சாளரங்களைத் திறந்து வைக்கும் கலைஞன்

003நவீனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’ கதைகளைப் படித்ததும் அவரின் முதன் முதல் எழுதப்பட்ட இரண்டு மூன்று கதைகள் எவை என்றுதான் பார்த்தேன். இலக்கியம் குறித்த பெரிய புரிதல் இல்லாமல், வாசிப்பும் இல்லாமல், ஆசையின் பாற்பட்டோ, சொல்லவேண்டும் என்ற உந்திப்பினாலோ அல்லது எழுத்தின் மீதான ஆர்வத்தாலோ எழுதப்பட்ட கதைகள் எனக்கு முக்கியமானவை. அதிலே சுயம்புவான சில அடையாளங்கள் தென்படும். அதுவே அவனின் தனித்துவம்.

நவீன் யாருடைய பாதிப்பும் இல்லாமல் அந்தப் பருவத்தில் இந்த வாழ்க்கை அனுபவத்தை எப்படிப் பார்க்கிறார்? எழுத்தில் எப்படிக் கொண்டு வந்திருக்கிறார் என்று பார்த்தேன். முதல் கதைக்கும் கடைசிக் கதைக்கும் இடையேயான காலம் பத்தாண்டுகள். 2005 இல் எழுதப்பட்ட ‘எனக்கு முன் இருந்தவளின் அறை’ தொகுப்புப்பின் முதல் கதை. காமத்தின் நெடியும் அதன் சிதறல்களும் எல்லா இடங்களிலும் அப்பி இருப்பதைப் பார்க்கிறான். அருவருப்பு நிரம்பித் துரத்தும் அவ்வறையில் இருக்க நேர்கிறது. எப்படித் துடைத்தாலும் எப்படி ஒதுக்கினாலும் வெளியேற்ற முடியாத விந்துகறைகளும் பாலியல் சித்திரங்களும் சுவர்களிலும் கழிவறைகளிலும் மூலை முடுக்குகளிலும் எழுந்தபடிதான் இருக்கின்றன. இதன் கோரமான தாக்குதலைத்தான் எழுதுகிறார். கனவிலும் நிஜத்திலும் அது உண்டாக்கும் அருவருப்பிலிருந்து தப்பிக்க முடியாமல் திணறுகிறான். சூழல் உண்டாக்கும் இந்த நெருக்கடியிலிருந்து ஒருவன் படைப்பெழுச்சியின் தருணங்களை அடைய முடியுமானால் அங்கிருந்தும் கலையை உண்டாக்கி விடுகிறான்.

சுவரில் கிறுக்கப்பட்ட ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு நாள் ஒரு விநோத கற்பனை தோன்றுகிறது. தெரிந்து கொண்டிருந்தவைகள் மாயமாக மறைகின்றன. “சுவர்களில் உருவாக்கியிருந்த உலகம் முதலில் அதியற்புத ஒன்றாக எனக்குள் வியாபித்தது. அடுத்த இரண்டு நாட்களில் அவை என் கண்களில் இருந்து எப்படி தப்பியது என வியப்பாக இருந்தது. இதற்கு முன் அவை இந்தச் சுவர்களில் இல்லை. அவன் இந்த அறையின் வேறு பகுதியில் உருவாக்கிய உருவங்கள் இவை. மெல்ல நகர்ந்து வந்திருக்கக் கூடும். வேறெங்கோ வரையப்பட்டிருந்த இவை நெடிய பயணத்தின் இறுதியில் என் கண்முன் தோன்றியுள்ளன. இன்னும் சில தினங்களில் இவை இங்கிருந்து நகர்ந்து சென்றுவிடக் கூடும்…..”

“கோபம் பொங்க அவர்களை நோக்கினேன். இப்போது சத்தம் இல்லை. ஆனால் எல்லோர் முகத்திலும் சிரிப்பு இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அதுவும் மறைந்து இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டார்கள்…..”

இப்படியான கற்பனை வியாபிக்கிறது. அதனுள் ஒரு புதிய மானுட உலகம் தோன்றுகிறது. சுவரின் கிறுக்கல்களிலிருந்து உருவாகிக்கொண்ட மக்கள் கூட்டம் ஒரு வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறது. கூத்தடிக்கின்றனர். குழநதைகள் பெறுகின்றனர். தலைவனை உருவாக்குகின்றனர். கடவுளை நியமித்து அவன் கையில் ஒரு தடியையும் கொடுக்கின்றனர். சாதிகளை உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்களின் கால்களுக்கு அவர்களே விலங்குகளைப் பூட்டிக்கொள்கின்றனர். விலங்குகளோடு பிறக்கும் தலைமுறை உருவாகிறது. மனித வரலாற்றுச் சாரம் ஒரு சிறு புனைவாக வருகிறது.

குறுகுறுப்பைத் தந்த அறையை ஒரு புனைவின் வழி வெல்கிறான். அந்த புனைவிற்குள் ஒரு அபத்த தர்சனத்தைக் காண்கிறான். சுயமரியாதயும், சுய சிந்தனையும் அற்ற சாதிய விலங்குகளை மாட்டிக்கொண்ட சமூகமாக வளர்கிறது. இது கதைதான். சாதிய உணர்வு, சற்றே மங்கியிருந்த நேற்றைய வாழ்க்கையிலிருந்து இன்று உக்கிரம் பெற்று வளர்ந்திருப்பதும் ஒரு வித்தைதான்.

‘மணி மங்களம்’ பூசை செய்யும் மணியை வைத்து எழுதப்பட்ட கதை. மாரியம்மன் கோயில் மணி, பூசாரி கையில் இருக்கும் மணி, நன்கொடையாக வழங்கப்பட்ட மணி என வேறுபல மணிகளின் தாரதம்பியங்களைச் சொல்லி அம்மாவிடம் வந்து சேர்ந்த மணியைத் தொட்டு சொல்ல ஆரம்பிக்கிறப் பாணி தேர்ந்த கதைசொல்லியால் கையாளப்படுவது. இது அறிந்தோ அறியாமேலோ ‘மணி மங்களம்’ கதைக்குள் கூடி வந்திருக்கிறது. வெறும் மணியின் கதையாக இல்லாமல் அது மெல்ல மானுட கதையாக மாறுகிற இடம் முக்கியமானது. பக்தி மார்க்கம் ஒரு போதையாக மாறி மனிதனை வீழ்த்துகிறது. குட்டி அதிகாரத்தைக் கூட வழங்குகிறது. ஒரு உள்ளங்கையில் அடங்கும் பூசை மணி வேறு பரிமாணத்தைக் காட்டுகிறது. வாசிப்பு எழுத்து பயிற்சிகளுக்கு அப்பால் அனுபவம், அவனுக்குத் துணையாக நின்று வாழ்வின் சூட்சுமங்களை எழுதிவிட வைக்கிறது. இது நவீனுக்கு வாய்த்திருக்கிறது. இதுவெல்லாம் நவீன் 23, 24 வயதில் எழுத முடிந்தவை.

இந்தத் தொகுப்பில் எட்டுக் கதைகள் உள்ளன. முன் தொகுப்பில் எள்ளல் மிக்க எகத்தாளமான மொழியால் சொல்லப்பட்ட கதைகள் அதிகமாக இருந்தன. இத்தொகுப்பில் அம்மொழி சற்றே பின் நகர்ந்து துல்லியமான விவரிப்பினைக் கொண்ட ஆழ அமிழ்ந்து உருவான நிதானமான மொழி கைகூடி வந்திருக்கிறது. இம்மொழி தேர்ந்த விசயத்தாலும் அம்மாந்தர்களின் உளப்போக்கின் கதியிலும் உருவாகி வந்திருக்கிறது. புனை கதையின் மொழி என்பது வெறுமனே செய்தியைச் சொல்லும் கருவி அல்ல. உணர்தலின் பல்வேறு நாமரூபங்களை உயிரோட்டமாகக் கொண்டு வருவது. இதை நவீன் இயல்பாக பெற்றிருக்கிறார்.

மசாஜ் சென்டர்களை நாடிச் செல்லும் ஒருவனையும் அச்சென்டர்களில் வேலை செய்யும் பெண்களின் நடவடிக்கைகளின் பின் உள்ள ரகசியங்களையும் மொழியில் வசப்படுத்தியிருக்கிறார். இதுதான் கதையை கதையிலிருந்து விடுவித்து உண்மைக்குள் இழுத்து வைக்கிறது. இக்கதையின் ஒரு பக்கத்தில் மட்டும் வந்திருக்கும் மொழியாடல்கள் சிலவற்றை முன்வைக்கிறேன்.

‘அப்பா ஆடி பாடி கதறி அழும்போது குரலில் இருக்கும் சோகத்தைக் கண்களில் பார்க்க முடியாத தொலைவில் இருப்பார். கண்களைப் பார்த்துவிட முடியாத வேகம் அசைவுகளில் பரவியிருக்கும்.’

‘அவளுங்க நம்மகிட்ட கூடுதலா டிப்ஸ் கெடைக்குமென்னு நல்லா கொஞ்சுவாளுங்க……. கை வலிக்கும் ரெம்ப மெனக்கெட வேணாமுன்னு பதறணும்….. தப்பித்தவறிக் கூட நீ கண்ணை அவளுங்ககிட்ட காட்டிடக் கூடாது. நடிப்பின்னு கண்டு பிடிச்சிடுவாளுக.’

‘இஞ்சியில் தயாரித்த எண்ணெயில் உருவியதில் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாகப் புத்துணர்ச்சி பெறத் துவங்கியது.’

‘அவள் ஒரு கையால் மசாஜ் செய்துகொண்டே வாட்சப் செய்யவும் வாடிக்கையாளர்களுக்குப் புக்கிங் போடவும் உபயோகித்தது கடுப்பேற்றியது. யாரிடமும் தொண தொணவென பேசவேண்டாம் என கொஞ்சம் கடுமையாகச் சொன்னதும் மௌனமானாள். அவளது புறக்கணிப்பு கைகளில் தெரிந்தது.’

‘காதருகே வந்த அவள் ‘டிப்ஸ் கொடுக்க முடியுமா’ எனக் கேட்டவுடன்தான் வம்பே ஆரம்பித்தது. வெள்ளை நிற வாடிக்கையாளர்களை இன்னொருத்திக்கு அனுப்பி டிப்ஸ் கொடுக்காத பன்றிகளை தன் தலையில் கட்டிவிடுவதாக முணுமுணுத்தாள்.’

இவ்வித அவதானிப்புகள், கவனங்கள், தோற்றங்கள், நோக்கங்கள் எல்லாமும் கூடித்தான் மசாஜ் உலகை நிஜமாக்குகின்றன. நல்ல கருத்தை சொல்வதால் ஒரு கதை சிறந்த சிறுகதை ஆகிவிடாது. அது படைப்பு மனத்தால் அள்ளப்பட்டிருந்தால் மட்டுமே வாசகனின் இதயத்தைத் தொடும். கலை இதயத்தால் பேசுவது. மூளையால் முன் வைப்பதல்ல. மற்றவர் கதையை நவீன் தன் மன ஊற்றின் வழியாக தனது கதையாக மீட்டெடுக்கிறார்.

முன் தொகுப்பு கதைகளில் மெல்லிதாக படர்ந்திருந்த பரிவை சிலகதைளைில் நீக்கிவிட்டு கறார் தன்மையோடு அணுகியிருக்கிறார். பற்றற்ற தன்மையில் விலகி நின்று வாழ்க்கையை நேர்முகமாகப் பார்க்கிற பார்வை முக்கிய அம்சமாகத் துலக்கம் பெறுகிறது. அவரவர் செயல்களை எவ்வித பச்சாதாபம் அற்று நேர்நேர் நிறுத்துகிறார். இரு எதிர்எதிர் உலகங்கள் சங்கமிக்கின்றன என்றாலும் தாமரை இலை நீர்த்துளிபோல ஒன்றை ஒன்று பாதிக்காத விதத்தில் வளர்ந்து செல்வதைக் காட்டுகிறார். சஞ்சலப்படாது கெட்டித்தட்டிப் போன ஓர் உலகை மற்றொரு உலகம் மிக நுட்பமான சந்திப்பில் கனிய வைக்கிறது. அல்லது புரிந்துகொள்ள சந்தர்ப்பத்தை உண்டாக்கித் தருகிறது. இந்த எழுத்துப்பாணி ஒரு சாகசத்தோடு கூடி வந்திருக்கிறது. தன்னை வில்லனாக ஆக்கிக்கொள்கிற மனத்தாலே இந்த இடத்தைக் கண்டடைகிறது. இந்தக் கறார்தனம் உண்டாக்கும் நம்பகத்தன்மைதான் வேறு பல சாத்தியப்பாடுகளை உண்டாக்கிக் காட்டுகின்றன. வெற்று மதிப்புகளையும் சமூக கௌரதிகளையும் பொருட்படுத்தாது தன்னை உடைத்துக்கொண்டு பார்க்கிற துணிச்சலாலே இது இயல்வதாகிறது. படைப்பின் முன் நவீன் தன்னையே ஒரு சோதனைக் களமாக ஆக்கிப் பார்க்கிறார்.

நேற்றும் நேற்றைக்கு முன்பும் இன்றும் மனிதன் தன்முனைப்பு, தன்னகங்காரம் என்ற பார்வையிலேயே தன்னைத் தழுவ வரும் எளிய உலகை எரிச்சலோடு பாவிக்கிறான் என்ற அறிதலை இவரின் சில கதைகள் சொல்கின்றன. மலேய இலக்கிய உலகில் இது ஒரு புதிய குரல். இதுவைர சொல்லப்படாத குரல். முன்பு சை.பீர்முகமது தேர்ந்தெடுத்து தொகுத்த மலேசிய சிறுகதை தொகுப்பான ‘வேரும் வாழ்வும்’ தொகுப்பு வழியாகவும், சா. கந்தசாமி தொகுத்த ‘அயலகத் தமிழ் இலக்கியம்’ தொகுப்பு வழியாகவும் இன்னபிற தொகுப்பு வழியாகவும் நான் படித்த மலேசிய தமிழ்க் கதை உலகில் இல்லாத குரல் இது. புதிதான சில மலேசிய சிங்கப்பூர் இளைஞர்கள் நன்றாகவே எழுதுகிறார்கள் என்றாலும் நவீன் பேசப்படாத உலகை தேர்ந்த மொழித்திறனோடும் சலனப்படாத வகையில் அவரவர் வாழ்க்கையை அணுகுகிற குணத்தால் இம்மாதிரியான கதைகள் கலை அமைதி கூடிய கதைகளாக இருக்கின்றன.

இந்த வாழ்க்கை ஏன் இப்படி இருக்கின்றன. இந்த மனிதர்கள் ஏன் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள் – வாழ்கிறார்கள் என்பதற்கு உடனடி பதில்கள் இல்லை. நம்மிடம் பதில்கள் இல்லாதது போலவே நவீன் என்ற கதை சொல்லியிடமும் நேரடி பதில்கள் இல்லை. இதற்கான பதில்கள், வரலாற்றில் இருக்கின்றன. வெளி தேசத்து அரசியல் நெருக்கடியில் இருக்கின்றன. பண்பாடு உருவாக்கிய கருத்தியல் உருவகங்களில் இருக்கின்றன. வாய்த்த வாழ்க்கை முறையில் இருக்கின்றன. மனிதகுணத்தில் இருக்கின்றன. அதைத் தேடிப்பார்க்கவும் விவாதிக்கும்படியும் சொல்கின்றன இந்தக் கதைகள். நாளை என்ற நிச்சயமின்மையில் ஓடிக்கொண்டிருககும் மனிதர்களின் கதைகள். நிச்சயமின்மை இக்கதைகளில் ஓங்கி ஒலிப்பதாலே வாசகனுக்குத் திகைப்பையும் ஏற்படுத்துகின்றன ‘மசாஜ்’ ‘யாக்கை’ முதலிய கதைகள்.

இச்சையின் மெல்லிய இழைக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இருந்து அவர்கள் செய்யும் பாவலாக்கள், பொய்யான பரிபாசைகள் என பல தந்திரங்கள் கடைப்பிடிக்கப்படுவதையும் ஒரு உள்நோக்கத்தோடு வெளிப்பட்டுக் கொள்வதையும் ‘மசாஜ்’ காட்டுகிறது. இத்தொழிலைக் கையாளும் பெண்ணின், ‘கை வரிசை’ களையும் பசப்பல்களையும் தொழில் விளையாட்டாகத்தான் அங்கு செல்பவன் பார்க்கிறான். அதில் அவன் மசியாதவன். அந்த உலகிலிருந்து அதை ஒரு வரலாற்றின் துயரம்படிந்த கதையாக மாற்றுகிறார். கிலுகிலுப்பான உலகில் நின்று காயங்களின் உலகாக மாற்றுகிறபோது அது மேலான படைப்பாக மாறிவிடுகிறது. விரட்டி அடிக்கப்பட்ட ஒரு ஈழத்துப் பெண் தப்பித்து வந்து அடைக்கலமாகுமிடம் இந்த மசாஜ் நிலையம். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவளும் ஒரு கைவரிசையைக் கைக்கொள்ள வேண்டி இருக்கிறது. சூழல் உண்டாக்கிய பொறி. அது உண்டாக்கும் பண்பாடு சார்ந்த நெருக்கடிக்கு உடனடி விடையும் இல்லை. முலை எறிந்து எரியூட்டி நீதியை நிலைநாட்டிய சமுகத்திலிருந்து வந்தவளின் முலைகளில் லீலைகளை வெளிப்படுத்தி வாழவேண்டிய அவலத்தில் நிற்கும்படியாகின்றது. ஒரு கதை அசலான தமிழ்க் கதையாக மாறுகிறது. நவீன் எந்த இடத்திலும் மென்மையைக் காட்டிவிடவில்லை. நம்மைப்போல அவன் அப்படித்தான். கெட்டிதட்டிப்போன மனநிலைக்கு நேர் எதிரில் மட்டும் வரலாற்றுத் துயரத்தை வைத்துவிட்டு விலகிக்கொள்கிறார். நவீன் பேசப்படாத உலகிலிருந்து முக்கியமான விசயங்களைப் பேசுகிறார். அறிவுரைக்கு எதிரான திசையில் நின்று உக்கிரமான உண்மைகளைத் தேடுகிறார். கல் வீசப்படலாம். கலைஞன் எப்போதும் இன்னும் கூடுதலான உண்மையைத் தேடித்தான் போவான்.

‘யாக்கை’ யும் பாலியல் உலகிலிருந்துதான் பேசுகிறது. ஆனால் அது காட்டும் கோணம் வேறு. மனித மனமும் உடம்பும் பறவையைப் போல ஒரு விலங்கைப்போல இன்று எளிய கோலத்தில் இல்லை. அனுபவிப்பவன் – அனுபவிக்கத் தருபவள் என்ற எதிர் எதிர் சந்திப்பில் உருவாகி இருக்கிறது ‘யாக்கை’யில் கம்பெனியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாலியல் தொழிலாளி அவனுக்கு இன்பத்தைத் தர முன் வருகிறாள். அவளது அப்பாவின் மரணம் இருவரையும் இணைத்து புதிய பிரதேசத்திற்குள் அழைத்துச் செல்கிறது.

இந்த உடலை மனிதன் எப்போதும் பசிக்கும் காமத்திற்கும் திண்ணக் கொடுத்தபடிதான் இருக்கிறான். காமம் சவாலாகத்தான் மனித வாழ்வில் எப்போதும் இருக்கிறது. நட்புக்கு அடங்காதது போலவே மேலான உறவின் மதிப்புக்கும் அடங்காது என்பதை வெகு நுட்பமாகத் தொட்டுக்காட்டுகிறார். பொருளியல்பாடுகளிலிருந்தும் உடல் சிதைவிலிருந்தும் தேறிவந்த தகப்பனின் உள்ளத்திலும் அந்த பொறி திடுக்கென தெறித்து மகளின் மீது விழுகிறது. சாத்தியமற்ற கனத்தையும் அந்த நொடியில் உணர முடிகிறது. வெளிப்பட்டுவிட்ட உஷ்ணத்தை சட்டென சமாளிக்கிறாள். அழுகித் தேறி வரும் இந்த உடம்பை என்ன செய்வது? மீண்டும் மீனுக்கே தருகிறார். மனம் என்னென்ன விதங்களிலோ தத்தளித்துதான் அவர் அந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும. காமத்தின் நாற்றம் நிரம்பிய இந்த உடலை ஏன் வெவ்வேறு விதங்களில் தரக்கூடாது என்ற உள்ளுறையைத் தக்கவைத்திருப்பது போன்ற மாயத்தையும் இக்கதை கொண்டிருக்கிறது.

இம்மாதிரி உலகிலிருந்து சட்டென வெளி வரவும் முடிகிறது. நவீன் வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு கதைக்கான மன நிலைகளில் எழுதியிருப்பது முக்கியமானது. ‘மசாஜ்’ கதையில் வரும் ஆடவனின் நவீன மனநிலையில் ‘போயாக்’ கதையை அணுகிவிடக் கூடாது என்ற விழிப்பு நவீனிடம் இருக்கிறது. இரு கதைக்களன்களும் வேறு வேறானவை.

தொன்மம் சார்ந்த கதைகளை எழுதும்போது நெகிழ்ச்சியான மனநிலையில் பண்பாட்டின் கூறுகளை உள்வாங்கிய மனவெழுச்சியில் எழுதுகிறார். இந்த புனைவு மொழியில் ஆதித்தாயின் குரல் பின்னின்று ஒலிக்கிறது.

மக்களின் நம்பிக்கை சார்ந்த விசயங்களை நம்பிக்கையின் தொனியிலேயே விரிக்கிறார். மனிதர்கள் அதனுள் தமது விளையாட்டை நுதனமான முறையில் செயல்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை ஒருவித சாகசத்தேடு கையாண்டிருக்கிறார். பெரும் கதையாடலை தனக்கான அரசியலாக பிராமணர்கள் மாற்றிக் கொண்டதுபோல நாட்டுப்புற நம்பிக்கையை பூசாரிகள் தனக்கான இருத்தலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள்.

சிக்கலும் இடுக்குகளும் நிறைந்த நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை சார்ந்த மொழியை நேர்த்தியான விதத்தில் பிரித்து பின்னிக்கொண்டு செல்கிறார். திறப்புகள் என்று தெரியா வண்ணம் மொழியோடு பிணைத்துச் செல்லும் லாவகத்தைக் காணத் தவறினால் வாசகனை ஏமாற்றி கும்மாளி போடும். எனவே இவ்வகை கதைகளின் சொல்முறை என்பது ஒரு மந்திரத்தன்மை போன்றது. ‘நாகம்’ ‘போயாக்’ ‘பேச்சி’ கதைகளில் இது அழகாகக் கூடி வந்துள்ளது. இக்கதைகளுக்கு பழமை ஏற ஏற நம்பிக்கைகளுக்கு கூடுதல் இடம் தரும்.

‘பேச்சி’ துடுக்குத்தனமான கதை. பேச்சியம்மனான பொன்னியை ஒரு வில்லங்கவானுக்கு கட்டிவைத்து ஓட ஓட  நொறுக்குகிறார். தனது மனைவி பேச்சியின் மறுவடிவம் என்று தெரியாமல் அவன் வசைபாடுகிறபோது விழுகிற அடிகளும், பயந்து பம்பி நெருங்கிறபோது அவனை குழந்தையாக பாவிக்கிற செயல்களும், அபயம் கேட்டு நிற்கிற போது தாய் தெய்வமாக உருவெடுக்கிற கோலமும் என வெவ்வேறு வடிவங்களுக்குப் போகிறார். பேச்சியை தகப்பன் (கணவன்) ஒரு கோணத்தில் புரிந்து கொள்வதும் கதை எழுதும் மகன் வேறொரு கோணத்தில் பேச்சியை வெளிப்படுத்துவதும் கதைக்கு வெளியே உருவாகும் சாத்தியம். பெண்களை நாம் புரிந்துகொண்டது மிகச் சொற்பம். அவர்களின் வீச்சு பல்வேறு கோணங்களில் மறைந்திருப்பதைச் சொல்வதாகக் கூட பேசலாம்.

ஜப்பான்காரன் தோற்று நாட்டை விட்டுச் செல்லும் காலத்தில் ‘நாகம்’ கதை உருவாகிறது. அதற்கு முன் பின்னான அரசியல் சிக்கலில் தமிழ் மக்களை இழுத்து பிரித்து பந்தாடுவது அங்கங்கே தொட்டுக்காட்டப்படுகிறது. நாகம் அம்மக்களின் வாழ்க்கையில் ஓர் இடத்தைப் பிடிக்கிறது. நாகத்திற்குக் கோயில் வழிபாடும் உருவாகிறது. பூசாரி மரபும் வருகிறது. உயர்சாதி பெண்ணைக் காதலித்த பூசாரி பக்கிரியின் மாமாவை தோட்டப் பஞ்சாத்து கூடி விரட்டுகிறது. வீட்டினுள் யாரையும் அனுமதிக்காத முத்தம்மாவின் அப்பா எல்லோருக்குமான மனிதராக இருக்கிறார். இவ்விசயங்கள் கதையின் ஓட்டத்தில் வருகின்றன. திருமணமாகாத முத்தம்மாவை தெய்வீக அம்சம் கொண்ட பெண்ணாக பார்க்கிற நம்பிக்கையும் இழையோடுகிறது.

பக்கிரியின் குருவான சாமி சொல்லும் கதையில் ஒரு எல்லை மீறல் நிகழ்கிறது.    நாகத்தை முத்தம்மா தனக்கான கதையாக மாற்றிக் கொள்கிறாள். காமம் சாதிய தடையை மீறி வீட்டினுள் அழைத்துச் செல்கிறது. அடைக்கலம் தேடி வந்த சிஷ்யன் தனக்கான இருப்பைக் குறித்து யோசிக்கிறான். அது வன்மத்தைத் தூண்டுகிறது. குருவைக் கொலை செய்யும்படி வைக்கிறது. நம்பிக்கையில் பிணைக்கப்பட்ட உலகம் வெளிப்பார்வையில் ஒன்றாகவும் உள் அமைப்பில் வேறொன்றாகவும் மர்மமான முறையில் மோதிக்கொண்டிருப்பதை நூதனமாகச் சொல்கிறது ‘நாகம்’ கதை. மேல்தளத்தில் கதை அமைதி தவழ இயல்பாக நகர்வது போல ஒரு தோற்றத்தைத் தருகிறது. அதன் அடியாழத்தில் முரண்களின் விளையாட்டுக்கள் கமுக்கமாக நிகழ்ந்தபடி இருக்கின்றன.

‘போயாக்’ கதையைக் படிக்கிறபோது இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஈபான் பழங்குடிகளின் வழக்கம் கதையில் வருகிபடி இருக்கிறதா என்ற ஒரு சந்தேகமும் ஆர்வமும் எழவே செய்கிறது. ஒரு சிறுகதையை அப்படி நிதர்சனம் சார்ந்து அணுகவேண்டிய அவசியமும் இல்லை என்பது மிக மிக முக்கியமானது. அச்சமூகம் கொண்டிருக்கிற கரைபடியாத நம்பிக்கைகளைக்கொண்டு வந்திருப்பதுதான் முக்கியமானது. இந்த நவீனவாழ்வின் பொய்மைகளுக்கு கள்ளத்தனங்களுக்கு எதிரான குறீயிடாகிறது அவர்களின் வழக்க முறைகள். எளிமையிலும் எளிமையாக உருவான ஈபோ குமரியின் காதலை அவன் எதிர் கொள்ளாமல் தப்பிப்பது சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற விழிப்புதான்.

இம்மாதிரியான தொன்மம் சார்ந்த கதைகளில் நவீன் மானிடச் சலனங்களை திருகுதலாட்டங்களை எங்கும் சொல்லாதது போன்ற தோற்றத்தில் சொல்லியபடியே நகர்கிறார். வரலாற்றையும், பக்தி அரசியலையும் வேறு கோணத்தில் பார்க்கத் தூண்டுகிறார்.

சமூக இழிவுகளில் பட்டழிந்து பட்டழிந்தே வந்த குடும்பமும் இழிவை அடையாளப்படுத்தும் சகல புள்ளிகளிலிருந்தும் துண்டித்துக்கொண்ட வாரிசும் இணைய முடியாமல் முரண்பட்டு நிற்கும் கோலத்தை மிக நேர்த்தியாக சொல்கிறது ‘வண்டி’ கதை. தந்தைக்கும் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் இழிவின் அடையாளமாக அமைந்த குப்பை வண்டி பேரனுக்கு மகிழச்சி தரக்கூடிய பொருளாக நிற்கிறது. அதன் வரலாறும் அது உருவாக்கும் அடையாளமும் என்னவென்று அறியாது தனக்குக் கொண்டாட்டத்தைத் தரும் பொருளாக அணுகுகிறான் பையன். அடி விழுகிறது, இந்த அடியின் பின்னே அப்பாவின் அவமானங்கள் நிரம்பி இருக்கின்றன. மலம் அள்ளும் அம்மாவும் முனிசிபல் குப்பை வண்டி அடிக்கும் அப்பாவும் ராமச்சந்திரனாக இருந்த மரியதாஸை கொண்டாடவே செய்கிறார்கள். பள்ளியில் இதனால் பெற்று வரும் காயங்களுக்கு சமூகம் தரும் பரிசு பொருளாக  மாற்றி மகிழ்ச்சியை உண்டாக்குகிறார்கள். இந்த ஏமாற்றத்தைத் தன் மகனுக்கு மரியதாஸ் தர முடியாது. சமுகம் புறக்கணித்ததைவிட மருமகளின் கொடூரமான புறக்கணிப்பையும் அதற்கு ஒத்துப்போகிற மரியதாஸின் புறக்கணிப்பைப் தவறு என்று நிரூபித்துவிட முடியுமா? தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட பாட்டியை வீட்டிற்குள் அழைக்கிற பேரனும் அதற்கு மலுப்பலான பதிலைச் சொல்லி தெருவிலேயே நின்று பார்க்கும் அம்மாவை அனுப்பும் மகனுமான கோலம் ஒன்று வருகிறது. வாசகனை தாக்குகிறது. அதைக் கூட நவீன் கதையின் விசயம் என்னவென்று புரியத் தொடங்குவதற்கு முன்னமே வைத்துவிடுகிறார். படைப்புநேர்த்தி  உண்டாக்கும் கலை என்பது இதுதான். நவீன் எந்த பக்கமும் சாயாமல் உண்மையின் சூட்டை மட்டுமே காட்டுகிறார். ஒரு தலித்தை இக்கதை பாதிக்கிறதோ இல்லையோ தலித் அல்லாத ஒருவனை இக்கதை பாதிக்கும். இந்த இழிவை  உண்டாக்கியது மரியதாஸ் அல்ல. தான் தான் என்று உணர்வான். எது நம்மை பாதிக்கிறதோ அது கலை. எது பாதிக்கவில்லையோ அது பிரச்சாரம். சொல்லத் தெரிந்ததைவிட சொல்லாமல் விடத்தெரிந்த கலைஞனாக இருக்கிறார் நவீன்.

இந்த வாழ்க்கை இப்படி ஆனதற்கு எவ்வளவோ சமூகக் காரணங்கள் இருக்கின்றன. அதன் மீதான விமர்சனங்கள் இருக்கின்றன. குற்றச்சாட்டுக்களை நேர்முகமாக வைக்காமல் வலி தரும் கதியில் வைக்கிற பார்வை நம்மை உலுக்குகிறது.

‘வெள்ளை பாப்பாத்தி’ களங்கமற்ற ஒரு குழந்தையின் கதையாகவும் விட்டு விடுதலையாகிற வண்ணத்திப் பூச்சியின் கதையாகவும், முரண்பட்ட குழந்தைகளின் அன்பை நாடும் கதையாகவும் மாறி மாறி வந்து சட்டென சமூக பின்னலுக்குள் சிக்கிக்கொண்ட இளம் விதவைத் தாயின் கதையாக உருமாறி நிற்கிறது.

கதைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வாசகனுக்கான உரையாடல்களை சாத்தியமாக்கியிருக்கின்றன. தீர்ப்பையோ, முற்போக்கையோ, பிற்போக்கையோ முன்வைப்பதில்லை. ஆனால் நாம் நிறைய பேச இந்த கதைகள் தன் எல்லா சாளரங்களையும் திறந்து வைக்கின்றன.

நவீனின் கதைகள் எனக்கு மிக நெருக்கமான உறவைத் தருகின்றன. வாசகர்களுக்கும் நிச்சயம் தரும். இந்த நெருக்கம் மாந்தர்களின் மனக்கண்களை சகல திசைகளிலும்  திறந்து வைப்பதால் உண்டாகிறது. கூச்சத்தை தூக்கி தூர எறிந்தாலும் அவரது கவனமெல்லாம் பேசப்படும் விசயம் இலக்கியமாக வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. காமத்திலிருந்து காமத்தை கடக்கிற இடம்; சாதியிலிருந்து சாதியை கடக்கிற இடம்; இப்படி சொல்லமுடியும். இளைஞர் கூட்டத்திலிருந்து நவீன் வேறுபடும் இடம் இதுதான். பேசா பொருளைப் பேசத் துணிகிறபோது சங்கடங்களைத் தருவது போல தோன்றும் ; அவை கலையாக வெளிப்படும்போது வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தில் தானே சென்று அமர்ந்து கொள்ளும். நவீன  மலேசிய புனைகதை உலகில் ஒரு மறுமலர்ச்சி தோன்றிவிட்டது. இதில் நவீனின் பங்கு பெரிதாக இருக்கும்.

1 comment for “சாளரங்களைத் திறந்து வைக்கும் கலைஞன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...