மலேசிய பின்னணி நாவல் என்றும் மலேசிய மக்களின் வாழ்வை கூர்ந்து கவனித்து எழுதப்பட்டது என்றும் பின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்ததால், தமிழக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘கடவுச்சீட்டு’ நாவலை விடுமுறையில் நேரம் ஒதுக்கி வாசித்தேன்.
‘கடவுச்சீட்டு’ மிக எளிய கதையமைப்பைக் கொண்ட நாவல். தமிழக கிராமம் ஒன்றில் வளர்ந்த பெண்ணை மலேசிய இளைஞன் ஒருவன், (சில சமாதானங்களைச் சொல்லி) பெண்பார்த்து, திருமணம் செய்து உடன் அழைத்து வருகிறான். அவன் தாய் அவ்வை தன் ஒரே மகனை நம்பி அவனுடன் வாழ்ந்துவருகிறார். நிரந்தர வேலையும் பொருளாதார பலமும் அற்ற அவன் (கார்த்திக்) நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி சொவ்மியாவையும் குடும்பத்தையும் கவனிக்காததோடு சொவ்மியாவை அடித்து துன்புறுத்துகிறான். இதனால் சொவ்மியாவின் மனம் விடுதலையை நாடுகின்றது. மனத்துணிவோடு, தனக்கு முற்றிலும் புதிய மண்ணான மலேசிய தலைநகரில் கணவனையும் பிள்ளைகளையும் பிரிந்து தன் சொந்த முயற்சியில் கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டதோடு தனி அறை எடுத்து துணிந்து வாழ்கிறாள். முடிவில் கார்திக் வட்டி முதலைகளிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் மூண்ட தகராற்றில் தாக்கப்பட்டு இறந்து போகிறான். இதுதான் நாவலின் சுருக்கம்.
சுப்ரபாரதிமணியன் தமிழ் இலக்கியச்சூழலில் பலரும் அறிந்த எழுத்தாளராக உலா வருபவர். பல நூல்களை எழுதியுள்ளார். ஆகவே தேய்வழக்காகிவிட்ட இக்கதையை எழுதுவது அவருக்கு சிரமமானதல்ல. ஆனால் இக்கதையை மலேசிய மக்களின் வாழ்வை கூர்ந்து கவனித்து எழுதியதாகக் கூறிக்கொள்வதில் உள்ள அபத்தத்தைக் கடுமையாக மறுப்பதோடு இந்நாவவில் அவர் செய்திருக்கும் ‘காப்பியடிப்பையும்’ சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிக்க வேண்டியது நமது கடமை.
ஒரு மண்ணின் கதையையும் அதில் வாழும் மக்களையும் எழுத முனையும் படைப்பாளி அதற்கான உழைப்பை செலுத்த முதலில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நாட்டு மக்களையும் வெளியில் இருந்து பார்த்து புரிந்து கொண்டதை எழுதுவது இலக்கியமாகாது. அரசு தரப்பு முன்வைக்கும் வரலாறு, சமகால சூழல், நாளிதழ் பரபரப்பு செய்திகள் போன்ற மேல் அடுக்குப் பிரச்சாரங்களை உடைத்துக்கொண்டு உள்சென்று அந்த மக்களின் மையமான வாழ்வாதார, அரசியல் பிரச்சனைகளை உள்வாங்க கடின உழைப்பு தேவை. சுப்ரபாரதிமணியன் மலேசிய பண்பாட்டையோ மக்களின் மையச் சிக்கலையோ புரிந்துகொள்ள கொஞ்சமும் உழைக்காமல் அவசரத்துக்குப் பயன்படுத்தியிருக்கும் குறுக்குவழிகள் கண்டிக்கத்தக்கன.
இக்கதையின் பெரும்பகுதி செந்தூல் சுற்றுப்புற பகுதிகளில் நடக்கிறது. ஆனாலும் மலேசிய பின்னணியில் எழுதப்படும் கதை என்பததை நிரூபிக்க படைப்பாளி மலேசியாவின் பல மாநிலங்களையும் தன் எழுத்து வித்தையால் சுற்றிவருகிறார். சுப்ரபாரதிமணியன் பல முறை மலேசியா வந்து சென்றுள்ளார். ஆகவே மலேசியாவில் தான் பயணித்த இடங்கள், பார்த்த சம்பவங்கள், உண்ட உணவுகள், இடப்பெயர்கள் என்று வலிந்து காட்சிகளை உருவாக்கி சொல்லிக் கொண்டு செல்வது மிகவும் செயற்கையாக உள்ளது. இடப்பெயர்களையும், உணவுப் பெயர்களையும், சில உள்ளூர் வழக்குச் சொற்களையும் இட்டு நிரப்பிய பிரதி சுற்றுலா பயணிகளுக்குப் பயன்படக்கூடிய கையேடாகவே இருக்கும். ‘கடவுச் சீட்டு’ அவ்வாறுதான் இருக்கிறது.
எழுத்தாளர் மலேசியாவில் சிலமுறை பயணம் செய்த துணிச்சலில், மலேசியாவின் ஒட்டுமொத்த பண்பாடே தனக்கு அத்துபடியாகிவிட்டது போன்ற தோற்றத்தை வாசகனுக்கு ஏற்படுத்த, செய்திருக்கும் வித்தைகள் நகைப்பூட்டுகின்றன.
விக்கிபீடியாவில் கிடைக்கக்கூடிய மலேசிய வரலாற்றில் இருந்து சில துணுக்குகளையும் ஆங்காங்கே கிள்ளி வீசி பக்கங்களை நிறைத்திருக்கிறார். ஆயினும் அவற்றிலும், தகவல் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன.
உதாரணத்திற்கு, பக்கம் 134-ல் வரும் உரையாடல் குறிப்பிடத்தக்கது என்பதோடு கண்டிக்கத்தக்கதுமாகும்
“அதுதா முஸ்லீம் நாடாச்சே. தப்பு பண்னுனா தலையெ வெட்டறது, சவுக்குலே அடிக்கறது, கைவிரல்களெ வெட்டறதுன்னு தண்டனை குடுப்பாங்க, பப்ளிக்காகவே”
“ஐயோ அப்பிடியெல்லாம் கொடுமை நடக்குமா?”
“ கொடுமைனு இல்லே. ஸ்டிரிக்ட், முஸ்லீம்நாடு. அதுதா அப்பிடி தண்டனை”
“எதுக்குத் தலையெடுப்பாங்க”
“ கொலை, போதைப் பொருள் கடத்தல்ன்னு… தூக்கு தண்டனை உண்டு”
இப்படி போகிற உரையாடல் மலேசியாவில் இருந்து பெண்பார்க்க தமிழகம் சென்ற இளைஞனுக்கும் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணுக்கும் இடையில் நடக்கிறது.
மலேசியாவில் என்னவிதமான குற்றவியல் சட்டங்கள் அமலில் உள்ளன என்பதையெல்லாம் அக்கறை எடுத்து தெரிந்து கொள்ளாமலே தான் பேச்சுவாக்கில் கேட்டறிந்த தகவல்களையும் விக்கிபீடியாவில் கிடைத்த தகவல் துணுக்குகளையும் கொண்டு தன் கற்பனையில் இந்நாவலை எழுத்தாளர் எழுதியிருப்பதால் நாவல் உணர்ச்சிகள் அற்ற சவம் போல் கிடக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, சுப்ரபாரதிமணியன், ஒரு நிலப்பரப்பின் சூட்சுமங்களை உள்வாங்க முனைப்புகாட்டாமல் வேறு ஒரு படைப்பில் இருந்து காட்சிகளை காப்பியடித்திருப்பது மிகவும் மலினமான செயல்.
இந்த நாவலில் வரும் குண்டர் கும்பல் பற்றிய புனைவு கே.பாலமுருகன் எழுதிய “ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்” குறுநாவலை நகலெடுத்துக் கொண்டுள்ளது. ‘கடவுச்சீட்டு’ நாவலில் பக்கம் 53 -54-கில் கே.பாலமுருகனின் நாவலில் வரும் குண்டர் கும்பல் குறித்த அதே விவரிப்புகள் சொல் மாறாமல் வருவது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நேர்மையை கேள்விகுள்ளாக்குகிறது.
‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ குறுநாவலில் குறிப்பிடப்படும் ரூசா தோட்டத்தில் நடந்த திருவிழா கொலை, பெடோங் தோட்டத்தின் குண்டர்கள், ஆப்பே கடையின் அமைப்பு, ஆப்பே கடையில் நடக்கும் துப்பாக்கிச்சூடுகள், குண்டர் கும்பல் சந்திப்புகளுக்காக வகுத்துக்கொள்ளப்பட்ட அட்டவணை, சரசுவின் வாழ்க்கை பின்னணி என்று பல காட்சிகளை சுப்ரபாரதிமணியன் நகலெடுத்து தன் நாவலில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஆப்பே காப்பி கடை என்பதை ‘சபேசன் காப்பி கடை’ என்று மாற்றுவதுதான் இவரின் தனித்த எழுத்தாற்றல்.
தமிழகத்தில் இருந்து மலேசியா வரும் படைப்பாளிகளை மலேசிய இலக்கிய உலகம் எப்போதும் மதிப்பாகத்தான் பார்க்கிறது. ஆனால், சுப்ரபாரதிமணியன் போன்ற சிலர் இலக்கியத்தை தங்கள் வியாபாரத்துக்கும், சந்தை விரிவாக்கத்துக்கும் பயன்படுத்திக் கொள்ள மலினமாக நடந்து கொள்வது கவலையளிக்கிறது. கூடுதலாக, சுப்ரபாரதிமணியன் மலேசிய சிறுகதைகளை தொகுத்து நூலாக்க, சில மலேசிய எழுத்தாளர்களை அணுகியுள்ளார் என்ற தகவல் மேலும் வருத்தம் தருகிறது. மலேசிய எழுத்தாளர்கள் இதுபோன்ற இலக்கிய வியாபாரிகளிடம் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம்.
ஒரு நிலத்தின் கதையையும் அந்த மண்ணைச் சார்ந்த மக்களின் வாழ்வையும் சில நாள் பயணத்தில் உணர்ந்துகொள்ள முடியாது. அப்படி புரிந்து கொண்டதாகப் பாவனை காட்டுவதன் விபரீதம் அகிலன் எழுதிய ‘பால்மரக் காட்டினிலே’ நாவலில் நடந்துள்ளது. அதே விபரீதம் கூடுதலான சில நகல் எடுப்புகளோடு நவீன காலத்தில் சுப்ரபாரதிமணியத்தின் ‘கடவுச் சீட்டு’ நாவலிலும் நிகழ்ந்துள்ளது.
மிகவும் அதிர்ச்சியளித்த கட்டுரை!
சிங்கப்பூர்க்கு வந்திருந்தபோது அவரது ‘சப்பரம்’ நாவலைத் திருடி ‘கஞ்சிவரம்’ திரைப்படம் எடுக்கப்பட்டதாக தன்னுடைய பேச்சில் வருத்தப்பட்டவர். அவருடைய நாவலின் முன்னுரை ஒன்றிலும் அதை எழுதியுள்ளார் என்று நினைவு. மேலும் தன் புனைவுகள் பலவற்றிலும் திருப்பூர்த் தொழிலாளர்களின்மேல் நடத்தப்படும் உழைப்புச்சுரண்டலை வெளிக்காட்டி எழுதிவருபவர்.
கடவுச்சீட்டு குற்றச்சாட்டுக்கு அவர் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கிறேன்.
அட இப்படி பிரிச்சு ஆஞ்சுபுட்டீங்களே… வாழ்த்துகள் பாண்டியன் சார்.
துணிச்சலாக தங்கள் கருத்தினை எடுத்துரைத்துள்ளீர்கள் பாண்டியன் ஐயா… வாழ்த்துகள்.