வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டம் 2017 இல் தொடங்கியது. எழுத்தாளர்களைக் குறுநாவல் எழுதவைத்து அதனை செறிவாக்கம் செய்து நூலாகப் பதிப்பிக்க வேண்டும் என்பதே வல்லினம் குழுவின் அடிப்படையான நோக்கம். இது போட்டியல்ல. சோர்வடைந்திருக்கும் மலேசிய நாவல் இலக்கிய வளர்ச்சியைப் புத்தாக்கம் பெற வைப்பதே வல்லினம் குழுவின் அடிப்படை நோக்கம்.
இந்தக் குறுநாவல் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்களுக்கு முதலில் பட்டறை நடத்தப்பட்டது. ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் குறுநாவல் நுணுக்கங்கள் குறித்து விளக்கினர். இருநாட்கள் நடந்த இந்தப்பட்டறைக்குப் பின்னரே எழுத்தாளர்கள் குறுநாவல் எழுதப் பணிக்கப்பட்டனர்.
சுமார் 14 குறுநாவல்கள் இந்தப் பதிப்புத்திட்டத்திற்கு வந்திருந்தன. இதில் இறுதிச்சுற்றுக்கு எட்டு நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நாவல் எழுதியவர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு வெவ்வேறு நடுவர்களிடம் அனுப்பப்பட்டது. இறுதியில் பதிப்புக்குத் தகுதி கொண்டவை என மூன்று நாவல்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டன.
தெரிவு செய்யப்பட்ட நாவல்கள் எழுத்தாளர்கள் அனுமதியுடன் செறிவாக்கம் கண்டன. அதன் மையம் சிதையாமல் வடிவமும் மொழியும் கூர்மை செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட நாவல்களின் விபரம்:
குறுநாவல் 1: ரிங்கிட்
ஆசிரியர் : அ.பாண்டியன்
மலேசிய வரலாறு – வளர்ச்சி முழுவதும் இனம் சார்ந்தே இருப்பது தவிர்க்க முடியாதது. பெரும்பான்மை – சிறுபான்மை என்பன போன்ற பொதுவான வேறுபாடுகளை விட பூமிபுத்ரா – பூமிபுத்திரா அல்லாதோர் என்கிற அரசியல் அடையாள பிரிவினையே இந்நாட்டின் அரசியலை முடிவு செய்யும் மையமாக இருந்துவருகிறது.
ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அதிகமாக மலேசியாவில் குடியேறிய இந்திய நாட்டு மக்களும் சீன நாட்டு மக்களும் இந்நாட்டின் பொருளாதார சூழலை மட்டுமின்றி அரசியல் சூழலையும் வெகுவாக மாற்றி அமைத்தார்கள். சுல்தான்களின் அதிகாரத்தின் கீழ் மரபு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்துவந்த மலாய்காரர்கள், சுதந்திர போராட்ட காலத்தில் தங்கள் மண் சார்ந்த உணர்வெழுச்சியைப் பெற்றனர். அதன்வழி மலாயாவின் அரசியல் அதிகாரம் தங்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். போராட்டங்களின் வழியும் பேச்சுவார்த்தைகளின் வழியும் சுதந்திர மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டங்களை வரைந்தனர்.
ஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றும் சீன – இந்திய அரசியல்வாதிகள் முன்வைத்த விண்ணப்பங்களுக்கு ஏற்பவும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்நாட்டில் குடியேறிய மக்களுக்குத் தாய்மொழி, சமயம் போன்ற சில விவகாரங்களில் அனுமதியும் குடியுரிமை தளர்வுகளும் வழங்கப்பட்டன.
ஆக, சுதந்திர மலேசியாவின் தளம், பல்வேறு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆயினும், இரண்டாம் உலகப்போர், கம்யூனிஸ்டு பயங்கரவாதம் போன்ற குழப்பங்கள் மலேசிய இனங்களுக்கிடையே குறிப்பாக மலாய் – சீன சமூகங்களிடையே தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி வந்திருக்கிறது. இன வெறுப்பு என்பது இந்நாட்டில் நீறு பூத்த நெருப்பாக இருந்தாலும் சில நேரங்களில் கொழுந்து விட்டெரியும் பெரும் தீயாக மாறி உயிர்களை குடித்து விடும் அபாயகரமானது.
பொதுவாக 1969-ஆம் ஆண்டு நடந்த மே இனக்கலவரத்தை இந்நாட்டு அரசியலில் கருப்பு தினமாகச் சொல்வது வழக்கம். ஆயினும் மே கலவரத்துக்கு முன்பும், மலேசியாவில் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. குறிப்பாகச் சீனர்கள் அதிகம் வாழும் பினாங்கு மாநிலத்தில் இனப்பதற்றம் எப்போதும் உச்ச நிலையிலேயே இருந்துள்ளது. 1957-1967க்குள் மூன்று இனக்கலவரங்கள் பினாங்கில் நடந்து உயிருடற்சேதங்களும் நிகழ்ந்துள்ளன. அரசியல் போராட்டங்கள் மட்டுமின்றி தொழிற்சங்க போராட்டங்களும் இனக்கலவரமாகத் திசைமாறிய வரலாறு உண்டு. சிறுக சிறுக நடந்த பல இனக்கலவரங்களின் உச்சமே கோலாலம்பூரில் வெடித்த மே கலவரம்.
1967-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்த புதிய நாணயமான ‘ரிங்கிட்’ தொடர்பில் எழுந்த சர்ச்சையும் முன்பிருந்த பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் பினாங்கில் ஓர் இனக்கலவரம் வெடிக்க காரணமாகின. பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு 15 விழுக்காடுவரை வீழ்வது மக்களுக்கு பெரும் பணச்சுமையைக் ஏற்படுத்தும் என்ற கருத்தை முன்வைத்து பினாங்கில் இயங்கிய தொழிலாளர் கட்சி, அரசு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. அக்கட்சி காந்திய நெறியில் ‘ஹர்தால்’ (கதவடைப்புப் போராட்டம்) நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற நிலையில் சில குழப்பங்களால் சட்டென்று ‘ஹர்தால்’ இனக்கலவரமாக மாறி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு மலேசிய மக்களின் இனவாதப் போக்கு முற்றுவதற்கு மேலும் ஒரு காரணமானது.
அ.பாண்டியன் ‘ரிங்கிட்’ குறுநாவல் மூலம் பெரும்பாலும் கவனப்படுத்தப்படாமல் இருக்கும் இந்த வரலாற்றைப் புனைவாக்க முனைந்துள்ளார். இது இவரது முதல் நாவல் முயற்சி. ஹசான் எனும் மனிதனின் நீண்ட வாழ்க்கைக்குள் நுழைந்து செல்லும் இந்த வரலாறு அவரை என்னவாக மாற்றியுள்ளது என்றும் அகண்டு கிடக்கும் காலத்திடம் அந்த வரலாற்றுக்கு என்ன மதிப்பு உள்ளது எனவும் நுட்பமாக சித்தரித்துள்ளார் அ.பாண்டியன். வாழ்க்கையையும் வரலாற்றையும் குறித்து ஓர் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய தனித்ததொரு தரிசனத்தின் தெறிப்புகள் இந்நாவல் முழுவதும் இருப்பது சிறந்த புனைவுக்கான தகுதியைப் பெற்றுத்தருகிறது.
குறுநாவல் 2 : மிச்சமிருப்பவர்கள்
ஆசிரியர் : செல்வன் காசிலிங்கம்
நவீன நாவல் வடிவம் வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கில் படைக்கப்படுவதில்லை. அது வரலாற்றை ஆராய்கிறது. மொத்த எரிமலை வெடிப்பின் காத்திரத்தை ஒரு கைப்பிடி தீக்குழம்பில் மீள்புனைவு செய்கிறது. ஆறியப்பின் உண்டாகும் கெட்டித்தன்மையையும் அது கவனத்தில் கொள்கிறது. பின்னர் அது தனிச்சையாய் உருவாக்கிக் கொடுத்துள்ள வடிவத்தை இரசிக்கவும் செய்கிறது. இவ்வாறு ‘மிச்சமிருப்பவர்கள்’ பெரும் போராட்ட வரலாற்றின் உஷ்ணம் வாசிப்பவர் நாசிகளில் நுழையும் வண்ணம் புனையப்பட்ட குறுநாவல் என தாராளமாகக் கூறலாம்.
25 நவம்பர் 2007 மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் மிக முக்கியமான தினம். ஒருவகையில் மலேசிய வரலாற்றிலும் அரசியல் சூழலிலும் பெரும் திருப்பங்கள் உருவாக்கிய தினம். முப்பது அரசு சார்பற்ற இந்து அமைப்புகள் கூட்டணியாக இணைந்த ‘இந்து உரிமைகள் போராட்டக் குழு’ (Hindu Rights Action Force) இந்து மக்களின் உரிமைகள், கலாசார பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும் எனும் தங்களின் அடிப்படைவாத குரலில் இருந்து மேம்பட்டு இன, மொழி, சமய, கலாசார அடிப்படையில் மலேசியாவின் சிறுபான்மையினர் நசுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனும் சமூகப் போராட்டக் குரலாக எழுந்து மலேசியத் தலைநகரை நிலைகுத்த வைத்த தினம் அது.
இண்ட்ராப் (HINDRAF) பேரணி என வருணிக்கப்படும் இந்த மாபெரும் போராட்டத்தில் இரண்டு லட்சம் மலேசிய இந்தியர்கள் திரண்டனர். பல்லின மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு எழவும் காரணமாக இருந்த இந்தப் போராட்டத்தைப் பற்றிய முதல் நாவல் இது. ஆனால், இண்ட்ராப் எனும் இயக்கம், அது முன்னெடுத்த அரசியல், அவ்வரசியலின் சரிபிழைகள், போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பின்னணி என ஆராயாமல் ஒரு சமூகத்தின் எளிய குடிமகன் எவ்வாறு தன்னை இந்தப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டான் என்றே நாவல் புனையப்பட்டுள்ளது. அவ்வகையிலேயே மலேசிய வரலாற்று நாவல்களில் பெரும்பாலும் கவிந்திருக்கும் பத்திரிகை செய்தித் தன்மை குறைந்து அசலான நல்லப் புனைவாகிறது.
செல்வா எனும் கதாபாத்திரம் நாவலின் மூன்று பாகங்களையும் இணைக்கிறது. இதில் முதல் பகுதியிலும் மூன்றாவது பகுதியிலும் நாவலாசிரியரே கதைச்சொல்லியாக இருக்க, இரண்டாவது பாகத்தில் செல்வா தன்னிலையில் இருந்து கதையை விவரிக்கிறான். மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நில பறிமுதல், கல்வி வாய்ப்புகளில் பாராபட்சம், சிறையில் நடந்த தொடர் மரணங்கள், சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிச் சூடுகள் என தொடர்ந்து இந்தியர்கள் மேல் நடந்த – நடக்கும் அழுத்தங்கள் எவ்வாறு சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கி வாழும் ஒருவனைப் போராட்டத்துக்குள் இழுத்துவிடுகிறது என சுவாரசியம் குன்றாமல் எழுதியிருக்கிறார் செல்வன் காசிலிங்கம்.
நிகழ்காலத்தில் ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நினைவுகள் வழியாக இறந்தகாலத்திற்குத் தாவிச்செல்லுதல், நாவலில் அறிமுகப்படுத்தும் ஒருவன் வாழ்வின் இக்கட்டான தருணங்களை இன்னொரு துணைக்கதையாகச் சொல்லிச் செல்லுதல் என மாயக்குதிரை போல காலங்களைத் தாண்டித் தாண்டிச் செல்லும் பாணி முதல் நாவலிலேயே குழப்பம் இல்லாமல் ஆசிரியருக்குக் கைக்கூடியுள்ளது ஆச்சரியமானது.
ஆம்! இது இவரது முதல் நாவல். இருபது ஆண்டுகளுக்கு மேல் நாளிதழ்களில் எழுதிக்கொண்டிருந்தாலும் வல்லினம் சிறுகதை போட்டிகள் மூலம் தொடர்ந்து முதலாவது இரண்டாவது பரிசு பெற்று கவனம் பெற்றதுடன் குறுநாவல் பதிப்புத்திட்டம் வழியாகவும் மலேசிய நவீன இலக்கிய உலகத்தில் தனது கால்களை ஆழமாகவே பதித்துள்ளார்.
குறுநாவல் 3: கருங்காணு
ஆசிரியர்: அ.ரெங்கசாமி
கப்பல் ஏறி தமிழகத்திலிருந்து வந்தது முதல் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைப்பது வரை தமிழர்கள் மத்தியில் இருந்த மனநிலையையும் உளவியலையும் சித்தரிப்பதால் இந்நாவல் பதிப்புக்குத் தேர்வு பெற்றுள்ளது.
கறிய சிறு ஆற்றின் ஓரம் வாழும் ஒரு குடும்பம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏற்படும் இடர்களில் இருந்து தப்பி தங்களை மீட்டுக்கொண்டு வந்தும் இறுதியில் மீண்டும் ஒரு பிரமாண்டமான சிக்கலின் முன் ஸ்தம்பித்து நிற்கிறது என குறுநாவல் விவரித்துச்செல்கிறது.
மையமான கரு என இல்லாமல் தமிழர்கள் வாழ்வில் அவ்வப்போது நிகழ்ந்த பெரும் துயங்களின் சாரல்களை இந்நாவல் பதிவு செய்துள்ளது. கிள்ளான் கலகம், சயாம் மரண இரயில் தண்டவாளம் போடும் பணி, கம்யூனிஸ கொடுமைகள் என பல்வேறு காலக்கட்டங்களை எளிய சித்திரமாகச் சொல்லிச்செல்லும் இந்த நாவல் லட்சியவாதக் குரலில் ஒலிக்கிறது.
85 வயதைக் கடந்துவிட்ட அ.ரெங்கசாமி இதுவரை 5 நாவல்களை எழுதியுள்ளார். ஐந்துமே மலேசிய இந்தியர்கள் எதிர்க்கொண்ட சிக்கல்களைப் பேசுபவை. இந்த நாவல் அதன் தொகுக்கப்பட்ட சுருக்கம் எனலாம்.
இறுதியாக:
வல்லினம் பதிப்பாசிரியராக இந்தக் குறுநாவல் பதிப்புத்திட்டம் மூலம் இத்தகைய படைப்புகள் கிடைத்துள்ளது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. இதுவரை பேசப்படாத இரு முக்கியமான வரலாறுகள் புனைவாக்கப்பட்டுள்ளதோடு மலேசிய நாவல் என்பதற்கான தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளன. விமர்சகர்கள் வாசகர்கள் மூலமே இந்நாவல்கள் தொடர்ந்து கவனப்படுத்தப் பட வேண்டும். அது நிகழ்ந்தால் இம்முயற்சி முழுமையடையும்.