தசைப்பிடிப்பு. அவனது வயிறு பிடிப்புக்கொள்ளத் தொடங்கியது. உண்மையில் அவன் தன்னால் நீண்ட தூரம் நீந்த முடியும் என்றுதான் எண்ணியிருந்தான். கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும்போதே அவனது வயிறு பிடிப்புக்கொள்ளத் தொடங்குகிறது. முதலில் அவன் அது வயிற்றுவலி என்று நினைத்தான் – தொடர்ந்து நீந்தினால் நீங்கிவிடலாம். ஆனால், வயிறு தொடர்ந்து இறுக, அவன் நீந்துவதை நிறுத்தி, அதனைத் தொட்டுப் பார்க்கிறான். வலது பக்கம் இறுக்கமாக இருக்கிறது. அது நீரின் குளிர்ச்சியினால் வயிற்றில் உண்டான தசைப் பிடிப்பு என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. நீரில் இறங்குவதற்கு முன்பு அதற்கான ஆயத்தப் பயிற்சியை போதுமான அளவில் அவன் செய்திருக்கவில்லை.
இரவு உணவுக்குப் பிறகு, அந்த வெள்ளைநிற தங்கு விடுதியிலிருந்து, தனியாகப் புறப்பட்டு கடற்கரைக்கு வந்து சேர்ந்திருந்தான். காற்று மிகுந்த இளவேனிலின் தொடக்கமாதலால், இருள் சூழ்ந்துவர அங்கே சிலர் மட்டுமே பேசிக்கொண்டோ, சீட்டாட்டம் ஆடிக்கொண்டோ இருந்தனர். நடுப்பகலின்போது, கடற்கரை எங்கும் ஆண்களும் பெண்களும் படுத்துக்கிடந்தனர். இப்போது சிவப்புநிற நீச்சலுடையிலிருந்த ஒரு பெண்ணும் மேலும் ஐந்தாறு இளைஞர்களும் வலைப்பந்து ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களின் நீச்சலுடையிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது – அப்போதுதான் அவர்கள் நீரிலிருந்து மேலே வந்திருந்தனர். இந்த இளவேனில் நாளில், ஒருவேளை நீர் அவர்களுக்கு அதிக குளிராக இருந்திருக்கலாம். கடற்கரை நெடுக எவரும் நீரில் இல்லை. அந்தப் பெண் அநேகமாய் தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவன் பின்னால் பார்க்காமலேயே நீருக்குள் சென்றிருந்தான். இப்போது அவனால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. திரும்பி சூரியனைப் பார்க்கிறான். அது மலைமேல் கடற்கரையைப் பார்க்க இருந்த புனர்வாழ்வு மருத்துவமனையின் துணைக் கட்டிடத்தின் பின்புறம் மறைந்துகொண்டிருக்கிறது.
தொக்கி நின்ற சூரிய ஒளியின் அதி பிரகாச மஞ்சள் கிரணங்கள் அவனது கண்களை நோகச் செய்கிறது. ஆனாலும் அவனால் மலைமேலிருந்த கடலோர துணைக் கட்டிடத்தையும் கடற்கரை சாலையை ஒட்டியிருந்த மரங்களின் வரைக்கோட்டுச் சித்திரமான மங்கிய அதன் மேற்பரப்பையும் படகு வடிவிலிருந்த புனர்வாழ்வு மருத்துவமனையின் முதல் தளத்திற்கும் மேலேயும் பார்க்க முடிகிறது. திரண்டு வரும் கடலாலும் நேரடி சூரிய கதிர்களின் தாக்கத்தாலும் அதற்கும் கீழே உள்ள எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. அவர்கள் இன்னும் வலைப்பந்து ஆடிக்கொண்டிருக்கிறார்களா?
அவன் நீருக்கு மேல் தலை நீட்டி செங்குத்தாக மிதக்கிறான். பொங்கும் அலைகள் அவனைச் சூழ, மீன்பிடி படகுகள் எதுவும் தென்படவில்லை. உடலைத் திருப்ப, அவனை அலைகள் சுமந்து செல்கின்றன. தூரத்தே கருங்கடலில் ஒரு கருமைப் புள்ளி. அவன் அலைகளுக்கிடையில் நுழைந்துவிட, கடலின் மேற்பரப்பு பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது. சரியும் கடல் கறுமையின் மினுமினுப்புடன், சாடின் (satin)துணியைவிடவும் மென்மையுடனிருக்கிறது. வயிற்றிலிருந்த பிடிப்பு மேலும் மோசமாகிறது. நீரில் மிதந்தவாறு, அவன் வயிற்றின் அந்த இறுக்கமான பகுதியை வலி சற்றே குறையும் வரை அழுத்திவிடுகிறான். அவனுக்கு முன்னால், தலைக்கு மேல், சிறகு போன்ற மேகத் துண்டு ஒன்று; அங்கு மேலே காற்று இன்னும் பலமாக இருக்க வேண்டும்.
அலைகள் ஏறி இறங்க, அவன் அதனோடு மேலேறி அதற்கிடையில் விழுகிறான். ஆனால் இப்படி மிதப்பது பிரயோஜனமற்றது. அவன் கரை நோக்கி விரைந்து நீந்த வேண்டும். திரும்பி காற்றையும் அலைகளையும் எதிர்கொண்டு விரைந்து நீந்த, அவன் தன் இரு கால்களையும் ஒன்றாய் சேர்க்க,மிகவும் முயல்கிறான். ஆனால், சிறிது குறைந்திருந்த வயிற்றுவலி மீண்டும் வலிக்கத் தொடங்குகிறது. இந்த முறை, வலி விரைந்து வந்தது. சட்டென, வலது கால் மரத்துப்போவதை அவன் உணர, நீர் தலைக்கு மேல் போகிறது.
அவனால் பார்க்க முடிந்தது – அந்த தெளிந்த பச்சைநிற நீரை. அது, விரைந்து வெளியேறிய தொடர்ச்சியான அவனது மூச்சுக் குமிழ்களைத் தவிர்த்து, மிகுந்த அமைதிகொண்டிருக்கிறது. அவனது தலை நீருக்குள்ளிருந்து வெளிப்பட, கண்களைச் சிமிட்டி இமைகளில் ஒட்டியிருந்த நீர்த்துளிகளை உதிர்க்க முயல்கிறான். இன்னும் அவனால் கரையைப் பார்க்க முடியவில்லை. சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருக்கிறது. அலையெனெ விரிந்த மலைகளுக்கு மேல் வானம் ரோஜா நிறத்தில் பிரகாசம் கொண்டிருக்கிறது. அவர்கள் இன்னமும் வலைப்பந்து ஆடிக்கொண்டிருக்கிறார்களா?
அவன் கைகளை விரைந்து வீசி, நீந்தத் தொடங்குகிறான். ஆனால் காற்றை உள்ளிழுக்க உடன் செல்லும் கரிப்பு கடல்நீரால் இருமல் எழ, ஊசியால் வயிற்றில் குத்துவதுபோலிருக்கிறது. அவன் கைகளையும் கால்களையும் அகட்டி மல்லாக்கப் படுக்க, திரும்ப வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் அவனால் சிறிது ஓய்வெடுக்க முடியுமாதலால், அது வலியைக் குறைக்க உதவலாம். மேலே வானம் மென்கருமை கொண்டிருக்கிறது. அவர்கள் இன்னமும் வலைப்பந்து ஆடிக்கொண்டிருக்கிறார்களா?
அவர்கள் முக்கியம். சிவப்பு நீச்சலுடையிலிருந்த அந்த பெண், அவன் நீரில் இறங்குவதைக் கவனித்திருப்பாளா? அவர்கள் கடலை நோக்குவார்களா? கருங்கடலில் அங்கே இருந்த அந்த கருமைப் புள்ளி… அது என்ன ஒரு சிறு படகா அல்லது ஏதேனுமொன்றிலிருந்து கழன்று வந்த ஒரு மிதவையா? அதற்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து எவரேனும் கவனம் கொண்டிருப்பார்களா?
இத்தருணத்தில் அவன் தன்னை மட்டுமே சார்ந்திருக்க முடியும். அப்படியே குரல் கொடுத்தாலும் அங்கிருப்பது திரண்டலையும் அலைகளின் சலிப்பூட்டும் இடையறாத ஆரவாரம் மட்டுமே. அலைகளுக்கு செவி கொடுப்பது அவனுக்கு எப்போதுமே இத்தனை தனிமை உணர்வைத் தந்ததில்லை. அசைந்தாடி ஆனால் உடனடியாய் சுதாரித்து நிலை மீள்கிறான். அடுத்து, பக்கமே ஒரு அதிகுளிர் நீரோட்டம் மூர்க்கமாய் நகர்ந்தபடி, கையறு நிலையிலிருந்த அவனையும் தன்னுடன் இழுத்துச் செல்கிறது.பக்கவாட்டில் திரும்பி, வலது கையால் நீரை அளைந்து,கால்கள் உதைத்து உந்த, இடது கையால் வயிற்றைப் பிடித்துவிடுகிறான். வலி இன்னும் இருந்தாலும், தாங்கிக்கொள்ளும்படி இருக்கிறது. தன் உதையின் வலிமையைக் கொண்டு மட்டுமே இனி தன்னால் இந்த அதிகுளிர் நீரோட்டத்திலிருந்து விடுபட்டு வெளியேற முடியும் என்பதை உணர்கிறான். அவனால் அதைத் தாங்க இயலுமா என்பதல்ல, எப்படியும் அவன் அதைச் செய்தாக வேண்டும்.காரணம்,அவனைக் காப்பாற்றிக்கொள்ள அதுவொன்றே வழி.
கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில், ஆழ்கடலுள் இருக்கிறான். இத்தருணத்தில், அது ஒரு கிலோமீட்டர் தூரந்தானா என்பதை அவனால் உறுதிசெய்ய இயலாவிட்டாலும், கரையை ஒட்டியே தான் மிதந்து கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறான். அவனது உதைகள் நீரோட்டத்தின் விசையை ஓரளவிலேனும் எதிர்கொள்வதாக இல்லை. அவன் அதிலிருந்து விடுபட போராட வேண்டும். இல்லையெனில், அவனும் அலைகளில் மிதக்கும் அந்த கரும் புள்ளியைப்போல, கருங்கடலில் காணாமல் போய்விடலாம். அவன் அந்த வலியை பொறுத்துக்கொள்ள வேண்டும். தன்னால் முடிந்தளவு பலம் கொண்டு உதைக்க வேண்டும். முக்கியமாக பதற்றமடையக் கூடாது. அவன் தனது உதையையும் சுவாசத்தையும் வலிக்கான மசாஜையும் மிகுந்த தேர்ச்சியுடன் ஒன்றிணைக்க வேண்டும். அவன் வேறு எண்ணங்களால் கவனம் குலையக் கூடாது. முக்கியமாக அச்சமளிக்கும் எண்ணங்களை அனுமதிக்கக் கூடாது.
சூரியன் விரைந்து மறைந்திருக்க, கடலுக்கு மேல் மென்கருமை மூட்டம். ஆனால், அவனால் இன்னமும் கரையில் விளக்கு வெளிச்சம் எதனையும் காண முடியவில்லை. கரையையோ, மலைகளின் வளைவுகளையோகூட தெளிவாகப் பார்க்க இயலவில்லை. அவனது பாதங்களில் ஏதோ மோதுகிறது! பதற்றமடைகிறான். வயிற்றில் கூரிய வலி நெழிந்தோடுகிறது. அவன் மெதுவாக கால்களை நகர்த்தினான்; கால் முட்டியில்,ஜெல்லி மீன் ஒன்று பிடிகொண்டிருக்கிறது. அவன் அந்த விரிந்த குடைபோன்று மெலிந்த மிதக்கும் உதடுகளுடனிருந்த பழுப்பு-வெள்ளை உயிரினத்தைப் பார்த்தான். அவனால் நிச்சயமாக அதனை எட்டிப் பிடித்து, அதன் வாயையும் உணர்கொம்புகளையும் இழுத்து அகற்ற முடியும்.
கடந்த சில நாட்களில், கடலோரம் வாழும் குழந்தைகளிடமிருந்து, ஜெல்லி மீனைப் பிடிக்கவும், அதனைப் பக்குவப்படுத்தி பாதுகாக்கும் விதத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறான். விடுதியிலுள்ள அறையின் ஜன்னலுக்குக் கீழே, வெளியில், வாய், உணர்வுகொம்புகள் அகற்றப்பட்டு உப்பு கலந்து காயவைத்து பக்குவப்படுத்தப்பட்ட ஏழு ஜெல்லி மீன்கள் உண்டு. அதன் நீரைப் பிழிந்துவிட, மிஞ்சுவது வற்றி சுருங்கிய தோல்தான். அவனும் ஒரு வெறும் தோலாக, ஒரு பிணமாக, கரைக்கு மிதந்து செல்ல இயலாதவனாகிவிடலாம். அது வாழட்டும். அவன் அதனைவிடவும் கூடுதலாக வாழ விரும்பினான்; இனி அவன் ஜெல்லி மீன்களைப் பிடிக்கமாட்டான் – அதாவது, அவனால் மீண்டும் கரைக்கு மீள முடிந்தால். இனி கடலுக்குள்ளும் செல்ல மாட்டான்.
வலது கையால் வயிற்றை அழுத்தியபடி பலம்கொண்டு உதைக்கிறான். அவன் வேறு எதைப்பற்றியும் யோசிப்பதை நிறுத்தி, ஒத்திசைவுடன் கால்களை உதைத்து, நீரில் முன்னகருகிறான். இப்போது அவனால் நட்சத்திரங்களைப் பார்க்க முடிகிறது… அவை மிகுந்த பிரகாசம் கொண்டிருக்கின்றன… வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவனது தலை இப்போது கடற்கரை இருக்கும் திசை நோக்கி இருக்கிறது. வயிற்றிலிருந்த பிடிப்பு போய்விட்டிருக்கிறது. தனது முன்னகர்வை அது மட்டுப்படுத்துகிறது என்பதை உணர்ந்தபோதும் அவன் தொடர்ந்து கவனமாக அதை நீவிக்கொண்டிருக்கிறான்.
கடலிலிருந்து வெளிப்பட்டு, கரைக்கு வர, கடற்கரை முழுமையாய் வெறிச்சிட்டுக் கிடக்கிறது. அவனது வெற்றுடம்பை வந்து மோதும் காற்று, கடலிலிருந்தைவிடவும் கூடுதலாகக் குளிரச்செய்து, நடுங்க வைக்கிறது. அவன் அப்படியே தரையில் சாய்கிறான். ஆனால், கடற்கரை மணல் சூடு ஆறிக்கிடக்கிறது. எழுந்து நின்று, உடனடியாய் ஓடத் தொடங்குகிறான். தான் மரணத்திலிருந்து தப்பித்து வந்ததை எல்லோருக்கும் சொல்கிற அவசரத்தில் இருக்கிறான்.
விடுதியின் வரவேற்பறையில் அதே கும்பல் இன்னமும் போக்கர் (poker)ஆடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் தங்கள் எதிர் ஆட்டக்காரனின் முகத்தையோ அல்லது அவர்களின் தாளையோ கூர்மையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவனை எவரும் ஒரு பொருட்டாக நினைத்து நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் தன் அறைக்குத் திரும்புகிறான். ஆனால், அங்கே அவனது அறைத் தோழன் – அநேகமாக இன்னமும் பக்கத்து அறையில் அரட்டையடித்துக்கொண்டு – இல்லை. ஜன்னலுக்கு வெளியே, உப்பு தோய்ந்த உடலோடு, பாறைக்கடியில் நசுங்கி, இன்னமும் நீர்ச்சத்தோடு, அந்த ஜெல்லி மீன்கள் இருப்பதை உணர்ந்தபடி, ஜன்னலுக்கடியில் தொங்கிய துண்டு ஒன்றை எடுக்கிறான். பிறகு, புதிய ஆடையும், சப்பாத்தையும் அணிந்துகொள்ள உண்டான கதகதப்புடன், மீண்டும் தனியாய் கடற்கரைக்கு மீள்கிறான்.
கடலின் ஆரவாரம் அனைத்தையும் தன்னுள் உள்ளடக்கியதாக இருக்கிறது.காற்று மூர்க்கமாக வீசிக்கொண்டிருக்க,கடலலைகள் கரையை வந்து மோதுகின்றன. கருமை கடல் நீர் சட்டென விரிந்து படர, அவன் உடனடியாய் பின்வாங்காதலால், அவனது சப்பாத்து நனைந்துவிடுகிறது. பின், அவன் அந்த இருண்ட கடற்கரையை ஒட்டியே சிறிது தூரம் உள்வாங்கி நடக்கிறான்.
வானத்தில் நட்சத்திரங்களின் வெளிச்சம் ஏதுமில்லை. குரல்கள் கேட்கிறது. ஆணும் பெண்ணும். அவன் மூவரின் உருவங்களைப் பார்த்து, நின்றுவிடுகிறான். இருவர், ஆளுக்கொரு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடக்க,ஒரு சைக்கிளின் பின்னால் ஒரு நீண்ட முடியுள்ள பெண் உட்கார்ந்திருக்கிறாள். அந்த சைக்கிளின் சக்கரங்கள் மணலில் புதைய, அதைத் தள்ளுவதற்கு அவன் சிரமப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால், அவர்கள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பின்னால் உடார்ந்திருக்கும் அந்தப் பெண்ணின் குரலில் குதூகலம்.
அவர்கள் சைக்கிளைப் பற்றியபடி, அவன் முன்பு நிற்கிறார்கள்.ஒரு இளைஞன், மற்றொரு சைக்கிளிலிருந்து ஒரு பெரிய பையை எடுத்து, அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறான். அவர்கள் உடைகளைக் களைகிறார்கள். இரண்டு நிர்வாணமான பையன்கள் துள்ளிக் குதித்துக் கத்துகிறார்கள். “கடுமையாக குளிர்கிறது! கடுமையாக குளிர்கிறது!” கூடவே அந்தப் பெண்ணின் சிரிப்பொலி.
“இதை இப்போதே குடிக்கிறீர்களா?” சைக்கிளில் சாய்ந்தபடி அந்தப் பெண் கேட்கிறாள்.
அவர்கள் அவளை நெருங்கி, அவளிடமிருந்து ஒரு வைன்(wine) பாட்டிலை எடுத்துக்கொண்டு, மாற்றி மாற்றிக் குடித்து, பாட்டிலை அவளிடம் திரும்பக் கொடுத்துவிட்டு,கடலை நோக்கி ஓடுகிறார்கள்.
“ஏய்!ஏய்!”
“ஏய் –“
கடற்பெருக்கு மூர்க்கமாக கரையை மோதி,மேலும் உயருகிறது.
“திரும்பி வாருங்கள்!” அந்தப் பெண் அலறுகிறாள்.
கரையை மோதும் கடலலைகளின் ஆரவாரம் மட்டுமே திரும்பி வருகிறது.
கரையை நோக்கி வரும் கடலலைகளின் மேல் பிரதிபலிக்கும் மெல்லிய ஒளியில்,சைக்கிளின் மேல் சாய்ந்திருக்கும் அந்தப் பெண்,ஊன்றுகோல்களின் துணையோடு நின்றிருப்பதை அவன் பார்க்கிறான்.
மூலம் : Cramp, GAO XINGJIAN (Winner of the nobel prize for literature)
மொழிப்பெயர்ப்பு : சீ.முத்துசாமி
எழுத்தாளர் சீ.முத்துசாமி தொடர்ந்து எழுதுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. விருதுகள் பல சமயங்களில் ஒருவரை நிறைவு கொள்ள வைப்பதுண்டு. ஆனால் பெரும் விருதுக்குப் பின் எழுந்துள்ள அவர் துடிப்பு அசல் கலைஞனாக நமக்கு காட்டுகிறது.
Vaalthukkal