முன்னுரை: கலையின் ஒளிக்குரல்

09picவல்லினத்தில் தொடர்ந்து வெளிவந்த உலக சினிமா பற்றிய கட்டுரைகள் ‘ஊதா நிறத் தேவதைகள்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது.

இவை சினிமாவை விமர்சித்துப் பேசும் கட்டுரைகள் அல்ல. சினிமாவின் நுட்பம் பற்றியோ கலைவடிவம் பற்றியோ அதன் ஒளிமொழி குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. நான் திரைக்கதைக்குள் ஒளிந்துள்ள மானுடத்தைக் கவனிப்பவன். அவ்வகையில் இந்தக் கட்டுரைகள் அனைத்துமே உலக சினிமாவில் பெண்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை குறித்த உரையாடல்கள் எனலாம்.

இக்கட்டுரைகளை எழுதுவதற்கு முன்னர், சினிமாவைப் பார்த்து நான் ரசித்த விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதுண்டு. சினிமா குறித்த என் பார்வையை விசாலமாக்கியவர் நவீன்.

ஒருநாள் மலாக்காவில் உள்ள பூலாவ்பெசார் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது நான் பார்த்த ஒரு சினிமாவைப் பற்றி நவீனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த உரையாடலின் விளைவாக எனது கட்டுரைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் நவீன்.

ஒரு சினிமாவின் தொழில்நுட்பங்களைப் பற்றி பேசாமல், அதில் பேசப்பட்டிருக்கும் அரசியலை இயக்குநர் எப்படிக் காட்சிப்படுத்தி பார்வையாளனுக்குச் சொல்கிறார் என்பதை இக்கட்டுரைகளின் வழிசொல்ல முயற்சித்திருக்கிறேன். அவ்வாறு ஒரு நாட்டின் திரைப்படத்தைப் பற்றி பேசும்போது அந்நாட்டின் அரசியல் சூழலையும் சுருக்கமாகச் சொல்ல இக்கட்டுரைகள் வழி முயன்றுள்ளேன். திரைப்படத்தில் காட்டப்படும் ஒரு நிகழ்வின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் சமகாலச் சூழலையும் அறிவதன் வழியே ஒரு திரைக்கதையையும் முழுமையாக உள்வாங்க முடியும். இக்கட்டுரைகள் அதற்கான எளிய முயற்சி.

செய்தியாளரான நான், அன்றாடம் குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைகள், வன்புணர்ச்சி, அடக்குமுறை, பால்அடையாளப் பிரச்சினை என பலவற்றையும் செய்திகளாக அணுகியுள்ளேன். ஆனால் இதே பிரச்சினைகளைத் திரையில் கொண்டு வந்து அதனை ஒரு கலைப்படைப்பாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இயக்குநர்கள் கையாளும் கோணங்கள் ஒரு சினிமா ரசிகனாக என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. செய்திகளைவிட கலை கொடுக்கும் அதிர்வு ஆச்சரியமானது.

மாறுபட்ட கலாச்சாரத்தில் வாழும் மொழி தெரியாத ரசிகனையும் காட்சிமொழியால் கவரக்கூடிய சக்தியைச் சினிமா பெற்றிருக்கிறது. ஈரான், எகிப்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, போன்ற வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலம் உள்ள நாடுகளில் வாழும் பெண்கள் குறித்த சமூகத்தின் மதம் சார்ந்த பார்வைகளையும் மரபுவழிப் பழக்கவழக்கங்களால் திணிக்கப்படும் அடக்குமுறைகளையும் விளக்க முற்பட்டுள்ளேன். திரைக் காட்சிகளை உள்வாங்குவதன் வழியும் நடப்பு அரசியல் சூழலை வாசித்ததன் வழியும் என் கருத்துகளை முன்வைக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, கலாச்சாரத்தையோ, அல்லது அவர்களின் நம்பிக்கையையோ குறைத்து மதிப்பிடும் நோக்கத்தில் இக்கட்டுரைகள் எழுதப்படவில்லை. பல்வேறு நிலப்பரப்புகளில் பெண்களின் நிலைகளைப் படமாகக் காட்டியிருக்கும் இயக்குனர்களின் திரைக்கு அப்பால் உள்ள பார்வையை ரசிகனுக்கு கடத்த முயன்றுள்ளேன். இன்னும் சொல்லப்போனால் இக்கட்டுரைகளை எழுதுவதன் வழி நானும் இத்திரைப் படங்களை மேலும் அணுகிச் செல்லவும் எனக்குள் நான் விவாதிக்கவும் தகுந்த வெளியை உருவாக்கியுள்ளேன்.

சினிமா என்பது பிரம்மாண்டங்களின் பிம்பம் மட்டும் கிடையாது. அது ஒரு கலை. அந்தக் கலையின் வெவ்வேறு மொழிகளின் வேறுபாடுகளையும், ஒற்றுமையையும் ரசிகன் உணரவேண்டும் என்ற நோக்கத்தில் இக்கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளன.

இக்கட்டுரைகள் நூலாக முழுவடிவம் பெற அனைத்து வகையிலும் ஊக்கம் கொடுத்து வழிகாட்டிய ம.நவீனுக்கும், வல்லினம் குழுவினருக்கும், என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் வாசக நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...