விடிகாலை, சிப்ட் முடித்துவிட்டு மில்லிலிருந்து ரகுராம் சைக்கிளில் வந்தான். மாணிக்கம் ஆசிரியர் திண்ணையில் இருந்த துரையும் சின்னச்சாமியும் வேகமாக எழுந்து நடந்தார்கள். கேசவன் டீக்கடை முன் தேங்காய் உரிக்கும் வாச்சியோடு நின்றிருந்த செல்வமும் பரமேஸ்வரனும் வேகமாகப் போனார்கள். டீக்கடை எதிரில் உள்ள புங்கமரத்தின் அடியில் போட்டிருந்த பட்டியக்கல்லில் சைக்கிளில் இருந்தபடியே காலூன்றி நின்றான். வடக்கால் இருந்துவந்த டாக்ஸி மெதுவாக பெருமாள்கோயில் தெருவிற்குள் நுழைந்தது.
வேட்டியை மடக்கிக் கட்டியபடி அந்தப்பக்கமிருந்து வந்த சிவராஜ், டீக்கடையில் சாய்த்து வைத்திருந்த தேங்காய் போடும் சல்லையை எடுத்தான். “சிவா என்னடா” என்றான் ரகுராம். “தர்மராஜ் மாமாவுக்கு மூச்சுத் திணறல். விடியக் காலையில ஒரு வடியா வந்திருக்கு. ஒண்ணும் சொல்லாம விட்டிட்டாரு. மறுபடியும் ஒரு மாதிரி திணர்றத பெரிய மகன் சுப்பு பார்த்துக் கேட்டிருக்கார். அப்பறந்தான் டாக்ஸிய கூப்பிட்டிருக்காங்க. போகுது.” அடிமனம் குள்ளென்றது.
சின்ன வயதில் அவரைக் கொல்லவேண்டும் என்று துடியாகத் துடித்தது உண்டு. ஓராண்டு காலம் சேலம் ஓட்டல்களில் எச்சியிலை எடுக்கும் வேலையைவிட்டு வந்தபின் அந்தக் கோபம்கூட குறைந்துவிட்டது. தர்மராஜ் மளிகைக்கடையை மூத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு நல்லகாரியம் சாவு காரியங்களில் வந்து தவறாமல் நின்றுவிடுகிறார். டீக்கடையிலோ, கோயில் திடலிலோ சைக்கிளில் திரும்பி வரும் காலை நேரங்களில் புளியமரச் சாலையில் நடைப்பயிற்சி போல சாவகாசமாக அவர் நடந்து போவதைப் பார்க்க நேரும். பார்க்கக்கூடாது என்பதையும் மீறி பார்த்துவிட நேர்ந்தால் அவரது முகத்தில் மெல்லிதான மலர்ச்சி தோன்றும். மாலை நேரங்களில், ஏதோ ஒரு விசயம் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது வந்தால் அருகில் நிற்பார். பேச்சிற்கு இசைவான சில விசயங்களை ஜாடையாகப் பேசுவார். பத்துப் பதினைந்தாண்டுகளாகவே அம்மாதிரி வந்து இணைந்துகொள்வார். நாளாக நாளாக கொலைவெறி இல்லாது மறைந்துவிட்டது. கோபமும் இல்லை. வெறுப்பும் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்முன் போய் நிற்கவும் கூசுகிறது. வயது எண்பதாகப் போகிறது. அப்படியே துர்சம்பவம் நடந்து என்ன ஆகப்போகிறது. அப்படி நடப்பதிலும் ரகுராமிற்கு விருப்பம் எழவில்லை.
சைக்கிளைக் கொண்டுவந்து அடுக்கிவைத்திருக்கும் பழைய தட்டோடுகளின் ஓரம் நிறுத்தினான். இடப்புற திண்ணையை மறைத்துப் போட்டிருக்கும் பந்தல் இடம். அம்மா பாலித்தின் சாக்குகளை உதறி அடுக்கி சுருட்டுகிறாள். தலையெல்லாம் நன்றாக நரைத்துவிட்டது. அம்மா பல வருடங்களாக சட்டையைத் தொளதொளவென்றுதான் தைத்துப் போடுகிறாள். அப்படிப்போடுவதே வயதை இன்னும் கூட்டிக் காட்டுகிறது.
நிறுத்திய சைக்கிளின் கேரியரைத் தொட்டுக்கொண்டு எப்போதும் போல் பார்த்தாள் வரதம்மாள். அந்தப் பார்வையில் எப்போதும் வருத்தம்தான் வெளிப்படும். நாலு காசு பார்த்து பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட்டான் என்றால் போதும் என்பதுபோல பார்த்தாள். ‘ஏம்பா குளிச்சிட்டு தூங்கலையா’ என்று கேட்க நினைத்தாள். ரகுராம் வலப்புறம் உள்ள திண்ணையில் அமர்ந்தான். அம்மா, சைக்கிளை இடிக்காமல் திண்ணை ஓரம் நகர்ந்து ஜன்னல் கம்பியில் தொங்கும் கொத்தை எட்டி எடுத்துக்கொண்டு வந்தாள். இருமுட்டிகளின் சுருக்கங்கள் காய்ந்து கரடுதட்டிவிட்டன. இந்த வயதிலும் கூப்பிடும் விவசாயிகளுக்கு தொய்யாந் தொய்யா வென்று வேலைக்குப் போகிறாள். வேலை செய்யும் இடத்திலாவது அம்மா கலகலவென்று பேசிச் சிரிப்பாளா என்று பார்க்கத் தோன்றும். எடுத்தேறி இதற்காகப் போய் நிற்கமுடியாது. ரோட்டோரத்தில் வேலை செய்யும் நாட்களில், கூட்டத்தில் ஒருவர் சொல்ல, சைக்களில் போகும் தன்னை எழுந்து பார்ப்பாள். பல மாலை வேலைகளில் இது நிகழ்ந்திருக்கிறது. இப்போதெல்லாம் அம்மா பின்தங்கி வேலை செய்வதைப் பார்க்கச் சங்கடமாக இருக்கிறது. அம்மா தன்னோடு நிறையப் பேசவேண்டும் என்று எப்போதாவது ஆசைப்பட்டிருக்கிறாளா என்று தெரியவில்லை. அம்மா திண்ணையில் வைத்திருந்த சாப்பாடு மஞ்சள் பையை எடுத்து கொஞ்சம் கூன்விழ நடந்தாள். பள்ளிக்குப் போய்வந்த இரவுகளில் சிரிக்கச் சிரிக்க கதைகள் சொல்லுவாள். சொல்லிக்கொண்டே கெக்கெக்க என்று கூடவே ஓங்கி சிரிப்பாள். அம்மாவாள் அந்தக் கதையை முழுமையாகச் சொல்ல முடியாமல் சிரிப்பு திரும்பத் திரும்ப வந்து அடைக்கும். சொல்ல முடியாமல் சிரிப்போடு கண்ணீர்கூட வந்துவிடும். எல்லாம் ஒன்பதாம் வகுப்பு பாதியோடு நின்றுவிட்டது. அதன்பின் அம்மா சிரித்ததில்லை. கதைகள் கூட சொன்னதில்லை. அம்மாவின் அருகில் படுத்து இவனும் கதைகள் கேட்டதில்லை. தாண்ட முடியாத விரிசல் ஒன்று விழுந்துவிட்டது. வயதாக வயதாக எலும்பும் தோலுமாகப் போய்விடுகிறார்கள். உடம்பெல்லாம் சுருக்கங்கள் விழுந்துவிட்டன. புருவங்களிலும் ரெப்பைகளிலும் நரைமயிர்கள் தோன்றிவிட்டன. அம்மா பிரியப்பட்டு புரோட்டாவோ, வேறு தின்பண்படங்களோ கேட்டதே இல்லை. இவனும் அப்படியெல்லாம் வாங்கிக்கொண்டு வந்து தந்ததில்லை.
படிப்பைவிட்டு ஓடாமல் இருந்திருந்தால் நல்ல நிலைக்கு வந்திருக்கலாம். பள்ளியில் ‘ஜாமன்றி பாக்ஸ் இல்லாமல் வகுப்புக்கு வராதே பரிச்சையில ஓசிக்கு கேட்டிட்டிருப்பியா’ ராமமூர்த்தி சார் தினம் தினம் சொன்னாலும் தலைமடங்கி தப்பித்துக் கொண்டுதான் வந்தான். அவருக்கு அன்று என்ன கோவமோ ‘நீ பாக்ஸ் வாங்கிட்டுத்தான் என் வகுப்புக்குள்ள வரணும்’ என்று இரண்டாம் பாடவேளையில் துரத்திவிட்டார். தன்னோடு ஜோடிக்கு முருகேசனும் துரத்தப்பட்டு வந்தான். முருகேசன் அம்மா இருப்பு வேலைக்கு கேரளா போய்விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் உடன்வந்தான்.
வந்ததும் வராததுமாக “பத்துநாள் சொன்னேனில்லெ. இனி நான் ஸ்கூலுக்குப் போகமாட்டேன். நீ போன்னு சொன்னாலும் போகமாட்டேன்.” கத்தியபடி திண்ணையில் அமர்ந்தான். முருகேசன் இவனுடைய ஆர்ப்பாட்டத்தை பார்த்தபடி சோர்வுடன் பேசாமல் அமர்ந்தான்.
வீட்டைச் சாணியால் மொழுகிக்கொண்டிருந்த வரதம்மாள் சாணித்துணியை வாளியில் போட்டுவிட்டு கையைக் கழுவிக்கொண்டு வந்தாள். முழங்கால்வரை தூக்கிக் கட்டிய சீலையை அவிழ்த்துவிட்டு, “டேய் வேலை இல்லடா. இந்த ஒரும்புல தோட்டத்து வேலையும் ஏர்க்கையா இல்லடா. ரெண்டொரு நாள் பொறுத்துக்கோடா.” பேசப்பேச திண்ணையில் கழுவி வைத்திருந்த தட்டைத் தூக்கி எறிந்தான். அது அம்மிக்கல் மீது திடுங்கென விழுந்து எகிறிப் புரண்டது. அம்மாவின் சமாதானம் கோவத்தைத்தான் வரவழைத்தது.
“சரி இருடா. கடையில யாச்சும், கடன்கேட்டு பாக்குறேன். என்னைய எங்கெங்க அலைய விடுற. ஒன்னோட இம்ச பெரிய இம்சடா. முருகேசன பாரு எப்பிடி அமிர்கையா இருக்கான்.” பாதங்களைக் கழுவிக்கொண்டாள். முறத்தை எடுத்துக்கொண்டு போனாள். மளிகைக்கடையில் எப்போதாவது தானியங்களைப் புடைத்துத் தரும்படி சொல்லிவிடுவார்கள். வேலைக்குப் போய் வந்துகூட புடைத்துத் தந்துவிட்டு வருவாள் அம்மா.
மூன்றாவது மணிநேரம் புவியல்சார் வகுப்பு முடியும் முன்னாவது போய்விடலாம் என்றிருந்தான். போன அம்மா வரவில்லை. பதினைந்து ரூபாய் கேம்ளின் ஜாமன்றி பாக்ஸ். பள்ளிக்கு அடுத்த தெருவில் உள்ள கவிதா நோட்புக் சென்டரில் இருக்கிறது. ஜாமன்றி பாக்ஸ் வாங்கிவிட்டதை ராமமூர்த்தி சார் கண்ணில் காட்டிவிட வேண்டும் என்று வேகாலம் குதித்துக்கொண்டே இருந்தது. பாதி மொழுகியும் பாதி மொழுகாமலும் முன் பட்டாசாலை இருந்தது. அடுக்களைக்குள் நுழைந்து தண்ணீர் குடித்தான். முருகேசனுக்கும் கொண்டு வந்து தந்தான். மணியும் பதினொன்றரையாயிருக்கும்.
அம்மா வர தாமதமாக, எரிச்சலில் “இருடா கடைக்குப் போயி வாங்கிட்டு ஓடியாறேன்” என்று ஓட்டமும் நடையுமாக வந்தான். கடை பலகையை எடுத்து மூடிவிட்டு ஒரு பலகையை மட்டும் உள்ளிருந்து மூடாமல் சார்த்தியிருந்தது. பொருட்கள் வெளிச்சமில்லாத கடை தட்டுக்களில் தெரிந்தன.
கடைக்குப் பின்பக்கம் இருக்கும் சின்ன குடோனுக்குப்போகும் பக்கவாட்டு கதவு லேசாக சாத்தியிருக்கிறது. அம்மா பாட்டிற்கு கிளம்பி வந்துவிட்டது. இன்றைக்கு ஜாமன்றி பாக்ஸ் வாங்க முடியாமல் போனால், அங்கிருந்து வந்த வீராப்பிற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். குடோன் உள்ளிருந்து அமுங்கிய குரல்வந்தது. “ம்ம் அப்பிடி உடம்ப தளர்வவிடு… …இப்ப நல்லா இருக்கில்ல” தொண்டைக்குழியிலிருந்து குரல் வராமல் ரகசியத்தோடு வாய்க்குள்ளிலிருந்து வந்தது. கதவைத் தள்ளினான். மூன்று மூன்றாக அடுக்கியிருந்த அரிசி மூட்டையின் அடி ஓரம் இரு உருவங்கள் நிழல்போல அசைகிறது. அம்மாவின் இடதுகை அடிமூட்டையின் நாவிளிம்பை பற்றி இருக்கிறது. கெட்ட வார்த்தை சொல்லி, படுத்திருக்கும் அம்மாவை அடிப்பதுபோல வாயைத்திறந்தான். ‘தேவிடியா மகனே’ திடுக்கென கத்துவதுகேட்டு ஓரத்தில் கிடந்த வேட்டியை ராவி எடுத்து அரைகுறையாக மூடிக்கொண்டு உள்வாசலுக்குள் ஓடி கதவை மூடினார் தர்மராஜ். ரகுராம் அம்மாவின் முடியை அப்படியே பற்றி வெளியே இழுத்துக்கொண்டு வந்தான். அம்மாவின் சட்டைப் பொத்தான்கள் அவிழ்த்துவிடப்பட்டுக் கிடக்கின்றன. முந்தானையை அள்ளி நெஞ்சில் வைத்தாள். தரதரவென ரோட்டில் இழுத்துப்போட்டு முதுகில் அடித்தான். தளர்ந்த சீலை, முட்டிக்குமேல் கிடக்கிறது. அடியை வாங்கியபடி முட்டிக்குக்கீழ் இழுத்து விட்டாள். முடியைச் சுழற்றிப் பற்றி இழுக்க, இடுப்புச்சீலை நழுவி இறங்கியது. பச்சை நிறம் மங்கி அதர பழசான பாவாடை இடுப்பிற்குக்கீழ் தெரியத் தொடங்கியது. ஆங்காரமாக நெஞ்சில் மிதித்தான். மிதி மறைத்திருந்த கையில்தான் விழுந்தது. கையில் பற்றிய முந்தானையை எடுத்தால் அசிங்கமாகிவிடும். வீட்டிற்குள் கைசோலியாக இருந்த பெண்கள், தோட்ட வேலைக்குப் போய்விட்டு தண்ணீர் குடம் தூக்க வந்தவர்கள், மாடுகளுக்குத் தண்ணீர் காட்ட வந்தவர்கள் எல்லோரும் கூடிவிட்டார்கள். அடிக்க அடிக்க அம்மா நிமிர்ந்தே பார்க்கவில்லை. அம்மாவின் கவனமெல்லாம் சீலை முற்றாக நழுவி இறங்கி விடக்கூடாது; பொத்தான் போடாத மார்பை பார்த்துவிடக்கூடாது என்பதில்தான் இருந்தது.
மகன்தரும் அடிகளை தலைகுனிந்தபடி வாங்கிக்கொண்டே தான் இருந்தாள். அவன் ஆசைதீர அடிக்கட்டும் என்பது மாதிரியும், அவன் அடிக்கிற அடியில் அப்படியே செத்துபோய்விட வேண்டும் என்பது மாதிரியும் தரையில் கிடந்தாள். அவளால் நிமிர்ந்து அமர முடியவில்லை. முடியை வசமாக சுழற்றிப் பிடித்திருக்கிறான். பிடறிப் பக்கமும் காதுபக்கமும் தோல்பிய்ந்து வந்துவிடும்போல சுல்லென வலி பிடுங்குகிறது. கூட்டம் கூடக்கூட, அவள், வந்து நிற்பவர்களின் கால்களைக்கூடப் பார்க்கவில்லை. ரகுராம் கூட்டம் கூடக்கூட இன்னும் வேகத்தைக் காட்டினான். கெட்ட வார்த்தைகள் ஆக்ரோசத்தோடு குதிக்க தோள்பட்டை, தலை, முகம் என்று அடிவிழுந்தது. சம்பந்தமில்லாத ஒருவன் அம்மாவை அப்படிப் பண்ணியதை அவனால் தாங்கமுடியவில்லை. “ஏன்டி, நாதாரி மவளே, ஒனக்கு… ஆம்பள கேக்குதா… நாயே” தடுப்பவர்களை முறுகி மண்டையில் அடிக்கக் கத்தினான்.
கண்ணம்மா கிழவி, “விடுறா விடுறா” என்று முடியைப் பிடித்திருந்த கைவிரல்களைப் பிரித்தெடுப்பதில் மல்லுக்கட்டினாள். “இப்ப நல்லா இருக்கா” கருவிக் கொண்டு துப்பினான். வயதுக்கு மீறி வார்த்தைகள் தீக்கங்குபோல வந்து விழுந்தன. இதையெல்லாம் எப்படி தெரிந்துகொண்டான் என்றுதான் பெண்கள் ஆச்சர்யப்பட்டார்கள். முருகேசன் கூட்டத்தில் நிற்பது தெரிந்தும் அவனுக்காகவும் ஒரு அடி முதுகில் போட்டான். “வேண்டாம்டா” கையைப் பிடித்து அவன் இழுக்க ஒரு எத்து விட்டான். எத்து முகத்தில்பட்டது. கிறுக்கு பிடித்தவன்போல நடந்தான். “டேய் போதும்டா. என்னடா நீ. இத்தினியூண்டு இருந்திட்டு என்ன துள்ளு துள்ளுற. இந்த முரட்டுத்தனம் ஆகாதுடா. சப்பன்னு அறஞ்சேன்னா”, “ஏய் கிழவி ஓஞ் சோலியப் பாத்துட்டுப்போ.” “சர்தான்டா பெரிய ஜோலியக் கண்டவன். நடடா” கிழவி ஒரு வழியாகப் பிரித்து தள்ளிக்கொண்டு வந்தாள்.
அம்மா தலைதூக்கிப் பார்க்கவில்லை. மாராப்பை கவனமாகத் தோள்மேல் போட்டு இடுப்பைச் சுற்றினாள். நழுவிக்கிடந்த சீலையை இழுத்து இடுப்பில் அங்கங்கு சொருகினாள். சூடான தரையில் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள். வரதம்மாள் ஓங்கி ஒரு அறைவிட்டால் ரகுராம் கிறுகிறுவென போய் விழுவது உறுதி. ஆனால் அடிக்காமல் அடியை வாங்கிக் கொண்டிருப்பதைத்தான் பார்த்தார்கள். மூக்கின் சுவர் வழி கண்ணீர் வழிந்து சொட்டுச்சொட்டாக இறங்கியது. அவன் முடியை பற்றி இழுத்து நாலாபக்கமும் ஆட்டி உலுப்பியதில் முடிக்கற்றை கந்தர கோலமாக நீட்டிக்கொண்டு இருந்தது. பல நாட்கள் தலை சீவாது அலையும் கிறுக்கியின் தலைமுடிபோல ஆகியது. அவன் விட்ட உதையில் பெருவிரல் நகம்பட்டதோ என்னவோ இடதுமேல் உதடு ரத்தம் கசிய வீங்கி விட்டது. கந்திப்போன வலது கன்னத்திலும் காயம்பட்டுவிட்டது. இத்தனை அடாவடித் தனத்தையும் அவள் ஏற்றபடியே இருந்தாள். சின்னஞ்சிறு மகனின் உள்ளத்தைச் சிதறடித்ததாக நினைத்து எல்லா அசிங்கங்களையும் ஏற்றாளா? தன் பிள்ளையோடு சந்தோசமாக இருந்ததெல்லாம் கேவலப்பட்டுப் போய்விட்டதே என்று நினைத்தாளா? அவனுக்குத் தீராத தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டதாகத் தவித்தாளா? தன் பிள்ளையோடு இனி எப்படிச் சிரித்து மகிழமுடியும் என்று ஏங்கினாளா? இந்தப் பிராயத்தில் இப்படியான விசயத்தை அசிங்கம் என்று தெரிந்து வைத்திருந்தது அறியாமல் போய்விட்டேனே என்று பேசாமல் இருந்தாளா என்று தெரியவில்லை. யாருக்கும் தெரியாது இருந்த விசயத்தை ஊரே கேளு நாடே கேளு என்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டானே என்ற வருத்தம் இருந்திருக்கும். “போடா மயிரே இந்த வயித்துப்பாட்டுக்குத்தான்டா இப்படி” அடிவயிற்றில் அறைந்து வரதம்மாள் கத்தவில்லை. முகத்தில் கால் நகம்பட்டு கசியும் ரத்தமும் எரிச்சலும்கூட பிள்ளையைத் தாக்க தோணவில்லை. கிழவி, “நீ என்ன இப்படி கூதரையா இருக்க. சுண்டக்கா பய அத்தன அடி அடிக்கிறான். பெரிய இவகணக்கா வாங்கிக்கிட்டே இருக்க. எந்திரி” தூக்கினாள்.
ஒன்பதாம் வகுப்பு போகிற பையன். ஏதும் அறியாப் பிஞ்சு என்று நம்பியிருந்திருப்பாள். அந்த நம்பிக்கை போய்விட்டது. அடிக்கும்போது விலக்காமல் வேடிக்கைப் பார்த்த பெண்கள் என்னென்னமோ சொன்னார்கள். “டேய் போதும்டா. நீ பெரிய மனுஷன்தான்”, “எப்படி அடிக்கிறான் பாரு”, “ரோசத்தப்பாரு”, “நீ ஆம்பள தான்டா விடு”, “சொல்கிறார்களே தவிர, கையைத் தட்டித் தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தவில்லை. ருக்மணி அத்தை “சரி போதும்டா” என்று முதுகில் ஒரு போடுபோட்டு நிறுத்தினாள்.
அவனுக்கும் கைகளில் அடிப்பதற்கான தெம்பு குறைந்து போயிற்று. கை கால்கள் வெலவெலத்தன. அடித்தாலும் அடியில் வலு இல்லை. “என்ன இருந்தாலும் பெத்த தாயில்ல. இதென்ன கொலையா கொல்றான். இவன் என்ன பிள்ளை. இவனும் அங்க இருந்துதான வந்தான். சொர்க்கத்தில இருந்து வர்றலையே” என்றாள் கெம்பம்மாள். “போடி ங்கோத்தா” கெம்பம்மாளைப் பார்த்து எகிறினான். “ஆங். எத்தனை நாளைக்கி அவன் கண்ண கட்டிடமுடியும். இந்தா பாத்துட்டானில்ல. அவன் ஆம்பள. அவனுக்குத் தெரியாதா கோழி கேர்றது. சேவல வரவைக்கத்தான்னு”, “ஐய, புருஷன் இருந்தா நடக்குமா. அவுத்துவிட்ட கழுதையாட்டம் தாண்டிக்கிட்டுக் கிடந்தா. எம்மாம் பெரிய தகிடுதித்தம். தெரிஞ்ச பின்னாடியும் உசுர வச்சுக்கிட்டு இருக்கணுமா. த்தூ” தாடையில் கைவைத்து அதிசயப்பட்டு பேசிக்கொண்டே கலைந்தார்கள். கண்ணம்மா கிழவி “போங்கடி ஒங்க பவுசி தெரியாதவரைக்குந்தான். கொண்டைய டப்பா கட்டி முதுகு காட்டுறது எதுக்கு. முன்னால தூக்கி நிறுத்துறது யாருக்குன்னு தெரியாது. வந்திட்டாளுக” சொல்லவும் “நீ கண்டயாடி” திரும்பி கிழவியிடம் சண்டைக்கு வந்தார்கள். கிழவி “ஒண்ணைய வாடி சொன்னேன். நொச்சி பள்ளத்தில மணமணங்க வந்தாளே அவள சொல்றேன்”, சண்டைக்கு வந்தவர்கள். “ச்சீ இதுகிட்ட வாயக்கொடுத்துக்கிட்டு, தராதரம் தெரியாத நாயி வாராக்கு” அவர்கள் முகத்தை வெடுக்கென வெட்டிக்கொண்டு போனார்கள். அம்மாவை கண்ணம்மா கிழவிதான் அழைத்துக்கொண்டுவந்தாள். “முடிய பிடிச்சு இழுக்குறப்பவே சட்டன்னு கொடுத்திருந்தா அடங்கியிருப்பான். நீயே வேடிக்கைக்கு வழி பண்ணிட்டேயடி. நீ என்ன பண்ண.” “இருக்கட்டும் சின்னம்மா. அவன் என் பிள்ளதான. அவன விட்டா எனக்கு யாரு ஆதரவு. அவனுக்கு என்ன அவமானமோ, வருத்தமோ.”
அம்மாவிற்கு அப்போது முப்பது வயதோ முப்பத்திரண்டு வயதோதான் இருக்கும். அம்மா எல்லோரையும் போல வாய்விட்டு சிரித்து எத்தனையோ காலமாகிவிட்டது. அம்மாவிடம் வெளிப்படுவதெல்லாம் மெல்லிதான சோகப்புன்னகை மட்டும்தான். இந்த முப்பத்தைந்தாண்டுகள் கொத்தையோ, பண்ணருவாளையோ, நாட்டு மண்வெட்டியையோ, மக்கிரியையோ தூக்கிக்கொண்டு காடுகளுக்குப் போகிறாள். வருகிறாள். வெயில் என்றாலும் சரி, மழை என்றாலும் சரி, குளிர் என்றாலும் சரி அவள் பாட்டுக்கு வேலைக்குப் போகிறாள். வேலை வேலை வேலை. வேலை தவிர வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை. யாருடனும் வில்லங்கமில்லை. எவரிடமும் ஒரு நொட்டை சொல் பெற்றதில்லை. வேலைக்குச் செல்பவர்களிடத்தில் அம்மாவிற்குப் புதிய பெயர் உருவாகி அதுவும் பழசாகி வருகிறது. ‘நல்லமனுஷி.’ அம்மாவிற்கு அப்படியொன்று நடந்தது என்பதைக்கூட ஊர் மறந்தே போய்விட்டது. யாருடைய நினைவிலும் அது இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. எந்த அவச்சொல்லையும் பெறவில்லை. ஊரில் தர்மராஜ் மளிகைக்கடை என்று ஒன்று இருப்பதாகக்கூட அவள் காட்டியதே இல்லை. கடையையே அவள் மறந்துவிட்டாள். ஆண்வாசம் என்ற ஒன்றே இந்த உலகில் இல்லை என்பதாக நடமாட முடிகிறது.
தனக்கும் வயது ஐம்பதைத் தொடப்போகிறது. வாரத்தில் ஒரு முறையோ, இருமுறையோ வனஜாவை இழுத்து கிடத்துவதும் நிற்பதில்லை. பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டார்கள் முடியாது என்று அவள் முரண்டுபிடிக்கவும் செய்கிறாள். ஆனாலும் தன் வம்பினால் நெருங்கி இருக்கவும் செய்கிறாள். இச்சை என்று ஒன்றில்லை என்று அம்மா எப்படி துடைத்தெறிந்தாள். இல்லை, தன்னைக் கொன்று கொண்டாள். இந்த மகனுக்காக, மறுமணம் முடித்திருந்தால் இரண்டு மூன்று குழந்தைகள்கூட பிறந்திருக்கும். அந்த வயதில் அப்படியொரு எண்ணம் அம்மாவுக்கு இருந்ததா? இன்றைய அம்மாவைப் பார்க்கும் போது இல்லவே இல்லை என்று தோன்றுகிறது. அன்றைய அம்மாவிற்கு இருந்திருக்கும். கனவு, ஆசை, கற்பனையைக்கூட சாம்பலாக்கிவிடலாம். இந்த இச்சையை சாம்பலாக்கி ஊதிவிட்டு முப்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்து வந்துவிட்டாள். அப்படியும் சொல்ல முடியுமா? வெளியே துளிகூட தெரியாமல் தன்னோடு போரிட்டு போரிட்டு அதைச் சாகடித்திருப்பாள். மனசுக்கு சங்கடமாக இருந்தது.
குளியலைப்போட்டால்தான் நன்றாகத் தூக்கம் வரும். பகலில் நன்றாகத் தூங்கினால்தான் இரவு சிப்டில் புளிச்ச ஏப்பம் வராது. தூக்க சொக்கும் மந்தாரமும் இல்லாமல் வேலை செய்யமுடியும். சாப்பிட்டுவிட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்தான். இப்போது படுத்தால் நான்கு மணிக்கு எழலாம். பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும் வேலை. படுத்த பின்னும் சட்டென தூக்கம் வரவில்லை. உருக்குலைந்து போய்விட்ட அம்மாவின் முதிய உருவமே திரும்பத் திரும்ப வருகிறது. மூச்சை ஆழ்ந்து இழுத்துவிட்டான். நினைவுகள் எங்கெங்கோ ஓடின.
ஒரு குத்து பட்டாணி கடலையை எடுத்து சட்டைப் பையில் போட்டுவிட்டார். அம்மா கொடுத்த பத்து பைசாவை “இருக்கட்டும்” என்கிறார். அம்மா “ஒங்க பொருளுக்கான காசு” பலகையில் வைத்துவிட்டு தலையைத் தடவிக்கொண்டு அழைத்து வருகிறார்.
எங்கும் பச்சைப்பசேலென நெல்வயல் விரிந்துகிடக்கிறது. தூரத்தில் நெல்வயலிடையே வரிசையாக சிறியவர்களும் பெரியவர்களும் தெற்கால் போகிறார்கள். அகன்ற வரப்பு வழியாக இவர்கள் வரும் கிழக்குப் பாதையின் பின்னால் ஆட்கள் வருகிறார்கள்.
‘அந்தா பாலம் தெரியுதா… ம்ம்… அதுக்கு அந்தப்பக்கம் தான் கோயில் இருக்கு’ ‘ஏம்மா அங்கதான் மாம்பழக்கடை இருக்கா’, ‘ஆமா’ சாமிக்குத் தயாரித்த விளக்குமாவை புதுவெள்ளைத் துண்டில் முடிந்து அதை மஞ்சள் பையில் வைத்து முன்னால் செல்கிறாள். ‘ஏம்மா அங்கிருந்து அவங்க நம்மளப் பாத்தா வயலுக்குள்ள நடந்து வர்றது மாதிரிதான தெரியும். வரப்பு தெரியாதில்ல’, ‘ஆமா’, ‘பாக்க அழகா இருக்கும்மா’.
முன்இரவு, நட்சத்திரங்கள் பளிச்சென வானத்தை நிறைந்திருக்கின்றன. சீனி மாமாவின் வீட்டு நடுவிட்டம் முறிந்து ஓட்டுக்கூரை சிறு பள்ளத்தாக்குபோல தரைநோக்கி இறங்கிக் கிடக்கிறது ஒரு மாத காலமாக. கம்பத்திற்குத் தோட்டம் பார்க்கக் குடும்பத்தோடு போய்விட்டார்கள். அவர்கள் வந்துதான் சரிசெய்யவேண்டும். அவர்கள் இருக்கும்போதே கொட்டத்து பின்சுவர் பராமரிப்பு இல்லாமல் சிதைந்து குட்டிச்சுவராக இறங்கி நிற்கிறது. தொட்டியை ஒட்டி நிற்கும் பெரிய வேப்பமரத்தின் கிளைகள் கண்ணம்மா கிழவி வீட்டு முற்றம் வரை விரிந்து நிழல் கொடுக்கிறது. இருவீட்டிற்கும் இடையே சிறு சந்து. அதில் போய் தென்வடலாகச் செல்லும் நீண்ட சந்தின் இருபுறம் போகலாம்.
விரித்த சாக்கில் கண்ணம்மா கிழவி கால்நீட்டி அமர்ந்து ஓடைக்கரையில் வெங்கக்கல் எடுத்து வந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இரவு உணவு முடித்து ஆடி அமர அது பேசத்தொடங்கினால் நடுஜாமம் வரைக்கும் கூட பேசிக்கொண்டிருக்கும். கிழவி முந்தானை மடியில் கிடக்கிறது. அப்படி போட்டுக்கொள்வது பழக்கம். நிறம் மங்கிய பச்சைச் சட்டையின் பட்டன்கள்தான் கண்ணிற்குப் படுகிறது. வலதுகால் இடதுகால்மேல் கிடக்கிறது. வெற்றிலை உருண்டையை வலது கன்னத்தில் குண்டுபுடைப்பாக வைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்கிறது. கிழவியின் மெலிந்த கால்கள் நன்றாகத் தெரிகின்றன.
வேப்பம்பூவின் வாசம் மணமணவென நாசியைத் துழைக்கிறது. ருக்மணி அத்தையைத் தொட்டு அம்மா அமர்ந்திருக்கிறாள். கை சோலியை முடித்து ஈரக்கையை துடைச்சீலையில் தேய்த்துக்கொண்டு வந்தமர்கிறது கெம்பம்மாள். வெள்ளச்சோள, ராகி நடவு இன்னும் ஓரிரு தினங்களில் முடியும். முருகேசன் சில்வர் தம்ளரை உள்ளங்கையால் மூடிக்கொண்டு போகிறான். “கடைசாத்தர இந்தேரத்தில என்னடா வாங்கிட்டுப் போற” என்று கேட்கிறது கிழவி. “ஓமதிர. அம்மாக்கு வயித்துப் பொறுமல்” என்றபடி போகிறான். சேலத்துக்கு ஓடாம இருந்தா படிப்பு பாழாகி இருக்காதே என்று இப்போதெல்லாம் யாரும் கேட்பதில்லை.
திடுக்கென வேட்டியை போர்த்தியபடி சந்து வழியாக ஓடிவந்தவர் மின்னல் வேகத்தில் பாதையைத் தாண்டி எதிர்சந்தில் புகுந்தார். “யம்மே” என்று அம்மா பக்கம் சாய்ந்தது ருக்மணி அத்தை. நெஞ்சில் கைவைத்தபடி மறைந்த திசையைப் பார்க்கிறது. பேச்சு ஒருகணம் அடங்கிவிட்டது. படபடப்பும் நெஞ்சு துடிப்பும் நிற்கவில்லை. கிழவி அமர்ந்த வாக்கில் உடலை மட்டும் வலப்பக்கம் சாய்த்து எதிர்சந்தைப் பார்த்து நிமிர்ந்தது. இருட்டு மட்டும்தான் கவிழ்ந்திருக்கிறது.
வேட்டியை மடித்துக்கட்டியபடி தெருவழியாக மூன்றுமுழ கருங்காலி கனங்குச்சியைப் பிடித்தபடி செல்லத்துரை வேகமாக வருகிறார். “இந்தப் பக்கம் யாராச்சும் ஓடிவந்தானா” கிழவி மாராப்பை எடுத்துத் தோளில் போட்டபடி “அப்படியாரும் வரலையேப்பா” என்கிறது. “கொஞ்ச நாளா இந்தப்பக்கம் திருட்டுப்பய நடமாட்டம் தெரியுது. ஆட்டுக்குட்டிய குறிவச்சு வர்றானா? வாழைத்தார குறிவச்சு வர்றானான்னு தெரியல. சிக்குனான்ன, மண்டையப் பௌந்திடுவேன். கொத்துக்கார மச்சான் வீட்டு சந்துக்குள்ளத்தான் புகுந்தான். இப்படி வந்திருப்பான்னுதான் இப்பிடி மடக்கி ஓடி வந்தேன்.” “இல்லசாமி காத்தாட இங்கதான நாங்க ஒக்காந்திருக்கோம். இப்பிடி வந்தா எங்க கண்ணுல படாம இருப்பானா” என்கிறது. “சரி” என்று நடக்கிறார்.
கிழவி வலப்பக்கம் பார்த்து திரும்பியது. ருக்மணி அத்தை கமுக்கமான குரலில் “யாரு பெரியம்மா அது” கேட்கிறது. “அட நம்ம கதிர்வேலு பையன்தான். மெட்டுவரிசைக்காரி சந்திரன் பொண்டாட்டி மரகதம். அவதான். கொஞ்ச நாளா அரசல்புரசலா நடமாட்டம் இருக்கு.” “ஏம் பெரியம்மா அவளுக்கு மூணு பிள்ளைக இருக்கே.” “இருந்தா? புது ருசி விடுமா?” “ஐயோ அம்மாடி” ரகசியக் குரலில் அடித்தொண்டையில் பதில் சொன்ன கிழவி இதுகூடத் தெரியாத என்பதுபோல உடம்பை இருபுறமும் கொஞ்சம் அசைத்து காலை மாற்றிப்போடுகிறது. அம்மா தலைகுனிந்து பேசாமல் இருக்கிறாள். அம்மாவைப் பார்க்கவே முடியாமல் என்னென்ன நினைவோ திரும்ப ஓடுகிறது.
ஊருணிக்குச் சேரும் ஓடைக்கரையின் இருபுற இலுவை, கருவே, வேப்பமரங்களிலும் துத்திச் செடிகளிலும் கோவைக்கொடி, பச்சைப் போர்வை போர்வையாக அப்பியிருக்கும். சிவந்து கனிந்த கோவைப் பழங்களைத் தின்று கொண்டே போய் ஆலமரம் ஒட்டிய கரை ஏறி வண்டித்தடத்தில் நடந்து அம்மா ஊருக்குப் போவது மிகச் சுருக்கம். அம்மாவுடன் போகும்போதோ, வரும்போதோ ரெஜினா அக்கா எதிர்ப்பட்டால் அம்மாவின் கையைப்பிடித்துக்கொண்டு ரொம்ப நேரம் பேசும். இடதுகால் சவலைப்பாய்ந்ததால் தாங்கித் தாங்கி நடப்பது வழக்கம். அம்மாவைவிட ஏழெட்டு வயது இளையவள். கன்னியாஸ்திரி படிப்பைப் பற்றிச் சொல்லும்போது விநோதமாக இருக்கும். அக்கா அக்கா என்றால் அத்தை என்று கூப்பிடு என்பாள். ரெஜினா அக்காவின் மூத்த அக்கா அம்மாவோடு சேர்ந்துதான் எங்கும் வேலைக்குப் போவது. அந்த மேரி அத்தை வீட்டிற்கு வரும்போது தூக்குப்பாத்திரம் நிறைய நொங்கு கொண்டுவந்து தருவாள். ஏனோ ரெஜினா கன்னியாஸ்திரியாகப் போகாமல் டீச்சராகப் போனது. கால் நன்றாக இருந்திருந்தால் திருமணம் ஆகியிருக்கும். நிற்கும்போதோ, அமர்ந்திருக்கும்போது எதுவும் குறை தெரியாது. மினுமினு கருப்பு நிறம், கொட்டைப் பற்கள் பளிச்சென்று இருக்கும். அழகான கண்கள். உடல்வாகே கொஞ்சம் புஷ்டியானதுதான்.
சின்ன மாமாவிற்கும் அத்தைக்கும் சேராட்டம் இல்லாமல் ஓயாத சண்டையாக இருந்தது. அதனால் அம்மா ஊருக்குப் போவதும் குறைந்தது. அம்மாவோடும் பேச்சுக் குறைந்து விலகி ஊர்ச் சுற்றுவதிலும் வேலைக்குப் போவதிலுமாக ஆனது.
சைக்கிளில் வந்த ரெஜினா இறங்கி பாலத்தை நோக்கித் தாங்கித் தாங்கி நடந்து வருகிறது. சைக்கிளை லாவகமாக ஓட்டுவதைப் பார்க்கும்போதெல்லாம் குறையே தெரியாது. முருகேசனும் உடன் எழுந்து நின்றான். “என்ன உனக்குக் கல்யாணமாமே” அம்மா சொன்னது. “இன்னும் மூணுமாசம் இருக்கு அக்கா.” “ஏன் இப்பயெல்லாம் வீட்டுக்கு வரமாட்டெங்கிற.” “வர்றேன்கா.” “சரி எப்ப வர்ற.” “வர்றேன்க்கா.” “இந்த அக்கா நொக்காவெல்லாம் வேணாம். அத்தையின்னு கூப்பிடு. சரி எப்ப வர்றே.” “ கரம்படிக்கிற ஜோலி முடியட்டும்.” “அதெல்லாம் இருந்துக்கிட்டுத்தான் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை வர்ற. சரியா” தோளில் லோசாகத் தட்டிவிட்டு சைக்கிளில் ஏறிப் போகிறாள்.
வீட்டிற்குப்போகும் போது பதினோரு மணி. மசால்கறி வாசம் மூக்கைத் துளைக்கிறது. இடதுப்புறச் சுவரில் பெரிய சிலுவைக்குறி சற்று நிறம் மங்கி இருந்தது. பாதி திறந்திருந்த கதவைத் தள்ளியபடி “ரெஜினா அத்தை” என்றதும் யாருமற்று இருந்த உள்முற்றத்தில் ரெஜி எட்டிப்பார்த்து முகம் பூரிக்க “அட சொன்னபடியே வந்திட்டயே. வருவேன்னு சத்தியமா நெனைச்சேன்” வேகமாக வந்தது. முகத்தில் நாணத்தோடு கூடிய வெக்கம் கோணலான சிரிப்பாக உதட்டோரம் துடிக்கிறது. கதவைத் தொட்டதும் அந்தக் குதுகலம் சட்டென அடங்கிப் பின்னால் தெருவில் நிற்கும் முருகேசன், பாலுவையும் சேர்த்து “உள்ள வாங்க” என்றபோது வெற்றுப்புன்னகையானது.
முட்டைக்குழம்பு, கறிக்குழம்பு, அத்தோடு வறுவல்வேறு. அப்படியொரு சுவையான சாப்பாட்டை நண்பர்களும் சாப்பிட்டிருக்கமாட்டார்கள். சாப்பிட்டுக் கிளம்பும்போது மணி ஒன்று. பாலு, முருகேசன் இறங்கித் தெருவில் நின்றார்கள். மறுபடி சொல்லிக்கொண்டு கிளம்ப உள்முற்றத்திற்கு வந்தபோது ரெஜி நெற்றியைத் தடவியபடி அமர்ந்திருக்கிறது. “அத்தை வரட்டா.” தலைதூக்கிப் பார்த்த ரெஜி “நீ மட்டும் வருவன்னு நெனச்சேன்” சற்று அமைதியாக இருந்துவிட்டு “சரி” கண்களை மூடி மூச்சை இழுத்தாள். பின் கண்ணைத் திறந்து தலையாட்டினாள். குதுகலம் எல்லாம் ஒடுங்கி முகத்தில் ஏமாற்றம் கனத்திருந்தது.
***
அழுக்குச் சீலையும், கிழிந்த சட்டையோடு வந்து நின்ற அக்காவை அம்மா “என்னடி இது கோலம்” என்று அழைத்துவந்து திண்ணையில் அமரவைக்கிறாள். அம்மாவின் பெரியம்மா மகள். இடதுகை புண்ணாகி ஈக்கள் மொய்க்கின்றன. கிழிசல் விழுந்த துண்டை இரண்டாக மடக்கி குஞ்சத்தின் பக்கம் சுழற்றி வீசிவிட்டாள். சாப்பாடு போட்டாள். பெரியம்மா இருந்திருந்தால் இப்படிவிட்டிருக்காது.
பின் அக்கா, அம்மா ஊருக்குப் போகவில்லை. சீனி மாமா வீட்டு வேப்பமர நிழலில் போய்ப்படுப்பாள். மாலையில் அம்மா போடும் உணவை உண்டுவிட்டு திண்ணையில் படுத்துக்கொள்வது. அப்படியே போனது.
நோய்முற்ற முற்ற கன்ன எலும்புகள் துருத்த ஆரம்பித்துவிட்டன. திண்ணையை விட்டு எழமுடியாமல் கிடந்தாள். ஊரிலிருந்து யாருமே வந்து பார்க்கவில்லை. தர்மாஸ்பத்திரிக்குப் போய் மாத்திரை மருந்தெல்லாம் இரண்டு மூன்று முறை வாங்கிவந்து தந்தாள் அம்மா. அக்காவால் திரும்பிப் படுக்கக்கூட முடியவில்லை. திண்ணையிலேயே சாக்கை விரித்து அதன்மேல் பின்னிக்கொண்டு வந்திருந்த தென்னை மட்டையைப் போட்டாள். அழுத்தாமல் இருந்தால் அதிகம் முணகமாட்டாள். பச்சை மட்டை கொஞ்சம் குளிர்ச்சியாகவும் இருக்கும். முதுகெல்லாம் கொப்பளித்து புண்ணாகிவிட்டது. ஈக்கள் மொய்க்காமலிருக்க வேப்ப எண்ணையை கோழி இறகால் தொட்டு உடம்பு முழுக்கப் பூசுவாள். கன்னக்குழியைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். “இதை எதுக்கு வச்சு பண்டுதம் பாக்குற. எங்காவது இழுத்து குப்பையில போடுவியா? அவன்களுக்கு இல்லாத அக்கறை ஒனக்கெதுக்கு” என்றாள் கெம்பம்மா. “பொட்டப்புள்ள அக்கா. எப்பிடி தள்ளிவிடுறது” என்றாள் அம்மா. வனஜா அந்தப்பக்கமே போகமாட்டாள்.
வலது திண்ணையே நாற்றம் அடிக்கத் தொடங்கியது. சீல்படாத இடம் இல்லை. திண்ணையெங்கும் ஈக்கள் மொய்த்தப்படி இருந்தன.
கண்குழி பொந்துபோலாகி கண்கள் மட்டுமே ஆடும். முழுதாக அடையாளமே தெரியாமல் மெலிந்த துர்பேய் ஒன்று கிடப்பதுபோலத் தோன்றும். அம்மாவால் குளிக்கவைக்க முடியாமல் போனது. சீலில் ஒட்டிய சட்டையைக் கழற்ற படாதபாடு பட்டுப் பார்த்தாள். அக்கா அணத்துவாள். முடியவில்லை. சதையையே பிய்த்து வரும்படி ஆகியது. சாப்பாடும் இறங்கவில்லை. பழைய நூல் சீலையைப் போர்த்தி முகத்தை மட்டும் பார்க்கும்படி வைத்திருந்தார்.
ரொம்ப முடியாமல் போய்விட்டது. அக்கா தலையால் அசைத்து அம்மாவை அழைப்பதுபோல இருந்தது. அம்மா தலைகுனிந்து “என்னம்மா” என்றது. அக்கா “நன்றி சின்னம்மா” என்றது. அம்மா மூக்கு சிவக்க நெற்றியைக் கோதிவிட்டாள்.
நான்கு நாள் கழித்துத்தான் இறந்தாள். ஊரிலிருந்து வந்து அடக்கம் செய்தார்கள்.
***
நெற்றிப்பொட்டு இறுக்குவதுபோல ஒரு உணர்வு, மறுபடி புரண்டு படுத்தான். தூக்கம் வராதுபோல. ஒரு வருடத்திற்குமேல் இருக்கும். ராமையா காவடி எடுத்து இரவு ஊர் சுற்றி வந்து கொண்டிருந்தார். “அப்படியே கலுங்குவரை போய்வரலாம்” என்று முருகேசன் அழைத்தான். இருவரும் நடக்க நடக்க கொட்டு மேளத்தின் ஓசை தனிந்து வந்தது. ரைஸ்மில் தோட்டம் தாண்டியதும் இவனிடம் சொன்னால் என்ன என்று தோன்றியது.
“முருகேசு. நான் அன்னக்கி ரொம்ப கேவலமா நடந்துக்கிட்டேன்னு தோணுடா. நானே அம்மாவ தெருவில இழுத்துப்போட்டு அசிங்கப்படுத்திட்டேன். தெரியாம போயிருக்க வேண்டியது. நான்தான் ஊருக்கே அம்பலப்படுத்திட்டேன். அப்படியெல்லாம் செஞ்சிருக்கக் கூடாதுன்னு அடிக்கடி தோணுதுடா.”
“டேய் எனக்கெல்லாம் மறந்தே போச்சுடா.”
“நான் மறக்கலையே.”
தோளை அணைத்து “நமக்கும் வயசு ஆயிருச்சில்ல. நல்லதுடா. நீ இப்படி நெனைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்.”
“இதெல்லாம் அந்த வயசில தோணலையேடா.”
“தோணியிருந்தா நீ அப்பவே மகான் ஆயிருப்பயே.”
முருகேசனை பார்த்துவிட்டு வரலாம்போல இருந்தது. எழுந்து சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பினான். முருகேசன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் பேருந்துக்கு ஓட்டுநராகத்தான் முதலில் போனான். உள்ளூர் தபால் நிலையத்தில் வேலை கிடைத்தது. அவனும் காலத்தை ஓட்டிவிட்டான்.
***
முருகேசனோடு பேசிவிட்டு பதினொன்றே முக்காலுக்கு வந்தான். அலுப்பு கண்ணை அசத்தியது. படுத்ததும் தூக்கமும் வந்தது.
ஐந்து மணிக்குத்தான் எழுந்தான். பிள்ளைகளின் சத்தம் எழுப்பிவிட்டது. முகத்தைக் கழுவிக்கொண்டு வாசலுக்கு வந்தான். தண்ணீர் குடத்தோடு வந்த வனஜா, “அந்த தர்மராஜ் தாத்தா இறந்திட்டாரு. எங்களுக்கு மூணுமணிக்கே தெரியும். இங்க நீங்க நல்லா குறட்டைவிட்டு தூங்கிட்டிருந்தீங்க. சரி எந்திருக்கிறப்போ சொல்லிக்கிடலாமன்னு விட்டுட்டேன்” என்றாள்.
கண்முன் நினைவுகளைக் கொண்டுவந்து கொண்டிருந்த நடமாட்டத்தை எமன் அழைத்துச் சென்றுவிட்டான். விளங்க முடியாத பாரம் மனதில் வந்து அமர்ந்து அழுத்தியது. வெளியே சென்றான். தனிமையாக நடந்துசெல்ல வேண்டுமாய் இருந்தது.
பெரிய கண்மாய் கரைவழியாக சுற்றி வெகுநேரம் கழித்து வந்தான். பொண்ணும் பையனும் வராந்தாவில் வீட்டுப்பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். “நாங்கெல்லாம் சாப்பிட்டோம் நீங்க சாப்பிட்டிர்றீங்களா?” “எனக்கு இப்ப வேணாம். அப்பறமா சாப்பிட்டுக்கிர்றேன். அம்மா சாப்பிட்டாங்களா?” “அதுக்கு ஒரு வடியா வருதுன்னு, படுத்துக்கிருச்சு” அம்மா திண்ணையில் சுருண்டு படுத்திருக்கிறது. ரொம்பவும் எலும்புக் கூடாகிவிட்டாள். ‘வயசாயிடுச்சு. வேலைக்கெல்லாம் போகாதம்மா. போதும் நீ உழைச்சது.’ என்று சொன்னாலும் கேட்பதில்லை. அம்மா இருமினாள். இருமல் கூட கணீர் என்று வரவில்லை. மெல்ல எழுந்து நின்றாள். சாப்பிட்டால்தான் தெம்பாக இருக்கமுடியும். திண்ணையைத் தொட்டுக்கொண்டு மகன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தாள். கண்மூடி மூச்சை இழுத்துவிட்டாள். மெல்ல கண்களைத் திறந்தாள். “ஏம்பா. அந்த எழவு வீட்டில போயி ஒரு பாட்டம் அழுதிட்டு வந்திரட்டுமா?” திடுக்கென்றது. நெஞ்சாங்கூட்டில் பதட்டம் பரவியது. “சரிம்மா, போயிட்டு வா” என்றான். சதைவற்றிய சுருங்கிய குச்சி விரல்களைக் கும்பிடுவதைப் போலக் கோர்த்துக்கொண்டு மெல்ல நடந்தாள்.
Mikavum uruga vaittha oru kaaviyam. Vaalthukkal.
Venu Back to form. Superb One.
கடைசி பத்தி தானாக கண்களில் கசிகிறது கண்ணீர்…யாருக்காக கசிகிறது …சு.வேணுகோபலனே எழுதுக உயிரின் ஆதாரத்தை எழுதுக …
மிக நல்ல கதை , மனித மனம் !
பெண்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கதை…
அய்யோ எனக் கதறத் துடித்தது மனம். அருமையான காலம் கடந்து நிற்கும் சிறுகதை.
No word to say.. arumai..