வழக்கம் போலவே இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கும் தமிழகத்தில் இருந்து முக்கியப் படைப்பாளிகள் இருவர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சு.வேணுகோபால். நுண்வெளி கிரகணங்கள், கூந்தப்பனை, ஆட்டம், நிலம் எனும் நல்லாள், பால்கனிகள், வலசை போன்ற நாவல்கள் – வெண்ணிலை, ஒரு துளி துயரம், களவு போகும் புரவிகள், பூமிக்குள் ஓடுகிறது நதி எனும் சிறுகதை தொகுப்புகள் – திசையெல்லாம் நெருஞ்சி எனும் குறுநாவல் தொகுப்பு, தமிழ்ச்சிறுகதையின் பெருவெளி என்ற கட்டுரைத்தொகுப்பு என தொடர்ந்து நவீன தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்து வருபவர்.
நவம்பர் 18 ஆம் திகதி நடைபெற உள்ள கலை இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வரும் இவரை மலேசிய சிங்கை வாசகர்களின் விரிவான கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் சிறப்பிதழ் உருவாகியுள்ளது. முகநூல், அகப்பக்கம் போன்ற இணைய ஊடகங்களில் இருந்து தள்ளியே பயணிக்கும் சு.வேணுகோபாலை அறிய அவரது நூல்களே துணைப்புரிகின்றன. அவ்வகையில் அவரது ஆக்கங்களை வாசித்து இவ்விதழில் ஐந்து படைப்பாளிகள் கட்டுரைகள் வழங்கியுள்ளனர்.
இந்த இதழுக்கென சு.வேணுகோபால் தனது புதிய சிறுகதை ஒன்றை வழங்கியதுடன் விரிவான நேர்காணலுக்கும் இசைந்து இதழ் உருவாக உதவினார். தொடர்ந்து நான்கு மாதங்கள் வல்லினம் வாசகர்களுடனான அவரது உரையாடல் சு.வேணுகோபாலை பல்வேறு கோணங்களில் அறிமுகம் செய்துள்ளது எனலாம்.
ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படமும் வெளியீடு காணும் இவ்வருட கலை இலக்கிய விழாவில் எழுத்தாளர் சு.வேணுகோபாலின் வருகை மேலும் நிகழ்ச்சியை சிறக்க வைக்கும் என நம்புகிறோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாசகர்கள், நண்பர்கள் இவரது ஆளுமையை அறிவதன் வழி ஆழமான உரையாடல்களுக்கு வழிவகுக்கலாம்.
நிகழ்ச்சி நாள்: 18.11.2018 (ஞாயிறு)
நேரம் : பிற்பகல் 2.00
இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)
அனைத்துத் தொடர்புக்கும்: