு நிரந்தரமான தீர்வாக இல்லாமல் போனாலும் அவனுக்குள் கொந்தளித்த தீக்கனலை வெளியேற்றிய வடிகாலாக இருக்கிறது. ஆனால் அதன் எதிர்வினை மிகவும் பயங்கரமாக மாறக்கூடிய சாத்தியங்களும் உள்ளன.
சாதிய உணர்வு என்பது தனிமனித தன்மானத்தோடு பிணைந்து கிடக்கிறது. சாதியால் தாழ்த்தப்படுபவனிடம் சிதைக்கப்படுவதும் அவனது தன்மான உணர்வே. சாதிய இழிவை பிறர் மேல் செலுத்துதல் என்பது ஒருவகை சமூக வன்கொடுமையாகும். அடுத்தவனின் தன்மானம் சிதைக்கப்படுவதன் வழி தனது மேட்டிமையை கட்டமைத்துக் கொள்வதையே சாதிய மனம் ஒரு சாதனையாகச் செய்கிறது. பல அடுக்குகளிலும் இந்த தன்மான இழிவுகளும் சமூக வன்கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன. தன்னை விட தாழ்ந்தவன் என்ற மாயையை இன்னொருவன் மேல் செலுத்தும் வன்முறையை சாதிய மனம் விரும்புகிறது.
மனிதர்கள் கூட்டமாக இருக்கும் போது சாதிய மனம் மேலும் வீரியம் கொண்டு பாய்கிறது. அதிகாரத்தோடு அது செயல்படுகிறது. எளியவனை அடக்கி பணியவைக்க சமூக பொருளாதார கட்டமைப்புகள் கைகொடுக்கின்றன. இக்கதையில் வரும் மனிதர்கள் எல்லாரும் சாதிய மேட்டிமை மனம் கொண்டவர்கள் அல்ல. பழநியின் மேல் கரிசனம் கொண்டோர் சிலரும் உண்டு. அவர்களின் சாதிய உணர்வு அதிகாரத்துக்கு அடங்குதலின் வழி வெளிப்படுகிறது. சாதிய அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட அவர்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். சமூக அமைப்பில் சாதிய அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதே சரியென்ற முடிவோடு வாழப்பழகிவிட்ட மக்கள் அவர்கள். ஆகவே, அதிகாரத்துக்கு அடங்கிக் கிடக்கும் வரை சாதிய மனம் வேலைசெய்வதில்லை. ஆனால் தன்நிலையை எளியவன் கேள்விக்கு உட்படுத்தும் போது சட்டென அது அதிகார தரப்பை உசுப்பிவிடுகின்றது.
சாதிய உணர்வு என்பது மனித மனங்களில் பல வடிவங்களில் மறைந்து கிடப்பதை நாம் மறுக்க முடியாது. பிறப்பு, இனம், தொழில், நிறம் என்ற ஏதோ ஒரு வழியில் தன்னை உயர்ந்தவனாகவும் பிறரை தாழ்ந்தவனாகவும் பார்க்கும் பார்வையே சாதிய மனத்தின் மையமான செயல்பாடாகும். சிறுபான்மை சமூகங்கள் அடக்குமுறைக்குள்ளாவதன் பின்னனியிலும் இவ்வகையான சுய மேட்டிமை சிந்தனையே மிகுந்துள்ளது. எடுத்துக்காட்டாக, மலேசிய பின்னணியில் பெரும்பான்மை மலாய் சமூகத்துக்கு முன்னே சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு காரணமாக சாதிய மன கட்டமைப்பை சரியாக பொருத்தி பார்க்க முடியும். “இவனுங்களுக்கு இடம் கொடுத்தா பிறகு இந்த மண்ணில் நமது மரியாதை என்னவாகும்?” என்று நாவலில் வரும் சாதிய மேட்டிமை கேள்வியை, மலேசிய இனவாத மலாய் சமூகம் முன்வைக்கும் ‘பூமிபுத்ரா’ அடையாளத்துடன் பொருத்திப்பார்க்கலாம். பிறரை வந்தேறிகள் என்று கூறி சிறுமை படுத்துவதும் சாதிய மனத்தின் செயல்பாடுதான். இனத்தின் அடிப்படையில் அதிகாரத்தையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்வதை அரசியலாக்கிக் கொண்டிருப்பதால் மலேசியாவிலும் தேசிய அளவில் சாதிய மன செயல்படுவதை நுட்பமாக உணரலாம். சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையின் முன் பணிந்தும் விட்டுக் கொடுத்தும் வாழும்வரை அவர்களை நட்பாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பான்மை சமூகம், தங்கள் உரிமையை பிறர் கேள்விக்கு உட்படுத்தும் போது எதிரிகளாக ஆகிவிடுவதை மலேசியா முதற்கொண்டு இலங்கை, பர்மா முதலான பல நாடுகளின் வரலாறுகளும் நமக்கு உணர்த்துகின்றன.
ஆகவே, ஒரு சிற்றூரில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறையை சித்தரிக்கும் கதையாக ‘திசையெல்லாம் நெருஞ்சியைப்’ பார்பதைவிட மக்களின் மனதில் செயல்படும் மேட்டிமை புத்தியின் பரிமானங்களைக் காட்டும் எளிய வடிவமா வாசிப்பது மேலும் விரிவான பார்வையைக் கொடுக்கும்.
முடிவாக, தேவதேவன் சு.வேணுகோபாலின் படைப்புகள் குறித்து ‘நிராதரவான, கைவிடப்பட்ட, மட்டும் அல்லாது நெருக்கடிகளிலும் இக்கட்டுகளிலும் சிக்கிக் கொண்ட துயரார்ந்த மனித நிலைகளைத்தான் தன் கதைகளின் கருக் களமாக எடுத்துக் கொள்பவர்’ என்று குறிப்பிடுவது எத்தனை மெய்யான சொற்கள் என்பதை ‘திசையெல்லாம் நெருஞ்சி’ குறுநாவல் தொகுப்பு காட்டுகிறது. இத்தொகுப்பில் உள்ள மூன்று கதைகளின் நாயகர்களும் ஏதோ ஒரு நிலையில் நிராதரவு மனோநிலையில் உழவுபர்களே. அவலங்களும் நெருக்கடிகளும் நிகழும் போது மனித மனதில் செல்லும் சிந்தனையோட்டங்களை சு.வேணுகோபால் கச்சிதமான சொற்களில் காட்சிபடுத்திவிடுன்றார். மொழியாலும் கருத்தாலும் ஆரவாரமான கதையாடலை முற்றாக தவிர்த்துவிடும் சு.வேணுகோபாலின் கதைகள் சாமானிய மனிதர்களின் மனப்போராட்டங்களை சிற்றோடைகளின் நீரோட்டம் போல குளுமை மாறாமல் கொண்டு செல்கின்றன.